லேபிள்கள்

திங்கள், 15 நவம்பர், 2010

சர்க்கரை கசக்குற சர்க்கரை...!!!


"ன்னங்க பேயறைஞ்ச மாதிரி மொகமெல்லாம் வெளுத்துபோய் வரீங்க? காலங்காத்தால காப்பிகூட குடிக்காம போனீங்க.....எங்க போனீங்க என்ன ஆச்சு, ஏன் இப்படி இருக்கீங்க? சொல்லுங்க...."

பதில் பேசாமல் மௌனமாய் இருந்த கணேசனை உலுப்பி மீண்டும் கேட்டாள் சரோஜா.

"அட என்னதான் ஆச்சு ஏன் இப்படி பேய்புடிச்ச மாதிரி இருக்கீங்க...சொல்லித் தொலைங்க.."

"பேய் இல்லடி சரோ....நோய் புடிச்சிடிச்சி..."

குரலில் சுரத்தேயில்லாமல் கணேசன் சொன்னதும்....

"அடப்பாவி மனுஷா....ஒனக்கு பொம்பளைங்க சகவாசம் வேற இருந்திச்சா....பகவானே...அப்பவே எங்கப்பா சொன்னாரு...மாப்பிள்ளை முழியைப் பாத்தாலே சரியில்லைன்னு....இப்ப வந்து நோய் வந்துடிச்சின்னு சொல்றியேய்யா....நான் என்ன செய்வேன்...யார்கிட்ட சொல்வேன்..இந்த வயசுல இது தேவையா? வயசுக்கு வந்த பொண்ணையும் பையனையும் வெச்சுக்கிட்டு ஒரு ஆம்பிளை செய்யற காரியமா இது...கடவுளே..எங்கப்பா வேற போய் சேந்துட்டாரே...நான் யார்கிட்டா போய் சொல்லுவேன்"

சரோஜா ஏன் இப்படி சாமியாடுகிறாள் என்று ஒன்றும் புரியாமல் அந்த முழியை வைத்து முயன்றவரைக்கும் உருட்டி, உருட்டி சிந்தித்தாலும் எதுவும் புலப்படாமல்,

'சரோ...நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி குதிக்கற. புருஷனுக்கு நோய் வந்துடிச்சின்னு கேட்டா பொண்டாட்டியா லட்சணமா, என்ன ஆச்சுங்க எப்படி இருக்கீங்கன்னு ஆறுதலா கேக்காம, பொம்பள அது இதுன்னுகிட்டு..."

"ஆமாய்யா...நீ நோய் வந்து கெடப்ப...நான் உனக்கு நளாயினி மாதிரி கூடையில சுமந்து கிட்டு போகனுமா?"

"அடிப்பாவி....உலகத்துல நோய்ன்னா அது ஒண்ணுதானா...ஏதோ சின்னச்சின்ன கவிதையெல்லாம் எழுதறமே...நீ பேய்ன்னு சொன்னதும் ரைமிங்கா நோய்ன்னு சொன்னா........டைமிங் தெரியாம ஏதேதோ பேசறியே....இது உனக்கே நியாயமா சரோ.."

பரிதாபமான அவன் முகத்தைப் பார்த்ததும், மனம் இளகிப்போய்,

"அடடா....நான்தான் அவசரப்பட்டுட்டேனா...என்னங்க ஆச்சு..என்ன நோய் அது இதுன்னு சொல்லி பயமுறுத்துறீங்களே...சீக்கிரம் சொல்லுங்க..."

"என்னத்த சொல்றது சரோ...ம்...நேத்து ஆபீஸ்லருந்து வரும்போது ஒரு நோட்டீஸ் குடுத்தாங்க. ஜெயம் மெடிகல் செண்ட்டர்ல ஃப்ரீ டயாபடிக் பரிசோதனை பண்றாங்கன்னு போட்டிருந்திச்சி. அதுல வேற 40 வயசுக்கு மேல ஆனவங்க கட்டாயம் பரிசோதனை பண்ணிக்கனுன்னு எழுதியிருந்ததப் பாத்ததும், போய் செக் பண்ணித்தான் பாப்பமேன்னு நெனைச்சேன். உன்கிட்ட சொன்னா....நிஜமாவே இருக்குமோன்னு நீ கவலைப் படுவியோன்னுதான் உன்கிட்ட சொல்லல."

"செக் பண்ணிக்கறது நல்லதுதானே...அது சரி என்ன சொல்றாங்க..இப்ப"

"அதான் சரோ சொன்னேனே....வெறும் வயித்துல செக் பண்ணூம்போது 90 தான் இருக்கனுமாம். இந்த வயசுக்கு 100 இல்லன்னா 110 இருந்தாலும் பரவால்ல...ஆனா எனக்கு 130 இருந்திச்சி. அத பாத்துட்டு டாக்டர், நீங்க சர்க்கரை வியாதியோட பார்டர்ல இருக்கீங்கன்னு, நான் ஏதோ பாகிஸ்தான் பார்டர்ல இருக்குற மாதிரி சொன்னாரு"

"அய்யய்யோ அப்புறம் என்ன சொன்னார்?"

"பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல. இப்ப இந்த வியாதி நிறைய பேருக்கு வருது. கிட்டத்தட்ட இது நம்ம தேசிய வியாதி மாதிரி ஆயிடிச்சின்னு ஜோக்கடிக்கறார். அப்புறம் மாத்திரையெல்லாம் இப்ப வேணாம், சாப்பாட்ல கண்ட்ரோலும், கொஞ்சம் உடற்பயிற்சியும் போதும், தினமும் காலையில மூணு கிலோமீட்டர் நடங்க, ஸ்வீட் சாப்பிடாதீங்க, எண்ணை அதிகம் சேத்துக்காதீங்க, உருளைக்கிழங்கு சாப்பிடாதீங்கன்னு....சொன்னார். வரிசையா அவர் சொன்னதை வெச்சுப் பாத்தா, நான் வெறும் பச்சைப்புல்லையும், பச்சைத்தண்ணியையும்தான் சாப்பிடவேண்டியிருக்கும்" 

"அப்ப உங்களுக்கு சக்கரை வியாதியா....அப்படீன்னா இனிமே நம்ம வீட்டுக்கு ஒரு கிலோ சக்கரை வாங்கினா போதுமில்ல. எங்களுக்கு மட்டுன்னா அரைக்கிலோவுக்கு பதிலா கால் கிலோ உருளைக்கிழங்கு போதும்...."

"அடியே ராட்சசி....புருஷனுக்கு சர்க்கரை வியாதி வந்துடிச்சேன்னு கொஞ்சம்கூட கவலப் படாம...ஒருகிலோ சர்க்கரைக்கும், கால் கிலோ உருளக்கிழங்குக்கும் சந்தோஷப்படறியா..."

"சரி விடுங்க வந்தத போன்னு வெரட்டவா முடியும். அதான் எல்லாருக்கும் வர்றதுதான்னு டாக்டரே சொல்லிட்டாரே. இனிமே வாயைக் கட்டுங்க. எங்களுக்கு தெரியாம ஆபீஸ் விட்டு வரும்போது கால் கிலோ பால் அல்வா வாங்கி சாப்பிடற வேலையெல்லாம் இனிமே வெச்சுக்காதீங்க. சரி வாங்க சூடா இட்லி செஞ்சு தரேன்..."

சொல்லிவிட்டு அடுக்களைக்குள் போன தர்மபத்தினியையே பார்த்துக்கொண்டிருந்த கணேசன், டாக்டர் சொன்ன கூடாதுகள்ல இட்லி இருக்கான்னு யோசிச்சிப் பாத்துட்டு, இல்லைன்னு தெரிஞ்சதும் ஆறுதலோட சாப்பிடப்போனார். 


ட்னிகூட கொலஸ்ட்ரால் என்று சொல்லி தடைவிதித்துவிட்டு வெறும் சாம்பாரில் மூன்றே மூன்று இட்லிகளை மட்டுமே சாப்பிட அனுமதித்த சரோவை மனசுக்குள் மானாவாரியாய் திட்டிக்கொண்டே தன் அலுவலகம் வந்து சேர்ந்த கணேசன் இருக்கையில் அமர்ந்ததும், சீனு அவரருகே வந்தார். சீனு கணேசனின் நெடுநாள் அலுவலகத் தோழர். ஆத்மார்த்த நண்பன்.

"என்னடா கணேசா..ஒரு சுஸ்த்தில்லாம இருக்க. வீட்ல சண்டையா?"

கேட்ட சீனுவிடம் மீண்டும் ஒருமுறை தனக்கு வந்த சர்க்கரையைப் பற்றி ஒரு பாட்டம் சொல்லி பெருமூச்சு விட்டார்.

"இனிமேத்தாண்டா ஜாக்கிரதையா இருக்கனும்.42 வயசாச்சு. டாக்டர் சொன்ன மாதிரி மாத்திரையை அவாய்ட் பண்றதுதான் நல்லது. இல்லன்னா வாழ்க்கைபூரா மாத்திரை சாப்பிட வேண்டியதுதான். அரிசி சாதம் அதிகம் சாப்பிடாத, ஸ்வீட் சுத்தமா கூடாது. பாவக்காய் ஜூஸ் சாப்பிடு, ஐஸ் கிரீம், மாம்பழம் இதெல்லாம் கூடவே கூடாது...."

சீனு சொல்வதைக் காது கேட்டுக்கொண்டிருந்தாலும், கணேசனின் மனது தன் வசந்தகாலங்களுக்கு ஒருமுறை போய்விட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை ஆனால் மட்டன் பிரியாணி,(சரோஜா தம் பிரியாணி செய்யறதுல எக்ஸ்பர்ட்) கூடவே ஒரு கப் நிறைய ஐஸ்கிரீம், தினமும், வேலை முடிந்து போகும்போது ஆரியபவனில் பால் அல்வா, கோதுமை அல்வா, ஹார்லிக்ஸ் பர்ஃபி என சாப்பிட்டது, சரோ சுட்டுப் போடப் போட...வரிசையாய் வெட்டிய தோசைகள்...அய்யோ இந்த ருசி கண்ட நாக்கை எப்படி அடக்கப்போறேனோ... பெருமாளே...உன் லட்டு கூட சாப்பிட முடியாம ஆயிடிச்சே...

நினைவுகளிலிருந்து வெளிவரும்போதே புலம்பலுடன்தான் வந்தார்.ன்றைக்கு வீட்டுக்கு சரோவின் மாமா வந்திருந்தார். கணேசனும் அவரை மாமா என்றுதான் அழைப்பார். 

"மாமாவுக்கு காஃபி குடு சரோ அப்படியே எனக்கும் கொஞ்சம்..ஹி...ஹி...."

இந்த சாக்கிலாவது சர்க்கரை போட்ட காஃபி கிடைக்குமே என்ற நப்பாசையில் கணேசன் சொன்னாலும் சரோஜாவின் முறைப்பைப் பார்த்ததும் அந்த ஆசையை அப்படியே அடக்கிக்கொண்டார்.

திரும்ப வந்த சரோஜாவின் கையில் இரண்டு கோப்பைகளைப் பார்த்ததும், மீண்டும் அந்த ஆசை வந்துவிட்டது. தர்மபத்தினியை காதலோடு பார்த்துக்கொண்டே ஒரு கோப்பையை எடுக்க நீட்டியக் கையை சரோஜா தட்டிவிட்டு,

"இதான் உங்களுக்கு. இது மாமாவுக்கு..."

என்று சொன்னவளைப் பார்த்து மாமா,

"ஏம்மா சரோஜா...ரெண்டும் காப்பிதான...எத வேணுன்னா எடுத்துக்கட்டுமே...அதுக்கு ஏன் கையை தட்டி விடறே...."

"இல்ல மாமா...அவருக்கு ஷுகர் இருக்கு...அதான் அவருக்கு சக்கரையில்லாத காப்பி..."

என்னவோ எனக்கு 100 ஏக்கர்ல டீ எஸ்டேட் இருக்குன்னு சொல்ற மாதிரி எவ்ளோ சந்தோஷமா சொல்றா..என நினைத்துக்கொண்டே அந்த சர்க்கரையில்லாத காஃபியை கஷ்டத்தோடு எடுத்துக் குடிக்கத் தொடங்கினார் கணேசன்.

" என்னது....கணேசனுக்கு ஷுகரா...அடக்கடவுளே.."

சோபாவிலிருந்து துள்ளியெழுந்து கேட்ட மாமாவை பார்த்து,

"என்ன மாமா இதுக்குபோய் இப்படி பதட்டப் படறீங்க...இப்பதான் இது எல்லாருக்கும் வருதே...இன்ஃபேக்ட்...இத நம்ம தேசிய வியாதின்னுகூட..."

சரோஜாவின் முறைப்பைப் பார்த்ததும் பாதியில் விழுங்கிக்கொண்டார்.

"இல்ல கணேசா...இதை அவ்ளோ சாதாரணமா எடுத்துக்க முடியாது. இது சைலண்ட் கில்லர். இது வந்தா ப்ளட்ப்ரெஷரும் சேந்து வரும். ரெண்டும் அக்கா தங்கச்சிங்க மாதிரி."

ஆமா....வந்துட்டாரு...சொந்தங்கள சேத்து வெக்குறவரு....மனசுக்குள் திட்டிக்கொண்டே மாமாவின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்த கணேசனைப் பார்த்து,

"இங்க பாரு கணேசா...எதுக்கும் வருத்தப்படாத. கொஞ்சம் கண்ட்ரோலா இருந்தா போதும். நம்ம பார்வதி வீட்டுக்காரர்கூட அப்படித்தான். வாயைக் கட்டமுடியாம, ஷுகர் அதிகமாகி, ஒரு காலையே எடுக்க வேண்டியதாப் போச்சி..."

"அய்யய்யோ என்ன மாமா சொல்றீங்க....அப்ப இவர் காலையும் எடுத்துடுவாங்களா....அப்ப கடை கண்ணிக்கெல்லாம் நான் தான் போகனுமா.."

கணேசன் சரோஜாவை எரித்துவிடுவதைப்போலப் பார்த்தான். 

மாமாவும் சரோஜாவை வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டே தொடர்ந்தார்...

"அதனால ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. டெய்லி வாக் போகனும். அப்புறம் முக்கியமான விஷயம்...நம்ம சொந்தக்காரங்களுக்கு யாருக்கும் இந்த மேட்டர் தெரியக்கூடாது.."

"அது ஏன் மாமா...நான் என்னவோ கற்பழிப்பு கேஸ்ல ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவன் மாதிரி சொல்றீங்க"

"அட அதுக்கில்ல கணேசா....இப்ப நம்ம மக்களுக்கு நல்ல அவேர்னஸ் இருக்கு. இந்த வியாதி பரம்பரையா வர்றதுன்னும், அப்பாவுக்கோ அம்மாவுக்கோ இருந்தா பிள்ளைங்களுக்கும் வருங்கறதோ எல்லாருக்கும் தெரியும். ஸோ.....உனக்கு டயாபடீஸ் இருக்குன்னு தெரிஞ்சா உன் பொண்ணுக்கு மாப்பிள்ளை கிடைக்காது, உன் பையனுக்கும் பொண்ணு கொடுக்கமாட்டாங்க....அதான் சொன்னேன்"

மாமா பயமுறுத்திவிட்டுப் போன அன்று இரவு கணேசனின் கனவில், காலில்லாத கணேசனைப் பார்த்தான்,கக்கத்தில் கட்டையை ஊன்றிக்கொண்டு அசோகனைப் போல ‘போனால் போகட்டும் போடா....' என்று பாட்டு பாடிக்கொண்டே மலைமேல் அலைவதைப்போல, மகள் தலைவிரிகோலமாய் குளோசப்பில் வந்து, என் வாழ்க்கையை கெடுத்திட்டீங்களேப்பா...நான் கன்னியாவே கண்ணை மூட வேண்டியதுதானா என்றும், மகன் கையில் அருவாளைத் தூக்கிக்கொண்டு அவரை விரட்டுவதைப் போலவும் காட்சிகள் மாறி மாறி தோன்ற கட்டிலிலிருந்து கீழே விழுந்தார்.


ரண்டு நாட்களுக்குப் பிறகு அலுவலகம் வந்தவர், நேரே சீனுவிடம் சென்று,

"சீனு...எனக்கு இந்த ஷுகரைவிட...அதனால ஏற்படற பயம்தாண்டா கொல்லுது. இதுல ஆளாளுக்கு அட்வைஸ்ங்கற பேர்ல, எதையெதையோ சொல்லி மேல மேல பயமுறுத்துறாங்க..."

"ச்சே ச்சே....இதுக்கெல்லாம்போய் ஏண்டா பயப்படற...இப்பதான் நீ ரொம்ப கண்ட்ரோல்ல இருக்கல்ல....ஒண்ணும் ஆகாது. கவலப்படாத."

"இல்லடா சீனு..எனக்கு என்ன ஆச்சுன்னே தெரில...நேத்து ரொம்பநாளைக்கப்புறம் சரோவுக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்...ஹி..ஹி..."

'ம்...ம்...சொல்லு...சொல்லு..."

" அவளுக்கு ஒரே வெக்கம்...ஆனா பாரு... அசந்தர்ப்பமா அந்த சமயத்துல ஒரு கவிதை தோணுச்சி....

'என் முத்தம் இனிப்பது
உன்மேல் உள்ள அக்கறையால் மட்டுமல்ல
என் ரத்தத்தில் உள்ள சர்க்கரையாலும்தான்'

அப்படீன்னு அபத்தமா ஒரு கவிதை. இந்த ஷுகர் என்னை மனசளவுல இப்படி பாதிச்சிடிச்சேடா..."

நண்பனின் நிலையைப் பார்த்த சீனு, மெள்ள ஆதரவாக அவனது கைகளைப் பிடித்தபடி,

"சரி. இத்தனைநாள் நீ கண்ட்ரோலா இருந்திருக்க, தெனம் வாக்கிங் போயிருக்க...அப்ப நிச்சயமா ஷுகர் கொறைஞ்சிருக்கும் எதுக்கும் நாளைக்கு மறுபடியும் போய் இன்னொரு வாட்டி செக் பண்ணிப்பாரு. கண்டிப்பா கொறைஞ்சிருக்கும்."

"நிஜமாத்தான் சொல்றியாடா...நீ சொல்ற மாதிரியில்லாம, ஒருவேளை பார்டரை கிராஸ் பண்ணியிருந்தா...பாகிஸ்தான்காரன் சுடறமாதிரி இந்த ஷுகர் என்ன சுட்டுடாதே..."

"ஹா...ஹா...ஹா...நல்லா ஜோக்கடிக்கறே..."

"சீரியஸா சொல்றேண்டா..."

"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நீ போய் செக் பண்ணிப் பாரு"


டுத்தநாள் காலை எழுந்து குளித்துவிட்டு, வழியில் ஐந்துமுகப் பிள்ளையாரை தரிசனம் செய்து பிரசாதத்தை வாங்கி பையில் வைத்துக்கொண்டு டாக்டரைப் பார்க்கப்போனார்.

பரிசோதனை முடிந்து முடிவு தெரியும்வரை, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, ஏதோ மந்திரத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தவரை ஒரு நர்ஸம்மாவின் குரல் கலைத்தது.

"யாருங்க கணேசன்...டாக்டர் கூப்பிடறாரு"

வாழ்வா சாவா எனும் போராட்டத்தில் முடிவு தெரியப்போகும் நாளில் ஏற்படும் பதட்டத்தோடு அறைக்குள் சென்றவரை டாக்டரின் சிரித்தமுகம் வரவேற்றது.

"உக்காருங்க கணேசன். உங்க ஷுகர் ரொம்ப நார்மலா இருக்கு. இந்த வயசுல இவ்ளோ நார்மலா இருக்கறது நல்ல விஷயம். 85தான் இருக்கு."

கணேசனுக்கு குபீர் என்று ரத்தப்பாய்ச்சல் உடலெங்கும் சந்தோஷமாய் பரவியது.

"ரொம்ப நன்றிங்க டாக்டர். அப்ப நான் சர்க்கரை போட்ட காப்பி குடிக்கலாங்களா?"

'என்ன இப்படி கேக்கறீங்க அப்ப இவ்ளோநாள் நீங்க அப்படித்தான் குடிச்சீங்களா?"

"எப்பவும் இல்ல டாக்டர். பதினைஞ்சு நாளாத்தான் அப்படி. பதினைஞ்சு நாளைக்கு முன்னால டெஸ்ட் பண்ணிப் பாத்தப்ப 130 இருந்திச்சி...அதுலருந்துதான் டாக்டர்..."

"சான்ஸே இல்லையே...வெறும் வயித்தோடத்தானே போனீங்க?"

"ஆமாங்க டாக்டர்.பச்சைத்தண்ணிக்கூட குடிக்கல..."

"ஸ்ட்ரேஞ்ச்.....ரிசல்ட் தப்பா இருந்திருக்கும். எனிவே...நீங்க இப்ப பரிபூரண ஆரோக்கியமா இருக்கீங்க...பெஸ்ட் ஆஃப் லக்"

வெளியே வந்ததும் முதல் வேலையாய் பிரசாதத்தை எடுத்து சாப்பிட்டார். 

அப்போதுதான் அவருக்குத் தோன்றியது......அன்னைக்கும் இப்படித்தானே கோவில் பிரசாதம் வாங்கிக் கொண்டு போனேன்....இன்னைக்கு மாதிரி ரிசல்ட் தெரிஞ்சப்பறம் சாப்பிட்டிருந்தா...அன்னைக்கே நல்ல ரிசல்ட் கிடைச்சிருக்குமோ....அதுக்கு முன்னாடியே சாப்பிட்டுட்டேனே....அதான் பகவான் சோதிச்சிட்டார். என்று நினைத்துக்கொண்டே நடந்தவரின் வாயில் ஒரு பிடி கல்கண்டு பிரசாதம் கரைந்துகொண்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts