லேபிள்கள்

புதன், 16 ஜூலை, 2025

சிலிண்டர் எப்படி வெடிக்கிறது? அதற்கான காரணங்கள்.

நீங்கள் பல்வேறு செய்திகளில், சமூக வலைத்தளங்களில் கேஸ் சிலிண்டர் வெடித்து பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை கேள்விப் பட்டிருப்பீர்கள்.

எப்படி வீடுகளில் சிலிண்டர் வெடிக்கும் என்று யோசித்து உள்ளீர்களா? கேஸ் சிலிண்டர் வெடிப்பதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளது. அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம்.

கேஸ் சிலிண்டர் என்பது தற்போது அனைத்து வீடுகளிலும் ஏன் கிராமப்புறங்களில் கூட அனைவரது வீடுகளிலும் பயன்படுத்தக்கூடிய பொருளாக மாறிவிட்டது. எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் கிடைக்கின்றது. மேலும் ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றது. சிலிண்டர் என்பது தற்போது அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்த சிலிண்டர் வெடிப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

அதில் முதலாவது நாம் சிலிண்டரை முறையாக கையாளாமல் இருப்பதால் வெடிக்கின்றது. அதாவது சிலிண்டருக்கும் அடுப்புக்கும் பயன்படுத்தப்படும் வயர்கள் பழுதடைந்த காரணத்தினால் அல்லது எலிகள் அந்த வயர்களை கடித்து இருந்தால் அதன் மூலம் வெளியேறும் எரிவாயு மூலமாக சிலிண்டர் வெடிக்கும் அபாயம் ஏற்படும்.

இரண்டாவது காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் வீடுகளில் சிலிண்டர்கள் வெடிக்கும் அபாயம் ஏற்படுகின்றது. இப்போது நாம் எப்படி சிலிண்டர் காலாவதியாகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சிலிண்டரை A-07, B-06 என்று எழுதப்பட்டிருக்கும். A என்பது ஜனவரி முதல் மார்ச் வரைக்கும், B என்பது ஏப்ரல் முதல் ஜூன் வரைக்கும், C என்பது ஜூலை முதல் செப்டம்பர் வரைக்கும், D அக்டோபர் முதல் டிசம்பர் வரைக்கும், அடுத்து உள்ள இரண்டு எண்கள் வருடத்தைக் குறிக்கும். உதாரணதிற்கு சிலிண்டரில் B -21 என்று இருந்தால் அந்த சிலிண்டரை(கேஸ் இல்லை) 2021 ஜூன் மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அர்த்தம். எனவே சிலிண்டர் வாங்கும் போது இதையெல்லாம் கவனித்து வாங்குங்கள்.



--

ஞாயிறு, 13 ஜூலை, 2025

அம்மிக்கல்லும், ஆட்டுக்கல்லும்... - அழித்து வரும் ஆரோக்கியமும்....!

க்ரைண்டர் மாவுக்கும், மிக்சி சட்டினிக்கும் பழகிபோன என் நாக்கிற்கு ஒரு நாள் என் பாட்டி புதுவிதமான சுவை அளித்தார் என்றால் அது மிகையாகாது.

நாமது வாழ்கையில் பெரும்பாலும் சுவையான உணவை சாப்பிடவே உடலை வருத்தி உழைக்கிறோம். ஆனால், அந்த சுவை துரித உணவுகளின் கையேந்தி பவனிலும், வீட்டில் அரைக்கும் மிக்சி சட்டினியிலுமே முடிந்து விடுகிறது. அன்று ஒரு நாள் பாட்டி ஆட்டுக்கல்லில் மாவாட்டிக்கொண்டு இருந்தார். ஒரு கையில் குளவி மறு கையில் மாவை தள்ளி விட்டவாறு அந்த வேலையை செய்து கொண்டு இருந்தார். நான் பாட்டியிடம் எதற்கு உனக்கு இந்த தேவை இல்லாத வேலை, க்ரைண்டரில் போட்டால் பத்து நிமிடத்தில் வேலை முடிந்து விடும் உனக்கும் கை வலி இருக்காது என்று சொன்னேன்.

73 வயதான என்பாட்டி என்னிடம் இன்றும் நான் ஆரோக்கியமாக இருக்க இந்த ஆட்டுக்கலும், அம்மிக்கலும்தான் காரணம் என சொன்னார். அடுத்த நாள் காலையில் அடுப்பில் இரும்பு கல் வைத்து வாழை தண்டில் என்னை தொட்டு கல்லில் தேய்த்து சொய் என்ற சத்தத்தோடு மாவை கல்லில் ஊற்றி பரத்தி விட்டு சுட்ட அந்த தோசையின் மனம்.. எங்கேயோ நின்றுகொண்டிருந்த என் மூக்கை துளைத்து சுவையின் நரம்புகளை தூண்டி விட்டது. அதனோடு சேர்த்து மிளகாய் வருத்து சின்ன வெங்காயம் சேர்த்து அம்மியில் அரைத்த அந்த காரச்சட்டினி.. அப்பப்பா.. அந்த சுவைக்கு நான் இன்றும் அடிமைதான்.

ஆனால், இதுபோன்ற ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த உணவு பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் வருகிறது என்பது வருத்தத்தைதான் தருகிறது. பல ஆயிரம் ரூபாய் பணம் செலவு செய்து ஜிம்மிற்கு சேன்று உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என நினைக்கும் இன்றைய தலைமுறை.., பழங்கால பாரம்பரிய பழக்க வழக்கங்களை பின்பற்றினால் போதும் என்பதை கண் மூடித்தனமாக மறுத்து வருகிறது. இன்றும் பல கிராமங்களில் ஆட்டுக்கல், அம்மிக்கல் உள்ள வீடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

அம்மியில் அரைக்கும்போது அந்த உணவுக்கு குளுர்ச்சி கிடைத்து உணவின் பக்குவமும், சுவையும் மாறாமல் கிடைக்கிறது. அதனுடன் கல்லோடு கல் உரசி அதனோடு உணவுப்பொருட்களும் அரைபடும்போது அந்த கல்லில் இருக்கும் சத்துக்களும் இயற்கையாகவே உடலுக்குள் செல்கிறது. இது ஆரோக்கியத்திற்கு பெரும் பலனை தருகிறது. எதிர்கால தலைமுறை இந்த அவசரமான வாழ்கை நடைமுறைக்கு இடையே கொஞ்சம் ஆரோக்கியத்தையும் பார்த்துக்கொண்டால் அழிந்து வரும் அம்மிக்கல்லும், ஆட்டாங்கல்லும் மறு வாழ்வு பெரும்.


--

புதன், 9 ஜூலை, 2025

முட்டைகளைதண்ணீரில் கழுவக்கூடாது. எச்சரிக்கும் நிபுணர்கள்.

சமைப்பதற்கு முன் எந்த பொருளையும் கழுவுவது மிகவும் முக்கியம். கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து, மக்கள் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

அத்தகைய சூழ்நிலையில், காய்கறி பழங்களை போலவே பலர் முட்டைகளை தண்ணீரில் கழுவும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவ்வாறு செய்வது சரியல்ல.

அமெரிக்க வேளாண்மைத் துறை, முட்டைகளை தண்ணீரில் கழுவுவது சரியல்ல என எச்சரித்துள்ளது. அனைத்து முட்டைகளும் தேவையான அளவிற்கு சுத்தம் செய்யப்பட்ட பின்பே விற்பனைக்கு வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில், அதை மீண்டும் வீட்டில் கழுவும்போது,     இந்த செயல்முறை முட்டையின் மேற்பரப்பில் இருந்து 'க்யூட்டிகல்' அல்லது 'ப்ளூம்' எனப்படும் அடுக்கை நீக்குகிறது.

கோழிப்பண்ணையில் முட்டைகளை கழுவும் முறை

அமெரிக்க வேளாண்மைத் துறை இது குறித்து மேலும் கூறுகையில், கோழி முட்டைகளை கழுவியவுடன், அதன் மீது உண்ணக்கூடிய கனிம எண்ணெய் பூசப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம், எந்த பாக்டீரியாவும் முட்டையை மாசுபடுத்தாது, முட்டையின் உள்ளே நுழைய முடியாது. முட்டை ஓடு நுண்துளையாக இருப்பதால், முட்டையை தண்ணீரில் கழுவினால், பாக்டீரியா முட்டைக்குள் நுழையும். முட்டைகளை தண்ணீரில் கழுவக்கூடாது என்பதற்கான காரணம் இதுதான்.

முட்டைகளை கழுவ சரியான வழி

நீங்கள் பல்பொருள் அங்காடி போன்ற இடங்களில் முட்டைகளை வாங்கினால், முட்டைகளை கழுவ வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், நீங்கள் முட்டைகளை கழுவாமல் சாப்பிட விரும்பவில்லை என்றால், நீங்கள் அவற்றை வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். முட்டையைக் கழுவினால் முட்டை கெட்டுப்போவது மட்டுமின்றி ஆரோக்கியமும் கெடும். எனவே, முட்டையை கழுவ வேண்டாம். அப்படி உங்களுக்கு சுத்தம் செய்ய வேண்டும் என தோன்றினல், ஈரமான துணியால் சுத்தம் செய்த பிறகு பயன் படுத்தவும்.



--

ஞாயிறு, 6 ஜூலை, 2025

துப்பாக்கியால்வானத்தை நோக்கி சுட்டால் அந்த குண்டு என்னவாகும்.?


துப்பாக்கியால் விண்ணை நோக்கி சுடும்போது மேலே செல்லும் குண்டுகள் என்னவாகும். அது திரும்பவும் பூமியை நோக்கி வரும் போது நமக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

இதைப்பற்றி நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடப்படும் புல்லட் 3 கிலோமீட்டர் வரைக்கும் நேராக விண்ணை நோக்கி செல்லும். அதன்பிறகு புவியீர்ப்பு விசையின் காரணமாக அது மீண்டும் பூமியை நோக்கி திரும்பும்போது, வேகம் சற்று குறைவாக இருக்கும். அதாவது ஒரு மணி நேரத்திற்கு 400 கி.மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கித் திரும்பும். அது யார் மீதாவது பட்டால் கட்டாயம் காயத்தை ஏற்படுத்தும். ஏன் உயிரே போவதற்குக் கூட வாய்ப்புள்ளது. இதுபோல் வானத்தை நோக்கி சுடப்பட்ட புல்லட்டுகளால் இதுவரை பல மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாகவே பல நாடுகளில் பண்டிகைகளின் பொழுது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டைப் பொருத்தவரை பெரும் தலைவர்கள் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிகளை சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த துப்பாக்கிகளில் இருந்து வெளியாகும் குண்டுகள் போலியானவை என்றும், அவை வெடி சத்தத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. இருப்பினும் சில அதிபுத்திசாலி நபர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் துப்பாக்கிகளை கொண்டு வானத்தை நோக்கி சுடுகின்றன. இதனால் பலருக்கும் உயிருக்கே ஆபத்து ஏற்படுகின்றது. ஆனால் இந்தியாவில் லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது. அதையும் மீறி துப்பாக்கியை பயன்படுத்தினால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள்.



--

வியாழன், 3 ஜூலை, 2025

பாடி லோஷன் எப்படி பயன்படுத்த வேண்டும்?

சாதாரணமாகவே சிலருக்கு எந்நேரமும் சரும வறட்சி இருக்கும். அதிலும் கோடை காலத்தில் உடலில் நீரேற்றம் குறைந்து உடல் முழுவதுமே பெரும்பாலானோருக்கு வறட்சியாகக் காணப்படும்.

இந்த சூழ்நிலையில் உடல் வறட்சியைத் தடுக்கவும் சருமப் பாதுகாப்புக்கும் பாடி லோஷன்(உடலில் தடவும் திரவம்/கிரீம்) பயன்படுத்துவது அவசியம். பெண்கள் அதிகமாக இதனை பயன்படுத்தினாலும் சிலர் சரியான முறையில் அதனை உபயோகிப்பதில்லை.

பாடி லோஷன் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

அனைத்து விதமான சருமம் கொண்டவர்களும் பாடி லோஷன் பயன்படுத்தலாம்.

மிகவும் வறண்ட சருமம் கொண்டவர்கள் தண்ணீர் போன்று இருக்கக்கூடிய பாடி லோஷன்களை பயன்படுத்த வேண்டும்.

எண்ணெய் சருமம் கொண்டவர்கள் க்ரீம் வகை பாடி லோஷன்களை பயன்படுத்தலாம்.

அடுத்ததாக உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு முடிந்தவரை ரசாயனம் கலக்காத தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் கொண்டு செய்யக்கூடிய பாடி லோஷன்களை பயன்படுத்துங்கள்.

குளித்தவுடனேயே உடல் முழுவதும் பாடி லோஷனை அப்ளை செய்ய வேண்டும். ஈரப்பதம் இருக்கும்போது போட்டால் நன்றாக உறிஞ்சி உடல் வறண்டு போகாமல் தடுக்கும்.

முதலில் கீழிருந்து அதாவது காலில் இருந்து தொடங்கி உடல் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். முழங்கை, கால்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். வட்ட வடிவில் தேய்ப்பதே சரியான முறையாகும்.

கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை சரிசெய்ய பாடி லோஷன் அவசியமான ஒன்றுதான். முடிந்தவரை இயற்கை முறையில் இயற்கையான பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட லோஷன்களை பயன்படுத்தி சருமத்தை பராமரியுங்கள்.



--

சிலிண்டர் எப்படி வெடிக்கிறது? அதற்கான காரணங்கள்.

நீங்கள் பல்வேறு செய்திகளில் , சமூக வலைத்தளங்களில் கேஸ் சிலிண்டர் வெடித்து பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை கேள்விப் பட்டிருப்பீர்கள...

Popular Posts