லேபிள்கள்

வெள்ளி, 29 ஜூலை, 2016

தயிர்

தயிர்... உயிர் காக்கும் ஆரோக்கியக் கூறுகள் அடங்கிய உணவுப்பொருள். புரோபயாடிக் நிறைந்த தயிரில் துத்தநாகம், வைட்டமின் இ, பாஸ்பரஸ் ஆகியவை இருக்கின்றன.

உள்ளே...
கெட்டித் தயிரைச் சாப்பிட்டால் ஆயுள்  கெட்டிதான். எப்படி என்கிறீர்களா?
சீக்கிரம் செரிமானம் ஆகும்.
 நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.  
 ஊட்டச்சத்துக்களை உடல் கிரகிக்க உதவும்.
 ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தி இதயத்தைப் பாதுகாக்கும்.
 எலும்பு மற்றும் பற்களுக்குத் தேவையான கால்சியம் கிடைக்கவும் உதவும்.

வெளியே...
தயிருடன் மஞ்சள், சந்தனம், வெந்தயத்தூள் கலந்து சருமத்தில் பூசும்போது...
 முகத்தில் படிந்த கருமை போயே போச்சு!
 தழும்புகள், முகப்பருக்களுக்கு டாட்டா!  
 எப்போதும் முகத்தில் எண்ணெய்  வழிகிறது என்று வருத்தப்படுபவர்கள் தயிருடன் பூசு மஞ்சள்தூளையும் சந்தனத்தையும் கலந்து பூசி மென்மையாக மசாஜ் செய்துவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுங்கள். அப்புறம் 'அட, எண்ணெயெல்லாம் எங்கே போச்சு' என்று ஆச்சர்யப்படுவீர்கள்.்.

தயிரைத் தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால்...
 பொடுகு நீங்கும்.  
 முடியில் பளபளப்பு கூடும்.  
 மூன்று டேபிள்ஸ்பூன் தயிர், இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய், நான்கு டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி பஞ்சு மாதிரி மென்மையடையும்.
 அரை கப் தயிருடன் இரண்டு டேபிள்ஸ்பூன் பாதாம் எண்ணெய், இரண்டு முட்டையை நன்கு அடித்துச் சேர்த்துத் தலையில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளித்தால் முடி பொலிவாக இருக்கும்.
 முடி உதிர்வதுதான் உங்களுக்கு முக்கியப் பிரச்னையா? கவலையை விடுங்க பாஸ்! ஒரு கப் தயிருடன், சிறிது வெந்தயம் சேர்த்து அரைத்துத் தலையில் பூசி, 45 நிமிடங்கள் ஊறவைத்துக் குளிங்க. இனி உங்க முடி 'நம்பிக் கட்டுற கம்பி' மாதிரி செம ஸ்ட்ராங்கா இருக்கும்
http://pettagum.blogspot.in/2014/08/blog-post_25.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 27 ஜூலை, 2016

பாதத்தைக் கவனிக்காவிட்டால் பாதகம் தான்!

பெடிக்யூர் பெஸ்ட்
முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை யாரும் பாதங்களுக்குத் தருவது இில்லை. ஆனால் பாதங்களைக் கவனிக்காவிட்டால், உடல் நலத்துக்குப் பாதகம்தான். பாதங்களைப் பராமரிக்காவிட்டால், அழுக்கு, சொரசொரப்பு, வெடிப்பு, சுருக்கம் எனப் பல பிரச்னைகளால் அவற்றின் அழகு கெடுவதுடன், கால் விரல்களில் முதுமையும் விரைவில் எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிடுகிறது. 

பாதம் மற்றும் கை விரல்களைப் பராமரிக்க, பியூட்டி பார்லர்களில் பெடிக்்யூர் மற்றும் மெனிக்யூர் என்ற பிரத்யேக சிகிச்சைகள் உள்ளன. 'உண்மையில் 'பெடிக்யூர்' செய்வதால், அழகுடன் ஆரோக்கியமும் கிடைக்கிறது' என்கிறார் ஆயுர்வேத அழகுக்கலை நிபுணர் அஞ்சலி.

'ஒருவரின் உடல்நிலை  மற்றும் அவரது சருமத்தின் தன்மையைப் பொறுத்தே என்ன மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறோம். ஆயுர்வேத ஸ்பாக்களில் கிளென்சிங்ல் ஆரம்பித்து, மசாஜ், ஸ்க்ரப்பிக், ஆயுர்வேத பேக் என்று நான்கு படி நிலைகளில் பெடிக்யூர் செய்யப்படுகிறது. அதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
எலுமிச்சைச் சாறு, ஆயுர்வேத ஷாம்பூ, டெட்டால், கல் உப்பு, பாதாம் எண்ணெய் ஆகியவை கலந்த வெதுவெதுப்பான நீரில் 10 முதல் 20 நிமிடங்கள் கால்களை ஊறவைக்க வேண்டும். பாதங்களின் வெடிப்பான பகுதிகளை அதற்குரிய பிரஷ்கள் மூலம் தேய்த்து, வெடிப்பு வந்த பகுதிகளை மிருதுவாக்க வேண்டும். நகங்களைச் சரியான அளவில் வெட்ட வேண்டும். பிறகு பால், குங்குமப்பூ சேர்த்து 10 நிமிடம், தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்து 10 நிமிடம், ஆயுர்வேத எண்ணெய்களால் 10 நிமிடம் என அரை மணி நேரம் வரை தொடர்ந்து பாதங்களை மசாஜ் செய்ய வேண்டும். கடைசியில், கை, கால்களில் ஆயுர்வேதப் பொருட்களைப் பூசவேண்டும்.  கொத்தமல்லி, புதினா, வேப்பிலை மற்றும் ஆயுர்வேத மூலிகைகள் அடங்கிய ஹெர்பல் பேக், பப்பாளிப்பழ பேக், ஃப்ரூட் பேக் என விரும்பிய பேக்கைத் தடவி, 10 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரில் கழுவ வேண்டும்.

இதே முறையில் கைகளுக்கும் மெனிக்யூர் சிகிச்சை  அளிக்கப்படுகிறது. மாதத்துக்கு ஒரு முறையேனும் பெடிக்யூர், மெனிக்யூர் சி்கிச்சைகளை எடுத்துகொண்டால், கை மற்றும் பாதம் பளபளப்பாக இருக்கும். வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கும். பூஞ்சை  காளான் தொற்றுகள் நீக்கப்படும். வெடிப்புகளால் வரும் நோய்களைத் தடுக்க முடியும்.  பார்லருக்கு வரமுடியாதவர்கள், வாரம் அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை வீட்டில் எளிமையாகக் கை மற்றும் பாதங்களைப் பராமரிக்கலாம்.

சற்று வெதுவெதுப்பான தண்ணீரில் கல் உப்பைப் போட்டு, கைகளை ஊறவைக்க வேண்டும். பிரத்யேகமான துண்டைப் பயன்படுத்தி, கைகளை நன்றாகத் துடைக்கவேண்டும்.

நகங்களை வெட்டிவிடவும்.  கடலை மாவு, தயிர், உப்பு, பாதாம், கடுக்காய், கிராம்பு ஆகியவற்றை ஒன்றாக அரைக்கவும்.  இந்தப் பொடியை தண்ணீர் விட்டுக் கலக்கி கைகளில் பூசி, மசாஜ் செய்யவும். பிறகு, எலுமிச்சம் பழத்தை நறுக்கி, கைகளில் வைத்து, கைகளைச் சுத்தம் செய்யவும்.  அதன் பிறகு, பப்பாளிப் பழத்தைக் கூழாக்கி, பூசவும்.

வீட்டில், சுத்தமான மண் தரை, சிமெண்ட் தரை இருப்பவர்கள் வீட்டுக்குள்ளே செருப்பு அணியத் தேவை இல்லை. ஆனால், கிரானைட், மார்பிள், டைல்ஸ் போன்ற தரைகள் கொண்ட வீடு களில் வசிப்பவர்கள் நல்ல காற்றோட்டமான, வீட்டுக்குள் மட்டுமே அணியக்கூடிய செருப்புகளை வாங்கி அணிவது நல்லது. பாதம் மற்றும் விரல்களில் அதிக வெடிப்புகள் இருப்பவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி, பெடிக்யூர், மெனிக்யூர் செய்து
கொள்ளுவது நல்லது' என்றார். கால்களைக் கவனிப்போம்!
வறட்சியே  சுருக்கத்துக்குக் காரணம்!

தோல் வறட்சிக்கு என்ன காரணம் என்று ஆயுர்வேத மருத்துவர் யாழினியிடம் கேட்டபோது...
'உடலில் எண்ணெய்ப் பசை குறைய ஆரம்பிக்கும்போது தோலில் வறட்சி ஏற்படுகிறது. போதுமான அளவு நீர் பருகாதது, உணவுப் பழக்கம் இரண்டும்இந்த வறட்சிக்கு முக்கியக் காரணம். பெண்களுக்கு சமையலறையில் ஆரம்பித்துக் குளியலறை வரை சோப், வேதிப் பொருள்கள் கலந்த நீர்மங்கள் மற்றும் தண்ணீரில் அதிக நேரம் கைகளைப்  பயன்படுத்துதல் போன்ற காரணத்தால் எளிதில் சுருக்கமும், வெடிப்பும் வந்துவிடும்.

அதேபோல், ஆண்கள் வெயில் நேரங்களில் பைக் ஓட்டு வதாலும் கை, கால்களில் தோல் சுருக்கம் ஏற்படுவது மட்டுமின்றிக் கருத்தும் போகி்்றது. பாதங்களைப் பாதுகாக்க பெடிக்யூரும், கைகளைப் பளிச்சென வைத்திருக்க மெனிக்யூர் சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம்' என்றார்.
http://pettagum.blogspot.in/2014/08/blog-post_4.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 25 ஜூலை, 2016

இஞ்சி டீ!

 தேவையானவை:
  • பால் - 1/2 லிட்டர்
  • இஞ்சி - 2 இஞ்ச் அளவு
  • சீனி - தேவைக்கு
  • ஏலம் - 2
  • தேயிலை தூள் -3 தேக்கரண்டி
  செய்முறை:
  • முதலில் பாலை காய்ச்சவும்.
  • தீயை குறைத்து வைத்து, அதில் தட்டிய இஞ்சி, ஏலம் போட்டு வேகவிடவும். 5 நிமிடம் கழித்து டீ தூள் சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கி ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து டீயை ஊற்றி பின்பு சீனி சேர்த்து பரிமாறவும்.
  • சுவையான கம கமக்கும் இஞ்சி டீ தயார்.
இந்த டீ எங்கள் ஊர் ஸ்பெஷல் மிகவும் சுவையாக இருக்கும்.எங்கள் ஊரில் இஞ்சி இல்லாமல் டீ போடவே மாட்டோம். இந்த டீ குடித்து பழகிவிட்டால் மத்த எந்த டீ உடைய டேஸ்டும் முன்னுக்கு வர முடியாது ஒரு தடவை செய்தால் இனி உங்கள் வீட்டில் இந்த டீ தான் சாப்பிடுவீங்க.

 தலை வலி,அஜீரணம், டயர்டாக இருக்கும் சமயம் இந்த டீ குடித்தால் ரிலாக்ஸாகிடுவீங்க. இஞ்சிக்கு பதில் சுக்கும் சேர்த்து இதே போல செய்யலாம்.இஞ்சி வேகவைத்தால் தான் சுவையாக இருக்கும்.

இஞ்சி டீ-யின் மருத்துவ குணங்கள்!

மன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒரு கப் இஞ்சி டீ சாப்பிடுங்கள், கவலை காணாமல் போய்விடும் என்கின்றனர் நிபுணர்கள்.கவலை நிவாரணி!
இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது.

நமக்கு துயரம், கவலை ஏற்படும் போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்து விடுகிறது. அதனால் தான் கவலை ஏற்படும் போது இஞ்சி டீ குடியுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
மன அழுத்தம் போக்கும்
மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது, இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகிறது.

இம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து, பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மன அழுத்தத்திலிருந்து நம்மை காக்கின்றது 
இஞ்சி டீக்கு அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. ஆகையால் மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவற்றை குறைக்க உதவும். இதற்கு அதில் உள்ள அதிக அளவு குணமாக்கும் தன்மையும், வலுவான நறுமணமும் தான் காரணம் என்று எண்ணப்படுகின்றது.

ஜீரணசக்தி கிடைக்கும்
மேலும் நாக்கின் ருசி சம்பந்தமான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.

மலச்சிக்கல், அழற்சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகள் போன்றவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழற்சியையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது.

எனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போதும். அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது 
அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
இரத்த ஓட்டத்தை சீர் செய்யும்
 வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இஞ்சி டீயில் இருப்பதால், அவை இரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவுகின்றன. இது கொழுப்புகளை இரத்த குழாய்களில் தங்க விடாமல் பார்த்துக் கொள்கின்றது. இதனால் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

குமட்டலை குறைக்கும் 
ஒரு கப் இஞ்சி டீயை குடிப்பதன் மூலம் குமட்டலை குறைக்க முடியும். வெளியே வெகு தூரம் செல்லும் முன் ஒரு கப் இதை குடித்தால் குமட்டும் தன்மை ஏற்படாது. அல்லது இத்தகைய குமட்டல் வரப்போவதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக இதை அருந்துவது அதை நிறுத்திவிடும்.
 வீக்கத்தை குறைப்பது 
தசை மற்றும் இதர பிடிப்புகளை தீர்க்கும் வீட்டு மருந்தாக இவை அமைகின்றது. இஞ்சியின் தன்மை வீக்கத்தை குறைப்பதே ஆகும். இஞ்சியை டீயாக மட்டுமல்லாமல் வீக்கமுள்ள இடங்களில் ஒரு பச்சிலை போன்று இடுவதும் வீக்கத்தை குறைத்து நிவாரணம் தரும்.
சுவாச பிரச்சனைகளை நீக்குதல்
தொண்டை அடைப்பு மற்றும் சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் இஞ்சி டீயாகும். அந்தந்த காலத்திற்கேற்ப வரும் சளி, இருமல் ஆகியவற்றால் வரும் சிரமங்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.
மாதவிடாய் பிரச்சனைகளை நீக்குவது பெண்களே! 
கொடுமையான மாதவிடாய் பிரச்சனைகளில் தவிக்கின்றீர்களா? உங்களுக்கு ஒரு தீர்வு இதோ! சூடான இஞ்சி டீயை ஒரு துணியில் நனைத்து அடி வயிற்றில் போட்டால் அது தசைகளை இளைப்பாற செய்து பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பைப் போக்கிஆறுதல் தரும். அதுமட்டுமல்லாமல் ஒரு கப் இஞ்சி டீயில் தேன் கலந்து குடிப்பது மேலும்
 பெரிய அளவுக்கு நிவாரணம் கிடைப்பதாக மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
http://pettagum.blogspot.in/2014/08/blog-post_91.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சனி, 23 ஜூலை, 2016

இன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி?

மின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள், அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையுண்டு. 

அதிக விலை
  கொடுத்து வாங்கப்பட்ட இன்வர்ட்டர் (Costly Power Inverter) தரமானதாக இருக்கும். குறைந்த விலையில் வாங்கப்பட்ட இன்வர்ட்டர் தரம் குறைந்து காணப்படும். அல்லது அதில் மின்சாரம் தேக்கிவைக்கும் அளவு (Inverter Storage Capacity) குறைவானதாக இருக்கும். நல்ல தரமிக்க விலையுயர்ந்த இன்வர்ட்டர்களை வாங்குவது சிறந்தது.

இன்வர்ட்டர் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் மட்டுமின்றி, கணினி போன்ற முக்கியமான விலை உயர்ந்த சாதனங்களுக்கும் மின்சாரத்தை பெற்றுக்கொள்கின்றனர். இன்வர்ட்டர் சரியான மின்சாரத்தை சீராக கொடுக்கும்பொழுது இதுபோன்ற சாதனங்கள் பழுது ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. எனவேதான் இன்வர்ட்டர் பராமரிப்பு மிக மிக அவசியமாகிறது.
 

இன்வர்ட்டர்களை எப்படி பராமரிப்பது? எப்படி பாதுகாப்பது என்பது குறித்த விளக்கங்கள் கீழே
 

Inverter வைக்கும் இடம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எட்டும் வகையில் தரையில் வைக்க கூடாது. முடிந்தளவு இன்வர்ட்டரை உயரமான செல்ப் மீது வைப்பது நல்லது.  
·          
இன்வர்ட்டரை கீழே வைக்கும் நிலை இருந்தால் இன்வர்ட் இருக்கும் இடத்தில் தண்ணீர் போன்ற ஈரம் படாமல் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். குழுந்தைகள் செல்லாத இடமாக இருக்க வேண்டும்.
·          
·         இன்வர்டர் சார்ஜ் (Power Inverter charging)ஆகிக்கொண்டிருக்கும்போது, மின் இணைப்பை துண்டிக்க கூடாது. 
·          
·         சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும்போது பேட்டரியை (Battery Removal) கழற்றுவதும் தவறான செயல். 
·         மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து கிடைத்தாலும், மாதத்தில் ஒரு நாளாவது முழுமையாக இன்வர்ட்டர் மூலம் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். இதனால் இன்வர்ட்டரின் செயல்படும் திறன் (Inverter act) குறையாமல் இருக்கும். 
·          
·         இன்வர்ட்டர் பேட்டரியின் டிஸ்டில்ட் வாட்டர் (Battery distilled Water) குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறையும்போது அதை நிரப்பி வைக்க மறக்க கூடாது. 
·          
·         இன்வர்டர் பேட்டரிகளில் இரு வகை உண்டு. 1. Tubular battery. 2. Flat Battery. இதில் சிறந்ததாக கருதப்படுவது டியூப்ளர் பேட்டரி. நீண்ட நாட்கள் உழைக்க கூடியது. 
·          
·         வெப்பமிகுந்த இடங்களிலும் இன்வர்ட்டரை வைப்பது நல்லதல்ல.. உதராணமாக கேஸ் ஸ்டவ் (Gas stove) உள்ள இடம். அதேபோல தீயை பயன்படுத்தும் இடங்கள், மண்ணெண்ணெய், மெழுகுவர்த்திகள் போன்ற தீயால் எரியும் விளக்குகள் ஆகியவற்றை இன்வர்ட்டர் அருகில் வைக்க கூடாது. 
·          
·         இன்வர்ட்டரை சார்ஜ் செய்யும்பொழுது, அதனுடைய அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட(Permissible speed) , கூடுதல் வேகத்துடன் சார்ஜ் செய்யக்கூடாது. சிலர் விரைவாக சார்ஜ் செய்யப்பட வேண்டும் என நினைத்து வேகத்தை கூட்டுவார்கள். ஆனால் அது இன்வர்டர் விரைவிலேயே பழுதாக காரணமாக அமைந்துவிடும். 
·          
·         அதிக நாள் இன்வர்ட்டரை பயன்படுத்தாத சூழலில், அதை நேராக நிறுத்தி வைக்க வேண்டும். தூசி, குப்பைகள் போன்றவைகள் படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல காற்றோட்டமான இடத்தில் வைப்பது நல்லது. 
·          
·         இன்வர்டர் இயக்கத்தில் உள்ளபோது தூசிகளிலிருந்து பாதுகாக்க அதன்மீது எளிதில் தீப்பற்றக்கூடிய துணிகளை போட்டுவைக்க கூடாது. 
·          
·         புதிய இன்வர்ட்டரின் (New inverter)  மீது குப்பைகள் விழாமல் இருக்க ஒரு சிலர் துணி அல்லது அட்டைப்பெட்டிகளால் மூடிவைத்துவிடுவார்கள். அதுபோன்ற செயல்கள் ஆபத்தை உருவாக்கிவிடும்.

மேலும் Inverter UPS வாங்கும்போது அதனுடன் கொடுக்கப்பட்ட Manual Guideல் குறிப்பிடப்பட்டிருக்கும் பராமரிப்பு முறைகளை நன்றாக படித்துணர்ந்து, அதன்படி பராமரிப்பு செய்தால் Power Inveter நீண்ட நாட்களுக்கு உழைக்கும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வியாழன், 21 ஜூலை, 2016

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்!


யாராவது உங்களை 'அங்கிள்' என்றோ 'ஆன்ட்டி' என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனாலும் வயதாவதை ஒப்புக்கொள்ளாமல் மனசு மல்லுக்கட்டும். ''சான்ஸே இல்லை, அன்னைக்குப் பார்த்த மாதிரியே நதியா இன்னைக்கும் இருக்காங்க' என்று பெருமூச்சுவிடாத பெண்களோ, ''சரத்குமாருக்கு 60 வயசு ஆச்சாம். எப்படிய்யா உடம்பை மெயின்டெய்ன் பண்றாரு' என்று பொறாமையோடு புலம்பாத ஆண்களோ இருக்கிறார்களா என்ன?

அவர்களுக்காக மூப்பைத் தள்ளிப் போட முத்தான டிப்ஸ்களை அள்ளி வழங்குகிறார் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துக் கல்லூரியின் இணைப் பேராசிரியரும் வாழ்வியல்கலை நிபுணருமான டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்.

1 'ஆன்ட்டி ஏஜிங்' என்றாலே 'ஆன்டிஆக்ஸிடன்ட்'தான் நினைவுக்கு வரவேண்டும்.  வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி மற்றும் இ, துத்தநாகம், செலினியம் இவை அனைத்தையுமே ஆன்டிஆக்ஸிடன்ட் என்கிறது நவீன அறிவியல். இந்தச் சத்துக்கள் நிரம்பிய காய்கள், பழங்கள், தானியங்களை எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் முதுமையை இன்னும் கொஞ்சம் தள்ளிப்போடலாம்.

2 நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள்.

3 மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.

4மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும். கரிசலாங்கண்ணிக் கீரை, வயதானால் தோலில் தோன்றும் வெண்புள்ளிகள், தேமல் போன்றவற்றைப் போக்கி, மூப்பைக் குறைக்கும்.

5காலையில் வெறும் வயிற்றில் வெண்பூசணிச் சாறு குடிக்கலாம். உடல் எடை மற்றும் உடல் சூட்டைக் குறைக்கும். அசிடிட்டி பிரச்னை போயே போச்சு!  

6 ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது, 'ப்ராஸ்டேட்' சுரப்பி வீக்கமடையும். அவர்கள், சுரைக்காயை, பூண்டு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், மிகவும் நல்லது.

7 ''மேலே சொன்ன எதையுமே என்னால் வாங்கிச் செய்து சாப்பிட முடியாது'' என்பவர்கள், திரிபலாசூரணம் சாப்பிடலாம். நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்த சூரணத்தை முதல் நாள் இரவே ஒரு மண் குவளையில் 2 டீஸ்பூன்  போட்டு, தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும், காலையில் வெறும் வயிற்றில் அந்தத் தண்ணீரை அருந்த வேண்டும். இது நரையைத் தடுக்கும். மலச்சிக்கல் தீரும். சரும நோய்கள் சரியாகும்.  

8 ஒவ்வொரு வேளை உணவுடனும் ஒரு பச்சை நிறக் காய் அல்லது கனியைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறக் காய் அல்லது பழத்தைச் சாப்பிடுவது கூடுதல் நலம்.

9 நடுத்தர வயதில், தோல் பராமரிப்புக்குக் கண்டிப்பாக வைட்டமின் இ தேவை. முளைகட்டிய தானியங்கள், பாதம், பிஸ்தா போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வேர்க்கடலை சாப்பிட்டால், இளமை உங்கள் கைவசம்.

10   அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு செலினியம், துத்தநாகம் எளிதில் கிடைத்துவிடும். சைவம் சாப்பிடுபவர்கள் அதற்கு மாற்றாக எள் மற்றும் கொட்டைப் பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். 

11 வெற்றிலையில் குரோமியம் மிக அதிக அளவில் உள்ளது. தினமும் இரண்டு வெற்றிலைகளை மென்று சாப்பிட வேண்டும். இளமையைத் தக்கவைப்பதுடன், சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

12 சுத்திகரிக்கப்படாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் மட்டுமே நல்லது. மற்ற எண்ணெய்களுக்கு கூடிய விரைவில் குட்பை சொல்லுங்கள்.

13 காலையில் குடம் குடமாகத் தண்ணீர் குடிக்க வேண்டாம். தினமும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் என்ற அளவில் குடித்தாலே போதுமானது.

14 முகம் கழுவியதும் அல்லது குளித்ததும் டவல் அல்லது கைக்குட்டையால், மேலிருந்து கீழ்நோக்கி அழுந்தத் துடைக்கக் கூடாது. வயது ஏற ஏற, நம் சருமம் தளர ஆரம்பிக்கிறது. அதை, நாமும் அழுத்தினால், சீக்கிரமே முகம் தொங்கிவிடும். எப்போதுமே, முகம் கழுவிய பின் ஒற்றி எடுப்பதுதான் சிறந்தது. இல்லையெனில், அப்படியே விட்டுவிடலாம்.

15   குளிக்கும்போது, சோப்பைக் கைகளில் தேய்த்துக்கொண்டு, அந்த நுரையை உடல், முகம், கை, கால்களில் கீழிருந்து மேல்நோக்கித் தடவ வேண்டும். சோப்புக்குப் பதில் கடலைமாவு, பயத்தமாவு போட்டால், இன்னும் நல்லது. இவற்றில் எண்ணெய்த்தன்மை இருப்பதால், முகத்தில் வறட்சி நீங்கி, பளபளப்பு கிடைக்கும்.

16 வாரம் ஒருமுறை நல்லெண்ணெய்க் குளியல் அவசியம். தலைக்கு சீயக்காய்த்தூள் உபயோகிப்பதும், வயோதிகத்தைத் தள்ளிப்போடும் செயல்தான். வறட்சி, பொடுகு போன்ற பிரச்னைகளால் முடி உதிராது. நரையும் ஏற்படாது.

17 செம்பருத்தி இலை அல்லது பூவை அரைத்து, கை, கால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், வறட்சி நீங்கி மிருதுவான சருமம் கிடைக்கும்.

18  கண்களைச் சுற்றிக் கருவளையம் இருக்கிறதா? உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்' போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். நாளடைவில் கருமை குறையும். எந்த ஒரு 'பேக்'குமே 20 நிமிடங்கள் இருந்தால் போதும். கண்களைச் சுற்றி எந்த க்ரீமையும் தேய்ப்பது கூடவே கூடாது. அழகு அல்லது சிவப்பு நிறத்துக்காக 'ஃபேர்னெஸ் க்ரீம்'களை வாங்கிப் பூசுபவர்களுக்கு, தோல் சுருக்கம் அதிகமாகும் அபாயம் இருக்கிறது.

19   தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். அதில், முதல் இடம் பிராணாயாமத்துக்குத் தான்.  ஹார்மோன் செயல்பாடுகளைச் சீராக்க, பிராணாயாமத்தைவிடச் சிறந்த மருத்துவம் இல்லை.

20 தகுந்த ஆசிரியரிடம் பயிற்சி பெற்றுச் செய்யும் நாடிசுத்தி பிராணாயாமம், சீத்காரி மற்றும் சீதளி போன்ற பிராணாயாமப் பயிற்சிகள், மன அழுத்தம், மனச் சோர்வு, பதற்றம் போன்றவற்றுக்கு நல்ல மருந்து.

21 உடல் 'ரிலாக்ஸேஷனு'க்கு சவாசனம், மக்ராசனம் போன்ற யோகப் பயிற்சிகள் மிகச் சிறந்தவை. அலுவலகத்திலிருந்து வந்ததும், கை, கால்களைத் தளர்த்தி, சவாசனத்தில் படுத்து எழுந்தால், அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும். மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் தியானம் இளமையைத் தக்கவைக்கும்.

22 யோகாசனம் செய்ய முடியாதவர்கள், நீச்சல் பயிற்சி அல்லது நடைப்பயிற்சியாவது செய்ய வேண்டும். அந்தப் பயிற்சியை, 'கடனே' என்று செய்யாமல் ரசித்து, அனுபவித்துச் செய்தால் பலன் இன்னும் அதிகம்.

23 இஸ்லாமியர்கள் தொழுகையின்போது கால்களை மடக்கி அமரும் நிலைதான் வஜ்ராசனம். 'வஜ்ரம்' என்றால் வைரம் என்று பொருள். வைரம் பாய்ந்த கட்டையாக நம் உடலை வைத்திருக்க, வஜ்ராசனத்தை விடச் சிறந்த பயிற்சி இல்லை. சாதாரணமாக வீட்டில் அமரும்போதும், வீட்டில் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதும், நாளிதழ் வாசிக்கும்போதும், வஜ்ராசனத்தில் இருக்கலாம். தினசரி 15 நிமிடங்கள் இருந்தால் போதும்.

24 வீட்டில் இடம் இருந்தால், பூச்செடிகள் வளர்க்கலாம். அந்த நறுமணம்கூட மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துதான்.

25 புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை மெல்லுதல் போன்ற பழக்கங்களை விட்டுவிட்டால், இளமை உங்களை விட்டு எங்கே போகப்போகிறது
http://pettagum.blogspot.in/2014/08/25.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 19 ஜூலை, 2016

நலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்!



ஆபீஸ் இடைவேளை நேரத்தில் பசிக்கும்போதெல்லாம் பஜ்ஜி, சாட்டிங் டைமில் சமோசா என ஏதேனும் நொறுக்குத்தீனியுடன், டீ  காபி சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. இந்த ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகள் ஒட்டுமொத்த உடல் நலத்துக்கும் தீங்கு.  இதற்கு மாற்றாக, உலர் பழங்கள் மற்றும் கொட்டை வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் பெறலாம்.  இவை ஒவ்வொன்றுமே ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களின் சுரங்கங்களாக விளங்குகின்றன.
பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற ஒவ்வொன்றிலும் என்ன சத்துக்கள் உள்ளன, எந்த அளவில் உள்ளன, ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும், அதன் பலன்கள் என்ன என்பது பற்றி விவரிக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. உடலில் வலிமை கூடி, ஆரோக்கியம் பெருக, சென்னை போரூர் சமையல் கலைஞர் எஸ். ராஜகுமாரி சில ரெசிப்பிகளை சுவைபட உங்களுக்காக செய்து காட்டியிருக்கிறார்.
பலத்தைக் கூட்டும் பாதாம்

நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது பாதாம். அதனால்தான் இதை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். எந்த அளவுக்கு வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்களைத் தருகிறதோ அதேபோன்று ஆற்றலையும் அளிக்கிறது.

சத்துக்கள்  பலன்கள்: இதில் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் உள்ளது. இது கெட்ட கொழுப்பு எனப்படும் எல்.டி.எல் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பான ஹெச்்.டி.எல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இதய நோய்கள் மற்றும் ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படக்கூடிய பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.


வைட்டமின் இ இதில் நிறைவாக உள்ளது. 100 கிராம் பாதாம் பருப்பில் 25 கிராம் வைட்டமின் இ சத்து உள்ளது. இது நம் ஒரு நாளையத் தேவையில் 170 சதவிகிதம். இதுதவிர, பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிக அளவில் உள்ளன. அதாவது, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின்,் ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் இதில் அதிகம்.

இதில் உள்ள வைட்டமின் இ, பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் ஃபிளவனாய்டுகள் மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் அதிக அளவில் இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

இது மிகவும் குறைவான கிளைசிமிக் இ்ண்டெக்ஸ் கொண்டதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்காது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

பாதாம் எண்ணெயை தொடர்ந்து சருமத்தில் பூசி வந்தால் சருமம் உலர்தல் பிரச்னை நீங்கி, பளபளப்பைக் கூட்டும்.  

தேவை: நாள் ஒன்றுக்கு ஒரு கை அளவு பாதாம் மட்டுமே சாப்பிடுவது அன்றைக்குத் தேவையான அளவு தாது உப்புக்கள், வைட்டமின்கள், புரதம் உள்ளிட்டச் சத்துக்கள் கிடைக்கச் செய்கிறது. பொதுவாக, தினமும் 4 பாதாம் எடுத்துக் கொள்ளலாம். உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களும், குண்டானவர்களும் ஒன்றிரண்டு எடுத்துக் கொண்டாலே போதும்.

முதுமையை முறியடிக்கும் முந்திரி

அமேசான் காடுகளில் இருந்து போர்ச்சுக்கீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரப்பப்பட்ட முந்திரிப் பருப்பில், ஆற்றல், ஆன்டிஆக்சிடென்ட், தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.  

சத்துக்கள்  பலன்கள்: மிக அதிக அளவில் ஆற்றலை அளிக்கக்கூடியது. 100 கிராம் முந்திரியைச் சாப்பிட்டால், 553 கலோரி கிடைத்துவிடும். மேலும் இதில், கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது. இதயத்துக்கு ஆரோக்கியமான முந்திரியில், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

முந்திரியில் மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன. இதில் வைட்டமின் பி5, பி6, ரிபோஃபிளேவின், தயாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் சத்துக்கள் நிறைவாக உள்ளன. அதிலும் குறிப்பாக 100 கிராம் முந்திரியில் 0.147 மி.கி அளவுக்கு வைட்டமின் பி6 உள்ளது. இது ஒரு நாள் தேவையில் 32 சதவிகிதம். இது ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படக்கூடிய அனீமியா உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

இதில் உள்ள ஒரு வகையான ஃபிளவனாய்ட் கண்களைப் பாதுகாப்பதுடன், புறஊதாக் கதிர்வீச்சில் இருந்து சருமத்தைக் காத்து மிக விரைவில் முதுமை தோற்றம் ஏற்படு்வதைத் தடுக்கிறது.

தேவை: ஒரு நாளைக்கு 3  முந்திரி பருப்பைச் சாப்பிட்டுவந்தால் (எண்ணெயில் வறுக்காமல், பச்சையாக) பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படக்கூடிய நோய்கள் வராமலே தடுக்க முடியும். இதய நோயாளிகள் முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.

பளபள சருமத்துக்கு பிஸ்தா

சுவை மிகுந்த பிஸ்தா ஆரோக்கியத்தின் அடையாளம். வலிமையை அளிக்கக்கூடியது.  இதி்ல் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், மருத்துவ நலன்கள் நிறைவாக உள்ளன. பாதாம் முந்திரியைப் போலவே... புரதம், கொழுப்பு மற்றும் தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன.

சத்துக்கள்  பலன்கள்: 100 கிராம் பிஸ்தாவைச் சாப்பிடும்போது, 557 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இதில் உள்ளன. இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.

இதில் உள்ள கரோட்டீன்ஸ், வைட்டமின் இ போன்றவை மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்்டாக செயல்படுகின்றன. உடலில் ஆக்ஸிஜன் பயன்படுத்துதலினால் ஏற்படும் நச்சுக்களை நீக்கி, பல்வேறு நோய்களில் இருந்து காக்கும் ஆற்றல் இதற்கு உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஏ, இ மற்றும் இதர வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ரசாயனங்கள் உடலில் ஏற்படக்கூடிய வீக்கம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து காக்கிறது.

பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ் புரதத்தை உடைக்கும் செயல்
பாட்டை துரிதப்படுத்தி அமினோ அமிலமாக மாற்றுகிறது.
வைட்டமின் பி6 (பைரிடாக்சின்) ரத்த அணுக்கள் ஆக்ஸிஜனை சுமந்து செல்ல உதவுகிறது. பிஸ்தாவில் நிறைவான அளவில் வைட்டமின் பி6 உள்ளது, இதனால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது, 

ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. இது ரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் நரம்பு மண்டலத்தையும்  பாதுகாக்கிறது. உடலில் உள்ள சுரப்பிகள் நன்றாக வேலை செய்யத் தூண்டுகிறது. ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகரிக்கச் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இதனால் நோய்க் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படுவது அதிகரிக்கிறது.
பிஸ்தா எண்ணெய் மிகச் சிறந்த இயற்கை மாய்ச்சரைசராகவும் பயன்படுவதால், சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமத்தை மென்மையாக்கி பளபளப்பைக் கூட்டுகிறது.  இதனால் இளமைப்பொலிவு கூடும்.

தேவை: தினமும் 4 பிஸ்தா எடுத்துக் கொள்ளலாம். பிஸ்தாவில் அன்றைய தினத்துக்குத் தேவையான அளவு பாஸ்பரஸ் உள்ளது. தொடர்ந்து இதைச் சாப்பிட்டுவந்தால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. இதய நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

வாழ்நாளை கூட்டும் வால்நட்

சுவை சற்று குறைவாக இருந்தாலும், இதை சில கேக் வகைகள் மற்றும் சாக்லெட்டில் சேர்த்து சாப்பிட்டிருப்போம். தொடர்ந்து சாப்பிட்டால் ஆளை மயக்கும் அளவுக்கு சுவை கொண்டதாகத் தோன்றும். ஆரோக்கியமான தூக்கத்துக்கு மூளையில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரப்பு மிகவும் அவசியம். வால்நட்டில் இயற்கையான முறையில் மெலட்டோனின் ஹார்மோன் இருப்பதால், தூக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் வால்நட் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் டிமென்ஷியா என்ற ஞாபக மறதி நோய்க்கான வாய்ப்பையும் இது குறைக்கிறது.
  
சத்துக்கள்  பலன்கள்:  இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், இதயத்துக்கு மிகவும் ஆரோக்கியமானது என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும்.  மேலும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதன் மூலம் இதயம் மேலும் காக்கப்படுகிறது.
இதயத்துக்கு மட்டுமல்ல இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது மூளைக்கும் மிகவும் நல்லது. இது மூளை நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை எளிமையாக்கி, நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது.

திசுக்கள் வீக்க நோய்களான ஆஸ்துமா, ஆர்த்ரைட்டிஸ் உள்ளிட்டவற்றில் இருந்து காக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், மன அழுத்தம் குறையவும் தூக்கத்துக்கும் இது உதவுகிறது. இதில் உள்ள ஒரு வகையான அமிலம் எலும்புடன் இணைந்து செயல்பட்டு, எலும்பு உறுதியாக இருக்க உதவுகிறது. ஃபோலிக் அமிலம், ரிபோஃபிளேவின், தயாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் சத்துக்களும் இதில் இருப்பதால், கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளலாம்.

இதில் பி7 வைட்டமின் என்ற பயோடின் உள்ளதால், முடி உதிர்வு பிரச்னையில் இருந்து தடுத்து முடி வளர்ச்சிக்கும் உறுதித்தன்மைக்கும் வழிவகுக்கிறது. மேலும், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளதால், சருமத்தை ஃப்ரீராடிக்கல்ஸ் தாக்குதலில் இருந்து காத்து, சுருக்கம், கருவளையம் ஏற்படுவதைத் தடுத்து, முதுமையைத் தாமதப்படுத்துகிறது.

தேவை: தினசரி 2 வால்நட் சாப்பிட்டு வந்தால், ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி பெருகுவதுடன் அதன் ஆரோக்கியம், நீ்ந்திக் கடக்கும் திறன் மேம்படும். மொத்தத்தில் ஒருவரின் வாழ்நாளைக் கூட்டச் செய்யும் ஆற்றல் வால்நட்டுக்கு உண்டு.  

உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை
திராட்சையில் 16 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ளதையே உலர் திராட்சை என்கிறார்கள். மிகவும் பழைய உலர் திராட்சையை வாங்குவதைவிட நடுத்தரமானதை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது. உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் உள்ளன.  மேலும், இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது.சத்துக்கள்  பலன்கள்: இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும்.  இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது.
இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால், உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். விளையாட்டு வீரர்கள், கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது ஏற்ற உணவுப் பொருள். சிறிது கூட கொலஸ்ட்ரால் இல்லாமல் இது உடனடியாக ஆற்றலை தருவதால், உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

உலர் திராட்சையானது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் போன்றவற்றைக் கிரகிக்க உதவுகிறது. இதனால் உடலின் ஒட்டுமொத்த ஆற்றல் அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் தூண்டப்படுகிறது. இதில் உள்ள பாலிபீனாலிக் ஆன்டிஆக்சிடன்ட் புற்றுநோய் செல்களை எதிர்க்கிறது.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும் தன்மை உலர் திராட்சைக்கு உண்டு. இதில், அதிக அளவில் பொட்டாசியம் தாது உப்பு இருப்பதால், ரத்த குழாய்களில் அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியத்தை அளிக்கிறது.

உலர் திராட்சையில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் இரும்பு, தாமிரச் சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த செல்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருப்பதால், ரத்தசோகைக்கான வாய்ப்பு குறைகிறது.

தேவை: திராட்சையை உலரவைக்க ,அதுவும் பொன் நிறமாக உள்ள திராட்சை வகைகளை உலரவைக்கும்போது சல்ஃபர் டைஆக்சைட் போன்ற சில ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இயற்கை முறையில் உலரவைக்கப்பட்ட திராட்சையை வாங்கிப்பயன்படுத்துவது நல்லது. தினமும் 5 - 6 திராட்சை எடுத்துக்கொள்ளலாம்.

பார்வை கூர்மைக்கு அப்ரிகாட்
சூரியனின் தங்க முட்டை என்று கிரேக்க மொழியில் அழைக்கப்படும் ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் நிறைந்த பழம் அப்ரிகாட். பழத்துக்கு எந்த பாதிப்பும் இன்றி நீர்ச்சத்து மட்டும் வெளியேற்றப்படுகிறது.

சத்துக்கள்  பலன்கள்:  கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட சத்துக்கள் இதில் நிறைவாக உள்ளன. இதில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால், ரத்த அணுக்கள் உற்பத்திக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. இது  ரத்த சோகையை வராமல் தடுக்கும்.  ரத்த சோகை வந்தவர்களுக்கு அருமருந்தாகவும் அப்ரிகாட் இருக்கிறது.  எனவே, பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் இந்தப் பழத்தை எடுத்துக்கொள்வது பெரிதும் பயனளிக்கும். குடலில் தேவையற்ற பொருட்கள் தங்குவதை வெளியேற்றி செரிமான மண்டலத்தைத் தூய்மைப்படுத்துகிறது.

காய்ச்சல், தீராத தாகம் உள்ளவர்களுக்கு இந்தப் பழத்தை தண்ணீரில் கலந்து சிறிது தேன் கலந்து கொடுத்தல் நல்ல பலன் கிடைக்கும்.

அப்ரிகாட் பழத்தை சருமத்தில் வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தலாம். சூரிய கதிர்வீச்சல் சருமம் பாதிக்கப்படுவதில் இருந்து இது பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு சருமப் பிரச்னைகளில் இருந்து தீர்வு அளிக்கிறது.  இதில் அதிக அளவில் வைட்டமின் ஏ உள்ளதால், நல்ல கூர்மையான பார்வைக்கு உதவியாக இருக்கிறது. மேலும், மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்டாக செயல்பட்டு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். மேலும் இந்தப் பழத்தைச் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இதய நோய்களுக்கான வாய்ப்பு குறைகிறது. கெட்ட கொழுப்பு அளவு குறைகிறது. சில வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் இந்த பழம் செயல்படுகிறது.

தேவை: சாப்பிடுவதற்கு முன்பு 3 உலர் அப்ரிகாட் பழத்தைச் சாப்பிடுவது செரிமான மண்டலத்தைத் தூண்டி உணவு நன்கு செரிமானம் ஆக உதவுகிறது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் இந்தப் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். கர்ப்பக்காலத்தில் இனிப்பு உள்ளிட்டவற்றைச் சாப்பிடுவதற்குப் பதில், உலர் அப்ரிகாட் சாப்பிடுவது நல்ல சிற்றுண்டியாக இருக்கும்.

ரத்த சோகையை போக்கும் பேரீச்சம் பழம்
அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அள்ளி வழங்கி இயற்கை ஆரோக்கியத்துக்கு அச்சாரமாக விளங்கும் ஆல் இன் ஆல் பழம் இது. ஆற்றலை அள்ளி வழங்குவதுடன் இதயம் முதல் முடி வரை அனைத்து உறுப்புக்களுக்கும் பலன் அளிக்கக்கூடியது.

சத்துக்கள்  பலன்கள்: வைட்டமின் ஏ, சி, , கே, பி காம்ப்ளெக்ஸ் என அனைத்து வைட்டமின்களும் இதில் நிறைவாக உள்ளன. வைட்டமின்களின் தங்கச்சுரங்கம் என்று இதை அழைக்கின்றனர். இந்த வைட்டமின்கள்தான் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் அடிப்படையாக இருக்கின்றன. எனவே, இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும்.

அனைத்து அத்தியாவசிய தாது உப்புக்களும் இதில் நிறைவாக உள்ளன. இவை அனைத்தும் செல்களின் அன்றாட செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம்.  இரும்புச் சத்து இதில் அதிகம். உடலுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்துக்கு இரும்புச்சத்தின் தேவை மிகவும் அத்தியாவசியமானது. 

ரத்த சோகை உள்ளவர்கள் உலர் பேரீச்சம் பழத்தைச் சாப்பிடுங்கள்.
நம்முடைய உறுதியான எலும்பு மற்றும் பற்களுக்கு அவசியமான கால்சியம் சத்தும் நிறைவாக உள்ளது. கொலஸ்டிரால் இல்லை. அதைவிட ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் ஆற்றல் பேரீச்சம் பழத்தில் உள்ளதால், இதயத்துக்கு மிகவும் நல்லது. மேலும், இதில் சோடியம் மிகக் குறைவாகவும், பொட்டாசியம் அதிக அளவிலும் உள்ளன.  இதனால் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம் இதயத்தைப் பாதுகாக்கிறது. இதயத் தசைகளை வலுப்படுத்துகிறது.

இதில்   உள்ள   ஆன்டிஆக்சிடன்ட்கள் செரிமானத்தை எளிமையாக்கி, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு உதவியாக இருக்கிறது. இதில் உள்ள நீரில் கரையாத நார்ச்சத்துக்கள், குடல் உற்பத்தி செய்யும் செரிமானத்துக்கு உதவும் அமிலங்களை உறிஞ்சி கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் அசிடிட்டி, வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல் உள்ளிட்டப் பிரச்னைகளுக்கும் அருமருந்தாக விளங்குகிறது.

முடி பிளவுறுவது, உதிர்வு போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும் ஆற்றல் பேரீச்சம் பழத்துக்கு உள்ளது. முடி வேர்களுக்கு நன்கு ஊட்டம் அளித்து முடி உதிர்வைத் தடுக்கிறது. முடியை வலுவாக்குகிறது. சருமத்தைப் பாதிக்கும் ஃப்ரீராடிக்கல்ஸ் பாதிப்புக்கு எதிராகப் போராடி இளமையானத் தோற்றத்தைத் தக்கவைக்க உதவுகிறது. இதில் வைட்டமின் பி5 உள்ளதால், அது தோல் செல்களுக்கு ஊட்டம் அளித்து பாதிப்பை சரிசெய்கிறது.

தேவை: பேரீச்சம் பழத்தை ஒரு நாளைக்கு 5 சாப்பிடலாம்.  தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளிட்ட எலும்பு பிரச்னைகள் வரவே வராது. கர்ப்பிணிகள் தினசரி குறைந்த அளவில் பேரீச்சம் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். இது கர்ப்பப்பைத் தசைகளை வலிமைப்படுத்துவதுடன் குழந்தைப் பிறப்பை எளிமையாக்குகிறது.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் அத்திப்பழம்
ஆதிகாலம் தொட்டே மனிதன் சாப்பிட்டு பழக்கப்பட்ட பழம் அத்தி. இது எல்லா பருவத்திலும் கிடைப்பது இல்லை. ஆனால் உலர் பழமாக எல்லா பருவத்திலும் கிடைக்கிறது. பழங்கால கிரேக்க இலக்கியத்தில் அத்திப்பழத்தை குழந்தைப் பேறுக்கும், காதலுக்கும் தொடர்புடையதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக அத்திப்பழம் குழந்தைப்பேறுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.

சத்துக்கள்  பலன்கள்: வெறும் மூன்று உலர் அத்தியில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது ஒரு நாள் தேவையில் 20 சதவிகிதம். அத்திப்பழம் ஒரு மிகச்சிறந்த மலமிளக்கியாகவும், செரிமானப் பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்தாகவும் விளங்குகிறது. இதில் கலோரியின் அளவு மிகமிகக் குறைவு. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த சிற்றுண்டியாக இது இருக்கிறது. இதில் துத்தநாகம், மாங்கனீஸ் மற்றும் மக்னீசியம் உள்ளிட்ட தாதுப்பொருட்கள் இனப்பெருக்க மண்டலத்தை மேம்படுத்த உதவுகின்றன.

உணவில் அதிக அளவில் உப்பு சேர்ப்பவர்களுக்கு நல்ல செய்தி. உடலில் சோடியம் அதிகரிக்கும்போது அது சோடியம்  பொட்டாசியம் சம நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். அப்படி அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் அத்திக்கு உண்டு. உயர் ரத்த அழுத்தப் பாதிப்பில் இருந்து  காக்கிறது.

ரத்த குழாய்களைப் பாதிக்கும் ஃப்ரீ ராடிக்கிள்ஸை வெளியேற்றும் திறன் உலர் அத்திக்கு உண்டு. இதனால் ரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் காக்கப்படுவதால் இதய நோய்களுக்கான வாய்ப்பு குறைகிறது. மேலும் டிரைகிளசரைட் என்ற கொழுப்பு வகை குறையவும் இது உதவுகிறது.
டி.என்.ஏ பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து, புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இதில் ஓரளவுக்கு கால்சியம் உள்ளதால், எலும்பின் அடர்த்தியைப் பாதுகாத்து உறுதிப்படுத்துகிறது.

தேவை: தினமும் 3 அத்திப்பழம்  சாப்பிடலாம். இதில், நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. இருப்பினும் இதில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதால்,  சர்க்கரை நோயாளிகள் இதை எடுத்துக்கொள்வதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்ற பிறகே முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.

நட்ஸ் பதிர் பேணி
தேவையானவை: மேல் மாவுக்கு: மைதா மாவு  ஒரு கப், வெண்ணெய்  ஒரு டீஸ்பூன், உப்பு  ஒரு சிட்டிகை.

அரைத்துக் கொள்ள: பாதாம்  அரை கப், பிஸ்தா  கால் கப், முந்திரி  15 துண்டுகள், எண்ணெய்  பொரிக்க.

பாகு வைக்க: சர்க்கரை  400 மி.லி., லெமன் ஃபுட் கலர்  சிட்டிகை.
அலங்கரிக்க: மெலிதாக சீவிய பாதாம், பிஸ்தா  தலா ஒரு ஸ்பூன்.

செய்முறை: பாதாம், பிஸ்தா முந்திரி மூன்றையும் தனித்தனியாக மூன்றையும் ஊறவிடவும். ஊறியதும் பாதாம், பிஸ்தாவின் தோல் உரித்து, முந்திரி சேர்த்து கெட்டியாக மிக்ஸியில் அரைக்கவும். மேல் மாவுக்கு, கொடுத்துள்ளவற்றை நீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசையவும்.  இதில், கெட்டியான பெரிய சப்பாத்தியாக இட்டு, அரைத்த விழுதினை அதன் மேல்  சீராகப் பரப்பவும்.  பிறகு, பாய் போல் சுருட்டி, 4 (அ) 6 பாகங்களாகக வெட்டி, அடிப்பாகத்தை கைகளால் அமுக்கி, மேல் பாகத்தை சப்பாத்திக் குழவியால் சிறிய சப்பாத்திகளாக இடவும்.  அடி கனமான கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பொரித்தெடுக்கவும். பொரித்தெடுத்த பேணிக்களை ஒரு தட்டில் போட்டு, சர்க்கரை பாகினை ஒவ்வொரு பேணியின் மேலும் ஊற்றவும்.

பலன்கள்: நல்ல எனர்ஜியைக் கொடுக்கும். ஓடி விளையாடும் குழந்தைகள், வளரும் குழந்தைகளுக்கு நல்லது.  வீட்டில் நடக்கும் சின்ன விசேஷங்களுக்கு இந்த ஸ்வீட் செய்துதரலாம்,

பேரீச்சம் பழ கீர்
தேவையானவை: விதையில்லா பேரீச்சம் பழம்  ஒரு கப், வறுத்து ரவைப் பதத்துக்கு உடைத்த அரிசி  2 டீஸ்பூன், பால்  ஒரு கப், கன்டன்ஸ்ட்டு மில்க்  3 டீஸ்பூன், ஊறவைத்த பாதாம்  5, ஏலக்காய்த்தூள்  சிட்டிகை, சர்க்கரை  8 ஸ்பூன்

செய்முறை: பேரீச்சையை சிறிய துண்டுகளாக நறுக்கி 20 நிமிடம் ஊறவைக்கவும். பச்சரியை பாலில் வேகவைக்கவும். பாதாமை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, ஊறிய பேரி்ச்சையை  சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனை வெந்துகொண்டிருக்கும் பால் கலவையில் சர்க்கரை, கன்டன்ஸ்ட்டு மில்க், ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒரு கொதி வந்ததும், இறக்கவும். சூடாகவும் அருந்தலாம். குளிரவைத்தும் குடிக்கலாம்.

பலன்கள்: இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த கீரை ரத்த சோகை உள்ளவர்கள் அருந்தலாம்.  வயதானவர்கள், கர்ப்பிணிகள், வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. காலை டிபனுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடுவது நல்லது.

ஹெல்தி நட்ஸ் லட்டு
தேவையானவை: சம்பா கோதுமை மாவு  ஒரு கப், நெய்  6 டீஸ்பூன், பொடித்த சர்க்கரை  முக்கால் கப், ஏலக்காய்த்தூள்  சிட்டிகை.துண்டுகளாக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா  இரண்டரை கப்.

செய்முறை: ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் சம்பா கோதுமை மாவைக் கொட்டி, பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.  நெய்யை லேசாக உருக்கி சேர்த்து, பாதாம், பிஸ்தா, முந்திரி துண்டுகளை நெய்யில் வறுத்து சேர்த்து கலந்து இறக்கி, சூடாக இருக்கும்போதே லட்டுகளாகப் பிடிக்கவும்.

பலன்கள்: அனைத்துச் சத்துக்களும் இதில் இருப்பதால், உடல் உறுதியாக இருக்கும். சர்க்கரைக்குப் பதிலாக மாவில் வெல்லம் சேர்த்துச் செய்யலாம். வளரும் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.

நட்ஸ் கார போளி
தேவையானவை: மேல்மாவுக்கு கோதுமை மாவு, மைதாமாவு  தலா ஒரு கப், எண்ணெய்  2 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.

பூரணத்துக்கு:  பாதாம்  15, முந்திரி  4, தோல் நீக்கி வறுத்த வேர்க்கடலை  அரை கப், துருவிய தேங்காய்  6 டீஸ்பூன், பச்சை மிளகாய்  2, பொடியாக நறுக்கிய மல்லித்தழை  6 டீஸ்பூன், பெருங்காயம்  சிட்டிகை, உப்பு  தேவையான அளவுக்கு, எண்ணெய்நெய் கலவை  4 டீஸ்பூன்.

செய்முறை: மேல் மாவுக்குக் கொடுத்துள்ளவற்றை, சப்பாத்தி மாவை விட சற்றுத் தளர்த்தியாக, போளி பதத்துக்கு தண்ணீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். பாதாமின் தோலை சுரண்டிவிட்டு, முந்திரி, வேர்க்கடலை சேர்த்து கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.  தேங்காய் துருவல், மல்லித்தழை, பெருங்காயம், உப்பு, பச்சை மிளகாயை தண்ணீர் விடாமல் லேசாக ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். பூரணம் ரெடி!

பிசைந்த மாவை எடுத்து வாழை இலையில் உருண்டையாகப் போட்டு உள்ளங்கையால் தட்டி, இரண்டு ஸ்பூன் பூரணத்தை வைத்து மூடி உருண்டையாக்கி, மறுபடியும் போளியாகத் தட்டவும். காயும் தோசைக்கல்லில் போட்டு ஓரங்களில் நெய் எண்ணெய் கலவையை விட்டு, ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.  
பலன்கள்: குழந்தைகளுக்கு மதிய லஞ்ச் பாக்ஸிலும் கொடுக்கலாம். உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். வயிறும் நிறைவாக இருக்கும்.

நட்ஸ் சீடை
தேவையானவை:   பச்சரிசி  ஒரு கிலோ, பொட்டுக்கடலை, உளுந்து  தலா 2 கைப்பிடி, வெல்லம்  2 கப்,  மெல்லிய கீற்றுகளாக நறுக்கிய தேங்காய்  4 டேபிள்ஸ்பூன், மெல்லியதாக நறுக்கிய பாதாம்  6 டேபிள்ஸ்பூன், மெல்லியதாக நறுக்கிய பிஸ்தா, முந்திரி  தலா 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியைக் கழுவிக் களைந்து நிழலில் உலரவிடவும். பாதியாக உலர்ந்ததும் பொட்டுக்கடலை, உளுந்து சேர்த்து மாவு மெஷினில் கொடுத்து அரைக்கவும்.  இதனை வெறும் கடாயில் லேசாக வறுத்து, ஆறியதும் சல்லடையால் சலித்து, காற்றுப் புகாத டப்பாவில் வைத்துவிடலாம்.  
இதுதான் சீடை மாவு.  ஒரு மாதம் வரை கெடாது. தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். வெல்லத்தை சீவி, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கல், மண் போக வடிகட்டிக் கொதிக்கவிடவும். தேங்காய் கீற்று, நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தாவைப் போட்டு ஒரு கம்பிப் பாகு பதம் வந்ததும் இறக்கவும். இதில் செய்துவைத்த மாவினைக் கொட்டி, சீடைகளாக உருட்டவும். காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதே மாவில் வெல்லத்துக்குப் பதிலாக தேங்காய், நட்ஸ், மிளகு, சீரகம் சேர்த்து நைஸாக உடைத்து சேர்த்து, உப்பு, தண்ணீர் விட்டுப் பிசைந்து சீடைகளாக உருட்டிப் பொரித்தெடுத்தால், நட்ஸ் காரச் சீடை ரெடி!

பலன்கள்: புரதச்சத்து, நார்ச்சத்தும் நிறைந்து இருப்பதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது.  அதிகம் எண்ணெய் உறிஞ்சாது. சுவையும் அருமையாக இருக்கும்
http://pettagum.blogspot.in/2014/08/blog-post_69.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

உடலில் ஏற்படும்சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எளிய மருத்துவக்குறிப்புகளை இங்கேபார்ப்போம்

உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். துளசி இலைகள் போடப்பட்ட ...

Popular Posts