லேபிள்கள்

ஞாயிறு, 7 நவம்பர், 2010

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்

 “இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்” என்ற தொடரின் மூலம், பல ஆண்டுகள் ஆய்வு செய்து, பல நூறு அறிவியல்அறிஞர்களின் கடுமையான உழைப்பிற்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பு, அறிவியல் வாடையைக்கூட அறிந்திராத மக்களுக்கு முன்பு மிக எளிமையாக இறைவன் குர்ஆனில் கூறியிருக்கும்அறிவியல் அதிசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கிறேன்.
இறைவன் கூறியிருக்கும் விதம் அறிவியல் அறியாத மக்களும், அறிவியலின் உச்சானியில் இருக்கும் மக்களும் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் அமைப்பில் இருப்பது அதன் அதிசயங்களில் பேரதிசயமாகும். எந்த காலத்தில் வாழ்ந்த மக்களும் அவர்கள் புரிந்து கொண்ட அறிவியல்உண்மைகளுக்கு எதிராக குர்ஆனின் வசனங்கள் ஒரு போதும் இருந்ததில்லை, இனிமேலும் அவ்வாறு இருக்கப்போவதுமில்லை.
வெவ்வேறு காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை அந்தந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.
ஒரு காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் தவறு என நிரூபணம் செய்யப்படும் போது, குர்ஆன் சொன்ன கருத்து தவறு என்று ஆகாது, மாறாக அவர்கள் திருகுர்ஆனை விளங்கிக் கொண்ட விதம், குர்ஆனின் வசனத்திற்கு அவர்கள் கொடுத்த பொருள்தான் தவறு என்றாகும்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையின் படியே இறைவசனம் பொருள் தருகிறது என்று ஒவ்வொரு காலத்து மக்களையும் நம்ப வைப்பதும், எல்லா காலத்து அறிவியல் அறிஞர்கள் கூறும் கருத்துடன் நூற்றுக்கு நூறு பொருந்தி வருகிறது என்று சொல்ல வைப்பதும் அதன் அழியாத அற்புதங்களில் உள்ளதாகும். இந்த அற்புதம் குர்ஆனுக்கு மட்டுமே சொந்தமானதாகும்.
வேத நூற்களில் அறிவியல் ஆராய்ச்சி செய்ய தூண்டும் ஒரே வேதம் குர்ஆன் மட்டும் தான் என ஆணித்தரமாக என்னால் சொல்லமுடியும். மற்ற வேதங்கள் அவ்வாறு தூண்டவில்லை என்பதைவிட அறிவியல் உண்மைக்கு எதிராக நிற்கிறது, அறிவியல் பேசுபவர்களை குழப்பவாதிகள், மாபெரும் குற்றவாளிகள் என முத்திரை குத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட வரலாறுகளைத்தான் நம்மால் படிக்க முடிகிறது.
மற்ற வேதங்கள் இறைவனால் அருளப்பட்ட நிலையிலிருந்து மாறி, பல மாற்றங்களுக்கு உட்படுத்தப் பட்டுவிட்டதால், பல அறிவியல் உண்மைகளுக்கு எதிராக இயற்கையாகவே அவைகள் அமைந்துவிட்டன. மத குருமார்களின் ஆதிக்கம் வலுவாக இருந்த போது, அறிவியல் பேசுவோர்கள் சமூக விரோதிகளாக, இறைக்குற்றம் செய்து விட்டவர்களாககருதப்பட்டு, சிறையிலடைத்து சித்திரவதை செய்யப்பட்டு வந்தார்கள், தங்களது கருத்துகளிலிருந்து பின் வாங்கியவர்களுக்கு உயிர்பிச்சை அளிக்கப்பட்டது, தான் கண்டுபிடித்த அறிவியல் உண்மையிலிருந்து பின்வாங்கதவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப் பட்டார்கள். இந்த கொடுமை மதத்தின் பெயரால், வேதத்தின் பெயரால் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பதுதான் அதிலும் கொடுமையாக இருந்தது.
இந்தக் கொடூரம் வேதங்களின் பெயரால், அரங்கேற்றம் செய்யப்பட்டு கொண்டிருந்த காரணத்தால் பல அறிவியல் விஞ்ஞானிகள், “இறைவன் இல்லை”, “வேதம் பிற்போக்கான கருத்துடையது” என்ற முடிவுக்கு வர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள்.
ஆனால் எந்த வேத நூலுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த குர்ஆனுக்கு இருப்பதால்தான், மேலும் அறிவியல் உலகைப் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதமாகவும் இருப்பதால்தான் இன்று அறிவியல் உலகிற்குகூட அதனால் சவால் விட்டு, நிமிர்ந்து நிற்க முடிகிறது. குர்ஆனை போல இலக்கிய சுவையும், கருத்தாழமும், அறிவியல் உண்மைகளை எளிமையாக எடுத்து வைக்கும் அதன் சிறப்பு பொருந்திய ஒரு வசனத்தையாவது இந்த உலக மக்களால் கொண்டு வர முடியுமா? என அது எடுத்து வைக்கும் சவாலை 15 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர்கொள்ள முடியவில்லையே, இனிமேலும் அதனை எதிர்கொள்ள முடியாது என்பது இரண்டு கருத்துக்கு இடமில்லாத உண்மையாகும்.
வானவியல், புவியியல் என எத்தனை இயல்கள் இருக்கின்றனவோ அத்தனை இயல்களையும் ஆராய்ச்சி செய்து அல்லாஹ்வின் அற்புத ஆற்றலை புரிந்து கொள்ள தூண்டுகிற ஒரே வேதம் குர்ஆன் மட்டுமே.
இந்த தொடரை உங்கள் முன் வைப்பதில் பெருமிதம் அடைகிறேன். நான் ஒரு மருத்துவன் என்ற முறையில் இன்றைய நவீன மருத்துவ அறிவியல்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளேன். இந்த அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆன் மூலம் இந்த உலகிற்கு மிக எளிமையான முறையில் உணர்த்தப்பட்டு விட்டது என்பதை விளக்குவதே எனது நோக்கம்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம், ஒவ்வொரு துறை குறித்தும் தெளிவான, தீர்க்கமான தகவல்களை தந்து கொண்டிருக்கும் அறிவியல் நுட்பம் நிறைந்த காலம். மதத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளை வளர்ப்பது கடினம், எந்த தகவலையும் அறிவியல் தகவலோடு ஒப்பீடு செய்து பார்த்து ஏற்றுக் கொள்ளும் காலம் இது. மருத்துவ துறையில் இன்று புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட உண்மைகள் குர்ஆனில் எந்தந்த வசனங்களில் இடம் பெற்றுள்ளது என்று வாசகர்களுக்கு இனம் காட்டுவதே எனது முக்கிய நோக்கம். அதன் மூலம் குர்ஆன் இறைவேதம் என்பதை எளிதாக புரிந்து கொள்ள மிக வசதியாக இருக்கும்.
அல்லாஹ் எனது நல்ல நோக்கத்திற்கு வெற்றியை தருவானாக. எனக்கு இப்படி ஒரு சேவை செய்வதற்கு வாய்பளித்த இறைவனுக்கு நன்றி கூறி, எனது இந்த சேவையினை அங்கீகரித்து கொள்ள பிரார்த்தனையும் செய்து கொள்கிறேன்.
கருயியல்
கருயியல் என்பது மனிதன் கருவுற்று அவன் எவ்வாறு தாயின் வயிற்றில் வளர்ச்சி அடைந்து, முழு மனித வடிவம் பெற்று பிறக்கிறான் என்ற தகவலை ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். ஒரு பெண் கருவுற்ற நாள் முதல், அவளது வயிற்றில் குழந்தை எந்தந்த நிலையில் எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பது பற்றிய அறிவு சிறிய அளவுகூட இல்லாத காலகட்டத்தில் குர்ஆனில் மிக தெளிவாக, அதே நேரத்தில் மிக எளிமையாக கருவளர்ச்சியின் எல்லா விவரங்களையும் கூறப்பட்டிருப்பது அறிவியல் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
இறைபணிக்காக இணைந்து நிற்கும் எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பதினான்கு நூண்றாண்டுகளுக்கு முன் எல்லாம் வல்ல இறைவனால் நமது நபிக்கு ஜிப்பரயீல்(அலை) மூலமாக அருளப்பட்ட இத்தன்னிகரற்ற மாமறையில் தெரிவித்துள்ள வாழ்க்கை நெறிகளும், அறிவியல் உண்மைகளும் இறைச்சட்டங்களும் இனி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் காலத்துக்கேற்ப பொருந்தி நிறைந்து நிற்பவை என்பது சத்தியம்.
இவ்வரிய திருமறை வருடம் ஒரு முறையும், நமது நபி(ஸல்) அவர்களின் இறுதியாண்டு வாழ்க்கையில் இரு முறையும் ஜிப்பரயீல்(அலை) அவர்களின் மூலம் சரிபார்க்கப்பட்டும், ஆயிரமாயிரம் சத்திய சஹாபாக்களால் மனனம் செய்யப்பட்டும், பிரதிகள் எடுக்கப்பட்டும் இன்றுவரை ஒரு எழுத்துக்கூட மாற்றம் செய்யப்படாமல் இறையருளால் பாதுகாக்கப்பட்டு, இத்திருமறை “இறைவசனமே” என உலகிற்கு தெளிவாக்கி கொண்டிருக்கிறது.
அறிஞர்களும், விஞ்ஞானிகளும், பல்துறை வல்லுனர்களும் நம் திருமறையில் புதைந்துகிடக்கும், காலத்துக்கேற்ப பொருந்தி நிற்கும், உண்மைகளை கண்டு வியந்து நிற்கின்ற வேளையில், ஒரு சில அறிவிலிகள், 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த, ஒரு படிப்பறிவில்லாத நபரின் வாக்குகள் இந்த நூற்றாண்டுக்கு ஏற்றதல்ல என வீராப்பு பேசி எதிர்த்து சேறு பூச விழைகின்றனர்.
அன்பு சகோதரர்களே!, இவ்வெதிர்ப்புக்கள் நமக்கு புதிதல்ல. இஸ்லாம் என்கின்ற வாழ்க்கைநெறி இப்பூலோகத்தில் வேரூன்றி உயர்ந்து நிற்க அது கொடுத்த விலையான தியாகங்களும், உயிர்களும் உலகில் தோன்றிய எந்த ஒரு மதத்திற்கும் ஏற்பட்டதல்ல. இந்த உலகம், நமக்கு உரியதான அடுத்த நிரந்தர உலகத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளும் ஒரு பயிற்சி களமே, (நபி மொழி) என்ற சிந்தனையுடன் இச்சத்திய நெறிகளை வேரூன்ற தம் இன்னுயிரையும், உடமைகளையும் நீத்த ஆயிரமாயிரம் நபித்தோழர்களையும், இஸ்லாமிய உடன் பிறப்புகளையும் மனதில் நினைத்து இறைவனிடம் அவர்கள் நிரந்தர வாழ்க்கைக்கு இறைஞ்சி நமது இறைப்பணியை இனிதே தொடர்வோம்.
இச்சிறிய முன்னுரையோடு, இதழ்கள்தோறும் இறைமறையில் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆலோசனைகளும் கருத்துகளும் கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன.
இந்த வரிசையில், மனிதன் எவ்வாறு உருவாக்கப்படுகிறான் என்பதை, இறைமறை விளக்குவதை பார்ப்போம்.
நிச்சயமாக (முதல்) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர் (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாமே அவனை இந்திரியத்துளியாக ஆக்கினோம். பின்னர் அதை அலக் என்ற நிலைக்கு மாற்றினோம். பின்னர் ‘அலக்’ என்பதை சதைத்துண்டாக ஆக்கினோம். சதைதுண்டை எலும்பாக ஆக்கி, எலும்புக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். ஆகவே படைப்பாளர்களில் அழகானவனான அல்லாஹ் உயர்ந்தவனாக ஆகிவிட்டான். அல் குர்ஆன் 23:12-14
சகோதரர்களே! மனித கருவளர்ச்சியியலை இவ்வளவு துல்லியமாக வெவ்வேறு நிலைகளில் அதன் உருமாற்றம், கால அளவு, குணாதிசயங்களை படைப்பாளனால் மட்டுமே தெளிவாக்க இயலும்.
நான் கருவளர்ச்சியியலில் ஆழமாக செல்லாமல் இவ்வசனத்தின் சிறப்பை மட்டும் தெளிவாக்குகிறேன். “அந்த இந்திரியத்துளியை கர்பப்பையில் ஒரு பாதுகாப்பான நிலையில் வைத்தோம்” அதாவது, கர்பப்பையின் அமைப்பு, அதன் தசைத்தன்மை, சிறப்பு இரத்த ஓட்ட அமைப்பு அதன் திசுவுடைய குணங்கள் எல்லாம் அதற்கே (குழந்தை வளர்ச்சிக்கே) உரித்தானவை. இச்சிறப்பு அமைப்பு இது போன்ற வேறு எந்த உறுப்புகளுக்கும் இல்லை. செயற்கை முறையில் கருத்தரித்தல் செய்தாலும் அதை (கருவை) பின்னர் இக் கருப்பையில்தான் வைத்து வளர்க்க முடியும். மேலும் “பாதுகாப்பான நிலையில்” வைத்தோம் என்கிறான். அதாவது இக்கருவை கர்ப்பபையின் “உடம்பு” என்ற பகுதி அல்லாது வேறு எந்த பகுதியில் வைத்தாலும் (கருவை) கரு முழு வளர்ச்சி அடைவதில்லை. (Abort) அபார்ட் ஆகிவிடும். எனவேதான் இறைவன் “பாதுகாப்பான இடத்தில்” (உடம்பு பகுதியில்) வைத்ததாக கூறுகிறான்.
இந்த வசனங்களை உன்னிப்பாக கவனிக்கும் போது இறைவன் கர்ப்பப்பையை பொதுவாக குறிப்பிடும் போது “ரஹ்ம்” என்று தான் இறைமறையில் பல இடங்களில் குறிப்பிடுகிறான்.
அடுத்து விந்து துளியை “அலக்” என்ற நிலைக்கு மாற்றினோம் என்று வருகிறது.
அலக்” என்ற அரபி வார்த்தைக்கு
1. அட்டை,
2. தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்,
3. இரத்தக்கட்டி என்ற பொருள்கள் உண்டு.
அட்டையையும், “கரு”வையும் ஒப்பிட்டு பார்க்கும் போது சில ஒற்றுமைகள் உண்டு.
1. இந்த இரண்டின் ஒருமித்த தோற்றம்.
2. அட்டை மற்றவர்களின் இரத்ததைத் உணவாகக் கொள்கிறது. கருவும் தாயின் இரத்ததைத்தான் உணவாக்குகிறது.
அடுத்து தொங்கிக்கொண்டிருக்கும் பொருள் என்பது தாயின் கர்ப்பப்பையில் ஒட்டிக் கொண்டிருக்கம் குழந்தை கருக்கு மிக்க பொருத்தமான பொருள்தானே!.
இரத்தக்கட்டி என்ற பொருளும் மிகச்சரியானதே. எவ்வாறு எனில் “கரு” உருவான முதல் மூன்று வாரங்களும் இரத்தக்கட்டி போன்றுதான் இருக்கும். (இரத்த ஓட்டம் இருக்காது. சுப்ஹானல்லாஹ்! இறைவன் அந்த “அலக்” என்ற வார்த்தையில் கருவின் இயல்புகள், குணங்கள், வளர்ச்சிநிலை போன்றவற்றை வியக்கும் படி தெரிவித்துள்ளான்.

கருத்துகள் இல்லை:

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts