எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.)
உலகை உலுக்கி, புரட்டி எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரசஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த வருட ரமழான் நோன்பு நம்மை அடைந்துள்ளது. இதற்கு முன்னரும் எத்தகைய சூழ்நிலை காணப்பட்டாலும் அதை அலட்டிக் கொள்ளாமல், அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனுக்காக நாம் நோன்பு நோற்றுள்ளோம். இந்த நோன்பை நோற்றதன் மூலமாக நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டுமோ, அவை ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா? என்பதை நாம் சுய பரிசோதனை செய்யக் கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ் எதை செய்யச் சொன்னானோ அவற்றை முழு மனதுடன் செய்வது போலவே, எதை தவிர்க்கச் சொன்னானோ அவற்றையும் கண்டிப்பாகத் தவிர்த்து நடக்க வேண்டும்.
அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கும் போது, கூலி வழங்கப்படுகிறது. எதை அல்லாஹ் தேவையில்லை என்று தடுத்தானோ, அவை மீறப்படும் போது, தண்டனையைத் தயார்படுத்துகின்றான். ஒவ்வொரு நிமிடமும் நான் ஓர் அடிமை என்ற நன்றி உணர்வோடு வாழ வேண்டும். குறிப்பாக ரமழான் மாதத்தில் மிகுந்த பக்குவத்துடன் அதிகமாக 'இபாதத்' செய்ய வேண்டும். தீமைகளை விட்டும் தூரமாகி, பரிசுத்தமான வாழ்வின் பக்கம் மீள வேண்டும். இதையே அல்லாஹ்வும் எதிர்பார்க்கின்றான்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (183)} البقرة: 183
'உங்கள் முன்னிருந்தோர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டதே நீங்கள் இறையச்சம் உடையோராக ஆவதற்காக' (02:183) என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு எதற்காக என்பதை மிகத் தெளிவாக இந்த வசனத்தில் கூறப்பட்டுவிட்டது. எனவே, நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்பட வேண்டும். இதுவே, நோன்பின் பிரதான எதிர்பார்ப்பும் நோக்கமுமாகும்.
707 – حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ المُثَنَّى قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: وَأَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ المَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالعَمَلَ بِهِ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ بِأَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ» سنن الترمذي
'யார் பொய்யான பேச்சையும் பொய்யான தீய நடவடிக்கைகளையும் விடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும் தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகைய தேவையுமில்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) ஆதாரம் : திர்மிதி 707
எந்த இலட்சியத்தை அடைவதற்காக நோன்பு எம்மீது கடமையாக்கப்பட்டதோ அந்த உன்னத இலட்சியத்தை நம்மில் பலர் மறந்துவிடுகின்றனர்;. எல்லோரும் நோன்பு நோற்கின்றார்கள் என்பதற்காக நாமும் நோன்பு நோற்று, பசியோடும் தாகத்தோடும் இருப்பதில் எத்தகைய நன்மையும் கிட்டுவதில்லை. எனவே, நோன்பாளிகள் எவற்றைத் தவிர்த்து நடந்து கொள்ள வேண்டும்? நோன்பு நோற்பதினூடாக அவனிடம் என்ன எதிர்பார்க்கப்படுகின்றது என்பதை அவன் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை மேலுள்ள ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
ஒரு முஃமின் தனது வாழ்வின் ஒவ்வொரு கனப்பொழுதிலும் அல்லாஹ்வை அஞ்சி வாழ்வதோடு, தீமைகளை விட்டும் ஒதுங்கி இருக்க வேண்டும். பொய், புரட்டு, பித்தலாட்டம், புறம், கோள், அவதூறு, கேள்விப்படுவதையெல்லாம் பரப்புவது, பிரறை மட்டம் தட்டுவது, மடமமாகக் கருதுவது, தப்பெண்ணம் கொள்வது போன்ற தவறான நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும். அதேபோல், நோன்பு காலங்களில் கண்டிப்பாக தீய நடவடிக்கைகளிலிருந்து மிகத்தூரமாகி இருக்க வேண்டும் என்பதையே இந்த நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.
நபி (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு நாம் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால், ரமழான் எம்மில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நோன்பைப் பாழ்படுத்தும் நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் சர்வ சாதாரணமாக ஈடுபட்டுக் கொண்டே, நாங்கள் நோன்பாளிகள் என்கின்றனர். அதனால்தான், பல நோன்பு மாதங்கள் எம்மைக் கடந்து சென்றாலும், எம்மில் எத்தகைய மாற்றமும் நிகழ்வதில்லை.
எப்போது அல்குர்ஆனும் நபிமொழியும் புறக்கணிக்கப்படுகிறதோ, அப்போது பெறுபேறுகள் பூச்சியமாகவே இருக்கும். எனவே, நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு தாம் உரிய முக்கியத்துவம் அளித்து, எமது நல்லமல்களை பாழ்படுத்திவிடாது, பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இறையச்சமில்லாத எந்த ஒரு வணக்கத்தையும் அல்லாஹ் பொருந்திக் கொள்ளமாட்டான். சிறியளவு செய்தாலும், அது இறையச்சத்துடன் அமைந்து விடுமானால், அல்லாஹ் பூரண திருப்தி அடைந்துவிடுவான்; நிறைவான கூலியையும் வழங்கவான்.
إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ (27)} المائدة: 27(
'…(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.' (அல்குர்ஆன் : 05:27)
இறை திருப்தியை நாடி மட்டும் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வணக்கத்தை அற்பமான, தீய நடவடிக்கைகளால் வீணாக்கி விடக்கூடாது. நோன்பு நோற்கும் நேரத்தில் எமது வீட்டிலிருக்கும் உணவை அல்லாஹ்வுக்கு அஞ்சி தவிர்த்துவிடுகின்றோம். நாம் தனியே இருக்கும் போது, யாரும் எம்மைப் பார்ப்பதில்லை. ஆனாலும், நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும். அவன் ஒவ்வொரு வினாடியும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் எமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளதாலேயே நாம் சாப்பிடுவதில்லை.
இதேபோல், ரமழான் அல்லாத காலங்களிலும் அல்லாஹ் எம்மை அவதானித்துக் கொண்டிருக்கிறான் என்று உறுதியாக நம்ப வேண்டும். ரமழானில் ஹராமான காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, இறைவனுக்குப் பயந்து ஹலாலானவைகளையே நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் உண்ணுவதற்கு எமது வீட்டில் ஹலாலான உணவு இருந்தும் நாம் உண்ணுவதில்லை. கட்டிய மனைவி இருந்தும் பகல் காலங்களில் நெருங்குவதில்லை. இந்த ஆன்மீகப் பயிற்சிதான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் ஒரே காரணம். இதைத்தான் நபியவர்களும் விளக்கியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் 'பசித்திருப்பது நோன்பின் நோக்கமல்ல என்பதை ஆழமாக விளக்குவதோடு, நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி எத்தகைய மாற்றங்களை எம்மிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
பொய் தவிர்ப்பு :-
பொய் சொல்வது பெரும்பாவங்களில் ஒன்றாக உள்ளது என அல்குர்ஆன் கூறுகிறது.
.أَتَقْتُلُونَ رَجُلًا أَنْ يَقُولَ رَبِّيَ اللَّهُ وَقَدْ جَاءَكُمْ بِالْبَيِّنَاتِ مِنْ رَبِّكُمْ وَإِنْ يَكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهُ وَإِنْ يَكُ صَادِقًا يُصِبْكُمْ بَعْضُ الَّذِي يَعِدُكُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ}غافر: 28، 29(
'…என் இறைவன் அல்லாஹ்வே என்று கூறும் ஒரு மனிதரை கொல்லப் போகிறீர்களா? உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவர் பொய்யராக இருந்தால் அவரது பொய் அவரையே சேரும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் உங்களுக்கு எச்சரிப்பதில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டு விடும். வரம்பு மீறும் பெரும் பொய்யருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.' (அல்-குர்ஆன் 40:28)
وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ الْجَحِيمِ (10)} المائدة: 10(
'(நம்மை) மறுத்து, நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரே நரகவாசிகள்.;' (அல்-குர்ஆன : 05:10)
புனிதமிக்க ரமழானில்தான் பொய்களை அதிகமாகப் பேசுகின்றார்கள். மார்க்கம் என்ற பெயரால் புனைந்துரைத்து, சிறப்புக்கள் என சில 'அமல்'களையும் அதற்கான கூலிகளையும் அள்ளி வீசுகின்றனர். பள்ளிகளில் அல்லாஹ்வின் வேதமும் நபி (ஸல்) அவர்களின் தூய்மையான போதனைகளும் பேசப்படுவதற்குப் பதிலாக, போலிகளை உலவ விடுகின்றார்கள் நம்மில் பல உலமாக்கள். இவர்கள் நபி (ஸல்) அவர்களின் போதனைகளையும் எச்சரிக்கைகளையும் கவனத்தில் கொள்வதில்லை.
(2607) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، قَالَا: حَدَّثَنَا الْأَعْمَشُ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ بِالصِّدْقِ، فَإِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ، وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ، وَمَا يَزَالُ الرَّجُلُ يَصْدُقُ وَيَتَحَرَّى الصِّدْقَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ صِدِّيقًا، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ، فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ، وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَمَا يَزَالُ الرَّجُلُ يَكْذِبُ وَيَتَحَرَّى الْكَذِبَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ كَذَّابًا» صحيح مسلم
'உண்மை உரையுங்கள்! உண்மை நன்மையின் பக்கம் வழிகாட்டும். நன்மை சுவர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதன் உண்மையே பேசி, அதிலேயே தொடர்ந்து இருப்பானாயின் அல்லாஹ்விடத்தில் அவன் உண்மையாளன் எனப் பதியப்படுகின்றான். பொய்யைப் பயந்து கொள்ளுங்கள். ஏனெனில், பொய் தீமையின் பக்கம் வழிகாட்டுகிறது. தீமை நரகத்தின் பக்கம் வழிகாட்டும். ஒரு மனிதன் பொய் உரைத்து, அதில் மூழ்கியிருப்பானாயின் அல்லாஹ்விடத்தில் பொய்யன் எனப் பதியப்பகின்றான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்துத் (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 2607
பொய் பேசுபவன் அல்லாஹ்விடம் பொய்யன் என்று பதியப்படுவதுடன், அவன் நரகம் செல்வான் என்றும் குறிப்பிடப்படுகிறது. இன்று அதிகமான உலமாக்களிடமும் பொய் மலிந்துள்ளது. மார்க்கத்தின் பெயரால் எவ்வளவு பொய்களைச் சொல்கின்றார்கள். நம்மில் அதிகமானவர்களிடம் பொய் சொல்வது ஒன்றும் பெரிய தப்பில்லை என்ற எண்ணம் உள்ளது. அதனால்தான், சர்வசாதாரணமாக, சளைக்காமல் பொய் சொல்வதைப் பெரிய திறமையாகவும் கருதுகின்றார்கள். பொய் சொல்லாமல் இந்தக்காலத்தில் எப்படி வாழமுடியும் என்று முஸ்லிம்களே கேள்வி கேட்கும் நிலை! பொய் சொன்னால் மறுமையில் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமும் முஸ்லிம்களிடம் எடுபட்டுப்போய்விட்டது.
34 – حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ' أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا: إِذَا اؤْتُمِنَ خَانَ، وَإِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ ' صحيح البخاري
'எவனிடம் நான்கு விடயங்கள் இருக்கின்றனவோ, அவன் நயவஞ்சகனாவான். நான்கில் ஒன்றிருந்தாலும் நயவஞ்சகத்தின் ஒரு பகுதி உள்ளவனாவான். அதை விடும்வரை நயவஞ்சகனாவான்.
1. பேசினால் பொய்யுரைப்பான்.
2. வாக்களித்தால் மாறு செய்வான்.
3. வழக்காடினால் அநீதியிழைப்பான்.
4. உடன்படிக்கை செய்தால் அதை மீறுவான். (புகாரி :34)
இன்று எமது வியாபாரம், கொடுக்கல் – வாங்கல், குடும்ப விவகாரம், மார்க்கப் பிரசாரம், அண்டை அயலவர்கள் தொடர்பு என்று எல்லா அம்சங்களிலும் முஸ்லிம்களிடம் பொய் மிகைத்து நிற்கிறது. எனவே, இந்த நோன்பின் மூலம் பெறுகின்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்து எம்மைத் தடுக்கவில்லையானால் நாம் நோன்பு நோற்கவில்லை. வெறும் பட்டினிதான் கிடந்துள்ளோம். என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை எமது கவனத்தில் கொள்ள வேண்டும். வாயில் வருவதையெல்லாம் மார்க்கம் என்று பேசும் மடமை நிலை மாறவேண்டும்.
«كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ» صحيح مسلم
'கேள்விப்பட்டதையெல்லாம் ஒருவன் பேசுவது அவன் பொய்யன் என்பதற்குப் போதிய ஆதாரமாகும்' (முஸ்லிம்)
மார்க்கம் என்ற பெயரில் சில பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்படுவதும், வானொலியில் ஒலிபரப்பப்படுவதும், சில தனிமனிதர்களின் சொந்த, இயக்க சார்புக் கருத்துக்களும் பலருக்கு ஆதாரங்களாகிவிட்டன. ஒரு மாதக் கோஸ் முடித்துவிட்டு என்னைவிட்டால் ஆலிம் இல்லை என்று சில விடலைகள் மமதையோடு அலைகின்றன. மூன்று நாள், பத்து நாள், நாற்பது நாள் என்று ஊரைவிட்டுவிட்டு, அடுத்த ஊருக்குச் சென்று வந்தவர்களெல்லாம் தமது வாயில் வந்ததெல்லாம் மார்க்கம் என்று பேசி, தூய்மையான இஸ்லாத்தை மலினப்படுத்துகிறார்கள். புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள கட்டுக்கதைகளை மார்க்கம் என்று ஒரு சாரார் பக்தி சிரத்தையோடு கேட்கின்றனர். இது ரமழான் காலங்களில் அதிகரித்து வருகிறது.
நபி (ஸல்) மீது இட்டுக்கட்டுவதும் பொய் கூறுவதும் தனது இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்வதற்குரிய கொடிய குற்றமாகும். மக்களின் பாமரத் தன்மையைப் பயன்படுத்தி, இவ்வாறு நடந்து கொள்வது தடுக்கப்பட வேண்டும். இதற்குப் பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்க அறிவுள்ளவர்கள் நிர்வாகத்தில் அங்கம் வகிக்கும் போதுதான் இது சாத்தியப்படும்.
'மாபெரும் சதி யாதெனில் மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும்.' (அஹ்மத்) நாவினால் ஏற்படும் பாவங்களே அதிகம். எனவே, நாவை அடக்குவது அவசியம். நாவினால் ஏற்படும் பெரிய தீமை பொய்யாகும். ஆகவே, பொய்யுரைக்காது பக்கவத்துடன் இருக்க வேண்டும். பொய், வாழ்க்கையின் எந்தத் துறையிலும் நுழைந்து விடாதவாறு இஸ்லாம் மிகக் கவனமாக வழிநடத்துகிறது.
பொய், பொய் சாட்சி, பொய் சத்தியம், பொய் வாதம், மார்க்கத்தின் பெயரால் புழுகு மூட்டைகளை அவிழ்த்துவிடுதல் போன்ற தீய, கொடூரங்களை , துரோகங்களைத் தவிர்ப்பதற்காக நோன்பு என்ற மிகப் பெரிய ஆன்மீகப் பயிற்சிக்கூடத்தை இஸ்லாம் ஒரு மாதகாலம் ஏற்பாடு செய்து தந்துள்ளது.
அடியான் பட்டினி கிடப்பதால், தாகத்துடன் தவிப்பதால் எஜமானனாகிய ரப்புல் ஆலமீன் அல்லாஹ்விற்கு எத்தகைய நலனும் ஏற்படப் போவதில்லை. கடமையான நோன்பை ஒரு மாதகாலம் இறை நம்பிக்கையாளர்களிடம் நோற்கச் செய்துவிட்டு, அவர்கள் பொய் சொல்லாமல், பொய்யான, தீமையான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என அல்லாஹ் அவர்களிடம் எதிர்பார்க்கிறான். இந்தப் பண்புகளை அடியார்களிடமிருந்து வெளிப்படுத்தவே நோன்பைக் கடமையாக்கியுள்ளான். ரமழானுக்குப் பின்னரும் இது தொடருமானால் அவர்களுக்கு மத்தியில் சகோதரத்துவ இணக்கம், நம்பிக்கை, நல்லுறவு, பண்பாடு, ஒழுக்கம் என்பன நிலவும்.
…مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ .صحيح البخاري
'…எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசிக்கிறாரோ அவர் நல்லதைப் பேசட்டும்; அல்லது மௌனமாக இருக்கட்டும். (புகாரி 6018)
தீய நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்குதல் :-
எமது நோன்பு எம்மைத் தீய நடவடிக்கைகளிலிருந்து தடுக்க வேண்டும். அது, எம்மை நல்ல வழிகளில் செல்லத் தூண்ட வேண்டும். ரமழானிலும் நாம் எமது தீய செயல்களை மாற்றவில்லை என்றால், எமது ஈமானை நாம் மீள் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 'இபாதத்' செய்வதற்கும் மன அமைதிபெறுவதற்கும் நோன்பு ஓர் அரிய வாய்ப்பு. இதனைப் பயன்படுத்தவில்லையானால் நாம் துர்ப்பாக்கியசாலிகள். குறிப்பாக இளைஞர்கள் ரமழானில் அதிகமாக தீமைகளில் ஈடுபடுகின்றனர். மற்றவர்களின் தூக்கத்திற்கு இடையூறாக நடந்து கொள்கின்றனர். திருட்டு, கொள்ளைகளில் ஈடுபடுகின்றார்கள். அதிகமான பெற்றோர்கள்; கூட இவர்களின் நடவடிக்கையைக் கண்டிக்கத் தவறுகின்றனர்.
(2581) حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ؟» قَالُوا: الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ، فَقَالَ: «إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ، وَصِيَامٍ، وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ هَذَا، وَأَكَلَ مَالَ هَذَا، وَسَفَكَ دَمَ هَذَا، وَضَرَبَ هَذَا، فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ، وَهَذَا مِنْ حَسَنَاتِهِ، فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ، ثُمَّ طُرِحَ فِي النَّارِ» صحيح مسلم
'ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் 'உண்மையான ஓட்டாண்டி (நஷ்டவாளி) யார் என்பதை நீங்கள் அறிவீர்களா? எனக் கேட்க, அதற்கு அவர்கள் யாரிடம் திர்ஹமோ, பொருட்களோ அற்ற வறுமை நிலை தோன்றுகின்றதோ, அவரே ஓட்டாண்டியாவான்' என்றனர். அதற்கு, நபியவர்கள் என் சமூகத்தில் உண்மையான ஓட்டாண்டி யாரெனில், அவர் தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகளை அதிகமாக உலகில் நிறைவேற்றியவராக மறுமையில் வருவார். அதேநேரம், அம்மனிதர் ஒருவரை ஏசியிருப்பார்; இன்னொருவரைப் பற்றி அவதூறு கூறியிருப்பார், வேறொருவரின் சொத்துக்களை (அநியாயமான வழியில்) சாப்பிட்டிருப்பார். அடுத்தவரின் இரத்தத்தை (நியாயமற்ற முறையில்) ஓட்டியிருப்பார், மற்றொருவரை அடித்திருப்பார் (இவ்வாறான நிலையில், இவரால்) குறித்த அநியாயங்களுக்குட்படுத்தப்பட்டவர்கள் தமது முறையீடுகளை (அல்லாஹ்விடம்) தெரிவித்து விண்ணப்பிப்பர். அவ்வேளை, அவர்களின் மத்தியில் இவரது (இபாதத் மூலம் கிடைத்த) நன்மைகள் பகிர்ந்தளிக்கப்படும். குறித்த அநியாயக்காரன் பற்றி (குற்ற) முறையீடுகள் முடிவடைய முன்னர், அவனது நன்மைகள் முடிவடைந்துவிடும். எனவே, முறைப்பாடு செய்வபர்களின் தீமைகளிலிருந்து எடுத்து, இவன் மீது சுமத்தப்பட்டு, பின்னர் நரகில் எறியப்படுவான்.' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 2581
ரமழான் இறையச்சத்தையும் இபாதத்களையும் எம்மில் அதிகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நாம் நஷ்டவாளிகள். ரமழானில்தான் முஸ்லிம்கள் மத்தியில் சண்டையும் சச்சரவும் அதிகமாக ஏற்படுகிறது. சமூகம் பிளவுண்டு சின்னபின்னமாகிறது. அதுவும் மார்க்கம் அல்லாதததை மார்க்கம் என்று கருதி பிரச்சினைகளில்; சிக்கித் தவிக்கிறது. வீண் வம்பு கூடாது என்ற மார்க்கத்தில் அதுவும் மார்க்கம் என்ற பெயரால், மற்ற முஸ்லிம்களின் இரத்தத்தைக்கூட ஓட்டத் துணியும் அயோக்கியத்தனம் மாற வேண்டும். பள்ளிவாயல் அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமானது. அங்கு தூய முறையில் வணங்கவும் வழிபடவும் முஃமின்களுக்கு உரிமையுண்டு. அதைத் தடுக்க உலகில் யாருக்கும் உரிமையில்லை. சுதந்திரமாக வழிபட எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. ஆகவே, பள்ளியில் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
மற்றவர்களின் சுதந்திரம் பறிக்கப்படும் போதுதான் பிரச்சினைகள் எழுகின்றன. எல்லோருக்கும் சம உரிமை உண்டு. மக்கள் உண்மைக்குத் தலைவணங்கும் காலம் கனிந்து வருகிறது. எனவே, தவறான சிந்தனையில் மூழ்கியிருப்பவர்கள் இந்த ரமழானிலாவது தமது நிலையை மாற்றிக்கொள்ள முனைவதோடு, தவறான அணுகுமுறைகளை விட்டு, அறிவு வழியில் அமைதியாக விடயங்களை கருத்தாடல்களுக்கு உட்படுத்த வழிவிட வேண்டும்.
(1151) حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ رِوَايَةً، قَالَ: ' إِذَا أَصْبَحَ أَحَدُكُمْ يَوْمًا صَائِمًا، فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ، فَإِنِ امْرُؤٌ شَاتَمَهُ أَوْ قَاتَلَهُ، فَلْيَقُلْ: إِنِّي صَائِمٌ، إِنِّي صَائِمٌ ' صحيح مسلم
'உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் முட்டாள்தனமாக நடந்து கொண்டால், ஏசினால், அல்லது சண்டையிட்டால், 'நான் நோன்பாளி' 'நான் நோன்பாளி' என்று கூறட்டும்.'என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 1151)
எம்முடன் யாரேனும் சண்டைக்கு வந்தால், திட்டினால் பொறுமை செய்வது அவசியமாகும். முப்பது நாட்கள் நோன்பு நோற்று பயிற்சி எடுத்தவர்கள் நோன்பை நிறைவு செய்தவுடன் பெருநாள் அன்று மது அருந்தவும், சினிமாக்களைப் பார்க்கவும் கேலிக் கூத்துக்களில் ஈடுபடவும் செய்வார்கள் என்றால், இவர்கள் வீணாக பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர, இவர்கள் நோன்பு நோற்றவர்கள் என்று கூற முடியாது. ரமழானுக்கு முன்னர் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலையில்தான் இனியும் இருக்கப்போகிறோம் என்றால் நாம் ரமழானில் எத்தகைய பயனும் பெறவில்லை என்பதுதான் இதன் பொருள்.
அதேபோல், எமது இளம் யுவதிகள் அரட்டை அடிப்பதிலும் புறம் பேசுவதிலும் கோள் சொல்வதிலும் தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்படும் சினிமாப் படங்கள், தொடர் நாடகங்கள் என்பவற்றைப் பார்ப்பதிலும் சூரியன், சக்தி, தென்றல்களில் நேரத்தை வீணடிப்பதிலும் கழிப்பார்கள் என்றால், அவர்களின் நோன்பில் எத்தகைய பயனும் கிடைக்கப்போவதில்லை. இன்று நோன்பு நோற்றுக்கொண்டு கலப்படம், மோசடி, வட்டி, இலஞ்சம், ஊழல் போன்ற தீய செயல்களில் ஈடுபடுவதும்; பொய்இ புறம் பேசுவது ஆகியவற்றில் சர்வசாதாரணமாக முஸ்லிம்கள் ஈடுபடுகின்றனர். இவர்கள் தாம் பசியோடு இருப்பது மட்டும்தான் இறைவனுக்குத் தேவை என்று எண்ணுகின்றனரா?!
அல்லாஹ் தேவையற்றவன் :-
பல ஹதீஸ்களும், ஹதீஸ் குத்ஸியும் அல்லாஹ் மனிதர்களிடமும் ஏனையவற்றிடமும் தேவை அற்றவன் என்று பிரகடனப்படுத்துகின்றன. நாம் நோன்பு நோற்பதில் அவனது மாட்சிமையில் எதுவும் கூடிவிடுவதுமில்லை. நாம் நோன்பு நோற்காததால் அவனது ஆட்சி அதிகாரத்தில் எதுவும் குறைவதும் இல்லை.
اللَّهُ الصَّمَدُ } الإخلاص: 3(
'அல்லாஹ் தேவையற்றவன்' (112:2)
நாம் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, வழிபட்டு நடப்பது எமது நலனுக்காகத்தான். உலக மக்கள் அனைவரும் சேர்ந்து அல்லாஹ்விடம் தேவையை வேண்டி, அவன் அனைவருக்கும் வழங்கினாலும் அவனது அருளில் ஊசி முனையளவு கூட குறைந்துவிடாது. அதேபோல், அனைவரும் ஈமான் கொண்டு, பக்தியுடன் வணங்கினாலும் அவனுக்கு எதுவும் கூடப்போவதில்லை. எனவே, தூய்மையான எண்ணமில்லாத, வணக்கங்களில் எத்தகைய பயனும் இல்லை. முழுமையாக அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று வழிபட்டு நடந்து மறுமையில் அல்லாஹ் வழங்கக் காத்திருக்கும் சுவர்க்கத்திற்கு உரியவர்களாக நாம் மாற முனைய வேண்டும்.
குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள் தமது காலத்தையும் நேரத்தையும் வீணடித்துவிடாது, இந்த ரமழானை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனக்கும் சமுதாயத்திற்கும் பிரயோசனமுள்ள பிரஜையாக வாழ்ந்து, அல்லாஹ்வின் தீனை நிலை நாட்ட உழைக்க வேண்டும். எனவே, நோன்பு எம்மிடம் எதிர்பார்த்திருக்கும் இலட்சியத்தை அடைந்து கொள்ள ஆவண செய்வோமாக.
புனிதமிகு ரமழான் எம்மிடம் இறையச்சத்தை வேண்டி நிற்கிறது. அடுத்த ரமழானை நாம் அடைவோமா என்பதை யாரும் அறியோம். எனவே, இந்த ரமழானை நல்ல முறையில் பயன்படுத்தி, நல்ல அமல்கள் புரிந்து, நல்லவர்களாக வாழப் பயிற்சி எடுப்போமாக.
http://www.islamkalvi.com/?p=124063
--