லேபிள்கள்

வியாழன், 29 டிசம்பர், 2016

தரமான சானிட்டரி பேட் பயன்படுத்துங்கள்


நாம் பயன்படுத்தும் சானிட்டரி பேட் நல்ல நிறுவனத்தின் தயாரிப்பாக இல்லாவிட்டால் பலவிதமான பிரச்சனைகள் வருவது இயல்பு. ஒரு வேளை நாம் துணியை பயன்படுத்தினால் கூட இந்த பிரச்சனை வரக்கூடும்.

சானிட்டரி பேட் அல்லது துணி என எதுவாக இருந்தாலும் அவ்வப்போது அதை மாற்றுவது சிறந்தது. ஒரே சானிட்டரி பேட் அல்லது துணியை 8-9 மணி நேரத்திற்குப் பயன்படுத்துவது சுகாதாரமற்றதாகும். இப்படி நாம் பயன்படுத்தும் போது தான் சொறி மற்றும் புண் ஆகியவை ஏற்படுகின்றன. ஆகையால் அவ்வப்போது அவற்றை மாற்ற மறந்து விடாதீர்கள்.

அதை மாற்றும் போதும், நன்கு கழுவி துடைத்த பின்னும் புதிய சானிட்டரி பேடை பயன்படுத்தினால் சிறந்த பலனைப் பெற முடியும். இந்த சானிட்டரி பேட் அல்லது நாப்கின்களை குறித்த காலத்தில் தவறாமல் மாற்றி அரிப்புகள் ஏற்படாத பீரியட்களை எதிர்கொள்ளுங்கள். பெண்கள் இப்போது வீட்டிலேயே முடங்கி இருப்பது கிடையாது.

அவர்களும் வேலை மற்றும் இதர காரியங்களில் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இதனால் மாதவிடாய் காலத்தில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் பயன்படுத்தும் துணி மற்றம் சானிட்டரி பேட் ஆகியவை தோலில் உராய்ந்து வெடிப்புக்களை ஏற்படுத்துகின்றன. அதனால் தொடை மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் காயங்கள் உண்டாகின்றன.

ஆகையால் சானிட்டரி பேட் தேர்ந்தெடுக்கும் போது மென்மையான மற்றும் சிறந்த தரம் கொண்ட பொருட்களை பயன்படுத்துவது நல்லதாகும். சானிட்டரி பேட் ஜெல் மற்றும் பருத்தியால் செய்யப்பட்டு வினியோகமாகி வருகின்றன.

பருத்தியால் செய்யப்பட்டதை பயன்படுத்தும் போது அதை நீண்ட நேரத்திற்கு பயன்படுத்த முடியாது. ஆனால் அவை சிறந்ததாகும். நல்ல தரமான பேட்கள் உங்களுக்கு அரிப்புகள் இல்லாத பீரியட்களை கொடுக்கும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 27 டிசம்பர், 2016

கார் பேனெட்டில் எலிகள்: எலிமினேட் செய்ய சில ஐடியாக்கள்!


கார் வைத்திருப்பவர்கள் சர்வீஸ் பிரச்னைகளைக்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், இந்த எலிகள் காருக்குள் குடும்பம் நடத்தி இன்ஜினுக்குள் கும்மியடிப்பது, சாதுவான கார் உரிமையாளர்களையே கோபம் கொள்ளவைத்துவிடும்.
எலிகளால் வெறும் சர்வீஸ் செலவு மட்டுமில்லை; வயர்களைக் குதறி, கனெக்ஷன்களை மாற்றி விடுவதால், சில நேரங்களில் கார்கள் தீப்பிடிக்கும் வாய்ப்புகூட இருக்கிறது.

பொதுவாக, வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு இந்தியாவில் பெரிய பிரச்னையாக இருப்பது எலிகள்தான். காரணம் - கார்களின் பாடி சீலிங்குக்காகத் தயாரிக்கப்படும் பசையில் உள்ள ஒருவித கெமிக்கல் வாசனைக்கு, எலிகள் அடிமை. அந்தப் பசையின் வாடைக்கு வந்துவிடும் எலிகளால் பெரிய தலைவலி.
என்னதான் கார் பார்க்கிங்கோடு புது வீடு வாங்கி சேஃப்டியாக காரை நிறுத்தினாலும், லூட்டியாக வந்து உட்காரும் எலிகளை எலிமினேட் செய்ய சில ஐடியாக்கள்...

1. எலிகளுக்குக் கடுப்பைக் கிளப்பக் கூடியவற்றில் முக்கியமான ஒரு அம்சம் - மிளகு. மிளகைப் பொடி செய்து பேனெட்டுக்குள் தூவி விடுங்கள். 'மிளகு மிளகு... விலகு விலகு' என்று எலிகள் அலர்ஜியாகப் பாடியபடியே ஓட்டம் எடுத்துவிடும். ஆனால், கார் ஓட்டி இன்ஜின் சூடாகும்போது, சமையல் அறைக்குள் புகுந்துவிட்டதுபோல் ஒரு வாடை வருவதைத் தடுக்க முடியாது.

2. நாட்டுப் புகையிலை என்றாலும் எலிகளுக்கு அலர்ஜியான விஷயம். புகையிலையை ஆங்காங்கே கட்டி அல்லது ஒட்டிவிடுங்கள். புகையிலை வாசனைக்கு எலி அண்டாது.

3. நாப்தலின் உருண்டைகளுக்கு, பூச்சிகள்கூட கிட்ட வராது. பீரோவில் கரப்பான் மற்றும் பூச்சிகளிடமிருந்து உடைகளைப் பாதுகாக்க நாப்தலின் உருண்டைகளை வைத்திருப்பீர்களே... அதில் நான்கைந்து உருண்டைகளை இன்ஜின் பகுதியில் வைத்து விடுங்கள். இதுவும் நல்ல ஐடியா.
5. கொசுக்களை டார்ச்சர் பண்ண அல்ட்ராசோனிக் சப்தம் கொண்ட சின்ன மிஷின் இருப்பதைப்போல், எலிகளுக்கும் எரிச்சல் தரக் கூடிய இசை உண்டு. அமெரிக்கத் தயாரிப்பான இந்த மெஷின் சென்னை ஜி.பி. ரோட்டில் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதை இன்ஜின் பக்கத்தில் வைத்து, இரவு முழுவதும் ஓட விட்டால், எலிகள் நிச்சயம் அண்டாது. ஆனால், இந்த இசை... நேரம் போகப் போக, மற்றவர்களுக்கும் எரிச்சல் தர வாய்ப்பு உண்டு.

6. கொஞ்சம் டீஸன்ட் ஆக எலிகளை எலிமினேட் செய்ய விரும்புபவர்கள், இதற்கென விற்கும் எலி வலைகளை வாங்கி பானெட் பகுதியைச் சுற்றிப் பொருத்திக் கொள்ளலாம். இவை சர்வீஸ் செய்யும்போது எளிதாகக் கழட்டி மாட்டும் வகையில் கிடைக்கிறது.

7. எலிகளை விரட்ட மூக்குப் பொடியும் பெஸ்ட் ஆப்ஷன். மூக்குப் பொடியையும் தூவி எலிகளை விரட்டலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

அலர்ஜி போக்கும் மிளகு!!

மருத்துவர் கு.சிவராமன்
அஞ்சறைப் பெட்டியில் சுக்குக்கு அடுத்த இடம் மிளகுக்கு. "1600-களில் அரபு வணிகர்கள் மிளகின் விலையை இரண்டு டாலருக்கு ஏற்றாமல் இருந்திருந்தால், இந்தியாவுக்கு 400 ஆண்டு கால அடிமை வாழ்வு இருந்திருக்காது'' என வரலாற்று பேராசிரியர்கள் குறிப்பிடுவார்கள். அந்த அள
வுக்கு மிளகு கோலோச்சிய காலம் உண்டு. 16-ம் நூற்றாண்டு வரை, காரமான எந்த உணவுக்கும் மிளகுதான் தீர்வு.
அயல்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு மிளகாய் அறிமுகப்படுத்தப்படும் வரை, மிளகைத்தான் பயன்படுத்திவந்தோம். மிளகாய் என்ற சொல்லுக்கு மிளகு + ஆய் என்று அர்த்தம். அதாவது மிளகைப் போன்றது என்று அர்த்தம். இன்று சமைக்கும் மிளகில் இருக்கும் பைப்பரின், பைப்பரிடின் (Piperine, Piperidine) என்கிற இரண்டு மருத்துவப் பொருட்கள், பல்வேறு நோய்களில் இருந்து நம்மைக் காக்கும். இயல்பாக, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றலை  ஊக்குவிக்கும் பொருள், மிளகு.
அலர்ஜி போக்கும் மிளகு
அலர்ஜியால் வரும் மூக்கடைப்பு, தும்மல், நீரேற்றம், சில நேரங்களில் ஏற்படும் தோல் அரிப்பு, திடீர் தோல் படைகள், கண் எரிச்சல், மூக்கு நுனியில் ஏற்படும் அரிப்பு, மூச்சிரைப்பு போன்ற அலர்ஜி நோய்களை விரட்டும் இயல்பு, மிளகுக்கு உண்டு.'பத்து மிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்' என்று ஒரு சொலவடை உண்டு. நாம் அறியாமல், நம் உடலில் நச்சு செலுத்தப்பட்டால் கூட, அதை முறியடிக்கும் சக்தி, மிளகுக்கு உண்டு. நச்சுப்பொருளை அறியாமல் தீண்டினாலோ, முகர்ந்தாலோ ஏற்படும் பல்வேறு உடனடி அலர்ஜி தொந்தரவுகளை, மிளகு உடனடியாக முறியடிக்க உதவும்.
சளித்தொல்லைக்கு
பனிக்காலங்களில் சிறு குழந்தைகளுக்கு நெஞ்சில் சளி ஏற்பட்டால், அதை வெளியேற்ற இருமல் வரும். இதற்கு மிளகுதான் கைகண்ட மருந்து. குழந்தை இரவில் திடீரென எழுந்து, தொடர்ச்சியாக இருமலில் அவதியுறும்போது, நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை, இருமலால் வெளியேற்ற முடியாமல் திணறும். உடனே, தடாலடியாக கடையில் இருமல் மருந்தை வாங்கிக்கொடுப்பது தவறு. பெரும்பாலான இருமல் மருந்துகள், இருமலை உடனடியாக நிறுத்தி, சளியை உள்ளுக்குள் உறைய வைத்து, நோயைக் குணப்படுத்தாமல் விட்டுவிடும்.
மிளகு, சளியை இளக்கி வெளியேற்றி இருமலைக் குறைக்க உதவும். நான்கு மிளகைப் பொடித்து , ஒரு ஸ்பூன் தேனில் குழைத்து, இளஞ்சூடாக்கி, கால் டம்ளர் தண்ணீரில் கலந்து இரவில் கொடுக்க, சளி வெளியேறி இருமலை நிறுத்தும். சில நேரங்களில் வாந்தியில்கூட சளி வெளியேறும். அதைப்பார்த்து பயப்பட வேண்டாம். ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளம்் குழந்தைகளுக்கு இதைக் கொடுக்க வேண்டாம்.
தோல் நோய்க்கு மிளகு
தோலில் ஏற்படும் திடீர் தடிப்புக்கு, மிளகுக் கஷாயம் நல்ல மருந்து. தலையில் வரும் புழுவெட்டுக்குச் சின்ன வெங்காயம், மிளகு இரண்டையும் அரைத்து, வெளிப்பூச்சாகப் பூச பிரச்னை சரியாகும். பனிக்காலங்களில் நெஞ்சுச் சளி கட்டாமல் இருக்க, எல்லா வயதினரும் தினமும், உணவில் மிளகைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகள், மிளகைத் தினமும் ஏதாவது ஒரு விதத்தில், உணவில் சேர்த்துவர, இளைப்பின் தீவிரம் குறையும்.
மிளகுக் கஷாயம் எப்படிச் செய்வது?
அருகம்புல் - கைப்பிடி, மிளகு - 6, வெற்றிலை - 2 பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, மூன்றையும் போட்டுக் கொதிக்கவைத்து, அரை டம்ளராக வற்றவைத்து எடுக்கவும். இதைக் கொடுக்க, தோல் அரிப்பு படிப்படியாகக் குறையும்.
pettagum.blogspot.in/2015/01/blog-post_46.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 23 டிசம்பர், 2016

நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்?

நாகரிக உணவுப் பழக்கம் என்ற பெயரில் நம் உணவு முறை மாறிவரும் இக்காலகட்டத்தில் உணவைச் சாப்பிட்டதும் நெஞ்சில் எரிச்சல் (Heartburn) ஏற்படும் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
இந்திய மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது. இவர்களில் 100-ல் 20 பேருக்கு இது அன்றாட பிரச்சினையாகவும், மீதிப் பேருக்கு மழைக்காலத்தில் முளைக்கும் காளானைப் போல், அவ்வப்போது முளைக்கும் பிரச்சினையாகவும் உள்ளது. 
வழக்கத்தில், இதை நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும், இது நெஞ்சு முழுவதும் ஏற்படும் பிரச்சினை அல்ல. இது உணவுக் குழாயில் ஏற்படுகிற பிரச்சினை. நடு நெஞ்சில் தொடங்கித் தொண்டைவரை எரிச்சல் பரவும். மருத்துவ மொழியில் இதற்கு 'இரைப்பை அமிலப் பின்னொழுக்கு நோய்' (Gastro-Esophageal Reflex Disease) சுருக்கமாக (GERD) என்று பெயர். 
காரணம் என்ன?
வாயில் போடப்பட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து, முதற்கட்டச் செரிமானம் முடிந்ததும், அதை இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பது முக்கால் அடி நீளமுள்ள உணவுக்குழாய். இதன் உள்பக்கம் சளி சவ்வு (Mucus membrane) உள்ளது. இது, உணவுக் குழாய்க்கு ஒரு கவசம் போல அமைந்து பாதுகாப்பு தருகிறது. 
உணவுக் குழாயின் மேல்முனையிலும் கீழ்முனையிலும் சுருக்குத் தசையால் ஆன இரண்டு கதவுகள் (Sphincters) உள்ளன, மேல்முனையில் இருக்கும் கதவு, நாம் உணவை விழுங்கும்போது, அது மூச்சுக் குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது, கீழ்முனையில் இருக்கும் கதவு, இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கிறது. இந்தக் கதவு, உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர் எல்லைக்கோடுபோல் செயல்படுகிறது. 
நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் சுரக்கும் அமிலம் இந்த எல்லைக் கோட்டை கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப் படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும். 
மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ்முனைக் கதவு பழசாகிப்போன சல்லடை வலை போல 'தொளதொள'வென்று தொங்கிவிடும். விளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது, அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும். 
இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும், அது உணவுக் குழாயின் கீழ்ப் பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும். 'அல்சர்' எனப்படும் இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
வயிற்றில் அழுத்தம் அதிகரித்தால், நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்பு அதிகம். உடல் பருமனாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், இறுக்கமாக உடை அணிபவர்கள், வயிற்றில் கட்டி உள்ளவர்கள் ஆகியோருக்கு நெஞ்செரிச்சல் உண்டாக இதுவே காரணம். 
வழக்கமாக, பெண்கள் சாப்பிட்ட பின்பு வீட்டைச் சுத்தம் செய்கிறேன் என்று குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து, அமிலம் மேலேறி, நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும். 
சிலருக்கு இரைப்பையிலிருந்து ஒரு பகுதி மார்புக்குள் புகுந்து (Hiatus Hernia) உணவுக் குழாயை அழுத்தும். இதன் விளைவாக, உணவுக் குழாயின் தசைகள் கட்டுப்பாட்டை இழந்துவிட, இதற்காகவே காத்திருந்ததுபோல் இரைப்பை அமிலம், உணவு, வாயு எல்லாமே உணவுக் குழாய்க்குள் படையெடுக்க, நெஞ்செரிச்சல் தொல்லை கொடுக்கும். 
பலருக்கு உணவைச் சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்படும்; சிலருக்குப் பசிக்கும்போது ஏற்படும். பொதுவாக இந்தத் தொல்லை இரவு நேரத்தில்தான் அதிகமாக இருக்கும். 
தூண்டும் காரணிகள்
அதிகக் கார உணவு, துரித உணவு, கொறிக்கும் உணவு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது; காலை உணவைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பது, பசிக்கும் நேரத்தில் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல், நொறுக்கு தீனிகளால் வயிற்றை நிரப்புவது, இரவில் தாமதமாக உறங்குவது, கவலை, மன அழுத்தம் போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தூண்டுகின்றன. 
என்ன முதலுதவி?
நெஞ்செரிச்சலை உடனடியாகக் குறைக்க இளநீர் சாப்பிடலாம். புளிப்பில்லாத மோர் குடிக்கலாம். நுங்கு சாப்பிடலாம். ஜெலுசில், டைஜீன் போன்ற அமிலக் குறைப்பு மருந்துகளில் ஒன்றை 15 மி.லி. அளவில் குடிக்கலாம். இவை எதுவும் கிடைக்காத நேரத்தில், குளிர்ந்த நீரைக் குடித்தால்கூட நெஞ்செரிச்சல் குறையும்.
அலட்சியம் வேண்டாம்!
அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது முக்கியம். இதற்கு இரண்டு காரணங்கள்: சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக, நெஞ்சில் எரிச்சல் மட்டுமே ஏற்படும். எண்டோஸ்கோபி / இசிஜி பரிசோதனையைச் செய்துகொண்டால் இந்தக் குழப்பம் தீரும். அடுத்து, நீண்ட நாள் நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு உணவுக் குழாய் கீழ்முனைச் சுவரில் குடல் சுவரைப் போன்ற மாறுபாடு உண்டாகும்.
இதற்கு 'பாரட்ஸ் உணவுக் குழாய்' (Barrett's Esophagus) என்று பெயர். இது ஏற்படும்போது 100-ல் ஒருவருக்குப் புற்றுநோயாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. இதற்கு எண்டோஸ்கோபி மூலம் சிகிச்சை செய்யமுடியும். 
தடுப்பது எப்படி?
நேரத்துக்கு உணவைச் சாப்பிடுங்கள். தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள். அதிகச் சூடாக எதையும் சாப்பிடாதீர்கள். காரம் மிகுந்த, மசாலா கலந்த, எண்ணெயில் பொரித்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பு ஏறிய உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். 
ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதைவிட அடிக்கடி சிறிது சிறிதாகச் சாப்பிடலாம். தக்காளி சாஸ், ஆரஞ்சு, எலுமிச்சை, காபி, டீ, சாக்லேட், மென்பானம், நூடுல்ஸ், புரோட்டா, வாயு நிரப்பப்பட்ட பானம் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த, ஆவியில் அவித்த உணவு மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகரித்துக் கொள்ளுங்கள். 
அவசரம் அவசரமாகச் சாப்பிடுவது தவறு. அப்படிச் சாப்பிடும்போது, உணவோடு சேர்ந்து காற்றும் இரைப்பைக்குள் நுழைந்துவிடும். பிறகு, ஏப்பம் வரும். சமயங்களில், ஏப்பத்துடன் 'அமிலக் கவளம்' உணவுக் குழாய்க்குள் உந்தப்படும். இதனால், நெஞ்செரிச்சல் அதிகமாகும். 
வழக்கமாக, உணவைச் சாப்பிட்டதும் இரைப்பை விரியும். அப்போது இரைப்பையின்மேல் அழுத்தம் ஏற்பட்டால், உணவுக் குழாய்க்குள் அமிலம் செல்லும். இதைத் தடுக்க, இறுக்கமாக அணியப்பட்ட ஆடைகள், பெல்ட் ஆகியவற்றைச் சிறிது தளர்த்திக்கொள்ள வேண்டும். உணவைச் சாப்பிட்டபின் குனிந்து வேலை செய்யக்கூடாது; கனமான பொருளைத் தூக்கக்கூடாது; உடற்பயிற்சி செய்யக்கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது. 
முக்கிய யோசனைகள்
சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். அப்போதுகூட படுக்கையின் தலைப் பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக்கொள்வது நல்லது, இதற்காக நான்கு தலையணைகளை அடுக்கிவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. தலைப் பக்கக் கட்டில் கால்களுக்குக் கீழே சில மரக்கட்டைகளை வைத்தால் போதும். வலது புறமாகப் படுப்பதைவிட, இடது புறமாகத் திரும்பிப் படுப்பது நெஞ்செரிச்சலைக் குறைக்கும். 
மது அருந்துவது, புகைபிடிப்பது, புகையிலை/பான்மசாலா போடுவது இந்த மூன்றும் நெஞ்செரிச்சலுக்கு முக்கிய எதிரிகள். புகையில் உள்ள நிக்கோடின், இரைப்பையில் அமிலச் சுரப்பை அதிகரிப்பதோடு, உணவுக் குழாயின் தசைக் கதவுகளையும் தளரச் செய்வதால், நெஞ்செரிச்சல் அதிகமாகிவிடும். இந்த எதிரிகளை உடனே ஓரங்கட்டுங்கள். உடல் எடையைப் பராமரியுங்கள். அப்புறம் பாருங்கள், நெஞ்செரிச்சல் உங்களிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக்கொள்ளும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 21 டிசம்பர், 2016

பளிச் பற்களுக்கு...

பளிச் புன்னகைதான் அனைவரின் தேர்வும். பற்கள் அழகாக, வெண்மையாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறோம். ஆனால், அதை முறைப்படி பராமரிக்கிறோமா? உலகில் இரண்டில் ஒருவருக்குப் பல் தொடர்பான ஏதாவது ஒரு பிரச்னை இருக்கிறது. சரியாகப் பராமரிக்காவிட்டால், பற்களில் ஏற்படும் பிரச்னை இதய நோய்கள் வரை கொண்டு சென்றுவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
"இதயம், மூளை, சிறுநீரகம் போல பற்களும் மிக முக்கியமான உறுப்பு. பற்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் அன்றாடம் அவசியம் செய்ய வேண்டிய வேலைகள்." என்கிற பல் மருத்துவர் எஸ்.எம். பாலாஜி, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பற்களைப் பராமரிப்பது எப்படி? பற்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு என்ன தீர்வு? என விரிவாகப் பேசுகிறார்.

பிறந்த குழந்தைகளுக்கு...
குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் பற்கள் முளைக்க ஆரம்பிக்கின்றன. பால் பற்கள் முளைக்காவிட்டாலும் ஈறுகளைப் பராமரிப்பது மிக மிக அவசியம். குழந்தை தன் தாயிடம் பால் குடிக்கத் தொடங்கியது முதல் ஈறுகளைப் பராமரிக்கத் தொடங்க வேண்டும். ஈறுகளை நன்றாகப் பராமரித்தால்,  பற்கள் ஆரோக்கியமாக முளைக்கும். ஆரோக்கியமான ஈறுகளே, ஆரோக்கியமான பற்கள் வளர ஆதாரம்.
தாய்ப்பால் குடித்த பின்னர், மெல்லிய பருத்தித் துணி அல்லது வைப்பிங் டிஷ்யூவால் குழந்தைகளின் ஈறுகளைத் துடைக்கலாம். குழந்தை ஒவ்வொரு முறை பால் குடித்து முடிக்கும் போதும் ஈறுகளைத் துடைப்பது அவசியம்.
காலையில் குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கையும் சுத்தப்படுத்தலாம். அதாவது, பால் குடிப்பதால் பதிந்திருக்கும் மாவைத் துடைத்து எடுக்கலாம்.

6 மாதம் முதல் 3 வயது வரை
இந்தப் பருவத்தில் தாய்ப்பால், புட்டிப்பால், இட்லி, உருளை மசியல் போன்றவற்றை குழந்தைகள் சாப்பிடுவர்.
  முதல் பல் முளைக்கும் முன்னரே ஈறு சற்றுத் தூக்கியது போலக் காணப்படும். அப்போது கைகளைக் கடிப்பது, பொருட்களைக் கடிப்பது போன்ற செயல்களைக் குழந்தைகள் செய்யத் தொடங்கும். எனவே, குழந்தைகளுக்கு என விற்கப்படும் கடிக்கக்கூடிய பொம்மைகளை (Teething toys) மருத்துவர் அனுமதியோடு வாங்கித்தரலாம். இதனால், பற்கள் வேகமாக முளைக்கும், மேலும், பிளாஸ்டிக் பொருட்களைக் குழந்தைகள் வாயில் வைக்காதபடி, நம்மால் தடுக்க முடியும்.
 மூன்று வயதுக்குள் பால் பற்கள் முளைத்துவிடும். இவை நிரந்தரப் பற்கள் இல்லை, தற்காலிகமாக முளைத்திருக்கும் பற்கள். இவை விழுந்து மீண்டும் முளைக்கும். அவைதான் நிரந்தரப் பற்கள்.
 பால் பற்கள்தானே எனக் கவனக்குறைவாக விட்டுவிடக் கூடாது. இந்தப் பற்களில் ஏதாவது சொத்தை அல்லது தொற்று ஏற்பட்டால், மீண்டும் முளைக்கக்கூடிய நிரந்தரப் பற்களையும் அவை பாதிக்கக்கூடும்.
 பால் பற்களுக்கும் பராமரிப்பு மிகவும் அவசியம். சாக்லெட், பிஸ்கட் உட்பட எது சாப்பிட்ட பின்னும் குழந்தைகளைக் கட்டாயம் வாய் கொப்பளிக்கச் செய்யுங்கள்.

பிரஷ் செய்யும் முறை
 குழந்தைகளுக்கு, எப்படிப் பற்களைச் சுத்தப்படுத்துவது எனப்  பெற்றோர் கற்றுத்தர வேண்டும்.
 பற்களை, மேலும் கீழுமாக வட்ட வடிவில்  (Circular motion) சுத்தப்படுத்தக் கற்றுத்தரலாம்.
 மேலும் கீழும் துடைப்பது போல (Wiping motion) பற்களைச் சுத்தப்படுத்தலாம்.
 எக்காரணத்தைக்கொண்டும் பற்களை அழுத்தமாகத் தேய்க்கக் (Rubbing) கூடாது. மென்மையாக, மெதுவாகப் பற்களைத் தேய்க்க வேண்டும். 
 பிரஷை கடித்துத் துப்பக் கூடாது. குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்றுதல் அவசியம்.

பிரத்யேக பிரஷ், பேஸ்ட் ஏன்?
 பால் பற்கள் முளைத்தது முதல் 6 வயது வரை குழந்தைகளுக்கு எனப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் கிட்ஸ் பிரஷைப் பயன்படுத்தலாம்.
பிரஷ் கடினமானதாகவோ, பெரியதாகவோ இருக்கக் கூடாது. மென்மையாக, மிருதுவாக இருக்க வேண்டும்.
 குழந்தைகளுக்கான பேஸ்ட் அவசியம் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்கு எனத் தயாரிக்கப்படும் பேஸ்ட்டில் ஃப்ளோரைட் (Fluoride) தேவையான அளவில் இருக்கும். இது பற்கள் நன்றாக வளர்வதற்கு உதவும்.
 பெரியவர்கள் பயன்படுத்தும் பேஸ்ட்டை, குழந்தைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது.
 பிரஷ்ஷின் பின்புறம் நாக்கைச் சுத்தப்படுத்துவதற்கு, சின்னச் சின்ன புள்ளிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் அவற்றைக்கொண்டு நாக்கைச் சுத்தப்படுத்தலாம்.

 3 வயது முதல் 6 வயது வரை
 இந்த வயதில் குழந்தைகள் பல் தேய்க்கத் தொடங்குவர். வெள்ளை நிற பேஸ்ட்டே போதுமானது.

 இது இனிப்பு, இது கசப்பு என சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, குழந்தைகளுக்கு பேஸ்ட்டைப் பரிந்துரைத்தல் தவறு. பல் தேய்ப்பதன் அவசியத்தைக் கற்றுக்கொடுத்த பின், பல் தேய்க்கப் பழக்கலாம்.
 குழந்தைகள் பல் தேய்க்கும்போது, பெற்றோர் அருகிலிருந்து கவனிப்பது நல்லது. பல் துலக்கிய பின்பு, ஆட்காட்டி விரலால்  ஈறுகளின் மேல் மென்மையாக அழுத்தம் தரலாம். அப்போதுதான் பற்கள் ஈறுகளுடன் பதிந்து, நன்றாக சீராக வளரும்.
 தெற்றுப்பல் உருவாக விரல் சூப்புதலும் ஒரு காரணம் என்பதால், குழந்தைகள் விரல் சூப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 பற்கள் விழுந்தால், அந்த ஈறை நாக்கால் சுழற்றுவது, வருடுவது, கைகளால் தொடுவது போன்றவற்றைச் செய்யக் கூடாது என அறிவுறுத்தலாம்.
 இப்படிச் செய்தால் தெற்றுப் பல் உருவாகி முக அழகைக் கெடுக்கும் என, சில உதாரணப் படங்களை காண்பித்து, குழந்தைகளுக்குப் புரியும்படி விளக்கலாம்.

6 வயது முதல் 60 வயது வரை
 ஆறு வயதி்ல் பால் பற்கள் விழுந்து, நிரந்தரப் பற்கள் முளைக்கத் தொடங்கிவிடும். குழந்தைகளுக்கு எனப் பயன்படுத்திய பிரஷ்ஷூம், பேஸ்ட்டும் இனி அவசியம் இல்லை. பெரியவர்கள் பயன்படுத்தும் பிரஷ், பேஸ்ட்டு போதுமானது. சற்று அகலமான, பெரிய பிரஷ் பயன்படுத்தலாம். ஃப்ளோரைட் உள்ள பேஸ்ட் உபயோகிக்கலாம்.
 கிரீம் பேஸ்ட் சிறந்தது. ஜெல் பேஸ்ட்களைத் தவிர்க்கலாம்.
 பற்களில் பிரச்னை எனில், பல் மருத்துவரின் ஆலோசனையே முக்கியம். சுய முடிவுகள் தவறு.
 ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று பற்களைப் பரிசோதனை செய்துகொள்ளலாம்.  இதனால் பல்சொத்தை, பற்குழி, தொற்று ஆகியவை இருந்தால், தொடக்கத்திலே கண்டறிந்து, மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு, பற்கள் பாதுகாக்கப்படும்.

 பற்கள் முன்னும் பின்னும் கோணலாக வளர்ந்து முக அழகைக் கெடுத்தால் க்ளிப் போடத் தயங்க வேண்டாம். ஏனெனில், பற்கள் சீராக இல்லை எனில் வாய் திறந்து சிரிக்கவும், பேசவும் கூச்சப்படுவர். இதுவே நாளடைவில் தாழ்வு மனப்பான்மையாக உருவாகி மன உளைச்சலும் வரலாம்.
 பற்களில் ஒட்டிக்கொள்ளும் சாக்லெட், பிஸ்கெட், சிப்ஸ், குளிர்பானங்கள், பர்கர், பீட்சா எனக் குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகள், பற்களுக்கு முதல் எதிரி.
 ஓடியாடும் குழந்தைகளுக்குப் பற்கள் பாதிக்காதவாறு விளையாட அறிவுறுத்தலாம்.

செயற்கைப் பற்களுக்கு...
பெரியவர்கள் சிலர் செயற்கைப் பல் செட்டை பயன்படுத்துவர். வெளியில் சென்றால் மட்டும் பல் செட்டை அணிவார்கள், அவர்கள் சாப்பிடும்போதும் பல் செட்டை போட்டுக்கொண்டு சாப்பிடப் பழகுதல் நல்லது. பல் செட் அணிந்திருக்கும் நேரத்தை சிறிது சிறிதாக அதிகப்படுத்தலாம். இரவில் கழட்டிவைக்கலாம். ஆனால், வெறும் தண்ணீரில்தான் வைக்க வேண்டும். எந்த கெமிக்கல்களும் பயன்படுத்தத் தேவை இல்லை. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைக் கொண்டு சுத்தம் செய்தாலே போதும்.

வாய் துர்நாற்றம்
உணவுத் துகள்கள் பற்களின் இடையில் மாட்டிக்கொண்டு, கிருமித் தொற்றாக மாறுதல், தொண்டையில் தொற்று, சொத்தைப் பல், வயிறு தொடர்பான பிரச்னை எனப் பல்வேறு காரணங்களால், வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.  இதற்கு மவுத் வாஷ் நிரந்தரத் தீர்வு ஆகாது.
முறையான சிகிச்சைகளே இதற்குச் சிறந்த வழி. அவசரத் தேவை எனில் கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றைப் பற்களில் வைக்கலாம். இதுவும் தற்காலிகமான தீர்வுதானே தவிர, நிரந்தரத் தீர்வு இல்லை.

மவுத் வாஷ் தேவையா?
வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், பல் சொத்தை ஆவதைத் தடுக்கவும்,  பற்சிதைவைக் குறைக்கவும், ஈறு தொடர்பான நோய்களைத் தொடக்கக் காலத்திலே தடுக்கவும் மவுத் வாஷ் பரிந்துரைக்கப்படுகிறது.
 விளம்பரங்களைப் பார்த்து சுயமாக மவுத் வாஷ் செய்யக்கூடாது.
 சாதாரணமாக, வெந்நீரில் கல் உப்பு போட்டு, வாய் கொப்பளிப்பதே சிறந்தது.
 குழந்தைகளுக்கும் வாய் கொப்பளிக்கும் முறையை, சிறு வயதில் இருந்தே சொல்லித்தரலாம்.

 பல் மருத்துவர், மவுத் வாஷ்  செய்யச் சொல்லி பரிந்துரைத்தால் மட்டுமே மவுத் வாஷ் செய்யலாம்.
 மருந்துச் சீட்டில் குறிப்பிட்டுள்ள கால அளவு மட்டுமே மவுத் வாஷ் செய்ய வேண்டும்.

 பல்வலி
 பல் வலி வந்தால் அவசரத் தீர்வுக்குக்  கிராம்பை வைத்துக்கொள்வதில் தவறு இல்லை. மருந்துக் கடைகளில் சென்று, தாமே வலி நிவாரணிகளை வாங்கிப் போட்டுக்கொள்வது தவறு.
 ஒருமுறை மருத்துவர் எழுதித்தரும் வலி நிவாரணி மாத்திரைகளை, அவர் அனுமதி இல்லாமல் வலி வரும்போதெல்லாம் போடுவதும் தவறு.

 வலி நின்றுவிட்டதே என வீட்டிலே இருக்கக் கூடாது. உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

பற்கூச்சம்
பற்களின் மேல் உள்ள எனாமல் நீங்குதல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பிரச்னையால் (Gum recession) பற்கூச்சம் ஏற்படுகிறது. கடினமான பிரஷை கொண்டு பற்களை அழுத்தமாகத் தேய்த்தல், அமிலங்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுதல் போன்றவற்றால் பற்களின் எனாமல் நீங்குகிறது. நாளடைவில் அது வலி மிகுந்த பற்கூச்சமாகவும் மாறுகிறது.
சாதாரணமாக சிலருக்குப் பற்களில் கூச்சம் ஏற்படும். அது எந்த மாதிரியான கூச்சம் என்று பல் மருத்துவரை கலந்து ஆலோசிக்கலாம்.
 சாதாரண இனிப்பு சாப்பிட்டால்கூட, பற்கூச்சம் ஏற்பட்டால் அதைக் கவனிப்பது முக்கியம்.
வலியுடன் கூடிய பற்கூச்சம் மற்றும் இயல்பான வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் பற்கூச்சத்திற்கு சிகிச்சை எடுப்பதே, சரியான தீர்வு.

பல் சொத்தை
பற்களின் இடையில் உணவு மாட்டிக்கொண்டு, வெளியேறாமல் அப்படியே தங்கிவிடும். அதில் கிருமிகள் உருவாகி, பற்களின் சுவரைப் பாதிக்கும். பற்களில் உள்ள கால்சியத்தை அரித்துக்கொண்டே போகும். மேலும், உணவு அதன் மேல் சேரச் சேர தொற்றுப் பெரிதாகிக்கொண்டே போய், பற்களின் வேர் வரை சென்று எலும்புகளுக்கும் பரவிவிடும். இதனால், அந்தப் பல்லையே இழக்க நேரிடலாம். மேலும், அருகிலிருக்கும் பற்களிலும் கிருமித் தொற்று பரவலாம் என்பதால், தொடக்கத்திலே தீர்வு காணுவதுதான் பற்களுக்குப் பாதுகாப்பு.
 பற்களில் ஏற்படும் தொற்றைக் கவனக் குறைவாக விட்டுவிடக் கூடாது. அதில் ஏதாவது பிரச்னை என்றால், அவை பெரிதாக வாய்ப்பு உள்ளது. எனவே பல் மருத்துவரை கட்டாயம் சந்திக்க வேண்டும். வாய் சுத்தம் (Oral hygiene) மிகவும் முக்கியம்.
 பல்லில் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து, ரூட் கெனால் போன்ற சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.
 பல் சொத்தை ஏற்படுவதைத் தடுக்க, உணவுத் துகள் அடிக்கடி சிக்கிக்கொள்ளும் இடத்தில் கேப் ஃபில்லிங் செய்துகொள்ளலாம்.

ஃப்ளாஸ்ஸிங்
சிலருக்கு இயற்கையாகவே பற்களுக்கு இடையில் இடைவெளி இருக்கும். அதில் உணவுத் துகள்கள் சென்று மாட்டிக்கொள்ளும். அவை நாளடைவில் அதிகமாகச் சேர்ந்துக் கிருமித் தொற்றாக மாறி, பற்குழியும் ஏற்பட்டுவிடும்.
 இதைத் தடுக்க மருத்துவரிடம் சென்று, ஃப்ளாஸ்ஸிங் என்ற மெல்லிய நூலிழையால் சுத்தப்படுத்தும் முறையைக் கற்றுக்கொள்ளலாம்.
 மருத்துவரின் அறிவுரைப்படி, ஃப்ளாஸ்ஸிங் முறையைத் தேவையானபோது பயன்படுத்தலாம். தாமாகவோ, இணையத்தைப் பார்த்தோ ஃப்ளாஸ்ஸிங் செய்யக் கூடாது.
 ஃப்ளாஸ்ஸிங் செய்யப் பயன்படும் நூலை பர்ஸில்கூட வைத்துக்கொள்ளலாம். எப்போது உணவு பற்களின் இடையில் மாட்டினாலும், அவற்றை உடன
டியாக வெளியேற்ற ஃப்ளாஸ்ஸிங் நூல் உதவும்.
 ஊசி வைத்தோ, குச்சியாலோ பற்களைக் குத்தக் கூடாது.

 மஞ்சள் பற்கள் ஏன்?
மன வேதனை, நீண்ட நாட்களுக்கு மருந்துகளை உட்கொள்ளுதல், தண்ணீரிலோ, பாலிலோ ஃப்ளோரைட் (Fluoride)   அதிகமாகி  ஃப்ளோரோசிஸ் (Fluorosis) என்ற பிரச்னை வருதல், வயதாகும்போது பற்களின் நிறம் மாறுதல், ரூட்கெனால் செய்துகொண்டது,  பற்சிதைவு, விபத்துக் காயங்கள் (Trauma), புகைப்பழக்கம், அதிகமான சர்க்கரை உட்கொள்ளுதல், குளிர்பானங்கள் குடித்தல், டார்க் சாக்லெட், ஒயின், அதிகமாக காபி மற்றும் தேநீர் குடித்தல், பற்களைப் பராமரிக்கத் தவறுதல் போன்றவை பற்களின் நிறம் மாறுவதற்கான காரணங்களாகும். டெட்ராசைக்லின் (Tetracycline)  என்ற ஆன்டிபயாடிக் மருந்தைக் கருவுற்றிருக்கும் தாய் உட்கொள்வதாலும் குழந்தைக்குப் பற்களில் நிறமாற்றம் ஏற்படும்,

 மஞ்சள் பற்கள் / வெள்ளைப் பற்கள்
பொதுவாக பற்கள் அனைவருக்கும் வெள்ளையாக இருக்காது. அது  முத்து வெண்மை, அரை வெண்மை, வெளிர் நிறம் (Pearl white, half white, pale yellow) என்று, அவரவரின் உடல்நிலையைப் பொறுத்து நிறங்கள் மாறுபடும்.

புகையிலை, மது ஆகியவற்றைத் தவிருங்கள்
மது, புகையிலை பழக்கத்தால் பற்களும், ஈறுகளும் மிகவும் பாதிக்கப்படுகின்றன. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் புகையிலையை வாயில் வைத்துச் சுவைப்பதால், வாய் தொடர்பான புற்றுநோய் வர வாய்ப்புகள் மிக அதிகம். புகைப்பவர்களுக்கு மற்றவர்களைவிட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் ஈறு வீக்கம், பல் ஆடுவது, ஈறுகளில் சீழ், ரத்தம் போன்ற பிரச்னைகளும் வரலாம்.

ஆயில் புல்லிங் ஏன்?
நல்லெண்ணெயை 5-10 மி.லி அளவில் எடுத்துக்கொண்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். அதாவது, வழவழப்பு நீங்கிய பின், அந்த எண்ணெயை வெளியே துப்பிவிட வேண்டும். பிறகு,

சுத்தமான நீரில் வாய் கொப்பளிக்கலாம்.
 ஆயில் புல்லிங் செய்வதற்கு முன்பு பல் துலக்க வேண்டியது இல்லை. ஆனால், ஆயில் புல்லிங் செய்து முடித்த பிறகு, பிரஷ் செய்வதும், வாயை நன்றாக சுத்தம் செய்வதும் அவசியம்.
 தொடர்ந்து செய்துவந்தால், வாய் தொடர்பான எந்தப் பிரச்னைகளும் அருகில் வராது.
 சிப்ஸ், பாப்கார்ன், பிஸ்கட், முறுக்கு ஆகியவை பல் இடுக்குகளில் சிக்கிக்கொள்ளும்போது, அதைச் சிதைக்கும் பாக்டீரியாக்கள் அமிலத்தை வெளியேற்றி பற்சிதைவுக்கு வழிவகுக்கு
கிறது. பாப்கார்ன் பாக்கெட்டில் பொரியாத சில சோள விதைகளைக் கடிக்கும்போது, பற்களுக்குள் மாட்டிக் கொண்டு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆதலால், இவற்றைச் சாப்பிட்டதும் பற்களைச் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது. பற்களைச் சுத்தம் செய்ய முடியவில்லை என்றாலும், உடனடியாக
  நன்றாக வாய் கொப்பளிப்பது நல்லது.
கருப்பாக இருக்கும் சிலருக்குப் பற்கள் வெள்ளையாக இருக்கும். சிவப்பாக இருக்கும் சிலருக்குப் பற்கள் மஞ்சளாக இருக்கும். இது நோயல்ல. நோயின் அறிகுறியும் அல்ல. வயதாகும்போது எனாமல் நீங்கி, அடுத்த பகுதியான டென்டின் (Dentin) தெரியத் தொடங்குவதே பற்களின் நிறமாற்றத்திற்கான காரணம். வெள்ளையாக சிறுவயதில் இருந்த பற்கள் மெள்ள மெள்ள எனாமல் நீங்கி, மஞ்சளாக மாறுகிறது. நரைமுடி வருவது எப்படி இயல்பான விஷயமோ, அதுபோல பற்கள் நிறம் குறைவதும் இயல்பானதே.

வொயிட்னிங் பேஸ்ட் சரியா?
முன்பெல்லாம் மாடல்களும் நடிகைகளும் தங்கள் தொழிலுக்காக செய்துகொண்ட சிகிச்சையை, இன்று பெரும்பாலோனோர் செய்துகொள்கின்றனர். தங்களுக்கு இது தேவையா, அவசியமா, பாதுகாப்பானதா என்ற கேள்விகளைக் கடந்து, அழகுக்காக மட்டும் செய்துகொள்வதே இன்றைய டிரெண்ட்.

பற்கள் வெள்ளையாகத்தான் இருக்க வேண்டும். மஞ்சளாக இருந்தால் அது நோய் அல்லது குறைபாடு என்ற தவறான கருத்தை மனதில் விதைத்து, வொயிட்னிங் டூத் பேஸ்ட்கள் விற்கப்படுகின்றன. உடனடியாக, பற்கள் வெள்ளையாக மாறுகிறது என்றால், அதில் சேர்க்கப்படும் கெமிக்கல்கள் மிகவும் வீரியமானதாக இருக்கும். ஆதலால் இன்ஸ்டன்ட் வொயிட் (Instant white) தருகிற பேஸ்ட்டை பயன்படுத்தும் முன் பல் மருத்துவரிடம் ஆலோசிப்பதே  சரி.

டீத் வொயிட்டெனிங் சிகிச்சை என்றால் என்ன?
வொயிட்டெனிங் (Whitening), என்பது பற்களின் கறையை நீக்கி, செயற்கையான முறையில் வெள்ளையாக மாற்றும் சிகிச்சை. இது இயற்கையான முறையில் செய்யப்படும் சிகிச்சை அல்ல. சில கெமிக்கல்கள் கலந்து மருத்துவர்கள் செய்யும் சிகிச்சை. இதை அழகு நிலையங்களில் செய்துகொள்வது தவறு. இணையத்தைப் பார்த்து தானே முயற்சிப்பதும் தவறு.

 எதற்கு டீத் வொயிட்டெனிங்?
காரைப் பற்கள், கறை படிந்த பற்கள், சிரிக்கவே முடியாத நிலையில் விகாரமாகத் தெரியும் பற்கள் போன்றவற்றிற்கு  டீத் வொயிட்டெனிங் அவசியமாகிறது. சிரிப்பதற்கே முடியாமல் தங்களது தன்னம்பிக்கையின் அளவு  குறைந்துபோய் பற்களில் கறையோடு உள்ளவர்கள், வொயிட்டெனிங் சிகிச்சை செய்யலாம். பெரும்பாலோருக்கு வொயிட்டெனிங் சிகிச்சை பரிந்துரைப்பது இல்லை.

அவசியம் எனில், ஒருமுறை செய்து கொண்டு, அதை முறையாகப் பராமரித்தல் வேண்டும். அடிக்கடி செய்யக் கூடாது. இதிலும் சில உணவுக் கட்டுப்பாடுகளை முறையாகக் கடைபிடிப்பது அவசியம். பற்களைக் கறைபடுத்தும் உணவுகளான, கூல் டிரிங்க்ஸ், கலர் பானங்கள் (Aerated drinks) மஞ்சள் தூள், சர்க்கரை, டார்க் சாக்லெட், கலர் பழங்கள், காபி, டீ போன்ற கறைப்படுத்தும் உணவுகளைத் தவிர்ப்பதே நல்லது.

நவீன சிகிச்சைகள்
ஏதாவது, சில காரணங்களால் நிரந்தரப் பற்களை இழந்துவிட்டால்,மீண்டும் அவை வளராது. அதற்குப் பதில் செயற்கைப் பல்தான் வைக்க வேண்டும். பல் வேரில் பிரச்னை, பல் வளரும் எலும்பில் பிரச்னை போன்ற சில முக்கியக் காரணங்கள் இருந்தால்கூட இன்று இதற்குத் தீர்வு காண, நிறைய சிகிச்சைகள் வந்துவிட்டன. பல் வேருக்குப் பதிலாக செயற்கை ஸ்குரூ வைத்தல் (Implant), எலும்பை ஆரோக்கியமாக வளரவைத்தல், இயற்கையாக எலும்பு வளரவில்லை என்றாலும் எலும்பை உருவாக்கிச் செய்யும் சிகிச்சைகள் போன்ற பல நவீன சிகிச்சைகள் வந்துவிட்டதால், பற்களைப் பற்றிய பயம் இனி தேவை இல்லை.

 பற்களுக்கானப் பயிற்சி
வாரம் இருமுறை சுகர்ஃப்ரீ சுயிங்கம் சுவைக்கலாம். ஐந்து நிமிடங்கள் வரை நன்றாகச் சுவைக்கலாம். இது பற்களுக்கான சிறந்த பயிற்சியாகும்.
கேரட், கரும்பு, ஆப்பிள் ஆகியவற்றை மென்று சாப்பிடுவதும் பற்களை உறுதிப்படுத்தும். முன்பற்கள், உணவை உடைப்பதற்கும் பின்பற்கள் உணவை மென்று தின்பதற்கும் உதவும். ஆனால், கரும்பு போன்றவற்றை கடிக்கும்போது, அதிக கவனம் தேவை

ஈறுகளுக்குப் பயிற்சி
காலையில் பற்களைச் சுத்தப்படுத்திய பின், ஆட்காட்டி விரலால் ஒவ்வொரு பல்லின் மேல் இருக்கும் ஈறின் மேலும் மென்மையாக அழுத்தம் கொடுக்கலாம். இதை முழுமையாகச் செய்து முடிக்க ஐந்து நிமிடங்கள் வரை ஆகும்.

சிலருக்கு ரத்தம் வரலாம். அடிக்கடி ரத்தம்வந்தால், பல் மருத்துவரைச் சந்திக்கவும். இப்படி அழுத்தம் தருவதால், பற்களும் ஈறுகளும் நன்றாகப் பதிந்து வலுவடையும். ரத்த ஓட்டம் சீராக நடக்கும். பல் தொடர்பான பிரச்னைகள் வருவதும் குறையும்.

இயற்கை மவுத்வாஷ்
சாக்லெட், கலர் ஃபுட்ஸ் சாப்பிட்ட பிறகு, சீஸை பற்கள் முழுவதும் தடவி, ஐந்து நிமிடங்கள் கழித்து, தண்ணீர்கொண்டு வாய் கொப்பளிக்கலாம். இதனால் பற்களின் மேல் படிந்த சாக்லெட் படிமம் பற்களைவிட்டு நீங்கிவிடும். பற்கள் பாதுகாக்கப்படும். சீஸ், பற்களுக்கு மிகவும் நல்லது. சரியாக கிளீனிங் செய்யவில்லை எனில், அது பற்களை பாதிக்கக்கூடும் என்கிறது ஆய்வுகள்.

 பற்களை அழகாகப் பராமரிக்க...
ஆண்டிற்கு இரு முறை பற்களை கிளீனிங் செய்துகொள்ளலாம். முறையான கிளீனிங் சிகிச்சை, பற்களுக்கு நல்லது. இதனால் எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படாது.
பற்களைச் சுத்தம் செய்வதால் பற்சிதைவு, பற்குழி, எனாமல் நீங்குதல் போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும். இதனால் பற்களும் சிறிது வெள்ளையாக மாறும். பற்களில் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகளையும் கிளீனிங் என்ற முறை குறைக்கும்.
கிளீனிங் செய்த சில நாட்களுக்கு, காபி, குளிர்ந்த பொருட்களைச் சாப்பிட்டால் பற்கூச்சம் ஏற்படும்.இதனால் பயம் வேண்டாம். நீண்ட நாட்களாகக் காறை படிந்த பற்களில் கிளீனிங் செய்யப்பட்ட பிறகு, பற்களின் மேல் பகுதியில் (Surface) உமிழ்நீர் படும்போது கூச்ச உணர்வு ஏற்படும். பழகிய பின் பற்கூச்சம் ஏற்படுவது நின்றுவிடும் இதற்காக சென்சிட்டிவ் டூத் பேஸ்ட்கள் பயன்படுத்த நினைப்போர் பல் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.
நார்ச்சத்துக்கள் மிகுந்த உணவு நச்சுகளை வெளியேற்றும். முகத்திற்கு எப்படி ஸ்கரப்போ, அதுபோல பற்களை சுத்தப்படுத்தும் ஸ்கரப், நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவுகள் மட்டுமே.

பால் பொருட்கள் அனைத்தும் பற்களுக்கு நல்லது. கால்சியம் அடங்கிய கேழ்வரகு, உருளை, பசலைக் கீரை, ஆரஞ்சு, சோயா, முழு தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம். நிறைய நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதால்,  பற்களில் காறை படுவது தவிர்க்கப்படும். தண்ணீர், பழங்கள், காய்கறிகள், கடல் உணவுகள், நட்ஸ் ஆகியவை பற்களுக்கு நன்மைகளையே செய்யும்.
 கரும்பைக் கடித்து சுவைத்து சாப்பிடுதல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்களை இயற்கையாகவே இது சுத்தமாக்கும்.
சர்க்கரை நோயாளிகள் தங்களின் பாதங்களை எப்படிக் கவனமாகப் பராமரிக்கின்றனரோ, அதுபோல, பற்களையும் முறையாகப் பராமரித்தல் அவசியம்.
 விளம்பரங்களைப் பார்த்து பற்கள் வெள்ளையாக வேண்டும் என சந்தையில் புதிது புதிதாக அறிமுகமாகும் பேஸ்ட்களைப்  பயன்படுத்தக் கூடாது. அதில் பிளீச்சிங் ஏஜென்ட் (Bleeching agent) கலந்திருப்பதால், சில நாட்களிலே பற்கள் வெள்ளையாகத் தெரிந்தாலும், நாளடைவில் எனாமல் நீங்கி பற்கள் சேதமடைய வாய்ப்புகள் அதிகம்.

 அதிகமான நேரம் பல் தேய்ப்பதாலும், அதிகமான பேஸ்ட் பயன்படுத்துவதாலும் பற்கள் வெள்ளை ஆகாது. எனாமல் மட்டுமே நீங்கும். 3-5 நிமிடங்கள் வரை பல் தேய்த்தாலே போதும்.
 ஒரு நாளைக்கு இருமுறை பல் தேய்ப்பதுடன், அதற்குப் பயன்படுத்தும் பேஸ்ட்டின் அளவு, மிளகு அளவில் இருந்தாலே போதும்.
பற்களுக்கு எதிரியான புகைப்பழக்கம், சர்க்கரை, கலர் நிறைந்த (பானங்கள்,ஸ்வீட்ஸ், சாக்லெட், சாட் உணவுகள்), கோலா பானங்கள், ஐஸ் வாட்டர், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால், வொயின் ஆகியவற்றை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க முடியாத சூழலில், சாக்லெட்டோ, சர்க்கரை கலந்த உணவையோ சாப்பிட்ட பின், அரை மணி நேரத்திற்குள் பழங்களைச் சாப்பிடும்போது, பற்களில் ஒட்டியிருக்கும் சர்க்கரை படலத்தை பழங்கள் க்ளென்ஸ் (Cleanse) செய்துவிடும்.
வாய் திறந்துகொண்டே சாப்பிடுதல் கூடாது. உதடுகள் மூடி, பற்கள் அசைந்து, பற்கள் நன்கு வேலை செய்ய வேண்டும். அதாவது, உணவை நன்றாக மென்ற பின், விழுங்க வேண்டும்.

இட்லி முதல் பரோட்டா வரை அனைத்து உணவுகளையும் ஒவ்வொரு முறையும் வாயில்   போடும்போது, 20-25 முறை வரை நன்றாக மென்று விழுங்கலாம். நொறுங்கத் தின்றால், சுலபமாக ஜீரணம் ஆகும். ஆரோக்கியமும் மேம்படும். உணவை ரசித்து சாப்பிட்ட திருப்தியும் ஏற்படும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

பழங்களில் உள்ள விதைகளின் பயன்கள்

பழங்கள் சாப்பிட சிறந்த பொருட்களில் ஒன்றாகும். சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதுடன் , ஒட்டு மொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பலவி...

Popular Posts