முத்துக்கள் பத்து!
விண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்... இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்... கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்... 'கஷ்டம் இல்லை' என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் 'முத்துக்கள் பத்து' என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.
தொகுப்பு: லதானந்த்
கேஸில் மிச்சமாக்கலாம் காசு!
அடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும். தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தால், பர்னரில் கோளாறு மற்றும் கேஸ் விரயம் என்று தெரிந்து கொள்ளலாம். இயன்றவரை 'சிம்'மில் வைத்து சமைத்தால் காய்கறிகளின் சத்தும் வீணாகாது. கேஸும் மிச்சமாகும். அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு கடுகு, எண்ணெய் என்று பொருட்களை எடுக்க அலைமோதாதீர்கள். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் கையருகில் வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்றவையுங்கள். ஃப்ரிட்ஜில் இருந்து பொருட்களை எடுத்தவுடன் சமைக்க ஆரம்பித்தால்... எரிபொருள் அதிகம் செலவாகும்.
மொத்த விற்பனைக் கடையை நாடுங்கள்!
பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்காமல், கடைவீதியில் மொத்தமாக மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகளில் மாதத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கினால்... 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பணம் மிச்சமாகும். மேலும் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட் கடைகளில் பல பொருட்களுக்கு எம்.ஆர்.பி விலையில் இருந்து சல்லிக்காசுகூடக் குறைக்கமாட்டார்கள். ஆனால், மொத்த விற்பனைக் கடைகளில், தங்கள் லாபத்தில் சிறு பகுதியை விட்டுக்கொடுத்து விலை குறைவாக விற்பனை செய்வார்கள்.
பெட்ரோல் சிக்கனம்!
சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தால் இன்ஜினை அணைத்து விடுங்கள். வாகனங்களை ஒழுங்காகப் பராமரித்தால் வாகன எரிபொருள் செலவு மட்டுப்படும். கிளட்ச், பிரேக் போன்றவற்றை தேவை இல்லாமல் அழுத்திக் கொண்டிருந்தாலும் மளமள என்று எரிபொருள் காலியாக ஆரம்பிக்கும். வெளிவேலைகளைக் குறித்து வைத்துக் கொண்டு, ஒரு முறை வாகனத்தை எடுக்கும்போதே அனைத்து வேலைகளையும் முடிக்கப் பாருங்கள். ஒரே திசையில் ஒரே நேரத்தில் பயணம் செய்யும் நண்பர்கள் இருந்தால், பயணத்தையும், எரிபொருள் செலவையும் பகிர்ந்துகொள்ளுங்கள். நிழலில் வாகனத்தை நிறுத்தினால்... பெட்ரோல் ஆவியாவது பெருமளவு தவிர்க்கப்படும்.
'ஸ்விட்ச் ஆஃப்' செய்ய மறக்காதீர்கள்!
ஆளில்லாத அறைகளில் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறி, விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி, கணிப்பொறி போன்றவற்றை அணையுங்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மின்சாதனங்களின் ஸ்விட்ச்கள் அணைக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். குறிப்பாக, மின்வெட்டு சமயங்களில் இதை நிச்சயமாக கடைப்பிடிப்பதன் மூலம், கரன்ட் போகும்போது 'ஆன்' ஆகியிருந்த சாதனங்கள், கரன்ட் வரும்போது செயல்பட்டு மின்சாரம் வீணாவதைத் தடுக்கலாம்.
தவறான பழக்கத்துக்கு 'தடா' போடுங்கள்!
உங்களது குடும்ப அங்கத்தினர் யாருக்கேனும் புகை மற்றும் குடிப்பழக்கம் இருப்பின் அதை கைவிட உங்களால் ஆனதைச் செய்யுங்கள். உடல் நலன் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதோடு... இந்த பழக்கங்களுக்கு செய்யப்படும் மிக அதிகமான செலவையும் கட்டுப்படுத்தி, அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.
தண்ணீர்... தண்ணீர்!
வேலைகளைச் செய்யும்போது குழாய்களை திறந்து வைத்துக் கொண்டு செய்யாமல், சில நொடிகளே என்றாலும்... தேவை இல்லாதபோது, குழாய்களைச் சரியாக மூடினாலே பெருமளவு தண்ணீரைச் சேமிக்கலாம். மிகச் சரியான முறையில் திட்டமிட்டுக் குளித்தால் அரை வாளி முதல் ஒரு வாளிவரை தண்ணீரே சுத்தமாகக் குளிப்பதற்குப் போதும். இதுபோல நாம் யோசித்து செயல்பட்டால், சமையலறை பயன்பாடு உட்பட பல வழிகளிலும் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.
குண்டு பல்பு வேண்டாமே!
குண்டு பல்புகள் அதிகம் மின்சாரத்தை உறிஞ்சும். எனவே, குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் சி.எஃப்.எல். வகை பல்புகளுக்கு மாறுங்கள். இதன் மூலம் மின்சாரம் 70% அளவுக்கு சேமிக்கப்படுகிறது. சி.எஃப்.எல். பல்புகளின் ஆயுட்காலமும் அதிகம்.
கிச்சன் இருக்க ஹோட்டல் எதற்கு?
அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவது இப்போது ஃபேஷன் ஆகி வருகிறது. வெளியில் சாப்பிட்டால் ஒரு நபருக்கு 100 ரூபாய்க்கும் குறைவில்லாமல் செலவு ஆகும். புத்தகம், டி.வி-யில் இடம்பெறும் தரமான ரெசிபிகளை முயற்சித்துப் பாருங்கள். நீங்களே தயாரித்தது என்ற பெருமிதமும் இருக்கும்; வெளியில் செல்லும் அலைச்சலும், பண விரயமும் தவிர்க்கப்படும். இது, ஆரோக்கியத்துக்கும் நல்லது.
நேரத்தை பணமாக்குங்கள்!
வெட்டி அரட்டை, அதிகப்படியான தூக்கம் போன்றவற்றில் விரயமாகும் நேரத்தை சேமித்து, உருப்படியான வழியில் செலவிடுங்கள். படைப்பாற்றல், புதிய தொழில் கற்றுக்கொள்ளுதல், ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுதல் இவற்றின் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
செலவு குறைக்கும் செல்போன் 'பேக்கேஜ்'!
குடும்ப அங்கத்தினர் அனைவர் கையிலும் தனித்தனி செல்போன் இருக்கும் காலம் இது. அப்புறம் வீணாக லேண்ட் லைன் தொலைபேசி எதற்கு? மேலும் குடும்ப அங்கத்தினர் அல்லது அடிக்கடி நாம் பேசும் நபர்களுடன் குறைந்த செலவில் தொடர்பு கொள்ள பலவிதமான பேக்கேஜுகள் இருக்கின்றன. அவற்றில் எது சிறந்தது, சிக்கனமானது என்பதைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்
--
*more articles click*
www.sahabudeen.com