லேபிள்கள்

சனி, 29 செப்டம்பர், 2018

அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிப்பது எப்படி?

குழந்தைகளை எழுப்புவதில் இருந்து தூங்க வைப்பது வரை ஒவ்வொரு செயலும் பெற்றோருக்குச் சவாலான விஷயம். பெற்றோர்களும் குழந்தைகளாக மாறி, இணையாகப் பேசி விளையாடி, குழந்தைகளை வழிநடத்துவது அவசியம். எவ்வளவுதான் பொறுமையாக சொன்னாலும் சில குழந்தைகள் 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' என்பது போல பிடிவாதமாக இருப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் சமாளிப்பது சவாலின் உச்சமாக இருக்கும். அதிலும் வெளியில் வந்திருக்கும்போது 'இதுதான் வேண்டும்' என அடம்பிடித்து கீழே விழுந்து உருளும் குழந்தைகளைப் பார்க்கலாம். இப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளைப் பற்றியும் சமாளிக்கும் வழிகள் பற்றியும் விளக்குகிறார், மதுரையைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர், ராணி சக்கரவர்த்தி.
''ஒன்று சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். பொதுவாக, குழந்தைகளிடம் அடம்பிடிக்கும் பழக்கம் மூன்றாவது மாதத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது. அம்மா நம்மைத் தூக்கியே வைத்திருக்க வேண்டும் என அழுது அடம் பிடிப்பார்கள். கொஞ்சம் பெரியவர்கள் ஆனதும், சாப்பிடுவது முதல் பொம்மை கேட்பது வரை பட்டியல் நீளும். அடம்பிடித்தல் என்பது மரபணு வழியாகவும், பழக்கத்தாலும் வருகிறது. சமீப காலமாக அடம்பிடிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இத்தகைய குழந்தைகளைச் சமாளிக்க தெரியாத பெற்றோர்களில் பலர், மனநல மருத்துவரிடமும் மனோதத்துவ நிபுணரிடம் செல்கிறார்கள்.

அடம்பிடிக்கும் பழக்கம் எந்த வழியில் வந்தாலும், குடும்பத்தினர் ஒன்றிணைந்து தொடர் முயற்சி செய்தால் சரிசெய்யலாம். குழந்தைகள் எல்லோருமே சூழல் புரியாமல் அடம்பிடிப்பது இல்லை. இவர்கள் ஒரு வகையில் புத்திசாலிக் குழந்தைகள் எனச் சொல்லலாம். தங்கள் மனதில் உள்ள விஷயத்தைச் செய்வதற்கு அவர்கள் எடுத்துள்ள ஆயுதமே அடம்பிடித்தல். டவுன்சிண்ட்ரோம், ஆட்டிசம், டிளே டெவலப்மெண்ட் உள்ள குழந்தைகளிடமும் இந்த அறிகுறிகள் தென்படும்.

ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்ய வலியுறுத்தி அடம்பிடிப்பார்கள். 'உடனே கடைக்கு கூட்டிட்டுப் போக வேண்டும், டிவி போட வேண்டும்' என எதுவாகவும் இருக்கலாம். நினைத்தது நிறைவேறவில்லையென்றால் புரண்டு அழுதல், பொருளைப் போட்டு உடைத்தல் எனச் செய்வார்கள். இத்தகைய செயல்களில் குழந்தைகள் ஈடுபடும்போது, பெற்றோர்களும் சம்மதித்துவிடுவார்கள். அல்லது, அதற்கு மாற்றாக வேறு ஏதாவது செய்கிறேன் என வாக்குறுதி அளித்து சமாளிப்பார்கள். எடுத்துக்காட்டாக, பொம்மை வேண்டும் என அடம் பிடித்தால், உடனே வாங்கித் தரக்கூடாது. நாளை வாங்கித் தருகிறேன் என சமாளிக்கவும் கூடாது. எப்போது முடியும் அல்லது ஏன் முடியாது என்பதைத் தெளிவாக, திட்டவட்டமாகக் கூற வேண்டும். அடம்பிடித்துக் கீழே உருண்டாலும் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் வீட்டில் இருக்கும் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என எல்லோரும் ஒருமித்த கருத்தில் இருக்க வேண்டும். ஒருவர் கண்டிக்கும்போது, மற்றொருவர், சப்போர்ட் செய்யக் கூடாது. இதனால், யாரிடம் கேட்டால் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, நினைக்கும் காரியத்தை சாதிக்க நினைப்பார்கள்.

பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை சில பெற்றோர்கள் அடித்துத் துன்புறுத்துவார்கள். அடித்துவிட்டு பின்னர் கேட்டதை வாங்கித் தருவார்கள். இதுவும் தவறான அணுகுமுறை. அடிப்பதும் தகாத வார்த்தைகளால் திட்டுவதும் பிடிவாதத்துக்குத் தீர்வாகாது. அவற்றை நாளடைவில் பழக்கப்படுத்திக்கொண்டு தொடர்ந்து அடம்பிடிப்பார்கள். இன்னும் சில பெற்றோர், அறைக்குள் போட்டு அடைப்பது, பூச்சாண்டியிடம் விட்டுவிடுவேன். மிஸ்ஸிடம் சொல்லிவிடுவேன் என பயமுறுத்துவார்கள். இதுவும் தவறான அணுகுமுறையே.

சில குழந்தைகள் வீட்டில் நினைத்ததைச் சாதிக்க முடியாது என்பதற்காக, வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் அடம்பிடிப்பார்கள். மற்றவர்கள் நம்மைப் பார்ப்பதை தவிர்க்க, பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்துவிடுவார்கள் எனக் குழந்தைகள் நினைக்கும். இத்தகைய புத்திசாலி குழந்தைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, பொது இடம் எனப் பதறாமல், கோபத்தைக் காட்டாமல் கண்டுகொள்ளாமல் இருக்கும் நடைமுறையை இங்கும் பயன்படுத்த வேண்டும். யாரும் நம்மைக் கண்டுகொள்ளவில்லை என்ற மனநிலைக்கு நாளடைவில் வந்துவிடுவார்கள்.

முக்கியமான விஷயம், இதுபோன்ற நடைமுறைகளைப் பின்பற்றும்போது உடனே இதற்கான பலன் கிடைக்காது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ரிசல்ட் தெரியவரும். முயற்சியை விட்டுவிடாமல் தொடர வேண்டும். முடிந்தவரை இரண்டு அல்லது மூன்று வயதிலேயே குழந்தைகளின் அடம்பிடிக்கும் போக்கை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், பள்ளிக்குப் போக மாட்டேன் என்பதில் ஆரம்பித்து சைக்கிள், பைக் வரை சென்று நிற்பார்கள். தற்போதைய சூழலில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளே பெற்றுக்கொள்கின்றனர். பெற்றோர்களும் வேலைக்குச் செல்வதால், குழந்தைகளின் சின்ன அழுகையையும் தாங்கமுடியாமல் கேட்பதை வாங்கிக் கொடுக்கும் மனநிலைக்குச் சென்றுவிடுகின்றனர். இத்தகைய குழந்தைகள், எதிர்காலத்தில் சின்ன ஏமாற்றத்தையும் தாங்கிக்கொள்ளா இயலாமல், சமூகத்தை எதிர்கொள்வதில் பல சிக்கல்களைச் சந்திக்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். சிறு வயதிலேயே குழந்தைகளின் பிடிவாதத்தைக் கட்டுப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்'' என்கிறார் டாக்டர் ராணி சக்கரவர்த்தி--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 27 செப்டம்பர், 2018

எடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்!

 தயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். `இந்திரனுக்குக்கூடக் கிடைக்காத அற்புதம்' என மோரின் மேன்மையை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். கிராமத்து வயல்வெளிகளில் கூலிவேலைக்குச் செல்பவர்கள், பழைய சாதத்துடன் மோர் ஊற்றிக் கரைத்து சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், மோர் மிளகாய் வகையறாக்களுடன் மதிய சாப்பாடு எடுத்துச் செல்வார்கள். உழைத்துக்களைத்து உச்சி வெயிலில், வயல்வரப்புகளில் அமர்ந்தபடி இந்த உணவை ரசித்து ருசித்து உண்பார்கள்.
மோர்
எந்தவொரு கல்யாணப் பந்தியும் மோர் இல்லாமல் முடிவதில்லை. சாம்பார், காரக்குழம்பு அல்லது வத்தக்குழம்பு, ரசம், மோர் என்ற வரிசையில் சாப்பிடுவது நம்மூரில் எழுதப்படாத ஒரு விதியாகவே இருக்கிறது. கோயில் திருவிழாவில் நீர்மோர் பந்தல், கோடைகாலம் வந்தால் நீர்மோர் பந்தல் என நம் வாழ்வியலில் தவிர்க்கமுடியாத இடம் மோருக்கு உண்டு. மோரில் அப்படி என்ன மகோன்னதம் என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்…
கால்சியம் குறைபாடு நீக்கும்
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையை சிலரது உடலால் ஜீரணிக்க முடியாது. இந்தப் பிரச்னை லாக்டோஸ் இன்டோலரன்ஸ் (Lactose intolerance) எனப்படுகிறது. இத்தகைய பிரச்னை உள்ளவர்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இவர்கள் மோர் குடிப்பதன்மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பெற முடியும். ஒரு கப் மோரில் 350 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. ஆனால், பாலில் 300 மில்லி கிராம் கால்சியம்தான் இருக்கிறது.
வயிற்றெரிச்சலைக் குறைக்கும்
காரமான உணவுகளை அதிகளவு சாப்பிட்டால் வயிற்றெரிச்சல் பிரச்னை வரும். அப்படிப்பட்ட சூழலில் மோர் குடிப்பதால் அதிலுள்ள புரதம் காரத்தின் ஆற்றலைக் குறைத்துவிடும். இதனால் வயிறு எரிவது குறையும். அத்துடன் நெஞ்செரிச்சலுக்கும் இது நல்ல மருந்தாகும்.
நீரிழப்பைத் தடுக்கும்
தயிருடன் தண்ணீர், உப்பு கலந்த மோர்க்கலவையைக் குடித்தால் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படாது.
செரிமானத்தை எளிதாக்கும்
தயிரில் செரிமானத்துக்கு உதவும் புரோபயோடிக்ஸ் (Probiotics) பாக்டீரியாக்கள் உள்ளன. தயிரை மோராக மாற்றும்போதும் இதே நன்மைகள் கிடைக்கின்றன. அதிகளவில் ஏப்பம் விட்டுக்கொண்டே இருக்கும் பிரச்னைக்கும் மோர் தீர்வு தருகிறது.
கொழுப்பைக் குறைக்கும்
மோரில் உள்ள புரதச்சத்து உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைக்கும். இதை தினமும் குடித்துவந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
உடல் நச்சுகளை வெளியேற்றும்
இதில் வைட்டமின் பி-2 உள்ளது. இது நாம் உண்ணும் உணவை சக்தியாக மாற்ற உதவுகிறது. வைட்டமின் பி-2 செல்களிலுள்ள என்சைம்களின் செயல்பாட்டை ஆரம்பித்துவைக்கும். இது சக்தியாக மாற்றப்படும். இது கல்லீரல் நன்றாக செயல்பட உதவும். உடலில் உள்ள நச்சுப்பொருட்களையும் வெளியேற்றும்.
மலச்சிக்கலுக்கு மருந்து
உணவுப்பழக்கத்தை முறையாகப் பின்பற்றாததாலும், நார்ச்சத்துள்ள பொருட்களைச் சாப்பிடாததாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. மோரை தொடர்ந்து குடித்துவர இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும்.
எடை குறைக்கும்
குறைவான உணவைச் சாப்பிட்டு எடையைக் குறைக்க முயலும்போது நீரிழப்பு, சோர்வு போன்றவை ஏற்படும். ஆனால் மோர் குடிக்கும்போது இந்தப் பிரச்னைகள் ஏற்படாது. மோர் எளிதில் பசியைத் தணிக்கக்கூடிய உணவு. அதேநேரத்தில் இதில் புரதம், மினரல், வைட்டமின், கால்சியம், மக்னீசியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துகளும் உள்ளன. பால், தயிரைவிட இதில் கொழுப்பும் குறைவு.
முக அழகைக் கூட்டும்
இது உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதால் முகம் அழகாக மாறும். இதைப் பயன்படுத்தி ஃபேஷியல் செய்யலாம். இது சருமத்தைப் பிரகாசமாக்குவதோடு, மென்மையாகவும் மாற்றக்கூடியது. முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையவும் இது உதவும். குறைந்த வயதில் வயதான தோற்றம் அடையும் பிரச்னைக்கு இது தீர்வு தரும். இதில் லாக்டிக் அமிலம் இருப்பதால், இதை தொடர்ந்து பயன்படுத்திவர முகத்தில் உள்ள புள்ளிகள் மறையும்.
வயிற்றுப்புண் குறைக்கும்
வயிறு சம்பந்தமான எல்லாப் பிரச்னைகளுக்கும் மோர் தீர்வு தரும். இதை தொடர்ந்து குடித்துவர வயிற்றுப்புண் நீங்கும்.
வாய்ப்புண் நீக்கும்
தினமும் இரண்டு அல்லது மூன்று கப் மோர் குடிக்க வாய்ப்புண் குணமாகும். மோரை விழுங்குவதற்கு முன்பாக சில நொடிகள் வாயிலேயே வைத்திருந்து பிறகு விழுங்குவது விரைவான பலன் தரும்.
மூல நோய்க்கு மருந்து
சாப்பாட்டுடன் மோர் மற்றும் வாழைப்பழத்தைக் கலந்துகொள்ள வேண்டும். இதனை தினமும் இரண்டுவேளை சாப்பிட்டுவர மூலநோயின் தீவிரம் குறையும்.
சளியைப் போக்கும்
மோரில் சிறிதளவு இஞ்சி மற்றும் பூண்டு அரைத்துச் சேர்க்க வேண்டும். இதை சில வேளைகள் குடித்துவர வெகு விரைவில் சளி, ஜலதோஷம் நீங்கும்.
சாப்பாட்டின் இறுதியாக மோர் குடிப்பதால் அது வயிற்றைக் குளுகுளுவென மாற்றுவதோடு, செரிமானத்தையும் எளிதாக்குகிறது. ஆனால் இதன் பயன் தெரியாமலே நாம் தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறோம். இவ்வளவு பயன்கள் உள்ள மோரை தொடர்ந்து பயன்படுத்தினால் நாம் என்றென்றும் உடல் நலம் குன்றாமல் வாழ்வது உறுதி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
நன்றி: விகடன்--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

குழந்தைகளின் வெட்கம்!

வெட்கம் மனிதன் கொண்டுள்ள மனஎழுச்சிகளில் முக்கியமானது. மிகக் குறைந்தளவு புரிந்துகொள்ளப்பட்ட மனஎழுச்சியும் அதுவே என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது, புதிய மனிதர்களை சந்திக்கும்போது குழந்தைகள் வெட்கமடைகின்றனர். எனினும் சிலவேளை, ஆரோக்கியமான சமூக உறவுக்கு அதீதமான வெட்க உணர்வு தடையாக இருப்பதையும், குழந்தைகள் புதிய சூழலை எதிர்கொள்ள முடியாமல் தனிப்பட்டுப் போவதையும் மறுக்க முடியாது.
சமூகத்தில் புதியதாக, அறிமுகம் இல்லாத, பழக்கப்படாத ஒன்று ஒரு தனி மனிதனுக்கு அறிமுகம் ஆகும் போது அதை கையாள்வதற்கு உதவும் ஒரு மன எழுச்சியே வெட்கம்.
ஒருவகையில் இது உளப் பொறியியல் (Mental Mechanism) எனவும் கொள்ளலாம். இதில் ஆர்வம், அச்சம், பதற்றம் ஆகிய உணர்வுகளும் சிறிதளவு கலந்துள்ளன. அதீத வெட்கம் இதயத் துடிப்பின் அளவை அதிகரிப்பதோடு இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கலாம். குழந்தைகள் வெட்கப்படும்போது விரல்களை சூப்புவர் அல்லது புன்னகையுடன் விலகி ஓடுவர்.
வயது வளர்ச்சி வேறுபடும் போது வெட்க உணர்வும் பல்வேறு வகையில் வெளிப்படுகின்றது. பிறந்ததிலிருந்து 2 வயது உள்ள குழந்தைகளுக்கு புதிய முகங்களைக் காணும்போது அச்சம் கலந்த ஒருவிதமான வெட்கம் ஏற்படுகின்றது. இரண்டாவது வயதுக்குப் பிறகு அறிவு வளர்ச்சியடையும்போது சுய அடையாளத்துடன் கூடிய ஒருவிதமான வெட்கம் உருவாகிறது.
4 முதல் 5 வயதில் சுய உணர்வு சார்ந்த வெட்கம் ஏற்படுகின்றது. முன் இளமைப் பருவத்தில் எதிர்ப்பாலினரை எதிர் கொள்ளும் போது ஒருவகை வெட்க உணர்வு உருவாகின்றது.
பொதுவாக புதிய சமூக சூழல்களே குழந்தைகளிடம் வெட்க உணர்வை உருவாக்குகின்றது. மற்றவர்களின் கவனம் தன் பக்கமே உள்ளது என குழந்தைகள் உணரும் சமயத்தில் வெட்க உணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது.
சூழ்நிலைகள் அடிக்கடி மாறும்போதும் வெட்க உணர்வு ஏற்படுகின்றது. தமது பிள்ளைகள் குறித்து பிறர் தெரிவிக்கும் புகார் மற்றும் குறைபாடுகளுகளைக் கேட்டு அதற்கு ஏற்ப குழந்தைகளை அதட்டி மிரட்டி குழந்தைகளை கட்டுப்படுத்துகின்றனர். இதன் மூலம் குழந்தைகளின் சுதந்திரம் சந்தோஷம் (மன எழுச்சி) குறைக்கப்படுகிறது. இந்நிலையில் குழந்தைகளிடம் வெட்க உணர்வு அதிகரிக்கலாம். அல்லது புதிய சூழல்களை எதிகொள்வதில் தயக்கம் ஏற்படும்.
சில குழந்தைகளிடம் அளவுக்கு மிஞ்சிய வெட்க உணர்வு இருப்பதற்கான காரணம் என்ன? இதற்கு உளவியலாளர்கள் பல்வேறு விடைகளைத் தருகின்றனர். சில பிள்ளைகள் இயல்பாகவே அதிக வெட்க உணர்வு கொண்டுள்ளனர். தனிப்பட்ட வேறுபாடு இதற்கொரு காரணமாகும். சிலவகை வெட்கம் அறியப்படுகின்றது. அல்லது கற்கப்படுகின்றது. குழந்தை வெட்கத்தை தாம் வாழும் சூழலிலிருந்து கற்கின்றது. குடும்ப சூழல், கலாசாரப் பின்னணி, ஆன்மீக சூழல் என்பன இனத்திற்கு இனம், நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது.
சுவீடன் நாட்டுக் குழந்தைகள் அமெரிக்கக் குழந்தைகளை விட வெட்கம் கூடியவர்கள் என ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது. பெற்றோர்களே சிலநேரம் அளவுக்கு மீறிய வெட்க உணர்வை பிள்ளைகளிடம் வளர்க்கின்றனர்.
பரம்பரை பழக்கம் குழந்தைகளின் வெட்க உணர்வில் தாக்கம் செலுத்தலாம். அதேபோன்று சில குடும்பங்களிடம் வளர்க்கப்படும் குழந்தைகளிடம் ஒப்பீட்டு ரீதியில் வெட்க உணர்வு அதிகமாக இருக்கின்றது. தாயின் அல்லது தந்தையின் சமூகத் தொடர்பு குறைவாக இருந்தால் அதாவது சமூகத்தோடு ஒட்டாமல் இருந்தால், பிள்ளைகளும் அப்படியே சமூகத்தை விட்டும் ஒதுங்கி இருக்கக் கூடும்.
எனினும், அதிகமான ஆய்வாளர்கள் குழந்தைகளின் அதீத வெட்கத்தில் பரம்பரைக் காரணங்களின் தாக்கம் குறைவாக உள்ளதாக கருதுகின்றனர். ஏனெனில், தத்தெடுக்கப்படுகின்ற குழந்தைகள் தத்தெடுத்த பெற்றோரின் நடத்தைகளையே பெரிதும் பிரதிபலிப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே குழந்தை வளர்க்கும் முறையே குழந்தைகளின் வெட்க உணர்வில் அதிகம் தாக்கம் செலுத்துவது தெளிவாகின்றது.
அதீத வெட்க உணர்வினால் குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் எத்தகையது என்பதும் முக்கியமானது. சமூகத்துடன் பரிச்சயமாகி ஏனைய மனிதர்களுடன் கலந்து உறையாடுவதன் மூலமே அறிவையும் அனுபவங்களையும் வளர்த்துக் கொள்ள முடியும். சமூகத்தின் நெறிமுறைகளையும் விளங்கிக் கொள்ள முடியும்.
அதீத வெட்க உணர்வுள்ள குழந்தைகள் பிறரோடு கலந்துறவாடுவதில் தயக்கம் காட்டுவதனால் இந்த அறிவையும் அனுபவத்தையும் பெற முடியாமல் போகின்றது. சமூகத் திறன்களை வளர்ப்பதும் தடைப்படுகிறது. பொதுவாக வெட்க உணர்வுள்ள பிள்ளைகளிடம் தன்னைப் பற்றிய ஒரு தாழ்வு மனநிலை (Poor Image) தான் இருக்கும்.
சம வயதுக் குழுந்தைகளுடன் போட்டி போடும் மனப்பாங்கு குறைவாகவே இருக்கும். பள்ளிப் பருவத்தில் வெட்க உணர்வு கொண்ட பிள்ளைகளிடம் நட்புணர்வும் குறைவாக இருக்கும். வெட்க உணர்வு குறைந்த மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இவர்கள் பெரும்பாலும் மந்தமான (Passive) நிலையிலே இருப்பார்கள். இதனால் தோழர்களால் ஒதுக்கப்படும் நிலை தோன்றும்.
இளமைப் பருவம் முதல் முதுமை வெட்கம் தொடரும் பிள்ளைகளைப் பொறுத்தமட்டில், அவர்கள் எப்போதும் தனிமையில் இருப்பதாகவே உணர்கின்றனர். இந்த மனநிலை ஆரோக்கியமான ஆளுமை வளர்ச்சிக்குத் தடையாக உள்து.
பெற்றோர் அதீதி வெட்க உணர்வு கொண்ட பிள்ளைகளை எவ்வாறு கையாள்வது?
முதலில் தமது பிள்ளைகள் குறித்து முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளைகளின் ஆர்வங்களுக்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும். பிள்ளைகளை கௌரவிக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மையை நீக்குவதற்கு தன்னம்பிக்கையை திட்டமிட்டு வளர்க்க வேண்டும்.
வெட்கம் கொண்ட பிள்ளைகளிடம் எதிர்மறையான உணர்வுகளும் தன்னைப் பற்றிய தாழ்வான மனப்பதிவும் (Poor Image) இருக்கும். எனவே, அவர்களிடம் சுய மதிப்பை கட்டியெழுப்ப வேண்டும். கொடுக்கும் சுதந்திரத்தின் அளவை அதிகரிப்பதன் மூலமும் சுதந்திர சிந்தனையை ஊக்குவிப்பதன் மூலமும் பாராட்டுவதன் மூலமும் இந்த சுய மதிப்பை கட்டியெழுப்பலாம்.
சமூகத் திறன்களை மேம்படுத்தல் : சமூக பழக்க வழக்கங்களை மீள வளர்ப்பதன் மூலம் சமூகத் திறன்களை வளர்க்க வேண்டும். ஆம், என்னாலும் முடியும்' என்ற தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு சமூகத்தினுள் குழந்தை கலந்து உறவாடும் நுட்பங்களைக் கையாள வேண்டும். இதற்கு சமவயதுக் குழந்தைகளுடன் விளையாடும் சந்தர்ப்பங்களை உருவாக்கலாம். புதிய புதிய வயதுக் குழுக்களுடன் இணைந்து செயல்படும் நிர்ப்பந்தங்களையும் தோற்றுவிக்கலாம்.
ஒரு பிள்ளை தனக்கு பயம் அல்லது அச்சுறுத்தல் எனக் கருதும் சூழ்நிலை ஒன்றுக்குள் பிள்ளையைத் தள்ளி விடுவது சமூக ஆற்றலைக் கட்டியெழுப்ப உதவாது. மாறாக சமூகத் தோடு கலந்துறவாடுவதன் மூலம் தனக்குப் பாதுகாப்பும் அங்கீகாரமும் அதிகம் கிடைக்கும் என குழந்தையை உணரச் செய்வதுதான் பெற்றோரின் பொறுப்பு.
நன்றி -அப்துல்லாஹ் – சமூகநீதி--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

டீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா?

"சுகர் பீரி' சீனித் துளசி மூலிகையை சாகுபடி செய்து சர்க்கரை நோயை விரட்டலாம் என, காந்திகிராம பல்கலை தெரிவித்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலையில் "ஸ்டீபியா ரொபோடியானா' என்ற சீனித்துளசி மூலிகை உள்ளது. இவற்றின் இலையை மென்று தின்றால் இனிப்பாக இருக்கும். கலோரி அற்றது. இவை வெல்லம், சக்கரையை (சீனி) விட பல மடங்கு இனிப்பு சுவை கொண்டது. இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை உண்டால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காது. இதனால் சர்க்கரை நோய் வராது. மலைப்பிரதேசத்தில் மட்டும் காணப்படும் அவற்றை, சமதள பகுதியில் பயிடுவதற்காக காந்திகிராம பல்கலை உயிரியியல் உதவி பேராசிரியர் ஆர்.ராமசுப்பு ஆய்வு மேற்கொண்டார். முடிவில் சீனித்துளசி சமதள பகுதியிலும் நன்றாக வளர்வது தெரியவந்தது.ராமசுப்பு கூறியதாவது: சீனித்துளசியில் உள்ள சர்க்கரை உடலுக்கு எந்த தீங்கும் தராது. அவற்றை பொடி செய்து இனிப்பு தேவையுள்ள உணவு பொருட்களில் பயன்படுத்தலாம். இதன் மூலம் "சாக்கரின்' பயன்பாட்டை குறைக்க முடியும். மலைப்பிரதேசத்தை போல், மற்ற பகுதிகளிலும் சீனித்துளசி நன்றாக வளர்கிறது. இதனால் அவற்றை மூலிகை பயிராக விவசாயிகள் சாகுபடி செய்யலாம், என்றார். தொடர்புக்கு 90948 15828.
 தென்அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இந்த சீனித்துளசி, இனிப்புச்சுவை கொண்டது. இதன் இலைகளை சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்த முடியும். இலையை உலர வைத்து பொடியாக்கி, டப்பாக்களில் அடைத்து வைத்து இயற்கை சர்க்கரையாக பயன்படுத்தலாம். இந்த இலைகளில் கலோரிகளே (Zero  Calorie) இல்லை. அதனால், இனிப்புக்குப் பதிலாக தாராளமாக உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும் இத்தாவரம், தமிழகத்தில் நன்கு வளரும்.
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்கள். பழமொழி அளவுக்கு இலுப்பைப்பூ பிரசித்தி பெறுவதற்குக் காரணம் அந்த அளவு இனிப்புச்சுவை உள்ளது இலுப்பைப்பூ. முற்காலங்களில் பழங்குடி மக்கள் சர்க்கரைக்குப் பதிலாக இலுப்பைப்பூவின் இதழ்களை நேரடியாகவோ உலர்த்தியோ அரிசியுடன் சேர்த்து சமைத்தோ சாப்பிட்டிருக்கிறார்கள். அந்தவரிசையில் வந்திருப்பதே சீனித் துளசி.
சர்க்கரை
சர்க்கரைக்கு மாற்றாக அதுவும் இன்றைக்கு பெருவாரியான மக்களை பாடாய்ப்படுத்தி வரும் சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக வாராது வந்த மாமணிபோல் வந்திருப்பதே இனிப்புத் துளசி எனப்படும் சீனித் துளசி. `ஸ்டீவியா ரியோடியானா' எனப்படும் இந்த சீனித்துளசியின் தென்அமெரிக்காவை தாயகமாகக்கொண்டது. லத்தீன் அமெரிக்க நாடான பராகுவேயில் அதிகமாகக் காணப்படும் இந்தச்செடி சூரியகாந்தி குடும்பத்தைச்சேர்ந்தது. சீனித்துளசியில் இருந்து எடுக்கப்படும் ஸ்டீவியோசைடு (Stevioside) மற்றும் ரெபடையோசைடு (Rebaudioside)  போன்ற வேதிப்பொருள்களே இனிப்புத்தன்மைக்கு முக்கியக் காரணமாகும். கரும்புச்சர்க்கரையைவிட 30 மடங்கு அதிகமாக இனிப்புத்தன்மை கொண்டிருந்தாலும் மிகக்குறைந்த சர்க்கரை மற்றும் மாவுச்சத்து கொண்ட பொருட்களே இதில் உள்ளன. சர்க்கரைக்கு மாற்றாக உணவில் பயன்படுத்தப்படும் இந்த சீனித் துளசி உலக நாடுகள் பலவற்றிலும் சாகுபடி செய்யப்படுகிறது.
சீனித் துளசியில் சர்க்கரை இயற்கையாகக் காணப்படுவதால் சர்க்கரை நோயாளிகள் இதை தாராளமாகப் பயன்படுத்தலாம். இதன் இலைகளை காய வைத்துப் பொடியாக்கி டீயாக விற்கப்படுகிறது. உடனே சீனித்துளசியில் டீயா? என்று சிலர் கேட்கலாம். மேலும் இதை மூலிகை டீ என்று நினைத்துப் பயப்படவும் வேண்டாம். வழக்கமாக நாம் பயன்படுத்தும் டீயைப்போலவே பாலில் கொதிக்க வைத்து பயன்படுத்தலாம். சுக்கு, ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட சீனித்துளசியில் வெல்லமோ, சர்க்கரையோ சேர்க்கத் தேவையில்லை. கரும்புச் சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளான சாக்ரின், அஸ்பார்டேம் மட்டுமல்ல இயற்கைச் சர்க்கரைப் பதிலாகவும் இதைப் பயன்படுத்தலாம். டீ, காபி என்றில்லை… குளிர்பானங்கள், பழச்சாறுகள், ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்புகள், பிஸ்கெட் போன்றவற்றிலும் சர்க்கரைக்குப் பதிலாக இதை பயன்படுத்தி உண்டு மகிழலாம். சீனித் துளசியில் ஊறுகாய், ஜாம் போன்றவையும் தயார் செய்யப்படுகின்றன.
மிகக் குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட சர்க்கரை உணவான இது ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தக்கூடியது. இதய நோயைக் குணப்படுத்தும் மருந்துகளிலும் சீனித் துளசி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் செரிமானக்கோளாறுகளை சீராக்கும் இது அழகுசாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. தோல் நோய்களைத் தீர்க்கும் மருந்துகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் பயன் தெரிய வந்ததையடுத்து இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெருமளவில் பயிரிடப்படுகிறது; தமிழகத்திலும் சில இடங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் இதை வளர்க்கலாம். இது மிதவெப்ப மண்டலச்செடி என்பதால் அதிகமான சூரிய ஒளியை விரும்பக்கூடியது. எனவே தமிழகத்தில் செழித்து வளரும். ஆனாலும் குறைவான வெப்பநிலைதான் இதற்கு ஏற்புடையது. நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண் நிறைந்த நிலத்தில் நன்றாக வளரும். இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது நல்லது. மேலும் சீனித்துளசியை நோய் மற்றும் பூச்சிகள் எளிதில் தாக்காது. பயிர் செய்த 4 முதல் 5 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும் சீனித்துளசியை 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து அறுவடை செய்து பயன்பெறலாம். சீனித்துளசியில் இலைகளே தேவை; பூக்கள் பூத்தால் செடியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிடும் என்பதால் பூ பூத்ததும் நுனியைக் கிள்ளி பூக்களை அகற்றிவிட்டால் செடி செழித்து வளரும். நல்லமுறையில் பராமரிக்கப்படும் சீனித் துளசி 3 முதல் 5 ஆண்டுகள் வரை தொடர்ந்து நல்ல மகசூல் தரும்.--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

இந்த 4 தவறுகளைத் திருத்தினால், நம் நாள் நன்றாக அமையும்!

தவறுகள் செய்வது மனித இயல்பு. ஒரு தவறு நேர்ந்துவிட்டால் அதை எண்ணி சோர்வடையாமல் அதை திருத்துவது எப்படி என்ற சிந்தனை மட்டுமே நம் மனதில் இருக்க வேண்டும். அதேசமயம், தவறுகளைக் களைந்தால்தான் வெற்றியும் கிட்ட வரும். உங்கள் நாள் நன்றாக அமைய, அப்படி களைய வேண்டிய முக்கியத் தவறுகளாக,  எழுத்தாளர் ரிச்சர்டு என் ஸ்டீபன்சன் (Richard N. Stephenson) சுட்டிக் காட்டுபவை இவை.
1. பழையதைப் பின்பற்றாதீர்கள்!
எப்போதும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்காமல் புதிதாகச் சிந்தியுங்கள். எந்த வேலையாக இருந்தாலும், வார நடுவில் சலிப்பு தட்டுவதற்குக் காரணம் அதன் பழைமையே. புதிதாக முயற்சி செய்து பாருங்கள். ஒருவேளை அது தவறாக முடிந்தாலும், 'சரி இன்று ஏதோ ஒரு புது முயற்சி செய்தோம்' என்கிற திருப்தியாவது மிஞ்சும்.
இன்று நிறைய பேர் செய்யும் பொதுவான தவறு, தங்களுக்கென வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்துக்கொள்ளாமல் இருப்பது. உங்களுக்கென ஒரு குறிக்கோளை முடிவு செய்து அதை அடைவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து, அடுத்த அடுத்த நிலைகளுக்கு உங்களை நீங்களே நகர்த்திக்கொள்ள வேண்டும். புது விஷயங்களைத் தெளிவாகக் கற்றுத் தேர்ந்து சிறந்த முடிவுகளை தைரியமாக எடுங்கள்.
2. 'என்னால் முடியுமா?' என்ற அவநம்பிக்கையைச் சுமக்காதீர்கள்!
இன்று பலருக்கும் தன்னம்பிக்கை இல்லை. 'என்னால் முடியுமா?' என்று யோசிக்காமல், 'என்னால் ஏன் முடியாது?' என்று சிந்தியுங்கள். உங்களைச் சுற்றி ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு, 'அதுதான் என் உலகம். அதைச்சுற்றிதான் என் சிந்தனைகள் இருக்கும்' என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். 'என்னால் என்ன வேலை இயலும்? அதை எந்த அளவுக்கு கச்சிதமாக முடிக்க இயலும்' என்று உங்களுக்கு நீங்களே சுயமதிப்பீடு செய்து தன்னம்பிக்கையுடன் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள்.
3. நம்பிக்கை இழக்கச்செய்யும் உறவுகளைப் பொருட்படுத்தாதீர்கள்!
பாசிட்டிவிட்டி என்பது அனைவரின் வாழ்விலும் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்று. என்ன துயரம் நேர்ந்தாலும் 'இது நிரந்தரம் அல்ல, இதுவும் கடந்து போகும்' என்ற உணர்வு இருப்பது மிகவும் முக்கியம். இது போன்ற பாசிட்டிவ் சூழல்களை அமைப்பதில் பெரும் பங்கு, நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு உண்டு. நண்பர்கள், உறவுக்காரர்கள், உடன் வேலை செய்பவர் என யாராக இருந்தாலும், ஒருவரிடையே வெளிப்படும் நெகட்டிவிட்டி நம்மையும் சோர்வடைய செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. விமர்சனங்களோ, கருத்துகளோ ஊக்கப்படுத்தும் வகையில் சொல்லப்படாவிட்டால் அது நம்மிடையே இருக்கும் பாசிட்டிவிட்டியை குறையச் செய்யும். எனவே இவ்வாறு இருக்கும் உறவுகளின் கருத்துகளை மட்டும் அல்ல, அவர்களையும் பொருட்படுத்தக்கூடாது. முடிந்தவரை இவர்களிடமிருந்து உங்களை விலக்கிக்கொள்வதே நல்லது.
4. அறிவை தேக்கநிலையில் வைக்காதீர்கள்!
உலகச் செய்திகள், தொழில், வேலை சார்ந்த நாட்டு நடப்புகள் பற்றிய அறிவு முழுவதுமாக  இல்லை என்றாலும், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருக்காதீர்கள். அறிவு, பிறரிடம் உங்களுக்கான மரியாதையைப் பெற்றுத் தரும் பெரும் சொத்து. அதைத் தேக்க நிலையில் வைக்காதீர்கள்.
தவறுகள் கழித்தால் வெற்றியின் வாசல் கிட்ட நெருங்கும்!
நன்றி:   – விகடன்--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 19 செப்டம்பர், 2018

கழிப்பறையின் ஆரோக்கிய விதிகள்.!

உணவு, உறக்கம், ஓய்வு மூன்றும் மனிதனுக்கு அடிப்படை. அதைப்போலவே உண்ட உணவு நல்லவிதமாக செரிமானமாகி, குறித்த நேரத்தில் மலமாக வெளியேறவேண்டியதும் மிக மிக அவசியம். செரிமானத்தில் சிக்கல் ஏற்படும்போது, உடலின் ஒட்டுமொத்த செயல்பாடும் முடங்கிப்போகிறது. உடலைவிட்டு வெளியேறும் மலம், நமது மலச்சிக்கல் முதல் மனச்சிக்கல் வரை ஆரோக்கியம் காட்டும் கண்ணாடியாக இருக்கிறது. உடல்நிலை சொல்லும் ஸ்டூல் சார்ட் இங்கே…
டைப் 1: மலம் கழிக்க மிகவும் சிரமமாக இருப்பது. தனித்தனியாக சிறு சிறு உருண்டைகள்போல வெளிவருவது. இந்த நிலை இருந்தால், மோசமான மலச்சிக்கல்.
தீர்வு: உடனடியாக, மருத்துவரை அணுக வேண்டும். மோசமான மலச்சிக்கல் ஏற்படுவதற்கு, நாட்பட்ட நோய்கள், புற்றுநோய், செரிமான மண்டல நோய்கள், சர்க்கரைநோய், கடுமையான மனநல பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். மலச்சிக்கலைச் சீராக்க, தேவையான மலமிளக்கிகள் (Laxatives) எடுத்துக்கொண்டு, உணவுமுறை மாற்றம், வாழ்வியல் மாற்றம் போன்றவற்றுடன் அதற்கு மூல காரணமான நோயைக் கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
டைப் 2: மலம் கழிப்பதில் சிரமமும் மலம் வறட்சியாக இருப்பதும் பிரச்னைதான். மலம் கழிக்கும்போது எரிச்சலான உணர்வு இருப்பது, இந்த நிலை பொதுவான மலச்சிக்கல் பிரச்னை.
தீர்வு: இதற்கு, செரிமான மண்டலக் கோளாறுகள், மனஅழுத்தம் போன்ற காரணங்கள் இருக்கக்கூடும். மருத்துவரை அணுகி மலமிளக்கிகள் எடுத்துக்கொள்ளலாம். ஆரோக்கியமான உணவுப் பழக்கம், வாழ்வியல் முறை மூலம் தீர்வு காணலாம்.
டைப் 3: மலம் கழிக்கும்போது லேசான எரிச்சல் இருந்து தொல்லை கொடுக்கும். வறட்சியாக, விரிசல்களோடு மலம் வெளியேறும். இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படலாம்.
தீர்வு: ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமே இதற்கு முக்கியமான காரணமாக இருக்கக்கூடும் எனவே, போதுமான அளவு நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது.
டைப் 4: பாம்புபோல நீளமாக மலம் வெளியேறும். மலம் வெளிவரும்போது எந்த எரிச்சல் உணர்வும் இருக்காது. இதுதான் இயல்பான நிலை.
தீர்வு: இது ஆரோக்கியமான நிலை. உங்களின் செரிமானம் சீராக இருக்கிறது என்று அர்த்தம். தினசரி சமச்சீரான உணவை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சிகளை செய்வது, போதுமான ஓய்வு எடுப்பதன் மூலம் ஆரோக்கியமான செரிமானத்தை தக்கவைத்துக்கொள்ளலாம்.
டைப் 5: எளிதாக மலம் வெளியேறும். ஆனால், தனித்தனியாக துண்டுகளாக வெளியேறும்.
தீர்வு: இது ஆபத்து இல்லாத நிலை என்றாலும், உணவில் நார்ச்சத்து குறைவாக இருப்பதே மலம் இப்படி வெளியேறக் காரணம். எனவே, நார்ச்சத்து மிகுந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரைகள், பழங்கள், காய்கறிகளில் நார்ச்சத்துக்கள் உள்ளன. அவற்றை நாள்தோறும் சாப்பிடலாம்.
டைப் 6: திரவ நிலை அதிகமாகவும் கொஞ்சம் திடமாகவும் மலம் வெளியேறும். இது வயிற்றுப்போக்கின் ஆரம்பநிலையாக இருக்கலாம்.
தீர்வு: ஆரோக்கியமற்ற உணவு, சுகாதாரமற்ற நீர் போன்றவையே வயிற்றுப்போக்குக்கு முக்கியக் காரணம். உடனே மருத்துவரை அணுக வேண்டும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக்கொண்டு, உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெற குளூக்கோஸ், சலைன் நீர் ஏற்றிக்கொள்ள வேண்டும்.
டைப் 7: திரவ நிலையில் மலம் வெளியேறும். அடிக்கடி வயிறு வலித்து, இதேபோல தொடர்ந்து போகும். இது தீவிர வயிற்றுப்போக்கு பிரச்னை.
தீர்வு: சுகாதாரமற்ற உணவுகளையும் நீரையும் தொடர்ந்து பயன்படுத்தும்போது, இப்படி வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும், தீவிரமான செரிமான மண்டலப் பிரச்னை இருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படும். தாமதிக்காமல் வயிறு, இரைப்பை நிபுணர் ஒருவரை அணுக வேண்டும்.
நன்றி:  இளங்கோ கிருஷ்ணன் – விகடன் –--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 17 செப்டம்பர், 2018

அதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்?

மாத்திரையா… ஒரே கசப்பு என முகத்தை சுளிப்பவர்கள் பலர். மாத்திரை என்னும் கசப்பு மிட்டாயை நாம் உட்கொள்ளும் விதங்கள் மாறலாம். ஆனால் அவற்றின் செயலில் மாற்றங்கள் கிடையாது. ஆனால், ஒன்றுக்குமேல் ஒரேவிதமான மாத்திரையை ஒரே நேரத்தில் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் மற்றும் அவற்றுக்கான முதலுதவி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார் பொதுநல மருத்துவர் சுந்தரராமன்.
அதிக டோஸ் உள்ள மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. சாதாரண தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்ற எந்த ஒரு உடல் வலி மற்றும் நோய்க்கு அதிக டோஸ் உள்ள மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது. மருத்துவர் பரிந்துரைத்த அளவு மட்டுமே மாத்திரைகளை சாப்பிடவேண்டும்.
ஓவர் டோஸ் மாத்திரை…
சிலர் ஒன்றுக்கு இரண்டு மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் உடல்நிலை சரியாகிவிடும் என்று கருதி அதிக அளவு டோஸ் உட்கொள்கிறார்கள். பாரசிட்டமால் மாத்திரை 3 கிராம் அளவுதான் சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிட்டால் அது அதிக டோஸாகக் கணக்கிடப்படுகிறது. அதாவது,  நம் உடல்நிலையைப் பொறுத்தும், ஆரோக்கியம் மற்றும் வயதைப் பொறுத்தும் மாத்திரையின் டோஸ் அளவு மாறுபடும். நம் உடல் நிலை தாங்கிக்கொள்ளும் அளவை விட அதிகமாக இருந்தால் அது அதிக டோஸாக கணக்கிடப்படும்.
நீங்கள் உட்கொண்ட மருந்து ஓவர்டோஸாக ஆகிவிட்டால் ஏற்படும் பொதுவான அறிகுறிகள்
· குமட்டல்
· வாந்தி
· வயிற்றுப் பிடிப்பு
· வயிற்றுப்போக்கு
· தலைசுற்றல்
· தடுமாற்றம்
· பதற்றம்
· வலிப்பு
· உடல் அயர்வு
· செயல்களில் குழப்பம்
· மூச்சுத் தினறல், மூச்சுவிடுவதில் சிரமம்
· உடல் உள்உறுப்புகளில் ரத்தக் கசிவு
· மாயத்தோற்றம்
· நினைவாற்றால்
· பார்வைக் கோளாறு
· ஆழ்ந்த கோபம்
· பார்க்கும் இடம் சுழல்வதுபோல் தெரிதல்
· கோமா
இந்த அறிகுறிகள் பொதுவானவை. இவை ஒவ்வொரு மாத்திரை மற்றும் நோயைப் பொறுத்து மாறுபடும். மேலும், உடல்நிலை, ஆரோக்கியம், வயது போன்றவற்றைப் பொறுத்தும் மாறுபடும்.
சர்க்கரை நோயாளிகள்…
சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரை சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இன்று அதிகமாக ஸ்வீட் சாப்பிட்டுவிட்டோம் என்று இரண்டு மாத்திரையை சாப்பிடக் கூடாது. அதேபோல காய்ச்சல், உடல் வலி போன்றவற்றுக்காக ஒரே விதமான மாத்திரையை அதிகமாக சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிடும் அதிக டோஸ் மாத்திரை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிக அளவில் குறைத்துவிடும். லோசுகர் நிலையை உண்டாக்கும். சில நேரங்களில் படபடப்பு, மயக்கம் மற்றும் நாடித் துடிப்பைக் குறைத்துவிடும்.
ரத்த அழுத்தம் உள்ளவர்கள்…
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உட்கொள்ளும் மாத்திரைகள் அதிக அல்லது குறைந்த ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்து உடல் முழுவதும் ரத்தம் சீராக பாய உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாதாரண காய்ச்சல், உடல் வலி போன்றவற்றுக்காக அதிக டோஸ் உள்ள மாத்திரைகளை உட்கொள்ளும்போது, திடீரென ரத்த அழுத்தத்தின் அளவில் மாற்றம் உண்டாகும். மயக்கம், தலைசுற்றல், நினைவாற்றல் இழப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். இப்படியான மாற்றம் இதயத் துடிப்பை நிறுத்தும் அபாயமும் உள்ளது. சில நேரங்களில் உயிரிழப்புக்கூட ஏற்படுத்தும்.
மாத்திரைகள் எப்போது ஓவர் டோஸாக மாறும்..?
* ஒரே நேரத்தில் ஒரேவிதமான மாத்திரையை ஒன்றுக்குமேல் எடுத்துக்கொள்ளும்போது.
* நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், உடல் நிலைக்கு ஒத்துக்கொள்ளாது இருக்கும்போது ஓவர் டோஸாகக் கருத்தப்படும்.
அதிக டோஸ் மாத்திரைகளை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்…
சிறுநீரகம், கல்லீரல் மற்றும் குடல் போன்ற உறுப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிக அளவு டோஸ் உள்ள மாத்திரைகள் வயிற்றில் அதிக நேரம் இருக்கும்போது வயிற்றில் உண்டாக்கும் அமிலங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால், வயிறு தொடர்பானஉபாதைகளை உண்டாக்கும்.
மருந்து ஓவர் டோஸாகி விட்டால் என்ன செய்ய வேண்டும்?
நிதானமாக இருக்க வேண்டும்.
முதலுதவிக்கு ஆம்புலன்ஸைத் தொடர்புகொள்ள வேண்டும்.
அதிக டோஸ் மாத்திரை உட்கொண்டவர் நினைவில்லாது இருக்கும்போது (unconscious), நேராகத் தரையில் படுக்கவைக்க வேண்டும். தலையை நேராக வைக்க வேண்டும். கால்களை சற்று உயர்த்தி வைக்க வேண்டும்.
அதிக டோஸ் மாத்திரை உட்கொண்டவர், வாந்தி எடுத்தால் சரியாகிவிடும் என்று எந்த முயற்சியிலும் ஈடுபடக்கூடாது.
வலுக்கட்டாயமாக உண்பதற்கும் குடிப்பதற்கும் எதுவும் கொடுக்கக்கூடாது.
உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
முன்னெச்சரிக்கை எப்போதும் நல்லது..?
· * சில சமயங்களில் இந்த ஓவர் டோஸ் என்பது போலி மாத்திரைகளாலும் ஏற்படும். ஆகையால், மாத்திரையை வாங்கும்போது போலியா இல்லையா என்பதை உறுதி செய்து வாங்கவேண்டும்.
· * மருத்துவரின் ஆலோசனை இல்லாது சுயமாக எந்தவிதமான மாத்திரைகளையும் விழுங்கக்கூடாது.
· * எப்போதும் மாத்திரை உட்கொள்ளும்முன் மருத்துவரிடம் காட்டி ஒப்புதல் பெற்று சாப்பிடலாம்.
· * நீண்ட நாள்களாக வைத்திருக்கும் மாத்திரைகளை விழுங்கக்கூடாது.
· * மாத்திரை மருந்துகளைக் குழந்தைகளின் கைகளுக்கு எட்டும் தொலைவில் வைக்கக்கூடாது.
நன்றி:   விகடன்--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts