லேபிள்கள்

செவ்வாய், 29 மே, 2012

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்


* கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும்.
* சிகரெட், போதைப் பொருட்கள் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும்.
* தாய் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் குறைவு, மன அழுத்தம் வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்கும்.
* குழந்தகளின் பால் புட்டிகளை நிப்பிள்களை கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்து பால் நிரப்பிக் கொடுக்கவும். வாரம் ஒரு முறை நிப்பிளை மாற்றவும்
* மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக் கூடாது. கொட்டி விடவும்.
* குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டக் கூடாது.
* சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து மாற்றி விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
* சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும்.
* குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக் கொள்ளா வண்ணம் உயரமாக தாள்பாளை அமைக்கவும்.
* குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம்.
* கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
* குழந்தைக்கு எட்டாத இடத்தில்தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.
* கொசுவர்த்தி சுருள்கள் மூடிய அறைக்குள் மூச்சுத் திணறலை உண்டாக்கும். கொசு வலை தான் நல்லது. கொசுவிரட்டி மருந்துகள் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
* இரும்பு பீரோக்களைப் பற்றிப் பிடித்து குழந்தகள் ஏறும். அப்படியே பீரோ சரிந்து விழுந்து குழந்தையை நசுக்கி விடும். பீரோக்களை சுவருடன் அசையாமல் பிணைத்து வைக்கவும்.
* ஜிப் வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம். அல்லது உள்ளாடை அணிவித்த பிறகு அதுபோன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். (ஜிப்பை இழுக்கும்போது தோலோடு சிக்கிக் கொண்டுவிட்டால்?!)
* தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள் .குழந்தை உள்ளே விழ சான்ஸ் இருக்கிறது.
* சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள். இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டே கொதிக்கும் ரசத்தை ஒரு அம்மா இறக்கி வைத்திருக்கிறார். அப்போது குழந்தை சற்றே திமிர, ரசம் குழந்தையின் காலில்பட்டு, அங்கு தோல் வழன்றுவிட்டது.
* கதவை திறந்து குழந்தை சாலையில் சென்று விடாமல் இருக்க கதவு தாள்பாள் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.
* பெட் ரூமில் படுத்துக் கொண்டே சுவிட்ச் போட தாழ்வாக சுவிட்ச் போர்டுகளும் ப்ளக் பாயின்றுகளும் சில இடங்களில் இருக்கும். குழந்தைகள் பேனா அல்லது கம்பியை ப்ளக் பாயின்றுக்குள் செருகி மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகலாம். அத்தகைய இடங்களில் பாதுகாப்பான விஷேச ப்ளக் பாயின்றுகள் உபயோகிக்கலாம் அல்லது அத்தகைய மின் இணைப்பைத் தவிர்க்கலாம்.
* வீட்டில் உபயோகப்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கை படாத வகையில் இருக்க வேண்டும்.
* மிக்ஸி, கிரைண்டர் உபயோகம் முடிந்தால் சுவிட்சை அணைப்பதோடு ப்ளக்கையும் உருவிப் போடுவது நல்லது. சுவிட்ச் போட்டு விளையாடுவது குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.
* மொபைல் ,எலெக்ட்ரிக் ரேசர் போன்ற பொருட்களை குழந்தைகள் தண்ணீருக்குள் தூக்கிப் போட்டு விடலாம் அல்லது பிரித்து மேய்ந்து விடலாம் எனவே அதை விளையாடக் கொடுக்காதீர்கள்.
* இஸ்திரி செய்து விட்டு இஸ்திரி பெட்டியை சூடாக குழந்தைகள் அருகே விட்டு செல்லக் கூடாது.
* சுமார் ஒரு வயது வரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக் கையாளும் குழந்தை அதற்குப் பிறகு எதையாவது பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. ஸ்டூலைப் பிடித்துக் கொண்டு நிற்பது, டைனிங் டேபிளில் உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
* சுமார் இரண்டு வயதில் ஸ்டூலின்மீது ஏறுவது மட்டுமல்ல. பிற சாகசங்களையும் செய்து பார்க்க முயற்சிக்கிறது. மேஜை டிராயரை இழுக்க முயற்சிக்கிறது. நம்மைப் போலவே காஸ் லைட்டரை அழுத்திப் பார்க்க ஆசைப்படுகிறது. சிகரெட் லைட்டர், காஸ் லைட்டர் ஆகியவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்திருப்பது மிக அவசியம்.
* ஏணிப்படிகளில் ஏற குழந்தைகள் முயற்சிக்கும். சிறு குழந்தைகள் அவ்வாறு ஏறாமல் இருக்க மரத்தில் சின்ன தடுப்புக் கதவு ஒன்று போட்டு பூட்டி வைக்கலாம்.
* சென்ட், ஷேவிங் லோஷன் போன்றவற்றை அப்பா ஸ்ப்ரே செய்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக, ஷேவிங் ப்ளேடுகள் மற்றும் ரேஸர்களை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைத்து விடவேண்டாம்.
* வாயில் போட்டு விழுங்கும் அபாயமுள்ள விளையாட்டுப் பொருட்களை சிறு குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.
* கீழே விழுந்த அல்லது கீழே கிடக்கும் எதையும் வாயில் போடக்கூடாது என அறிவுறுத்துங்கள்.
* தரையில் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் உடனே அந்த ஈரத்தை துடைத்து விடவும். குழந்தை அதில் வழுக்கி விழ நேரும்
* சூடான எந்தப் பொருளையும் டைனிங் டேபிளின் முனைக்கருகே வைக்க வேண்டாம். அந்த மேஜைமீது விரிக்கப்படும் துணி, மேஜையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங்கவேண்டாம்.
* ஜன்னல்கள், பால்கனிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை உடனடியாகப் பொருத்துங்கள்.
* கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு சகஜம். கவனம் தேவை.
* எங்கேயாவது பைக்கில் போய் விட்டு வீட்டிற்கு வரும்போது பைக் சைலென்ஸர் சூடாக இருக்கும் . குழந்தைகள் அப்பா என்று ஓடி வந்து சைலன்ஸரில் பட்டுவிடலாம்..
* வீட்டில் சைக்கிள், பைக் போன்ற வாகனங்களில் குழந்தைகள் ஏற முயற்சித்து விழுந்து ஆபத்து உண்டாக்கலாம். சைக்கிளில் செயின் கார்டு தேவை. பைக்கை மூடி வைக்கலாம்.
* குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்டதூரம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.
* குழந்தைகளை ஷாப்பிங் போகும் போது கொண்டு செல்லதீர்கள்.
* தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குழந்தைகள் நெருப்புக் காயம் படாமல் கண்காணிப்பாக இருங்கள்.
* வீட்டில் அனாவசியமாக குப்பை போல் தேவையற்றப் பொருட்களை கொட்டி வைப்பது நல்லதல்ல. ஊர்வன மற்றும் விஷ ஜந்துக்கள் அதில் மறைந்திருக்கலாம்.
* குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.
* துரு பிடித்த மற்றும் கிருமித் தொற்று ஏற்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்தவும். டெட்டானஸ் போன்ற கொடிய கிருமிகள் அவற்றில் காணப்படலாம். அப்படிப் பட்ட பொருட்களால் காயம் பட்டால் உடனே தடுப்பூசி போடவும்.
* தரையை அடிக்கடி டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தமாக வைத்திருக்கவும்.
* குழந்தைகளது விளையாட்டுப் பொருட்களையும் அடிக்கடி கழுவி சுத்தமாக்கிக் கொடுக்கவும்.
* குழந்தகளுக்கு உடைகள்,ஷூ போடும்போது நன்றாக உதறிய பின் போடவும்.
* நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளை குழந்தைகள் உள்ள வீட்டில் வளர்க்கதீர்கள்.அதன் உமிழ் நீர்,நகம்,முடி ஆகியவற்றில் நோயுண்டாக்கும் ஏராளம் கிருமிகள் உள்ளன.
* வீடுகளில் தரைப்பகுதி அதிக ஏற்றத் தாழ்வுகள் இல்லாது சமமாக அமைக்க வேண்டும்.
* குழந்தைகளுக்கு நல்ல ஆடையிட்டு அழகு பாருங்கள். தங்க நகைகள் வேண்டாம். திருடர்களை ஈர்க்கும்.
* விருந்தினர் வீடுகளுக்குக் செல்லும்போது கவனம் தேவை. அங்கு பழக்கமில்லாத இடங்களில் புதிய ஆபத்துகள் காத்திருக்கலாம்.{niftybox}

திங்கள், 28 மே, 2012

எப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......

தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையும். ஆயுளில் 3 ஆண்டுகளை அதிகரிக்கும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், இதயத்துக்கு ஆரோக்கியமளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலனை காக்கும் 'செலினியம்' ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து.

உங்கள் உணவில் வாரத்தில் 2 முறை மீன் இருக்கட்டும். இரண்டில் ஒன்று எண்ணெய் மீனாக இருந்தால் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 'ஒமேகா 3 பேட்டி ஆசிட்', எண்ணை செறிந்த மீன்களில் அதிகம் உள்ளது.

சாப்பாடுகளுக்கு இடையே 3 மணிநேர இடைவெளி அவசியம். மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள்.

தினசரி 4 கப் காபி பருகலாம். ஆரோக்கியம் காக்கிறேன் பேர்வழியென்று காபியையே துறக்க வேண்டாம். அளவாக காப்பி பருகுவது என்பது சர்க்கரை நோய், உணவுக்குழாய் கேன்சர், ஈரல் நோயிகளைத் தடுக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

தினந்தோறும் 5 வகை பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிடும். பழங்கள், காய்கறிகளில் உள்ள 'ஆண்டி ஆக்ஸிடன்ட்கள்' கேன்சர், இருதய நோயிகளைத் தடுக்கும், நோயித் தொற்றுக்கு எதிராக இருக்கும். முன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் காய்கறி, பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகள் அதிகமான நார்ச்சத்தையும், குறைவான சர்க்கரை சத்தையும் கொண்டுள்ளன.

வயதுக்கு வந்தவர்கள் தினமும் 6 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்க வேண்டாம். சமையல் செய்யும்போது மட்டும் உப்பு சேர்க்கவேண்டும். பிரெட், பாக்கிங் உணவு வகைகளில் அதிக உப்பு மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.

மொத்தம் 7 வகையான நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான 'ஆண்டி ஆக்ஸ்டன்ட்களை' கொண்டிருக்கிறன. எனவே எல்லா வண்ண காய்கறி, பழங்களும் உங்கள் உணவில் இருக்கட்டும்.
 

தினமும் 8 கப் திரவம் குடிப்பது அவசியம். ஆனால் அது எல்லாம் தண்ணீராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டீ, காபியும் இதில் இடம்பெறலாம்.

சராசரியாக பெண்கள் 9 வகை மாவுசத்து உணவுகளை (ஆண்களுக்கு 11 வகை) சாப்பிடவேண்டும். ஒரு துண்டு ரொட்டி, முட்டை அளவு உருளைக் கிழங்கு, 28 கிராம் சாதம் போன்றவை இதில் அடங்கியிருக்கலாம்.

சாதரணமாக குளிபானங்களில் 10 சதவீத சர்க்கரை உள்ளது. அதாவது ஒரு புட்டியில் 150 கலோரி இருக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் பருகுவது தொப்பைக்கு ஒரு முக்கிய காரணம். 'டயட் ' குளிர்பானங்களுக்கு மாறலாம். ஜூஸுடன் அதிக தண்ணீர் சேர்த்துப் பருகலாம்.

காலை உணவும், மதிய உணவும் 11 மணியை தாண்ட வேண்டாம். அதிகப் பசியின் போது நீங்கள் அதிகமாக சாப்பிடுவீர்கள்.
பொதுவாக பெண்கள் உணவில் 12 மில்லி கிராம் இரும்புச் சத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இரும்புச்சத்து செறிந்த உணவுகளை உங்கள் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ளுங்கள்.

சாதாரணமாக நாம் நம் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 26 கலோரி உணவு சாப்பிடலாம்.

பனை அல்லது தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் சுத்தமான பதநீர், கள் போன்றவற்றை தினமும் ஒரு கோப்பை அருந்தலாம்.
 
நீங்கள் ஒருமுறை உணவை விழுங்கும்போது 15 முறை மெல்ல வேண்டும். நாம் சராசரியாக 7 முறைதான் உணவை மேல்கிறோம்.
அங்களுக்கு தினசரி 16 சதவீதபுரதம் அவசியம். அதாவது 55 கிராம். பெண்களுக்கு என்றால் 45 கிராம்.

நாம் அனைத்து விதமான சத்துக்களையும் பெற, ஒவ்வொரு 3 நாட்களுக்கும் 17 வகையான உணவு வகைகளை உண்ண வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

அனைவருக்கும் தினசரி 18 கிராம் நார்சத்து தேவை. அதற்கு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகிறவை நல்ல ஆதாரங்கள்.
மொத்தம் 19 வகையான தாது உப்புகள், வைட்டமின்கள் அனைவருக்கும் அவசியத் தேவை என்பது மருத்துவர்களின் கருத்து.
உங்கள் தினசரி உணவில், கொழுப்பு 20 கிராம்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. உங்கள் தினசரி கலோரிகளில் 35 சதவீதத்துக்குள் தான் கொழுப்பின் பங்கு இருக்க வேண்டும்.

பால் சார்ந்த உணவு வகைகளில் 21, ஒவ்வொரு வாரமும் உங்கள் உணவுப் பட்டியலில் இருப்பது கட்டாயம். தினசரி மூன்று வகையான பால்சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.


நன்றி :மின்னஞ்சல்

ஞாயிறு, 27 மே, 2012

வாய்ப்புண் (Mouth Ulcer)

வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதிஅவதிதான். தெரியாதவர்கள் இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே!என்றால் வாய்ப்புண் உனக்கு வந்தா தெரியும்!என்பர். பாதிப்படைந்த சிறிய பகுதி என்றாலும் அந்த அளவிற்கு முகத்தை வாட வைக்கும் இந்த வாய்ப்புண் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மட்டுமின்றி, பாதிப்படைந்தவர்களுக்கும் உதவிடலாமே? இது, சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்காக சகோ. அபூஸாலிஹா ஆக்கியளித்த மருத்துவக் கட்டுரை.
வாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன?
வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் சுர்ர்என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.
யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்?
வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.
வாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்?
1.   மருந்துகள்: ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வேறொரு நோய்க்காக உட்கொண்டு வரும் மருந்துகள், ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்படக் காரணமாக அமைகின்றன. நீங்கள் உட்கொண்டு வரும் ஏதேனும் ஒரு மருந்து இத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறதா? எனப் பரிசோதியுங்கள்.
2.   பரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.
3.   ஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம்.
4.   உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன.
5.   காயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.
6.   பாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.
7.   இயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.
8.   உணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.
9.   பற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.
10.  மாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.

தடுக்க வழியுண்டா?
அறவே ஒழிக்க முடியாவிட்டாலும் கீழ்க்கண்டவற்றைக் கடைபிடித்து வருவதன் மூலம் வாய்ப்புண்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம்:
- நல்ல உணவுப் பழக்க வழக்கம்
- தினசரி மிதமான உடற்பயிற்சி
- மன அழுத்தத்தைக் குறைப்பது
- தேவையான அளவு தூங்கி ஓய்வெடுப்பது
இத்துடன், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்கவல்ல ஆண்ட்டி பாக்டீரியா (மவுத்வாஷ்) கொண்டு வாயைக் கொப்பளித்தல், வாயை இயன்றவரையில் சுத்தமாக வைத்திருத்தல், தினமும் காலையிலும் இரவில் உறங்குவதற்கு முன்னும் மருத்துவர் பரிந்துரைக்கும் முறையில் பல் துலக்குதல் போன்றவை வாய்ப்புண் அண்டாமல் தடுக்கும்.
வாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் ஏதாவது?
வாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.
1.   தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.
2.   வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.
3.   தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும்.
4.   மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.
5.   மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.
6.   மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.
கவனத்தில் கொள்ள வேண்டியது:
வாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். வேறொரு செயல் மூலம் ஏற்படுவதாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில் வாய்ப்புண் குணமாகி விட வேண்டும். அதுவல்லாமல் வாய்ப்புண் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
- அபூ ஸாலிஹா

சனி, 26 மே, 2012

பெருகி வரும் 'மினரல் வாட்டர்' கலாச்சாரம்!


''பனை மரம் செத்த காலம் பஞ்சப் பேயி வந்த காலம் டோய் - கிராமப் புறங்களில் பேச்சுவாக்கில் இவ்வாறு சொல்லிக் கொள்வார்கள். வேடிக்கையாகச் சொல்லும் இந்த வார்த்தை இன்றைக்கு நிஜமாகி இருக்கிறது. பருவமழை பொய்த்துப் போய் எங்கும் வறட்சி. தென் மாவட்டக் கிராமங்கள் குடிக்கக்கூட தண்­ரின்றி கிராமம் கிராமமாக காலியாகி வருகின்றன. வெறுமை சூழ்ந்து பூட்டிக் கிடக்கும் வீடுகளே இன்றைக்கு பெரும்பான்மையான கிராமங்கள். 

கிராமங்களில் நிலைமை இப்படியிருக்க நகர்ப்புறங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு பயங்கரப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. காசு கொடுத்தும் தண்­ர் கிடைக்காத அளவிற்கு மாநகர்களில் இன்றைக்கு ''குடிநீர்ப் பஞ்சம்.'' விளைவு - நகரத்துக் கடைகள் தோறும் கடையின் முகப்பை மறைத்தபடி தொங்குகின்றன. பன்னாட்டுக் கம்பெனிகளின் ''வாட்டர் பாட்டில்கள்.'' தவிச்ச வாய்க்கு தண்­ர் கொடுத்து விருந்தோம்பிய விவசாயிகள் இன்றைக்கு ''வாட்டர் பாக்கெட்'' விற்கும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
 

மக்கள் படும் இப்பாடு போதாதென்று பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு குடிநீரை ''கண்டபடி எடுத்துக் கொள்ளும் உரிமையை'' தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது தமிழக அரசு. இருக்கிற ''தண்­ர்ப்பஞ்சம்'' போதாதென்று பன்னாட்டு கம்பெனிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து செயற்கையான முறையில் ''குடிநீர்ப் பஞ்சத்தையும் உருவாக்கி விட்டார்கள். ''முதலாளித்துவம் எதனையும் காசாக்கும் கூர்மையான அறிவு படைத்ததாகும்'' என்று அறிஞர் மார்க்ஸ் கூறியது போல இன்று அது குடிநீர்ப் பஞ்சத்தையும் காசாக்கி வருகிறது ''மினரல் வாட்டர்'' எனும் பெயரில்.
 

பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் இந்தியாவில் ''மினரல் வாட்டர்'' என்ற பெயருடன் 1967 ஆம் ஆண்டு தான் கொண்டு வரப்பட்டது. பெல்ஸ் பிஸ்லரி (Bisleri) எனும் இத்தாலியப் பெரு முதலாளி முதன் முதலில் இந்தியாவில் இதனை அறிமுகப்படுத்தினார். வளர்ந்த நாடுகளில் இயற்கையாகக் கிடைக்கும் தாதுப் பொருட்களுடன் தண்­ரைச் சேர்த்து சுத்திகரிப்பு செய்து, மினரல் வாட்டர் என ''உல்டா'' செய்தும் ''உடல் நலத்திற்கு மிகவும் நல்லது'' என்று பசப்பு வார்த்தை கூறியும் விற்பனை செய்தார்கள். அதே உல்டாவை இந்தியாவில் செயல்படுத்த நினைத்த முயற்சி எடுபடவில்லை. உல்டாவை தொடர்ந்து செய்தார்கள். வெற்றியும் பெற்றார்கள். 1993 -ஆம் ஆண்டு கோ கோ கோலா கம்பெனி குடிநீர் விற்பனையில் ஆணித்தரமாக காலூன்றியது.
 

1998 - ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் குடிநீர் சம்பந்தமாகத் தொடுக்கப்பட்ட பொது நலன் வழக்கில் ''சாதாரண குடிநீர் பாட்டில்களில் மினரல் வாட்டர் என்று போடக்கூடாது'' என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. பன்னாட்டுக் கம்பெனிகள் எல்லாம் ஒன்று கூடி ''பாதுகாப்பான் குடிநீர்'' என்ற பெயரை மாற்றி, மக்களை ஏமாற்ற ஆரம்பித்தனர். இது தான் இந்திய பாட்டில் குடிநீர் வரலாறு.
 

''மினரல் வாட்டர்'' என்ற ஒரு பெயர் மயக்கத்தை மக்கள் மத்தியில் விளம்பரம் மற்றும் வியாபார யுக்திகளின் மூலமாக ஏற்படச் செய்து. பன்னாட்டு மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளின் கம்பெனிகள் விற்பனை செய்வதெல்லாம் சுத்திகரிக்கப்பட்ட சாதாரண குடிநீரே. பாட்டிலில் உள்ள லேபிளை சற்று உற்று நோக்கினால் எங்குமே ''மினரல் வாட்டர்'' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். அப்படிப் போடுவது சட்டப்படி குற்றம். எனவே இவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் என்ன தெரியுமா? Pure Water/ Purified Drinking Water/ Packed Drinking Water/ Protected Water/ Bottled Water என்ற வார்த்தைகளைத்தாள். ஆனால் நாமோ ''மினரல் வாட்டர்'' என்று கூறிக் கொண்டு ''எனர்ஜி டானிக்'' குடிப்பது போல் குடித்து மகிழ்கிறோம்[!] இந்த வாட்டர் வகைகளுக்கெல்லாம் சொந்தக்காரர்கள் பெப்சி (Aquafina), கோகோகோலா(KinleY). பிரிட்டானியா(Evian), கோத்தாரி(Yes, ganga), கோத்ரேஜ் (Aquapure), நெஸ்லே மெக்டவல், சாபோல்ஸ் (Sabols) போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள்தான்.
 

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கையில் சூட்கேஸைப் பிடித்துக்கொண்டு, மறுகையில் வாட்டர் பாட்டிலை ஏந்திக் கொண்ட செல்வோரை ''சமுதாயத்தில் அந்தஸ்து பெற்றவர்'' என்று மிரட்சியுடன் பார்த்த காலம் இருந்தது. வாட்டர் பாட்டிலை வெளிப்படையாக எடுத்துக் செல்வது ஒரு சமூக அந்தஸ்தாகவும் கருதப்பட்டது. ஆனால் இன்று அதுவே ஒரு அத்தியாவசியப் பொருளாக மாற்றப்பட்டுவிட்டது. கலர்பான கம்பெனிகளுக்கும், குடிநீர் விற்பனை கம்பெனிகளுக்கும் ஒரு கடுமையான வியாபாரப் போட்டியே கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
 

இந்தியாவில் 1994-ஆம் ஆண்டு தான் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை பரவலாக்கப்பட்டது. 1998-99 இல் 80%, 2000 இல் 150%, 2001 இல் 400%, 2003 இல் 600% என்ற வளர்ச்சி வேகத்தில் குடிநீர் வணிகம் நடந்து வருகிறது. 2001 ஆம் ஆண்டில் இந்தியாவில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை ரூ.800/- கோடிக்கு விற்பனை செய்தார்கள். 2004-ஆம் ஆண்டில் ரூ.5200/- கோடிக்கு இந்தியாவில் குடிநீரை விற்பனை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள்.
 

தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குடிநீர் விற்பனை அதிகமாகப் பெருகியுள்ளது. தமிழகத்தில் ரூ.750/- கோடிக்கு குடிநீர் விற்பனையை இலக்கு வைத்து வியாபாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். அதிலும் சென்னையில் 2002-ல் ரூ.200 கோடிக்கு இருந்த குடிநீர் சந்தையை 2003-ல் ரூ.300/- கோடிக்கு உயர்த்தியுள்ளார்கள். 2004-ல் ரூ.500/- கோடிக்கு குடிநீர் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். ஆனால் கேரளாவிலோ 20% க்கு மேலாக குடிநீர் விற்பனையைப் பெருக்க முடியவில்லை. அங்குள்ள தென்னை மரம் வளர்ப்போர் சங்கமும், மரமேறுவோர் சங்கமும் இணைந்து பன்னாட்டுக் கம்பெனிகளின் முயற்சியை முறியடித்தனர். தண்­ரை விற்றால் இளநீர் வியாபாரம் பாதிக்கப்பட்டு ரத்தக் கண்­ர் சிந்த வேண்டிய அபாய நிலை வருமென்று முன்கூட்டியே உணர்ந்து போராடி குடிநீர் வியாபாரத்தை முடக்கிவிட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டில் போராடிய மக்களையெல்லாம் இங்குள்ள கட்சிகள் (ஒன்றிரண்டு கட்சிகளைத் தவிர) வேடிக்கை பார்த்தன.
 

சமீபத்திய விளம்பரம் ஒன்றில் ஒரு சொகுசு காரின் ரேடியேட்டரில் பாட்டில் குடிநீரை ஊற்றுவது போல் காட்டி ''Drink and Drive'' என்ற வாசகத்தையும் காட்டுகிறார்கள். அதாவது ''மனிதர்கள் மட்டுமல்ல.. இயந்திரங்களும் குடிநீரையே உட்கொள்ளும்'' என்று. ஆகா! பலேபலே! ஆனால் நம்மவர்கள் தான் பாவம். வாட்டர் பாட்டில் வாங்கி ''ரேடியேட்டரில்'' ஊத்திக் தொலைக்கிறார்கள் [!]
 

இத்தகைய பெரும் வணிகச் சுரண்டலை நடத்தும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனத்தினர் ''மினரல் வாட்டர்'' வாங்கச் சொல்வதன் காரணம் என்ன தெரியுமா? ''நகராட்சி குழாய்களில் வரும் தண்­ர் சுத்தமானதாக இல்லை. குடிநீர் வடிகட்டி சாதனம் சரியாக வேலை செய்வதில்லை. எனவே வெளிநாட்டு நவீன முறைப்படி வடிகட்டப்பட்ட சுத்தமான தண்­ரை வாங்கி அருந்துங்கள்'' என்பதே. அப்படியானால் இவர்கள் விற்பனை செய்யும் ''பாட்டில் குடிநீர்'' உண்மையிலேயே தரமானதா? அதுதான் இல்லை.
 

சமீபத்தில் விஞ்ஞான மற்றும் சுற்றப்புறச் சுழல் மையம் (Centre for Science and Environment) என்ற அமைப்பு பாட்டில் குடிநீரை ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்தது. அதில் 21 நிறுவனங்களின் ''பாட்டில் குடிநீரில்'' விவசாயத்திற்குப் பயன்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் 32 வகையான நஞ்சுகள் கலந்திருப்பதால் அக்கம்பெனிகளின் பாட்டில் குடிநீர் விற்பனையை தடை செய்யக் கோரியது. வழக்கை விசாரித்து உச்ச நீதிமன்றமும் தடை விதித்தது. பிஸ்லரி, ந்துஸ்தான் கோகோ கோலா, சர்டிமில்க் புட், பெப்சி, கோ, கோத்தாரி, வைபவா, சர்துல் மினரல், வைஷாலி மினரல் என தடைசெய்யப்பட்ட கம்பெனிகள் எல்லாம் தங்களை ''மினரல் வாட்டர்" என்று கூறிக்கொண்டவைகள். இவர்கள் பாஷையில் 32 வகையான நஞ்சைக் கலப்பது தான் ''மினரலோ'' ! [?] இருக்கலாம்.
 

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ஏதோ பெட்ரோல், டீசல் நிலையம் திறப்பதைப் போல ''குடிநீர் நிரப்பும் நிலையம்'' திறக்கப்பட்டுள்ளது. சாயி எண்டர் பிரைசஸ் கம்பெனியிலிருந்து 300 மி.லி. ரூ.1 (பிளாஸ்டிக் பையுடன் ரூ.2க்கும்) 1 லிட்டர் ரூ.2 (பிளாஸ்டிக் பாட்டிலுடன் ரூ.6க்கும்), 5 லிட்டர் ரூ.10 (பிளாஸ்டிக் கேனுடன் ரூ.25க்கும்) விற்பனை செய்யப்படுகிறது. இங்கே ஒரு வியாபார மோசடியையும் நாம் கவனிக்க வேண்டும். விளம்பரம், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் எதுவுமின்றி நேரிடையாக பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் ஒரு லிட்டர் ரூ.6 என விற்கப்படுகிறது. அதே குடிநீரை மற்ற கம்பெனிகள் வெளியில் விற்றால் 1லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.12. ஆனால் ரயில் நிலையத்திற்குள் விற்றால் ரூ10. ஒரு லிட்டர் குடிநீருக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.4 கூடுதலாகவும், வெளியே ரூ.6 கூடுதலாகவும் என ''ரேட் பிக்சிங்'' செய்து கொண்டு பொது மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள்.
 

''ஆசியாக் கண்டத்திலேயே சிறந்த குடிநீர்'' என்று கூறப்படும் கோவை சிறுவாணி குடிநீரைக்கூட ஒரு லிட்டர் ஒரு காசு என தமிழ்நாடு குடிநீர் வாரியம் விற்பதில்லை. ஆனால் நயா பைசா பெறாத குடிநீரை ஒரு லிட்டர் ரூ.12/- க்கு தனியார் கம்பெனிகள் IS:14543 தர முத்திரை என்ற பெயரில் விற்பனை செய்வதை மத்திய மாநில அரசுகள் தடுக்க வேண்டாமா? ''ஊழலற்ற நேர்மையான அரசு'' என கூறிக்கொள்ளும் தமிழக அரசு இதில் ஏன் தயக்கம் காட்டுகின்றது?
 

சென்னையில் TEAM என்ற நிறுவனம் குடிநீரை ''மூலிகை நீர்'' (Herbal Water) என்று பெயரிட்டு ''சருமத்திற்குப் பாதுகாப்பு'' என்று கூறி 20 லிட்டர் கேனை ரூ.100/- க்கு விற்பனை செய்கிறது. இதே போன்று தமிழகமெங்கும் ஆங்காங்கே போலிப் பெயர்களுடன் வாட்டர் பாட்டில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் அனைத்தும் தரச்சான்றிதழ் பெற்றவையா? என்பதில் குழப்பமே மிஞ்சுகிறது. தவிச்ச தாகத்திற்கு வாட்டர் பாக்கெட் வாங்கி அவசரத்தில் குடித்து விடுகிறோம். எந்த தேதியில் ''பேக்கிங்'' செய்யப்பட்டது? எந்த முறையில் சுத்தம் செய்யப்பட்டது? என்பது போன்ற எந்தத் தகவலும் இல்லாமல் இவைகள் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. தமிழகமெங்கும் ஆங்காங்கே முளைத்திருக்கும் இது போன்ற பல்வேறு ''குடிநீர் விற்பனைக்'' கம்பெனிகளை அரசு கண்காணிக்கிறதா [!?] என்பதே தெரியவில்லை. இவைகள் தத்தமது போக்கில் வியாபாரங்களை நிகழ்த்தி வருகின்றன.
 

குடிநீர் பரிசோதனை செய்வதற்கு தமிழ்நாட்டில் கிண்டி தண்­ர் பரிசோதனை நிலையம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய ஆய்வுக்கூடம் ஆகியவை மட்டுமே சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக உள்ளது. 1971- ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பல இடங்கயில் குடிநீர் ஆய்வுக் கூடங்களை நடத்தி வருகிறது. அவைகள் அனைத்தும் தற்போது சட்டரீதியாக செல்லத்தக்கதல்ல. எனவே அவைகளுக்கு 1974-ஆம் ஆண்டு தண்­ர்ச் சட்டத்தின் அடிப்படையில் உரிய சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய பிரிவு 12, 13 இன்படி ஆவன செய்ய வேண்டும். அதுவரை குடிநீர் வாரிய ஆய்வுக் கூடங்களின் பரிசோதனை முடிவை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு மத்திய ஆய்வுக் கூடத்தின் கீழ் சட்ட ரீதியாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால் இன்றைக்கு IS:14543 இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தரம் என்ன? என்பதை தெளிவு படுத்த அரசுகளோ தனியார் நிறுவனங்களோ விளம்பரம் செய்யவில்லை. நாமும் நாள் பட்ட ''பாட்டில் குடிநீரை'' க் குடித்து விட்டு காய்ச்சல், தலைவலி, வயிற்றப்போக்கு, மஞ்சள் காமாலை காலரா மற்றும் žதபேதியில் சிக்கி žரழிந்து கொண்டிருக்கிறோம்.
 

தரமான குடிநீர் தேவையான அளவு பொதுமக்களுக்கும், உடலுழைப்புத் தொழிலாளர்களும் கிடைக்காத காரணத்தினால் பெரும்பாலானோர் அன்றாடம் உடலிற்குத் தேவைப்படும் குடிநீர்கூட உட்கொள்ளாமல் இருக்கின்றனர். வசதி படைத்தவர்கள் காசுக்கு குடிநீர் வாங்கிக் குடித்து விடுகின்றனர். சாதாரண மக்கள்....? இதனால் சாதாரண, நடுத்தரத்தட்டு மக்களிடம் குடிநீர் உட்கொள்ளும் பழக்கமே மனரீதியாக குறைந்து வருகிறது. எனவே பல்வேறு வகையான உடலியல் ரீதியான நோய்களுக்கு ஆட்பட வேண்டிய ஆபத்தும் தொடங்கிவிட்டது. இதை தடுக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழியாக குறைந்த விலைகளில் பாட்டில் குடிநீர் தயார் செய்து விற்பனை செய்யலாம். இதனால் இப்பிரச்சினையை ஓரளவு சரிக்கட்ட இயலும். ஆனால் இது குறித்து யார் கவலைப்படப் போகிறார்கள்....? யானைகளுக்கு இன்பச் சுற்றுலா கொடுத்த அரசு மக்களின் துன்பம் பற்றி செவிசாய்க்குமா?
 

வீட்டுக்கு வந்த உறவினர்களை மோரும் பழரசமும் தந்து உபசரித்த தமிழர்கள் இன்று. நள்ளிரவில் உறங்கக்கூட முடியாமல் தண்­ருக்காக அலைகிறார்கள். குழாயடிகளில் திடீர்ச் சண்டைகள், வெட்டு, குத்து. ''தண்ணிக்குப் போயி சண்டையா''....? என்று ''பெரிசுகள்'' அதிர்ந்து போகிறது. தமிழக அரசு இனியாவது பன்னாட்டுக் கம்பெனிகள் பாதாளம் வரை ''போர்'' போட்டு குடிநீரைக் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
 

நன்றி: புதியகாற்று

வெள்ளி, 25 மே, 2012

சுகப்பிரசவம் ஏற்படுத்தும் மூச்சுப்பயிற்சி!


கர்ப்பிணிகள் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறக்கும் முன்னர் மூச்சுப் பயிற்சி செய்வதால் சுகப்பிரசவம் ஏற்படுவது எளிதாகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரசவ வலி என்பது, ஏதோ வலி எடுத்தது... உடனே குழந்தை பிறந்தது என்பது போன்ற சாதாரண விஷயமில்லை... தாய்க்கு அதீத வலி இருந்தாலும் பத்து மாதங்களாக தன்னுள் வளர்த்த ஒரு உயிரை உலகிற்கு அறிமுகப்படுத்தும் சந்தோச தருணம்.

பிரசவத்தின் போது லேசான வலியில் தொடங்கி, அது மெதுமெதுவாய் அதிகரித்து, கடைசியாக சஸ்பென்ஸை உடைப்பதுபோல கருவில் இருந்து குழந்தை ரிலீஸ் ஆகும். சில மணி நேர அவஸ்தைக்குப் பிறகுதான் குழந்தை வெளிவரும். வெளி வரவேண்டும். இந்த வலி மெதுமெதுவாய் அதிகரிக்கவும் ஒரு குறிப்பிட்ட வரைமுறை இருக்கிறது. முதல் பிரசவத்துக்கு ஒரு வகையாகவும் அதன்பிறகு வரும் பிரசவங்களுக்கு வேறு விதமாகவும் இது அமையும்.

பிரசவ அறிகுறிகள்

பிரசவ வலி எடுக்கும்போது கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி, அதாவது சர்விக்ஸின் நீளம் வழக்கத்தை விடவும் குறையத் தொடங்கும். இப்படி அதன் நீளம் குறையும்போதே அது மெதுவாகத் திறக்கவும் தொடங்கும். சர்விக்ஸின் இந்த இரண்டு செயல்பாடுகளுமே உண்மையான பிரசவ வலி ஏற்பட்டால் மட்டுமே ஒரே சமயத்தில் நிகழும் என்கின்றனர் மருத்துவர்கள்.

முதுகின் கீழ் பகுதியில் வலி ஏற்படும். பெரும்பாலும் அது வலி மிகுந்த தசை இறுக்கமாகவே இருக்கும். பிறப்புறுப்பில் இருந்து ரத்தத்துடன் கூடிய திரவம் வெளிப்படும். இந்த அறிகுறிகள் பிரசவ காலத்தை உறுதிப்படுத்துகின்றன. எனவே வலி மிகுந்த அந்த நேரத்தில் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மனதை ஒருநிலைப்படுத்துங்கள்

மூச்சுப் பயிற்சியின் போது பிரச்சினைக்குரிய எதைப்பற்றியும் நினைக்காமல் உங்கள் மனதை ஒரு நிலை படுத்த வேண்டும்... ஒவ்வொரு முறை மூச்சை வெளி விடுவதில் மட்டும் நீங்கள் உங்கள் நினைப்பை ஒரு முக படுத்த வேண்டும்..மூச்சை உள்ளிழுத்தல் தானாக நடக்கும்.

மூச்சை உள்ளிருக்கும் போது அவரவருக்கு பிடித்தமானவற்றை நினைத்து மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம். ஏதாவது ஒரு பெயரை சொல்லியபடி, அல்லது உங்களுக்குப் பிடித்த கடவுளின் பெயரைச் சொல்லியபடி பயிற்சி எடுக்கலாம். உங்கள் நினைப்பை அலைபாய விடாமல், இந்த பயிற்சியை ஒரு சீரான ஓட்டத்தில் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

எண் கணக்கு

பெயரை நினைக்க யோசனையாக இருந்தால் எண் மூச்சு பயிற்சி மேற்கொள்ளலாம். மூச்சை மெதுவாக உள்ளிழுக்கும் பொழுது ஒன்றில் இருந்து உங்களுக்கு எத்தனை எண் மனதில் தோன்றுகிறதோ அதை எண்ணவேண்டும். அதே அளவு எண் கணக்கை நீங்க மூச்சினை வெளியில் விடும்போதும் எண்ணிக்கையில் வைத்து கொள்ளலாம். உதாரணத்துக்கு நீங்க மூச்சை உள்ளிழுக்கும் பொழுது மூன்று வரை எண்ணினால் மூச்சை வெளியில் விடும் பொழுதும் அதே மூன்று வரை மெதுவாக எண்ண வேண்டும்..

முடிந்தவரை மூக்கின் வழியாக மூச்சு உள்ளிழுக்கவும் வாய் வழியாக மூச்சை வெளி விடவும் முயற்சிக்க வேண்டும்.. அவ்வப்பொழுது தொண்டை காய்ந்து போகாமல் இருக்க சிறிது தண்ணீர் பருகவும். இந்த மூச்சு பயிற்சியை கர்ப்ப காலத்தில் இருந்தே செய்து பயிலுங்கள்...பிரசவ வலியின் பொழுது இந்த பயிற்சி மிகவும் உதவும். எளிதாய் சுகப் பிரசவம் நடக்கும்.

நன்றி: தேட்ஸ்தமிழ்.காம்

வியாழன், 24 மே, 2012

தகவலறியும் உரிமைச் சட்டம் - விரிவான விளக்கம்.


RIGHT TO INFORMATION என்னும் RTI அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய சுருக்கமான வரலாற்றுடன் இந்த விளக்கத்தைத் தொடங்கலாம்

முதன்முதலில் இந்த சட்டத்திற்கான வேரூன்றியது 1977 ஆம் ஆண்டில் தான். மொரார்ஜிதேசாயின் தலைமையில் காங்கிரஸ் அரசுக்கான எதிர்ப்பாக போட்டியிட்ட ஜனதாக் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளிப்படையான அரசு நிர்வாகம் என்னும் கருத்தை தேர்தலில் வைத்து வென்றது. அதன்படி வெற்றி பெற்ற பிறகு மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு உடனடியாக இரகசியப் பாதுகாப்புச் சட்டம், 1923என்னும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்து மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டி ஒரு குழு நியமித்தது.

ஆனால் அதை வெற்றிபெற வைக்க அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் விரும்பாத நிலையில் கிடப்பில் போடப்பட்டது.காரணம் எந்த தகவலையும் மக்களுக்கு அறிவித்தால் தமது ஊழல்கள் குட்டுகள் வெளிப்படும் என பயந்ததால்தான். மொரார்ஜி அரசும் கவிழ்ந்தது.

1989 ல் தனது தேர்தல் அறிக்கையில் தேசிய முன்னணி வெளிப்படையான அரசு நிர்வாகம்என்ற கருத்தை மையமாக வைத்து தேர்தலை சந்தித்தது. வெற்றி பெற்றவுடன் வி.பி.சிங் நாட்டு மக்களுக்கான முதல் செய்தியில் இரகசிய பாதுகாப்புச் சட்டம், 1923 ல் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும், தகவலறியும் உரிமை அனைவருக்குமானதாக ஆக்கப்படும் என்றும் முன்னறிவித்தார். ஆனால், அதிகார வர்க்கம் மிகச் சாதுர்யமாக அவருடைய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டது. வி.பி.சிங் அரசும் கவிழ்க்கப்பட்டது

2000 ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஜனதா கட்சி மற்றும் தேசிய முன்னணி ஆகியவற்றைப் போலவே வெளிப்படையான நிர்வாகம் என்பதை முன்வைத்து தேர்தலைச் சந்தித்து ஆட்சியைக் கைப்பற்றியது. தகவல் சுதந்திரச் சட்டம், 2000 யை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனால், மீண்டும் அதிகார வர்க்கம் ஆளும் கும்பலுடன் இணைந்து கொண்டு 2 ஆண்டுகள் அதை நடைமுறைக்குக் கொண்டுவராமல் தடுத்து வந்தன. எனவே அந்தச்சட்டம், இரண்டு ஆண்டுகள் கழித்துதான் 2002 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டது. 2003 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் நாள் ஜனாதிபதி அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். அந்தச் சட்;டம் பல ஓட்டைகளைக் கொண்டிருந்தது. சமூக அக்கறையுள்ளவர்கள் பலரும் தொடர்ந்து அதிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அதை திருத்த பல முயற்சிகள் எடுத்தனர்.

1. மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றத்துக்குத் தடை

2. தகவல் தர மறுக்கும் அதிகாரிகளுக்கும், தவறான தகவல் தருவோருக்கும் தண்டணை இல்லை.

3. மேல்முறையீட்டுக்கும் வழியில்லை.

இத்தகைய குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய வலியுறுத்தியவர்களில் மிக முக்கியமானவர்கள் அருணாராய், சங்கர்சிங் மற்றும் நிகில்தேவ் ஆகியோராவர். அவர்கள் தங்கள் நேரடி அனுபவத்தின் அடிப்படையில் அரசுக்கு பல பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர். இன்று நாம் பெற்றிருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, 15.06.2005 ல் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு, 20.06.2005 ல் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று 12.10.2005 ல் நடைமுறைக்கு வந்தது.
மக்களுக்கு இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட அதிகாரி 30 நாளில் அளிக்கவேண்டும். தவறினால், கெடு தேதியைக் கடந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 என அபராதம் செலுத்த வேண்டும். அது மட்டுமல்ல. பெற்ற தகவலில் திருப்தி இல்லை என்றால், மேல் முறையீடு செய்யலாம். இதற்காகத் தகவல் உரிமை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின் சில பணிகள் சரியாக இயங்கியதற்கு இரு சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

தில்லியில் வசிக்கும் குடிசைவாசிப் பெண் திரிவேணி. அவரது குடும்ப மாத ஊதியம் ரூ.500 தான். அவரது குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். ஏழைமக்களுக்கான ரேஷன் அட்டை திரிவேணிக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ ரூ.3 என்ற சலுகை விலையில் கடைகளில் வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டாக அவர் கடையில் வாங்கச் சென்றால், சரக்கு இல்லை என்றே பதில் வந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்களைக் கேட்டார். தன் பெயரில் உணவு விநியோகிக்கப்பட்டதா என்று கேட்டார்.

ஆவணங்களில் அவர் பெயரில் மாதந்தோறும் அரிசியும், கோதுமையும் விநியோகிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் கைநாட்டு வைக்கப்பட்டிருந்தது. இத்தனைக்கும் திரிவேணிக்கு எழுதவும் படிக்கவும் தெரியும்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் கடைக்காரரின் உரிமம் பொதுவாக ரத்து செய்யப்படும். இதை அறிந்த கடைக்காரர் அஞ்சினார். திரிவேணியைத் தேடிச் சென்று, தான் செய்த தவறை மறந்து மன்னிக்குமாறு கெஞ்சினார்.

இவ்வாறு போராடி வென்ற திரிவேணிக்கு அரிசியும் கோதுமையும் தற்போது தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இதைப் போன்றே உதய் என்பவரும் ஜெயித்துக் காட்டியுள்ளார்.

தில்லியில் வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் வசிக்கும் அவர் ஐ.ஐ.டி. எதிரில் உள்ள ஒரு சாலை பத்தே நாளில் அவசரகோலத்தில் போடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவ்வாறு குறுகிய காலத்தில் போடப்படும் சாலை எந்த தரத்தில் இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டார். தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உதவியை நாடினார்.

அது தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடக் கோரினார். அங்கு பயன்படுத்தப்பட்ட தார், மணல், கற்களின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அந்த சாலையை அமைத்த செயல் பொறியாளர் அவரிடம் வந்து, சாலை முழு அளவில் பழுதுபார்க்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பின் உதய் அந்த சாலையைப் பார்வையிட்டார். அவர் சுட்டிக் காட்டிய குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டன.

ஊழல், முறைகேடு இல்லாத உலகம் இருக்கும் என்று யாரும் கனவு காண இயலாதுதான். ஆனால், ஒவ்வொரு தனி நபரும் அநீதியை எதிர்த்துப் போராடும் ஆற்றலைப் பெற முடியும். அதைத் தகவல் அறியும் உரிமை சட்டம் நிரூபித்துள்ளது

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts