லேபிள்கள்

வெள்ளி, 29 மார்ச், 2019

பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் அதி உன்னத நன்மைகள்..!!!

பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் அதி உன்னத நன்மைகள்..!!!வீட்டில் பாயாசம், கேசரி போன்றவற்றை சமைக்கும் போது உங்கள் அம்மா கை நிறைய முந்திரி, பாதாம் சேர்ப்பதை பார்த்திருப்பீர்கள். இன்னும் சில வீடுகளில் உள்ள அம்மாக்கள் பாதாமை இரவில் படுக்கும் போதே ஊற வைத்து, மறுநாள் காலையில் சாப்பிட கொடுப்பார்கள். இதற்கு காரணம், பாதாம் சருமத்தின் அழகை அதிகரிக்க உதவுவதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கும்.

குறிப்பாக பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் அதிகம் நிறைந்துள்ளது.

இதய நோய்
பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய நோய் வருவதைத் தடுக்கலாம். ஏனெனில் இதில் இதயத்தை பாதுகாக்கும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி வாரத்திற்கு 5 நாட்கள் தொடர்ந்து பாதாம் சாப்பிட்டு வந்தால், 50% இதய நோய் வருவதைத் தடுக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொலஸ்ட்ரால்
பாதாமில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நல்ல அளவில் உள்ளது. அதிலும் தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைக்க உதவும்.

இரத்த அழுத்தம்
பாதாமில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இதனை ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

புற்றுநோய்
நார்ச்சத்து அதிகம் இருக்கும் பாதாமை சாப்பிட்டால், அது குடலியக்கத்தை சீராக வைத்து, குடல் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் ஈ, பைட்டோ கெமிக்கல் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் இருப்பதால், மார்பக புற்றுநோயை உண்டாக்கும், செல்கள் வளர்வதை தடுக்கும்.

சீரான இரத்த ஓட்டம்
மக்னீசியம், பாதாமில் அதிகம் இருப்பதால், இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக பாய உதவியாக இருக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கவும் செய்யும். இதனால் நன்கு சுறுசுறுப்புடன் வேலை செய்யலாம்.

வலுவான எலும்புகள் மற்றும் பற்கள்
பாதாமில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால், மூட்டு வலியை தடுத்து, எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும்.

எடை குறைய
பாதாமில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் கலோரியின் அளவை கட்டுப்படுத்தி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள புரோட்டீன், வயிற்றினை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும்.

நீரிழிவு
பாதாமில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றில் பாதாம் சாப்பிட்டால், உணவிற்கு பின் இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறைத்து, சீராக வைக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பித்தக்கற்கள்
பாதாமை தொடர்ந்து சாப்பிட்டால், 25% பித்தக்கற்கள் உருவாவது குறைந்துவிடும். ஆனால் ஏற்கனவே சிறுநீரகம் அல்லது பித்தப்பையில் பிரச்சனை உள்ளவர்கள், இந்த நட்ஸை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதற்கு இதில் உள்ள ஆக்சலேட் பண்புகள் தான் காரணம்.

எனர்ஜி
பாதாமில் உடலின் எனர்ஜியை அதிகரிக்கும் கனிமங்களான மாங்கனீசு, காப்பர் மற்றும் ரிபோஃப்ளேவின் உள்ளது.

ஆரோக்கியமான மூளை
ஆய்வு ஒன்றில், பாதாமில் ரிபோஃப்ளேவில் மற்றும் எல்-கார்னிடைன் இருப்பதால், அவை மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவியாக இருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுர்வேத மருத்துவத்திலும், தினமும் காலையில் நீரில் ஊற வைத்த 5 பாதாம் சாப்பிட்டு வந்தால், மூளையின் சக்தி அதிகரிக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

இரத்த சோகை
காப்பர், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் பாதாமில் அதிகம் நிறைந்துள்ளது. காப்பருடன், இந்த இரண்டு சத்துக்களும் நிறைந்திருப்பதால், அவை ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகையை குணமாக்கிவிடும்.

மலச்சிக்கல்
பாதாமில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால், அது செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடும்.

அழகான சருமம்
பாதாமில் நல்ல அளவில் மாய்ஸ்சுரைசிங் தன்மை இருப்பதால், அது வறட்சி, முப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கி, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

முடி பிரச்சனைகள்
முடிகளில் பிரச்சனை உள்ளவர்கள், பாதாம் எண்ணெயை தடவி வந்தால், சரிசெய்துவிடலாம். அதிலும் முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, இளநரை, மெல்லிய முடி போன்றவற்றை குணமாக்க உதவியாக இருக்கும்.
http://pettagum.blogspot.com/2018/05/blog-post_76.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 27 மார்ச், 2019

சுன்னத்தான தொழுகைகளும், அதன் எண்ணிக்கைகளும்


சுன்னத்தான தொழுகைகளும், அதன் எண்ணிக்கைகளும்

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்-
பர்ளான தொழுகை மொத்தமாக பதினேழு ரக்அத்துகள் உள்ளன என்பதும், சுப்ஹூ தொழுகையிலிருந்து இஷா தொழுகை வரை எத்தனை ரகஅத்துகள் தொழ வேண்டும் என்பதும் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
அதே நேரம் இரவிலும், பகலிலும் என்னென்ன சுன்னத்தான தொழுகைகள் தொழ வேண்டும் என்பதை இக்கட்டுரையின் மூலம் அறிந்து கொள்வோம்.
வீட்டில் தொழுதல்
பொதுவாக சுன்னத்தான தொழுகைகளை (ஆண்கள்) தனது வீட்டில் தொழுவது தான் மிகவும் சிறப்புக்குரியதாகும். நபி (ஸல்) அவர்கள் அதிகமான சந்தர்ப்பங்களில் சுன்னத்தான தொழுகைகளை வீட்டிலே தொழுவார்கள். ஒரு முறை நபியவர்களின் பின்னால் இரவு தொழுகையை ஸஹாபாக்கள் தொழுதார்கள். அவர்களுக்கு நபியவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.
மக்களே! நீங்கள் (இரவுத் தொழுகையை) உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில், ஒரு மனிதனின் தொழுகைகளில் சிறந்தது அவன் தன்னுடைய வீட்டில் தொழுவது தான்; கடமையான தொழுகையைத் தவிர' என்றார்கள்.(புகாரி-731,-6113,- 7290)
மேலும் " உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்! அவற்றை அடக்கஸ்தலங்களாக ஆக்கி விடாதீர்கள்! என அப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி 432,- 1187)
பாங்கு, இகாமத்திற்கு இடையில் தொழுகை
ஐந்து நேர பர்ளான தொழுகையின் முன், பின் சுன்னத்துகளை நபியவர்கள் நமக்கு நேரடியாகவே எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
அதே போல பொதுவான அமைப்பிலும் சில தொழுகைகளை சுட்டிக் காட்டியுள்ளார்கள். ஒவ்வொரு பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் விரும்பியவர்கள் இரண்டு ரக்அத்துகள் தொழலாம் என்பதை பின் வரும் ஹதீஸில் காணலாம். "இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒவ்வொரு பாங்கிற்கும், இகாமத்திற்கும், இடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம்.' என அப்துல்லாஹ் இப்னு முகப்பல்(ரலி) அறிவித்தார். (புகாரி 624)
பர்ளான தொழுகையின் முன், பின் சுன்னத்துகள் எத்தனை என்பதை ஒரே ஹதீஸில் நபியவர்கள் பின் வருமாறு நமக்கு விளங்கப் படுத்துவதை காணலாம்.
பன்னிரெண்டு ரக்அத்துகள்
" அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.
  இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம் 1319)
"அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது வந்த (ஃபர்ள் அல்லாத) கூடுதலான தொழுகைகளைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டில் லுஹரு(டைய ஃபர்ளு)க்கு முன் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பிறகு புறப்பட்டுச் சென்று மக்களுக்கு (ஃபர்ள்) தொழுவிப்பார்கள். பிறகு வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்; மக்களுக்கு மஃக்ரிப் (உடைய ஃபர்ள்) தொழுவித்துவிட்டு (வீட்டுக்கு) வந்து இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுவார்கள்;மக்களுக்கு இஷாத் தொழுவித்துவிட்டு எனது வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்; இரவில் ஒன்பது ரக்அத்கள் (நஃபில்) தொழுவார்கள். அவற்றில் வித்ர் தொழுகையும் அடங்கும்; இரவில் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள்;இரவில் நீண்ட நேரம் அமர்ந்தபடியும் தொழுவார்கள். நின்று ஓதித் தொழும்போது நிலையிலிருந்தே ருகூஉ மற்றும் சஜ்தாவுக்குச் செல்வார்கள். உட்கார்ந்து ஓதித் தொழும்போது உட்கார்ந்தபடியே ருகூஉ மற்றும் சஜ்தாச் செய்வார்கள்; ஃபஜ்ர் நேரம் வந்து விட்டால் (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். (முஸ்லிம் 1323)
மேற்ச் சென்ற ஹதீஸ்களில் பன்னிரெண்டு ரக்அத்துகள் தொழுதால் சுவனம் கிடைக்கும். அந்த பன்னிரெண்டு ரக்அத்துகள் எவை என்பதையும் ஹதீஸில் கண்டு கொண்டீர்கள். அதாவது சுப்ஹூடைய பர்ளுக்கு முன் இரண்டு (2) ரக்அத்துகளும், ளுஹருடைய பர்ளுக்கு முன் நான்கு (4) ரக்அத்துகளும், ளுஹருடைய பர்ளுக்குப் பின் இரண்டு (2) ரக்அத்துகளும், மஃரிபுடைய பர்ளுக்குப் பின் இரண்டு(2) ரக்அத்துகளும், இஷாவுடைய பர்ளுக்குப் பின் இரண்டு(2) ரக்அத்துகளாகும்.
பத்து ரக்அத்துகள்
மற்றொரு ஹதீஸில் ஒரு நாளைக்கு பத்து ரக்அத்கள் (சுன்னத்துகள்) தொழுதால் சுவனம் கிடைக்கும் என்பதையும் காணலாம்.
எனவே பத்து ரக்அத்துகள் என்றால் சுப்ஹூடை முன் சுன்னத் இரண்டு ரக்அத்துகளும்,ளுஹருடைய பர்ளுக்கு முன்னால் இரண்டு ரக்அத்துகளும், பின்னால் இரண்டு ரக்அத்துகளும், மஃரிபுடைய பின் சுன்னத் இரண்டு ரக்அத்துகளும், இஷாவுடைய பின் சுன்னத் இரண்டு ரக்அத்துகளாகும்.
ஒரு நாளைக்கு பன்னிரெண்டு ரக்அத்துகள் என்றால் ளுஹருக்கு முன் நான்கு(4) ரக்அத்துகளும், ஒரு நாளைக்கு பத்து ரக்அத்துகள் என்றால் ளுஹருக்கு முன் இரண்டு (2) ரக்அத்துகளாகும் என்ற சிறிய எண்ணிக்கை மாற்றத்தை விளங்கிக் கொள்ளுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் ளுஹருக்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழுததிற்கான ஆதாரத்தை பின் வரும் ஹதீஸில் காணலாம்.
"அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களும் பின் இரண்டு ரக்அத்களும் தொழுபவர்களாகவும் மஃரிபுக்குப் பிறகு தம் வீட்டில் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இஷாவுக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர். ஜும்ஆவுக்குப் பின் (வீட்டுக்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர். (புகாரி 937)
எனவே ஒரு நாளைக்கு பன்னிரெண்டு ரக்அத்துகள் என்றால் எண்ணிக்கைகள் எப்படி,அல்லது ஒரு நாளைக்கு பத்து ரக்அத்துகள் என்றால் எண்ணிக்கைகள் எப்படி என்பதை விளங்கிக் கொண்டீர்கள் அல்ஹம்து லில்லாஹ் !
மேலும் ளுஹருடைய பர்ளுக்குப் பின்னால் நான்கு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்ற ஹதீஸ் பலகீனமாகும். எனவே இரண்டு தொழுதால் போதுமானதாகும்.
அஸருக்கு முன் சுன்னத்கள்
அஸருக்கு முன் வலியுறுத்தப்பட்ட சுன்னத் தொழுகை கிடையாது. என்றாலும் பாங்கிற்கும், இகாமத்திற்கும் இடையில் இரண்டு ரக்அத்துகள் தொழுது கொள்ளலாம் என்ற பொது ஹதீஸின் அடிப்படையில் அஸருடைய பர்ளுக்கு முன்னால் இரண்டு ரக்அத்துகள் சுன்னத் தொழுது கொள்ளலாம்.
மஃரிபுடைய முன், பின் சுன்னத்கள்
மஃரிப் தொழுகைக்கு முன் வலியுறுத்தப்பட்ட சுன்னத் தொழுகை கிடையாது. என்றாலும் விரும்பியவர்கள் இரண்டு ரக்அத்துகள் தொழுது கொள்ளலாம் என்று நபியவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.
"அப்துல்லாஹ் அல் முஸ்னி(ரலி) அறிவித்தார்.
மஃரிபுக்கு முன் நீங்கள் தொழுங்கள். மஃரிபுக்கு முன் தொழுங்கள். மஃரிபுக்கு முன் விரும்புயவர்கள் தொழுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அதை ஒரு ஸுன்னத்தாகக் கருதக்கூடாது. என்பதற்காகவே இவ்வாறு குறிப்பிட்டார்கள். (புகாரி 1183)
மஃரிபுடைய பின் சுன்னத்தைப் பொருத்த வரை வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்.
இஷாவுடைய முன்,பின் சுன்னத்கள்
இஷாவுக்கு முன் வலியுறுத்தப்பட்ட சுன்னத் கிடையாது. என்றாலும் பாங்கிற்கும், இகாமத்திற்கும் இடையில் இரண்டு ரக்அத்துகள் தொழுது கொள்ளலாம் என்ற பொது ஹதீஸின் அடிப்படையில் இஷாவுடைய பர்ளுக்கு முன்னால் இரண்டு ரக்அத்துகள் சுன்னத் தொழுது கொள்ளலாம்.
அதே நேரம்" இஷாவுடைய பர்ளுக்குப் பின்னால் வலியுறுத்தப்பட்ட இரண்டு ரக்அத்துகள் சுன்னத் தொழுது கொள்ள வேண்டும். . அதை மேற்ச் சென்ற ஹதீஸிலே சுட்டிக் காட்டியுள்ளேன்.
ஜூம்மாவிற்கு முன், பின், சுன்னத்கள்
ஜூம்மாவுடைய பர்ளுக்கு முன்னால் வலியுறுத்தப்பட்ட சுன்னத் கிடையாது, என்றாலும் பள்ளியுடைய காணிக்கை (தஹ்யத்துல் மஸ்ஜித்) அல்லது நபில் என்றடிப்படையில் இரண்டு ரக்அத்துகள் தொழுது கொள்ள முடியும். என்றாலும் ஜூம்மாவுடைய பர்ளுக்கு பின் இரண்டு ரக்அத்துகளும் தொழலாம் அல்லது நான்கு ரக்அத்துகளும் தொழலாம். அது சம்பந்தமான ஹதீஸ்களை பின் வருமாறு கவனியுங்கள்.
ஜூம்மாவிற்கு பின் இரண்டு ரக்அத்துகள்
" நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ஜுமுஆ தொழுதுவிட்டு தமது இல்லத்திற்குச் சென்று, அங்கு இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்து வந்ததாகவும் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம் 1600)
மேலும் "நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது வந்த கூடுதலான தொழுகைகள் குறித்துக் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுத பின் (வீட்டுக்குத்) திரும்பிச் செல்லாத வரை தொழமாட்டார்கள். (வீட்டுக்குச் சென்றதும்) வீட்டில் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்" என்று குறிப்பிட்டார்கள். (புகாரி 1601)
ஜூம்மாவிற்கு பின் நான்கு ரக்அத்துகள்
" அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுத பின் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழட்டும்!
  இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1597)
மேலே ஐந்து நேர பர்ளுக்கு முன், பின் சுன்னத்துகளை எவ்வாறு தொழ வேண்டும் என்பதை படித்துக் கொண்டீர்கள்.
காணிக்கை தொழுகை….
பகல் நேரத்திலோ,அல்லது இரவு நேரத்திலோ ஒருவர் பள்ளிக்கு வரும் போது அவர் உட்காருவதற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தஹ்ய்யத்துல் மஸ்ஜித்(பள்ளி காணிக்கை) என்ற தொழுகையை தொழுது கொள்ள வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ் வழிக்காட்டுகிறது.
"உங்களில் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தால் இரண்டு ரக்அத்துகள் தொழாமல் (பள்ளியில்) உட்கார வேண்டாம் என்று நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூ கதாதா (ரலி), ஆதாரம் -முஸ்லிம்.
எனவே பர்ளான தொழுகைக்காக பள்ளிக்குச் சென்றாலும் சரி, அல்லது சில விசேட கூட்டங்களுக்காக பள்ளிக்கு சென்றாலும் சரி, அல்லது விசேட பயானுக்காக பள்ளிக்குள் சென்றாலும் சரி இந்த தொழுகையை தொழுது விட்டு தான் உட்கார வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
http://www.islamkalvi.com/?p=115628

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 25 மார்ச், 2019

லவங்கப்பட்டை - ஆஹா... அதிசயம்!

லவங்கப்பட்டை - ஆஹா... அதிசயம்!

 டாக்டர் வி.விக்ரம்குமார்
'மரம் உரித்துப் போட்ட பட்டைகள் அவை; நயமாகச் சுருண்டு உருண்டு காய்ந்த மரக்குச்சிகளைப்போல உருமாறியிருக்கும். ஆனால், அவற்றின் நறுமணம் அஞ்சறைப் பெட்டியை அலங்கரிக்கும். அது என்ன?' - இப்படியொரு வாசனைமிக்க விடுகதையைக் கேட்டால், நறுமணமூட்டிகளின் ரசிகர்களிடம் இருந்து 'லவங்கப்பட்டை' என்று பதில் வரும்.

சமையலில் மட்டுமன்றி வாசனைத் திரவியங்கள், மவுத் ஃப்ரெஷ்னர் எனப் பல்வேறு இடங்களில் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது லவங்கப்பட்டை. பெரும்பாலான பற்பசைகளில் சேர்க்கப்படும் சகிக்கமுடியாத உள்பொருள் களின் சுவையை மட்டுப்படுத்த லவங்கப்பட்டைச் சாறு சேர்க்கப்படுவது பற்பசைக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம். லவங்கப்பட்டையைப் புனிதமாகக் கருதி, கடவுளுக்குப் படைத்தனர் கிரேக்கர்கள். சாக்லேட் ரகங்களில் இந்தப் பட்டையைச் சேர்த்து நறுமணம் ஏற்படுத்துவது ஸ்பெயின் மக்களின் வாடிக்கை. நெதர்லாந்து திருவிழா உணவுகளில் ஒன்றான 'ஸ்பெகுலாஸ்' என்பதன் முக்கியப் பொருள் லவங்கப்பட்டை. மாதுளம் பழச்சாற்றை அடிப்படையாகக்கொண்டு செய்யப்படும் 'கோரெஸ்ட்' எனும் இரான் உணவிலும் பட்டை இடம்பெற்றுள்ளது.
பட்டையில்லாமல் பிரியாணியா? வாய்ப்பே இல்லை! பிரியாணியைத் தாங்கிப்பிடிப்பதே பட்டையின் பிரத்யேக மணம்தான். பிரியாணிக்குள் தனது சாரத்தை இறக்கி, செரிமானத்தைத் தூண்டும் இனிமையான வஸ்து லவங்கப்பட்டை. இதைப் பொடியாக்கினால் அதிலுள்ள நறுமண எண்ணெய் விரைவில் ஆவியாகிவிடும் என்பதால், பட்டைகளை அஞ்சறைப் பெட்டிக்குள் பாதுகாத்து வைப்பதே நல்லது.

ஐம்பது கிராம் வெண்ணெய், இரண்டு டீஸ்பூன் கருப்பட்டியுடன் ஒரு டீஸ்பூன் பொடித்த லவங்கப்பட்டையைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்றாகக் கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒல்லியான உடல்வாகு உள்ளவர்கள் இதை அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தால் விரைவில் சதை பிடிக்கும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த 50 கிராம் திரிபலா சூரணத்துடன் 15 கிராம் பட்டைத்தூள் சேர்த்து, பற்பொடியாகப் பயன்படுத்தலாம். இதே கலவையை வாய் கொப்பளிக்கும் நீராகவும் பயன்படுத்தலாம். இதனால் பற்களில் உண்டாகும் கூச்சம், வாய் நாற்றம் மறையும்.

ஏலக்காய், தோல் சீவிய சுக்கு, லவங்கப் பட்டை... மூன்றையும் ஒன்றாகப் பொடித்து, 500 மில்லி கிராம் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் செரியாமை, வயிற்றுப்பொருமல், கழிச்சல் குணமாகும். லவங்கப்பட்டை, சோம்பு, கிராம்பு, சுக்கு தலா ஐந்து கிராம் எடுத்துக்கொண்டு 500 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். 100 மில்லியாக வற்றியதும் அதைப் பருகினால் உடலில் தோன்றும் அரிப்பு, எரிச்சல் மறையும். ஒவ்வாமைப் பிரச்னையைப் போக்கும்.
 

சுவாசக் கோளாறுகளைக் குணமாக்குவதிலும் லவங்கப் பட்டையின் பங்கு அதிகம். சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கப்பட்டை - வகைக்கு ஐந்து கிராம் எடுத்து, சிறிது துளசி இலையும் கருப்பட்டியும் சேர்த்துக் குடிநீராகக் காய்ச்சிக்குடித்தால், மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் உடனடியாகக் குறையும். தொண்டையை அடிக்கடி செருமவைக்கும் வறட்டு இருமலுக்கு, அதிமதுரத்துடன் லவங்கப்பட்டை சேர்த்துப் பொடியாக்கி ஐந்து சிட்டிகை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.

'அல்ஸைமர்' நோயின் தீவிரத்தை லவங்கப் பட்டையின் உட்சாரங்கள் குறைப்பதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பட்டையில் உள்ள சின்னமால்டிஹைடு, யுஜெனால் போன்றவை அதன் மருத்துவக் குணம் மிக்க செயல்பாடுகளுக்குக் காரணமாகின்றன.

வெள்ளைச் சர்க்கரை சேர்த்த காபி, டீக்குப் பதிலாக லவங்கப்பட்டையை வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் பருகிவந்தால் ரத்தத்தில் உள்ள
  எல்.டி.எல் கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவு கணிசமாகக் குறையும். லவங்கப்பட்டையைத் திரவ வடிவில் எடுத்துக்கொள்ளும்போது, சர்க்கரை மற்றும் இதயநோய்களுக்கான வாய்ப்புகள் தடுக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

வயிற்றுப்புண்களைக் குணமாக்க லவங்கப் பட்டையைப் பயன்படுத்தலாம். பதற்றம் குறைக்கவும் நினைவுத்திறன்அதிகரிக்கவும் லவங்கப்பட்டையைச் சேர்க்கலாம். லவங்கப்பட்டையை முகர்ந்து பார்த்தாலே மனஅழுத்தம் குறையும். பூஞ்சைகள் மற்றும் சில வகையான வைரஸ்களை எதிர்த்துப் போரிடக்கூடியது என்பதால் லவங்கப்பட்டை சேர்ந்த உணவுப் பதார்த்தங்கள் அவ்வளவு எளிதாகக் கெட்டுப்போகாது. பயணங்களுக்கு முன்பு சிறிது லவங்கப்பட்டையை நீர்விட்டுக் கொதிக்க வைத்து அருந்தினால் நீண்டதூரப் பயணங்களின்போது ஏற்படும் சிறுநீர் எரிச்சல் குறையும். தாய்ப்பாலை அதிகரிக்கும் தன்மையும் பட்டைக்கு உண்டு. தலைபாரம் இருக்கும்போது, பட்டையை நீர்விட்டு அரைத்து நெற்றியில் பற்றுபோட்டால் விரைவில் பாரம் இறங்கும். லவங்கப்பட்டைகள் மற்றும் இலைகளிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. வலிநிவாரணியாக லவங்கப்பட்டை எண்ணெய், பல் மருத்துவத் தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிளகு, பட்டை, இஞ்சி கலந்த சுவைமிக்க தயிரை மதிய உணவுக்குப் பிறகு, தென்தமிழக மக்கள் சாப்பிட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

தேனுடன் லவங்கப்பட்டை, மிளகு, திப்பிலி மற்றும் சில நறுமணமூட்டிகளை ஒரு ஜாடியில் சேர்த்து சில நாள்கள் உரக்குழிக்குள் புதைத்து, சூரியஒளி விழும்படி தயாரிக்கும் பானம் முற்காலத்தில் புகழ் பெற்றதாக இருந்தது. பண்டிகை நாள்கள் மற்றும் விருந்தினர்களுக்கான பானமாகவும் இது இருந்திருக்கிறது. சுவையுடன் செரிமானத்தைத் தூண்டுவதற்காக இது பயன்பட்டுள்ளது. இந்தப் பானத்தில் சேரும் நறுமணமூட்டிகளுக்கு `சம்பரா' பொருள்கள் என்று பெயர்.

இலங்கையில் விளையும் லவங்கப் பட்டைக்கே தரத்திலும் குணத்திலும் மதிப்பு அதிகம். நீளமான பட்டையே முதல் தரமாகக் கருதப்படுகிறது. பட்டையை உரிக்கும்போது உதிர்ந்தவை, உடைந்தவை, சீவல்கள் எல்லாம் குறைந்த தரம். தரம் குறைந்த பட்டைகளை ஏற்றுமதி செய்வதில் மடகாஸ்கர் தீவு முன்னிலை வகிக்கிறது. லவங்கப்பட்டைகளுடன் பல்வேறு மரப்பட்டைச் சீவல்களைக் கலப்படம் செய்கின்றனர். முகர்ந்து பார்த்தால் அவற்றில் சிறிதும் வாசனை இருக்காது.

நமது ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, மென்மேலும் பட்டை தீட்டி வளப்படுத்தும் லவங்கப்பட்டையை அஞ்சறைப் பெட்டியின் அதிசயம் என்றால் மிகையல்ல!
http://pettagum.blogspot.com/2018/06/blog-post_7.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 23 மார்ச், 2019

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (101 -114)

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (101 -114)

101) சூரதுல் காரிஆ திடுக்கிடும் செய்தி
அத்தியாயம் 101
வசனங்கள் 11
மறுமையின் அவலங்கள் தொடர்பாக இந்த அத்தியாயம் பேசுகின்றது. பொதுவாக மக்காவில் இறங்கிய அத்தியாயங்கள் மறுமையை நினைவூட்டுவதை அவதானிக்கலாம். காரணம் மக்காவாசிகள் மறுமையை பொய்பித்துக் கொண்டிருந்தனர்.
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
அவன் தங்குமிடம் 'ஹாவியா' தான்.
இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.(101:3-11)
102) சூரதுத் தகாஸுர் -அதிகம் தேடுதல்
அத்தியாயம் 102
வசனங்கள் 8
நீங்கள் மண்ணறைகளை சந்திக்கும் வரை செல்வத்தை பெருக்கும் ஆசை உங்களை பராக்காக்கிவிட்டது என்று அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் மனிதனின் பேராசை தொடர்பாக சுட்டிக்காட்டுகின்றான். ஆனால் இதன் விளைவை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நரகத்தை பார்க்கும் போது உறுதியான அறிவாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இந்த உலகில் உங்களுக்கு வழங்கப்பட்ட அருட் கொடைகள் தொடர்பாக கேட்கப்படுவீர்கள் என்று இந்த அத்தியாயத்தை முடிக்கின்றான்.
நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். (102:6-8)
103) சூரதுல் அஸ்ர் காலம்
அத்தியாயம் 103
வசனங்கள் 3
காலத்தின் மீது சத்தியம் செய்து மனித குலமே நஷ்டத்தில் இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். இந்த மிகப் பெரும் நஷ்டத்தில் இருந்து எம்மை காத்துக் கொள்வதற்கான வழிகளையும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
காலத்தின் மீது சத்தியமாக.
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு
ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து,
சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து,
மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ
அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3)
104) சூரதுல் ஹுமஸா புறம்பேசுதல்
அத்தியாயம் 104
வசனங்கள் 9
உலக வாழ்க்கை தான் நிறந்தரமானது என நினைத்துக் கொண்டு, செல்வத்தை சேகரிப்பதிலும் சக மனிதனின் குறைகளை தேடுவதிலும் காலத்தை கலித்துக் கொண்டு இருக்கும் மக்களை பற்றி இந்த அத்தியாயம் பேசுகின்றது. நாளை மறுமையில் அப்படிப்பட்டவர்களுக்கு உள்ள கடுமையான வேதனையையும் இறைவன் எமக்கு ஞாபகப்படுத்துகின்றான்.
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
நிச்சயமாகத் தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.
அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக). (104:1-9)
105) சூரதுல் பீல் யானை
அத்தியாயம் 105
வசனங்கள் 5
புனித கஃபாவை அழிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஸன்ஆவில் இருந்து பெரும் யானைப்படையுடன் வந்த ஆப்றஹா மன்னனையும் அவன் படையையும் எவ்வாறு அழித்து உலக மக்களுக்கே ஒரு பெரும் படிப்பினையாக்கினான் என்ற வரலாறு இவ்வத்தியாத்தில் கூறப்படுகின்றது.
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (105:1-5)
106) சூரதுல் குறைஷ் குறைஷிகள்
அத்தியாயம் 106
வசனங்கள் 4
மக்கத்துக் குறைஷிகளுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளை ஞாபகப்படுத்தி நீங்கள் இந்த கஃபாவின் இறைவனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனை மாத்திரமே வணங்க வேண்டும் என்ற கட்டளையை பிரப்பிக்கின்றான்.
குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,
மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக,
இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான். (106:1-4)
107) சூரதுல் மாஊன் அற்ப பொரு
அத்தியாயம் 107
வசனங்கள் 7
நாளை மறுமையை பொய்ப்பித்துக் கொண்டிருக்கும் மக்களின் சில பண்புகளை அல்லாஹ் இவ்வத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான். மக்கத்துக் குறைஷிகளும் மறுமையை பொய்ப்பித்தமையினால் அவர்களிடமும் இப்பண்புகள் காணப்பட்டன.
அவன் தான் அநாதைகளை விரட்டுகிறான்.
மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக (வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள். (107:2-7)
108) சூரதுல் கவ்ஸர் -நீர்த்தடாகம்
அத்தியாயம் 108
வசனங்கள் 3
நபி (ஸல்) அவர்களுக்கு நாளை மறுமையில் வழங்கப்பட இருக்கும் கவ்ஸ்ர் நீர்த்தடாகத்தை பற்றி பேசும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ்வை மாத்திரம் தொழுது குர்பானி எனும் வணக்கத்தையும் அவனுக்காக மட்டுமே செய்வீராக என்று கட்டளை இடுக்கின்றான்.
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன். (108:1-3)
109) சூரதுல் காபிரூன் நிராகரிப்பாளர்கள்
அத்தியாயம் 109
வசனங்கள் 6
ஏகத்துவத்திற்கும் இணைவைப்பிற்கும் இடையில் உள்ள மிகப் பெரிய வேறுபாட்டை உரத்துச் சொல்லும் இவ்வத்தியாயம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களோடு பல வருடங்களாக பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் ஏகத்துவக் கொள்கையை ஆணித்தரமாக எடுத்து வைத்தமை உலகறிந்த விடயமாகும். இருதியில் உங்களுடன் எந்த விதமான பரஸ்பர உடண்படிக்கைக்கும் நான் தயாரில்லை. உங்களுக்கு உங்களது மார்க்கம், எனக்கு எனது மார்க்கம் என்று மிகத் தெளிவாக அவர்களிடம் கூறிவிடும் படி எல்லாம் வல்ல அல்லாஹ் கட்டைளியிடுகின்றான்.
(நபியே!) நீர் சொல்வீராக: 'காஃபிர்களே!
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.' (109:1-6)
110) சூரதுன் நஸ்ர் உதவி
அத்தியாயம் 110
வசனங்கள் 3
ஹிஜ்ரி 8ஆம் ஆண்டு மக்கமா நகரை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பின் சாரை சாரையாக மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்த அந்த மாபெரும் நிகழ்வை படம் பிடித்துக் காட்டும் இந்த அத்தியாயத்தின் இருதியில் வெற்றி கிடைக்கும் போது ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் விளக்குகின்றான்.
அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக. மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக நிச்சயமாக அவன் 'தவ்பாவை' (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். (110:1-3)
111) சூரதுல் மஸத் ஈச்சம் கயிறு
அத்தியாயம் 111
வசனங்கள் 5
தப்பத் -நாசமடைந்து விட்டான், அல் லஹப் தீச்சுவாலை என்று இவ்வத்தியாயம் பல பெயர்களில் அழைக்கப்படும். நபியவர்களின் தந்தையின் சகோதர்களில் ஒருவனான அபூலஹப் இஸ்லாத்திற்கும், நபியவர்களுக்கும் பல்வேறு வகையில் கொடுமைகளை செய்து கொண்டிருந்தான். நபியவர்கள் ஸபா மலையில் ஏறி ஏகத்துவத்தை பகிரங்கப்படுத்திய போது தனது இரு கைகளால் மண்ணை வாரி இறைத்து நபியவர்களுக்கு சாபமிட்டான். அவன் நாசமாகட்டும் அவன் மணைவியும் நாசமாகட்டும் என்று அல்லாஹ் அவனது குடும்பத்திற்கே கெடுதி உண்டாகும் என்று இவ்வத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான்.
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). (111:1-5)
112) சூரதுல் இஹ்லாஸ் உளத்தூய்மை
அத்தியாயம் 112
வசனங்கள் 4
கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளை பட்டியலிடும் இந்த அத்தியாயம் குறைஷிகள் நபியவர்களிடம் உனது இறைவனை எமக்கு விளங்கப்படுத்து என்று கேட்ட சந்தர்ப்பத்தில் இறக்கப்பட்டது. இந்த பண்புகளை உடையவரே உண்மையான இறைவனாக இருக்க முடியும். உலகில் உள்ள எந்தப் போளிக் கடவுள்களும் இதில் தோல்வி அடைந்துவிடுவர் என்பது உறுதியானதாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:1-4)
113) சூரதுல் பலக் அதிகாலை
அத்தியாயம் 113
வசனங்கள் 5
அதிகாலைப் பொழுது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வுலகில் உள்ள படைப்பினங்களின் தீங்கை விட்டும் நாம் எல்லா வல்ல இறைவனிடம் பாதுகாவல் தேட வேண்டியதன் அவசியத்தை இவ்வத்தியாயம் உணர்த்துகின்றது. இரவில் ஏற்படும் தீமைகள், சூனியக்கரர்களால், பொறாமைக்காரனினால் ஏற்படும் தீமைகளில் இருந்து பாதுகாவல் தேடுமாறு அல்லாஹ் எமக்கு வழிகாட்டுகின்றான்.
(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்
இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
இன்னும்இ முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்). (113:1-5)
114) சூரதுன் நாஸ் மனிதர்கள்
அத்தியாயம் 114
வசனங்கள் 6
மனித சமுதாயத்தவர்களின் கெடுதியை விட்டும் பாதுகாப்பு தேடுமாறு முன்னைய அத்தியாயத்தில் பணித்த அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் மனித குலத்தின் எதிரியாகிய ஷெய்த்தானின் மிக மோசமான தீங்காகிய பதுங்கியிருந்து நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் காண்பிக்கக் கூடிய மிக கொடூரமான சதிவலையில் விழுந்துவிடாமல் இருக்க அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுமாறு ஏவுகின்றான். மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை ஏற்படுத்துவதன் மூலம் மேற்படி காரியத்தை இப்லீஸும் அவனின் சகாக்களும் செய்வதாக சொல்லும் இறைவன் இப்படிப்பட்ட பயங்கரமானர்கள் மனித, ஜின் ஆகிய இரு இனத்திலும் இருப்பதாக குறிப்பிடுகின்றான். மனித சமுதாயத்தின் உண்மையான எதிரியை எப்போது இனம் கண்டு கொள்கின்றோமோ அப்போது எமக்கு ஈருலகிலும் வெற்றி நிச்சயம்.
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
(அவனே) மனிதர்களின் அரசன்; (அவனே) மனிதர்களின் நாயன்.
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.(114:1-6)
http://www.islamkalvi.com/?p=117160


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts