லேபிள்கள்

சனி, 29 செப்டம்பர், 2012

அனுபவங்கள் பேசுகின்றன ! உபயோகமான தகவல்கள்


பவர் கட்... டி.வி. அவுட்!
டி.வி-யை ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்துவிட்டு, மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்யாமல் விடுவது இங்கு பலருக்கும் உள்ள கெட்ட பழக்கம். சமீபத்தில் நானும் அப்படித்தான் ரிமோட்டில் ஆஃப் செய்துவிட்டு, கிச்சன் வேலைக்குச் சென்றுவிட்டேன். மறுபடியும் டி.வி-யை ஆன் செய்தபோது, அது பழுதாகியிருந்தது. காரணம் புரியாமல் எலெக்ட்ரீஷியனை அழைக்க, அவர் சொல்லித்தான் புரிந்தது நான் செய்த தவறு. ''பவர் கட்டான பிறகு, மீண்டும் பவர் சப்ளை வரும்போது, சில நேரங்களில் சப்ளை அதிகமாக வரும். அப்போது டி.வி. மெயின் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்படாமல் இருந்தால்... பழுதாக வாய்ப்புள்ளது. டி.வி. மட்டுமல்ல... கிரைண்டர், மிக்ஸி என்று எல்லா மின் சாதன பொருட்களுக்கும் இது பொருந்தும்'' என்றார்.
இப்போதெல்லாம், தேவையில்லாதபோது அனைத்து எலெக்ட்ரானிக் பொருட்களின் மெயின் ஸ்விட்ச்களையும் ஆஃப் செய்யப் பழகிக் கொண்டுவிட்டேன். குறிப்பாக, பவர் ஆஃப் ஆகும் சமயங்களில் கூடுதல் கவனத்தையும் சேர்த்துக் கொண்டுவிட்டேன்! இனி நீங்களும்தானே..?!
அடுப்பை ஊதி அணைக்காதீர்கள்!
என் தோழி சமையல் செய்து கொண்டிருந்தபோது, அவசரமாக மளிகைப் பொருள் ஒன்று தேவைப்பட்டிருக்கிறது. கேஸ் ஸ்டவ்வை 'சிம்’-ல் வைத்துவிட்டு, பக்கத்திலிருக்கும் கடைக்கு சென்றிருக்கிறாள். அதற்குள்ளாக அடுப்பில் தீய்வது போன்ற வாசனை வர, கிச்சனுக்குச் சென்று பார்த்த அவளுடைய பாட்டி, விளக்கை ஊதி அணைப்பதைப் போல கேஸ் ஸ்டவ்வை ஊதி அணைத்திருக்கிறார். சில நிமிடங்களில் வீடு திரும்பிய தோழி, 'குப்'பென கேஸ் வாடை வரவே... அலறியடித்து கிச்சனுக்குச் சென்று பார்த்திருக்கிறாள். அடுப்பு அணைந்திருக்க... அதிர்ச்சியாகி அதை அவசரமாக ஆஃப் செய்திருக்கிறாள். அப்போது எட்டிப் பார்த்த பாட்டி, 'நீ பாட்டுக்கு அடுப்பை அமத்தாமப் போயிட்ட... நான்தான்அணைச்சேன்என்றிருக்கிறார், விபரீதம் புரியாமல்.
வீட்டிலிருக்கும் வயதானவர்களுக்கும் கேஸ் ஸ்டவ் போன்ற நவீன சாதனங்களை எப்படி இயக்குவது எனக் கற்றுக் கொடுப்பது, இதுபோன்ற விபரீதங்களைத் தவிர்க்க உதவுமே..?! 
மொத்த சாப்பாடும் டேபிளுக்கு வரக்கூடாது!
கோயிலுக்குச் சென்று திரும்பும் வழியில், தோழிக்கு ஒரு 'ஹாய்சொல்லலாம் என அவள் வீட்டுக்குச் சென்றோம் நானும் என் கணவரும். எங்களைக் கண்டதும் சர்ப்ரைஸ் ஆனவள், ''உப்புமா செஞ்சுருக்கேன்... சாப்பிட்டுத்தான் போகணும்'' என்று வற்புறுத்தி, டைனிங் டேபிளில் தட்டுகளைப் பரத்தியவாறே தன் மகளிடம் உப்புமாவை எடுத்து வரச் சொன்னாள். எட்டாவது படிக்கும் அவள் பெண், உப்புமாவை சமைத்த பாத்திரத்துடன் அப்படியே எடுத்து வந்தாள். ''எப்பவுமே சமைச்ச உணவை, அதே பாத்திரத்தோட வெச்சு பரிமாறக்கூடாதும்மா. இன்னொரு பாத்திரத்தில் மாற்றி எடுத்து வந்துதான் பரிமாறணும். அதுதான் டேபிள் மேனர்ஸ். இன்னொரு பக்கம், சமைத்த பாத்திரத்தோட எடுத்துட்டு வந்தா... சாப்பிடறவங்க, 'மொத்த சாப்பாட்டையும் எடுத்துட்டு வந்துட்டாங்களே... நாம நிறையச் சாப்பிட்டுருவோமோ, வீட்டுக்காரங்களுக்கு மீதம் இருக்காதோ?’னு சங்கடத்தோடயே சாப்பிடுவாங்க...'' என்று ஆதரவாகக் கற்றுக்கொடுக்க, அவள் பெண்ணும் அதையெல்லாம் சரியெனக் கேட்டுக் கொண்டாள்.
பிள்ளைகளுக்கு எல்லாப் பழக்க வழக்கங்களையும் இப்படி விளக்கத்துடன் கற்றுக் கொடுப்பது... நல்ல விஷயம்தானே!
பெற்றோரே... யோசியுங்கள்!
அரசுப் பள்ளி ஒன்றின் ஆசிரியையாக இருக்கிறேன். பொதுவான மாணவர்களுக்கான அந்தப் பள்ளியில்... மாற்றுத்திறனாளிகள், மனநிலை பிறழ்ந்தவர்கள் (குறிப்பிட்ட சதவிகிதம்) என்கிற நிலையில் உள்ள சில குழந்தைகளும் உள்ளனர். தங்கள் பிள்ளைகளின் இயல்பு தெரிந்தும், அவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் சேர்க்காமல், இப்படி இயல்புப் பள்ளிகளிலேயே சேர்த்துள்ளனர் சம்பந்தப்பட்ட பெற்றோர். ''இதனால் உங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை. சிறப்புப் பள்ளிகளில்தான் அவர்களின் குறைபாட்டுக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்படும்'' என்றாலும், கௌரவக் குறைச்சலாக நினைத்து, அதை ஏற்க மறுக்கின்றனர். இதே காரணத்துக்காக, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அரசு அறிவித்திருக்கும் உதவித் தொகையைப் பெறவும் பலரும் முன்வருவதில்லை.
தங்கள் காலத்துக்கு பிறகும் தங்கள் குழந்தைகளைத் தாங்கக்கூடிய சரியான கல்வியையும், அரசு உதவியையும் பெற்றோரே அவர்களுக்குக் கிடைக்காமல் செய்வது எவ்விதத்தில் நியாயம்?!

வியாழன், 27 செப்டம்பர், 2012

ஆன்லைனில் ரெயில்வே டிக்கெட் புக் செய்யும் வழிமுறைகள்


நீண்ட நெடுந்தூரப் பயணத்திற்கு பெரும்பாலும் நம் இந்திய நாட்டில் நாம் ரயில் பயணங்களையே நம்பியிருக்கிறோம். ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்வது அவசியம். அப்போதுதான் இருக்கை வசதி கிடைக்கப்பெற்று பயணமும் இனிமையாக அமையும். அவ்வாறு பயணம் செய்ய ரயில் டிக்கெட் பதிவு செய்யும் முறைகளைக் காண்போம். இப்பதிவில் இணையம் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்வது எப்படி? மொபைல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் முறை, மற்றும் PNR நிலைமையைத் தெரிந்துகொள்ளும் முறை ஆகியவைகளைப் பற்றிப் பார்ப்போம்.


முதலில் ரயில் டிக்கெட்டை பதிவு செய்யும் முறைகளை பார்ப்போம்.

இணையத்தில் பதிவு செய்யும் முறை(Online ticket Booking)

இணையத்தில் ரயில் டிக்கெட் பதிவு செய்ய சில தளங்கள் நமக்கு உதவுகின்றன. அவற்றில் ரயில்வே இணையதளமான IRCTC ஆகும். IRCTC தளத்தின் மூலம் நிறைய பயணிகள் ஆன்லைன் மூலம் தங்களது பயணத்திற்கான டிக்கெட்டை முன் பதிவு செய்கின்றனர். இத்தளத்தில் அணுகுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தளம் எப்போதும் மெதுவாகவே இயங்கும். அல்லது சில சமயம் இயங்காமல் ஸ்தம்பித்துவிடும்.
 

இக்குறையைப் போக்க சில தனியார் இணையதளங்களும் உள்ளன. அவற்றில் முதன்மையானவையாக கருதப்படுவது
 ClearTrip தளம். இதில் எளிய முறையில் டிக்கெட் புக் செய்யும் முறையை அமைத்துக்கொடுத்திருக்கிறார்கள். மேலும் சில தளங்கள் இருக்கின்றன. அவை: .
1.Yatra.Com/Trains
2.
 MakeMyTrip.Com/Railways
3.
 http://www.railticketonline.com/SearchTrains.aspx
4. http://www.ezeego1.co.in/rails/index.php
5.
 Thomas Cook.Co.In/IndianRail
6.
 ERail.in தளத்தின் மூலம் மிக விரைவாக ரயில்களின் நேரம்(time), தொலைவு(Distance), கட்டணம்(), பயணிக்கும் ஸ்டேசன்கள், சீட் இருக்கிறதா (Seat Availablity) போன்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். உங்களின் PNR Status மிக விரைவாக அறிய முடியும். 

PNR நிலைமையை அறிந்துகொள்ள

முன் பதிவு செய்தபின் நமக்கு இருக்கை வசதியிருந்தால் உடனே தெரிந்துவிடும். பெரும்பாலும் இவ்வாறு உடனே இருக்கை வசதி கிடைக்காது. சில சமயங்களில் காத்திருப்போர் பட்டியலில் நம் பெயர் (waiting list)இருக்கும். அவ்வாறு காத்திருப்போர் பட்டியலில் இருக்கும்போது நமக்கு இடம் கிடைத்திருக்கிறதா என மீண்டும் தெரிந்துகொள்ள இணையத்தையே நாட வேண்டும். இதை PNR status என்று சொல்வார்கள்.

ஒவ்வொரு முறையும் PNR status ஐ அறிந்துகொள்ள இணையத்தையே நாட வேண்டும். இவ்வாறு இணையம் செல்லாமல் உங்களுடைய மொபைலிலேயே PNR status -SMS ஆக பெற முடியும். இத்தளத்தில் சென்று உங்களுடைய PNR நம்பரையும், தகவல் பெற விரும்பும் மொபைல் எண்ணையும் பதிவு செய்தால் போதுமானது.
 www.mypnrstatus.com
இனி பயண சீட்டில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் உங்கள் மொபைலுக்கே SMS ஆக தகவல் அனுப்பபடும்.

மொபைல் மூலமாகவும் இவ்வசதியைப் பெற முடியும். அதற்கு உங்கள் மொபைலில் MYPNR என தட்டச்சிட்டு ஒரு இடைவெளி விட்டு பிறகு உங்களுடைய பத்து இலக்க PNR எண்ணை டைப் செய்யவும். இந்த தகவலை 92200 92200 என்ற எண்ணிற்கு SMS அனுப்புங்கள்.

இனி நீங்கள் பயணசீட்டை பதிவு செய்துவிட்டு, ஒவ்வொரு முறையும் பயணசீட்டின் நிலவரத்தை தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. பயணச்சீட்டின் நிலவரங்கள் உங்களைத் தேடி உங்கள் மொபைலுக்கே வந்து சேரும்.

மொபைல் மூலம் பதிவு செய்யும் முறை:
 

தற்போது மொபைல் மூலமும் ரயில் டிக்கெட்டை பதிவு செய்யலாம். ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய வசதியாக தற்போது மொபைலைப் பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்யும் முறையும் சமீபத்தில் ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இதற்கு உங்கள் மொபைலில் GPRS உடன் இணைய இணைப்பையும் நீங்கள் பெற்றிருக்க வேண்டும்.
 

உங்கள் மொபைலில் ரயில்வேயில் புதிய தளமான
 https://www.irctc.co.in/mobile தளத்திற்கு செல்லவும். தளத்தில் முதலில் பதிவு செய்துகொண்டு பிறகு தேவையான வழிமுறைகளைப் பின்பற்றவும். ஒவ்வொரு முறையும் டிக்கெட் பதிவு செய்யும்போது உங்களுடைய யூசர்நேம், பாஸ்வேர்ட் பயன்படுத்தி நீங்கள் உள்நுழைய (login) செய்துகொள்ள வேண்டும். 

கணினியில் E-Ticket பதிவு செய்வதைப் போன்றே மொபைலிலும் கிரடிட் கார்டு, டெபிட் கார்ட் பயன்படுத்தி மொபைலிலும் டிக்கெட்டை புக் செய்துகொள்ளலாம்.
 

தொழில்நுட்ப வசதிகள் பெருக பெருக பயனாளர்களுக்கு நேரமும், மன உளைச்சலும் குறைகிறது. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) அறிமுகப்படுத்தியுள்ள Onetime REGISTERATION மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். நன்றி நண்பர்களே...!!!

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

மருத்துவ உலகின் ராணி - சோற்றுக் கற்றாழை..!


மருத்துவம் என்றாலே அது சோற்றுக்கற்றாழைதான். சோற்றுக்கற்றாழையின் பங்கு அந்தக் கால மருத்துவத்தில் அதிகம். அந்தக் கால பாட்டி வைத்தியம் செய்பவர்கள் முதல் சித்த வைத்தியர்கள் வரை இந்த சோற்றுக்கற்றாழையின் மகிமையை அறிந்து வைத்திருந்தனர். தக்க சமயத்தில் இது பல நோய்களைக் குணப்படும் அருமருந்தாகப் பயன்படுகிறது. நவீன மருத்துவத்திலும் இதன் பங்கு அளப்பரியது. 


கிட்டதட்ட அனைத்து வகையான மருந்துப்பொருட்களிலும் இந்தக் கற்றாழையின் பங்கு இருக்கும். இது ஒரு கசப்புத் தன்மையைக் கொண்டதால் கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை மருந்துப்பொருளாக உள்ளது. இந்தக் கற்றாழையின் மூலம் குணமாகும் நோய்கள் என்ன? எந்தெந்த மருந்து வகைகளில் இதைச் சேர்த்து மருந்து தயாரிக்கப்படுகிறது? இதன் தன்மைகள் என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
சாதாரணமாக கிராமப்புறங்களில் இந்தக் கற்றாழைகள் வேலியோரப் புதர்களில் வளர்ந்திருக்கும்.

இக் கற்றாழையானது உலகம் எங்கும் 17ம் நூற்றாண்டு முதல் காஸ்மெட்டிக்(cosmetic) பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும்(medicine) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சோற்றுக் கற்றாலையை சிறு கற்றாழை என்றும் அழைப்பார்கள்.
 

சோற்றுக் கற்றாழை மடல்களைப் பிளந்து நுங்குச் சுளைப் போல உள்ள சதைப் பகுதியை, சின்னச் சிறு துண்டுகளாக வெட்டி தூய தண்ணீரில் 7 முதல் 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும். எனவே நன்றாக கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் கசப்புத் தன்மையும், குமட்டுதலும் குறைந்துவிடும்.
 

கற்றாழை குணப்படுத்தும் நோய்கள்:
 
(Aloe vera can cure diseases)
·         தீராத வயிற்றுப் புண்கள் குணப்படுத்துகிறது..
·         சிறுநீர் குழாய்களிலும், பிறப்பு உறுப்புக்களிலுமுள்ள நோய்களை சோற்றுக் கற்றாழை நன்கு செயல்பட்டு முழுமையாக நிவர்த்தி செய்கிறது...
·         வயிற்றின் சூட்டைத் தணிக்க...
·         வாய்வுத் தொல்லைகளை நீக்க...
·         நீடித்த மலச்சிக்கலைப் போக்க..
மேற்கண்ட நோய்களுக்கான மருந்து தயார் செய்யும் முறை...
(Method of preparing a drug)
கழுவிச் சுத்தம் செய்த சோற்றுக் கற்றாழையை அரைக்கிலோ எடுத்துக்கொள்ளுங்கள். இதில் விளக்கெண்ணெய் ஒரு கிலோவும், பனங்கற்கண்டு அரைக்கிலோவும், வெள்ளை வெங்காயச் சாறு கால் கிலோவும் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பில் சிறு தீயாக(Light flame) எரிக்க வேண்டும்.

சாறுகள் சுண்டியபின் இந்த நெய்யை எடுத்து வதக்கிக்கொண்டு, நோயாளிகள் ஒரு தேக்கரண்டி(tea spoon) வீதம், காலை, மாலை சாப்பிட்டு வந்தால், தீராத வயிற்று வலியும், வயிற்றுப் புண்ணும்(Peptic ulcer), சூன்மக் கட்டிகளும் குணமாகும்.
ஜீரண சக்தியை அதிகரிக்கும்(Increases the digestive power). பசியை உண்டாக்கும் தன்மைப் பெற்றது.

இந்த மருந்து பால்வினை நோய்களில்(Sexually transmitted disease) ஒன்றான கனோரியா நோயை முழுமையாகக் குணமாக்கிவிடும். கனோரியாவை நீக்குவதில் மிகவும் சக்தி வாய்ந்தது. நம்பிக்கையானது. வெட்டை நோய்களையும் குணப்படுத்தும். கனோரியா நோயினால் ஏற்படும் எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, நிறம் மாறிய சிறுநீர் வெளியேறுதல். இந்திரிய ஒழுக்கு, அரையாப்பு, ஜனன உறுப்பில் உள்ளுக்கும், வெளியிலும் புண் ஏற்பட்ட நிலை, சீழ் பிடித்தல், வெள்ளை வெட்டை நோய்கள் ஆகியன பூரணமாகக் குணமாகும். மருந்து சாப்பிடும் காலங்களில் காரத்தையும், புளியையும் சேர்க்காமல் உணவு உட்கொள்ள வேண்டும்.

சோற்றுக் கற்றாழை மடல் சுத்தம் செய்து எடுத்து, இதில் சிறிது படிக்காரத்தூளைத்(Alum) தூவினால் நீர்த்து தண்ணீராகிவிடும். இதில் வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால் மூத்திரக் கிரிச்சரம், மேக நோயால் ஏற்பட்ட வெட்ட நோய் நீங்கிவிடும்.கழுவிச் சுத்தம் செய்த சோற்றுக்கற்றாழை ஒரு கப் சேகரம் செய்துகொண்டு, இதில் சிறிய வெங்காயம் ஒரு கப் நறுக்கிச் சேர்த்து விளக்கெண்ணெய் 300 கிராம், பனங்கற்கண்டு 300 கிராம் இவை யாவையும் ஒன்று சேர்த்து, அடுப்பில் வைத்து சிறு தீயாக லேகிய பதம் வரும் வரை எரித்து எடுத்துக்கொண்டு காலை, மாலை, ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் அனைத்து வகையான வயிற்று வலியும், வயிற்றுப் புண்களும் குணமாகும்.
 

சிறுநீர் எளிதில் வெளியேற...
(In the urine to exit easily)
கழுவி எடுத்த சோற்றுக் கற்றாழையில் ஒரு மடல் அளவு கற்றாழைத் துண்டுகள் நீர் ஆகாரத்தில் கலந்து குடிக்க வேண்டும். மடல் துண்டுகள் ஐந்து தேக்கரண்டிக்குக் குறையக் கூடாது இதை, காலையில் ஒருவேளை சாப்பிட வேண்டும். மூன்று நாள் உபயோகத்தில் சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல் நின்று விடும். இதே முறையில், மூன்று தினங்கள் சாப்பிட்டால் நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். கழுவிச் சுத்தம் செய்த கற்றாழைத் துண்டு ஒரு கப் எடுத்துக் கொண்டு, இதில் சின்ன வெங்காயம் சுட்டுப்பொடியாக்கிய ஐந்து வெங்காயத்துக்குக் குறையாமல் சேர்த்துக் கொண்டு, இதைக் கற்றாழைச் சோற்றில் கலந்து, கடுக்காய் பொடிகள் மூன்று கடுக்காயில் சேகரித்து, எல்லாவற்றையும் ஒன்றாக்கி சிறிது தண்ணீர் விட்டு மூடி வைத்தால், கால் மணி நேரத்தில் நீர்த்து தண்ணீராகிவிடும். இந்தத் தண்ணீரை வடிகட்டிச் சாப்பிட்டால் அரை மணி நேரத்தில் சிறுநீர்க்கட்டு நீங்கிவிடும். தாராளமாக சிறுநீர் வெளியேறிவிடும்.
புண்கள் ஆற:
(Heal ulcers )

கழுவி எடுத்த கற்றாழைச்சோறு 25 - 50 கிராம் பசும் பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் பத்து தினங்களில் மூலச் சூடு தணியும். சொறி, அரிப்பு நீங்கும். விந்து உற்பத்தி அதிகரிக்கும். பால்வினை நோயான சொருக்கு நோய் வந்தவர்களின் ஆண் உறுப்பில் புண்கள் உண்டாகும். இதனால் வீக்கமும், புண்ணும் இருக்கும். கழுவி எடுத்த சோற்றுக் கற்றாழையை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். இரவு படுக்கும்போது இப்படிச் செய்து கொள்ளலாம். இவ்வாறு சில தினங்கள் கட்டி வந்தால், புண்கள் ஆறிவிடும். வீக்கம் வடிந்துவிடும்.

பெண்களின் வெள்ளைப்படுதல்(LEUCORRHEA) நோய் குணமாக:

பெரிய கற்றாழை மடலை நீளவாக்கில் கீறிப் பிளந்து இதில் மூன்று தேக்கரண்டியளவு வெந்தயத்தைப் பதித்து மூடி, நூலால் கட்டி இரவு கூரைமேல் வைத்து எடுத்தால், மூன்றாவது நாளில் பிரித்துப் பார்க்கும் போது வெந்தயம் முளை கட்டியிருக்கும். இந்த வெந்தயத்தை மூன்று பாகமாக்கி மூன்று தினங்கள் சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்பட்ட வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

தாம்பத்திய உறவு மேம்பட:
(Improve sexual)

சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.

கூந்தல் வளர(Hair grow):

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டால் செய்ய வேண்டியது:

கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செய்து எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.
 

குளிர்ச்சி தரும் குளியலுக்கு:
(To cold baths)

மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரைக்கிலோ தயாரித்து, அதில் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 நாட்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையைக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தலாம். வாசனை திரவியம் இதில் கலந்திருப்பதால் இது நல்ல இயற்கையான குளிர்ச்சி தரும் குளியல் எண்ணையாக பயன்படுத்த முடியும்.

அழகு சாதனப் பொருளில்(cosmetics) கற்றாழை முக்கியப் பொருளாகச் சேர்த்து தயாரிக்கப்படும் ஜெல்(gel) சருமத்தின் பாதுகாவலனாகச் செயல்படுகிறது. சருமத்தின் ஈரப்பசையைப் பாதுகாக்கிறது. சரும நோய்களுக்குச்(skin diseases) சிறந்த மருந்தாகிறது. கற்றாழை மடல் சாறு பயன்படுத்தப்படுவதால், சூரிய வெப்பமாக்குதல் குறைகிறது. எக்ஸ்ரே கதிர் வீச்சின் கடுமையைத் தடுத்து பாகாப்பு அளிக்கிறது. ஆக மருத்துவ உலகின் முடி சூடா ராணியாக கற்றாழை வலம் வருகிறது. கற்றாழையின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டோமானால் வாழ்நாளில் பெருமளவு நோய்கள் நம்மை அண்டாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
 

தற்போது ஆங்கில மருத்துவ முறைகளே அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த அவசரகால உலகத்தில் இத்தகைய மருத்துவமுறைகளைப் பின்பற்றுவது என்பது கடினம்தான். என்றாலும் இதில் கூறப்பட்டுள்ள மருத்துவமுறைகள் நம் முன்னோர்கள் காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. படித்ததில் பிடித்திருந்த கட்டுரையை பகிர்ந்திருக்கிறேன்.
 

ஆதாரம்: இந்த பதிவில் வரும் பெரும்பாலான மருத்துவ குறிப்புகள்
 இயற்கை மூலிகைகளும், நோய் தீர்க்கும் முறைகளும் என்ற நூலிலிருந்து எடுத்தாளப்பட்டது. நன்றி நண்பர்களே..!!!

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி


எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.

மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. எலுமிச்சையின் தாயகம் பாரதம்தான். முதன்முதலாக 1784-ல் கார்ஸ்வில் ஹெம்மீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட இரத்தத்தை தூய்மைப்படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை என கண்டறிந்தார். உதாரணமாக இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய வீரர்களின் காயத்தில் இருந்து ஒழுகும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சையை உபயோகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.இந்தியர்களை விட மேலை நாட்டினர் எலுமிச்சை பழத்தையும், அதன் விதை, தோல் அனைத்தையும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வாசனைப் பொருட்களும் தயாரிக்கின்றனர். இந்தியர்களின் வீடுகளில் எலுமிச்சை ஊறுகாய் இல்லாமல் இருக்காது.
கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.
100 கிராம் எலுமிச்சை பழத்தில்,
நீர்ச்சத்து – 50 கிராம்
கொழுப்பு – 1.0 கிராம்
புரதம் – 1.4 கிராம்
மாவுப்பொருள் – 11.0 கிராம்
தாதுப்பொருள் – 0.8 கிராம்
நார்ச்சத்து – 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து – 0.80 மி.கி.
பாஸ்பரஸ் – 0.20 மி.கி.
இரும்புச் சத்து – 0.4 மி.கி.
கரோட்டின் – 12.மி.கி.
தையாமின் – 0.2 மி.கி.
நியாசின் – 0.1 மி.கி.
வைட்டமின் ஏ – 1.8 மி.கி.
வைட்டமின் பி – 1.5 மி.கி.
வைட்டமின் சி – 63.0 மி.கி
எலுமிச்சையின் பயன்கள்:
வயிறு பொருமலுக்கு:
சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்த்துத் தொல்லைக் கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லைகள் நீங்கும்.
தாகத்தைத் தணிக்க:
தற்போது கோடைக்காலத்தின் ஆரம்பத்தில் இருக்கிறோம். கோடை வெயிலின் தாக்கத்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு கப் நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு:
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.
கல்லீரல் பலப்பட:
எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.
தலைவலி நீங்க:
ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.
நீர்க் கடுப்பு நீங்க:
வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சினை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும். இரத்தக் கட்டுக்கு உடம்பில் எங்காவது அடிபட்டாலோ, வீங்கினாலோ ரத்தம் கட்டி இருக்கும். இந்தப் பகுதியை தொட்டாலே சிலருக்கு வலியெடுக்கும். இந்த ரத்தக்கட்டு நீங்க சுத்தமான இரும்புக் கரண்டியில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு கரிய போளத்தைப் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) போட்டு காய்ச்ச குழம்பு போல வரும். அதனை எடுத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள பகுதிகளில் பற்று போட வேண்டும். இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் சுத்தம் செய்து பற்று போட்டு வந்தால் ரத்தக்கட்டு குணமாகும்.
பித்தம் குறைய:
எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.
எலுமிச்சை தோல்:
எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர். இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்றவற்றிற்கு நல்லது. நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.
  •  எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
  •  எலுமிச்சம் பழச்சாற்றை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.
  •  தாதுவைக் கெட்டிப்படுத்தும்.
  •  உடல் நமைச்சலைப் போக்கும்
  •  மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.
  •  மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்.
எலுமிச்சம் பழத்தின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள்.
Web sources :By: Engr.Sulthan

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

உள்ளச்சத்தோடு நமது தொழுகை அமைய


உண்மையான முஃமின் தனது வாழ்வின் அனைத்து செயல்களிலும் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவே இருப்பான். எந்நேரமும் அல்லாஹ் என்னை கண்காணித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு அவனுள் மேலோங்கி இருப்பதே இதற்குக் காரணம். உள்ளச்சத்தின் அவசியத்தை பொதுவாகவே முஃமினின் வாழ்க்கையில் வழியுறுத்துகின்ற இஸ்லாம் தொழுகையில் அதைவிட பல மடங்கு வழியுறுத்துவதைக் காணலாம்.

இந்த உயரிய பண்பை பற்றி அல்குர்ஆன் என்ன கூறுகின்றது என்பதை முதலில் பார்ப்போம்:
இறையச்சத்தின் அவசியம்:
அவர்கள் தங்கள் இறைவனை அந்தரங்கத்திலும் அஞ்சுவார்கள், இன்னும் அந்த (இறுதி) வேளையைக் குறித்துப் பயந்து கொண்டும் இருப்பார்கள்”. (21: 49).
உள்ளச்சம் இறைத்தூதர்களின் பண்பாகும்:
(இறைதூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள், அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள், அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்பட மாட்டார்கள், ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.” (33: 39).
நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம், அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம், நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள். (21: 90)
மறைவில் இறைவனை அஞ்சுதல்:
எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர் தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார். அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்ல வேண்டியுள்ளது.
நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை (ப்பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும் உண்டு.” (67: 12).
யார் நேர்வழியுடையோர்:
அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான். (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுக்கொன்று ஒப்பான (முதஷாபிஹான)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன. தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றைக் கேட்கும் போது) சிலிர்த்து விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும். இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறானோ, அவனை நேர் வழியில் நடத்துவோர் எவருமில்லை.” (அஸ்ஸுமர்: 23).
தொழுகையில் உள்ளச்சத்தை வழியுறுத்தும் வசனங்கள்:
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.” (23: 1, 2).
உள்ளச்சம் உடையவர்களுக்கு இது இழகுவான காரியம்:
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்;லாஹ்;விடம்) உதவி தேடுங்கள், எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவே இருக்கும்.” (2: 45).
உள்ளச்சத்துடன் நிற்றல்:
தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக்கொள்ளுங்கள், (தொழுகையின் போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச் சப்பாட்டுடன் நில்லுங்கள்.” (2: 238).
முதலில் உயர்த்தப்படுவது உள்ளச்சம்”:
அபூ தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நாம் அல்லாஹ்வின் தூதருடன் இருந்தோம், அப்போது அல்லாஹ்வின் தூதர் தனது பார்வையை வானை நோக்கி உயர்த்தியவர்களாக இது மனிதர்களிலிருந்து கல்வி பரிக்கப்படும் காலமாகும், எது வரையெனில் அதிலிருந்து எதையும் மனிதர்கள் பெற்றுக்கொள்ளாத அளவுக்கு, அப்போது ஸியாதிப்னு லபீதுல் அன்ஸாரீ (ரலி) அவர்கள், எவ்வாறு கல்வி பரிக்கப்படும் நாம் அல்குர்ஆனை ஓதிக்கொண்டிருக்கும் போது, நமது மனைவிமார்களுக்கு, பிள்ளைகளுக்கு அதை ஓதிக்காட்டும் போது என வினவினார். ஸியாதே! உமது தாய் மண்ணைக்கவ்வட்டும், நான் உம்மை மதீனாவின் கல்விமான்களில் ஒருவராக அல்லவா நினைத்திருந்தேன், இந்த தவ்ராத்தும், இன்ஜீலும் யூதர்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் இருந்தும் அவர்களுக்கு அது ஏற்படுத்திய பயன் என்ன? என அல்லாஹ்வின் தூதர் கேட்டார். ஜுபைர் குறிப்பிடுகிறார்: உபாததிப்னு ஸாமித் (ரலி) அவர்களை சந்தித்து உமது சகோதரர் அபூதர்தா கூறுவதை செவிமடுக்கவில்லையா? என்று அவர் கூறியதை நான் அவருக்கு அறிவித்த போது அபூதர்தா கூறியது உண்மை தான் என அவர் கூறினார். நீர் விரும்பினால் முதலில் உயர்த்தப்படும் கல்வியை நான் உமக்கு அறிவிக்கின்றேன் என அவர்கூறிவட்டு, அது தான் உள்ளச்சம். எந்த அளவுக்கெனில் மஸ்ஜிதுக்கு கூட்டுத் தொழுகைக்கு வருபவர்களில் உள்ளச்சமுடையவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள் என்ற அளவுக்கு நிலமை மோசமடையும்” (திர்மிதி).
தொழுகைக்காக ஒருவர் முறையாக தன்னைத் தயார் படுத்துதல்:
இது பல அம்சங்களைக் கொண்டாகும். அவைகளில்:- முஅத்தின் கூறும் பாங்கைப் போன்று பதில் பாங்கு கூறுதல், அதானுக்கும், இகாமத்திற்கு இiடையில் பிரார்த்தித்தல், பிஸ்மில்லாஹ் கூறி உழூவை ஆரம்பம் செய்தல், அதன் பின்னர் திக்ர், பிரார்த்தனைகள் செய்தல், மிஸ்வாக் செய்வதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுதல், தூய்மையான அழகிய ஆடைகள் அணிந்து, அடக்கத் தோடும், பணிவோடும் பள்ளிக்குச் சென்று தொழுகையை எதிர் பார்த்திருத்தல், தொழுகையின் (ஸஃப் பை) வரிசையை சரி செய்வதுடன் அதில் நெருக்கமாக நிற்றல் போன்ற காரியங்கள் உள்ளடங்கி இருக்கும்.
1-பாங்கிற்கு உளத்தூய்மையுடன் பதில் கூறுவதன் மூலம் தொழுகைக்கு தயாராகுதல்:
உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: முஅத்தின் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் எனக்கூறும் போது (அதை கேட்கும்) ஒருவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் எனக்கூறுவார். முஅத்தின் அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் எனக்கூறும் போது அஷஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் எனக்கூறுவார். பின்பு முஅத்தின் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ் எனக்கூறும் போது, அஷஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ் எனக்கூறுவார் பிறகு ஹய்யஅலஸ் ஸலாத், ஹய்யஅலல்பஃலாஹ் எனக்கூறும் போது லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் எனக்கூறுவார். பின் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் எனக்கூறும் போது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் எனக்கூறுவார். பின் லா இலாஹ் இல்லல்லாஹ் எனக்கூறும் போது இவர் தனது உள்ளத்தால் (உளத்தூய்மையுடன்) லா இலாஹ இல்லல்லாஹ் எனக்கூறினால் அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.” (முஸ்லிம்).
பாங்கைத் தொடர்ந்து துஆ ஓதுதல்:
எவர் முஅத்தினின் அதானை செவிமடுத்ததன் பின்

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا وَبِالْإِسْلَامِ دِينًا

அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷரீக லஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு ரழீது பில்லாஹி ரப்பன் வபிமுஹம்மதிர் ரஸுலன் வபில் இஸ்லாமி தீனன்
(வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் ஏகன், அவனுக்கு எந்த ஒரு இணையுமில்லை, முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்று நான் சாட்சி கூறுகின்றேன். அல்லாஹ்வை ரப்பாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் ஏற்றுக்கொண்டேன்) என்று கூறுவாரோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதிப்னு அபீவக்காஸ் (ரலி), (முஸ்லிம்).
எவர் முஅத்தினின் அதானை செவிமடுத்ததன் பின்:

اَللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ

(பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹமமது நபி(ஸல்) அவர்களுக்கு வஸீலா என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!) என்று கூறுவாரோ அவருக்கு நாளை மறுமையில் எனது ஷபாஃஅத் உறுதியாகி விட்டதுஎன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி), புஹாரி).
அழகான முறையில் வுழூச் செய்வது:
அம்ரிப்னு ஸஈத் இப்னுல் ஆஸ் தனது தந்தை பாட்டன் வழியாக அறிவிக்கின்றார்:
 நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் இருந்த போது, அவர்கள் வுழூ செய்வதற்கு தண்ணீரை கொண்டுவருமாறு சொன்னார்கள், பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன்: எந்த ஒரு முஸ்லிமாவது கடமையான தொழுகைக்கு அழகான முறையில் வுழுச் செய்து, உள்ளச்சத்துடன், அதன் ருகூவைப் பேணியவராக தொழுவாரானால் அவர் முன் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக அவை அமைந்து விடும், பெரும் பாவங்களை தவிர்த்து, இவ்வாறு காலம் முழுக்க நடந்து கொண்டிருக்கும்எனக் கூறினார்கள். (முஸ்லிம்).
அப்துல்லாஹ் இப்னு ஸுனாபிஹிய் கூறுகிறார், அபூ முஹம்மத் வித்ர் தொழுகை கடமையென கூறிய போது, அபூ முஹம்மத் கூறியது பொய்யாகும் எனக் கூறிய உபாததிப்னுஸ் ஸாமித் (ரலி) அவர்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன், அல்லாஹ் ஐந்து நேரத் தொழுகையை கடமையாக்கியிருக்கின்றான், எவர் அதன் வுழூவை அழகாகச் செய்து, குறிப்பிட்ட நேரத்தல் அந்தத் தொழுகைகளையும் நிறைவேற்றி, அதன் ருகூவையும் முழுமையாக செய்து, அதில் உள்ளச்சத்தையும் பேணுவாரானால் அல்லாஹ்விடத்தில் அவரை மன்னிப்பதற்குரிய ஒரு உறுதி மொழி இருக்கின்றது. எவர் அவ்வாறு செய்யவில்லையோ அல்லாஹ்விடத்தில் அவருக்கு எந்த ஒரு உறுதி மொழியும் இல்லை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் நாடினால் தண்டிப்பான்” (அபூதாவுத்).
மிஸ்வாக் பல் துலக்குதலின் மூலம் தயாராகுதல்:
எனது சமூகத்திற்கு, அல்லது மனிதர்களுக்கு சிரமம் இல்லையென்றால் ஒவ்வொரு தொழுகையின் போதும் மிஸ்வாக் செய்வதை நான் கட்டளையிட்டிருப்பேன்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புஹாரி).
பள்ளிக்குச் செல்கின்ற போது ஓதும் துஆ:

اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا وَفِي لِسَانِي نُورًا وَاجْعَلْ فِي سَمْعِي نُورًا وَاجْعَلْ فِي بَصَرِي نُورًا وَاجْعَلْ مِنْ خَلْفِي نُورًا وَمِنْ أَمَامِي نُورًا وَاجْعَلْ مِنْ فَوْقِي نُورًا وَمِنْ تَحْتِي نُورًا اللَّهُمَّ أَعْطِنِي نُورًا.

நாயனே! என் இதயத்தில் ஒளியையும், என் நாவில் ஒளியையும், என் செவியில் ஒளியையும், என் பார்வையில் ஒளியையும், எனக்குப்பின்னால் ஒளியையும், எனக்கு முன்னால் ஒளியையும், எனக்கு மேலால் ஒளியையும், எனக்கு கீழால் ஒளியையும், ஏற்படுத்துவாயாக, யா அல்லாஹ் எனக்கு ஒளியை அருள்வாயாக!” (ஆதாரம்:- முஸ்லிம்).
நான் நபியவர்கள் கூறக் கேட்டேன் எவர் தொழுகைக்காக முழுமையாக வுழூச் செய்து, பின் கடமையான தொழுகைக்கு நடந்து சென்று, மக்களுடன், அல்லது ஜமாஅத்தாக மஸ்ஜிதில் தொழுகையை நிறைவேற்றினால் அவரது முன்னுன்டான பாவங்கள் மன்னிக்கப்படும்என உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம்).
உள்ளம், உடல் இரண்டும் தொழுகையில்:
உக்பதிப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நாம் முறை வைத்து ஒட்டகைகளை மேய்ப்பவர்களாக இருந்தோம். எனது முறை வந்த போது நான் அவைகளை மேய்த்துவிட்டு இரவானதும் ஓய்வெடுக்க திரும்பிவிட்டேன். நபியவர்கள் நின்றவர்களாக மக்களுக்கு உரை நிகழ்திக் கொண்டிருந்தார்கள், அப்போது அவர்கள் கூறிய செய்தி: எந்த ஒரு முஸ்லிமாவது அழகான முறையில் வுழூச் செய்து, பிறகு எழுந்து தனது முகத்தையும், உள்ளத்தையும் நிலை நிறுத்தியவராக இரண்டு ரக்அத்துகள் தொழுவாரானால் அவருக்கு சுவர்க்கம் கடமையாகிவிடும். எவ்வளவு சிறப்பான ஒரு விடயம் இது? என்று நான் கூறினேன், அப்போது அங்கிருந்த ஒருவர் இதற்கு முன் கூறியது இதை விட அழகானதாகும் என்று நான் அவரை பார்த்ததேன், அவர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள், அவர் என்னை நோக்கி நீர் சிறிது நேரத்திற்கு முன்பாக வந்ததை நான் பார்த்தேன். (நீர் வருவதற்கு முன்னர் அல்லாஹ்வின் தூதர் சொன்ன செய்தி தான்) எவரொருவர் நிறைவாக வுழூச் செய்து பின்னர் :

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

என்று கூறுகின்றாரோ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயலினூடாக சுவர்க்கம் நுழையலாம் என்பதாகும். (முஸ்லிம்).
அழகான முறையில் தன்னை அழங்கரித்தவராக செல்லல்:
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள், உண்ணுங்கள், பருகுங்கள், எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.” (7: 31).
மஸ்ஜிதை நோக்கி வரும் போது அமைதியாக வருதல்:
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழுச் செய்து பிறகு தொழுகையை நாடியவராக மஸ்ஜிதுக்கு வருவாரானால், விரல்களைப் பின்னிக்கொண்டு, கோர்த்துக்கொண்டு வர வேண்டாம். தொழுகைக்கு வர நாடினால் அவர் தொழுகையில் இருப்பவர் போல் தான்” (திர்மிதி).
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை நிலை நாட்டப்பட்டு விட்டால் நீங்கள் விரைந்தோடி வரவேண்டாம் மிகவும் அமைதியாகவும், கண்ணியமாகவும் வாருங்கள்.  நீங்கள் அடைந்தால் தொழுங்கள், தவறினால் தவறியதை நிறைவேற்றுங்கள். தொழுகைக்காக வரும் ஒருவர் தொழுகையில் இருப்பவர் தான்” (ஆதாரம்:- புஹாரி).
வலது காலை முன்வைத்தவராக மஸ்ஜிதுக்குள் நுழைதல்:
அல்லாஹ்வின் தூதர் அனைத்துக் காரியங்களிலும் வலதை முற்படுத்துவதை விரும்புபவர்களாக இருந்தார்கள்” (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), புஹாரி).
மஸ்ஜிதுக்குள் நுழையும் போது ஓத வேண்டிய பிரார்த்தனைகளில் கவனம் செலுத்தல்:

أَعُوذُ بِاللهِ الْعَظيمِ ، وَبِوَجْهِهِ الْكَرِيمِ ، وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَجِيمَ.

(மகத்துவத்திற்குரிய அல்லாஹ்விடம் சங்கையான அவனது முகத்தைக் கொண்டும், பூர்வீக அவனது முழுமையான அதிகாரத்தைக் கொண்டும் சாபத்திற்குள்ளான ஷைத்தானின் தீங்குகளை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்.)
அல்லாஹ்வின் தூதர் மஸ்ஜிதுக்குள் நுழையும் போது இந்த பிறார்த்தனையை ஓதுபவர்களாக இருந்தார்கள். எவர் இதை ஓதியவராக மஸ்ஜிதுக்குள் நுழைவாரோ, இவர் நாளின் எஞ்சிய நேரத்தில் எனது தீங்குகளை விட்டு பாதுகாப்புப் பெற்று விட்டார் என ஷைத்தான் கூறுகின்றான் என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் (ரலி), அபூதாவுத்).
நீங்கள் மஸ்ஜிதுக்கு நுழையும் போது இதை ஓதிக்கொள்ளுங்கள்:

اللَّهُمَّ افْتَحْ لِى أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மஃப்தஹ்லி அப்வாப ரஹ்மதிக
நாயனே! உன் அருள்வாயில்களை எனக்குத் திறந்துவிடுவாயாக!என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி), முஸ்லிம்).
தொகுப்பு: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

சமையல் எண்ணெய்களுக்கு எக்ஸ்பயரி தேதி உண்டா?"

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் சுந்தரம் என்ற வாசகர் , " நாம் பயன்படு...

Popular Posts