லேபிள்கள்

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

பெண்களின் குழப்பங்களும் – சோதனைகளும்!

பிற ஆசிரியர்கள் September 2, 2019 பெண்கள் Leave a comment 284 Views
(புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே!)
மனிதன் பிறந்து வாழ்ந்து மரணிக்கும் வரை பலவிதமான இன்னல்களையும், சோதனைகளையும் சந்திக்கின்றான். பொருளாதாரத்தில் சோதனை, வியாபாரத்தில் சோதனை, அதிகமான செல்வங்கள் வழங்கப்பட்டு சோதனை, வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாமலும் சோதனை, சந்ததிகளை அதிகமாக வழங்கி அதில் சோதனை, சந்ததிகளை இழந்தும் சோதனை, உடன் பிறப்புக்களிடையே விரிசல் ஏற்பட்டு சோதனை, சொத்துப்பங்கீட்டில் துரோகங்கள் இழைக்கப்பட்டு சோதனை, இரத்த பந்தங்களுக்கிடையே மனவருத்தங்கள் ஏற்பட்டு சோதனை, சிறு வயதிலேயே தாய் – தந்தையை இழந்துஅனாதையாகச் சோதனை இப்படி சோதனைகளைப் பல படித்தரங்களில் சந்திக்கும் மனிதனின் வாழ்வையும் –  மரணத்தையும் இறைவன் ஏற்படுத்தியது அதில் வெற்றிபெறுவோர் யார் என்று சோதிப்பதற்காகத்தான்.ورُ

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், வாழ்வையும் – மரணத்தையும் படைத்தான்; மேலும், அவன் (யாவையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன்:67:02)
படித்தவன் முதல் பாமரன் வரை மனிதன் சந்திக்கும் சோதனைகளிலேயே அவனுக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது فتنة النساء பெண்கள் மூலம் ஏற்படும் சோதனைகளும் – குழப்பங்களுமாகும். இறையச்சம் நிறைந்தவராக எண்ணப்பட்டவரும், சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றவரும், மக்களுக்கெல்லாம் முன்னோடியாக இருப்பவரும், கல்வியைப் போதித்து சிறந்த சமுதாயத்தை உருவாக்குபவரும், மருத்துவம் செய்து நோயாளிகளைக் குணப்படுத்துபவரும், சறுக்கி விழுந்து வழியறியாது போவதும் பெண்கள் மூலம் ஏற்படும் சோதனையில்தான்!
பெண்கள், ஆண் மக்கள், பெருவாரியான தங்கம் மற்றும் வெள்ளிக் குவியல், கண்கவர் குதிரைகள், கால்நடைகள், வேளாண் நிலங்கள், உள்ளிட்ட ஆசைப் பொருட்களை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவையாவும் இவ்வுலக வாழ்வின் (அற்ப) சுகமேயாகும். ஆனால் அழகிய உறைவிடம் அல்லாஹ்விடமே உள்ளது. (அல்குர்ஆன்:03:14)
மனிதன் இவ்வுலகில் ஆண் மக்களையும், தங்கம், வெள்ளி, வாகனம், நிலங்கள் போன்றவற்றை விரும்புகின்றான். மனிதன் இவ்வுலகில் நேசிக்கும் ح ஆசைப் பொருளாகவும் இவைகளை இறைவன் ஆக்கியுள்ளான் இதில் முதலாவது பெண்கள்.
அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிலிருந்தும் பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால்தான் ஏற்பட்டது. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்:5292)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக (அவ்வாறு இனிமையும் பசுமையும் நிறைந்ததாக அதை ஆக்கியுள்ளான்)" என்று காணப்படுகிறது.
அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" ஆண்களுக்குப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் எனக்குப் பிறகு நான் விட்டுச்செல்லவில்லை. (உஸாமா இப்னு ஸைத்(ரலி) (ஸஹீஹுல் புகாரி:5096).
இந்த இரண்டு  நபிமொழிகளிலும் பெண்கள் மூலம் ஏற்படும் குழப்பங்களையும், சோதனைகளையும் முன்னறிவிப்பாக அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த சமூகத்திற்கு எச்சரிகை செய்துள்ளார்கள்.فاتقوا இவ்வுலகத்தின் சோதனையிலிருந்தும், பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். என்று அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன இந்த இரண்டு வார்த்தைகளின் வீரியத்தைச் சற்று கூர்ந்து கவனிக்கவேண்டும்.
இந்த உலகத்தின் சோதனையின் அளவுக்குப் பெண்களின் சோதனைகள் கடுமையாக இருக்கும், தான் சந்திக்கும் இந்த முழு உலகத்தின் சோதனைகளை ஒரு முஃமின் எதிர்கொள்ளச் சிரமப்படும் அளவுக்குப் பெண்களின் சோதனைகளையும், குழப்பங்களையும் எதிர்கொள்ளச் சிரமப்படுவான்! பெண்களின் சோதனைகளும், குழப்பங்களும் இந்த உலகத்தில்தான் நிகழ்கின்றது என்றாலும் உலகத்தின் சோதனைகளுக்கு நிகராகப் பெண்களின் சோதனைகள் இருக்கும் என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளவேண்டும்.
சமூகத்தில் நிகழும் சோதனைகளிலேயே மிகவும் கடுமையானது பெண்கள் மூலம் ஏற்படும் சோதனைதான். அதேபோன்று இனிமையானதும் பசுமையானதுமான அல்லாஹுவின் இந்த உலகப்படைப்புகளில் மனிதனுக்கு மிகவும் கவர்ச்சியாக ஆக்கப்பட்டதில் முதலாவதும் பெண்களைத்தான்.
மனிதனுக்கு எதில் அதிக கவர்ச்சியும், மோகமும் உள்ளதோ அதில் சோதனையும் – குழப்பங்களும் சேர்ந்தே இருக்கும். இனிமையையும், பசுமையையும் கண்டு மோகங்கொள்ளும் மனிதன், தான் ஒரு பொறுப்பாளர் தனது பொறுப்பைப்பற்றி இறைவன் விசாரிப்பான் என்பதை மறந்துவிடுகின்றான்.
நாங்கள் நரகத்திற்கே போகமாட்டோம், அப்படியே எங்களில் சிலர் நரகத்திற்குச் சென்றாலும் மிகவும் அற்ப நாட்களில் நரகத்திலிருந்து மீண்டு நாங்கள் சுவர்க்கத்திற்கு வந்துவிடுவோம்! என்று இறுமாப்புகொண்ட பனீஇஸ்ராயீல்களின் வரலாற்றிலிருந்து நாம் படிப்பினை பெறவேண்டும் என்பதற்காகத்தான் அல்லாஹுவும் அவனது ரசூலும் (ஸல்) பனீஇஸ்ராயீல்களின் வரலாற்றை நமக்குத் தந்துள்ளனர்.
அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பாகப் பெண்கள் விஷயத்தில் பனீஇஸ்ராயீல் சமுதாயத்தில் ஏற்பட்ட குழப்பத்தை இங்கு எச்சரிக்கை செய்கின்றார்கள்.
பனீஇஸ்ராயீல்களின் சமூகத்தில் பெண்கள் மூலம் ஏற்பட்ட குழப்பங்களில் முதலாவது "அவர்கள் தங்களுக்குள் அழகுபடுத்திக்கொள்வதில் போட்டிப்போட்டனர், ஒரு பெண் உயரமாகவும் அழகாகவும் இருந்தால், குள்ளமாக இருப்பவள் அழகுசாதனங்களைப் பயன்படுத்தி உயரமானவளின் அழகுக்குச் சமமாகத் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு அந்நிய ஆண்கள் இருக்கும் சபையில் தோற்றமளிப்பாள். அத்துடன் தனது கைகளில் வாசனைத் திரவியங்களை வைத்திருந்து அந்த சபையில் வெளிப்படுத்துவாள், இப்படியாக மானக்கேடான வரம்பு மீறிய காரியங்களில் அவர்கள் ஈடுபட்டனர்…, இவ்வாறு அவர்களில் குழப்பங்கள் தோன்றி ஆண்களை மிகைக்கும் அளவுக்கு அவர்கள் ஆதிக்கம் செலுத்தினர் என்று இந்த நபிமொழிக்கு விளக்கமளிக்கும் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த  فتنة النساء  பெண்களின் குழப்பங்களையும், சோதனைகளையும் ஒரு முஃமின் எவ்வாறு எதிர்கொள்வது என்பதை இன்ஷாஅல்லாஹ் அடுத்துப் பார்ப்போம்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 23 ஜனவரி, 2020

நிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்!!

Rochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:-
மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் பெண்ணின் நிர்வாண கோல ஆடை, அவள் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகியிருக்கிறது என்பதற்கான ஆதாரமாகும். ஏனெனில், (சுவர்க்கத்தில் சுகபோகம் அனுபவித்துக்கொண்டிருந்து, ஷைத்தானின் தூண்டுதலினால் அல்லாஹ்வுக்கு மாறு செய்த) ஆதம், மற்றும் ஹவ்வா (அலைஹிமஸ்ஸலாம்) ஆகியோர் மீது அல்லாஹ் கோபம் கொண்ட வேளையில்தான் அவ்விருவருடைய ஆடைகளையும் அவர்களை விட்டும் கழட்டி, அவ்விருவருடைய வெட்கஸ்தலங்களையும் அவ்விருவருக்கும் அவன் காட்டினான்" என்ற அல்லாமா பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் இக்கூற்று என்னில் தாக்கம் செலுத்தி வேதனைப்படுத்தியது.
அல்லாஹ் மீது ஆணையாக! இக்கூற்று உள்ளங்களை உசுப்பி, கண்களை கண்ணீர் வடிக்கச் செய்கின்றது; அத்துடன் எமது நிலையையும் மீட்டிப் பார்க்க வைக்கின்றது. நிர்வாண கோலமும், அலங்காரங்களை வெளிக்காட்டித் திரியும் நிலையும் அதிகரித்துக் காணப்படும் வேதனையான நிகழ்வையே இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கண்ணியத்திற்குரிய என் சகோதரனே!
சில ஆசாபாசங்கள், மனவிருப்பங்கள் இருக்கின்றன; அவற்றை இவ்வுலகில் அல்லாஹ் தடைசெய்து, பின்னர் அவற்றிற்கு ஒப்பானதை, அல்லது மதுபானம் போன்று பெயரில் அதற்கு ஒப்பாக இருப்பதை சுவர்க்கத்தில் அவன் ஆகுமாக்கியிருக்கின்றான். ஆனால், ஆடை களைந்து நிர்வாண கோலத்தில் இருக்கும் இந்த விடயத்தைத் தவிர! இதை இவ்வுலகிலும் அல்லாஹ் தடைசெய்து, சுவர்க்கத்திலும் தடுத்தே இருக்கின்றான். மாறாக, (ஆடை மூலம்) மறைத்திருப்பதை சுவன இன்பங்களில் ஒன்றாகவும் அவன் ஆக்கியிருக்கின்றான். அல்லாஹ் கூறுகிறான்: "நிச்சயமாக அதில் நீர் பசித்திருக்கமாட்டீர். மேலும், நீர் நிர்வாணமாகவும் இருக்கமாட்டீர்!" (அல்குர்ஆன், 20:118)
சகோதரனே! உன்னைநான் எச்சரிக்கின்றேன்…..
இந்த நிர்வாண கோல ஆடை பெருநாட்களிலும், திருமண வைபவங்களிலும், வேறு சந்தர்ப்பங்களிலும் கண்ணுக்குத் தெரியும் வகையில் அதிகமாகவே வெளிப்படத் தொடங்கிவிட்டன. எனவே, என் அன்புச் சகோதரர்களே! உங்கள் ஆண் பிள்ளைகளுக்கும், உங்கள் பெண் பிள்ளைகளுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பெருநாள் ஆடைகளைத் தெரிவு செய்யும் விடயத்தில் நீங்கள் கவனம் செலுத்துங்கள்! ஏனெனில், அவர்கள் உங்கள் பொறுப்பின் கீழ் இருக்கின்றார்கள். அவர்கள் குறித்து அல்லாஹ்வின் முன்னிலையில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்"!
 அல்லாஹ் கூறுகிறான்: "ஆதமே! நிரந்தர (வாழ்வைத் தரும்) மரத்தையும், அழிவில்லாத ஆட்சியைக் குறித்தும் உமக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? எனக்கூறி ஷைத்தான் அவரிடம் ஊசலாட்டத்தை உண்டுபண்ணினான். அவ்விருவரும் அதிலிருந்து உண்டதும் அவ்விருவரது வெட்கத்தலங்கள் அவ்விருவருக்கும் வெளிப்பட்டன. சுவனத்தின் இலைகளால் அவ்விருவரும் தம்மை மூடிக்கொள்ள முயன்றனர். ஆதம் தனது இரட்சகனுக்கு மாறு செய்தார். அதனால் அவர் வழி தவறினார். பின்னர் அவரது இரட்சகன் அவரைத் தேர்வு செய்து, அவரை மன்னித்து, நேர்வழியும் காட்டினான்"(அல்குர்ஆன், 20:120 – 123)
தமிழில்: அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 21 ஜனவரி, 2020

முடியை விட மலிவாகக் கருதப்படும் பாவங்கள்

பிற ஆசிரியர்கள்
பொதுவாகவே மனிதர்களிடம் எந்த மதிப்பும் இல்லாத ஒரு பொருள் முடி! எடையிலும், கணத்திலும் மதிப்பில்லாத பொருள் முடி. ஐம்பது கிலோ அரிசி வைக்கப் பயன்படுத்தப்படும் பையில் ஒரு கிலோ முடியைத்தான் புகுத்த முடியும்.
மங்கையருக்கு அழகு சேர்த்து அதைக்கொண்டு அவர்களை பெருமையடிக்க வைப்பதும் இந்த "முடி"தான். அதுவும் அவர்களின் தலையில் இருக்கும்வரைதான். தலையிலிருந்து உதிர்ந்துவிட்டால் அந்த முடி மதிப்பற்ற பொருளாகி குப்பையைத்தான் அடைகின்றது. மனைவி சமைத்துத்தரும் உணவில் ஒரு சிறு முடியைக் கண்டுவிட்டால் மிகப்பெரிய கலவரமே நடந்துவிடும் அந்த இல்லத்தில். காரணம் முடி மதிப்பில்லாத அருவருக்கத்தக்க ஒரு பொருள் என்பதால். ஒருவன் இன்னொருவனை இழிவாகத் திட்டுவதாக இருந்தாலும் இந்த முடியை குறிப்பிட்டுத்தான் திட்டுகின்றான்.
முடி மக்களிடம் ஒரு மதிப்பற்ற பொருள் என்பதற்கு இவ்வாறான உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். முடியப்போன்று பொருட்படுத்தாமல்தான் மக்கள் பாவங்களைச் செய்துவருகின்றனர். முடியைப்போன்று மிகவும் இலகுவாக எண்ணித்தான் மக்கள் பெரும் பெரும் தவறுகளைச் செய்கின்றனர். இதுவெல்லாம் சிறிய தவறுதானே, சிறிய பாவம்தான் என்று எண்ணும் எத்தனையோ காரியங்கள் அல்லாஹுவிடம் தண்டனைக்குரிய குற்றமாக ஆகின்றது.
ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல், சொல்லப்படுகின்றது, பேசப்படுகின்றது, அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று பலர்வாயிலாக பரப்பப்படும்போது பொய்யும் மெய்யாகிப்போகின்றது. இதனால் பாதிக்கப்படும் சமூகம், அல்லது குடும்பம் இவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் அவப்பெயர்களை யாரும் சிந்திப்பதில்லை. இது போன்ற சர்வ சாதாரணமாக மனிதர்கள் செய்யும் தவறுகளைத்தான் அல்லது மக்கள் பொருட்படுத்தாத (பாவமான) காரியங்கள் குறித்துதான் அனஸ் (ரலி) அவர்களின் இந்த கூற்று உணர்த்துகின்றது.
நீங்கள் சில (பாவச்) செயல்களைப் புரிகிறீர்கள். அவை உங்கள் பார்வையில் முடியைவிட மிக மெலிதாகத் தோன்றுகின்றன. (ஆனால்,) அவற்றை நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'மூபிகாத்' என்றே கருதிவந்தோம். (அனஸ்(ரலி) ஸஹீஹுல் புகாரி:6492.) அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன். 'மூபிகாத்' என்றால் 'பேரழிவை ஏற்படுத்துபவை' என்று பொருள்.
ஒருவர் நன்மைகள் செய்கின்றார் அவர் அவற்றையே நம்பி இருந்துவிடுகின்றார். சிறு பாவங்கள் பற்றி அவர் சிந்திப்பதில்லை. இறுதியில் அவரை சிறுபாவங்கள் சூழ்ந்துகொண்ட நிலையில் அவர் தன் இறைவனை சந்திக்கின்றார். இன்னொருவர் தீமை புரிகின்றார், ஆனால் அதைப்பற்றிய அச்சத்திலேயே அவர் வாழ்கின்றார். இறுதியில் அச்சமற்ற நிலையில் அவர் தன் இறைவனைச் சந்திக்கின்றார் என அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்கள் சொன்ன இந்த செய்தியும் அனஸ் (ரலி) அவர்கள் சொன்ன செய்தியோடு சேர்த்துப் படிப்பினை பெறவேண்டியதாகும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 16 ஜனவரி, 2020

நேர்ச்சை

ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி
மார்க்கம் நமக்கு ஏராளமான இபாதத்துகளை கற்றுத்தந்துள்ளது இபாதத்துகள் அனைத்தும் அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடியும் அவனிடம் கூலியை எதிர்பார்த்தும் நிறைவேற்ற வேண்டும் ஃபர்ளான, சுன்னத்தான இன்னும் உபரியான இபாதத்களையும் மார்க்கம் வழிகாட்டியுள்ளது அவ்வாறு மார்க்கம் கூறியுள்ள இபாதத்களில் ஒன்றுதான் நேர்ச்சை என்பதும் நேர்ச்சை என்பது மார்க்கம் கடமையாக்காத ஒன்றை ஒருவர் தன் மீது கடமையாக்கிக்கொள்வதாகும்.

நேர்ச்சை என்பது மார்க்கம் வழிகாட்டிய விஷயமாகும் குர்ஆனிலும் சுன்னாவிலும் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளது
அல்லாஹ் கூறுகிறான்
அவர்கள் தாம் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் தீங்கு பரவக்கூடிய மறுமை நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள். 76:7
பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி பழமை வாய்ந்த ஆலயத்தையும் தவாஃப் செய்யுங்கள் 22:29
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.நூல்:ஸஹீஹுல் புஹாரி 6696
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். -இதன் அறிவிப்பாளரான இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலைமுறையினரைக் குறிப்பிட்ட பின்னர் இரண்டு தலைமுறையினரைக் கூறினார்களா? மூன்று தலைமுறையினரைக் கூறினார்களா? என்று எனக்குத் தெரியாது. என்று கூறினார்கள்.
(தொடர்ந்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்)
பிறகு ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் நேர்ந்து கொள்வார்கள். ஆனால் அதை நிறைவேற்றமாட்டார்கள்; நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கப்படாது. அவர்கள் தாமாகவே சாட்சியமளிக்க முன்வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்கமாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.
என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். நூல்:ஸஹீஹுல் புஹாரி 6695

மொத்தத்தில் நேர்ச்சை செய்வது ஆகுமானது அதனை நிறைவேற்றவது அவசியம் என்பதில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டுள்ளார்கள் அதில் யாரும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை.
நேர்ச்சை எவ்வாறு செய்வது
நேர்ச்சை செய்வதற்கென்று குறிப்பிட்ட வாசகம் ஏதுமில்லை ஒருவர் நான் அல்லாஹுக்காக நோன்பை நோற்க நேர்ச்சை செய்துகொண்டேன்.அல்லது இன்ன விஷயத்தைச் செய்வதற்கு நான் நேர்ச்சை செய்துகொண்டேன் என்று கூறுவதாகும் .
இமாம் அல் ஜஸீரீ கூறினார்கள் நேர்ச்சை செய்வதற்கென்று குறிப்பிட்ட வாசகம் எதுவுமில்லை நேர்ச்சையை அவசியமாக்கிக்கொள்ளக்கூடிய எந்த வாசகத்தையும் பயன்படுத்தலாம் அதில் நேர்ச்சை செய்தேன் என்று குறிப்பிடாவிட்டாலும் சரியே. நேர்ச்சையின் வாசகத்தை மொழியாமல் நிய்யத் கொண்டால் மட்டும் போதுமா இல்லையா என்பதில் கருத்துவேறுபாடுள்ளது இதில் உறுதியான கருத்து வாசகத்தை மொழியவேண்டும் நிய்யத் மட்டும் போதுமானதல்ல என்பதாகும்.அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/131
நேர்ச்சையின் நிபந்தனைகள்
நேர்ச்சையின் நிபந்தனைகள் இரண்டுவகையாகும் ஒன்று நேர்ச்சை செய்பவருடன் தொடர்புடையது மற்றொன்று நேர்ச்சை செய்யப்படுபவற்றுடன் தொடர்புடையது.
நேர்ச்சை செய்பவருடன் தொடர்புடைய நிபந்தனைகள்
இஸ்லாம் காஃபிர் நேர்ச்சையை நிறைவேற்றினால் அது சரியாகாது
விரும்பி தேர்வு செய்வது நிர்பந்தத்தினால் செய்தால் அது சரியாகாது
நேர்ச்சையை செயல் படுத்த ஆற்றல் இருக்கவேண்டும் சிறுவரோ,பைத்தியமோ நேர்ச்சை செய்தால் அது சரியாகாது
கடமை சுமத்தப்பட்டவராக இருக்கவேண்டும் கடமை சுமத்தப்படாத சிறுவரிடமிருந்து அது அங்கீகரிக்கப்படாது
நேர்ச்சையை மொழியவேண்டும் சமிஞ்னை போதுமானதல்ல ஊமையாக இருந்தாலேத் தவிற அவரது சமிஞ்னையும் விளங்குமாறு இருக்கவேண்டும். அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/130
நேர்ச்சை செய்யப்படுகின்றவற்றின் நிபந்தனைகள்

1, நேர்ச்சையின் மூலம் கடமையானதாக அல்லாமல் சுயமாகவே கடமையானதாக இல்லாத அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடிச்செய்யக்கூடிய அமலாகவும் அது இருக்கவேண்டும்
2, நேர்ச்சையாக செய்யப்படும் செயல் இபாதத் ஆக இருக்கவேண்டும் உளூ, குளிப்பு, குர்ஆனை தொடுவது,அதான் சொல்வது, ஜனாஸாவில் பங்கெடுப்பது, நோயாளியை நலம் விசாரிக்கச்செல்வது, போன்ற வஸீலாவாக இருக்கக்கூடிய காரியங்களை நேர்ச்சையாக செய்யமுடியாது. அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/132
3, நேர்ச்சை செய்யப்படும் விஷயம் மார்க்கத்தில் உள்ள செயலாக இருக்கவேண்டும் மார்க்கத்திலேயே இல்லாத விஷயத்தை நேர்ச்சையாக நிறைவேற்ற முடியாது உதாரணமாக ஒருவர் நான் இரவு முழுக்க நோன்பு நோற்கிறேன் அல்லது ஒரு பெண் நான் என்னுடைய ஹைளு காலத்தில் அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்கபோறேன் என்று கூறுவது தவறாகும் ஏனெனில் இரவு நேரம் நோன்பு நோற்பதற்குறிய நேரமல்ல,ஹைளிலிருந்தும் நிஃபாஸிலிருந்தும் தூய்மையாக இருக்கும் போது தான் நோற்க முடியும் தூய்மையாக இருக்கவேண்டுமென்பது இபாதத்திற்குரிய நிபந்தனையாகும் .அல் ஃபிக்ஹுல் இஸ்லாமி வ அதில்லதுஹு 4/111
நேர்ச்சை அல்லாஹுக்கு மாறு செய்யும் காரியமாக இருக்கக்கூடாது,நேர்ச்சை செய்வதற்கு முன்னரே ஃபர்ளான இபாதத்தாகவும் இருக்கக்கூடாது உதாரணமாக ஒருவர் ஹஜ்ஜு செய்ய நேர்ச்சை செய்தால் அது நேர்ச்சையாகாது.அதே போன்று சக்திக்கு மீறிய செயலாக,சாத்தியமற்ற செயலாகவோ இருக்கக் கூடாது.இவை அனைத்தையும் நேர்ச்சையை நிறைவேற்றும் போது கவனிக்கவேண்டும்
நேர்ச்சையின் வகைகள்
இமாம் இப்னு தகீகுல் ஈத் அவர்கள் கூறினார்கள் நேர்ச்சை மூன்று வகைப்படும்
ஒன்று: அருட்கொடை கிடைப்பதற்காக அல்லது தண்டனை பெறாமல் போனதற்காக நேர்ச்சை செய்வதாகும் இத்தகைய சூழலில் நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியமாகும்.
இரண்டு: ஒன்றை தடுப்பதற்கோ அல்லது செய்ய தூண்டுவதற்காகவோ நேர்ச்சை செய்வது உதாரணமாக ஒரு மனிதர் நான் வீட்டிற்குள் நூழைந்து விட்டால் அல்லாஹுக்காக இதை செய்கிறேன் என்று கூறி நேர்ச்சை செய்வதில் கருத்துவேறுபாடுள்ளது இதில் இமாம் ஷாஃபியி அவர்களுக்கு இரு கருத்துள்ளது ஒன்று அவர் நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கும் பரிகாரம் செய்வதற்கும் தேர்வு உரிமை வழங்கப்பட்டவர் ஆவார் என்பதாகும் இதற்கு கோபத்தின் போதும் விவாதத்தின் போதும் செய்யும் நேர்சை என்று சொல்லப்படும்.
மூன்றாவதாக: எந்த ஒன்றுடனும் தொடர்பில்லாமல் அல்லாஹ்விற்கு கட்டுப்படும் நோக்கில் அல்லாஹுக்காக நான் இதை செய்கிறேன் என்று நேர்ச்சை செய்வதாகும் அவ்வாறு செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயமாகும் இதற்குத் தான் பொதுவான நேர்ச்சை என்று கூறுகிறோம். இஹ்காமுல் அஹ்காம் 2/265
ொதுவான நேர்ச்சையின் வகைகள்
மூடலான நேர்ச்சை
தர்க்கம், கோபம் ஆகிய வற்றின் போது செய்யும் நேர்ச்சை
அனுமதிக்கப்பட்ட நேர்ச்சை
வெறுக்கத்தக்க நேர்ச்சை
பாவமான நேர்ச்சை
நன்மையான நேர்ச்சை
கடமையான நேர்ச்சை
சாத்தியமில்லாத நேர்ச்சை
மேற்கூறிய விளக்கமும் அவற்றிற்கான சட்டமும்
1, மூடலான நேர்ச்சை எதை நேர்ச்சை செய்கிறோம் என்பதைக் குறிப்பிடாமல் அல்லாஹ்விற்காக நான் நேர்ச்சை செய்துள்ளேன் என்று கூறுவதாகும்
அவ்வாறு கூறிய நேர்ச்சையில் சத்தியத்திற்கான பரிகாரம் செய்ய வேண்டுமென்று அதிகமான உலமாக்கள் கூறியுள்ளார்கள் என்று இமாம் இப்னு குதாமா அவர்கள் கூறினார்கள். அல் உத்தா ஃபி ஷரஹில் உம்தாஆ
உஸ்பத் பின் ஆமிர் அவர்கள் அறிவித்தார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சத்திய முறிவுக்கான பரிகாரமே நேர்ச்சை முறிவுக்கான பரிகாரமாகும்.
இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நூல்:ஸஹீஹ் முஸ்லிம் 3379
இது பெரும்பான்மை ஸஹாபாக்களின் கருத்தாகும் அவர்களின் காலத்தில் இதில் கருத்துவேறுபாட்டை அறியவில்லை எனவே இது இஜ்மாவாகும். .அல் உத்தா ஃபி ஷரஹில் உம்தாஆ

இந்த நேர்ச்சையுடன் தொடர்புடைய நிபந்தனை அனுமதிக்கப்பட்டதாக, அல்லது பாவமாக இருந்தாலும் சரியே உதாரணமாக ஒருவர் நான் நோன்பு நோற்றால் அல்லது தொழுதால் அது அல்லாஹ்விர்காக என் மீது நேர்ச்சையாகிவிடும் என்று கூறினால் அதனை முறிப்பது அவர் மீது கடமையாகிவிடும் இன்னும் அதற்கு சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரமும் செய்யவேண்டும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஒரு சத்தியம் செய்துவிட்டு, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் அந்தச் சிறந்ததையே அவர் செய்யட்டும்; சத்திய முறிவுக்காகப் பரிகாரமும் செய்யட்டும்.
அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள்.நூல்:ஸஹீஹ் முஸ்லிம் 3392
மூடலான நேர்ச்சையில் ஒருவர் நோன்பு நோற்பதாக நிய்யத் வைத்தார் ஆனால் எத்தனை என்று நிய்யத் வைக்கவில்லை எனில் அவர் பரிகாரத்திற்கான நோன்பை மூன்று நாட்கள் நோற்க வேண்டும் .
அதே போன்று உணவளிப்பதாக நேர்ச்சை செய்து அதிலும் எண்ணிக்கையை குறிப்பிடாவிட்டால் அவர் பத்து ஏழைகளுக்கு உணவளிக்கவேண்டும் ஏனெனில் இதிலும் அவர் சத்தியத்திற்கான பரிகாரத்தையே கடைபிடிக்க வேண்டும்
2, கோபம் மற்றும் தர்க்கத்தின் போது செய்யும் நேர்ச்சையைப்பொருத்தவரை ஒருவர் நான் இவரிடம் பேசமாட்டேன் அப்படி பேசினால் நான் இதை செய்வேன் என்றோ அதே போன்று ஒருவரது வீட்டிற்கு நான் செல்லமாட்டேன், நான் சொல்வது போன்று நடக்காவிட்டால் நான் இதைச்செய்வேன் என்றெல்லாம் கூறுவதாகும் அவர் ஒருசெயலைச் செய்யாமலிருக்க இவ்வாறு நேர்ச்சை செய்கிறார் இப்படி நேர்ச்சை செய்தவர் அவர் செய்த நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கும் அல்லது பரிகாரம் செய்வதற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளார் அவர் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம் . அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/129
3, அனுமதிக்கப்பட்ட நேர்ச்சை என்பது உண்பது, குடிப்பது, பயணம் செய்வது போன்ற அனுமதிக்கப்பட்ட காரியங்களைச் செய்வதாக நேர்ச்சை செய்வதாகும் இதிலும் நேர்ச்சை செய்தவர் அவர் செய்த நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கும் அல்லது பரிகாரம் செய்வதற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளார் அவர் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம் . அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ2/129
நபி அவர்களிடம் ஒரு பெண் வந்து நான் உங்களுக்கு முன்பாக தஃப்ஃபு அடிப்பதாக நேர்ச்சை செய்தேன் என்று கூறினார் அப்போது நபி அவர்கள் உனது நேர்ச்சையை நிறைவேற்று என்று கூறினார்கள். அம்ருபின் ஷுஐப் தனது தந்தை மற்றும் பாட்டனார் மூலமாக அறிவிக்கிறார் .நூல்: சுனன் அபீதாவூத் 3312
4, வெறுக்கத்தக்க நேர்ச்சை என்பது மார்க்கம் விரும்பாத ஒன்றை ஒருவர் நேர்ச்சை செய்வதாகும் உதாரணமாக ஒருவர் நான் பூண்டு,வெங்காயம்,போன்ற வற்றை உண்பேன் என்பதாக நேர்ச்சை செய்வதாகும் இவ்வாறு நேர்ச்சை செய்தவர்கள் சத்தியத்திற்கான பரிகாரம் செய்வது விரும்பத்தக்கதாகும் அதே வேளை அவர் தனது நேர்ச்சையை நிறைவேற்றி விட்டால் பரிகாரம் செய்யதேவையில்லை. அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ2/129
5, பாவமான நேர்ச்சை என்பது ஒரு நான் மது அருந்துவேன்,கப்ரை தவாஃப் செய்வேன், அல்லாஹ் அல்லாதவற்றிற்காக அறுத்துப் பலியிடுவேன்,திருடுவேன், உறவைத் துண்டித்து வாழ்வேன் என்றெல்லாம் மார்க்கம் பாவமென்றும்,ஹராமாக்கப்பட்டதென்றும் கூறிய பாவமான காரியத்தை நேர்ச்சை செய்வதாகும் .
இத்தகைய நேர்ச்சையை நிறைவேற்றுவது கூடாது என்பது உலமாக்களின் ஏகோபித்த கருத்தாகும்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.நூல்:ஸஹீஹுல் புஹாரி 6696
நாம் எந்நிலையிலும் அல்லாஹுக்கு மாறு செய்யக்கூடாது அப்படி நேர்ச்சை செய்தவர் சத்தியத்திற்கான பரிகாரம் செய்யவேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்விர்க்கு மாறு செய்வதில் நேர்ச்சை என்பதில்லை அதற்கான பரிகாரம் சத்தியத்திற்கான பரிகாரமாகும் ,அறிவிப்பாளர் ஆயிஷா அவர்கள் நூல்:சுனன் திர்மிதி 1524
6, நன்மையான நேர்ச்சை என்பது அல்லாவிற்குக் கட்டுப்படுவதாகும் நன்மை என்பதற்கு அரபியில் அல்பிர்ரு என்று கூறுவார்கள் அல்பிர்ரு என்பதற்கு இத்தாஅத் என்று தான் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது அதாவது கட்டுப்படுதல் இவ்வாறு தான் பின் வரும் வசனத்திற்கு விளக்கம் சொல்லப்பட்டுள்ளது
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்த அறியமாட்டீர்களா.2:44

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். 'இவருக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!' என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ' பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது!' என்று கூறினார்கள்.நூல்:ஸஹீஹுல் புஹாரி 1946
நன்மையான நேர்ச்சை மூன்று வகையாகும்
அ) ஒரு அருளை அடையவேண்டு மென்பதற்கு பகரமாகவோ அல்லது வேதனையை தடுத்துக்கொள்ள வேண்டுமென்பதற்கு பகரமாகவோ நேர்ச்சை செய்வதாகும் உதாரணமாக நோயாளியாக இருப்பவர் அல்லாஹ் எனக்கு நிவாரணத்தைத் தந்தால் நான் அவனுக்காக நோன்புவைப்பேன் என்று கூறுவதாகும் இத்தகைய நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியமாகும் என்பதில் அறிஞர்களிடம் இஜ்மா உள்ளது.
ஆ) எவ்வித நிபந்தனையுமில்லாமல் அல்லாஹ்விற்காக நேர்ச்சை செய்வதாகும் இத்தகைய நேர்ச்சை நிறைவேற்றவேண்டும் என்று தான் பெரும்பான்மை அறிஞர்கள் கூறியுள்ளார்கள்
இ) கட்டுப்படுதலுக்குரிய நேர்ச்சை அது கடமை என்பதில் எவ்வித ஆதாரவுமில்லை உதாரணமாக நோயாளியைச் சந்திப்பது இதனை நிறைவேற்றுவது அவசியமாகும்
7, கடமையான நேர்ச்சை என்பது மார்க்கம் நம்மீது கடமையாக்கிய இபாதத்துகளை செய்ய ஒருவர் நேர்ச்சை செய்வதாகும் இவ்வாறு செய்வது கூடாது .
8, சாத்தியமில்லாத விஷயத்தை நேர்ச்சை செய்யக்கூடாது அவ்வாறு செய்திருந்தால் அதனை நிறைவேற்றத் தேவையில்லை .அல்முக்னி 13/381
நேர்ச்சையின் சட்டங்கள்
நேர்ச்சை செய்வது குறித்துப் பல வசனங்கள் உள்ளன நேர்ச்சையை நிறைவேற்றுவோர்களை குர்ஆன் பாராட்டவும் செய்கிறது மரியம் அவர்கள் நேர்ச்சை செய்தது பற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறது
ஆக, நீர் புசித்தும் பருகியும் கண் குளிர்ந்திருப்பீராக! பிறகு, மனிதரில் எவரையேனும் நீர் கண்டால் நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பு நோற்கிறேன்; ஆகவே, இன்றைய தினம் எம்மனிதருடனும் பேசமாட்டேன்" என்று கூறிவிடுங்கள் என்றும் கூறினார்.19:26

அல்லாஹ் கூறுகிறான்
நிச்சயமாக நல்லவர்கள் கிண்ணங்களிலுள்ள கற்பூரம் கலந்த பானத்தை அருந்துவார்கள்.
அது அல்லாஹ்வினுடைய அடியார்கள் அருந்துவதற்காக ஏற்பட்ட ஓர் ஊற்றின் நீராகும். அதனை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடமெல்லாம்) ஓடச் செய்வார்கள். அவர்கள் தாம் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் தீங்கு பரவக்கூடிய மறுமை நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள்.76:5-7
மறுமையின் அமளி துமளியைக்குறித்த அச்சமும் நேர்ச்சையை நிறைவேற்றுவதும் நல்லோர்களின் மறுமை வெற்றிக்கும் சுவனத்தில் நுழைந்ததற்கும் காரணமாக அல்லாஹ் ஆக்கியுள்ளான்.
அதே வேளையில் பல்வேறு ஹதீஸ்ள் நேர்ச்சையை தடைசெய்தும் அது விரும்பத்தக்கதல்ல என்றும் தெரிவிக்கிறது
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நேர்ச்சை செய்ய வேண்டாம் என்று எங்களுக்குத் தடை விதிக்கலானார்கள். மேலும் " நேர்ச்சை (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்ச்சையின் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)" என்று சொன்னார்கள்.நூல்: ஸஹீஹ் முஸ்லிம். 3368
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம் ஏழைக்கு) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) அவர்கள்.  நூல்: ஸஹீஹ் முஸ்லிம்3369
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், 'நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவு தான்)' என்றார்கள்.ஸஹீஹுல் புஹாரி 6608
ஒருபுறம் நேர்ச்சையை நிறைவேற்றுவோர்களைப் புகழ்ந்தும் மறுபுறம் அதனைச் செய்யக்கூடாது என்று மார்க்கம் தடையும் விதிக்கிறது புகழுக்குரிய நேர்ச்சை என்பது கட்டுப்படுவதில் நிறைவேற்றுவதாகும் அதில் வேறு எதுவும் காரணமும் இல்லாமல் இருக்கவேண்டும் அப்படியிருந்தால் அது அனுமதிக்கப்பட்ட நேர்ச்சையாகும்

அதுவல்லாத நேர்ச்சைகள் தடுக்கப்பட்டதும் விரும்பத்தகாததுமாகும்
நேர்ச்சைகள் அல்லாஹுக்கு கட்டுப்படும் விதத்தில் செய்தால் அதனை நிறைவேற்ற வேண்டும் அவ்வாறல்லாத நேர்ச்சைகளைச் செய்தவர்கள் அதற்குப் பகரமாக நேர்ச்சையைச் செய்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் ஒருவர் சத்தியத்தை முறித்தால் அதற்கு என்ன பரிகாரமோ அதைத்தான் இதற்கும் பரிகாரமாகும்
அல்லாஹ் கூறுகிறான்
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம்மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை – ஆயத்களை – உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான் 5:89
பரிகாரம் மூன்று விதமாக உள்ளது
1, பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது உடை அளிப்பது
2, ஒரு அடிமையை விடுதலைச்செய்வது
3, மூன்று நாட்கள் நோன்பு நோற்பது
மார்க்கம் கடமையாக்கிய விஷயங்களிலும் வழிகாட்டியவற்றிலும் மார்க்கத்தின் வரம்பைப்பேணி வாழ்வோம் அல்லாஹ்விடம் கூலியை பெறுவோமாக.
– பஷீர் பிர்தவ்ஸி

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 13 ஜனவரி, 2020

இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி: அல்லாஹ்வுடன் மூஸா (அலை) அவர்களின் உரையாடல்

மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ
நபியவர்களோடு இணைத்து சமூக வலைத்தளங்களில் பரப்பும் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி:
ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம்,
"யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாகப் பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்.. இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா?"
எனக் கேட்டார்.
அதற்கு அல்லாஹு தஆலா,
"மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான் முஹம்மத் (ஸல்) இன் கூட்டத்தினரை அனுப்புவேன். அவர்கள் காய்ந்த உதடுகளுடனும், வரண்ட நாவுடனும், மெலிந்து கண்கள் குழிவிழுந்த தோற்றத்துடனும் இருப்பதோடு வயிற்றில் பசியுடன் – என்னை அழைப்பர் (துஆ மூலம்). அவர்கள் தான் அதிகம் அதிகம் எனக்கு நெருக்கமானவர்கள்!
மூஸாவே! உங்களுக்கும் எனக்கும் மத்தியில் 70000 தடுப்புக்கள் இருந்தன. ..ஆயினும் இஃப்தார் நேரத்தில் எந்த ஒரு தடுப்பும் எனக்கும் நபி முஹம்மதின் உம்மத்திற்கும் இருக்காது.
மூஸாவே! இஃப்தார் நேரத்தில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப்படாது. அதற்கான பொறுப்பை நானே ஏற்கிறேன்"
என்றான்..
ஸூப்ஹானல்லாஹ்!!
இந்த ஹதீஸை அதிகம் அதிகம் பகிரவும்..
தயவு செய்து மகத்துவம் மிக்க கண்ணியப்படுத்தப்பட்ட நோன்பு திறக்கும் நேரத்தை வீணாகக் கழிக்காமல் இறைவனின் பொருத்தம் அடைவீர்..
மேற்படி செய்தி 'நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்பதற்கான அறிவிப்பாளர் வரிசையுடன் எந்த ஹதீஸ் கிரந்தத்திலும் இடம் பெறவில்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த செய்தியை ஹிஜ்ரி 894 ல் மரணித்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் இப்னு அப்துஸ் ஸலாம் அஸ்ஸபூரி என்பவர் தனது கதைகளும், கப்சாக்களும், இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளும் நிறையவே உள்ள 'நுஸ்ஹதுல் மஜாலிஸ் வமுன்தஹபுன் நபாயிஸ்' என்ற புத்தகத்தில் 182, 183 ஆகிய பக்கங்களில் எந்த ஒரு ஆதாரத்தையும் முன்வைக்காமல் வெறும் புனையப்பட்ட கதையாகக் குறிப்பிடுகின்றார்.
மேலும் அவரை தொடர்ந்து ஹிஜ்ரி 1127 இல் மரணித்த இஸ்மாயீல் ஹக்கி அல் ஹலூதி என்பவர் தனது 'ரூஹுல் பயான்' எனும் தப்ஸீரில் (8/112) எந்த ஒரு அறிவிப்பாளர் வரிசையையும் குறிப்பிடாமல் எழுதி வைத்திருக்கின்றார்.
இவ்வாறு பிற்பட்ட காலத்தில் வந்தவர்கள் எழுதி வைத்துள்ள மேற்படி செய்தியை நபியவர்களோடு இணைத்து சமூக வலைத்தளங்களில் பரப்புவது பாரிய குற்றமாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் இந்த செய்தி நபி மூஸா (அலை) அவர்களின் கண்ணியத்தைக் குறைப்பதாகும் என்பதை நாம் அவதானிக்க வேண்டும். 'நபியவர்களின் உம்மத்தைச் சேர்ந்த ஒருவர் நபி மூஸா (அலை) அவர்களை விட அல்லாஹ்விடத்தில் கண்ணியமானவர்' என்ற தோற்றப்பாட்டை இந்த செய்தி ஏற்படுத்தக் கூடிய அபாயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே இவ்வாறான எந்த ஒரு ஆதாரமற்ற செய்திகளையும் நன்மை என்று நினைத்துப் பகிர்வதில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம்!
– எம். றிஸ்கான் முஸ்தீன் மதனி

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 11 ஜனவரி, 2020

ரமளானை மூன்றாக நபியவர்கள் பிரித்து சிறப்புக்களை சொன்னார்களா?

முதல் பத்து ரஹ்மத்துடைய (அருள் நிறைந்த) பத்து
இரண்டாம் பத்து மஃபிரதுடையது (பாவமன்னிப்பு)
மூன்றாம் பத்து இத்குன் மினன் நார் (நரக விடுதலை)

ஸல்மான் அல்பாரிஸி (ரழி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படும் செய்தி இப்னு ஹுஸைமாவில் 1887 ஆம் இலக்கத்திலும், அல் மஹாமிலி தனது அமாலீ எனும் கிரந்தத்தின் 293 ஆம் பக்கத்திலும், பைஹகி அவர்கள் ஷுஅபுல் ஈமானின் (7/216) இலும் இன்னும் சில அறிஞர்களும் இந்த செய்தியை பதிவு செய்துள்ளனர். என்றாலும் இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இரு குழறுபடிகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
1) அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஸஈத் இப்னு முஸய்யிப் அவர்கள் ஸல்மானுல் பாரிஸி (ரழி) அவர்களிடம் இந்த செய்தியை கேட்டதாகப் பதியப்பட்டுள்ள போதிலும் ஸஈத் இப்னு முஸய்யிப் ஸல்மான் (ரழி) அவர்களிடம் ஹதீஸ்களை கேட்டதாக எந்த ஆதாரமும் கிடையாது.
2) இந்த அறிவிப்பாளர் வரிசையில் 'அலி இப்னு செய்த் இப்னு ஜத்ஆன்' என்பவர் இடம் பெறுகின்றார். இவர் ஹதீஸ் துறை அறிஞர்களுக்கு மத்தியில் பலகீனமானவராகக் கருதப்பட்டவர். இவர் பலகீனமானவர் என்பதை இமாம்களான அஹ்மத், இப்னு மயீன், இப்னு ஹுஸைமா, நஸாயி போன்றோர் சான்று பகிருகின்றனர். ஆதாரம் "ஸியர் அஃலாமுன் நுபலா" (5/207)
இமாம் அல்பானி அவர்களும் தனது "ஸில்ஸிலதுல் அஹாதிஸ் அல்லயீபா வல் மவ்லூஆ" என்ற கிரந்தத்தில் (871) இலக்கத்தில் இந்த செய்தி பலகீனமானது என்பதை உறுதி செய்கிறார்.
மேலும் இந்த செய்தியின் மதன் (கருப்பொருளிலும்) முறன் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். காரணம் ரமளான் மாதத்தை பொறுத்தவரை அதனுடைய எல்லா நாற்களிலும் அல்லாஹ்வின் ரஹ்மதாகிய அருளும், அவன் மன்னிப்பும் மேலும் எல்லா இரவுகளிலும் நரக விடுதலையும் இடம் பெறுவதாக ஸஹீஹான ஹதீஸ்களில் காண முடிகின்றது. இவ்வாறு முழு மாதத்திலும் அல்லாஹ்வின் அருள், மன்னிப்பு மற்றும் நரக விடுதலை இருக்கும் இந்த மாதத்தை இவ்வாறு மூன்றாகப் பிரிப்பது பிழையான வழிகாட்டலாகும் என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
புனிதம் பூத்துக் குலுங்கும் புனித ரமளானின் சிறப்பு தொடர்பாக ஏகப்பட்ட ஸஹீஹான செய்திகள் இருக்க இவ்வாறான பலஹீனமான செய்திகளை பதிவதிலும், பகிர்வதிலும் இருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் புனித ரமளான் மாத்தில் நல்லரங்கள் செய்வதற்கான பாக்கியத்தை எம்மனைவருக்கும் ஏற்படுத்தி, எமது நோன்பையும் இரவு வணக்கத்தையும் ஏனைய வணக்கங்களையும் ஏற்றுக் கொள்வானாக!

அரபு மூலம்: islamqa.info/ar/answers/21364
தமிழில்: எம். றிஸ்கான் முஸ்தீன் மதனி

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 6 ஜனவரி, 2020

கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து... உடல் உறுதிக்கு உரமூட்டும் கேழ்வரகு!

நமது அன்றாட உணவாக இருந்த சிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு. முன்பெல்லாம்  கேப்பைக் களி கிண்டாத வீட்டையோ, கேப்பைக் கூழ் இல்லாத அம்மன் கோவில் திருவிழாக்களையோ பார்ப்பது அரிதான ஒன்று. இப்படி உணவாக மட்டுமல்லாமல், நமது கலாசாரத்தோடும் நீண்டகாலத் தொடர்புடையது கேழ்வரகு.
`கேப்பை', `ராகி' எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் ஒரு வகை சிறுதானியம் இது. உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் கேழ்வரகு, இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, பீகார் மற்றும் சில மாநிலங்களில் முக்கியமான பயிராகப் பயிரிடப்படுகிறது.  
பிறந்த குழந்தை முதல் 90 வயது பெரியவர் வரைக்கும் அனைவரும் சாப்பிடக்கூடிய உணவுப்பொருள் இது. குறைந்த விலையில் கிடைக்கும் இதன் மகத்துவத்தும், மருத்துவ குணங்களின் பட்டியலோ வெகு நீளம்.   இவ்வளவு சத்துள்ள நம் பாரம்பர்ய உணவு, ஆடி மாதத்திலும் அம்மன் திருவிழாக்களிலும் கூழாகப் படைக்கப்பட்டு, அனைவருக்கும் விநியோகிக்கப்படுகிறது. சரி... இதைச் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? பார்க்கலாமா?
எலும்புக்கு வலிமை சேர்க்கும்!
எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் சத்து  மிக அவசியம். கேழ்வரகில் மற்ற தானியங்கள், அரிசி போன்றவற்றைவிட அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற (மெனோபாஸ்) பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) ஏற்படாமல் தடுக்க இது உதவும்.                                                                                  
உடல் எடை குறைக்க உதவும்!
இதில் உள்ள  ட்ரிப்டோபான் (Tryptophan) அமினோ அமிலம் பசியைக் கட்டுப்படுத்தும். அதனால், குறைவாகச் சாப்பிட்டாலே வயிறு நிரம்பியதுபோன்ற உணர்வு ஏற்படும்.  அதனால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகப் பொருத்தமான உணவு.
சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து!
அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்துகொண்டது. இது, லோ கிளைசெமிக் இண்டெக்ஸ்  (Low Glycaemic Index Food) உணவு வகையைச் சேர்ந்தது. அதாவது, இதை உண்ட பின்னர் ரத்தத்தில் உடனடியாக சர்க்கரை அளவு அதிகரிக்காது. கேழ்வரகைக் கூழாகக் குடிப்பதைவிட, களியாகவோ, ரொட்டியாகவோ உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
கொழுப்பைக் குறைக்கும்!
உடலின் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக, இதில் உள்ள லெசித்தின் (Lecithin), மெத்தியோனின் ( Methionine)  போன்ற அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மைகொண்டவை.
ரத்தச்சோகை வராமல் தடுக்கும்!
ராகியில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும்; ரத்தச்சோகை வராமல் தடுக்கும். எனவே, இது ரத்தசோகை, உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து.

உடற்சூடு நீங்கும்
ராகி உடல்சூட்டைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒன்று.  எனவே, கோடை காலத்தில் உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கச் செய்யும் நல்ல  உணவுப் பொருள் இது. ராகியில் உள்ள தாதுச்சத்துகள் மனதுக்கு இதம் தந்து, மனஅழுத்தம் நீங்க உதவும்.
உடலுக்கு வலிமை தரும்!
ராகியில் அதிக அளவில் புரதம் உள்ளதால்,  உடலுக்கு வலிமை கிடைக்கும். உடல் உழைப்பு உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டிய தானியம் இது.
மலச்சிக்கல் தீர்க்கும்!
ராகியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், உணவு எளிதில் ஜீரணமாக இது உதவும்; மலச்சிக்கல் பிரச்னைகளைத் தீர்க்கும்.
தைராய்டு நோயாளிகளுக்கு உகந்தது
தைராய்டு நோயாளிகளுக்கு மிகவும் உகந்த உணவு ராகி. குறிப்பாக, ஹைப்பர்தைராய்டு (Hyperthyroid) பிரச்னை உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டிய தானியம்.
கர்ப்பிணிகளுக்கு நல்லது!
கர்ப்பிணிப் பெண்கள், பாலுட்டும் தாய்மார்களுக்கு தேவையான சத்துகளைத் தரும்  சிறந்த தானியம் கேழ்வரகு. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்;  குழந்தைபேறு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான ரத்தபோக்கு, ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் உணவுச் சத்து குறைபாட்டை சரிசெய்யும்.  
அதே நேரத்தில், ஆண்டு முழுவதும் கேழ்வரகு உணவுகளை  கூழாகக் குடிக்காமல், இட்லி, தோசை, புட்டு, களி, கஞ்சி, ரொட்டி, பக்கோடா, இனிப்பு உருண்டை... என உணவுகளில் என்னென்ன வகைகள் உள்ளனவோ, அத்தனையிலும் ராகியைப் பயன்படுத்தி சாப்பிட்டு வரலாம், பலன் பெறலாம்!

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

மஞ்சள் கலந்த பாலைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

வெறும் பாலைக் குடிக்காதே. அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி ' என்பார்கள் நம் வீட...

Popular Posts