லேபிள்கள்

வெள்ளி, 29 ஜனவரி, 2021

குழந்தைகளைநெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு


குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு
"உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற வேண்டும்" என்பர். தண்டனைகள் தவறு செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும், தவறு செய்தவன் மேலும் தவறு செய்யாமல் இருக்கவும் உதவும்.
நாம் இங்கு குற்றம் செய்யும் குழந்தைகளைத் தண்டித்தல் குறித்து அலச உள்ளோம். குழந்தைகள் குற்றம் செய்தால் பெற்றோர்கள் உடல் ரீதியாகத் தண்டிக்கக் கூடாது. அப்படித் தண்டித்தால் பிள்ளைகள் பெற்றோருக்கு எதிராக காவல் துறையினரிடம் புகார் செய்யலாம் என சில நாடுகள் சட்டம் இயற்றி பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் இருக்கும் மானசீக உறவுக்குத் தடையாக இருக்கின்றனர். உதாரணமாக, தந்தை அடிக்க முற்பட்டால் உடனே 555 இற்கு போன் செய்தால் காவல் துறை வீட்டில் வந்து நிற்கும் என்று சட்டம் போட்டால் பெற்றோர் எப்படி பிள்ளைகளைத் திருத்த முடியும். பெற்றோருக்குப் பிள்ளைகள் விடயத்தில் இருக்கும் உரிமைகள் என்ன? என்ற கேள்வி எழும்.
மற்றும் சிலர் சட்டம் இருக்கின்றதோ இல்லையோ பாசத்தின் பெயரில் குழந்தைகள் தவறு செய்யும் போது கண்டுகொள்ளாதிருந்து விட்டு தவறுகள் பெருத்த பின்னர் கவலைப்படுகின்றனர்.
இது இப்படியிருக்க, குழந்தைகளைத் தண்டிக்கும் சிலர் கொடூரமாக நடந்து கொள்கின்றனர். குழந்தைகளை நல்வழிப் படுத்தல் என்பதுதான் தண்டனையின் நோக்கம். தண்டிக்காமலேயே வழிகாட்டுவதன் மூலம் அந்த இலக்கை அடையமுடியுமாக இருந்தால் தண்டனை இல்லாமலேயே நல்லுபதேசத்தின் மூலமே அடைய முயற்சிக்க வேண்டும்.
சிலர் தமது கோபத்தைத் தீர்ப்பதற்காகவும் பழிவாங்குவதற்காகவும் கையில் கிடைத்ததை எடுத்து தண்டிக்கின்றனர். இல்லையில்லை தாக்குகின்றனர். இது குழந்தைகளை நல்வழிக்குட்படுத்துவதற்குப் பதிலாக மனரீதியில் பாதிப்படையச் செய்யலாம். வீட்டை விட்டு வெருண்டோட வைக்கலாம். போதை, தீய நட்பு, கெட்ட பழக்க வழக்கங்கள் போன்ற தவறுகளுக்கு உள்ளாக்கலாம். இத்தகைய தண்டனை முறையை இஸ்லாமும் ஏற்காது. இதயத்தில் ஈரமுள்ள எவரும் ஏற்கமாட்டார்கள். எனவே தண்டித்தல் குறித்த சில வழிகாட்டல்களை வழங்குதல் நல்லதெனக் கருதுகின்றேன்.
1. கோபத்தில் இருக்கும் போது தண்டிக்காதீர்கள்:
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்பார்கள். அதனால்தான் கோபப்பட்டவர் வீட்டில் பொருட்களை, கண்ணாடியை யெல்லாம் உடைப்பதைப் பார்க்கின்றோம். கோபத்தில் நாம் பேசினால் நமது பேச்சு சரியாக இருக்காது. தண்டித்தால் அது நியாயமாக இருக்காது. சின்னக் குற்றத்திற்குப் பெரிய தண்டனையளித்து அநியாயம் செய்துவிடுவோம். எனவே, உங்கள் கோபம் தணியும் வரையும் இருந்து நீங்கள் நிதானத்திற்கு வந்த பின்னர் நிதானமாகத் தண்டியுங்கள்.
நமது பெற்றோர்கள் சிலரின் செயற்பாடு ஆச்சர்யமாக இருக்கின்றது. மூத்தவன் இளையவனைத் தள்ளிவிட்டான். இளையவனின் தலையில் இரத்தம் வடிகின்றது. பாதிக்கப்பட்ட இளையவனைக் கவனிப்பதற்கு முன்னர் மூத்தவனுக்கு நாலு மொத்து மொத்தாவிட்டால் இவர்களுக்கு ஆத்திரம் அடங்காது. இதனால் தவறு செய்த பிள்ளை அடிக்குப் பயந்து ஓடி வேறு பிரச்சினைகளைத் தேடிக் கொண்டு வருகின்றது. பிறகு இரு குழந்தைகளுக்குமாக மருத்துவம் செய்ய வேண்டிய நிலை பெற்றோருக்கு!
எனவே, தண்டிப்பதிலும் நிதானமும் நியாயமும் தேவை. எனவே, கோபத்தில் இருக்கும் போது தண்டிப்பதைத் தவிருங்கள். நிதானமான நிலையில் தண்டியுங்கள். கோபம் அடங்கிய பின்னர் எப்படி தண்டிப்பது என்று கேட்கின்றீர்களா? குழந்தை இதன் பிறகு இந்தத் தவறை செய்யக் கூடாது என்று உணரும் அளவுக்கு அந்த எண்ணத்தை ஏற்படுத்து வதற்காகத் தண்டியுங்கள். கோபத்தைத் தீர்ப்பதற்காகத் தண்டிப்பதென்றால் அது முறையான தண்டனையல்ல.
2. சதா தண்டிக்காதீர்கள்:
சில பெற்றோர் எப்போதுமே பிள்ளைகளை திட்டித் தீர்த்துக் கொண்டே இருப்பார்கள். சதாவும் தண்டித்துக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு நடந்து கொண்டால் எமது தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு எழாது. தவறில் பிடிவாதமும் முரட்டுத்தனமும் உண்டாகும். வெளியிடத்தில் கூட தவறு செய்து அடிவாங்குவது அவர்களுக்குப் பெரிய பாதிப்பாகத் தெரியாது. நாம் வாங்காத அடியா, கேட்காத ஏச்சா என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் வாழ்நாளிலேயே திருந்தமாட்டார்கள். எனவே, எப்போதாவது ஏதாவது பெரிய தவறுகளுக்காக மட்டும் தண்டியுங்கள். சின்னச் சின்னப் பிழைகளைத் திருத்துங்கள். அப்போது அடியென்றால் பயப்படுவார்கள். ஏச்சு என்றால் கூச்சப்படுவார்கள்.
3. வன்முறை வேண்டாம்:
குழந்தைகளைக் கண்டிக்கும் போது காயம் ஏற்படாவண்ணம் இலேசாகத் தண்டிக்க வேண்டும். கல் மனதுடன் நடந்து கொள்ளக் கூடாது. என் பெற்றோர் தண்டித்தாலும் என்னுடன் பாசத்துடன்தான் இருக்கின்றனர் எனக் குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும். கடுமையான தாக்குதல்களால் குழந்தைகள் குடும்பத்தின் எதிரிகளாக மாறுவர். தகாத உறவுகளை ஏற்படுத்தி தம்மைத் தண்டித்த பெற்றோர்களை இழிவுபடுத்துவர்.
4. தண்டித்தல் என்பது இறுதி முடிவாக இருக்கட்டும்:
எடுத்ததற்கெல்லாம் அடிக்காமல் புத்தி சொல்லுங்கள். சிலபோது கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துங்கள். சிலபோது அவர்களது தவறுகளால் நீங்கள் வருத்தப்படுவதை நடைமுறையில் காட்டுங்கள். பிள்ளை தானாக மனம் இறங்கி நான் செய்த தவறால் பெற்றோர்கள் வருந்துகின்றார்கள் என்று தன்னை மாற்றிக் கொள்ளலாம். இவையெல்லாம் பலனளிக்காத போது இலேசாக அடியுங்கள். எடுத்ததும் கடுமையாகத் தாக்கி விடாதீர்கள்.
5. தண்டிப்பதிலும் நீதி நியாயம் வேண்டும்:
தவறுக்கு ஏற்ற தண்டனையே வழங்க வேண்டும். தண்டனை முறையில் கூட பிள்ளை படிப்பினை பெற வேண்டும். மகன் தவறுதலாக ஒரு கோப்பையை உடைத்துவிட்டான். இதற்காக தந்தை அடிக்கிறார். அதே மகன் ஒரு ஹறாத்தைச் செய்துவிட்டான். இப்போது கோப்பைக்காக அடித்ததை விட குறைவாக அடி என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஹறாத்தைச் செய்வதை விட கோப்பையை உடைத்ததைத்தான் எனது தந்தை பாரதூரமாகக் கருதுகின்றார் என்ற எண்ணத்தையும் குழந்தையின் உள்ளத்தில் ஏற்படுத்தி விடுகின்றோம். இது எவ்வளவு பெரிய தவறு என்று சிந்தித்துப் பாருங்கள். எனவே, தண்டனை நீதியானதாக, நியாயமானதாக, தவறின் அளவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும்.
6. தண்டனையை சேமிக்காதீர்கள்:
சில பெற்றோர் பிள்ளைகள் தவறு செய்யும் போது கண்டுகொள்ளாமல் பல்லைக் கடித்துக் கொண்டு இருப்பார்கள். நாலைந்து தவறுகளை ஒன்றாக சேர்த்து எல்லாவற்றுக்கும் சேர்த்து மொத்தமாக அடிப்பார்கள். இது குழந்தைகளுக்கு அதிக வேதனையைக் கொடுக்கும். எல்லாத் தவறுக்குமாகக் கிடைக்கும் அடியெனப் பார்க்காமல் ஒரு தவறுக்கு இப்படி அடிக்கிறார்களே என பெற்றோர்களை வெறுக்க ஆரம்பித்துவிடுவர். எனவே தவறுக்கு அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் தவறு நடந்தவுடன் அடித்து அதை அந்த இடத்திலேயே மறந்துவிட்டு சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள்.
7. நிரபராதிகளைத் தண்டிக்காதீர்கள்:
குழந்தைகள் தண்டனையிலிருந்து தப்புவதற்காகப் பொய் சொல்வார்கள். அடுத்தவர்களை மாட்டி விடுவார்கள். ஒரு தவறு நடந்து பின்னர் தான் தப்ப வேண்டும் என்பதற்காக அடுத்தவரை மாட்டிவிடுவர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குற்றத்தைக் குறித்த நபர் செய்தது உறுதியாகாத வரை தண்டிக்கக் கூடாது. தவறு செய்யாமல் தண்டிக்கப்பட்டால் குழந்தைகளின் உள்ளம் நொறுங்கிப் போகும். குறித்த நபர் தவறு செய்தது உறுதியாகாத சந்தர்ப்பங்களில் பொதுவாகப் புத்தி சொல்வதோடு விட்டுவிட வேண்டும். நிரபராதியைத் தண்டித்துவிட்டால் குழந்தையென்று பார்க்காமல் மன்னிப்புக் கேட்டுவிடுங்கள்.
8. மறதி, தவறுதல், நிர்ப்பந்த நிலை என்பவற்றை மன்னியுங்கள்:
தவறுதலாக அல்லது மறதியாக இடம்பெறும் தவறுகள் அல்லது நிர்ப்பந்த நிலையில் நிகழும் குற்றங்களுக்கு மன்னிப்பு அளியுங்கள். அல்லாஹ் இத்தகைய நிலைகளை மன்னித்துள்ளான். எனவே இது போன்ற சந்தர்ப்பங்களில் புத்தி சொல்வதுடன் விட்டுவிடுங்கள்.
9. உற்சாகத்திற்கு தண்டனையா?
சில பெற்றோர் பிள்ளைகள் ஓடியாடி விளையாடும் போது எரிச்சல்பட்டு பேசாம ஒரு இடத்தில இரு என்று கண்டிப்பார்கள். குழந்தைகள் என்றால் ஓடியாடி விளையாடத்தான் செய்வார்கள். இதையெல்லாம் தவறு என்று தண்டிக்கக் கூடாது. எனவே, இது போன்ற சந்தர்ப்பங்களில் அவர்களை ஒழுங்குபடுத்துங்கள்.
10. பிரச்சினைகளைக் கவனிக்காமல் தண்டிக்காதீர்கள்:
ஒரு பாடத்தில் குழந்தை குறைந்த புள்ளி எடுத்துள்ளது அல்லது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறவில்லை போன்ற சந்தர்ப்பத்தில் குழந்தையை வையாதீர்கள். குழந்தையின் பின்னடைவுக்கு குழந்தை மட்டும் காரணமாக இருக்காது. ஆசிரியரின் குறை இருக்கலாம். பாடம் முறையாக நடக்காதிருந்திருக்கலாம். மற்றவர்கள் விட்ட குறைக்கு குழந்தைகள் தண்டிக்கப்படலாமா? எனவே, குழந்தையின் குறையில் அடுத்தவருக்கும் பங்கு இருக்கும் போது அல்லது குழந்தையிடம் மானசீகப் பிரச்சினைகள் இருக்கும் போது குழந்தையைத் தண்டிக்காமல், ஏசாமல் நீங்கள் பிரச்சினையை இணங்கான முயற்சியுங்கள். பின்னர் குழந்தையை நெறிப்படுத்துங்கள்.
11. குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டிக்காதீர்கள்:
குழந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டு இனி இப்படிச் செய்யமாட்டேன் என்று கூறினால் தண்டிப்பதை விட்டுவிடுங்கள். அதே போன்று அல்லாஹ்வுக்காக அடிக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டால் அடிப்பதை நிறுத்திவிடுங்கள். தண்டிப்பது என்பது இனி இது போன்ற தவறைச் செய்யக் கூடாது என்று உணர்த்துவதற்காகத்தான். பிள்ளையே இனி இப்படிச் செய்ய மாட்டேன் என்று கூறிய பின் தண்டனை தேவையில்லையல்லவா?
இது போன்ற வழிமுறைகளைக் கையாண்டு தண்டிப்பின் உண்மையான பயனை அடைந்து கொள்ள முயல்வோமாக!

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 26 ஜனவரி, 2021

பெண்ணே பெண்ணே! பொறாமைவேண்டாம்! கண்ணே!

பொறாமை பெண்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். தான் பெறாத ஒன்றை பிறர் பெறும் போது ஏற்படும் ஒருவகை உணர்வே பொறாமை உணர்வாகும். சிலர் தாம் பெற்றிருப்பதைத் தனக்குக் கீழே உள்ளவர்கள் பெறும் போதும் பொறாமை கொள்வர்.
பெண்களின் பொறாமைக் குணம் ஆச்சர்யமானது. பொறாமை நெருக்கமானவர்களுக்கு மத்தியில் தான் ஏற்படும். அமெரிக்காவில் இருக்கும் ஒருவன் மீது இலங்கையில் இருப்பவன் பொறாமை கொள்ள மாட்டான். அடுத்து ஒரே துறையில் இருக்கும் இருவருக்கிடையே தான் பொறாமை ஏற்படும். ஆனால் பெண்களின் பொறாமை ஆச்சர்யமானது.
தனது சகோதரிக்கு அழகிய கணவன் கிடைத்திருக்கிறான் என்று பொறாமை கொள்ளும் பெண்கள் இருக்கின்றனர். சில பெண்கள் தமது குடும்ப வாழ்வில் பல சிரமங்களை சந்தித்திருப்பர். கணவனால் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கப்பட்டிருப்பர். இவர்கள் தங்களது மருமகள்களைப் பார்க்கின்றனர். தமது மகன்கள் அவர்களை அடிப்பதில்லை, தமது மருமகள் தாம் அனுபவித்த கஷடங்களை அனுபவிக்காமல் மகிழ்வாக வாழ்வதைப் பார்க்கும் போது சில மாமிகளுக்குப் பொறாமை ஏற்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் அந்தப் பெண் பெரும் இன்பத்தை நிறுத்த ஏதேனும் செய்ய முடிந்தால் செய்வார்கள். அப்படி இல்லையென்றால் புறம் பேசி, கோள் சொல்லி அல்லது அவதூறு கூறி அவளது கௌரவத்தைக் குறைக்க முயல்வார்கள். இந்தப் பொறாமைக் குணத்தால் மன அமைதி கெடுகின்றது. அல்லாஹ்வின் அதிருப்திக்கும், மக்களின் வெறுப்புக்கும் ஆளாக நேரிடுகின்றது. இது தேவைதானா?
'நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள்' என அல்லாஹ்வின் தூதர் ஏவியுள்ளதை எடுத்து நடக்கக் கூடாதா
'அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியதற்காக இம் மனிதர்கள் மீது அவர்கள் பொறாமை கொள்கின்றனரா?' (4:54)
அல்லாஹ் உங்களில் ஒருத்திக்கு அழகான கணவனை அல்லது குழந்தைகளை வழங்கியதற்காகப் பொறாமை கொள்கிறீர்களா? அல்லாஹ் ஒருத்திக்கு பணத்தையும் பேரையும் புகழையும் வழங்கியிருப்பதற்காக உங்களுக்குப் பொறாமை ஏற்படுகின்றதா? அப்படியாயின் நீங்கள் அல்லாஹ்வை அல்லவா குறை காண்கின்றீர்கள்?
நீங்கள் பொறாமைக்காரியாக இருந்தால் உங்கள் நிம்மதியையும் மன அமைதியையும் நீங்களே கெடுத்துக் கொள்வீர்கள். நீங்கள் யார் மீது பொறாமை கொள்கிறீர்களோ அவர்கள் சந்தோசப்படும் போதெல்லாம் உங்களுக்குக் கவலையை ஏற்படும். இது தேவை தானா?
உங்களோடு கூட இருப்பவர்கள் வாழ்வில் சந்தோசங்களை அனுபவிக்கும் போது அவர்கள் மீது பொறாமை கொள்வதை விட்டு விட்டு அவர்களை வாழ்த்தக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைக்காதது உங்கள் தோழிக்கோ உறவுக்காரப் பெண்ணுக்கோ கிடைத்திருக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.
உங்கள் உள்ளத்தில் ஷைத்தான் புகுந்து விளையாட இடமளிக்காதீர்கள். பொறாமைக் குணம் எட்டிப் பார்க்கும் போதே அல்லாஹ் தான் நாடியதை நாடியவர்களுக்கு வழங்குவான். இதைப்பற்றி நான் எதற்கு அலட்டிக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.
'இவர்களுக்குப் பின் வருவோர், 'எங்கள் இரட்சகனே! எங்களையும், நம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திவிட்ட எமது சகோதரர்களையும் மன்னிப்பாயாக! இன்னும், நம்பிக்கை கொண்டோர் குறித்து எமது உள்ளங்களில் குரோதத்தை ஏற்படுத்தி விடாதே! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்பு டையவனுமாவாய்' எனக் கூறுவார்கள்.' (59:10)
இவ்வாறு துஆச் செய்து மனதில் குரோத எண்ணம் தலைகாட்டுவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்ளுங்கள்.
உங்களுடன் கூட இருப்பவர்கள் சிறப்பை அடையும் போது மகிழ்வடையக் கற்றுக் கொள்ளுங்கள். பொறாமை கொண்டு அவர்களின் அந்தஸ்தையும், மகிமையையும் குறைக்கும் வண்ணம் பேசித் தொலைக்காதீர்கள். கூட இருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது முகத்தை சுருட்டிக் கொண்டு சோகத்தில் வாடாதீர்கள். மலரும் பூக்களைக் கண்டு மனம் சோர்வடையலாமா? பூக்களின் நறுமணத்தை சுவாசிக்காமல் மூக்கை மூடிக் கொள்ளலாமா? எனவே, பொறாமை கொள்ளாதீர்கள். பொறாமை மூலமாக அல்லாஹ்வின் அன்பையும் மக்களது நேசத்தையும் இழந்து மன அமைதியையும், நிம்மதியையும் இழந்து கோள் சொல்லி, புறம் பேசி, அவதூறு கூறி, பாவத்தைத் தேடாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் பிறர் மீது பொறாமை கொள்ளக் கூடாது. பிறர் உங்கள் மீது பொறாமை கொள்ளும் விதத்தில் நடந்து கொள்ளவும் கூடாது. இதிலும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாழ்வில் வளங்களையும், உயர்வையும் அடையும் போது கர்வம் கொள்ளாதீர்கள். நீங்கள் அடையும் வளங்களால் உங்களைச் சூழ இருப்பவர்களும் நலம் பெறும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். அதே வேளை பிறரின் பொறாமையால் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்க பின்வரும் விடயங்களில் அதிக அக்கறை செலுத்துங்கள்.
01. பொறாமைக்காரனின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள்
'இன்னும் பொறாமைக்காரன் பொறாமைப் படும்போது ஏற்படும் தீங்கை விட்டும் (நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என நபியே! நீர் கூறுவீராக!' (113:5)
என்று பாதுகாவல் தேடுமாறு அல்லாஹ் எமக்குக் கற்றுத் தந்துள்ளதைக் கவனத்திற் கொள்ளுங்கள்.
02. அல்லாஹ்வை அஞ்சி தக்வாவுடன் வாழுங்கள்
'எவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்கிறாரோ அவருக்கு அவன் ஒரு வழியை ஏற்படுத்து வான்' (65:2) என்ற குர்ஆன் வசனத்தை மனதில் கொள்ளுங்கள்.
03. அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து தவக்குலுடன் வாழுங்கள்
'எவர் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கின்றாரோ, அவருக்கு அவனே போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தனது காரியத்தை நிறைவேற்றுபவன். ' (65:3)
என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
04. பொறாமைக்காரர்கள் என்ன செய்வார்களோ என்று வீணே எண்ணி, எண்ணி கவலை கொள்ளாதீர்கள். அவள் சூனியம் செய்வாளோ, வசியம் செய்வாளோ, எதையாவது மந்திரித்துத் தந்து விடுவாளோ, என் மீது உள்ள பொறாமையில் எனது மாப்பிள்ளையை வளைத்தப் பொட்டு விடுவாளோ, எனக்கும் என் கணவருக்கும், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இடையில் பிரிவை ஏற்படுத்தி விடுவாளோ என சும்மா போட்டு மனதை அலட்டிக் கொண்டிருக்காதீர்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக செயற்படுங்கள்.
05. உங்கள் எதிரியால் ஏதேனும் கஷ்டங்கள் ஏற்பட்டால் பொறுத்தக் கொள்ளுங்கள்
'நம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்' (2:153)
என்ற குர்ஆன் வசனத்தை நினைத்துப் பாருங்கள். பொறுமை மூலம் அல்லாஹ்வின் உதவியைப் பெறலாம். எனவே, பொறுமையாக இருந்து அல்லாஹ்வின் உதவி மூலம் உங்களது எதிரியை வீழ்த்த முயலுங்கள்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 23 ஜனவரி, 2021

இஸ்லாமிய இல்லம்!


வீடு மனித வாழ்வில் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகும். உடை, உணவு, உறையுல் என்பன அடிப்படை அத்தியாவசிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன. வீடு இஸ்லாமிய மயப்படுத்தப்படுவது அவசியமாகும்.
வீடு அமைதியின் அடித்தளம்:
"உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் அமைதியை ஏற்படுத்தினான். நீங்கள் பிரயாணத்தில் இருக்கும் போதும், தங்கியிருக்கும் போதும் இலகுவாக நீங்கள் எடுத்துச் செல்லக்கூடிய கூடாரங்களை கால்நடைகளின் தோல்களிலிருந்து அவனே உங்களுக்கு ஏற்படுத்தினான். செம்மறி ஆட்டின் உரோமங்கள், ஒட்டகத்தின் உரோமங்கள், வெள்ளாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்து பொருட்களையும், குறிப்பிட்ட காலம் வசதி வாய்ப்புக்களையும் (ஏற்படுத்தினான்.)" (16:80)
இந்த வசனம் வீடு என்பது மனிதனுக்கு மட்டுமல்ல; எல்லா உயிரினங்களுக்கும் அமைதியையும், பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் வழங்கும் இடமாக இருப்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
வீடு கேடயம்:
பித்னாக்களின் போது வீட்டில் முடங்கி விடுவது பாதுகாப்புக்கான வழியென இஸ்லாம் கூறுகின்றது.
"யார் தனது நாவைக் கட்டுப்படுத்தித் தனது வீட்டிலேயே தங்கி விடுகின்றாரோ அவரும், யார் தனது தவறுகளை நினைத்து அழுகின்றாரோ அவரும் நற்செய்தி பெறட்டும்!" என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(தபரானீ 212)
"தனது வீட்டில் ஒருவர் அமர்ந்து அதனால் அவரது பிரச்சினையிலிருந்து மக்களும், மக்களது பிரச்சினையிலிருந்து அவரும் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அத்தகைய மனிதர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கின்றார்!" என நபி(ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத் 22093, தபரானீ 16485)
பித்னாவின் போது ஒருவர் தனது வீட்டிலேயே தங்கி விடுவது அதன் பாதிப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான வழியாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே ஒரு மனிதன் தனது பணி நேரம் போக ஏனைய நேரத்தை வீட்டில் கழிப்பது சிறப்பானதாகும். இந்த வகையில் வீடு ஒரு கேடயமாகத் திகழ்கின்றது எனலாம்.
சிலர் வீட்டில் தொல்லை தாங்க முடியாது என்று பாதையோரங்களில் காலத்தைக் கடத்துகின்றனர். இதனால் பல பித்னாக்கள் உண்டாவதை அவதானித்து வருகின்றோம். இது தவிர்க்கப்பட வேண்டும்.
உயிருள்ள வீடுகள்:
உங்கள் இல்லங்களில் அல்லாஹ்வை அடிக்கடி நினைவுகூறுங்கள்!
அபூமூஸா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;
"அல்லாஹ் நினைவுகூரப்படும் வீட்டுக்கும், அல்லாஹ் நினைவுகூரப்படாத வீட்டுக்குமான உதாரணம் உயிருள்ளவனுக்கும், செத்த பிணத்துக்கும் ஒப்பானதாகும்!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 221, 1859, இப்னு ஹிப்பான் 854)
அல்லாஹ் நினைவுகூரப்படாத வீடு செத்த பிணத்துக்கு ஒப்பாக்கப்படுகின்றது. எனவே உங்கள் வீட்டை உயிருள்ளதாக மாற்றுங்கள்!
அல்லாஹ் நினைவுகூரப்படுவதன் மூலம் உங்கள் வீட்டை உயிரோட்டமுள்ளதாகவும், ஆன்மீக ஆறுதலை வழங்கும் இடமாகவும் மாற்றுங்கள்!
இன்று எமது இல்லங்களில் அல்லாஹ் நினைவுகூரப்படுவதை விட அதிகமாக ஷைத்தான் நினைவுகூரப்படுகின்றான். இந்த இழிநிலை நீங்க வேண்டும்.
வீட்டை விட்டும் ஷைத்தானை விரட்டுங்கள்!
உங்கள் இல்லங்களில் குர்ஆன் ஓதப்பட வேண்டும். இன்று எமது இல்லங்கள் குர்ஆன் ஓதப்படாத மையவாடிகளாக மாறிவிட்டன.
"உங்கள் வீடுகளைக் கப்றுகளாக ஆக்கி விடாதீர்கள்! ஸூறதுல் பகறா ஓதப்படும் வீட்டை விட்டும் ஷைத்தான் வெருண்டோடுகின்றான்!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 212, 1860, திர்மிதி 2877, அஹ்மத் 7821)
இந்த ஹதீஸ் குர்ஆன் ஓதப்படாத வீடுகளைக் கப்றுகளாகச் சித்தரிக்கின்றது. ஸூறதுல் பகறாவைக் குறிப்பாக வீட்டில் ஓத வேண்டும். அதன் மூலமே ஷைத்தானை விரட்ட வேண்டுமென இந்த ஹதீஸ் கூறுகின்றது.
இன்றைய எமது இல்லங்கள் ஷைத்தான்களின் இருப்பிடங்களாக மாறிவிட்டன. இசை, சினிமா, பாட்டு, கூத்து என ஷைத்தானின் கீதங்கள் இசைக்கப்படுகின்ற அதே வேளை, ஷைத்தானை விரட்டுவதற்கான எந்த முயற்சியையும் நாம் செய்யாமல் இருக்கின்றோம்.
"உங்கள் வீடுகளில் ஸூறதுல் பகறாவை ஓதுங்கள்! ஏனெனில் எந்த வீட்டில் ஸூறதுல் பகறா ஓதப்படுகின்றதோ அந்த வீட்டில் ஷைத்தான் நுழைய மாட்டான்!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்தத்ரக் 2062, 2063, 3029, தபரானீ 8564)
ஷைத்தான் நுழையாமல் இருக்கவும், நுழைந்த ஷைத்தானை விரட்டவும் வீடுகளில் ஸூறதுல் பகறா ஓதப்பட வேண்டுமென ஹதீஸ்கள் கூற, நாமோ ஷைத்தான்களை அழைத்து எமது இல்லங்களில் குடியமர்த்தி விருந்தும் படைத்து வருகின்றோம். எனவே முதலில் ஷைத்தானை விரட்ட வீட்டில் குர்ஆன் ஓதப்பட வேண்டும். இதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
ஷைத்தானுக்கு உணவளிக்காதீர்கள்!
நாம் நமது இல்லத்தில் ஷைத்தான்களுக்கு இடங்கொடுப்பதுடன் உணவும் அளித்து வருகின்றோம்.
"ஒரு மனிதர் தனது வீட்டுக்குள் நுழையும் போதும், உணவுண்ணும் போதும் அல்லாஹ்வின் பெயரை நினைவுகூர்ந்தால் ஷைத்தான் மற்ற ஷைத்தான்களிடம் "இங்கே உங்களுக்குத் தங்க இடமோ, உண்ண உணவோ இல்லை!" என்று கூறுவான். வீட்டுக்கு நுழையும் போது அல்லாஹ்வின் பெயரை நினைவுகூராவிட்டால் "உங்களுக்குத் தங்க இடம் கிடைத்து விட்டது!" என ஷைத்தான் கூறுவான். அவர் உண்ணும் போது அல்லாஹ்வின் பெயரை நினைவுகூராவிட்டால் "தங்க இடமும், உண்ண உணவும் கிடைத்து விட்டது!" என்று கூறுவான்!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 103, 5381, அபூதாவூத் 3767, 3765, இப்னுமாஜா 3887)
இன்று எத்தனையோ தந்தைமார் தொழில் முடிந்து வீட்டுக்கு வரும் போது ஷைத்தானையும் கூட அழைத்துக்கொண்டே வருகின்றனர். குடும்பத்தினர் அனைவரும் தமது உணவில் ஷைத்தானுக்குப் பங்கு கொடுக்கின்றனர். எனவே வீட்டுக்குள் நுழையும் போதும் அல்லாஹ்வின் பெயர் நினைவுகூரப்பட வேண்டும்; உண்ணும் போதும் அல்லாஹ்வின் பெயர் நினைவுகூரப்பட வேண்டும். இதன் மூலம் ஷைத்தானுக்குத் தங்க இடமும், உண்ண உணவும் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.
கூட வரும் ஷைத்தான்:
இரவு உறங்க வரும் போது கூட வரும் ஷைத்தான் நீங்கள் தொழிலுக்குச் செல்லும் போதும் கூடவே வருவான். அவனைத் துரத்த வேண்டியது உங்கள் பொறுப்பு!
நீங்கள் வீட்டை விட்டும் வெளியேறும் போது "பிஸ்மில்லாஹ் தவக்கல்து அலல்லாஹ் லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்!" என்று ஓதிக் கொண்டு வீட்டை விட்டும் வெளியேறுவதன் மூலம் ஷைத்தானின் தொடர்பைத் துண்டிக்கலாம். அதாவது வீட்டுக்குள் நுழையும் போதும், வீட்டை விட்டு வெளியேறும் போதும் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்!
தொழுகை மூலம் வீட்டை உயிர்பெறச் செய்யுங்கள்!
"மூஸாவுக்கும், அவரது சகோதரருக்கும், "எகிப்தில் உங்களிருவரின் சமூகத்திற்கும் வீடுகளை அமைத்து, உங்கள் வீடுகளை நீங்கள் கிப்லாவாக ஆக்கித் தொழுகையை நிலை நாட்டுங்கள். இன்னும் நம்பிக்கையாளர்களுக்கு நன்மாராயம் கூறுங்கள்!" என நாம் வஹி அறிவித்தோம்." (10:87)
பர்ழான தொழுகையைப் பொறுத்த வரையில் ஆண்கள் அதனைப் பள்ளியில் தொழுவது அவசியமாகும். ஆனால் ஸுன்னத்தான தொழுகைகளை வீட்டில் தொழுவதே சிறந்ததாகும். பெண்களைப் பொறுத்த வரையில் பர்ழான தொழுகைகளையும் வீட்டில் தொழுவதே சிறப்பானதாகும். இந்த வகையில் வீட்டில் தொழுகை நிலைநாட்டப்பட வேண்டும். இதன் மூலம் வீட்டில் ஆன்மீக உயிரோட்டம் மங்கி மறையாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
வீடு கல்விக்கூடமாக!
வீட்டைக் கல்விக் கூடமாகப் பாவிப்பது மிக அவசியமாகும். நபி(ஸல்) அவர்கள் தமது மனைவியருக்கு வீட்டில் வைத்துத்தான் மார்க்கத்தைப் போதித்தார்கள். குழந்தைகளுக்கு இஸ்லாமியப் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். இன்று மத்ரஸாக்களிலும், பாடசாலைகளிலும் கற்றுக் கொடுக்கப்படும் நல்ல விடயங்களை நடைமுறை வாழ்வில் கொண்டு வரும் பயிற்சியை வழங்குவதில் வீட்டுச் சூழலுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதைப் பெற்றோர் மறந்து விடக்கூடாது.
உண்ணும் போது "பிஸ்மில்லாஹ்!" கூற வேண்டும் என்பதை மத்ரஸாவில் கற்றுக் கொடுக்க முடியும். இதை நடைமுறையில் கொண்டு வருவதற்கான பயிற்சியை வீடு தானே வழங்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்களிடம் சில பெண்கள் வந்து, "ஆண்கள் எங்களை மிகைத்து விட்டார்கள்! எங்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பதற்குத் தனியான ஒரு நாளை ஒதுக்குங்கள்!" எனக் கேட்ட போது நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்ணின் வீட்டைக் குறிப்பிட்டு அந்த வீட்டுக்கு வருமாறு கூறி அங்கு வைத்து அவர்களுக்கு மார்க்கம் போதித்தார்கள்.
(அஹ்மத் 7357, 7351, இப்னு ஹிப்பான் 2941, நஸாஈ 5898)
எனவே, வீட்டுச் சூழலைக் கல்விச் சூழலாக்குங்கள்! நல்ல நூற்களை வாங்கி வையுங்கள்! உங்கள் வீட்டில் ஒரு சிறிய நூலகம் இருக்கட்டும்! முடிந்தால் மார்க்க உரைகள் அடங்கிய ஒலி-ஒளி நாடாக்களுக்கான ஒரு ஏற்பாட்டையும் செய்யுங்கள்! கிடைக்கும் ஓய்வுகளை மார்க்க அறிவையும், உணர்வையும் வளர்த்துக்கொள்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
ஒன்றாக உண்ணுங்கள்!
உணவு உண்ணும் போது குடும்பமாக ஒன்றாக அமர்ந்து உண்ணப் பழகுங்கள்! குறைந்த பட்சம் இரவு உணவையாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்!
இதன் மூலம் குடும்ப உறவு வலுப்பெறும். பகிர்ந்து உண்ணும் பக்குவம் வரும். அடுத்தோரை அனுசரித்துச் செயற்பட வேண்டும் என்ற எண்ணமும், பக்குவமும் ஏற்படும். இந்தப் பழக்கம் இல்லாததால்தான் இளைஞர்கள் இரவு நேரத்தில் வீதியில் அலைந்து திரிந்து வம்புகளை வளர்க்கின்றனர். நான் உரிய நேரத்துக்குப் போக வேண்டும். வீட்டில் நான் போகும் வரை யாரும் உண்ண மாட்டார்கள் என ஒருவன் எண்ணினால் வீதியில் அலைந்து திரிவானா? எனவே ஒன்றாக இருந்து உண்ணும் நல்ல பழக்கத்தைக் கைவிடாது தொடர வேண்டும்.
நல்லோர் வரவு:
"எனது இரட்சகனே! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கையாளராக எனது வீட்டில் நுழைந்தவரையும், மேலும் நம்பிக்கையாளர்களான ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! இன்னும் இவ்வநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர வேறெதையும் நீ அதிகப்படுத்த வேண்டாம்!" (என்றும் பிரார்த்தித்தார்.)
மேற்படி வசனத்தில் எனது வீட்டில் நுழையும் முஃமின்கள் என்ற வார்த்தையை அவதானியுங்கள்! இந்த அடிப்படையில் வீட்டுக்கு நல்ல மனிதர்களின் வருகையை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் உங்களது குழந்தைகளுக்கு நல்லோரது தொடர்பு ஏற்படும். நல்லோரை அதிகம் சந்திக்கும் போது அவர்களைப் போல இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் வளரும். இதே வேளை கெட்டவர்கள் வீட்டுக்குள் நுழைவதைத் தவிர்க்கவும் வேண்டும்.
ஆலோசனை செய்யுங்கள்!
வீட்டு விவகாரங்களில் வீட்டில் உள்ளோரிடம் குறிப்பாக வளர்ந்த பிள்ளைகளிடம் ஆலோசனை செய்யுங்கள்! அவர்களது சிந்தனைத் திறன் வளரவும், பொறுப்புணர்ச்சி ஏற்படவும், பெற்றோரை மதிக்கும் மனோபக்குவம் வளரவும் இது வழி வகுக்கும்.
குழந்தைகள் விவகாரத்தில் அவதானம் தேவை:
உங்கள் பிள்ளைகளது நண்பர்கள் யார்? அவர்கள் எங்கே செல்கின்றார்கள்? என்ன செய்கின்றார்கள்? வகுப்புகள் நடக்கும் நேரம், நடக்கும் இடம், நடக்கும் நாட்கள், முடிவடையும் நேரம் என்பவற்றை அறிந்து வைத்திருங்கள்!
உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் குறித்தும் இதே அவதானத்துடன் இருங்கள்! அவர்களது தொலைபேசித் தொடர்புகள் எத்தகையவை என்பதையும் கவனம் செலுத்துங்கள்! பெற்றோரின் கவனயீனம்தான் அதிகமான பிள்ளைகள் தடம் மாறிச் செல்வதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. முடிந்த வரை வீட்டுச் சூழலை இஸ்லாமிய மயப்படுத்துதல் இஸ்லாமிய தஃவாவில் மிக முக்கியமான விதியாகும். இது விடயத்தில் நாம் அனைவரும் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 19 ஜனவரி, 2021

நபிவழி நடப்போம்!


ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிரை விட உயர்வாக உத்தம நபி(ஸல்) அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களை நேசிக்காமல் ஒருவர் முஃமினாக முடியாது.
"நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்…" (33:6)
இது குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறும் போது "உங்களில் ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் முழு மனித சமூகத்தையும் விட என்னை அதிகமாக நேசிக்காத வரையில் முஃமினாக முடியாது!" எனக் குறிப்பிட்டார்கள்.
நேசத்தின் வெளிப்பாடு:
நபி(ஸல்) அவர்கள் மீது உயர்வான நேசம் எல்லா முஸ்லிம்களிடமும் இருக்கின்றது. ஆனால் அந்த நேசம் உண்மை பெற வேண்டும் என்றால் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதே இதற்கு இருக்கும் ஒரே வழியாகும். சிலர் தாம் அல்லாஹ்வை நேசிப்பதாகக் கூறினார்கள்.
அதற்குச் சோதனையாகப் பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்;
"நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந் தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான், இன்னும், உங்கள் பாவங்களை உங் களுக்கு மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான் என்று (நபியே!) நீர் கூறுவீராக!" (3:31)
ஒருவர் அல்லாஹ்வை நேசிப்பவராக இருந்தால் அவர் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும். நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றினால் அவரை அல்லாஹ்வும் நேசிப்பான்; அவரது பாவங்களை மன்னிப்பான். இந்த இரு பாக்கியங்களும் அவருக்குக் கிட்டும்.
இந்த வசனத்துக்கு அடுத்த வசனம் இப்படி அமைகின்றது;
"அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் புறக்கணித் தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை நேசிக்க மாட்டான்." (3:32)
இங்கே அல்லாஹ்வையும், அவரது தூதரையும் பின்பற்றுமாறு ஏவப்படும் அதே நேரம் அப்படிச் செய்யாத காஃபிர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது. நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றாவிட்டால் அல்லாஹ்வின் நேசம் கிட்டாத அதே நேரம் அவர்களை அல்லாஹ் காஃபிர்கள் எனக் குறிப்பிடுவதும் கவனிக்கத் தக்கதாகும்.
எப்படிப் பின்பற்றுவது?
நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவது என்பது கொள்கை சார்ந்த அமல்கள், அமல்கள் சார்ந்தது, அத்துடன் திக்ர்-அவ்றாது போன்ற வார்த்தைகள் என்பவற்றை உள்ளடக்குவதுடன், செயல்களில் நபி(ஸல்) அவர்கள் விட்டார்கள் என்பதற்காக அவற்றை விடுவதையும் உள்ளடக்கக் கூடியதாகும்.
உதாரணமாகக் கொள்கை விடயத்தை எடுத்துக் கொண்டால் நபி(ஸல்) அவர்கள் ஒரு விடயத்தை நம்பியிருந்தால் அதை நாம் நம்ப வேண்டும்; அவர் நம்பியது போன்றும் நம்ப வேண்டும். உதாரணமாக நபி(ஸல்) அவர்கள் சுவனம் உண்டு, நரகம் உண்டு என நம்பினார்கள். அதை அப்படியே நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை ஈமானில் முக்கிய அம்சம் எனவும் உணர்த்தியுள்ளார்கள். அந்த முக்கியத்துவத்தைக் கொடுத்தே நம்ப வேண்டும். உதாரணமாக ஒருவர் "நான் எல்லாவற்றையும் நம்புகின்றேன்! ஆனால் ஜின்கள் இருப்பதை என்னால் நம்ப முடியாது!" எனக் கூறினால், அவர் கொள்கை விஷயத்தில் நபி(ஸல்) அவர்களை பின்பற்றியவராக மாட்டார். அல்லது ஒருவர் தஜ்ஜாலின் வருகையையோ அல்லது ஈஸா(அலை) அவர்கள் இறுதிக் காலத்தில் இறங்குவதையோ மறுக்கின்றார். ஆனால் முறையாகத் தொழுகின்றார் என்றாலும் அவர் கொள்கை விஷயத்தில் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றியவராக மாட்டார்.
இவ்வாறே, ஒருவர் நபி(ஸல்) அவர்கள் செய்த ஒரு அமலை அவர்கள் செய்த அதே போன்று செய்யாத வரையில்ஃஅவர்கள் செய்த அதே நோக்கத்தில் செய்யாத வரையில் அது நபிவழி நடப்பதாக இருக்காது.
தொழும் ஒருவர் அதை ஒரு உடற்பயிற்சியாக நினைத்துச் செய்தால், நோன்பிருக்கும் ஒருவர் வணக்கமாக இல்லாமல் உடல் மெலிவதற்காக என்ற எண்ணத்தில் செய்தால், அப்போதும் அவர் நபிவழி நடந்ததாக மாட்டாது. நாம் செய்யும் செயலும் நபியால் செய்யப்பட்டிருக்க வேண்டும்; நபி(ஸல்) அவர்கள் செய்த அமைப்பில்தான் அதை நாம் செய்யவும் வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் என்ன நிய்யத்தில் செய்தார்களோ, அதே நிய்யத்துடன்தான் செய்யவும் வேண்டும்.
நபிவழி நடத்தல் – சில அடிப்படைகள்:
"நபி வழி நடப்போம்!" எனக் கூறிக் கொண்டே சில வேளை நாம் நபி வழிக்கு முரணாக நடந்து விடலாம். அல்லது நபி வழியை விட நமது அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விடலாம். இதைத் தவிர்ப்பதற்காக நபியை நேசித்தல், நபியைப் பின்பற்றல் அல்லது நபியை ஈமான் கொள்ளல் எனும் போது நாம் கவனத்திற்கொள்ள வேண்டிய முக்கிய சில விடயங்களைத் தொட்டுக் காட்டுவது பொருத்தமென நினைக்கின்றேன்.
இஸ்லாத்தின் அடிப்படைகள் வஹீ மூலம் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. அவை பகுத்தறிவின் மூலம் கட்டி எழுப்பப்படவில்லை. எனவே ஆதாரம் உறுதியானால் எமது அறிவுக்குக் காரண-காரியம் ஒவ்வாவிட்டாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இது குறித்து இமாம் சுஹ்ரி(றஹி) அவர்கள் கூறும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்;
"அல்லாஹ்விடம் இருந்து தூதுத்துவம் வந்துள்ளது. அதை எடுத்துரைப்பது அல்லாஹ்வின் தூதரின் கடமை! அதை ஏற்றுக்கொள்வது எமது கடமையாகும்!" (புகாரி)
இது குறித்த இமாம் அபுல் இஸ்(றஹி) அவர்கள் அகீததுத் தஹாவிய்யாவுக்கு விளக்கம் கூறும் போது பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்;
"நபி(ஸல்) அவர்கள் கூறிய ஒன்று எனது அறிவுக்குப் பொருந்தாவிட்டால் ஏற்றுக்கொள்ள மாட்டேன்! அறிவுக்குப் பொருந்தினால் மட்டுந்தான் ஏற்றுக்கொள்வேன் என்று ஒருவர் கூறுவாரெனில் அவர் நபியைப் பின்பற்றவில்லை; தனது அறிவையும், மனோ இச்சையையுமே அவர் பின்பற்றுகின்றார்!" எனவே நபி(ஸல்) அவர்கள் கூறியது அறிவுக்குப் பொருந்தினாலும், பொருந்தாதது போன்று தோன்றினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் செய்யாத, பித்அத்தை ஒருவர் உருவாக்கவோ, செயற்படுத்தவோ முடியாது. அது நபி வழி நடப்பதாகவும் இருக்காது. ஒரு ஸுன்னா ஷரீஆவுக்கு ஒத்துவர வேண்டும் என்றால் பின்வரும் ஆறு விடயங்களுக்கும் அது இசைவாக இருக்க வேண்டும்.
(1) காரணம்:
ஒரு அமலைச் செய்வதற்கான காரணம், அந்த அமல் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்ததாகவும், சரியாகவும் அமைந்திருக்க வேண்டும். இல்லாவிடில் அச்செயல் ஸுன்னத்தாக மாட்டாது.
உதாரணம், றஜப் மாதத்தின் 27 ஆம் இரவில் சிலர் விழித்திருந்து தஹஜ்ஜத் தொழுகின்றனர். தஹஜ்ஜத் தொழுகை சிறந்த ஒரு வணக்கம் என்பதில் சந்தேகமேயில்லை. இருப்பினும் இந்தத் தஹஜ்ஜத் ஏன் தொழப்படுகின்றது எனக் கேட்டால் அது மிஹ்ராஜுடைய இரவு எனக் காரணம் கூறப்படுகின்றது. இந்தக் காரணத்துக்கு மார்க்கத்தில் ஆதாரமில்லை. எனவே தவறான காரணத்துக்காக செய்யப்படும் இந்த நல்ல செயலும் "பித்அத்" என்ற வட்டத்துக்குள் வந்து விடுகின்றது.
(2) இனம்-வகை:
என்ன செய்கின்றோமோ அந்த இனத்துக்கும், வகைக்கும் ஆதாரம் வேண்டும். ஒருவர் மான் அல்லது மரை வளர்க்கின்றார். இவை உண்ணத் தக்க பிராணிகள் என்றாலும் உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு மானையோ, மறையையோ அறுக்க முடியாது. உழ்ஹிய்யாக் கொடுப்பவர் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே அறுக்க வேண்டும். இவ்வாறே அகீகாக் கொடுக்கும் ஒருவர் ஒட்டகத்தையோ, மாட்டையோ அறுக்க முடியாது. அதற்கு ஆட்டைத்தான் அறுக்க வேண்டும். மாட்டை அறுத்து உணவு கொடுத்து விட்டு நான் அகீகா எனும் நபி வழியைப் பேணி விட்டேன் எனத் திருப்திப்படவும் முடியாது.
(3) அளவு:
ஒரு செயலுக்கான அளவு எவ்வளவு என்பதும் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். லுஹருடைய ஸுன்னத்துத் தொழும் ஒருவர் இரண்டு றக்அத்துகளோ, நான்கு றக்அத்துகளோ தொழலாம். ஒருவர் மூன்று றக்அத்துகளைத் தொழுதால் அல்லது ஆறு றக்அத்துகள் தொழுதால் அது நபி வழியாகாது. குறித்த அளவுக்கும் ஆதாரம் வேண்டும். 10 ஆடுகளை அறுத்து ஒரு குழந்தைக்காக ஒருவர் அகீகாக் கொடுத்தால் அது நபி வழியைப் பின்பற்றியதாக இருக்காது.
தவாஃப் செய்பவர் ஏழு சுற்றுகள் சுற்ற வேண்டும். இவ்வாறே ஸபா-மர்வாவுக்கு இடையில் ஸஈ எனும் தொங்கோட்டம் போவதும், வருவதுமாக ஏழு தடவைகள் ஸஈ செய்ய வேண்டும் என்றெல்லாம் அளவு குறித்து வந்தால் அந்த அளவையும் சேர்த்துப் பின்பற்ற வேண்டும். தவாஃப் செய்வது சிறந்தது தானே என்று கஃபாவைப் பத்து முறைகள் சுற்றிச் செய்து அதை ஒரு தவாஃபாக ஆக்க முடியாது.
கியாமுல்லைல் தொழுகையின் றக்அத்துகள் இத்தனைதான் என நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்து இருக்கும் போது அந்த அளவை விட நாமாகச் சில றக்அத்துகளை அதிகரித்து விட்டு அதைக் "கியாமுல் லைல்" ஆக்க முடியாது.
(4) செய்முறை ஒழுங்கு:
ஒரு செயலைச் செய்யும் முறையும் நபி வழியையும், ஆதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். உதாரணமாக வுழூச் செய்யும் ஒருவர் காலைக் கழுவுகிறார்; தலையை மஸ்ஹ் செய்கிறார்; முகத்தையும், கைகளையும் கழுவுகின்றார். வுழூவுடைய எல்லா உறுப்புகளும் கழுவியாகி விட்டது. இப்போது இவர் வுழுச் செய்து விட்டார் என்று கூற முடியுமா என்றால் முடியாது. அனைத்து உறுப்புகளும் கழுவப்பட்டு இருந்தாலும் வுழூவை எப்படிச் செய்ய வேண்டும் என்ற செயல்முறை ஒழுங்கு பேணப்படவில்லை என்பதால் அது வுழுவாக அமையாது. சாதாரணமாக உடலைக் கழுவியதாகவே அமையும்.
(5) காலம்-நேரம்:
ஒரு அமலை உரிய காலத்தில் செய்ய வேண்டும். உதாரணமாக றஜப் மாதத்தில் உழ்ஹிய்யாக் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தால் அது உழ்ஹிய்யாவாக முடியாது.
இதில் காலம் மட்டுமல்லாது நேரமும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். ஸகாதுல் பித்ரைப் பெருநாள் தொழுகை முடிந்து கொடுத்தால் அது ஸகாதுல் பித்ராவாக ஆகாது.
அவ்வாறே ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் கால்நடைகளை அறுத்தால் அது உழ்ஹிய்யாவாகவும் மாட்டாது. காலம், நேரம் இரண்டும் ஆதாரத்துக்கு உட்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது நபி வழியாக மாட்டாது.
(6) இடம்:
செய்யும் இடம் ஆதாரத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். துல்ஹஜ் ஒன்பதாம் நாள் இரவு முஸ்தலிபாவில் தங்க வேண்டிய ஒருவர் மினாவிலோ, அறஃபாவிலோ தங்கினால் அது ஹஜ்ஜாகாது. அல்லது கல்லெறியும் இடத்தை விட்டு விட்டு வேறு இடத்தில் கல் எறிய முடியாது. அல்லது 10,11 இரவுகளில் மினாவில் தங்குவதற்குப் பகரமாக மக்காவில் தங்க முடியாது. பள்ளியில் இஃதிகாஃப் இருப்பதற்குப் பதிலாக வீட்டில் இஃதிகாஃப் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது நபி வழி நடந்ததாகவும் அமையாது.
எனவே, நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் நாம் அவர்களது வாழ்வைக் கற்று, அவரைச் சகல துறைகளிலும் முழுமையாகப் பின்பற்ற முனைவோமாக!

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 16 ஜனவரி, 2021

மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும் காய்கறிகள் என்ன...?

2222222முட்டைக்கோசை சிறு துண்டுகளாக அரிந்து கொண்டு அதனுடன் சிறிதளவு உப்பு மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து உண்ண வேண்டும். இவ்வாறு உண்பதன் மூலம் மலச்சிக்கல் சரியாகும்.

மலச்சிக்கலால் பாதிக்கப்படுகையில் உணவில் இனிப்பு உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளுவது மிகவும் நன்மை பயக்கும். இனிப்பு உருளைக்கிழங்கில் நீர்நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை இயற்கை மலமிளக்கியாக செயல்படுகின்றன.

250 மில்லி கேரட் சாறுடன் 50 மில்லி பசலைக் கீரையின் சாறு மற்றும் சிறிது எலுமிச்சை சாறும் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும் பசலைக்கீரைக்கு குடலை சுத்தம் செய்யும் தன்மை உண்டு. குடித்தவுடன் சுமாராக இரண்டு மாதங்கள் வரை இந்த சாறு குடலில் தங்கியிருந்து மலச்சிக்கல் வராமல் பாதுகாக்கும்.

வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நம்மை அண்டவே அண்டாது. சண்டிக் கீரையில் உள்ள செல்லுலோஸ் என்னும் சத்தானது தொடர்ந்து  சாப்பிட்டு வர பல நாளாக மலச்சிக்கலால் அவதிப்படுவர் அதில் இருந்து மீண்டு வரலாம்.

நமது வயிற்றின் ஜீரண பாதையில் எங்கு கழிவுகள் தேங்கி இருந்தாலும் பசலைக்கீரை சாப்பிடுவதன் மூலமாக அந்த கழிவுகளை வெளியேற்றி புத்துணர்ச்சி அளிக்கும். எதிர்காலத்தில் மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் இது செயல்படும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-vegetables-that-protect-against-constipation-120122900078_1.html


--

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts