லேபிள்கள்

திங்கள், 15 நவம்பர், 2010

வண்டி பராமரிப்பு - ஒரு பாரம்பரியமல்ல......

உங்கள் காருக்கு நீங்கள்தான் டாக்டர். காரை அழகாக வைப்பது மட்டுமல்ல... காருக்கு சின்னச் சின்னப் பிரச்னைகள் என்றால், அதை உடனடியாக நீங்களே களைந்து, சர்வீஸ் சென்டரின் 'பெரிய பில்' வராமல் தடுத்துவிட முடியும். 

உங்கள் காரை சரியாகப் பராமரிக்க ஒரு ஞாயிற்றுக்கிழமை போதும்! ஒவ்வொரு வாரமும் இரண்டு மணி நேரம் செலவழித்தால், கார் எப்போதும் புத்தம் புதுசாக ஜொலிக்கும்!

முதலில், கார் வாங்கும்போதே நிரூபணமான, சிறந்த காராகப் பார்த்து வாங்க வேண்டியது முக்கியம். கார் பராமரிப்புக்கு என்று குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் ஒதுக்குங்கள். சரியான இடைவெளியில் காரை சர்வீஸ் செய்ய மறக்காதீர்கள்.

அனைத்து கார்களிலுமே, ஒரு குறிப்பிட்ட கி.மீ-க்கு சில பாகங்களை மாற்ற வேண்டும் என்பது கட்டாயம். எந்தெந்த பாகங்களை மாற்ற வேண்டுமோ, அதை முதலில் மாற்றிவிடுங்கள். 

எப்போதுமே அலர்ட்டாக இருங்கள். காருக்குள் ஏதாவது தேவையில்லாத சத்தம் வருகிறதா? அல்லது ஏதாவது ஒயர்கள் எரிவது போன்ற நாற்றம் வருகிறதா என்று கவனியுங்கள். இது போன்ற பிரச்னைகள் ஏதாவது இருப்பின், உடனடியாக சர்வீஸ் சென்டரை அணுகுங்கள்.

இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, உங்கள் நண்பர்களிடம் காரைக் கொடுத்து ஓட்டிப் பார்க்கச் சொல்லுங்கள். அப்போதுதான் உங்கள் காரில் நீங்கள் உணராத பிரச்னைகள் இருக்கிறதா என்பது தெரிய வரும்.

உடைந்த ஹெட் லைட், வேலை செய்யாத மியூஸிக் சிஸ்டம் என பிரச்னையில் இருக்கும் விஷயங்களை உடனடியாகச் சரி செய்துவிடுங்கள். காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

இப்போது வரும் நவீன கார்களின் இன்ஜின், முழுக்க முழுக்க எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் மூலம் இயக்கப்படுகிறது. அதனால், ட்யூனிங், இன்ஜின் சார்ந்த விஷயங்களை நாமே செய்ய முடியாது. அதனால், இன்ஜினில் எந்தவிதமான பிரச்னைகளும் ஏற்படாமல், காரை நல்ல முறையில் ஓட்ட வேண்டும். மேலும், இன்ஜினைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். வாரத்துக்கு ஒருமுறை பானெட்டைத் திறந்து இன்ஜின் மற்றும் அதன் பாகங்களை நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். 

ஹெட் லைட்டுகள் ஒழுங்காக ஒளிர்கின்றனவா என்று பாருங்கள். ஹெட் லைட் ஒளிரவில்லை என்றால், நீங்களே ஃப்யூஸ் போன பல்பை அகற்றிவிட்டு, புதியதைப் பொருத்திவிட முடியும். 

விண்ட் ஸ்கிரீன் வாஷர், பவர் ஸ்டீயரிங் ஆயில், கூலன்ட், பிரேக் ஆயில் ஆகியவை சரியான அளவு இருக்கின்றனவா என்று பாருங்கள். இல்லையென்ற£ல், நீங்களே இவற்றை நிரப்பிவிடலாம். எச்சரிக்கை விளக்குகள் ஒளிரும் வரை காத்திருக்க வேண்டாம்.

சமதளத்தில் காரை நிறுத்தி இன்ஜின் ஆயில் சரியான அளவுக்கு இருக்கிறதா என்று செக் செய்யுங்கள். இதற்கு 'டிப் ஸ்டிக்'கைப் பயன்படுத்துங்கள்.


வைப்பர்

வைப்பர் பிளேடுகள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். அதை தினமும் சுத்தப்படுத்துங்கள். இல்லையென்றால், அவை விண்ட் ஸ்கிரீனில் கோடுகள் போட்டு பதம் பார்த்துவிடும். 

வாஷர் ஜெட்டுகள், சரியாக கண்ணாடியில்தான் தெளிக்கிறதா என்று கவனிக்கவும். இல்லையென்றால், அதை அட்ஜஸ்ட் செய்யுங்கள்.
இன்ஜின்

காரை நீண்ட நேரம் ஐடிலிங்கில் நிறுத்தி வைக்காதீர்கள். இதனால் காரின் ஆயுட்காலம் குறையும்.

சூடாக இருக்கும் இன்ஜினைச் சுற்றி எந்தச் சமயத்திலும் ஈரமான துணியை வைத்துத் துடைக்காதீர்கள். இதனால், ஆபத்து நிகழ வாய்ப்பு இருக்கிறது.

ஆயில் மாற்றும்போது ஆயில் ஃபில்டரையும் சேர்த்து மாற்றிவிடுங்கள். இதனால், இன்ஜின் ஸ்மூத்தாகச் செயல்படும். இல்லையென்றால், ஃபில்டரில் தங்கி இருக்கும் பிசிறுகளால் இன்ஜின் கெட்டுப்போகும் சூழ்நிலை ஏற்படும்.

பேட்டரி

பேட்டரி சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். பேட்டரியின் ஆயுள் குறைந்தாலோ, ஒயர்கள் துண்டிக்கப்பட்டு இருந்தாலோ பேட்டரியைச் சரி பாருங்கள். டிஸ்டில்டு வாட்டர் அளவைக் கவனித்து அதை நிரப்புங்கள். கேபிள், விளக்குகள் ஏதாவது பழுதாகி இருந்தால் மாற்றி விடுங்கள். பேட்டரியில் லீக் இருந்தால், பேட்டரியையே மாற்றிவிடுங்கள்.
கியர் பாக்ஸ் 

கியர் பாக்ஸ் மிகமிக முக்கியமான பாகம். டிரான்ஸ்மிஷன் ஆயில் சரியான அளவு இருக்கிறதா என்று பாருங்கள். கிளட்ச், கியர் ஷிஃப்ட் ஆகியவற்றை மிகவும் கவனமாக உபயோகப்படுத்த வேண்டும். 
ஏ.ஸி

கார் ஏ.ஸி-யை ரெகுலராக கவனிக்க வேண்டும். காரில் இருந்து சரியான அளவுக்கு குளிர்ந்த காற்று வரவில்லை என்றால், உடனடியாக அதை சர்வீஸ் சென்டரில் சரி செய்யச் சொல்லுங்கள். ஏ.ஸி காற்று ஒழுங்காக வராததற்கு கேஸ் லீக், பெல்ட் டென்ஷன், கம்ப்ரஷர் வீக் ஆகியவை காரணமாக இருக்கலாம்
பிரேக்

மிகவும் சாஃப்டான பிரேக் பெடல், பிரேக் லைட் எரியாமல் போவது, பிரேக்கில் இருந்து விதவிதமான சத்தங்கள் எழும்புவது... இதெல்லாம் பிரேக்கில் பிரச்னை இருக்கிறது என்பதற்கான அடையாளங்கள். பிரேக்கின் பாகங்களை மாற்றியோ அல்லது பிரேக் ஆயிலை மாற்றியோ இந்தப் பிரச்னைகளைச் சரி செய்துவிட முடியும். ஆன்டி-லாக் பிரேக் என்றால், கூடுதல் பராமரிப்பு தேவை.
ரேடியேட்டர்

ரேடியேட்டரில் இருக்கும் கூலன்ட் அளவை அடிக்கடி செக் செய்யுங்கள். ரேடியேட்டரில் பிரச்னை என்றால், அது இன்ஜினின் கூலிங் சிஸ்டத்தை பாதிக்கும். ரேடியேட்டரில் இருந்து காற்றை இழுக்கும் ஃப்ளோயர் சரியாக வேலை செய்கிறதா என்றும் பாருங்கள்.
உள்ளே.. 

காருக்குள் இருக்கும் தூசு, மண், குப்பைகளைச் சுத்தம் செய்யுங்கள்! தேவையில்லாத பேப்பர், டோல் டிக்கெட், சிடி என அனைத்தையும் வெளியே எடுங்கள். இப்போது காரின் உள்பக்கம் எந்த நிலையில் இருக்கிறது என்று பாருங்கள். வெறும் தூசு மட்டும்தானா அல்லது அழுக்குக் கறை, துரு ஆகியவை படிந்து மோசமான நிலையில் இருக்கிறதா என்று பாருங்கள்.

கார் வைத்திருக்கும் பல குடும்பங்களுக்கு... கார்தான் சிப்ஸ், சிடி, டிஃபன் பாக்ஸ் போன்ற பொருட்களை வைத்துக்கொள்ளும் இடம்! உணவுப் பொருட்கள் மற்றும் தேவையில்லாத பொருட்களை வைக்கும்போது, காருக்குள் தேவையில்லாத அழுக்குகள் சேர்ந்துவிடும் என்பதோடு, காருக்குள் நாற்றமும் அடிக்க ஆரம்பித்துவிடும்.

வெளியே

கார் பராமரிப்பில் மிகவும் முக்கியமான, சுலபமான விஷயம்... கார் வாஷிங்தான்! காரைத் துடைத்துச் சுத்தமாக வைப்பதுதான் அடிப்படை பராமரிப்பு! வாரம் ஒருமுறை காரை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்யுங்கள். 

எப்போதுமே காரை நிழலான இடத்தில் வைத்துச் சுத்தம் செய்யுங்கள். காட்டன் டவல்களையே காரைத் துடைப்பதற்குப் பயன்படுத்துங்கள். காரின் உள்பக்கத்தைக் குலைத்துவிடாத வகையில் தரமான பாலீஷ்களை உபயோகப்படுத்துவது அவசியம். உதாரணத்துக்கு, லெதர் சீட்டை பிளாஸ்டிக் பாலீஷ் கொண்டு சுத்தம் செய்தால் காரியமே கெட்டுவிடும்!

முதலில் சாஃப்ட் வேக்யூமை வைத்து டேஷ் போர்டு, சென்டர் கன்ஸோல், ஏ.ஸி வென்ட், மீட்டர் டயல்களைச் சுத்தம் செய்யுங்கள். அடுத்ததாக, காரின் மேற்கூரையைச் சுத்தம் செய்யுங்கள். வேக்யூமை வைத்துச் சுத்தம் செய்தபிறகு கொஞ்சம் நனைத்த காட்டன் டவலை வைத்து டேஷ் போர்டு, சென்டர் கன்சோல் அனைத்தையும் துடைத்தெடுங்கள். கப் ஹோல்டர், சீட்டுக்கு அடியில், காரின் கார்பெட்டுக்குக் கீழே பெரிய வேக்யூமை வைத்து காரை முழுவதுமாகச் சுத்தப்படுத்துங்கள். 

ஜாம், சாஸ் போன்ற கரைகள் சீட்டில் படிந்துவிட்டால், அவற்றை நீக்குவது மிகவும் கடினம்! எலுமிச்சைச் சாற்றில் உப்பைக் கலந்து, அதை கறை மீது தடவினால், இந்தக் கறை நீங்கிவிடும்!

காரின் பர்ஃபாமென்ஸுக்கு மிக மிக முக்கியமான விஷயம் டயர்! காரின் எடையைத் தாங்குவதோடு மேடு பள்ளங்களில் குதித்து எழும்புவதும் டயர்களின் முக்கியமான வேலை. டயரில் பிரச்னை என்றாலும், அது இன்ஜினில் எதிரொலிக்கும். டயருக்கும், இன்ஜினுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்டால், டயர்களும் - இன்ஜினும் இணைந்து இயங்கினால்தான் கார் சீராக இயங்கும்.

டயரை மாற்றுங்கள்: 8,000 கி.மீ-க்கு ஒருமுறை முன் வீல்களை பின் பக்கமாகவும், பின் வீல்களை முன் பக்கமாகவும் மாற்றிப் பொருத்த வேண்டும். முன் வீல்கள் சீக்கிரத்தில் தேயும். இதுபோல் மாற்றிப் பொருத்தினால், டயர்களின் ஆயுள் நீடிக்கும்!

டயர் பிரஷர்: வாரத்துக்கு ஒருமுறை டயரில் காற்றின் அளவு சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். டயரின் அளவு சரியாக இல்லையென்றால், மைலேஜ், கையாளுமை மற்றும் பயண சொகுசில் சிக்கல்கள் வரும்! வேகமாகப் போகும்போது கையில் அதிர்வுகள் அதிகமாகத் தெரிந்தால், டயர்களில் காற்று குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். உடனடியாக டயரில் இருக்கும் காற்றின் அளவை செக் செய்யுங்கள். 

ஓவர் வெயிட்: காருக்குள் தேவையான பொருட்களை மட்டும் வைத்திருங்கள். தேவையில்லாத பொருட்களைப் போட்டு வைக்கும் குடோனாக காரைப் பயன்படுத்தாதீர்கள். காரின் எடை கூடக் கூட, ஓடும் காரின் டயர்கள் ஓவர் ஹீட் ஆகும். அதனால், டயர்கள் சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். மைலேஜும் குறையும்.

ஸ்பீடு: ஓவர் ஸ்பீடும் டயர்களின் ஆயுளைப் பாதிக்கும். ஒரு குறிப்பிட்ட வேகத்தைத்தான் டயர்கள் தாக்குப் பிடிக்கும். அதிகப்படியான வேகத்தால் டயர்கள் ஓவர் ஹீட்டாகி வெடிக்கும் ஆபத்து இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts