லேபிள்கள்

வியாழன், 11 நவம்பர், 2010

காதலுக்கு கல்யாணம்

என் காதலனுக்கு இன்று கல்யாணம். என் மனது பொருமினாலும் அவனை நான் கண்டிப்பாக வாழ்த்துகிறேன், என் உளமார வாழ்த்துகிறேன். நண்பர்களாக பழகிய நாங்கள் இருவரும் சேர்ந்து ஊரறிய இருவரின் வீட்டாரும் அறிய பல இடங்களுக்கு சென்றுள்ளோம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னுடன் பல இடங்களுக்கு அவன் , தன் செலேவிலே என்னை என் தேவைகளுக்காக அழைத்து சென்றுள்ளான். என்னைப்போல் அவனுக்கு பல பெண் நண்பர்களும் , மிகப்பல ஆண் நண்பர்களும் உண்டு. தன் நண்பர்களுக்க்ல்லாம் என்னை அறிமுகம் செய்து வைத்துள்ளான்.
பல பிரச்சனைகளில் என் சொல்லாத முடிவுகளும் அவன் தீர்வுகளும் ஒன்றுபோல் இருந்தது கண்டு வியப்புற்றேன். அழகை பொருட்படுத்தாமல் மனதோடு மட்டும் நட்பு பாராட்டும் அவன் மனதும் அவன் முகத்தை போன்று அழகனதே. அவன் கோர்வையான வார்த்தைகளும், அதில் புதைந்து வரும் மெல்லிய நகைச்சுவை உணர்வும் அவனோடு மீண்டும் மீண்டும் பேசுவதற்கு தூண்டும். ஆண் நண்பர்களோடு தோழில் கைபோட்டு நடை போடும் அவன் பெண்களிடம் எட்ட நின்று பேசுவான். காரணம் கேட்டால்,

' என்னதான் மனது கண்டிப்பா சொன்னாலும் பருவ காலங்களில் உடல் அதை மீறுவதற்கு வழி தேடி அலையும். அதற்கு நாம் தொடுதல் மூலம் ஒரு வாய்ப்பை உருவாக்க வேண்டாம் என்பது என் எண்ணம்'

என்று வெளிப்படையாக சொல்லுவான். ' மூடி வைத்து எண்ணங்களை வளர்ப்பதை விட, வெளியில் சொல்லி அதை கொன்று விடுவதே மேல் ' என்பது அவன் வாதம். எனக்கும் அது சரி என்று பட்டது. எனவே நான் அவனிடம் காதல் கொண்டதை அவனிடம் சொல்லிவிட்டேன். மெலிதாக சிரித்துக்கொண்டவன் பதில் சொல்லாமலே ஆறு மாதங்கள் கடத்தினான் ஆனாலும் என்னிடம் எந்த மாற்றமும் காட்டவில்லை. பொறுக்க முடியாமல் நான் மீண்டும் அவனை கேட்டேன். ' நீ எதற்காக என்னை காதலிக்கிறாய் ?' என்றான் எனக்கு பதில் சொல்ல தெரியாமல் ' கல்யாணம் பண்ணுவதற்கு' என்றேன். 'கல்யாணம் பண்ணுவதற்கு உனக்கு வயதும் பக்குவமும் வந்து விட்டது என நீ நினைகிறாயா ?' எனக் கேட்டான். ' தெரியாது ஆனால் காதலிப்பதற்கு அது தேவை இல்லையே' என்றேன். ' கண்டிப்பாக தேவை, காதலிப்பது கல்யாணம் செய்வதற்கு என்றால் காதலும் கல்யாணமும் ஒன்றுதான் ' சரியான பதிலாகவே எனக்கு பட்டது. இருந்தாலும் எனக்குள் இருந்த மெய்க்காதலை அவனுக்கு தெரிவிக்க போராடினேன். எனது முயற்சிகளை புரிந்து கொண்ட அவன் ஒருநாள் என்னைத் தேடி வந்தான். என் காதலை சொல்லதற்கு மாறாக அவன் பிரிவை சொல்ல. வெளிநாட்டில் அவனுக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் , இரண்டு ஆண்டுகள் கழித்து திரும்பி வருவதாகவும் சொன்னான். கண்கலங்கி நின்ற என்னைப் பார்த்து முறுவலோடு ' நீ இரண்டு ஆண்டுகள் கடக்கையில் மாறி விடுவாய், உன் அனுபவங்கள் உன்னை பக்குவபடுத்திவிடும். அப்போதும் நீ இதே முடிவில் இருந்தால் பார்க்கலாம்' என்று சொல்லிப் பிரிந்தான்.
வெளிநாட்டில் அவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் அவனையே திருமணம் செய்வதாக அடிக்கடி சொல்லுவேன். அவன் அதற்கு விருப்பமோ , மறுப்போ சொல்லியதில்லை. நாட்கள் கடந்தது , நான் அவனுக்கும் , அவன் எனக்கும் தொடர்பு கொள்வது கொஞ்சம் கொஞ்சமாக நின்றது. ஆனால் அவன் கடைசியாக பேசியது என் காதலை ஏற்றுக் கொள்வது போலிருந்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது உண்மையே.

இப்போது அவன் என்னை தன் தோழிகளில் ஒருத்தியாகக் கூட ஏற்கமாட்டான். இருந்தாலும் நான் அவன் கல்யாணத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த அவன் எங்கள் வீட்டிற்கு சென்று என்னைத் தேட, எனக்கு கல்யாண நிச்சயம் ஏற்கனவே முடிந்து இருந்தது தெரிந்து திரும்பி போனதாக அம்மா சொன்னாள். வேலைக்காக நகரத்திற்கு வந்த நான் அலைபேசி எண்ணைக்கூட அவனுக்கு தந்திருக்கவில்லை.

என்னை மணந்து கொள்ளவதாக என் அம்மாவிடம் சொன்ன என் முதலாளி என் நான்கு தங்கைகளுக்கும் தானே மணம் முடித்து வைப்பதாக வாக்கு கொடுத்து விட்டார். அப்பா இல்லாமல் இருக்கும் எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டியவரை விலக்கி விட அம்மாவுக்கு மனதில்லை. எனக்கு என்ன தெரியும் என்று அம்மாவே முடிவை எடுத்து விட்டாள். எனக்கும் இப்போது பக்குவம் வந்து விட்டது. வாழ்கையின் எதார்த்தம் புரிகிறது. அவன் அன்று சொன்ன பக்குவம் இதுதானோ?

ஆனாலும் மனது கொண்ட நினைவுகள் என் பக்குவத்தை கேலி செய்வதை என்னால் தடுக்க முடியவில்லை. அவனை நான் ஏமாற்றியதாக அவன் நினைத்தாலும், அல்லது நானே நினைத்தாலும் அவன் சொன்ன வார்த்தைகளை நான் பின்பற்றுகிறேன் என்று அவனுக்கு யார் சொல்வது? எட்ட நின்று அவன் முகத்தை பார்க்கத்தானே என் கணவர் மற்றும் குழந்தையுடன் அவன் கல்யாணத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

ஒரு நாள் = 24 மணிநேரம் ' : முதலில் சொன்னது யார்..?

ஒரு நாள் என்பது 24 மணிநேரம்...! ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்...! ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்...! ....... இதெல்லாம்... எப...