லேபிள்கள்

வெள்ளி, 29 டிசம்பர், 2017

பெர்சனல் கம்ப்யூட்டர் பேக் அப்

பெர்சனல் கம்ப்யூட்டர் பேக் அப்

கம்ப்யூட்டரில் பணிபுரியும் அனைவரும் நாம் உருவாக்கும் டேட்டா அடங்கிய பைல்களுக்கு பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதனை அறிந்தே இருக்கிறோம். ஆனால், ஒரு சிலரே, மிகச் சரியாக வகுத்துக் கொள்ளும் கால இடைவெளியில், பைல்களுக்கான பேக் அப் காப்பி பைல்களை எடுத்து பாதுகாக்கின்றனர். பலர், "நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்குக்கு ஒன்றும் ஆகாது; அப்படியே ஆனாலும், இந்த பைல்கள் அவ்வளவு முக்கியம் அல்ல" என்று எண்ணுகின்றனர். ஆனால், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி நிற்கும்போது, அந்த டேட்டா உள்ள பைல் போய்விட்டதே, கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்த போட்டோ போய்விட்டதே, அவனிடம் கொடுத்த பணம் குறித்த தகவல் போய்விட்டதே என்று பதற்றம் அடைகின்றனர்.



சிலரோ, எப்படி எதனை பேக் அப் செய்வது என்ற வழி தெரியாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். முன்பெல்லாம், பேக் அப் என்பது எப்படி எடுக்க வேண்டும், எதில் பேக் அப் பைல்களை வைக்க வேண்டும், எந்த பைல்களை எடுக்க வேண்டும் என்பதெல்லாம், மிகப் பெரிய சவாலான செயலாக இருந்தது. இப்போதைய கால கட்டத்தில், நமக்குக் கிடைக்கும் சாப்ட்வேர் வசதிகள், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் தேக்ககங்கள் ஆகியவை பேக் அப் பணிகளை எளிதாக மாற்றியுள்ளன. இப்போதும் நாம் அவற்றைப் பயன்படுத்தி, பேக் அப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றால், நம்மிடம் தான் குறை உள்ளது. இங்கு, எப்படி, எந்த வகைகளில் பேக் அப் செய்வது என்பது குறித்துப் பார்க்கலாம்.
எவற்றை எல்லாம் பேக் அப்?:
 சில பைல்களை 'நாம் பேக் அப் காப்பி எடுத்தே ஆக வேண்டும்' என்ற வகையில் அனைவரும் வைத்திருப்போம். இவற்றுக்கு ஏதேனும் ஒரு வகையில் பேக் அப் கம்ப்யூட்டரில் அல்லது வேறு தேக்கக மீடியாவில் வைத்திருப்போம். இத்தகைய பைல்கள் தவிர, நாம் எவற்றை பேக் அப் செய்திட வேண்டும்?
உங்களுடைய பைல்களை, அவை கொண்டுள்ள டேட்டாவின் அடிப்படையில், பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் பிரித்து வைத்திருந்தால், நாம் பேக் அப் செய்திடப் பயன்படுத்தும் சாப்ட்வேர் செயலிக்கு, பேக் அப் செய்திட வேண்டிய பைல்களின் வகையைக் (டாகுமெண்ட், படங்கள், விடியோ மற்றும் நம் மியூசிக் போல்டர்கள்) காட்டிவிடலாம். இருப்பினும், வேறு சில வகை டேட்டாவினையும் நாம் பேக் அப் செய்தாக வேண்டும்.
 

மின் அஞ்சல்: நமக்கு வந்திருக்கும் மின் அஞ்சல்களைப் பெற்று, நம் கம்ப்யூட்டரில் தங்க வைக்கும், இமெயில் க்ளையண்ட் செயலிகளைத் (தண்டர்பேர்ட், ஆப்பரா போன்றவை) தற்போது அவ்வளவாக யாரும் பயன்படுத்துவது இல்லை. இத்தகைய செயலிகளில், எப்படி பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது என்ற அமைப்பினை, அந்த செயலிகளிலேயே அறிந்து பயன்படுத்தலாம்.

ஜிமெயில் அல்லது அவுட்லுக் டாட் காம் போன்ற இணையத்தில் இயங்கும் இமெயில் தளங்களையே நாம் பயன்படுத்துகிறோம். எனவே, அவற்றை எப்படி பேக் அப் காப்பி எடுக்கலாம் என்பதனை, அந்த தளத்தில் தரப்பட்டுள்ள வழிவகைகளைத் தெரிந்து பின்பற்றலாம். அல்லது, eM Client போன்ற டெஸ்க்டாப் சாப்ட்வேர் செயலிகலைப் பயன்படுத்தி, அந்த அஞ்சல்களைப் பெறலாம். இந்த செயலிகள், இணையத்தில் இருந்தவாறே இயங்கும் அஞ்சல் தளங்களிலிருந்து அஞ்சல்களைப் பெற உதவுகின்றன. இவை, ஜிமெயில், கூகுள் ஆப்ஸ், ஐ க்ளவ்ட், அவுட்லுக் டாட் காம் மற்றும் இது போல இயங்குகிற இணைய தள மெயில் செயலிகளை சப்போர்ட் செய்கின்றன. இந்த செயலியில் தொடர்ச்சியாக பேக் அப் செய்திட செட்டிங்ஸ் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. Tools > Settings > Backup எனச் சென்று, பேக் அப் செய்வதற்கென ஒரு போல்டரை அமைத்து, தொடர்ச்சியாக பேக் அப் செய்திடலாம்.

பிரவுசர்கள்: உங்களுடைய பிரவுசர்களில், நீங்கள் கவனமாக சில புக்மார்க்குகள் அல்லது பேவரிட் எனப்படும் குறியீடுகளை, அடிக்கடி பார்க்க வேண்டிய தளங்களுக்காக ஏற்படுத்தி இருக்கலாம். இவை எப்போதும் நமக்குத் தேவைப்படும். கம்ப்யூட்டர் கிராஷ் ஆவதனால், இவற்றை நாம் இழக்கும் நிலை ஏற்படலாம். எனவே, இவற்றையும் ஒரு பைலில் அமைத்து, அதற்கான பேக் அப் எடுத்து வைப்பதே நல்லது. 
சில பிரவுசர்கள் இதற்கான வழிமுறைகளையும் கொண்டுள்ளன. மொஸில்லா, தன் பயர்பாக்ஸ் பிரவுசரிலேயே, இவற்றைச் சுருக்கி பேக் அப் செய்திடும் வழியினைக் கொண்டுள்ளது. வலது மேல் பக்கம் உள்ள மூன்று கோடுகள் அடங்கிய ஐகானில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனு மூலம், இதற்கென அக்கவுண்ட் ஒன்றை ஏற்படுத்தி பேக் அப் செய்திடலாம். இதனை பயர்பாக்ஸ் இயங்கும் உங்களுடைய அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பெறும் வகையில் அமைக்கலாம். பயர்பாக்ஸ் செயலியை ஏற்று இயங்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். போன்களிலும் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
 

கூகுள் குரோம் பிரவுசரிலும் இதே போன்ற ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி, குரோம் பிரவுசரில் நாம் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் ((bookmarks, extensions, themes,) பேக் அப் பைலாக மாற்றி, நம் கூகுள் அக்கவுண்ட் கணக்கில் வைத்துக் கொள்ளலாம். இவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டால், மற்ற கம்ப்யூட்டர்களில், நாம் நம் கூகுள் அக்கவுண்ட் மூலம் குரோம் பிரவுசரைப் பயன்படுத்துகையில், மாற்றங்களும் பேக் அப் பைலில் அப்டேட் செய்யப்படும்.
நம்மில் பலர் ஒரே ஒரு பிரவுசர் மட்டுமே பயன்படுத்துவதில்லை ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசரைப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு பிரவுசரிலும் புக்மார்க்குகளை அமைக்கிறோம். ஒவ்வொரு பிரவுசருக்கும் ஒரு புக்மார்க் பேக் அப் பைல் உருவாக்கி வைப்பது, நம் நேரத்தை வீணாக்கும். இந்த சிரமத்தினைப் போக்கும் வகையில் எக்ஸ்மார்க்ஸ் (Xmarks) என்னும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பயர்பாக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்புளோரர், சபாரி உட்பட அனைத்து பிரவுசர்களிலும் அமைக்கப்படும் புக்மார்க்குகளை இது ஒருங்கிணைத்துத் தருகிறது. நீங்கள் ஏற்படுத்திய புக்மார்க்குகளில் சின்ன மாற்றத்தை ஏற்படுத்தினாலும், அது உடனே மாற்றத்துடன் பேக் அப் பைலுக்கும் செல்கிறது.
 

ட்ரைவர் பைல்கள்: கம்ப்யூட்டரோடு அதன் துணை சாதனங்களை இணைத்துப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால், அவற்றை இணைத்து இயக்குவதற்கான செயலிகளே, 'ட்ரைவர் பைல்கள்' என அழைக்கப்படுகின்றன. நம் கம்ப்யூட்டர், விடியோ கார்ட், அச்சுப் பொறிகள், ஸ்கேனர்கள் மற்றும் இது போன்றவற்றுடன் "பேசுவதற்கு" இந்த ட்ரைவர் பைல்கள் தேவைப்படுகின்றன. இந்த பைல்கள் நமக்குத் தனியே அனைத்தும் கிடைப்பதில்லை. அவை தாமாகவே, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தால் எடுத்துப் பதியப்பட்டுக் கொள்ளப்படுகின்றன. 

அப்படியானால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி, மீண்டும் இயக்கப்படுகையில், இந்த துணை சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்களின் தேவையை எப்படி நிறைவேற்றிக் கொள்வது? ட்ரைவர் பைல்களை பேக் அப் செய்வதற்கென்றே ஒரு சில சாப்ட்வேர் புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில், DriverMax என்னும் செயலி பலராலும் விரும்பி பயன்படுத்தப்படுகிறது. http://www.drivermax.com/ என்ற இணைய தளத்தில் இதனை இலவசமாகப் பெறலாம். ஆனால், இதனை உங்கள் கம்ப்யூட்டரில் பதியும் போது சற்று கவனமாக இருக்கவும். இது கூடுதலாகச் சில டூல் பார்களையும் பதிகிறது. மாற்றாக Slim Drivers என்ற செயலியை நிறுவலாம். இந்த செயலியும் ட்ரைவர் பைல்களை பேக் அப் எடுத்து வைப்பதுடன், பேக் அப் எடுத்துள்ள ட்ரைவர் பைல்களுக்குத் தற்போதைய மேம்படுத்தப்பட்ட பதிப்பு உள்ளதா எனத் தேடி அறிவிக்கிறது. 
ட்ரைவர் பைல்களை பேக் அப் எடுத்து வைக்காவிட்டால், அவற்றைத் தேடி, துணை சாதனங்களைத் தயாரித்து வழங்கிய நிறுவனங்களின் இணைய தளங்களைத் தேடி அலைய வேண்டும். எனவே, மேலே கூறிய இரண்டு செயலிகளில், ஏதாவது ஒன்றின் மூலம், அனைத்து ட்ரைவர்களுக்கும் பேக் அப் எடுத்து வைப்பதே நல்லது.

சமுதாய வலைத் தளங்கள்: குறைந்த பட்சம் ஒரு சமுதாய இணைய தளத்திலாவது நாம் நமக்கென பக்கம் வைத்து இயங்கி வருகிறோம். ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் தங்களுக்கென கணக்கில்லாத கம்ப்யூட்டர் பயனாளரை நாம் காண்பது அரிது. இந்த தளங்களில் நாம் பதிவு செய்த தகவல்கள், படங்கள் ஆகியவற்றை நாம் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்த தளங்கள் கிராஷ் ஆகாது என்று அனைவரும் நம்பிக்கையுடன் உள்ளனர். இருப்பினும், நாம் இதனை பேக் அப் எடுத்து வைத்து, மீண்டும் மீள் பதிவினை ஏற்படுத்தப் போவதில்லை. நாம் பதிந்த தகவல்களுக்கும் படங்களுக்கும் நம்மிடம் ஒரு காப்பி இருப்பது நல்லதுதானே.
ட்விட்டர் வலைத்தளத்தில், வேறு தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் இதற்குத் தேவை இல்லை. உங்களுடைய அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கம் சென்று, செட்டிங்ஸ் பிரிவில் "Request your archive" என்ற இடத்திற்குச் செல்லவும். நீங்கள் பதிவு செய்த அனைத்து தகவல்களும் படங்களும் மொத்தமாக உங்களுக்குக் கிடைக்கும். அதற்கான லிங்க் உங்களுடைய மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

பேஸ்புக் வலைத் தளத்தில், General Account Settings செல்லவும். அங்கு கீழாகச் சென்றால், "Download a copy of your Facebook data" என்று ஒரு லிங்க் இருக்கும். உங்கள் அனைத்து பதிவுகளும் எடுக்கப்பட்டு, தொகுக்கப்படும். இதனைப் பெறுவதற்கான லிங்க் உங்களுடைய மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். 
பேக் அப் வகைகள்:
 பேக் அப் செய்வது என்பது, பைல் ஒன்றை இன்னொரு இடத்தில் காப்பி செய்வதைப் போல எளிதானதுதான். உங்கள் ஹார்ட் ட்ரைவிலிருந்து, ஒரு ப்ளாஷ் ட்ரைவிற்குக் காப்பி செய்வதும் ஒரு வகையான பேக் அப் தான். இருப்பினும், மீண்டும் மீண்டும் பெறும் வாய்ப்புகள், பாதுகாப்பான பேக் அப், பேக் அப் செய்ததனை அணுகிப் பெறும் முறை ஆகியவையே, எந்த வகை பேக் அப் முறையினை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதனை முடிவு செய்கின்றன.

குறிப்பிட்ட வகை டேட்டாவினை மட்டுமே பேக் அப் செய்திட வேண்டும் என எண்ணினால், அதனை எளிதாக்கும் சாப்ட்வேர் ஒன்றைப் பயன்படுத்தவும். பேக் அப் என்பது, பைல் ஒன்றின் காப்பி எடுப்பது மட்டுமல்ல. இரண்டு நகல்களாவது ஏற்படுத்த வேண்டும். எனவே, போல்டர் முழுவதையும் காப்பி செய்து, பின்னர் அதே போல்டரில் மீண்டும் பைல்களை இணைக்கையில், போல்டர் முழுவதையும் பேக் அப் எடுத்து வைக்கலாம். இதற்கென பல செயலிகள் உள்ளன. விண்டோஸ் 7 சிஸ்டத்தில், அதனுடன் இணைத்துத் தரப்பட்டுள்ள Backup and Restore என்ற வசதியை இதற்குப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 8 முதல் File History என்ற பேக் அப் டூல் தரப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, ஹார்ட் டிஸ்க்கின் முழு இமேஜையும் பேக் அப் எடுக்கலாம். விண்டோஸ் 10 சிஸ்டத்தில், ஹார்ட் டிஸ்க்கின் முழு பேக் அப் எடுக்க, Bvckup2, SyncBackSE or SyncBackPro, மற்றும் AOMEI Backupper Standard ஆகிய செயலிகளைப் பயன்படுத்தலாம். 

க்ளவ்ட் தேக்ககம்: ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தி வருவோருக்கு, க்ளவ்ட் ஸ்டோரேஜ் பேக் அப் மிகவும் வசதியான ஒன்றாகும். இதன் மூலம், நாம் பயன்படுத்தும் எந்த கம்ப்யூட்டரிலும், நம்முடைய பைல்கள் அனைத்தையும் பெற்றுப் பயன்படுத்தலாம். இந்த வசதியில் தரப்படும் டூல், நம் பைல்களை அனைத்தையும், க்ளவ்ட் முறையில் பேக் அப் எடுத்து வைப்பதால், நாம் எந்த கம்ப்யூட்டர் வழியாகவும், அவற்றைப் பெற்று பயன்படுத்தலாம். ஸ்மார்ட் போன்களிலும் இவற்றைப் பெறலாம். க்ளவ்ட் பேக் அப் செயல்பாடுகளுக்கு, பல இணைய தளங்கள் வழி தருகின்றன. 2 ஜி.பி.முதல் பல அளவுகளில் இடம் தரப்படுகின்றன. கட்டணம் செலுத்தியும் கூடுதல் இடத்தினைப் பெற்று க்ளவ்ட் ஸ்டோரேஜ் முறையில், நம் பைல்களுக்குப் பேக்கப் எடுக்கலாம்.
http://www.tamilyes.com/t53402-topic

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 27 டிசம்பர், 2017

வெள்ளிக் கிழமை சிறந்த நாள்

வெள்ளிக் கிழமை சிறந்த நாள்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்-
அல்லாஹ் மாதங்களை பன்னிரெண்டாக அமைத்து அதில் சில மாதங்களை புனித மாதம் என்று கூறுகிறான். அதை போல வாரத்தில் ஏழு நாட்கள், அந்த நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும் என்று இஸ்லாம் உறுதிப் படுத்கிறது. பொதுவாக எல்லா நாட்களும் இறைவனால் படைக்கப்பட்ட நாட்களாகும்.என்றாலும் சில அமல்கள் மூலம் குறிப்பிட்ட அந்த நாட்கள் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் வெள்ளிக் கிழமைநாளில் ஜும்ஆ என்ற அமலை முன் நிறுத்தி பல சிறப்புகளை (நன்மைகளை) வழங்கி அந்த நாள் நாட்களில் சிறப்பான நாளாக இஸ்லாம் அறிவித்துள்ளது. அல்ஹம்து லில்லாஹ்!
பின்வரக் கூடிய ஹதீஸ்களை நன்றாக அவதானியுங்கள்.

சிறந்த நாள்
" நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம் 1548)

மேலும் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாம்தாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். எனினும், (நமக்கு முன்வந்த) ஒவ்வொரு சமுதாயத்தாரும் (யூத மற்றும் கிறித்தவர்) நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அல்லாஹ் நம்மீது விதியாக்கியுள்ள இந்த (வெள்ளிக்கிழமை) நாளை அல்லாஹ் நமக்காக(த் தேர்ந்தெடுத்து) அறிவித்தான். (வார வழிபாட்டு நாள் தொடர்பாக) மக்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (வெள்ளிக்கிழமை நமது வழிபாட்டு நாள் எனில்) அடுத்த நாள் (சனிக்கிழமை) யூதர்களின் (வழிபாட்டு) நாளாகும். அதற்கடுத்த நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறித்தவர்களின் (வழிபாட்டு) நாளாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம் 1549)

எனவே ஆதம் நபியை முக்கியத்தும் படுத்தியும், அமல்கள் ரீதியாக வெள்ளிக்கிழமை சிறப்பான நாளாகவும் நபியவர்கள் பிரகடனப் படுத்தியுள்ளார்கள்.
வியாபாரம் செய்ய தடையா?
வெள்ளிக்கிழமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக ஜும்ஆ நடக்கும் நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது என்ற தடையை அல்லாஹ் குா்ஆன் மூலம் எச்சரிக்கிறான். அதை பின் வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் அறியலாம்.

ஈமான் கொண்டவர்களே! ஜும்ஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். 62:9.
பின்னர், (ஜும்ஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். 62:10.
அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; "அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. 62:11.
ஜும்ஆ நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது அவைகளை நிறுத்தி விட்டு நேரத்தோடு பள்ளிக்கு வர வேண்டும் என்பதை இந்த வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதிகமான மக்கள் பின் வரும் கேள்வியை கேட்கிறார்கள். அதாவது ஆண்கள் பள்ளிக்கு (ஜும்ஆவிற்கு) செல்வதற்காக வியாபாரத்தை விடும் படி இறைவன் சொல்கிறான் அப்படியானால் பெண்கள் அந்த நேரத்தில் வியாபாரம் செய்யலாமா? அல்லது கடையை பூட்டாமல், அல்லது தொழில் சாலையை பூட்டாமல் அந்த நேரத்தில் அந்நியர்கள் மூலம் வியாபாரம் செய்யலாமா? என்ற கேள்வி பரவலாக கேட்பதை காணலாம்.
நேரடியான தடையை இதற்கு நாம் காணா விட்டாலும், வியாபாரத்தை விடுங்கள் என்ற வாசகம் வியாபாரம் செய்யக் கூடாது என்ற விளக்கத்தை தருகிறது. சனிக்கிழமை மீன் பிடிக்க கூடாது என்ற இறைவனின் சட்டத்தை மீறி தந்திரமாக கையாண்டதினால் அவர்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும், மாற்றப் பட்டார்கள். அவர்களை இறைவன் கடுமையாக தண்டித்தான் என்பதை குர்ஆனில் காண்கிறோம் என்றால் பொதுவாக அந்த ஜும்ஆ நேரத்தில் மட்டும் அனைவரும் வியாபாரத்தை விடுவது தான் மிகவும் பொருத்தமாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
சிலர் வெள்ளிக் கிழமையின் முக்கியத்துவத்தால் அன்றைய நாள் முழுவதும் வியாபாரத்துக்கு விடுமுறை அளிக்கிறார்கள், இன்னும் சிலர் ஜும்ஆ செல்வதற்காக அரை நாள் விடுமுறை எடுத்து, ஜும்ஆவிற்குப் பின் தன் வியாபாரத்தை ஆரம்பிக்கிறார்கள், இன்னும் சிலர் ஜும்ஆ-விற்கு முன் நேரத்தோடு வியாபாரத்தை விட்டு விடுகிறார்கள். அல்லாஹ் இவர்களுக்கு அருள்பாளிப்பானாக!
எனவே ஜும்ஆ நேரத்தை மைய்யப் படுத்தி சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை கொடுக்கலாம். இது நமது ஈமானுக்கும் பாதுகாப்பும் , நமது செல்வத்திற்கும் பாதுகாப்பாகும்.
இதன் மூலம் அந்நியர்கள் நமது மார்க்கத்தை விளங்கிக் கொள்வதற்கும், இஸ்லாத்தின் மீது உறுதியை அறிந்து கொள்வதற்கும், இது ஒரு அழகான வழி முறையாகும்.
ஜும்ஆ தொழுதால்
" நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் (வெள்ளிக்கிழமை அன்று) குளித்துவிட்டு ஜுமுஆத் தொழுகைக்குச் சென்று, அவரது விதியில் எழுதப்பட்டிருந்த அளவு (கூடுதலாகத்) தொழுதார்; பிறகு இமாம் தமது சொற்பொழிவை (குத்பா) முடிக்கும்வரை வாய்மூடி மௌனமாக உரையைக் கேட்டுவிட்டு, அவருடன் சேர்ந்து தொழுகையை நிறைவேற்றுகிறார். இத்தகையவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரையும் மேற்கொண்டு மூன்று நாட்கள்வரையும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம்1556)

ஜும்ஆ தொழுகைக்காக குளித்து விட்டு, தலைக்கு எண்ணை பூசி, நறுமணங்களை பூசிக்கொண்டு, நேரத்தோடு பள்ளிக்குச் சென்றால் சுமார் பத்து நாட்களின் சிறு பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை அவதானியுங்கள்.
மலக்குமார்கள் பள்ளியில்
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடைபெறும்) பள்ளி வாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் நின்று கொண்டு, முதன்முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால், வானவர்கள் அந்த (பெயர் பதிவு) ஏடுகளைச் சுருட்டிவைத்துவிட்டு வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகின்றனர். (ஜுமுஆவுக்காக) நேரத்தோடு வருபவரது நிலையானது,ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஓர் ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும், அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றவர்கள் ஆவர்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் 1554 )

மேலும் ". அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெருந்துடக்கிற்காகக் குளிப்பதைப் போன்று வெள்ளியன்று குளித்துவிட்டு (நேரத்தோடு பள்ளிவாசலுக்கு)ச் செல்பவர், ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். (அதற்கடுத்த) இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைக் குர்பானி செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (தமது அறையிலிருந்து) வெளியேறி (பள்ளிவாசலுக்குள் வந்து)விட்டால், (பெயர்களைப் பதிவு செய்யும்) வானவர்களும் இமாமின் சொற்பொழிவைச் செவியுற (உள்ளே) வந்துவிடுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் 1540 )

எனவே நாம் நேரத்தோடு இமாம் மிம்பருக்கு ஏறுவதற்கு முன் பள்ளிக்குள் சென்று விட்டால் மேற்ச் சுட்டிக்காட்டிய சிறப்புகளையும், நன்மைகளையும் இலகுவாக பெற்றுக் கொள்ளமுடியும்.
து ஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்!
வெள்ளிக் கிழமை நாள் ஒரு நேரம் இருக்கிறது அந்த நேரத்தில் ஓர் அடியான் தொழுது விட்டு அல்லாஹ்விடம் து ஆ கேட்டால், அந்த து ஆவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதாக நபியவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்.

"அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் "அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அது மிகக் குறைந்த நேரம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. ( முஸ்லிம் 1543 )

மேற்ச் சென்ற ஹதீஸில் தொழுகையில் ஈடுப் பட்டு, பிறகு துஆ கேட்டால் என்ற வாசகத்தின் மூலம் ஜும்ஆ தொழுகையை முடித்து விட்டு துஆ கேட்க வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் மிக அறிந்தவன். மேலும் வெள்ளிக் கிழமை நாளில் ஒரு நேரம் என்ற வாசகமும், தொழுகையில் ஈடு பட்டு விட்டு து ஆ கேட்க வேண்டும் என்ற வாசகமும் அது வெள்ளிக் கிழமை நாளின் சுப்ஹூ தொழுகை, ஜும்ஆ தொழுகை, அஸர் தொழுகை, ஆகிய தொழுகையின் பின்னால் ஏதோ ஒரு நேரமாகவும் இருக்கலாம் என்பதையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது அல்லாஹ் மிக அறிந்தவன்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 25 டிசம்பர், 2017

அன்பை வளர்க்கும் அன்பளிப்புகள் !

அன்பை வளர்க்கும் அன்பளிப்புகள் !

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்-
இஸ்லாம் மார்க்கம் சக மக்களுடன் அன்பாகவும், பாசமாகவும் இணைந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காக பல வழிகளை நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று தான். அனபளிப்புகளை மாறி, மாறி கொடுத்துக் கொள்வதாகும். அன்பளிப்புகளை மாறி, மாறி, கொடுப்பதன் மூலம் மனிதர்களுக்கு மத்தியில் அன்பும், ஒற்றுமையும் அதிகரித்துக் கொண்டே போகும். எப்படி ஒரு மனிதனுக்கு ஸலாம் சொல்லும் போது அன்புகள் பறிமாறப் படுகின்றனவோ அது போல அன்பளிப்புகள் மூலம் அன்புகளும் பறிமாறப் படுகின்றன. அதனால் தான் நீங்கள் சமைத்தால் அதில்தண்ணீரை கொஞ்சம் ஊற்றி பக்கத்து வீட்டாருக்கு கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதுவும் ஒரு வகை அன்பளிப்பாகும். இதன் மூலம் பக்கத்து வீட்டார்கள் மூலம்அன்பு என்ற உறவுகள் பலப்படும்.

இந்த அன்பளிப்புகள் விடயத்தில் இஸ்லாம் நமக்கு எப்படி வழிக் காட்டுகிறது என்பதை தொடர்ந்து அவதானிப்போம்.


சமமாக கொடுக்கப்படல்
அன்பளிப்புகள் யாரும் யாருக்கும் கொடுக்கலாம். அதே நேரம் தன் பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் கொடுக்கும் போது எந்த பாகுபாடும் காட்டாமல், அனைவருக்கும் ஒரே மாதிரி சமமாக கொடுக்கப்பட வேண்டும். ஒருவருக்கு ஒரு மாதிரி, மற்றொருவருக்கு இன்னொரு மாதிரி என்று வழங்கப்படுமேயானால் அது ஒரு பிள்ளைக்கு செய்யும் பெரிய அநியாயமாகும். அந்த அநியாயத்திற்கு மறுமையில் தண்டனை வழங்கப் படும். பின் வரும் சம்பவத்தை கவனியுங்கள்.

." நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நான் சிறுவனாக இருந்தபோது) என் தந்தை தமது செல்வத்தில் ஒன்றை எனக்குத் தானமாக வழங்கினார்கள். அப்போது என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் "நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக ஆக்காத வரை நான் இதை ஒப்புக்கொள்ளமாட்டேன்" என்று கூறினார். ஆகவே, என் தந்தை எனக்குத் தானமாக வழங்கியதற்கு நபி (ஸல்) அவர்களைச் சாட்சியாக்குவற்காக அவர்களிடம் சென்றார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், "உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் இதைச் செய்தீர்களா?" என்று கேட்டார்கள். என் தந்தை, "இல்லை" என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்கள் பிள்ளைகளிடையே நீதியாக நடந்துகொள்ளுங்கள்" என்று கூறினார்கள். உடனே என் தந்தை (வீட்டுக்குத்) திரும்பி வந்து, அந்தத் தானத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டார்கள். ( முஸ்லிம் 3325 )

எனவே பிள்ளைகளுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டக் கூடாது. அப்படி காட்டினால் மறுமையில் தண்டிக்கப் படுவார் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அன்பளிப்புகளை திரும்ப பெறல் கூடாது
ஒருவருக்கு அன்பளிப்புகளை கொடுத்து விட்டு, ஏதோ ஒரு பிரச்சனையினால் அதை திரும்ப கேட்க கூடாது. அப்படி கேட்பதை இஸ்லாம் தடை செய்கிறது.

பின் வரும் ஹதீஸ்களை கவனியுங்கள்.
"உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒருவரை அல்லாஹ்வின் பாதையில் (பயணம் மேற்கொள்வதற்காக) உயர்ரகக் குதிரையொன்றில் (அவருக்கே அதைத் தானமாகக் கொடுத்து) அனுப்பிவைத்தேன். அந்தக் குதிரைக்காரர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். அவர் அதை மலிவான விலைக்கு (கேட்டால்கூட) விற்றுவிடுவார் என்று நான் எண்ணினேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை விலைக்கு வாங்காதீர். உமது தானத்தைத் திரும்பப்பெறாதீர். தனது தானத்தைத் திரும்பப் பெறுபவன் நாய்க்கு நிகரானவன் ஆவான். தான் எடுத்த வாந்தியைத் தானே தின்கிறது நாய்" என்றார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அதை அவர் உமக்கு ஒரு வெள்ளிக் காசுக்குக் கொடுத்தாலும் சரி, அதை விலைக்கு வாங்காதீர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. ( முஸ்லிம் 3313 )
எனவே கொடுத்த அன்பளிப்புகளை திரும்ப பெறக் கூடாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஆயுட்கால அன்பளிப்புகள்
. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இது, உனக்கும் உன் சந்ததிகளுக்கும் உரியது என ஒரு பொருளை ஒருவர் ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கினால்,அவரது சொல்லே (அந்தப் பொருளில்) அவருக்குரிய உரிமையை நிறுத்திவிடுகிறது. அது யாருக்கு ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கும் அவருடைய சந்ததிகளுக்குமே உரியதாகும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் 3333 )

மேலும் " அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் மற்றொருவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு வழங்கினால், அது அன்பளிப்பு வழங்கப்பட்ட மனிதருக்கும் அவருடைய சந்ததிகளுக்குமே உரியதாகும். அவர், "நான் இ(ந்தச் சொத்)தை உமக்கும் உம்முடைய சந்ததிகளுக்கும்,உங்களில் ஒருவர் உயிரோடிருக்கும்வரை வழங்கிவிட்டேன்" என்று கூறி அன்பளிப்பாக வழங்கினாலும் அது அன்பளிப்பு வழங்கப் பட்டவருக்கே உரியதாகும். அது (அவரது ஆயுட் காலத்திற்குப் பின்), அன்பளிப்பு வழங்கியவரிடம் திரும்பாது. காரணம், (அன்பளிப்பு வழங்கப்பட்டவரின்) வாரிசுகளுக்குப் போய்ச் சேரும் வகையிலேயே அவர் நன்கொடை வழங்கியுள்ளார்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 3334 )

மேலும் " ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவிலிருந்த ஒரு பெண்மணி தம் புதல்வர் ஒருவருக்குத் தமது தோட்டமொன்றை ஆயுட்கால அன்பளிப்பாக (உம்றா) வழங்கினார். பிறகு அந்தப் புதல்வர் இறந்துவிட்டார். அதன் பிறகு அந்தப் பெண்ணும் இறந்துவிட்டார். அந்தப் புதல்வர் குழந்தைகளை விட்டுச்சென்றிருந்தார். அந்தப் புதல்வருக்குச் சகோதரர்களும் இருந்தனர். அவர்கள் ஆயுட்கால அன்பளிப்பு வழங்கிய அப்பெண்ணின் மைந்தர்கள் ஆவர். (அந்தப் புதல்வரின் இறப்புக்குப் பின்,) அன்பளிப்பு வழங்கிய அப்பெண்ணின் மைந்தர்கள் "தோட்டம் திரும்ப எங்களுக்கே கிடைக்கும்" என்று கூறினர். அன்பளிப்புப் பெற்ற அப்புதல்வரின் மகன்கள், "இல்லை; அதன் உரிமை. வாழ்ந்த போதும் இறந்த பின்பும் எங்கள் தந்தைக்கே உரியது"என்று கூறினர்.
பின்னர் இவ்வழக்கை (மதீனாவின் அன்றைய ஆளுநராயிருந்த) உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான தாரிக் பின் அம்ர் (ரஹ்) அவர்களிடம் கொண்டு சென்றனர். தாரிக் பின் அம்ர், (தம்மிடம்) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களை வரவழைத்(து அதைப் பற்றி விசாரித்)தார். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் "ஆயுட்கால அன்பளிப்பு,அன்பளிப்பு பெற்றவருக்கே உரியதாகும்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சாட்சியமளித்தார்கள்.
இதன்படியே தாரிக் பின் அம்ரும் தீர்ப்பு வழங்கினார். பிறகு தாரிக், (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்குக் கடிதம் எழுதி விவரத்தைத் தெரிவித்தார். ஜாபிர் (ரலி) அவர்களின் சாட்சியத்தையும் தெரிவித்தார். அப்போது அப்துல் மலிக் பின் மர்வான் "ஜாபிர் சொன்னது உண்மையே" என்று கூறினார். பின்னர் இதையே தாரிக் நடைமுறைப்படுத்தினார். ( முஸ்லிம் 3340)

மேலும். ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இது உனக்கும் உன் சந்ததிக்கும் உரியதாகும்" என்று கூறி வழங்கப்படும் ஆயுட்கால அன்பளிப்புக்கே அனுமதியளித்தார்கள். "உன் ஆயுள் முழுவதும் இது உனக்குரியதாகும்" என்று (மட்டும்) கூறினால், அது (அன்பளிப்பு பெற்றவரின் ஆயுட்காலத்திற்குப் பின்) அன்பளிப்பு வழங்கியவருக்கே திரும்பிவிடும். (முஸ்லிம் 3335 )

எனவே தனது தோட்டத்தையோ, தனது விவசாய காணியையோ ஒருவர் மற்றொருவருக்கு வழங்கி இது உனக்கு மட்டும் உரியது என்ற அன்பளிப்பாக கொடுத்தால், அவர் மரணித்த பின் அந்த அன்பளிப்பை கொடுத்தவரிடமே போய் சேர்ந்து விடும். அதே நேரம் உங்களில் ஒருவர் உயிரோடு இருக்கும் வரை என்று கூறி அன்பளிப்பாக கொடுத்தால் அது அவரின் பரம்பரை பரம்பரையாக பெற்றவருக்கே சொந்தமாகும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 23 டிசம்பர், 2017

யார் ஏமாளி?

யார் ஏமாளி?

சபிதா காதர்.
இன்றைக்கு தொலைகாட்சியைத் திறந்தால் நாம் காண விரும்பும் நிகழ்ச்சிகளை விட அதிகம் ஆக்கிரமித்திருப்பவை விளம்பரங்கள் மட்டுமே.
சினிமா நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்கள், விளம்பர மாடல்கள் என்று அனைவரும் இந்த தொலைக்காட்சி வாயிலாக "இதை வாங்குங்க" "இந்த கடையில் வாங்குங்க" "இதுக்கு இதை இலவசமாக வாங்குங்க" "இவ்வளவு விலை குறைப்பு செய்து தருகிறோம்" "எங்களை போல இந்த உலகத்திலும் கிடையாது" என்று டிசைன் டிசைனாக வலை விரிக்கிறார்கள். காண்பவரும் அப்படியே மதி மயங்கிவிடுவதும் மனித இயல்பு.


உண்மையிலேயே ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவருடைய ஆசையை முதலில் தூண்டி விட வேண்டும். அதைத்தான் இன்றைய விளம்பரங்கள் பிரமாண்டம் என்றும் தள்ளுபடி என்றும் தூண்டில் போடுகிறார்கள்.அவர்களின் நிலையை சொல்லியும் குற்றமில்லை. வீட்டில் உட்கார்ந்த படியே இணையத்தில் அனைவரும் பொருட்களை வாங்கிவிட்டால் எதைச்சொல்லி அவர்களை கடையை நோக்கி இழுப்பது என்பதுதானே அவர்களது கவலை.
கோடிகள் பல கொடுத்து அழைத்து வருகிற சினிமா நட்சத்திரங்களுக்கான செலவும் நம் தலையில் தான் விழுகிறது என்று தெரியாத முட்டாள்கள் யாரும் இங்கே இல்லை. சிகப்பழகு தன்னம்பிக்கையைத் தருகிறது என்கிற 25 ஆண்டு கால ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்தைக் காணும் போது (ஆசிட்)திராவக வீச்சினால் முகஅழகு மாறிப்போனாலும் உள்ளத்தால் உருமாறி போகாதவர்களாய் அபாரமான தன்னம்பிக்கையுடன் டெல்லியில் உணவகம் நடத்தும் எம் சகோதரிகள் இயல்பாய் மனதில் வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த ஃபேர் அண்ட் லவ்லியா தன்னம்பிக்கையினை விதைத்தது? தன்னம்பிக்கை என்பது முழுக்க முழுக்க மனம் சார்ந்தது என்று மக்கள் விளங்கிக்கொள்ளும் நாள் என்று வரும்?
ஆக்ஸ் எனும் ஸ்ப்ரேயை அடித்து கொண்டு செல்பவர் பின்னாடி பத்து பெண்கள் அவரது ஆண்மையைப் பரிசோதிக்க துரத்துகிறார்களாம். எவன் ஒருவன் பெண்ணை சக மனிஷியாய் பாவித்து நடத்துகிறானோ அவனே ஆண்மையுள்ள ஆண்மகன்.இப்படி பட்ட விளம்பரங்கள் தான் பெண்ணைப் போகப்பொருளாய்ப் பார்க்கும் வக்கிரத்தை நெஞ்சில் விதைக்கிறது. இத்தகைய விளம்பரத்தினை இயக்கியவருக்குத் தன்னம்பிக்கை சுத்தமாக இல்லை என்பதையே அவரது இந்த வக்கிரக் கருத்து கூறுகிறது.
விவசாய நிலங்கள் விலை நிலங்களாக்கப்பட்டு அதை விளம்பரப்படுத்தவும் விற்காத பெரிய ப்ராண்ட் தயாரிப்புகளை மக்களிடையே பிரபலப்படுத்தவும் இவர்கள் மெனெக்கெடுவதைப் பார்த்தால் அத்தனை வியப்பு தான் வரும். இந்த மெனெக்கெடல்களைத் தம் ஆக்கப்பூர்வமான தயாரிப்புகளுக்குச் செலவிட்டிருந்தால் அவை தானாக மக்களிடையே பிரபலமாகியிருக்குமே? இதனை மக்கள் சிந்திப்பார்களா?


விளம்பரங்களின் பாதிப்புகளில் சில
ஒரு டிவி ஷோரூமில் நின்று கொண்டிருந்தேன். அந்த தொலைக்காட்சியின் பெயரைஅதுவரை கேள்விப்பட்டதே இல்லை. இதப் பற்றி 40 வயதுக்குட்பட்ட தம்பதி விசாரித்துக் கொண்டிருந்தனர். "சூர்யா இந்த டிவிக்கு வெளம்பரத்த்துல வரான்அப்ப லோக்கல் டிவி லாம் இல்லதரமானதாகத் தான் இருக்கும். வெலயும் கம்மியா இருக்கு ..இதே வாங்கிடலாம்"என முடிவெடுத்து வாங்கினர்.
இப்படித்தான் போலியான நம்பகத்தன்மை விதைக்கப்படுகிறது. பொருள்களின் விளம்பரங்களில் வரும் நடிகர், நடிகைகளால் சில பொருட்கள் பிரபலமாகின்றன என்றால் பொருட்களின் விளம்பரத்தால் சில நடிகைகள் பிரபலமாகின்றனர். இவற்றிற்கிடையே மக்கள் ஏமாறுகின்றனர். சினிமாவில் பொய்யாக டயலாக் பேசுவதுபோல் தான் இவர்கள் விளம்பரங்களிலும் பேசுகின்றனர் என்பதை நாம் உணர வேண்டும். இத்தகைய சமூகப்பொறுப்பென்பது சிறிதும் இல்லாத இந்நடிகர்களை மானசீகக் குருவாகவும் முன்னுதாரணமாகவும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு விரைவில் மறைய வேண்டும்.
என்றாலும் அத்தி பூத்தது போல ஒன்றிரண்டு விளம்பரங்கள் மனதை நெகிழச்செய்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. புற்று நோயை எதிர்த்து போராடும் பெண் ஒருவர் தயக்கத்தோடு இந்த உலகத்தை எதிர்கொள்ளும் போது கணவன் மற்றும் நண்பர்கள் தைரியமூட்டும் வகையில் எடுக்கப்பட்ட வாடிக்கா விளம்பரம் ஒரு மைல் கல்.நம் நாட்டின் பன்முகத்தன்மை தன்னுடைய தயாரிப்பின் இரண்டறக் கலந்த AMUL THE TASTE IF INDIA என்ற விளம்பரம் பால்ய காலம் தொட்டு என் மனதுக்கு நெருக்கமானவை.
உண்மையிலேயே மக்கள் மனதில் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டிய விளம்பரங்கள் காமெடி ஆக்கப்படுகிறது என்பது தான் வேதனையளிக்கிறது. உதாரணமாக புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்கிற விளம்பரம் மக்களை சென்றடைந்தாலும் அதன் நோக்கம் மக்களை சேரவில்லை .ஆணுறைகள் பயன்படுத்துவதன் மூலம் எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் பரவாமல் தடுக்கலாம் .விளம்பரம் சொல்லும் கருத்து இது தான்.இது எத்தனை பேரை சென்றடைந்தது?
நுரையீரல் ஒரு பஞ்சு போன்ற உறுப்பு என்று ஆரம்பிக்கும் முகேஷ் விளம்பரம் புகைப்பிடித்தலின் கேடுகளை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டது. அதைக்கூட ஒரு சினிமாவில் கேலியாகத் தானே சித்தரித்தனர்?
உலகமயமாக்களின் முக்கியமான அங்கம் வகிப்பது விளம்பரங்களே என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்காக நீங்கள் காதில் சுத்தும் பூவை நம்புவதற்கு எல்லோரும் தயார் இல்லை என்பதற்கு அண்மையில் எடுக்கப்பட்ட 4G விளம்பரமும் அது குறித்த விழிப்புணர்வும் தக்க சான்று.
மேகியில் ஈயம் அதிகமாக உள்ளது என வெளியிடப்ப ஆய்வறிக்கையினால் பல இந்திய மாநிலங்களில் உடனடியாகத் தடையும் செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகு இந்தியாவில் விற்கும் பொருளுக்கு அமெரிக்கா, மற்றும் இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மேகியில் ஆபத்து இல்லை என்று மீண்டும் பிரச்சாரம் செய்வது ஏன்? அப்படியெனில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தவறானவையா? இவை போன்ற வழக்குகள் மூலம் தான் மக்களுக்குத் தான் எவ்வாறு ஏமாற்றப்படுகிறோம் என்பதே புரிகிறது.
மக்களை ஏமாற்றும் இத்தகைய விளம்பரங்கள் இன்னும் வருவதையும் நம் எதிர்கால சந்ததியினரை ஏமாற்றுவதையும் தடுக்க வேண்டுமென்றால் மக்கள் விழிக்க வேண்டும். நடிகர், நடிகைகள் கூறுவதெல்லாம் உண்மை என்ற எண்ணத்தை உடைத்தெறிய வேண்டும். என்ன கூறினாலும் பொருட்கள் விற்பனையாகும் என்ற தயாரிப்பாளர்களின் நோக்கத்தை மக்கள் தாம் அழிக்க வேண்டும். உதாரணத்திற்கு இமாமியின் விளம்பரத்தில் நடித்த நடிகர் இரண்டே வாரங்களில் சிகப்பழகு என விளம்பரப்படுத்த, அதனை எதிர்த்து ஒரு சமூக ஆர்வலர் வழக்குத் தொடுத்து தன் வாதத்தில் வெற்றியும் பெற்றார்.
இன்னும் பிரபல கல்லூரிகளின் விளம்பரத்தில் நடித்த நடிகைகள் "விளம்பரத்தில் நடித்தது தவிர அந்நிறுவனத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என பிறகு பின்வாங்கியதிலிருந்தாவது மக்கள் உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் சகோதரி
சபிதா காதர்.

http://www.islamiyapenmani.com/2015/11/blog-post_17.html
https://seasonsnidur.wordpress.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 21 டிசம்பர், 2017

மாமியார் மெச்சும் மருமகளாக, மருமகள் போற்றும் மாமியாராக வாழ்வதெல்லாம் இறைவன் கொடுத்த வரமா? ஒரு அலசல்

மாமியார் மெச்சும் மருமகளாக, மருமகள் போற்றும் மாமியாராக வாழ்வதெல்லாம் இறைவன் கொடுத்த வரமா? ஒரு அலசல்

மாமியார் மருமகள் சண்டை உருவாக காரணம் யார்? மனைவியா? மாமியா? கணவரா? அல்லது மூவருமா?
அம்மாவா, நானா? இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க" என கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் எக்கச்சக்கம் என்கின்றனர் "மேரிடல் கவுன்சிலிங்" வல்லுனர்கள். இங்கிலாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 60 சதவீதம் பெண்களுக்கு மாமியாருடன் சண்டையாம். அது வாழ்நாள் முழுதும் ஒரு விதமன அழுத்தத்தைக் கொடுக்கிறதாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டெரி அப்டர் நடத்திய ஆய்வின் முடிவு இது.
எனவே மாமியார் மருமகள் பிரச்சினை ஏதோ தமிழர்கள் பிரச்சினை என்று நினைக்கவேண்டாம். மாமியார்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஒரு சர்வதேசப் பிரச்சினை இது!


அவரது ஆய்வில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் தங்கள் கணவன்மார் அம்மாப் பிள்ளையாக இருக்கிறார்கள் என குறைபட்டுக் கொண்டனர். அதே சமயம், மூன்றில் இரண்டு பங்கு மாமியார்களோ, தங்கள் பையன் தங்களை தனிமைப்படுத்துகிறான், பொண்டாட்டி தாசன் ஆகிவிட்டான் என வருந்துகின்றனர். எனவே இது ஒரு விதத்தில் அக்கரைப் பச்சை அனுபவம் தான். ஒவ்வொருவரும் அடுத்தவர் பார்வையில் பார்க்க ஆரம்பிக்கும் போது பல விஷயங்கள் எளிதில் புலனாகும். சிக்கல்கள் தீரத்துவங்கும்.தன் பிள்ளை தன்னைக் கவனிக்கவில்லையே என அம்மா கவலைப்பட ஆரம்பிப்பதும், தன் கணவர் தன்னைக் கவனிக்கவில்லையே என மனைவி கவலைப்படுவதும்தான் பிரச்சனைக்ளுக்களை உருவாக்கும் முதல் புள்ளி. அந்த சிந்தனையே வராமல் தடுத்தால் சிக்கலே இல்லை என்கிறார் ஒரு ஆலோசகர்.
அம்மாவிடம் மகன் பாசமாய் இருப்பது இயல்பே!
அம்மாவிடம் பையன் பாசமாய் இருப்பது இயல்பு. அப்படி இல்லாமல் இருந்தால் தான் கவலைப்பட வேண்டும். சரியாக வளர்க்கப்படாத மகன் சரியான பாதையில் செல்லாமல் இருக்க வாய்ப்பு அதிகம். எனவே அம்மாவின் மீது பாசமான பையன் என்பது ஒரு குறையல்ல. அது நல்ல விஷயம் எனும் எண்ணம் தான் முதலில் பெண்களுக்கு வரவேண்டும்.

"மனைவியா? அம்மாவா? யாருக்கு ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என ஆண் குழந்தைகளோட அம்மாக்களிடம் கேட்டுப் பாருங்கள். என் கணவன் எனக்கும் (அவரோட மனைவிக்கும்), என் பிள்ளை அவனோட அம்மாவுக்கும் என்பார்கள். அதாவது எல்லா பெண்களுக்கும் தன் கணவன் தன்மீது அன்பு செலுத்த வேண்டும், அதே போல தனது மகனும் தன் மீது அன்பாய் இருக்க வேண்டும் எனும் ஆழமான ஆசை உண்டு. கணவனைப் பொறுத்தவரை தனது மனைவியை அவன் முழுமையாக ஏற்று அன்பு செய்ய வேண்டும். அது தனது அம்மாவை நிராகரித்துத் தான் நடக்க வேண்டும் என்பதில்லை.
சிக்கலில் மிக நுட்பமான பகுதி!
இந்த சிக்கலில் மிக நுட்பமான பகுதியைச் கவனியுங்கள். உங்க கணவன் அவரின் அம்மாவிடம் ரொம்ப நெருங்கக் கூடாதா? ஒரு சின்ன வழி, நீங்க அவரின் அம்மாவிடம் அதிகமா நெருங்கிப் பாருங்கள். குழம்ப வேண்டாம். தனது தாயைப் பார்த்துக் கொள்ள தன் மனைவி இருக்கிறாள் எனும் நிம்மதி கணவனுக்கு மிகப்பெரிய நிம்மதியாகும். அது கணவன் தன் மனைவியிடம் அதிகம் அன்பு காட்டும் முக்கிய காரணியாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதே நிலை தான் மறு பக்கமும். தனது அம்மாவை தன் புருஷன் (மாமியை) நன்றாகக் கவனிக்கிறார் என்றால் அந்த நிம்மதி மனைவிக்கும் மிகப்பெரிய சுகம். மனைவி கணவனை அன்போடு ஆதரிப்பாள்.

வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்!
வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்க்கு அந்த ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது மகனுடைய கடமையும் கூட. ஆனால் அது மனைவியின் உரிமைகளை மீறியதாக இருக்கக் கூடாது என்பது மட்டுமே இங்கே பிரச்சினை. மகன் மட்டுமல்ல மருமகளுக்கும் அந்த கடமை இருக்கிறது என்பதனை மருமகள் மறந்து விடக்கூடாது. இங்கே மகன் தனிப்பட்ட முறையில் தாய் மீது அக்கறை கொள்ளும் போது தாய் மருமகள்மீது வெறுப்பாகின்றாள். அதனால் மருமகள் தானாகவே ஒதுங்கி விடுகின்றாள் என்பதுதான் யதார்த்தம். இவ்வாறான நிலைமை ஏற்படாதிருக்க மகனும் மருமகளும் இணைந்து செயற்படுவதே சாலச் சிறந்தது.

திருமணம் ஆன புதிதிலேயே புதுமணப் பெண் நினைத்தால் இத்தகைய பிரச்சினைகள் பிற்காலத்தில் பூதாகரமாக வெடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். முதலாவதாக மாமியாரைப் பற்றி கணவனிடம் குறை கூறுவதை நிறுத்த வேண்டும். தொன்னூற்று ஒன்பது விழுக்காடும் அதைக் கணவன் நம்பப் போவதில்லை. அப்படியே நம்பினாலும் அது அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு நல்லதா என்றால் இல்லை. எல்லோருமாகச் சேர்ந்து அன்பாக வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமானது. சண்டையிட்டு ஒருவர் வெல்வதல்ல. மாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவன் கிட்டே பேசுங்கள்!
யோசித்துப் பாருங்கள். எப்போ கடைசியா உங்க மாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவனுடன் பேசியிருப்பீர்கள். முக்கால் வாசி பேரோட வாழ்நாளிலே அப்படி ஒரு விஷயம் நடந்திருக்காது. மாமியாரைப் பற்றி நல்ல விஷயங்களை கணவனிடம் சொல்ல ஆரம்பியுங்கள். இயல்பானதைப் பேசினா போதும். "உங்க அம்மா கையால ரசம் சாப்பிட்டா மனசு நிறைஞ்சு போயிடுதுன்னு சும்மா சொல்லிப் பாருங்கள்". சொல்றது போலித்தனமா இருக்கக் கூடாது என்பது முக்கியம்.
மாமியாருக்கு மதிப்பு கொடுங்கள்!
உங்கள் மாமியார் உங்களை விட வயசில பெரியவர். அவங்க ஒரு கால் நூற்றாண்டு காலம் கஷ்டப்பட்டு தன்னோட மகனை வளர்த்திருக்கிறார். அவங்க வாழ்க்கையில் விலை மதிக்க முடியாத சொத்தான மகனை உங்களிடம் தந்திருறார். அதை நினைவு கூர்ந்து மதியுங்கள். யாருக்கு அதிகம் உரிமை என்பதெல்லாம் தேவையற்ற விவாதம். எந்தக் கண் தனக்குத் தேவை என்று தலையிடம் கேட்டால் என்ன முடிவு கிடைக்கும்? இரண்டு கண்ணும்தான். எனவே மாமியினுடைய வயசுக்கு மரியாதை கொடுங்கள். பொறுமையும், புன்னகையும் பெண்களோட மிகப்பெரிய ஆயுதம். மறக்க வேண்டாம். உங்கள் ஆயுதத்தை மாமியிமும் தவறாது பாவியுங்கள். மாமியை நீங்க மதிக்காவிட்டால் யார் மதிப்பார்கள் என்பதை மனதில் வைத்திருங்கள்.

உங்கள் மாமியாருடன் அதிக நேரம் செலவிடுங்கள். உங்க அம்மாவுடன் இருக்கும்போது எப்படி இயல்பாகவே உற்சாகமாக பேசுவீங்கள் ? அதே உற்சாகம் பிளஸ் அன்புடன் மாமியாரிடம் பேசிப் பாருங்கள். வயசானவங்களுக்கு முக்கியமான தேவை, பேசுவதற்கும், கேட்பதற்கும் ஒரு நல்ல துணை தான். அந்த துணையாக நீங்க இருங்கள் இருந்து விட்டால் பிரச்சனையே இருக்காது.
உங்கள் பிள்ளைகளுக்கு உங்க தாத்தா பாட்டி செல்லம் கொடுக்கிறார்களா? ஜங்க் ஃபுட் குடுக்கிறாங்களா, டி வி போட்டு குடுக்கிறாங்களா ? டென்ஷன் ஆகாதீங்க. தாத்தா பாட்டிக்குன்னு சில விருப்பங்கள் உரிமைகள் உண்டு. நீங்க அந்த பருவம் வரும்போது அதனைப் புரிந்து கொள்ளுவீர்கள். அதனால சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் உலக மகாபிரச்சினைகள் போல எடுத்து பேசாதீர்கள். அவர்களுடைய சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கு மதிப்பு கொடுங்கள்.
தன் உதிரத்தை பாலாக ஊட்டி வளர்த்தெடுத்து, சமூகத்தில் சிறந்த ஆண் மனாக்கி என்னை கைபிடிக்க வைத்த மாமியாரை நன்றிக்கடனுடன் அன்பு செலுத்துதல் எனது கடமை என் உணருங்கள்.
மருமகளை மதித்து நடவுங்கள்
உங்கள் மருமகள் உங்கள் குடும்பத்திற்கு விளக்கேற்ற வந்த மகாலட்சுமி என எண்ணி மரியாதையாக நடவுங்கள். அவர்களின் ஆசைக்கு இடஞ்சலாக இருக்காது விலக முயலுங்கள். உங்கள் காலத்தில் நீங்கள் வாழ்ந்த்துபோல் இக் காலத்தில் வாழும் மருமக்கள் வாழ் வேண்டும் என எண்ணாதீர்கள். காலம் ரொம்ப மாறிப் போச்சு.

நீங்கள் எவ்வளவுக்கு மருமகளை மதிக்கிறீர்களோ அதற்கேற்பவே உங்கள் பிள்ளைகளும் உறவினர்களும் ஏன் சுற்றமும் உங்கள் மருமகளை மதிக்கும் என உணர்ந்து கொள்ளுங்கள். நீங்களே மருமகளை திட்டினால் மற்றவர்கள் தூற்றுவார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள்.
மருமகளைப் பற்றி மகனிடம் குறை சொல்லாதீர்கள். குறை இருந்தால் அவவிடமே கூறுங்கள். அல்லது மறந்து விடுங்கள். அவர்களுக்குள் பிரச்சனை வந்தால் உங்கள் குடும்பத்திற்குதான் அவமானம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். குடும்பப் பிரச்சனை வந்து குடும்பம் பிரிய நீங்கள்தான் காரணமாக இருந்தால் உலகம் உங்களை ஒதுக்கி வைத்துவிடும் என்பதை உணருங்கள். உங்கள் கணவர் உங்களுடன் எவ்வளவு அன்பாக இருக்கிறாரோ அதே போல் அவரையும் அவரது கண்வருடன் அன்பாக இருக்க அனுமதியுங்கள். உங்கள் மகன் குடும்பத்தில் நீங்கள் இப்போ இரண்டாமவர் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் அன்பாக ஆசையாக வளர்த்த உங்கள் மகன் இறுதிவரை காப்பேன் என அக்கினி சாட்சியாக பொறுப்பேற்ற மருமகள் உங்கள் மகனின் ஆசாபாசங்களை நிறைவேற்றி, வம்சத்தை பெருக்கவும் மகனை தடுக்கி விழாது தோழ் கொடுத்து காப்பவளை மதிப்பளிது எமது கடமை என உணருங்கள்.
புகுந்த வீட்டிலும் இயல்பாக இருங்கள்!
கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் உங்க அம்மாவீட்டில் நீங்கள் இருக்கும்போது எப்படி இயல்பாக கலகலப்பா இருப்பீங்களோ அப்படியே புகுந்த வீட்லையும் இருக்க முயற்சி பண்ணுங்கள். அது நிரம்பிய பயனளிக்கும்.

ஊர், குலம் மாறி திருமணம் செய்திருந்தால்; அவர்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. நீங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. இப்போது இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்கப் போகிறீர்கள், ஒரு வகையில் இது ஒட்டுச் செடி போன்ற அனுபவம். எனவே நன்றாக ஒட்டிச் சேர நேரம் தேவைப்படும். அவசரப் படக் கூடாது. ஒட்டுப் பிடிக்கவில்லையே என முடிவெடுக்காதீர்கள். ஒட்டும்படி ஒட்டி, விட்டுக்கொடுத்து வாழுங்கள். வெட்டிவிட்டால் குடும்ப வாழ்க்கை சர்வமும் நாசமாகிவிடும்.
அம்மாக்களைப் பொறுத்தவரை மகன் ஆனந்தமாக இருக்கவேண்டும் எனும் எண்ணமே பிரதானமாய் இருக்கும். ஒருவேளை மனைவி அவனை நன்றாகக் கவனிக்கவில்லையோ எனும் கவலையும் ஒரு புறம் இருக்கலாம். அல்லது அதிகமாய்க் கவனித்து என்னை விட்டுப் பிரித்து விடுவாளோ எனும் பயம் இன்னொருபுறம் இருக்கலாம். இது போன்ற நிலையில் மாமியார் மருமகள் இடையேயான ஆழமான உரையாடல்களுக்குப் பின்பு தான் இயல்பு நிலையை அடையும்.
மாமிமார் பிரச்சினைவாதிகளாய் மாற காரணங்கள் பல!
மாமியார்கள் பிரச்சினை வாதிகளாய் மாற பல காரணங்களை உளவியலார்கள் சொல்கின்றனர். தனது கணவன் தன்னை சரியான அளவுக்குக் கவனிக்காத ஏக்கம், சின்ன வயதிலேயே தான் இல்லாமல் மகனால் எதுவும் செய்ய முடியாது என உருவாக்கும் பிம்பம், தனது மகனிடமோ, மகளிடமோ உருவாக்கும் குற்ற உணர்வு. நான் முந்தானையில் வைத்து வளர்த்த பிள்ளையை மருமகள் தன் முந்தானைக்குள் மடக்கிப்போட்டாள் என்னும் உணர்வு. இப்படி பல காரணங்களை அவர்கள் அடுக்குகின்றனர். சில மருமகள்கள் தன்னை விட மாமனாரிடம் அன்பாய் இருப்பது கூட மாமியாருக்கு எரிச்சலைக் கிளப்புமாம். தாழ்வு மனப்பான்மையும் ஒரு காரணமாக அமைகின்றது.

மருமகள்மார் பிரச்சனைவாதிகளாக காரணம் சில:
தன்னுடன் தன் கணவன் அன்பாக இருப்பதைக் கண்டால் மாமிமாருக்கு பொறுக்கேலாதாம். அதுவும் கணவனை இழந்து பலகாலம் தனிமையாக வாழ்ந்த மாமிமாருக்கு இது சகசமாம். சின்னஞ் சிறிதுகள் வாழும் வயதில் சந்தோசமாக இருக்கட்டும் என ஒதுங்க மாட்டார்களாம். கணவனும் மனைவியும் சந்தோசமாக தனிமையில் கதைத்துக் கொண்டிருக்கும் போது நடுவே வந்து உட்காந்து விடுவார்களாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் இரகசியம் எல்லாம் அம்மாவும் தெரிந்து கொள்ளவேண்டுமாம். மனைவி தாம் இருக்கும் வீடு தனது வீடு என எண்ணிக் கொண்டிருப்பார் மாமியார் இது எனது மகன் வீடு எனது வீடு என உரிமை கொண்டாடுவாராம்.

குடும்ப பிரச்சனைகள் எல்லாம் மாமிக்கும் சொல்ல வேண்டுமாம். எங்கு சென்றாலும் தன் மகன் தன்னுடனே இருக்க வேண்டுமாம். தான் சொல்வதுபோல் நடக்க வேண்டும் என அடம் பிடிப்பார்களாம். அப்போ நாம் எப்போது புருஷ சுகம் அனுபவிப்பது என்பது மருமக்களின் ஏக்கம். அத்துடன் சம்மந்தி வீட்டார் வீட்டுக்கு வந்தால் மூஞ்சையை மற்றப் பக்கம் திருப்பி வெறுப்பை காண்பிப்பாராம். அத்துடன் "மாமியார் உடைத்தால் மண் சட்டி மருமகள் உடைத்ததால் பொன் சட்டி" என ஆத்திரங் கொள்வார்களாம்.
அத்துடன் தாயும் மகனும் இரகசியம் கதைப்பார்களாம். தாய் தன்னைப்பற்றி சொல்வதெல்லாம் மெய் என நம்பி தன்னை ஏன் என்று கேட்காமலே குற்றவாளியாக்கி மாமிக்கு முன்னாலே அடிப்பாராம். தாய்க்கு முன்னால் தன்னையும், தனது குடும்பத்தாரையும் இழிவாக பேசுவாராம். தனது தாய் தனது தலையிலும் மனைவி நீ காலுக்கையும் என்றும் கூறுவாராம். மனைவி தன் பெற்றோருடன் ரெலிபோனில் கதைப்பது மாமிக்கும், கணவருக்கும் பிடிக்காதாம். இது போன்ற பல விடயங்கள் மாமி மீது மருமகள் வெறுப்பு ஏற்படக் காரணமாகின்றன. அதுவே குடும்பப் பிரச்சனையாகி பிரிவினைக்கும் செல்கிறார்கள்.
கணவன் மகன் எங்கே தவறுகிறார்.
உதிரத்தை பாலாக ஊட்டி, என் மகன் என்னை பின்னடிக்கு பாப்பான் என்ற கனவுடன் அன்பாக, அறிவாளியாக வளர்த்து விட்ட தாயாரையும்; அப்படி வாழ்வேன் இப்படி வாழ்வேன் என எத்தனையோ கனவுகளை சுமந்து கொண்டு கணவனை நம்பி வந்த மனைவியையும் அன்பு குறையாது பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை மகனுக்கும் கணவனுக்கும் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. அவர்கள் இருவருக்குள்ளேயும் பிரச்சனை உருவாகுவதற்கு மகனின் செயல்களே காரணமாக அமைவதாக இருசாராரும் குறை கூறுகின்றார்கள்.

இங்கே "ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம். இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம்" என்ற நிலை. இங்கே கொஞ்சம் அவதானம் தேவை. பிரச்சனை என்று வந்து விட்டால் புத்திசாலித்தனமாக தீர்த்து வைக்க முயலுங்கள். மனைவியின் முன்னால் தாயையும், தாயின் முன்னால் மனைவியையும் கண்டிக்காதீர்கள். அப்படி ஒருவரை குறைவாக நீங்கள் தாக்கும்போது மற்றவர் அவர் மீது ஆதிக்கம் செலுத்தப் பார்க்கிறார்கள் என்பதை உணருங்கள். இருவரும் உங்களை நம்பி வாழ்பவர்கள் எனவே இருவருக்கும் நீங்கள் சமஉரிமை கொடுத்து நடவுங்கள்..
இருவர் கூறும் குறை நிறைகளை செவிமடுக்காதீகள். அப்போது ஒருவரைப் பற்றி மற்றவர் குறை சொல்ல வரமாட்டார். பிரச்சனை வருமுன் காதுகளைப் பொத்திக் கொள்ளுங்கள். பிரச்சனை என்று வந்த பின் படத்தில் உள்ளது போல் காதுகளைப் பொத்தி கொள்வதால் உங்கள் பிரச்சனை தீர்ந்துவிடாது என உணருங்கள். நீங்கள் அம்மாச் செல்லமாக இருந்தால் மனைவியை இழக்கவும் நேரிடலாம். அதுபோல் மனைவிச் செல்லமாக இருந்து விட்டால் அம்மாவை இழக்கவும் நேரிடலாம். எப்பொழுதும் அம்மாச் செல்லமாகவும், மனைவிச் செல்லமாகவும் இருக்க முயலுங்கள். உங்கள் குடும்ப ஒற்றுமை உங்கள் கையில்தான் இருக்கின்றது என்பதை உணருங்கள்.
மாமியாரை மருட்டுவது எப்படி?
நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்துங்கள்! சரி, ஒரு சின்ன கேள்வி. உங்களில் எத்தனை பேர் உங்கள் மாமியாருக்கு நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்தியிருக்கிறீர்கள்? தலையைச் சொறிய வேண்டாம். பதில் எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்புறம் என்னங்க ? கணவன் அம்மா பிள்ளையா இருக்கிறதுல என்ன ஆச்சரியம் இருக்கப் போவுது ?

மகிழ்சியான குடும்ப வாழ்க்கை மாமியாருடன் இணக்கமாகவும், அன்பாகவும் இருக்க உதவும். தனது தாயுடன் நல்ல அன்பாகவும் நட்பாகவும் இருக்கும் பெண்களில் 78 சதவீதம் பேர் மாமியாருடன் இணக்கமாக இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. அதே போல குடும்ப வாழ்க்கையில் ஆனந்தமாய் இருப்பவர்களில் 57.9 % பேர் தங்கள் மாமியார் ரொம்ப நல்லவங்க எனும் சர்டிபிகேட் தருகிறார்கள். அவர்கள் சொல்லும் சிம்பிள் அட்வைஸ், மாமியார் சொல்ற விஷயத்தை அம்மா சொன்னா என்ன ரியாக்ஷன் தருவீங்களோ, அதை மட்டும் தாங்க என்பது தான்! குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை மூட்டை கட்டி வையுங்கள்!
அடுத்தவர்களுடைய குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை இன்னொரு மூட்டை கட்டி வையுங்கள். அது நல்ல ஆரோக்கியமான பழக்கம் அல்ல. "அவர்களுடைய பழக்கம் அவர்களுக்கு" என எடுத்துக் கொள்ளும் இளகிய மனம் இருக்கட்டும். "என் பையனுக்கு என் சாப்பாடு ரொம்பப் புடிக்கும்" ன்னு மாமியார் சொன்னா, "ஆமா.. என் சாப்பாடு மட்டும் புடிக்காதா" என்று எதிர் கொடி புடிக்காதீங்க. அடிக்கடி போன் பண்ணினா, எப்பவும் அம்மா கூட பேசறது தான் வேலையான்னு முகத்தைத் தூக்கி வெச்சுக்காதீங்க. அம்மா கிட்டே சிரிச்சுப் பேசினா "உங்க ஆளுங்க கிட்டே பேசும்போது மட்டும் எப்படித் தான் இந்த சிரிப்பு வருதோ" ன்னு நக்கல் அடிக்காதீங்க.
சுருக்கமா சொல்லணும்ன்னா ஈகோவைக் கழற்றி வைத்து விட்டு ஆனந்தமான வாழ்க்கை வாழவேண்டுமென முடிவெடுத்து களமிறங்குங்கள். பிரச்சினைகளெல்லாம் பறந்தோடிப் போய்விடும் என்பது மட்டும் நிஜம்.
"வளர்த்தெடுத்து மனிதனாக்கி விடுபவள் தாய் உற்ற துணையாக நின்று இறுதிவரை வெற்றி பெறச்செய்பவள் மனைவி"
நன்றி
http://www.panippulam.com/

https://seasonsnidur.wordpress.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

பழங்களில் உள்ள விதைகளின் பயன்கள்

பழங்கள் சாப்பிட சிறந்த பொருட்களில் ஒன்றாகும். சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதுடன் , ஒட்டு மொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பலவி...

Popular Posts