லேபிள்கள்

வியாழன், 29 அக்டோபர், 2020

உலகவரலாற்றில் இப்படியோர் சம்பவம் வேறெங்கேணும் உண்டா?

  சையத் அப்துர் ரஹ்மான் உமரி  
அழகான குழந்தை அது! நான் முழுக்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்ற தோற்றம். அந்தக் குழந்தையை யார் பார்த்தாலும் உடனே எடுத்துக் கொஞ்சத் தொடங்கி விடுவார்கள். ஒருநாள் திடீரென்று அந்தக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. குழந்தையின் தந்தையான அபுதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு வெளியே வேளை விஷயமாக போகக் கிளம்பினார். குழந்தையின் தாய் உம்முஸுலைம் அக்கறையாக குழந்தையைப் பார்த்துக் கொண்டார். வீடு திரும்பியவுடன் குழந்தையைப் பற்றித்தான் முதலில் விசாரித்தார்.
''எப்படி இருக்கிறது? உடம்பு சரியாகிவிட்டதா?''
''பரவாயில்லை. முன்பைவிட இப்போது நிம்மதியாக உள்ளான்!'' என்றார் அந்தத் தாய்!
''குழந்தையை கொண்டு வாருங்கள். பார்க்க வேண்டும் என்று மனசு துடிக்கின்றது!'' என்றார் அந்த தந்தை.


''குழந்தை தூங்கிக் கொண்டுள்ளது. இப்போது தொந்தரவு தரவேண்டாம். நீங்கள் சாப்பிட்டு விட்டுத்தூங்குங்கள். காலையில் எழுந்ததும் பார்த்துக் கொள்ளலாம்!'' -என்று உம்முஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா கூறிவிட்டார்கள். அபுதல்ஹா ரளியல்லாஹு அன்ஹுவும் தன்னுடைய மனைவியோடு தூங்கச் சென்றுவிட்டார்.
காலையில் எழுந்ததும் உம்முஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா தன்னுடைய கணவரின் முகத்தைப் பார்த்தார்கள். அமைதியாக ஒரு கேள்வியைக் கேட்டார்கள்: ''உங்களிடம் யாரேனும் ஒருவர் ஒருபொருளைக் கொடுத்து வைத்திருந்து அதைத் தருமாறு கேட்டு வந்தால் என்ன செய்வீர்கள்?
''அவருடைய பொருளை அவர் கேட்டால் கொடுத்துத்தானே ஆகவேண்டும். உடனே நான் கொடுத்து விடுவேன்!'' என்றார் அபுதல்ஹா.
''அப்படியா! அப்படி என்றால் உங்களுக்கு குழந்தையைக் கொடுத்த அல்லாஹ் அதைத் திரும்ப வாங்கிக் கொண்டான்!'' என்றார் உம்முஸூலைம் ரழியல்லாஹூ அன்ஹா.
அபுதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அமைதியாக நின்று கொண்டிருந்தார். ''ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள்? போய் கஃபன், தஃபன் வேலைகளைப் பாருங்கள்!'' ஒரு நிமிடம் விழிகளை உயர்த்தி அபுதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு தன்னுடைய மனைவியைப் பார்த்தார். அதன்பின்பு குழந்தையை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யலானார். அதன்பிறகு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் கூறினார்.
''இரவில் ஒன்றாகத் தூங்கினீர்களா?'' என்று இறைத்தூதர் விசாரித்து. ''யா அல்லாஹ்! வளமான குழந்தைச் செல்வத்தை இவர்களுக்குக் கொடு!!'' என்று பிரார்த்தனை புரிந்தார்கள். அவ்வாறே ஒரு குழந்தை பிறந்தது. அப்துல்லாஹ் என்று பெயர் சூட்டினார்கள். மிகவும் அறிவுள்ள குழந்தையாக அல்லாஹ்வுக்கு பயப்படுகின்ற குழந்தையாக அது வளர்ந்தது. அபு தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கிடைத்த மனைவியும் ஸாலிஹான மனைவி! குழந்தையும் ஸாலியான குழந்தை! அல்லாஹ்வுக்கு பயந்து வாழ்ந்தால் எல்லா அருட்கொடைகளும் கிடைக்கும்!! நமக்கும்தான்!
www.nidur.info   

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 26 அக்டோபர், 2020

விட்டுக்கொடுக்கும் தன்மை


முஸ்லிம்களிடத்தில் இது குறைந்து வருவதனால் தான் இன்று நம்மிடையே பகைமை உணர்வுகள் அதிகம் ஏற்பட்டு பல பிணக்குகளும் பிரிவுகளும் உண்டாகியிருக்கின்றன.
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் குர்ஆன், ஹதீஸ் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் தான் இத்தகைய விட்டுக்கொடுக்கும் தன்மை சிறிதும் அற்றவர்களாக அதிகம் காணப்படுகின்றனர்.
இவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு பலியாகி அவனின் மாயவலையில் விழுந்திருக்கிறார்கள்.


ஷைத்தானைப் பொறுத்தவரை ஷிர்க், பித்அத் புரிபவர்களிடம் அவனுக்கு அதிகம் வேலையில்லை! ஏனென்றால் அவர்கள் வழிகேட்டில் தான் இருக்கின்றனர் என்பது அவனுக்கு நன்றாகவேத் தெரியும். எனவே அவன் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுபவர்களையும் பாவிகளாக்குவதிலேயே அதிக கவனமுடன் செயல்படுகின்றான்.
அவனுடைய சூழச்சிகளில் ஒன்று தான் குர்ஆன் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளை மறக்கடிக்கச்செய்து ஷைத்தானிய குணங்களான தற்பெருமை, ஆணவம், கர்வம் கொள்ளுதல், பலிவாங்குதல், பிரிவினைகளை ஏற்படுத்துதல் போன்ற தீய செயல்களை செய்வதற்கு தூண்டுவதாகும்.

இவைகளெல்லாம் வளர்ந்துவரும் ஏகத்துவத்தைக் குலைப்பதற்காக ஷைத்தான் செய்யும் செய்யும் சூழ்ச்சிகள் என்பதை உணராத நம்மவர்களும் அவனுடைய மாயவலையில் சிக்குண்டவர்களாக தம் சகோதரர்களின் சிறிய தவறுகளையும் பூதக்கண்ணாடியைக் கொண்டு மிகப் பிரம்மாண்டமானதாக பொதுமக்களின் முன்னிலையில் காட்டி அவர்களின் மானத்தைக் கப்பலேற்றி அவர்களின் தலை குனிவில் இவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
குர்ஆன் ஹதீஸ் என்று போதித்துக் கொண்டே பிறர் மனம் புண்படும்படி நடந்துக் கொள்கிறீர்களே என்று அறிவுரை பகர்கின்ற வேளையிலே, எங்களுக்கே அறிவுரையா? நீங்கள் ரொம்பா ஒழுங்கா? என்ற ஆணவத்துடன் அறிவுரை பகன்றவர்களின் மானமும் சேர்த்து கப்பலேற்றப்படுகின்றது!
இவ்வாறாக ஷைத்தான், "நாங்கள் ஷிர்க், பித்அத்தை தவிர்ந்து குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றி வாழக்கூடியவர்கள்" என்று பெருமையடித்துக் கொள்பவர்களின் உள்ளங்களிலே ஆழமாகக் குடிகொண்டு அவனின் தீயகுணங்களை அவர்களின் மூலம் செயல்படுத்திக் கொண்டிருப்பதை நம்மில் பலர் உணர்வதில்லை.
ஆயினும் மனிதர்களின் உள்ளங்களைப் புரட்டி நேர்வழிப்படுத்துபவனான வல்ல அல்லாஹ்வின், "நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக" (அல்குர்ஆன் 87:9) மற்றும் "நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்" (அல்குர்ஆன் 51:55) போன்ற அறிவுரைகளுக்கேற்ப பகைமை உணர்வு, பலிவாங்கும் உணர்வு, பிரிவினைகளை ஏற்படுத்தும் செயல் ஆகிய அனைத்தையும் தவிடுபொடியாக்குகின்ற, இறைவனால் பெரிதும் விரும்பப்படுகின்ற பிறர் குறைகளை மன்னித்து விட்டுக்கொடுக்கும் தன்மையையும் அதன் அவசியத்தையும் பற்றிய இச்சிறிய நினைவூட்டலை பகிர்ந்துக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட சத்திய சீலர்களான ஸஹாபா பெருமக்களின் பிறர் தவறுகளை மன்னிக்கும் தன்மையை நாம் உற்று நோக்கினால் ஆச்சரியப்படும் அளவிற்கான சிறந்த படிப்பினைகள் நமக்கு கிடைக்கின்றன. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள்:
உஹுதுப் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ், அல்லாஹ் அவனைக் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! 'அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்" என்று கத்தினான். உடனே, முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின் அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் (மோலேற்பட்டுப்) போரிட்டுக் கொண்டனர். அப்போது ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு தம் தந்தை யமான் அவர்கள் அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். எனவே, 'அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!" என்று (உரக்கக்) கூவினார்கள். (ஆனால்) அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டும்) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), 'அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறினார்.
அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு (இவ்வாறு மன்னித்தால் அவர்கள்) அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை அவர்களிடம் நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது. (ஆதாரம்: புகாரி)
தம் தந்தையைக் கொள்வர்களிடத்திலும் ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் காட்டிய பரிவு மேலும் அவர்களின் பாவம் மன்னிக்கப்படவேண்டும் என்று அவர்கள் செய்த துஆ! - இதிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகள் ஏரராளம்.
உன்னைத் திட்டினால் நீ அவனைத் திட்டாதே!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: – 'எவரேனும் சரி உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே! காரணம் அந்த பாவம் அவனையே சாரும்' (ஆதாரம்: அபூதாவுத்)
நிந்தித்தவரையே சென்றடையும் நிந்தனை!
"பிறர் தம்மைப் பற்றி சில செய்திகள் கூறிவிட்டார்; அவரை நான் பலிவாங்க வேண்டும்; அவரை நான் எவ்வாறு நோகடிக்கின்றேன் பார்" என்ற வெறியுடன் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பலவாறாக பேசி விடுகிறோம். ஆனால் அது எவ்வளவு பயங்கரமானது? அதன் பின்விளைவுகள் என்ன என்பதைப் பற்றி சிறிது கூட நாம் கவலைப் படுவதில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: -
"மற்றவரை ஒருவர் நிந்திக்கும் போது அது வானத்திற்குச் செல்கின்றது. அங்கே வானத்தின் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடி இருக்கின்றன். பின்பு அது வலபுறம் இடபுறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல் அது – எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது". (ஆதாரம்: அபூதாவுத்)
உண்மையான வீரன் யார்?
நம்மிடம் வம்புக்கிழுப்பவர்களோடு மோதி அவர்களை வீழ்த்துவதான் வீரமல்ல! மாறாக அவர்களின் தவறுகளை மன்னிக்கும் தன்மையே சிறந்த வீரமாகும். ஏனென்றால் தம்மோடு வம்புக்கு வருபவரோடு மோதுவது என்பது பொதுவாக அனைவரின் செயலாகும். ஆனால் அவற்றை மன்னித்து ஏற்பதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். எனவே தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்தி கோபத்தை அடக்கி கொள்பரை சிறப்பித்து பின்வருமாறு கூறுகிறார்கள்: -
"மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்" என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)
மூன்று இரவு, மூன்று பகல்களுக்கு மேல் பகைமைகொண்ட நிலையில் மரணிப்பவன் நரகம் புகுவான்!
மேலும் சகோதர முஸ்லிம்களுக்கிமையில் மூன்று நாட்களுக்கு மேல் பகைமை கொண்ட நிலையிலேயே மரணிப்பவர் நரகம் புகுவார்கள் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.
'தனது முஸ்லிம் சகோதரனுடன் மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருப்பது கூடாத செயலாகும். எனவே மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருக்கும் நிலையில் மரணிப்பவன் நரகம் நுழைவான்' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மது, அபூதாவுத்)
எனவே சகோதர சகோதரிகளே! சத்தியத் திருத்தூதரின் வாக்கை உண்மையென நம்பும் நாம் உடனடியாக நமது தவறுகளிலிருந்து விடுபட்டு சகோதர முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழ முயற்சிக்க வேண்டும்.
சகோதர முஸ்லிம்களுடன் மூன்று நாட்களுக்கு மேல் நாம் பேசாமல் பகைத்து இருக்கக் கூடாது என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இட்ட கட்டளையை அறிந்து உண்மையை நாம் உணர்ந்து கொண்ட போதிலும் ஷைத்தான் நம்மிடம் குறிக்கிட்டு அவர்கள் தானே முதலில் வம்புக்கிழுத்தார்கள்! எனவே அவர்கள் முதலில் பேசட்டும்; பிறகு நாம் பேசலாம் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பான்.
ஷைத்தானின் இந்த மாயவலையில் நாம் சிக்கிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரியவர்களாக நாம் பெருந்தண்மையுடன் அவர்கள் நமக்கு செய்த தீமைகளை மன்னித்து மறந்து விட்டு நாம் முதலில் பேச ஆரம்பிப்போமேயானால் அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னித்து அதற்காக நமக்கு நிறைய வெகுமதிகளை தருவான்.
இவ்வாறு பிணக்கிற்குப் பிறகு முதலில் பேசுபவர்களைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறப்பித்துக் கூறிய ஹதீஸ் ஸஹீஹூல் புகாரியில் வந்திருக்கிறது.
"ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார்" என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்சாரி ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி)
பகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா?
நம்மில் சிலர், நான் ஒன்றுமே செய்யவில்லை! தவறுகள் முழுவதும் மற்றவருடையது தான். அவராகத் தான் என்னிடம் வம்புகள் செய்து பிரிந்துவிட்டார். நான் என்ன செய்வது? என்று கேட்கின்றனர். மேலும், இப்போது கூட நான் அவர்களைப் பற்றி ஒன்றுமே கூறுவதில்லை! ஆனால் அவர்களோ என்னைப் பற்றி அநியாயத்திற்கும் இல்லாததையும் பொல்லாததையும் பிறரிடம் கூறி என்னை மனவருத்தத்திற்குள்ளாகின்றனர் என்றும் கூறி மன வருத்தமடைகின்றனர். இவர்களுக்கான அழகிய தீர்வை நம்மையும் அவதூறு கூறும் அவர்களையும் படைத்தவனும் நம் அனைவரது உள்ளங்களைப் புரட்டக் கூடியவனாகிய அல்லாஹ் கூறுகிறான்:
"நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்" (அல்-குர்ஆன் 41:34,35)
அல்லாஹ் கூறுகின்றான்:
"அவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலைமையிலும் வறுமை நிலைமையிலும் தானம் செய்துகொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான்". (அல்குர்ஆன் 3:134)
வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் பிறர் குறைகளை மன்னிக்கும் தன்மையை அளித்து அதன் மூலம் நம் குறைகளை அவன் மன்னித்தருள்வானாகவும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 23 அக்டோபர், 2020

செய்த தவறை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது

செய்த தவறை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது, இறைவனுக்கு செய்யும் விஷயத்தில் தவறிழைத்துவிட்டால் இறைவனிடத்தில் தம் தவறுகளை தனிமையில் அமர்ந்து வெட்கப்படாமல் சொல்லி மனமுருகி மன்னிப்புத் தேடுவது கூடும்.
சமுதாயத் தலைவர்களாகவோ அல்லது அரசியல் தலைவர்களாகவோ அல்லது பிரமுகர்களாகவோ அல்லது இயக்கமோ அல்லது பொதுவாழ்வில் ஈடுபடுகிற எதுவோ, எவருமோ செய்த தவறை, மக்களிடம் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டோ அல்லது பயந்துகொண்டோ அல்லது வேறொரு காரணத்திற்காகவோ மறைப்பது எந்த விதத்திலும் கூடாது.


அதேபோன்று நம்நாட்டின் அரசியல்வாதிகளும் பல்வேறு இயக்கத் தலைவர்களும் செய்த தவறை வெட்கப்படாமல் ஒத்துக் கொண்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டாலேயே நாட்டில் நடக்கிற சாதிய, மதக் கலவரங்களில் தொண்ணுறு விழுக்காடு பிரச்சினை தீர்ந்துவிடும்.
அதேபோன்று குடும்பத்திலோ இயக்கத்திலோ ஏதேனும் நிர்வாகத்திலோ தவறு செய்தவர்கள் தாங்கள் செய்த தவறை சம்பந்தப்பட்டவர்களிடம் வெட்கப்படாமல் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டால், இன்று இந்தியாவின் வழக்காடு மன்றங்களில் இருக்கிற குடும்பப் பஞ்சாயத்துகள் இன்றே தீர்ந்துவிடும்.
அதுபோன்றே எந்த நிர்வாகமும் சீராக இயங்குவதற்கு இந்தப் பண்பு மிகவும் அவசியமான ஒன்றுதான் என்பதை அறிவுடைய யாரும் மறுக்கமாட்டார்கள்.
''அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 3:135)
மேலும் இதுபோன்று வெளிப்படையாக ஒரு பிரமுகர் செய்த தவறுக்காக அவர் வெளிப்படையாகவே வெட்கமில்லாமல் மன்னிப்புக் கேட்பதினால் மீண்டும் மீண்டும் அந்தத் தவறை செய்யாமல் இருப்பதற்கு இப்பண்பு கேடயமாக அமைந்து விடுகிறது.
பொதுவாகவே இஸ்லாமிய மார்க்கம் இதற்கு சரியான தீர்வைத் தருவதாகவும் நமது ஜமாஅத்தினருக்கு இது மிகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது.
இஸ்லாத்தின் சட்டதிட்டங்களைப் பற்றி ஆராய்ந்து சரியான முடிவைச் சொல்பவர்களுக்கு இரண்டு கூலி இருக்கிறது. தவறாகச் சொன்னாலும்கூட ஒருகூலி இருக்கத்தான் செய்கிறது. தண்டனை எதுவும் இல்லை. ஆனால் வேண்டுமென்றே தவறாகச் சொன்னால் அது இறையச்சத்திற்கு உகந்ததில்லை. மேலும் மறுமையில் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவதாகவும் இருக்கும்.
நமது ஆய்வில் சில தவறுகள் ஆங்காங்கே ஏற்படுவதுண்டு. நபிகள் நாயகத்திற்குப் பிறகு அவர்களைத் தவிர இப்படி தவறே ஏற்படாத எந்த மனிதனும் உலகில் இல்லவே இல்லை. அதனால்தான் இமாம்களில்கூட பழைய சொல், புதிய சொல் போன்ற மார்க்கத் தீர்ப்பெல்லாம் நிகழ்ந்துள்ளது.
எனவே இவ்வளவு நாள் ஏன் தவறாகச் சொன்னீர்கள் என்ற கேள்வி அர்த்தமற்றது. அல்லாஹ்விற்கு பயந்து ஆராய்ச்சியின் முடிவு எப்படி இருக்கிறதோ அதை மக்களுக்குப் பயப்படாமல் நமது சுயகவுரவத்தைப் பார்க்காமல் அதாவது வெட்கப்படாமல் சரியானதை சரியென்றும் தவறானதை தவறு என்றும் மாற்றி திருத்திக் கொள்வதே இறையச்சத்திற்கு நெருக்கமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் என்பது இறைவனது மார்க்கம். இதில் தவறுதலாக விளங்கிவிடுவது நமது குறை என்பதை கட்டாயம் வெட்கமில்லாமல் ஒத்துக் கொள்வதே இஸ்லாத்தில் தூய்மை பேணுவதாக அமையும்.
வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:159,160)
தாம் செய்த தவறை ஒத்துக் கொண்ட நபித்தோழர்கள்
ஒரு முறை அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் தவறிழைத்ததாக எண்ணியதால் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்கள்.
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உங்கள் தோழர் வழக்காட வந்து விட்டார்" என்று சொன்னார்கள்.
அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்து விட்டார். ஆகவே உங்க ளிடம் வந்தேன்" என்று சொன்னார்கள்.
உடனே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!" என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (அபூபக்ர் லிரலி அவர்களை மன்னிக்க மறுத்து விட்டதற்காக) மனம் வருந்தி அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, "அங்கே அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இருக்கி றார்களா?" என்று கேட்க வீட்டார், "இல்லை" என்று பதிலளித்தார்கள்.
ஆகவே, அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முகம், (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தான் (வாக்குவாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகிவிட்டேன்." என்று இருமுறை கூறினார்கள்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். "பொய் சொல்கிறீர்' என்று நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் அவர்களோ, "நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்; மேலும் (இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டு விடுவீர்களா?" என்று இருமுறை சொன்னார்கள். அதன் பிறகு அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை. (அறிவிப்பவர் : அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல் :புகாரி 3661)
வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கு வெட்கப்படக்கூடாது
ஒருவர் தனது திறமையைக் காட்ட வேண்டிய அல்லது தன்னை நிரூபிக்க வேண்டிய தருணத்தை வாய்ப்பைப் பயன்படுத்தாமல் வெட்கப்பட்டுக் கொண்டிருப்பது நல்லதல்ல. வாய்ப்பு நம்மைத் தேடிவரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்பவனே உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியும். எனவே வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கு ஒரு முஃமினுக்கு வெட்கம் தடைக்கல்லாக இருக்கவே கூடாது என்பதை ஆழமாக நம்பி செயல்படவேண்டும்.
நபிகள் நாயகம் காலத்தில் இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தும் ஒரு நபித்தோழர் வெட்கத்தினால் தவற விட்டதற்கான ஆதாரங்களையும், அதே நேரத்தில் கிடைத்த அல்லது கிடைக்க இருக்கிற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி மற்றவர்களிடம் நற்சான்று வாங்கிய சஹாபிகளும் இருக்கி றார்கள் என்பதற்கான ஆதாரங்களையும் நம்மால் காணமுடிகிறது.
அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று சொல்லுங்கள்!" என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.
நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று) வெட்கப்பட்டுக்கொண்டு (அமைதியாக) இருந்துவிட்டேன். பிறகு மக்கள் "அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்க, "அது பேரீச்ச மரம்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன். அதைக் கேட்ட என் தந்தை "நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்" என்றார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 131,4698,6144 முஸ்லிம் 5415,5416)
அபூவாக்கித் (அல்ஹாரிஸ் பின் மாலிரிக் அல்லைஸீலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டிருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்னோக்கி வந்தனர்.
மற்றொருவர் (அலட்சியப் படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். (பள்ளிக்குள் வந்த) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (வீற்றிருந்த அவை) முன்னால் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஒரு இடைவெளியைக் கண்ட போது அதில் அமர்ந்துகொண்டார். மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:
இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் (அருளின்) பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டு(க்கொண்டு கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டுக்கொண்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்திவிட்டான். (அறிவிப்பவர்: அபூவாக்கித் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 66,473,474, முஸ்லிம் 4389)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். ஆகவே, அவர்களில் சிலர், "எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம் விட்டுவிட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக எங்களுடன் அமரச் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், "அவர் நீங்கள் அறிந்துவைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்" என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன்.
(அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்களிடம்) உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், "இதா ஜாஅ நஸ்ருல்லாஹிஸ.. (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணைவதை நீங்கள் பார்க்கும் போது உங்கள் இறைவனைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்)" என்னும் (திருக்குர்ஆனின் 110வது "அந்நஸ்ர்') அத்தியாயத்தை இறுதிவரை ஓதிக் காட்டி, "இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அவர்களில் சிலர், "நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும் போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்" என்று (விளக்கம்) கூறினர். சிலர், "எங்களுக்குத் தெரியாது" என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை.
பிறகு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னிடம், "இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித்தான் கூறுகிறீர்களா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை" என்றேன். அவர்கள், "அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
நான், "அது, அல்லாஹ், தன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி) விட்டதை அறிவிப்பதாகும். ஆகவே, "அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து' என்பதில் உள்ள "வெற்றி' என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றிதான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். ஆகவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்' என்பதே இதன் கருத்தாகும்" என்று சொன்னேன்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், "நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகின்றீர்களோ அதையே நானும் அறிகின்றேன்" என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 4264)
கல்வியைக் கற்றுக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது
பொதுவாகவே எந்த ஒன்றையும் கற்றுக் கொள்வதற்கு வெட்கம் தடையாக இருக்கவே கூடாது. கல்வியைக் கற்றுக் கொள்வதற்கு வெட்கப்படுகிற ஒருவனால் ஒருக்காலும் முன்னேறவே முடியாது.
அதேபோன்று எனக்குத்தான் எல்லாமே தெரியும் என்று எண்ணுபவன் ஒருக்காலும் முன்னேறவே முடியாது. நம்மில் பலர் சிறுவயதில் குர்ஆனை நன்றாக அரபியில் ஓதக் கற்றிருப்பார்கள். நாளடைவில் அறவே ஓதத் தெரியாதளவிற்கு மறந்தவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இவர்கள் நம்மை யாரும் குர்ஆனைக்கூட ஓதத் தெரியாதவராக இருக்கிறார் என்று தவறாக நினைப்பாரோ என்றெண்ணி வெட்கத்தினால் மீண்டும் ஓதுவதற்கு வெட்கப்படுவார்கள். இவர்களால் ஒருக்காலும் குர்ஆனை ஓதவோ அல்லது மனனம் செய்யவோ முடியாது.
எனவே கல்வியைக் கற்பதற்கு, பிறர் நம்மைத் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை என்றெண்ணி வெட்கப்படாமல், கற்றால் கண்டிப்பாக அவர் சமூகத்தினராலும் பாராட்டுக்குரியவர். மறுமைப்பேறையும் பெற்றிடுவார் என்பதில் ஐயமில்லை எனவே கற்பதற்கு வெட்கப்படக்கூடாது.
இதற்கு ஆதாரமாக மேற்சொன்ன மூவர்களின் சம்பவமே சரியான சான்றாக அமையும். மேலும் சத்தியத்தை சொல்ல வெட்கம் கூடாது என்கிற தலைப்பிலுள்ள உம்முசுலைம் நபியவர்களிடம் குளிப்புக்கடமை பெண்களுக்கும் ஏற்படுமா? என்று கேள்வி கேட்ட செய்தியையும் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது: அஸ்மா பின்த் ஷகல் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியரிலின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும்" என்று சொன்னார்கள்.
அதற்கு அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், "அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்?" என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்!). அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும்" என்று (மீண்டும்) சொன்னார்கள்.
உடனே நான், "இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள்' என்று பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச் லி சொன்னேன்.
மேலும், அஸ்மா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள், "தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையின் சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று!" என்றார்கள்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: பெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை. (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: முஸ்லிம் 552)
மார்க்கத்தைக் கற்க அறவே வெட்கப்படக் கூடாது
பொதுவான கல்வியைக் காட்டிலும் இம்மை வாழ்விற்கும் மறுமை வாழ்விற்கும் ஈடேற்றத்தைப் பெற்றுத் தரும் மார்க்கக் கல்வியைப் படிப்பதிலும் மார்க்க அறிவைக் கற்பதிலும் பெறுவதிலும் அறவே நம்மிடம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கூச்சமோ வெட்கமோ ஏற்படக் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வும் ரசூலும் மனிதனால் பின்பற்ற முடிந்ததையும் மனிதன் பிறமனிதனுக்கு எடுத்துச் சொல்லத் தகுந்த செய்தியையுமே சொல்லுவார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அதேசமயத்தில், மார்க்கம் என்ற பெயரில் தனிமனிதக் கருத்துக்களை சொல்வதில் பரிமாறிக் கொள்வதில் இந்தச் சான்றைக் கொடுக்க முடியாது. உதாரணத்திற்கு மார்க்கம் என்ற பெயரில் குர்ஆனிலும் நபிவழியிலும் இல்லாத மத்ஹபு சட்டங்களையும் அதில் இருக்கும் ஆபாசக் கூற்றுக்களையும் சொல்வதற்கு வேண்டுமானால் வெட்கப்படாலாமே தவிர குர்ஆனையும் நபிவழியையும் சொல்வதற்கு வெட்கப்படத்தேவையில்லை என்பதை உணர வேண்டும். இந்த ஆதாரத்தை சத்தியத்தைச் சொல்ல வெட்கப்படத் தேவையில்லை என்ற தலைப்பிற்கும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.
அபூமூசா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
முஹாஜிர்களிலும் அன்சாரிகளிலும் ஒரு குழுவினர் இ(ரு குறிகளும் சந்தித்துக்கொண்டால் குளியல் கடமையாகுமா அல்லது விந்து வெளிப்பட்டால்தான் குளியல் கடமையாகுமா என்ப)து குறித்துக் கருத்து வேறுபாடு (கொண்டு விவாதித்துக்) கொண்டனர்.
அன்சாரிகள், "விந்து வெளியானால்தான்' அல்லது "துள்ளல் இருந்தால்தான்' குளியல் கடமையாகும்" என்று கூறினர். முஹாஜிர்கள், "இல்லை, (இரு குறிகளும்) கலந்துவிட்டாலே குளியல் கடமையாகிவிடும். (விந்து வெளிப்படாவிட்டாலும் சரியே!)" என்று கூறினர். உடனே நான், "இப்பிரச்சினைக்கு நான் முற்றுப்புள்ளி வைக்கிறேன்" என்று கூறிவிட்டு எழுந்து ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினேன். எனக்கு அனுமதி கிடைத்தது. நான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம்,
"அன்னையே!' அல்லது "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே!' நான் தங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன். ஆனால், தங்களிடம் கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது" என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், "உங்களைப் பெற்றெடுத்த தாயிடம் நீங்கள் எதைப் பற்றிக் கேட்பீர்களோ அதைப் பற்றி என்னிடம் கேட்க நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. நானும் உங்கள் தாயார்தாம்" என்றார்கள். நான், "குளியல் எதனால் கடமையாகும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: சரியான ஆளிடம்தான் நீர் வந்திருக்கிறீர்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து (ஆண்)குறி (பெண்)குறியைத் தொட்டு (சந்தித்து)விட்டாலே (இருவர்மீதும்) குளியல் கடமையாகிவிடும். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 579)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது: "ஒருவர் தம் துணைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார். விந்தை வெளியாக்காமல் எழுந்து விட்டார். இந்நிலையில் அவர்கள் இருவர்மீதும் குளியல் கடமையாகுமா' என்று ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார். அப்போது நானும் அங்கு அமர்ந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இதோ இவளும் நானும் அவ்வாறு செய்வோம். பின்னர் நாங்கள் குளிப்போம்" என்றார்கள். (அறிவிப்பவர்: உம்மு குல்ஸூம் பின்த் அபீபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 580)
எனவே மார்க்கம் தொடர்பான அனைத்து விஷயங்களை வெட்கப்பட்டு விட்டுவிடாமல் தகுதியுடையவர்களிடம் கேட்டு தெளிவு பெறுவது இஸ்லாம் மார்க்கம் வலியுறுத்தும் முக்கிய விஷயமாகும்.'

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 19 அக்டோபர், 2020

வெளிநாடுகளில் வேலை செய்யும்சகோதரர்களே! ஷைத்தானின் வலையில் விழுந்துவிடாதீர்கள்!

நாம் சுவனம் செல்வோமா? இல்லை நரகம் செல்வோமா? என்று தீர்மானிக்கும் காலங்களில் பெரும் பங்கு வகின்ற காலம் இந்த பருவ காலம் தான். இந்த பருவ காலத்தில் நம்மில் பல சகோதரர்கள் வழிமாறி சென்று விடுகின்றனர். அவர்களுக்கு சரியான வழியைக் காண்பிக்கும் நபரை அவர்களின் பெற்றோர்கள் காண்பிக்க தவறுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.
சிறு வயதிலிருந்தே நல்ல பழக்கங்களோடு வளர்ந்த சிலர் கூட வெளிநாடுகளுக்கு வந்ததும் தவறான நண்பர்களை தேர்ந்தெடுப்பதின் மூலம் வழி தவறி சென்று விடுகின்றனர். சொந்த தேசத்தில் திருமணம் முடித்தவராக இருப்பினும் வெளிநாடு வந்த பிறகு  இவருக்கும் திருமணம் ஆகாதவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவர் ஓரிரு குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பினும் வெளிநாட்டில் அவர் BACHELOR என்று தான் சொல்லிக் கொள்வார். இந்த வாழ்க்கை மிகவும் சிரமமான கசப்பான வாழ்க்கை என்பது அயல் நாட்டில் வாழும் அனைவரும் அறிந்ததே.


இங்கே நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெற்றவர்தான் பெரும் பாக்கியசாலி. ஜும்ஆ நாட்கள் மற்றும் பெருநாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் தொழாத தீனின் வாடையே நுகராத நபர்களை நண்பர்களாக தேர்ந்தெடுத்தவர் நிலை மிகவும் கவலைக்குறிய நிலையாகும்.
இது முதலில் தொழுகையின் அருமை பெருமையை மறக்ககடிக்கச் செய்யும். அதன் பின் வீணான காரியங்களில் ஈடுபட வைக்கும்.குறிப்பாக தொலைக்காட்சில் சினமா ஆடல் பாடல் என்று கேளிக்கைகளில் காலங்கள் நகரும். இதன் விளைவு காலப் போக்கில் அல்லாஹ்வின் அச்சமின்றி அன்னியப் பெண்களை காண மனம் கிடந்தது துடிக்கும்.
பொதுவாகவே மனிதனின் மனம் தீமைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கும். இதில் தனிமையில் இணையத்தில் மூழ்கும் நம் இளைஞர்கள் விஷயத்தில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர்கள் ஷைத்தானின் வலையில் மிகவும் எளிதில் அகப்பட்டுக் கொள்கின்றார்கள்.]
வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!   
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்
பாசத்திற்குரிய அயல்நாட்டில்  வாழும்  இஸ்லாமிய சகோதரர்களே உங்களில் ஒருவனாக அரபு நாடுகளில் ஒன்றான அரபு அமீரகத்தில் ஷார்ஜாஹ், துபை, ஃபுஜைராஹ் போன்ற நகரங்களில் பத்து ஆண்டு காலங்களை  கழித்தவன் என்ற அனுபவத்திலும் நம் சகோதரர்கள் மேல் உள்ள அக்கறையினாலும் ஒரு சில உண்மைகளையும் அதற்குரிய பரிகாரங்களையும்  உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.அனைவரும் அவசியம் படியுங்கள்.
சகோதரர்களே நாம் வாழும் இந்த வாழ்க்கை அல்லாஹ் கொடுத்த மிகப் பெரிய அருட்கொடை என்பதை நாம் அறிவோம்.இங்கே எதை விளையச் செய்கிறோமோ அதைத்தான் நாளை மறுமையில் அறுவடை செய்ய  இருக்கின்றோம்.இவ்வுலகம் மறுமையின் விளை நிலமாக இருக்கின்றது.
நல்ல அமல்களை அதிகமதிகம் செய்ய முடிகின்ற வயது வாலிப வயதுதான். இந்த வாலிபப் பருவத்தை நாம் உலக விஷயங்களுக்காகவும்  உலக சம்பாத்தியத்திற்காகவும் செலவு செய்கின்ற அளவிற்கு மார்க்க விஷயங்களுக்காகவும் மறு உலகிற்காகவும் செலவு செய்வது மிகவும் அரிதாகி கொண்டே போகிறது. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களைப் பற்றியது தான் என் கவலையெல்லாம்.
நாம் இளமைப் பருவத்தில் தான் சம்பாத்தியம் செய்ய முடியும் எனவே இந்த வயதில் நாம் ஓடி ஓடி உழைக்க கடமைப் பட்டுள்ளோம். அதே நேரம் ஹலாலான சம்பாத்தியமாக அது இருக்க வேண்டும். இது விஷயத்தில் எவரிடமும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கும் பேச்சிற்கே இடமளிக்கக் கூடாது.
மேலும் இவற்றிற்கிடையே நமக்குரிய ஐங்கால கடமைகளான தொழுகைகளையும் காலம் தவறாமல் நாம் நிறைவேற்றிட கடமைப்பட்டுள்ளோம். இரவு பகல் பாராது கடுமையாக உழைக்கும் பல சகோதரர்கள் வேலையை முடித்து விட்டு இரவு படுக்கைக்கு செல்லும் முன் அன்றைய பொழுதின் அனைத்து தொழுகைகளையும் தொழுதிருப்பார்களா? என்றால் அதற்கு பெரும்பாலும் பதில் இல்லை என்று தான் வரும்.இவ்வுலகின் உன்னத செயல்களான தொழுகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இவ்வாலிப பருவத்தை நம் எதிரியான ஷைத்தானின் தூண்டுதளுக்கு துணையாக தியாகம் செய்து கொண்டிருக்கின்றோம். எப்படி இது சாத்தியம் என கேட்கிறீர்களா?
ஆம் இன்று துபை, மலேசியா போன்ற நாடுகளில் லாட்டரிகள் அதிகம் விற்பனையாகின்றது. துபை டூட்டி ஃப்ரீ கூப்பன்,மற்றும் மில்லினியர் கூப்பன்,என்று ஏராளமான பெயர்கள் அவைகளுக்கு உண்டு.மலேசியா போன்ற நாடுகளில் இந்த லாட்டரிகளை நம் முஸ்லிம்கள் அதிகம் விரும்பி  வாங்குவதாகவும் அதில் கிடைக்கும் பரிசுகளால் மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாகவும் கேள்விபடுகிறேன். இதெல்லாம் ஷைத்தானுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரக் கூடியவை.
நம் மறுமை வாழ்க்கையை வருமையாக்கி நாளை நரகிற்குள் நம்மை இழுத்து செல்லும் தீய செயல்களாகும். இப்படி இன்னும் பல தீய காரியங்களால் நம் முஸ்லிம் சகோதரர்கள் ஷைத்தானின் தூடுதளுக்கு துணை போகின்றார்கள். அவற்றையெல்லாம் பட்டியல் போடுவதற்காக நான் இதை எழுத வில்லை.மாறாக இவற்றையெல்லாம் விட என் மனதை அதிகம் பாதித்தவை ஒன்றுள்ளது. அதை பகிர்ந்து அது தொடர்புடைய நபர்களுக்கு இந்த செய்தி சென்று சேர வேண்டும் என்பதற்காகத் தான் இதை எழுதுகிறேன்.
வாலிபப் பருவனும் சோதனை
நாம் சுவனம் செல்வோமா? இல்லை நரகம் செல்வோமா? என்று தீர்மானிக்கும் காலங்களில் பெரும் பங்கு வகின்ற காலம் இந்த பருவ காலம் தான். இந்த பருவ காலத்தில் நம்மில் பல சகோதரர்கள் வழிமாறி சென்று விடுகின்றனர். அவர்களுக்கு சரியான வழியைக் காண்பிக்கும் நபரை  அவர்களின் பெற்றோர்கள் காண்பிக்க தவறுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.சிறு வயதிலிருந்தே நல்ல பழக்கங்களோடு வளர்ந்த சிலர் கூட வெளிநாடுகளுக்கு வந்ததும் தவறான நண்பர்களை தேர்ந்தெடுப்பதின் மூலம் வழி தவறி சென்று விடுகின்றனர்.சொந்த தேசத்தில் திருமணம் முடித்தவராக இருப்பினும் வெளிநாடு வந்த பிறகு  இவருக்கும் திருமணம் ஆகாதவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவர் ஓரிரு குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பினும் வெளிநாட்டில் அவர் BACHELOR என்று தான் சொல்லிக் கொள்வார். இந்த வாழ்க்கை மிகவும் சிரமமான கசப்பான வாழ்க்கை என்பது அயல் நாட்டில் வாழும் அனைவரும் அறிந்ததே.
இங்கே நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெற்றவர்தான் பெரும் பாக்கியசாலி. ஜும்ஆ நாட்கள் மற்றும் பெருநாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் தொழாத தீனின் வாடையே நுகராத நபர்களை நண்பர்களாக தேர்ந்தெடுத்தவர் நிலை மிகவும் கவலைக்குறிய நிலையாகும்.இது முதலில் தொழுகையின் அருமை பெருமையை மறக்ககடிக்கச் செய்யும்.அதன் பின் வீணான காரியங்களில் ஈடுபட வைக்கும்.குறிப்பாக தொலைக்காட்சில் சினமா ஆடல் பாடல் என்று கேளிக்கைகளில் காலங்கள் நகரும். இதன் விளைவு காலப் போக்கில் அல்லாஹ்வின் அச்சமின்றி அன்னியப் பெண்களை காண மனம் கிடந்தது துடிக்கும்.
தனிமை ஓர் பெரும் சோதனை
அயல் நாட்டில் வசிக்கும் ஓர் வாலிபன் தனிமை என்னும் சோதனையை  சில அல்லது பல சந்தர்பங்களில் சந்தித்தே ஆக வேண்டும். இந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெறாதவர் பாக்கியசாளி  என்றே சொல்லலாம்.ஆனால் அது கிடைத்து அதில் திறம்பட வெற்றி பெற்றவர் அல்லாஹ்வின் அருளைப் பெற்றவராவார். ஒரு இளைஞன் பாவங்களை சம்பாதித்துக் கொள்ள பெரிதும் துணை நிற்பது அவன் கையில் உள்ள கைபேசிதான்.
தற்போதைய  காலச் சூழலில் இணையம் (INTERNET) உபயோகிக்காத நபர் இல்லை என்றுதான் சொல்லலாம். கணினி இல்லாதவர் கூட கைபேசியில் (Mobile Phone) இணையத்தை உபயோகிக்கின்றார். வெளிநாடுகளில் வாழும் நம் (BACHELOR) வாலிபர்கள் இப்படிப்பட்ட கைபேசிகளினால் உலகத்தையே ஒரு சுற்று சுற்றி வருகின்றனர்.அதில் ஆபாச உலகமும் அடங்கும். YOU TUBE ,FACEBOOK போன்றவை இதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இதில் எந்நேரமும் மூழ்கிக் கிடக்கும் பல சகோதரர்கள் தனிமை  விரும்பிகளாகவே மாறி விடுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும்? இது தொடர்பாக மார்க்கம் நமக்கு என்ன சொல்கின்றது?என்பதை வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு முஸ்லிம் இளைஞரும் அறிந்து வைத்திருப்பதும் அதன்படி அமல் செய்வதும் கட்டாயமாகும். 
ஐந்து வருவதற்குள் ஐந்தை (நல்வழியில்) அனுபவித்துக் கொள்ளுங்கள்.நோய் வரும் முன் ஆரோக்கியத்தையும்,வேலை வரும் முன் ஓய்வையும்,வறுமை வரும் முன் செல்வத்தையும்,முதுமை வரும் முன் வாலிபத்தையும்,மரணம் வரும் முன் இந்த வாழ்வையும்.(நல்வழியில்) அனுபவித்துக் கொள்ளுங்கள்.என்று கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்.(நூல்:நஸாயீ)
நமக்கு கிடைத்த இந்த வாலிப பருவத்தை ஓய்வு நேரங்களில் எந்த நோக்கமும் இல்லாமல் வெறுமெனே எந்நேரமும் TV யிலும்  INTERNET லும் காலங்களை போக்காமல் நல்ல முறையில் பயன்படுத்துவதற்காக ஒரு அட்டவணையை நமக்கு நாமே மனதிற்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தொழுகை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் குர்ஆன் ஓதுவது,அல்லது ஓதக் கற்பது, அல்லது கற்பிப்பது,ஹதீஸ்களை படிப்பது, உழு எப்படிச்  செய்தல்? கடமையான குளிப்பு  எப்படி குளித்தல்?போன்ற ஏராளமான சட்டங்களை அருகில் இருக்கும் ஆலிம்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.  இதை அனைவரும் அவசியம் செய்ய வேண்டும்.அப்படி அவசியம் செய்ய வேண்டிய காரணம் என்ன?
 
''மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் நிச்சயமாக ஷைத்தானும் ஓடிக் கொண்டிருக்கின்றான்''
 என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள். (நூல் புகாரி)
நமது அறியாமையும் பலகீனமும் தனிமையும் தான் ஷைத்தானின் மிகப் பெரும் பலம். நம்மை எப்படியும் வழிகெடுக்க வேண்டும் என்று காத்திருக்கும் ஷைத்தானின் கூட்டங்களுக்கு நாம் எளிதில் வாய்ப்புகளை வழங்கிடக் கூடாது.தவறான முறையில் நேரங்களை பயன்படுத்துவது நம் மன இச்சைகளை கட்டவிழ்த்து விட்டுவிடும்.தீய காட்சிகளை பார்ப்பதும் அன்னியப் பெண்களை ஆபாசமாக நோக்குவதுமாக நம்மை வெட்கமில்லாத ஜடமாக மாற்றிவிடும். இறையச்சமற்றவனாகவும் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்க்கையையும் சீரழித்த பாவியாக கெட்டழியச் செய்து விடும்.
பொதுவாகவே மனிதனின் மனம் தீமைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கும். இதில் தனிமையில் இணையத்தில் மூழ்கும் நம் இளைஞர்கள் விஷயத்தில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர்கள் ஷைத்தானின் வலையில் மிகவும் எளிதில் அகப்பட்டுக் கொள்கின்றார்கள். இதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு சில ஆலோசனைகள்.
சிரமமில்லாத வேலையில் உள்ளவர்கள் ரமலான் மாதம் மட்டுமல்லாது மற்ற மாதங்களிலும் பிறை 13,14,15,ஆகிய நாட்களில் நோன்பு நோற்பதும் மேலும் சாத்தியமென்றால் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழன் போன்ற நாட்கள் நோன்பு நோற்பதும் சிறந்தது. சிரமமான வேலையில் இருக்கும் வாலிபர்கள் மனம் எப்போதெல்லாம் தீய எண்ணங்களில் அலை பாய்கின்றதோ அப்போதெல்லாம் நோன்பை அவசியமாக்கிக் கொள்ள வேண்டும்.
இதை கடை பிடிக்கும் காலமெல்லாம் மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா? என்றொரு வினா உங்கள் உல் மனதில் எழுந்தால்.அந்த எண்ணத்தை குழி தோண்டி புதைத்திடுங்கள்.இந்தியாவில் இருந்து ஆகாய மார்க்கமாக கடல் கடந்து அந்நிய தேசத்திற்கு வந்து சம்பாத்தியம் செய்வது சாத்தியெமென்றால் அங்கே கர்ப்பொழுக்கமாக  நாம் வாழ இந்த நபிவழியை கடைபிடிப்பதும் சாத்தியமே என்று எண்ணிக் கொள்ளுங்கள்.
வாலிபர்களே உங்களில் வசதியுள்ளவர் திருமணம் செய்து கொள்ளுங்கள்.நிச்சயமாக அது அவரின் பார்வையை (அன்னியப் பெண்களை விட்டும்) தாழ்த்திடும். மேலும் அவரின் மர்ம உறுப்பை (கர்ப்பை) பாதுகாத்திடும். திருமணம் செய்ய வசதியில்லாதவர் நோன்பை பற்றிப் பிடிக்கட்டும் அது அவருக்கு பாதுகாப்பாகும். என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகிய வழி காண்பித்துள்ளார்கள்.(நூல் புகாரி,முஸ்லிம்)
நம் பெற்றோர்கள் மற்றும் நம் மனைவி மக்களுக்காக குடும்ப கஷ்டத்தை நீக்கிட அயல் நாட்டிற்கு வந்துள்ள நாம், கர்ப்பொழுக்கத்தை கடை பிடிப்பது கட்டாயமாகும்.அதை மீறினால் பெற்றோருக்கும் நமக்காக தன் இளமையை தியாகம் செய்து அடுத்த முறை கணவன் எப்போது வருவார் என்று காத்திருக்கும் நம் மனைவிக்கும் துரோகம் செய்ததோடு படைத்த ரப்புல் ஆலமீனின் கடும் சினத்திற்கும் ஆளாக நேரிடும்.விளைவு துன்யாவிலும் கைசேதம். ஆகிரத்திலும் நஷ்டம் என்ற இழி நிலைக்கு ஆளாகுவோம். அல்லாஹ் இதிலிருந்து நம்மை பாதுகாப்பானாக.
எனவே இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள சட்டம் வெளிநாட்டில் வாழும் நம் இளைஞர்களுக்கும் பொருத்தமானதாக இருப்பதனால்  இது போன்ற நோன்புகளை கடைபிடித்து கர்ப்பை பாதுகாத்திட நம் வாலிபர்கள் தயாராக வேண்டும். இதற்கு தயாராவது யாருக்கெல்லாம் சிரமமோ அவர் திருமணம் ஆனவரா? மனைவியை உடன் அழைத்துக் கொள்ளுங்கள்.அதற்கு பொருளாதார வசதி இல்லையா? திருமணமானவராக இருந்தாலும் சரி, அல்லது திருமணம் ஆகாதவராக இருந்தாலும் சரி  இது போன்றதோர் வாழ்க்கையை தூர தள்ளிவிட்டு தாயகம் திரும்ப முன்வாருங்கள். உண்மையாக உழைத்தால் எங்குவேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்.நிச்சயம் உணவு வழங்குபவன் அந்த ஏக இறைவனாகும்.நாம் எங்கே இருந்தாலும் நமக்கு அவன் உணவு (ரிஸ்க்) வழங்குவான்.
வஸ்ஸலாம்:
மவ்லவி N.சய்யிது ஷம்சுத்தீன் சாதிக்.ஃபாழில் மன்பயீ
ஃபுஜைராஹ். U A E  

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஆண் பெண் வேறுபட்ட சிந்தனைக்கு இது தான் உண்மையான காரணமா?*

ஆண்களும் - பெண்களும் உடலளவில் வேறுபட்டவர்கள் என்று பலரும் நினைத்து வருகின்றனர். மேலும் , மனம் , மூளை ...

Popular Posts