ஆக்கம். மவ்லவி. தாஹா ஃபைஜி – அழைப்பாளர், சென்னை
சமுதாயத்தில் சில நபர்களுக்கு பொருளாதாரத்தை அதிகமாகவும் இன்னும் சில நபர்களுக்கு பொருளாதாரத்தை குறைவாகவும் அல்லாஹ் வழங்கி இருக்கின்றான்.
அல்லாஹ் நாடியிருந்தால் ஒட்டுமொத்த மனிதர்களையும் பெரும் பணக்காரர்களாக ஆக்கியிருக்கலாம் அல்லது அனைவரையும் ஏழையாக ஆகியிருக்கலாம் ஆனால் சில மனிதர்களை பணக்காரனாகவும், சில மனிதர்களை ஏழைகளாகவும் ஆக்கியிருக்கின்றான். இது ஏன் என்பதை அல்லாஹ் நமக்குத் தெளிவுபடுத்துகிறான்.
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்கு ரிஸ்க்கை – ஆகார வசதிகளை – விசாலமாக்குகிறான்; (தான் நாடியோருக்குச்) சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் பார்க்க வில்லையா? நிச்சயமாக ஈமான் கொண்டுள்ள சமூகத்திற்கு இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
(ஆல்குர்ஆன் 30: 37)
மனித சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக ஒரு வித்தியாசம் எதற்காக அமைக்கப்படவேண்டும் என்று அடுத்த வசனத்தில் குறிப்பிடுகின்ற பொழுது, பொருளாதாரம் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவவேண்டும் என்பதை அல்லாஹ் அறிவுறுத்துகின்றான்.
ஆகவே, உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவருக்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள் தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள். (அல்குர்ஆன் 30: 38)
தற்போது உலக அளவில் ஏராளமான மக்கள் வாழ்வியல் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். பிறரிடமிருந்து எதிர் பார்க்காதவர்கள் கூட பிறரிடத்தில் எதிர்பார்க்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். காரணம் கொரோனா என்று சொல்லக்கூடிய வைரஸ் உலகத்தையே ஆட்கொண்டு மனித சமுதாயத்தை அச்சுறுத்தி வைத்திருக்கின்றது. யாரும் வெளியில் சென்று வேலை செய்யக்கூடாது என அந்தந்த நாட்டு அரசாங்கம் மக்களின் நலன் கருதி கட்டளையிடுகிறது. இதில் செல்வந்தர்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பித்து விட்டார்கள். ஆனால் ஏழைகளோ வசமாக சிக்கிக் கொண்டார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கக்கூடிய மக்கள் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் பட்டினிச் சாவுகளை சந்திப்பதை பார்க்கின்றோம்.
பல மக்களுக்கு தேவை ஏற்படக்கூடிய இந்த சூழ்நிலையில்தான் நாம் அதிகமதிகம் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் கொடுக்க கடமைப் பட்டிருக்கின்றோம். முஸ்லிம் சமூகத்திற்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது. அதுதான் ரமலான் மாதத்தில் அதிகமதிகம் தான தர்மங்களை மேற்கொள்வது. ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் மழை, காற்றை விட வேகமாக தர்மங்களை செய்வார்கள் (நூல் புகாரி).
நபித்தோழர்கள் வசதியில் குறைவானவர்களாக இருந்தாலுங்கூட கொடுப்பதிலே, இல்லாதோருக்கு உதவுவதிலே அவர்கள் உயர்வானவர்கள். அதனால் தான் யாருக்கு செலவழிக்க வேண்டும் எதனை செலவழிக்க வேண்டும் என்று நபியவர்களிடத்திலே கேட்டார்கள். அப்பொழுது அல்லாஹ் இந்த வசனத்தை இறக்குகிறான்…
நபியே! (பொருள்களில்) "எதைச் செலவு செய்வது? (யாருக்குக் கொடுப்பது?)" என்று உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: (நன்மையைக் கருதி) "நீங்கள் எத்தகைய பொருளைச் செலவு செய்தபோதிலும் (அதனைத்) தாய், தந்தை, சுற்றத்தார், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குக் கொடுங்கள். இன்னும், நீங்கள் (வேறு) என்ன நன்மையைச் செய்தபோதிலும் அதனையும் நிச்சயமாக அல்லாஹ் அறி(ந்து அதற்குரிய கூலியும் தரு)வான்.
(அல்குர்ஆன் : 2:215)
இந்தச் சூழ்நிலையில் நாம் நினைக்க மறந்த ஒரு கூட்டத்தினர் தான் அல்லாஹ்வினுடைய பணியில் இருப்பவர்கள். அவர்கள் கண்ணியமானவர்கள் யாரிடத்திலும் அவர்கள் வெளிப்படையாக கேட்க மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு கொடுப்பது மிகவும் சிறந்தது என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
(நம்பிக்கையாளர்களே!) சில ஏழைகள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கென்றே தங்களை (முற்றிலும் அர்ப்பணம் செய்து) ஒதுக்கிக் கொண்டதால் (தங்கள் சொந்த வாழ்விற்குத் தேடக்கூட) பூமியில் நடமாட சாத்தியப் படாதவர்களாக இருக்கின்றனர். (அன்றி, அவர்கள்) யாசிக்காததால் (அவர்களின் வறுமை நிலையை) அறியாதவர்கள். அவர்களை செல்வந்தர்களென எண்ணிக் கொள்கின்றனர். அவர்களுடைய (வறுமையின்) அடையாளங்(களாகிய ஆடை, இருப்பிடம் ஆகியவை)களைக் கொண்டு நீங்கள் அவர்களை அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடத்தில் வருந்தியும் கேட்க மாட்டார்கள். (இத்தகைய ஏழைகளுக்கு) நீங்கள் நல்லதில் இருந்து எதைச்செலவு செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து அதற்குரிய கூலியை உங்களுக்குத் தரு)வான்.
(அல்குர்ஆன் : 2:273)
பல மக்கள் தங்களுடைய தேவைகளை வெளியே சொல்லாமல் தங்களிடமிருப்பதை வைத்துக்கொண்டு கஷ்ட நஷ்டங்களை சமாளித்துக் கொள்கின்றார்கள். அவர்களுக்கு தேவை இருக்கின்றது என்றாலும் அவர்கள் வெளியே யாரிடமும் கேட்பதில்லை. அல்லாஹுத்தஆலா உங்களிடத்தில் வலிந்து கேட்காதோருக்கும் கொடுங்கள் என்பதாக குர்பானியினுடைய இறைச்சி விஷயத்தில் நமக்கு ஏவுகிறான்.
….அதிலிருந்து நீங்களும் புசியுங்கள். அதைக் கேட்டவர்களுக்கும், கேட்காதவர்களுக்கும் கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வாறு அதனை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தோம். (அல்குர்ஆன் : 22:36)
இப்படிப்பட்ட இந்த மக்களுக்குத்தான் நாம் வாரி வழங்க வேண்டும். நாம் குறைத்து குறைத்து, எண்ணி எண்ணி கொடுத்தால் என்ன ஆகும் என்பதை ஒரு நபிமொழி நமக்கு எச்சரிக்கிறது.
அஸ்மா(ரலி) அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்கள் என்னிடம் 'நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்!' எனக் கூறினார்கள். 'அப்தாவின் அறிவிப்பில், 'நீ (இவ்வளவுதான் என்று) வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான்' எனக் கூறினார்கள் என உள்ளது. (ஸஹீஹ் புகாரி.)
அல்லாஹ்வின் பாதையில் உதவி செய்பவர்கள் எந்த நிலையிலும் செய்யலாம். இரகசியமாகவோ பகிரங்கமாகவோ குறைவாகவோ அதிகமாகவோ எவ்வாறு வேண்டுமென்றாலும் அவர்கள் தர்மங்களை கொடுக்கலாம். அது அனைத்துமே அவர்களுக்கு மகத்தான கூலியைப் பெற்றுத்தரும்.
யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில் )இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:274)
சஹாபாக்களினுடைய தானதர்மங்கள் மகத்தானது. தங்களுக்கு தீங்கிழைத்த மனிதர்களுக்குகூட உதவிகளை செய்து வந்தார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களுடைய சம்பவம் நமக்கு மிகப்பெரிய படிப்பினையை தருகிறது. அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மீது நயவஞ்சகர்கள் அவதூறு கூறி இட்டுக்கட்டினார்கள் உண்மை நிலை அறியாமல் சில சஹாபாக்கள் அதில் சம்பந்தப்பட்டார்கள்.
அதில் ஒருவர்தான் அபூபக்கர் (ரலி) மூலமாக உதவி பெற்று வந்த மிஸ்தஹ் (ரலி) அவர்கள்.
இது தெரிந்த அபூபக்கர் ரலி அவர்கள் இனிமேல் நான் உதவியே செய்யமாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார்கள்.
அல்லாஹ் வசனத்தை இறக்குகிறான்..
இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன். (அல்குர்ஆன் 24: 22)
இந்த வசனம் இறங்கிய உடன் அபூபக்கர் ரலி அவர்கள் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார்கள்.
"ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்" என்று கூறிவிட்டு மிஸ்தஹுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், "அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு (செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்த மாட்டேன்" என்று கூறினார்கள். (நூல் : புகாரி- 6679)
நாம் சம்பாதித்த அல்லது நம்மிடத்தில் இருக்கக்கூடிய சொத்து மற்றும் செல்வங்களின் நற்பலனை அடைய வேண்டுமென்றால் அது நமது கையில் இருக்கும்போதே தான தர்மங்களை செய்ய வேண்டும் இல்லையென்றால் அது வேறொரு நபருக்குறியதாகி விடும்.
நபி (ஸல்) அவர்கள், "உங்களில் யாருக்காவது தமது செல்வத்தை விட தமது வாரிசுகளின் செல்வம் விருப்பமுடையதாக இருக்குமா?" என்று கேட்டார்கள். தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அனைவருக்குமே எங்களின் செல்வம் தான் விருப்பமானதாகும்" என்று பதிலளித்தார்கள். "அவ்வாறாயின் ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) எதைச் செலவிட்டாரோ அது தான் அவரது செல்வமாகும். (இறக்கும் போது) எதைவிட்டுச் செல்கின்றாரோ அது அவருடைய வாரிசுகளின் செல்வமாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி 6442)
இப்போது தான் தர்மங்களை பெற்றுக்கொள்ள ஏழைகளும் தேவை உடையோரும் இருக்கின்றார்கள். சதகாவின் உடைய நன்மைகளையும் அறிந்து வைத்திருக்கின்றோம். இப்போதே தர்மம் செய்தால்தான் நமக்கு நன்மை, இல்லையென்றால்..
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தன்னுடைய தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு அலைவான். அதைப் பெறுவதற்கு யாரும் இருக்க மாட்டார். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேனே. இன்றோ அது எனக்குத் தேவையில்லை என்று கூறிவிடுவார். (நூல் புகாரி -1411.)
மலக்குமார்களுடைய துஆவை பெற்றுக் கொள்ள நாம் விரும்புகின்றோமா.? அல்லது சாபத்தை எதிர்பார்க்கின்றோமா?
ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், "அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக! என்று கூறுவார். இன்னொருவர், "அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக! என்று கூறுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1442)
அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து அதிகமதிகம் உதவிகளை செய்வோம் இயலாத முடியாத பொருளாதாரத்தில் பலகீனமான மக்களை தேடிச்சென்று உதவுவோம்.
http://www.islamkalvi.com/?p=124189
--