லேபிள்கள்

வெள்ளி, 29 ஜூன், 2012

வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா?


உபயோகமான தகவல்கள்
 ''இப்போதெல்லாம் போலி வாக்குறுதிகளை நம்பி இடம் வாங்கி ஏமாறுவது பெருகி வருகிறது. அதற்கு மக்களிடம் விழிப்பு உணர்வு இல்லாததுதான் காரணம். இடம் வாங்குவதில் உள்ள சட்டக் கூறுகள் தெரியாமல் ரியல் எஸ்டேட் புரோக்கர்களிடம் சிக்கிக்கொள்ளும் மக்கள் பலர். ஓர் இடம் வாங்க முடிவு செய்து விட்டால், பத்திரப் பதிவுக்கு முன் பரிசீலிக்க வேண்டிய 13 முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. இவற்றை ஒவ்வொருவரும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்'' 

 இடம் வாங்கும்போது முதலில் பார்க்க வேண்டியது... வில்லங்கப் பத்திரம். குறைந்தபட்சம் அந்த நிலத்தைப் பற்றிய 30 ஆண்டு கால பத்திர விவரங்களை சார்-பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, தகுந்த கட்டணம் செலுத்திப் பெற்று, அதை சட்ட ஆலோசகர் மூலம் படித்துப் பார்த்து, எந்த ஒரு வில்லங்கமும் இல்லையெனில் அடுத்த படி ஏறலாம்.

 குறிப்பிட்ட இடம் அரசு அங்கீகாரம் பெற்றுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊரின் உள்ளாட்சி அலுவலகத்தில் சென்று இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

 அந்த இடத்துக்கான வரி முறையாக, தொடர்ந்து செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் மேற்படி அலுவலகத்தின் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.

 இடத்தின் ஒரிஜினல் பத்திரம் மற்றும் மூல பத்திரங்களை கண்டிப்பாகப் படித்துப் பார்க்க வேண்டும். பத்திரத்தில் இருக்கும் உரிமையாளர்தான் உங்களிடம் இடம் விற்பனை செய்யும் நபரா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

 இடம் தொடர்பாக பொது அதிகார பத்திரம் (பவர்) வேறு யாருக்காவது கொடுக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

 குறிப்பிட்ட மனையின் வரை படம் பெறுவது முக்கியம். இதற்கு முன்பு அந்த இடத்தில் கிணறு, குட்டை, குழி, போன்றவை இருந்து மூடப்பட்டுள்ளதா என்று பார்க்கவேண்டும். அது தெரியாமல் அங்கு வீட்டைக் கட்டினால், மழைக்காலத்தில் வீடு உள் இறங்கிவிடும்.

 சொத்துவரி மற்றும் கணிப்பொறி சிட்டாவில் மனையை விற்பவர் பெயர் அல்லது விற்கும் நிறுவனத்தின் பெயர் இருக்க வேண்டும்.

 இடம் விற்பவரின் போட்டோ ஐ.டி. புரூஃப்-ஐ செக் செய்ய வேண்டும்.

 லே - அவுட் மேப் கட்டாயம் வாங்கிப் பார்க்க வேண்டும். ஒரு லே-அவுட் போடுகிறார்கள் என்றால்... ஸ்கூல், நீச்சல் குளம், வாட்டர் டேங்க் போன்றவை எங்கெங்கே வரப்போகின்றன என்பதையெல்லாம் குறிப்பிட்டு, அரசாங்கத்திடம் அனுமதி பெற்ற பிறகே அதற்கான அனுமதி கிடைக்கும். இந்த தகவல்கள் எல்லாம் லே-அவுட் மேப்பில் குறிக்கப்பட்டிருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள்.

 இடத்தை விற்பவரின் ரத்த சொந்தங்களுக்கு உரிமை இருப்பின், அவர்களிடம் தடை இல்லாச் சான்று பெற வேண்டும்.

 கைடு - லைன் வேல்யூ (ஒரு இடத்துக்கு அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் விலை) தெரிந்துகொள்ள வேண்டும். இதை பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது இணையதளம் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.

 அக்ரிமென்ட் போடும் பட்சத்தில், அதையும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது நல்லது.  

 எல்லாவற்றுக்கும் இடைத்தரகரையே முன்னிறுத்தாமல், விலை உள்ளிட்ட பல விஷயங்களையும் விற்பனையாளரிடம் நேரடியாகப் பேசுவதே நல்லது. இது பல வகையில் நாம் ஏமாறாமல் காப்பாற்றும்.

புதன், 27 ஜூன், 2012

சுகப்பிரசவம் சுலபமே!---உபயோகமான தகவல்கள்!


பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய நெகிழ்வையும் ஒருசேர உணர இன்றைய காலகட்டத்தில் எத்தனை தாய்களால் முடிகிறது?
இயற்கையான சுகப்பிரசவம் நிகழ வாய்ப்பு இருக்கும் நிலையிலும்கூட அறுவைச் சிகிச்சை செய்யச் சொல்லும் வற்புறுத்தல்கள் மருத்துவர்கள், கர்ப்பிணிகள் என இரு தரப்பிலுமே மிகுதியாகிவிட்டன. சுகப்பிரசவம் நடப்பதில் பிரச்னை என்று வந்தால் மட்டுமே அறுவைச் சிகிச்சைக்குப் போக வேண்டும் என்கிற புரிதல் அனைத்து தாய்மார்களுக்கும் உருவாக வேண்டும். அதற்கான ஆலோசனைகளையும்  வழிகாட்டுதலையும் இங்கே விளக்குகிறார்கள் பிரபல மகப்பேறு மருத்துவ நிபுணர்களான சென்னை ஷமீக் அக்தார், ஸ்ரீ கலா பிரசாத்,  திருச்சி பி. கமலம், பிரசவ கால உடற்பயிற்சி ஆசிரியர் ரேகா சுதர்சன்...
1 கருத்தரிப்பதற்கு முன் கலந்தாய்வு...
திருமணமாகி கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன் - மனைவி இருவரும் மருத்துவரிடம் ஒரு கலந்தாய்வுக்குச் செல்வது நல்லது. இந்தக் கலந்தாய்வில் பெண் மற்றும் அவரது கணவரின் குடும்பச் சூழல், குடும்ப வரலாறு ஆகியவற்றை மருத்துவர் தெரிந்துகொள்வதோடு, தம்பதியில் யாருக்கேனும் ஏதேனும் பரம்பரை நோயோ,
  பெண்ணுக்கு தைராய்டு, சர்க்கரை நோய், இதய நோய்,  ஹெபடைடிஸ் பி, ரத்த அழுத்தம், வலிப்பு நோய், ஹெச்.ஐ.வி. போன்ற நோய்களோ இருக்கின்றனவா என்பதையும் கண்டறிவார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரசவத்துக்கு ஒரு தம்பதி தயாராக இது உதவும்.
2 உணவை விரும்பு!
கருவுற்ற நாளில் இருந்து தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கலாம். சிலருக்கு உடலில் நீர்ச் சத்து குறைந்து எடை குறையலாம். சுகப்பிரசவத்துக்கு தாயின் உடல்நிலை இன்றியமையாதது. அதேபோல், குழந்தையின் எடை 3 முதல் 3.5 கி.கி. வரை இருந்தால்தான் குழந்தையின் தலை வெளியே வர ஏதுவாக இருக்கும். இதனால், உணவு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம்.
3 எதைச் சாப்பிடலாம்?
முதல் மூன்று மாதங்களில் மசக்கை காரணமாக உணவை மனம் வெறுக்கும். இந்த நாட்களில்தான் உணவில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். திட உணவு எடுத்துக்கொள்ள முடியாத சூழலில் பழச்சாறு போன்ற திரவ உணவுகளையேனும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  இத்தகைய சமயங்களில் பெண்கள் உணவை வெறுத்தால், அதுவே ஊட்டச் சத்துக் குறைவை உருவாக்கி ரத்த சோகைக்கு வழிவகுத்து, குழந்தையின் ஆரோக்கியத்தையும் தாயின் உடல் - மன வலிமையையும் குறைத்துவிடும். ஆகவே, தொடக்கத்தில் இருந்தே நல்ல ஊட்டச் சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது அவசியம். நீர்ச் சத்துக்கு இளநீர், வாந்தியை எதிர்கொள்ள மாதுளை, இரும்புச் சத்துக்குப் பேரீச்சை ஆகியவை இந்த நாட்களில் பேருதவி செய்யும். 4-வது மாதத்தில் இருந்து இரும்புச் சத்து மிக்க கீரை, காய்கள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், உடலில் இரும்புச் சத்தின் அளவு குறைந்தால் ஹீமோகுளோபினின் அளவும் குறையும். இந்த ஹீமோகுளோபின்தான் உடலின் பிற பாகங்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்ல உதவுகிறது. இதன் அளவு குறையும்போது குழந்தைக்கும் தேவையான பிராண வாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்படும். இதனால் போதிய இரும்புச் சத்து உள்ள உணவுகளையோ, மாத்திரைகளையோ எடுத்துக்கொள்வது தேவையாகிறது. நார்ச் சத்துக்கள் நிரம்பியுள்ள காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், மலச்சிக்கல் பிரச்னையை முறியடிக்க முடியும். கீரை, ஓட்ஸ், புதினா, உலர் திராட்சை, கொத்தமல்லி, பேரீச்சை போன்ற உணவுப் பொருட்களில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது. கொண்டைக்கடலை, ராஜ்மா, பயறு வகைகளில் கால்சியம், புரதச் சத்து அதிகம் இருக்கிறது. உருளை, கேரட், வேர்க்கடலை, பாதாம் பருப்பு வகைகளில் புரதம் இருக்கிறது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நூக்கோல் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறது. அன்றாட உணவில் இவற்றைச் சமச்சீரான விகிதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தது தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடித்தால், தாய்க்கு நல்லது. குறிப்பாக பனிக்குடத்துக்கு நல்லது!
 4  குனி, வளை, நிமிர்!
சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. இது கையில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். சிறிய அளவுள்ள வளையல் பெரிய மணிக்கட்டு உள்ள கையில் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக்கொள்ளும். பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுவது நல்லது. அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்ஃபின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இதனால், உடல் தசைகள் வலுப்பெற்று, குழந்தை சரியான நிலையில் இருக்கும். பெண்களின் பிறப்புறுப்பு நல்ல நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும். பிரசவமும் சுலபமாகும். தினமும் காலையில், முக்கால் மணி நேரம் மூச்சு இரைக்காதவாறு மெதுவாக நடக்கலாம்.
5
  சபாஷ் சரியான எடை!
கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரை கூடலாம். ஆனால், சில பெண்களுக்கு 15 கிலோவுக்கும் அதிகமாக எடை கூடும். இவர்களுக்கு இரட்டைக் குழந்தையாக இருக்கலாம் அல்லது குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம். இவை இரண்டுமே இல்லை என்றால் உடலின் எந்தப் பகுதியிலோ நீர் கோத்திருக்கிறது என அர்த்தம். இதனால், கர்ப்பிணிகளின் கால் வீங்கிக் காணப்படும். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருப்பது இயல்புதான். ஆனால், இந்த வீக்கம் கணுக்காலுக்குக் கீழே மட்டும் இருக்கும். அதுவும் நன்றாகத் தூங்கி எழுந்ததும் சரியாகிவிடும். அப்படி இல்லாமல் கணுக்காலைத் தாண்டியும் வீக்கம் இருந்தால் உப்பு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உப்பின் அளவைக் கண்டறிந்து, அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இத்துடன் ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் பேறுகாலத்தின்போது வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்த வேண்டியது அவசியம்.
6
    படுக்கையும் உறக்கமும்!
கர்ப்பிணிகள் முதல் நான்கு மாதங்கள் மல்லாந்த நிலையில் படுக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு இடதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்-சேய் இருவருக்கும் சாலச்சிறந்தது. இரவில் எட்டு மணி நேரத் தூக்கமும், பகலில் ஒரு மணி நேரத் தூக்கமும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியம். முதல் மூன்று மாதமும் கடைசி ஒரு மாதமும் தாம்பத்யத்தைத் தவிர்ப்பது நலம்.
7
  ஒரே மருத்துவர்!
பொதுவாக முதல்
  28 வாரங்களுக்கு மாதம் ஒரு முறையும் அதற்குப் பிறகு 28 முதல் 36 வாரங்கள் வரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும் 36-வது வாரம் முதல் பிரசவம் வரை வாரம் ஒரு முறையும் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே  ஒரே மருத்துவரை அணுகுவது நல்லது. நம் உடல்நிலையைப் பற்றிய அனைத்து விவரங்களும் தெளிவாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற சிகிச்சையை அளிக்க மருத்துவருக்கு எளிதாக இருக்கும்.
8 தவறாத மருந்துகள்!
தாய், சேய் இருவருக்கும் டெட்டனஸ் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க நான்கு வார இடைவெளியில் இரண்டு தடவையாக ரண ஜன்னி ஊசி போடவேண்டும். ஃபோலிக் அமில மாத்திரைகளை திருமணமான முதலே பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில், இது கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு ஏற்படக் கூடிய சில பிறவிக் குறைபாடுகளைத் தடுக்கும். ரத்தசோகை பாதிப்பு உடையவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை அல்லது ஊசி தேவைப்படலாம். தவிர, அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப தேவைப்படும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வது முக்கியம்.
 
9 கூடாது... கூடாது... கூடவே கூடாது!
வயிறு பெரிதாக பெரிதாக அதிக எடையைத் தூக்குவது, ஓடுவது, குடத்தை இடுப்பில் வைப்பது, நாற்காலியின் மீது ஏறுவது போன்ற கடுமையான செயல்களில் ஈடுபடவே கூடாது. தரையில் கால்களை நன்றாக ஊன்றி நடக்க வேண்டும். கால்களைத் தொங்கப் போட்டபடி உட்காரக் கூடாது. அடிக்கடி கால்களை நீட்டி, மடக்க வேண்டும். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காரக் கூடாது. ஒரே மாதிரியான வேலைகளைத் தவிர்க்க வேண்டும். உடல் முழுவதுக்கும் அசைவு கொடுக்கக் கூடிய பல்வேறு வேலைகளில் ஈடுபட வேண்டும். இதனால் உடலில் தசைப்பிடிப்பு, கால்கள் மரத்துப்போதல் போன்றவை ஏற்படாமல் இருக்கும். ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இப்போதைய பெண்கள் பிரசவத்தின்போது காலை மடக்கவே மிகவும் கஷ்டப்படுகின்றனர். இந்திய டாய்லெட்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் கால்களை எளிதாக நீட்டி, மடக்க முடியும். நொறுக்குத் தீனிகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. தேவையற்ற பிரச்னைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நலம். இது மனச் சங்கடங்களைத் தவிர்க்க உதவும்.
 10  அகமே சுகம்!
தாயின் உடல்நலன் எவ்வளவு முக்கியமோ மனநலனும் அவ்வளவு முக்கியம் சுகப்பிரசவத்துக்கு. இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்துக்கு மிகப் பெரிய எதிரி பெண்களுக்குப் பிரசவ வலி மீது உருவாகி இருக்கும் பயம். இந்தப் பயத்தை எதிர்கொள்வதற்கு தாயும் தன்னளவில் தயாராக வேண்டும்; குடும்ப உறுப்பினர்களும் தாயைத் தயாராக்க வேண்டும். 'இது ஒரு பிரச்னையே இல்லை; உனக்கு எதுவென்றாலும் உதவ நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்என்று ஒவ்வொரு கட்டத்திலும் தாய்க்கு
  நம்பிக்கை அளிக்க குடும்பத்தினர் தவறக் கூடாது. தாயின் மனநிலையை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். தாயும் நல்ல உணவைப் போலவே நல்ல இசை, நல்ல புத்தகங்கள் என மனதை இதமாக வைத்துக்கொள்ளும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். கூடுமானவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல் நலம்.  தியானம் மனதை ஒருமுகப்படுத்த உதவுவதோடு தேவையில்லாத பயம் - கவலைகளை நீக்கி பிரசவத்தைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும்.

திங்கள், 25 ஜூன், 2012

திருமணத்தை பதிவு செய்வதுதான் பெஸ்ட்! --


உபயோகமான தகவல்கள்,
அது ஒரு காலம். பதிவுத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்றாலே வீட்டுக்குத் தெரியாமல், அல்லது வீட்டினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்பவர்களுக்கு ஏற்ற திருமணமுறை அது என்ற நிலை. தமிழ் சினிமாக்களைப் பொறுத்தவரை இப்போதும் அப்படித்தான் என்றாலும் உண்மை நிலை மாறிவிட்டது. பதிவுத் திருமணத்தைப் பொறுத்தவரை பலவித தவறான நம்பிக்கைகள் உலவுகின்றன. அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.
தவறான நம்பிக்கை-1
மாப்பிள்ளை மற்றும் அவர்கள் குடும்பத்தாரைப் பற்றி மிகவும் நன்று தெரிந்திருந்தால் அந்த திருமணத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
உண்மை
 அப்படியில்லை. நீங்கள் ஒருவரை சட்டப்பூர்வமாக மணந்திருக்கிறீர்கள் என்பதற்கான சான்றுதான் பதிவு செய்து கொள்வது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது மற்றும் உங்கள் பெயருடன் உங்கள் கணவர் பெயரையும் சேர்த்துப் பயன்படுத்தப் போகிறீர்கள் எனும்போது திருமணச் சான்றிதழ் மிகவும் அவசியம்.
தவறான நம்பிக்கை – 2
ஹிந்து திருமண முறைப்படி திருமணம் நிச்சயமாகியிருந்தால் அந்த திருமணம் முடிந்த பிறகுதான் பதிவு செய்து கொள்ள முடியும்.
உண்மை
 இது பொதுவான நடைமுறையாக உள்ளது. ஆனால் பதிவுத் திருமணம் செய்து கொண்டு பிறகு சம்பிரதாயத் திருமணம் செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம். வெளிநாட்டில் மணமகன் இருந்து திருமணமான சில நாட்களிலே மணமகள், அவருடன் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் முன்னதாகவே பதிவு செய்து கொண்டால் பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பம் செய்வதற்கு வசதி.
தவறான நம்பிக்கை – 3
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தங்களுக்கு திருமணம் நடத்தித் தரவேண்டும் என்று பதிவாளர் அலுவலகத்திற்குப் போய் நின்றால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது பதிவாளரின் கடமை.
உண்மை
 அப்படியில்லை. ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் தேவை. ஏற்கெனவே திருமணம் செய்து கொள்ளாதவராக (அல்லது திருமணம் ஆகியிருந்தால் உரிய முறையில் விவாகரத்து பெற்றவராக) இருக்க வேண்டும். அல்லது ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்தால் துணைவர் இறந்திருக்க வேண்டும். மனநிலை சரியாக உள்ளவர்களுக்குத்தான் (அதாவது புத்திசுவாதீனம் உள்ளவர்கள்) திருமணம் செய்து வைப்பார்கள். திருமணத்திற்கு விண்ணப்பிக்கும் இருவரும் ஏற்கெனவே ரத்தவழி உறவுக்காரர்கள் என்றால் அவர்களுக்கு இடையே திருமணம் நடப்பது தடை செய்யப்பட்டிருக்கக் கூடாது. உதாரணத்திற்கு ஹிந்துக்களில் சகோதரர்களின் குழந்தைகள், சகோதர சகோதரிகள்தான். பெரியப்பா மகனை சித்தப்பா மகள் திருமணம் செய்துகொள்ள சம்பிரதாயத்தின்படியும், சட்டப்படியும் அனுமதி கிடையாது.
தவறான நம்பிக்கை – 4
உரிய சான்றிதழ்களை மட்டும் கொடுத்துவிட்டால் காதலர்கள் அடுத்த நாளே பதிவாளர் அலுவலகத்தில் மாலை மாற்றிக் கொண்டு திருமணத்தைப் பதிவு செய்து கொண்டு விடலாம்.
உண்மை
 ஸ்பெஷல் திருமணச் சட்டத்தின்கீழ் நடக்கும் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கான அறிவிப்பை மணமக்களில் ஒருவர் திருமண அதிகாரிக்குக் கொடுக்க வேண்டும். அந்த அறிவிப்பை பதிவாளர் அலுவலகத்தில் பளிச் சென்று தெரியக்கூடிய ஓர் இடத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைப்பார்கள். இதிலிருந்து முப்பது நாட்கள் முடிந்தவுடன் அந்தத் திருமணத்திற்கு யாரும் ஆட்சேபணை எழுப்பவில்லை என்றால் திருமணம் நடந்து அங்கேயே பதிவு செய்யப்படும். அப்படி ஆட்சேபணை கிடைக்கப் பெற்றால் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, உரிய தீர்மானம் எடுக்கப்படும்.
கூடுதல் செய்தி:
இப்போதெல்லாம் திருமண மண்டபத்துக்கே வந்து கூட திருமணத்தை பதிவுசெய்கிறார்கள். இதற்கான தனிக்கட்டணம் உண்டு. என்றாலும் கையோடு சான்றிதழையும் சத்திரத்திலேயே கொடுத்துவிட மாட்டார்கள். சம்பந்தப்பட்டவர்கள் பதிவு அலுவலகத்துக்கு நேரில் சென்றுதான் பெற்றுக் கொள்ளவேண்டும். பதிவுசெய்த அன்றேகூட இந்தச் சான்றிதழைப் பெறமுடியும்.
படிவம் 1ம் மணமக்களோடு, திருமணத்க்கு வந்திருந்த வேறு இரண்டுபேரும் சாட்சி அளிக்கவேண்டும்.
இந்தக் காலத்தில் பெரியவர்களின் ஆசி, மணமக்களின் விருப்பம் இவற்றைப் போலவே சட்டத்தின் துணையும் மிக அவசியம் என்றாகிவிட்டது. எனவே சட்டம் அளிக்கும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.

சனி, 23 ஜூன், 2012

லேசர் பிரிண்டர் வாங்கலாமா! – கணிணிக்குறிப்புக்கள்


டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டர்கள் மறைய ஆரம்பித்துவிட்டன. லேசர் பிரிண்டர்களை அனைவரும் விரும்ப ஆரம்பித்துவிட்டனர். பலர் இங்க்ஜெட் பிரிண்டர்களுக்கு கார்ட்ரிட்ஜ் வாங்கிக் கட்டுப்படியாகாததால் லேசர் பிரிண்டர்களின் விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை என்று முடிவு செய்து லேசர் பிரிண்டர்களை வாங்க முயற்சிக்கின்றனர். இவர்கள் விற்பனைச் சந்தையில் பல வகையான லேசர் பிரிண்டர்களைப் பார்த்து திகைக்கின்றனர். விற்பனையாளர்கள் கூறும் பலவிதமான தொழில் நுட்ப சங்கதிகளைப் புரியாதவர்களாக இருக்கின்றனர். இதனால் தங்களின் தேவைக்கு அதிகப்படியான திறன் கொண்டதை வாங்குகின்றனர். அல்லது தேவைகளை நிறைவேற்ற முடியாத ஒரு லேசர் பிரிண்டரை வாங்குகின்றனர். இந்த கட்டுரையில் எப்படிப்பட்ட லேசர் பிரிண்டர் உங்களுக்குத் தேவை என்பதைச் சுட்டிக் காட்டும் தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
யாருக்கு லேசர் பிரின்டர் தேவை? தினமும் ஏராளமான பக்கங்களை அச்சடிப்பவர்களுக்கு, வேகமாக அச்சடிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு, படங்களை துல்லியமாக, சீராக அச்சடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக லேசர் பிரின்டர் தேவை. விலை கட்டுபடியாகுமா? 5,000 ரூபாயில் லேசர் பிரின்டரின் விலை ஆரம்பித்து 1,50,000 வரையில் முடிகிறது. உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற பிரின்டரை வாங்கலாம்.
1.பிரின்டரில் Resolution என்பது முக்கியம். இதை Dots per inch (dpi) என்ற அலகில் குறிப்பிடுவார்கள். இந்த அளவு கூடுதலாக இருப்பது நல்லது. 300 dpi ரெசல்யூசன் கொண்ட லேசர் பிரின்டர்கள் சாதாரணமாகப் போதுமானது. சிறிது விலை அதிகமானாலும் பரவாயில்லை, அச்சின் தரம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 600 dpi ரெசல்யூசனுக்குச் செல்லலாம். 1200 dpi அல்லது அதற்கு மேல் ரெசல்யூசன் கொண்ட பிரின்டர்களின் அச்சடிப்புகளை கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். ஆனால் அவற்றின் விலை சற்று அதிகம்.
2.பிரின்டரின் Interface அடுத்ததாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஆகும். பேரலல் போர்ட் அல்லது யுஎஸ்பி (USP) போர்ட் அல்லது இந்த இரண்டும் ஒருங்கே அமையப்பெற்ற லேசர் பிரின்டர்கள் விற்பனைக்கு உள்ளன. உங்களிடம் பழைய கம்ப்யூட்டர் இருந்தால் அதில் யுஎஸ்பி போர்ட் இருக்காது. அப்படியானால் பேரலல் போர்ட் கொண்ட லேசர் பிரின்டரை வாங்க வேண்டும். கம்ப்யூட்டரில் யுஎஸ்பி போர்ட் உள்ளவர்கள் யுஎஸ்பி இன்டர்பேஸ் கொண்ட லேசர் பிரின்டரை வாங்க வேண்டும். காரணம், இதன் வேகம் அதிகம்.
3. எவ்வளவு காகிதங்களை பிரின்டரின் டிரேயில் வைக்க முடியும் என்பதைக் கவனியுங்கள். விலை குறைந்த சில பிரின்டர்களில் ஏறத்தாழ 100 காகிதங்களை மட்டுமே டிரேயில் வைக்க முடியும். விலை கூடிய ஒரு சில பிரின்டர்களில் ஏறத்தாழ 600 காகிதங்களை வைக்க முடியும். நிறைய காகிதங்களைப் பிரின்டரில் வைப்பதாக இருந்தால், அச்சடிக்கும் கட்டளையை கொடுத்து விட்டு வேறு வேலைகளை நீங்கள் பார்க்கலாம். இல்லையெனில் பிரின்டரின் பக்கத்திலேயே நின்று கொண்டு காகிதங்கள் தீர்ந்து போனால் புது காகிதங்களை அடுக்க வேண்டியிருக்கும்.
4.யானையைக் கொடுத்து விட்டு அங்குசத்தை கொடுக்காமல் விட்டால் என்னவாகும்? அதுபோல் பிரின்டரைக் கொடுத்து விட்டு அதற்கான இன்டர்பேஸ் கேபிளைத் தராவிட்டால் என்னவாகும்? பல நிறுவனங்கள் இந்த கேபிள்கள் இல்லாமல் லேசர் பிரின்டர்களை விற்கின்றன. தனியாக இந்த கேபிள்களை வாங்க கடை கடையாக ஏறி இறங்க வேண்டும். எனவே பிரின்டருடன் இன்டர் பேஸ் கேபிளையும் சேர்த்து தருகிறவர்களிடமே வாங்குங்கள்.
5. வாங்கப் போகும் லேசர் பிரிண்டருக்கான டோனரின் விலை குறைவாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். டோனர் தீர்ந்தவுடன் உடனடியாக கிடைக்கிறதா என்பதையும் விசாரியுங்கள்.
6. டோனரின் விலையைப் பார்ப்பதை விட மற்றொரு அம்சத்தையும் பார்க்க வேண்டும். ஒரு பக்கம் அச்சடிக்க எவ்வளவு பணம் செலவாகிறது என்ற அந்த அம்சத்தை பலர் கண்டு கொள்ளுவதே இல்லை. ஆனால் அதுதான் முக்கியம். ஒரு பக்கத்தை அச்சடிக்க எந்த பிரின்டரில் செலவு குறைவாக வருகிறதோ அதுதான் சிறந்த பிரின்டர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
7. LCD display உள்ள லேசர் பிரின்டராக இருந்தால் நல்லது. என்ன நிலையில் இயங்குகிறது, என்ன செய்ய வேண்டும் போன்ற விவரங்களை எல்சிடி மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
8. Led விளக்குகள் நிறைய இருந்தால் நல்லது. பொதுவாக Power, Paper jam, Toner low, load Paper, Paper out, Ready, Error, Manual, Data, Alarm போன்ற பல விஷயங்களை உங்களுக்கு தெரிவிக்க சிறு விளக்குகள் இருந்தால் நல்லது. எல்சிடி டிஸ்பிளே இல்லாத லேசர் பிரின்டர்களில் இந்த விளக்குகள்தான் உங்களுக்கு உதவும்.
9. Input Buffer எனப்படுகிற நினைவகம் அதிகம் இருக்க வேண்டும். 12 MB buffer உள்ள பிரின்டரின் விலை சற்று அதிகமாக இருக்கும். குறைந்தது 8 எம்பி பபர் உள்ள லேசர் பிரின்டரை வாங்குவது நல்லது.
10. காகிதங்களை வைப்பதற்கான டிரேக்கள் (Tray) எத்தனை தரப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். எல்லா பிரின்டர்களிலும் கண்டிப்பாக ஒரு டிரே இருக்கும். இன்னொரு டிரே கூடுதலாக இருப்பது நல்லது.
11. Manual மற்றும் Quick Start Guide ஆகிய உதவிப் புத்தகங்களை லேசர் பிரின்டருடன் தருகிறார்களா என்று பாருங்கள். சிக்கலான நேரங்களில் இருந்த புத்தகங்கள் கை கொடுக்கும்.
12. எடையும், அளவும் எவ்வளவு என்று பாருங்கள். இடம் குறைந்த அலுவலகம் அல்லது சிறிய மேஜையில் பிரின்டரை வைக்க விரும்புபவர்கள் நீள, அகலம் குறைந்த பிரின்டர்களை வாங்குவது நல்லது.
13. உத்தரவாத காலம் அதிகமாக இருக்க வேண்டும். 3 வருடங்கள் உத்தரவாத காலம் கொண்ட பிரின்டர்களாக இருப்பது நல்லது.
14. உங்கள் இடத்துக்கே வந்து பிரின்டரை சரி பார்ப்பார்களா அல்லது அவர்கள் இடத்துக்கு நீங்கள் பிரின்டரை தூக்கிச் செல்ல வேண்டுமா என்பதை விசாரியுங்கள்.
15. உங்கள் ஊரில் அந்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் உள்ளதா என்பதை விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் ஊருக்கு அருகில் எங்கு சர்வீஸ் சென்டர் உள்ளது என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள்.

வியாழன், 21 ஜூன், 2012

கிச்சன் கிளினிக் ...வீட்டுக்குறிப்புக்கள்!


சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் 'சிங்க்எப்போதும் தண்ணீர் படும் இடம் என்பதால், பாசியும் அழுக்கும் படிந்திருக்கும். இதனால், ஒருவித நாற்றமும் கிளம்பும். இதைப் போக்க சிங்க் சுவர்களில், கிளீனரை ஊற்றி நன்றாகத் தேய்த்துக் கழுவவும். அதன் பின் ஒரு நாப்தலின் உருண்டையை சிங்கினுள் போட்டு வைத்தால் கரப்பான் போன்ற பூச்சித் தொல்லையை தவிர்க்க முடியும். சமையல் அறைக் குப்பைக் கூடையை சிங்கிற்கு கீழ் வைக்கலாம். மூடும் வசதியுடைய கூடை நல்லது. இந்தக் குப்பைக் கூடையில் இருந்து கிளம்பும் நாற்றத்தைத் தடுக்க ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவைக் கொட்டி, கூடைக்குப் பக்கத்திலேயே வைப்பது பலன் தரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேக்கிங் சோடாவை மாற்றினால் போதும்.
 பாத்திரம் துலக்கப் பயன்படுத்தும் ஸ்பான்ச், கிருமிகள் தங்கும் இடம். அதன் ஒரு சதுர இன்ச் பரப்பிலேயே லட்சத்துக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் குடியிருக்கும். ஸ்பான்ச்சில் உள்ள ஈரப்பதத்தால் வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலியை உருவாக்கும் கிருமிகள் அதில் உருவாகலாம். இதைத் தவிர்க்க வாரம் ஒருமுறை இந்த ஸ்பான்ச்சை மாற்றிவிட வேண்டும். அல்லது ப்ளீச்சிங் தூள் கலந்த வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து அலசி எடுத்தால், கிருமிகள் ஒழிந்துவிடும். கேஸ் அடுப்பை எண்ணைய்ப் பிசுக்கு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க.... அடுப்பிலும் சமையல் மேடையிலும் திரவ சோப்பை ஊற்றி நன்கு தேய்த்து ஊறவிட வேண்டும். அதன் பின் தண்ணீர் ஊற்றி சுத்தமாகத் துடைத்தால்,  அடுப்பு, மேடை இரண்டுமே பளிச் பளிச். இரண்டு லிட்டர் அளவுத் தண்ணீரில் அரை கப் வினிகர், கால் கப் பேக்கிங் சோடாவைக் கலந்து சமையல் அறைத் தரையைத் துடைக்கலாம்.
 பாட்டிலில் இருந்து வீசும் துர்நாற்றம் போக, பாட்டிலில் பாதி அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை அளவு கடுகு அல்லது ஆப்ப சோடாவை போட்டுக் குலுக்கி ஊற வைத்துக் கழுவினால் வாடை அகன்றுவிடும். பாட்டிலும் பளீரிடும்.
 முட்டை கீழே விழுந்து உடைந்துவிட்டால், அதன் மீது சிறிதளவு உப்பைத் தூவி, பிறகு துடைத்து எடுத்தால் சுத்தம் செய்வதும் எளிது; வாடையும் இருக்காது.
 மட்டன், சிக்கன் போன்ற இறைச்சி வகைகளை மிக்ஸியில் அரைத்து எடுத்ததும் உடனடியாக மிக்ஸி ஜாரை சுத்தம் செய்ய வேண்டும். ஜாரினுள் இரண்டு பிரட் துண்டுகளைப் போட்டு அரைத்தெடுத்தால், பிசுக்கும் வாடையும் பறந்துவிடும்.
 மைக்ரோ வேவ் அவனில் வைக்கக் கூடிய கிண்ணத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்ச் தோல்களைப் போட்டு சிறிது நேரம் சூடாக்கினால்... 'மைக்ரோ வேவ் அவன்சுத்தமாக இருக்கும். அதில் ஏற்படும் கெட்ட வாடையையும் தவிர்க்க முடியும்.
 சமைக்கும் பொருளின் அமிலத்தன்மை, பயன்படுத்தும் தண்ணீர், தரம் குறைந்த அலுமினிய உள் பாத்திரம் போன்றவற்றால் குக்கரின் உட்புறம் எளிதில் நிறம் மாறி விடும். எனவே சமைக்கும்போது குக்கரில் ஊற்றும் தண்ணீரில் சிறிதளவு புளி அல்லது நறுக்கிய எலுமிச்சைத் துண்டு ஒன்றைப் போட்டுவிட்டால் குக்கர் மீண்டும் பழைய பளபளப்பை அடையும்.
 சமையலின்போது பாத்திரங்கள் அடிப்பிடித்தால், அதில் சோப் நீரை நிரப்பி சில நிமிடங்கள் கொதிக்கவைத்து பின் கழுவுங்கள். கரை இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
 கண்ணாடிப் பாத்திரங்களை உப்பும் வினிகரும் கலந்த கலவையைக் கொண்டு சுத்தம் செய்யலாம்.
 உப்பு ஜாடியில் சிறிதளவு சோள மாவைப் போட்டுவைத்தால், உப்பு நீர்த்துப்போகாமல் இருக்கும்.
/

செவ்வாய், 19 ஜூன், 2012

நேர்முகத் தேர்வு வியூகங்கள்….


நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றிய பகுப்பாய்வையும், அக்கேள்விகளுக்கான சரியான பதிலையும் தயார்செய்து வைத்துக்கொண்டு, நேர்முகத்தேர்வில் அவற்றை வழங்கினால் மட்டுமே, உங்களுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற முழு உத்தரவாதமில்லை. இன்டர்வியூ என்பது அதனையும் தாண்டிய சில அம்சங்களைக் கொண்டது. நேர்முகத்தேர்வு நடத்துபவர்கள் முன்னிலையில், ஒரு நேர்மறை தொழில்முறை பிம்பத்தை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். இந்த ஆளுமை வளர்ப்பானது, ஒரே நாளில் கைகூடிவிடாது. குறிப்பிட்ட காலகட்ட அளவில் பல்வேறு முயற்சிகளின் மூலமாகவே நீங்கள் அதனை வளர்த்துக்கொள்ள முடியும். அத்தகைய ஆளுமையை வளர்த்துக்கொள்வதற்கான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்படுகின்றன.
முக்கியமாக 3 அம்சங்களை நேர்முகத்தேர்வை நடத்துபவர்கள் உங்களிடம் கவனிப்பார்கள்,
  • உங்களின் தோற்றம்
  • உங்களின் பேச்சு
  • உங்களின் நடத்தை
எனவே, இந்த 3 அம்சங்களையும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்வது, ஒரு மாணவருக்கு அவசியமானதாகும்.பொலிவான தோற்றம் நேருக்கு நேரான இன்டர்வியூ செயல்பாட்டில், உங்களின் தோற்றப் பொலிவு முக்கியமானது. அதற்காக, அழகாக இருப்பவர்களுக்குத்தான் பணி கிடைக்கும் என்று தவறாக புரிந்துகொள்ளக்கூடாது.சரியாக முடி திருத்தம் செய்து, நகங்களை வெட்டி, நேர்முகத் தேர்வுக்கு முன்பாக, முகத்தைக் கழுவி, ஒரு துடிப்பான தோற்றம் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.
நல்ல ஆடை Formal ஆடைகள், பொதுவாக, அனைத்துவகை நேர்முகத் தேர்வுகளுக்கும் பொருத்தமானவை. சில நிறுவனங்கள், ஆடை விஷயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுப்பவை. எனவே, முடிந்தால், ஒரு நிறுவனத்திற்கு இன்டர்வியூ செல்லும் முன்பாக, அந்நிறுவனத்தின் ஆடை விதிமுறைகள் பற்றி அறிய முயற்சி செய்யுங்கள். பொதுவாக, உங்களின் உடலுக்கேற்ற வகையிலும், நிறப் பொருத்தமாகவும் ஆடைகளை தேர்வுசெய்து அணியுங்கள். உங்களின் ஷ¤க்கள் நன்கு பாலிஷ் செய்யப்பட்டு இருக்கட்டும். நல்ல ஆடை என்றால் விலை உயர்ந்த ஆடைதான் என்றும் நினைத்துக்கொள்ள வேண்டாம்.
ஆயத்தமாதல் நேர்முகத்தேர்வு என்பது பேஷன் ஷோ அல்லது திருமண நிகழ்ச்சி அல்லது அழகுக்கலை போட்டி இல்லை என்றாலும், உங்களை அந்தரீதியில் தயார்படுத்த வேண்டியது அவசியம். வாசனை திரவியத்தை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது. உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், நேர்முகத்தேர்வுக்கு முன்பாக அதை தவிருங்கள். வாய் நாற்றப் பிரச்சினை இருந்தால், அதற்கேற்ற Mouth freshner பயன்படுத்துங்கள்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்! இன்டர்வியூ செல்வதை, போருக்கு செல்வதாக நினைத்து பயந்து, படபடத்து, உங்களை நீங்களே அழுத்திக் கொள்ளாதீர்கள். ரிலாக்சாக இருங்கள். அது ஒன்றும் மலையைத் தூக்கும் செயல் அல்ல. முதல் தினம் தொடங்கி உங்களின் இயல்பான வேலைகளை செய்து கொண்டிருங்கள். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் சாதாரணமாக பேசுங்கள். இன்டர்வியூ தினத்தன்று, உங்களுக்கு நன்றாக ஒத்துக்கொள்ளும் உணவினை மிதமாக அருந்திவிட்டு செல்லுங்கள். பழரசம் குடிப்பதும் நல்லது.
கவனமாக பேசுங்கள் நேர்முகத்தேர்வில் பேசும்போது, எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் முந்தையை நிறுவனத்தைப் பற்றி அவர்களிடம் குறைசொல்வதை தவிர்க்கவும். உங்களின் பேச்சை வைத்துதான் உங்களது ஆளுமையை அவர்கள் தீர்மானிப்பார்கள்.
நம்பிக்கையுடன் பேசுங்கள் பேசும்போது பதற்றத்தில் தடுமாறாதீர்கள் மற்றும் குளறாதீர்கள். எதிரே இருப்பவர்கள் உங்களை எதுவும் செய்துவிட மாட்டார்கள். நீங்கள் வேலைதேடி வந்துள்ளீர்கள், அவ்வளவுதான். பேசும்போது, புன்முறுவலுடன் பேசுங்கள்.
நிதானமாக பேசுங்கள் படபடவென்று பொரிந்து தள்ளிவிடாதீர்கள். அது அவர்களுக்கு புரியாமல் போகும் மற்றும் உங்களின் பலவீனத்தையும் இன்டர்வியூ நடத்துபவர்களிடம் காட்டிக் கொடுத்துவிடும். வாக்கியங்களுக்கு வாக்கியம் சில விநாடிகள் இடைவெளி இருந்தால் நல்லது.
விவாதம் செய்யாதீர்கள் ஒரு குறிப்பிட்ட கருத்து அல்லது விஷயத்திற்காக இன்டர்வியூ நடத்துபவர்களிடம் எக்காரணம் கொண்டும் விவாதம் செய்துவிடாதீர்கள். உங்களின் எதிர்கருத்தை அந்த நேரத்தில் வெளிப்படுத்தாதீர்கள். அது இன்டர்வியூ நடத்துபவர்களுக்கு கோபத்தை வரவழைக்கலாம். அவர்களின் கருத்திற்கு மதிப்பளித்து, நேர்மறையாக பேசி உங்களின் வாய்ப்பினை அதிகப்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.
ஆர்வமாக செயல்படுங்கள் நேர்முகத்தேர்வு செயல்பாட்டில் ஆர்வம் என்பது மிகவும் முக்கியம். அவர்கள் கேட்கும் கேள்விகளை ஆர்வத்துடன் செவிமடுத்து, உங்களின் முகத்தை உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்களின் ஆர்வமானது, அவர்களையும் உற்சாகப்படுத்தும். தகுதிகள் அதிகம் இருந்து, குறைந்த ஆர்வமுள்ளவர்களை விட, தகுதிகள் குறைவாக இருந்தாலும், ஆர்வம் அதிகமுள்ளவர்களுக்கே, நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம். ஒவ்வொருவரின் கண்களையும், புன்முறுவலுடன் எதிர்கொண்டு, அவர்களின் கேள்விகளுக்கு உயிரோட்டமான முறையில் பதிலளிக்கவும்.சிலர், நேர்முகத்தேர்வின்போது, எதையோ இழந்தவர்கள்போல முகத்தை சோர்வாகவும், உம்மென்றும் வைத்துக்கொண்டு இருப்பார்கள். அத்தகைய நபர்கள் நிச்சயம் நிராகரிக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு என்பது பரஸ்பரம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பானது. ஆர்வமும், துடிப்பும் இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
நன்றி: கவிதாமிலன் வலைப்பூக்கள்

ஞாயிறு, 17 ஜூன், 2012

100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்


ஆரம்பித்துவிட்டது எக்சாம் கவுன்ட் டவுன்பரீட்சை பயமும் டென்ஷனும் பிள்ளைகளைவிட, அம்மாக்களுக்கே அதிகம்  நன்றாகப் படிக்கவும், படித்ததை நினைவில் வைத்துக்கொள்ளவும் வெண்டைக்காயில் இருந்து வல்லாரை வரை சகலத்தையும் சமைத்துக் கொடுக்கும் அம்மாக்கள் எக்கச்சக்கம்
தேர்வு நேரத்து டயட் எப்படி இருக்க வேண்டும், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்- அம்மாக்களுக்கு டிப்ஸ் தருகிறார் டயட்டீஷியன் புவனேஸ்வரி.
உணவை விட முக்கியம் உறக்கம். என்னதான் ஆரோக்கிய உணவு கொடுத்தாலும், போதுமான அளவு தூக்கம் இல்லாவிட்டால், உள்ளே சென்ற உணவால் ஒரு பயனும் இல்லை. ஒழுங்காகப் படிக்கிறார்களா எனப் பார்ப்பதைப் போலவே, நன்றாகத் தூங்குகிறார்களா என்பதையும் பாருங்கள்.  என் பிள்ளைக்குக் காரசாரமா இருந்தாத்தான் இறங்கும் என நீங்கள் பெருமை பேசுவதை, தேர்வுகள் முடிகிற வரை நிறுத்தி வையுங்கள்.
அதிக காரம், அதிக மசாலா, எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள் தேவையில்லாத மன அழுத்தம், தூக்கமின்மை, வயிற்றுக்கோளாறுகளை உருவாக்கலாம். படிக்கிற போது இடையில் அடிக்கடி தண்ணீர் குடிக்கிறார்களா என்றும் சரி பாருங்கள். தண்ணிதானேஅதுல என்ன சத்தா இருக்குஎனக் கேட்கலாம்.
மற்ற சத்துகள் கிரகிக்கப்படவும், தேவையற்ற கழிவுகள் வெளியேறவும் தண்ணீர் மிகமிக முக்கியம். தண்ணீர் சத்து இல்லாமல் வறண்டு போனால், கண்கள் மஞ்சள் நிறமாகலாம். சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் வெளியேறலாம். களைப்பாகவும் உணர்வார்கள். நிறைய காய்கறிகளும் பழங்களும் படிக்கிற
பிள்ளைகளுக்கு அவசியம்.
இது கூடாது, அது ஆகாது என எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், எல்லா காய் களையும் பழங்களையும் கொடுக்கலாம். சிலருக்கு தேர்வு பயத்தில் வயிற்றுப் போக்கும், இன்னும் சிலருக்கு மலச்சிக்கலும் வரலாம். இந்த இரண்டுக்குமே பழங்களும், காய்கறிகளும் பெஸ்ட்.காலை உணவுக்கு வறுத்த, பொரித்த, எண்ணெய் சேர்த்த உணவுகள் வேண்டாம்.
சில குழந்தைகளுக்கு தேர்வு எழுதப் போகிற பயத்தில் சாப்பாடே இறங்காது. எதைச் சாப்பிட்டாலும் வயிறு கெட்டுப்போன மாதிரி உணர்வார்கள். இதைத் தவிர்க்க அவர்களுக்கு ஆவியில் வேக வைத்த உணவுகளைக் கொடுக்கலாம்.இரவு தூங்கப் போவதற்கு முன் சூடான பால் கொடுக்கலாம். நல்ல தூக்கத்துக்கு உதவும்.
என்னதான் பிசியான அம்மாக்களாக இருந்தாலும், தேர்வு நேரத்தில் பிள்ளைகள் விரும்பிக் கேட்பதை செய்து கொடுங்கள். அம்மா தன்னுடனேயே இருக்கிறார்என்கிற எண்ணமே பிள்ளைகளுக்கு பாதி டென்ஷனை விரட்டும்.தூக்கத்தைத் தவிர்த்துப் படிப்பது சரியானதல்ல. தூக்கம் வராமலிருக்கவென்றே காபி, டீயை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது சரியானதில்லை.
சாதாரண டீயைவிட, கிரீன் டீ பெட்டர். அதனால் மிகப்பெரிய நன்மைகள் வந்துவிடும் என்று சொல்ல முடியாது. படிப்புக்கு இடையிடையே சிறிது  ஓய்வு அவசியம். அந்த நேரத்தில் அவர்களுக்குப் பிடித்த எந்த விஷயத்தை வேண்டுமானாலும் செய்ய அனுமதியுங்கள். பாட்டு கேட்பதோ, டி.வியில் காமெடி பார்ப்பதோஎதுவானாலும் தினம் சிறிது நேரமாவது ஏதோ ஒரு உடற்பயிற்சி செய்வது, தேர்வுக்குப் படிக்கிற பிள்ளைகளுக்கு அவசியம்.
வாக்கிங், சைக்கிளிங் என ஏதோ ஒன்றுஉடற்பயிற்சி செய்கிற போது, உடலில் ஹேப்பி ஹார்மோன்கள்சுரந்து, மனதையும் உடலையும் உற்சாகப்படுத்தும்.
நன்றி: தினகரன்

வெள்ளி, 15 ஜூன், 2012

புறம் பேசுவதை தவிர்ப்பதன் அவசியம்!


அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தாகுக!
புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க வேண்டும்.
ஒருவர் புறம் பேசுவதை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டுமெனில், முதலில் அவர், புறம் பேசுதல் என்றால் என்ன? அதனால் ஏற்படும் தீமைகள் என்ன? புறம் பேசும் ஒருவனுக்கு இம்மை மற்றும் மறுமையில் கிடைக்கும் தண்டனைகள் யாவை? என்பதை அறிந்துக் கொள்வாராயின், இன்ஷா அல்லாஹ் அவர் அந்த தீயசெயலிளிருந்து தவிர்ந்து இருப்பார்.
புறம் பேசுதல் என்றால் என்ன?
புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்: -
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் புறம்  என்றார்கள்.
நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய்.
நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
புறம்பேசுதல் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட (ஹராமான) செயலாகும்:-
அல்லாஹ் கூறுகிறான்:-
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய
 இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
பிறரைக் கேலி செய்யும் விதத்தில் பேசக் கூடாது: -
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். அல்-குர்ஆன் 49:11)
ஒரு முஸ்லிம், பிற முஸ்லிமின் கண்ணியத்தைக் குழைக்கும் வகையில் புறம் பேசக் கூடாது:-
ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: அஹ்மத்)
புறம் பேசுவதால் இம்மையில் ஏற்படும் தீமைகள்:-
  1. புறம் பேசுவதன் மூலம் குடும்பங்களுக்கிடையே, உறவினர்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள்,தகராறுகள் ஏற்படுகிறது.
  2. ஒரு சபையில் பிறரைப் பற்றிப் புறம் பேசப்படும் போது, அது சமுதாயங்களுக்கிடையே பிளவை உண்டாக்குகிறது.
  3. சமுதாயம் பிளவு படுவதன் மூலம் முஸ்லிம்களிடையே பலபிரிவுகள் ஏற்பட்டு, முஸ்லிம் சமுதாயம் பலவீண மடைகிறது.
  4. முஸ்லிம் சமுதாயம் பலவீணமடைவதால் எதிரிகளால் ஆக்ரமிக்கப்பட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பாதிப்படைகிறது.
புறம் பேசுவதால் மரணததிற்குப்பிறகு கப்ரிலும்,மறுமையிலும் கிடைக்கும் தண்டனைகள்: -
கப்ரில் கிடைக்கும் தண்டனைகள்: -
நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்ற போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என கேட்கப்பட்ட போது அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புஹாரி.
மறுமையில் கிடைக்கும் தண்டனைகள்: -
1) மனித மாமிசத்தை சாப்பிடுவார்கள்: -
மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே, அவர்கள் யார்என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்என்று விளக்கமளித்தார்கள்.அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்: அஹ்மது.
2) புறம் பேசுபவன் சுவனம் நுழையமாட்டான்: -
புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான்என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)
முஃமினான என தருமை சகோதர, சகோதரிகளே! அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களினால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ள இந்த புறம் பேசுதல் என்ற தீயசெயலை நாம் ஒவ்வொருவரும் தவிர்ந்திருப்பது மிக மிக அவசியமாகும்.
புறம் பேசுவதைத் தவிர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்: -
ஒருவர் புறம் பேசுவதன் தீமைகளை அறிந்து அதைத் தவிர்ந்தவர்களாக, யாரைப் பற்றிப் புறம் பேசினார்களோ அவரிடம் மன்னிப்புக் கோரவேண்டும். பின்னர் மனந்திருந்தியவராக அழுது மன்றாடி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:-
39:53 “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான்; நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்”. (அல்-குர்ஆன் 39:53-54)
நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 6:54)
எனவே சகோதர,சகோதரிகளே நாம் மனந்திருந்தியவர்களாக,இனி எக்காரணத்தை கொண்டும்,யாரைப்பற்றியும், புறம் பேச மாட்டேன்! ஒருவரின் கண்ணியத்தைக் குழைக்கும் விதத்தில் நடந்து கொள்ள மாட்டேன்! என்று உறுதி பூண்டவராக, செயல்பட்டு, அந்த உறுதியில் நிலைத்திருப்பாராயின் அதனால் அளப்பறிய நன்மைகள் அவருக்கு கிட்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: -
எவரின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத்.
எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)
மேலும் நாம் அமர்திருக்கின்ற ஒரு சபையில் நம்முடைய சகோதர, சகோதரியைப் பற்றிப் புறம் பேசப்படுமானால், நாமும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாவத்தில் சிக்கி உழலாமல் எந்த சகோதர, சகோதரியைப் பற்றிப் பேசப்படுகிறதோ அவருடைய கண்ணியத்தைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்! இதை நபி (ஸல்) அவர்களும் வரவேற்றுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்து விடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹமத்)
அல்லாஹ் நம் அனைவரையும் புறம் பேசுதல் என்னும் தீய செயலிலிருந்து காப்பாற்றி அதைத் தடுக்க கூடிய மற்றும் நற்செயல்கள் புரிபவர்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாகவும்.
நன்றி: சுவனத்தென்றல்.காம்

தேனை சூடாக்குவது அல்லது சமைப்பது பாதுகாப்பானதா?

நாம் சர்க்கரைக்கு மாற்றாக தேனைப் பயன்படுத்துகிறோம் , குறிப்பாக அதன் செழுமையான சுவை மற்றும் அமைப்புக்காக. ஆனால் தேனை சமைத்தால் அல்லத...

Popular Posts