லேபிள்கள்

வெள்ளி, 19 நவம்பர், 2010

‘சகுனம்’ ஓர் அலசல்!

மனித வரலாற்றில் சகுனம் தொடர்ந்தேர்ச்சியான ஒரு தொற்று நோயாகவே காணப்படுகின்றது. அதனை வைத்து சிலர் வயிறு வளர்ப்பதையும் நாட்டு நடப்புக்கள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன. அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த நவீன யுகத்திலும் படித்தவர்கள், பாமரர்கள் என வேறுபாடின்றி அனைவரும் சாத்தானிய சகுனத்தின் சாக்கடை வெள்ளத்தில் அடிபட்டுச் செல்பவர்களாகவே இருக்கின்றனர்.
எனவே எமது சமூகத்தின் நன்மை கருதி சகுனத்தின் உண்மை நிலைப்பாட்டையும், அதனால் ஏற்படும் தீமைகளையும் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். படித்து பயன் பெற வேண்டும் என்பதே எங்கள் அவா!
‘சகுனம்’ என்பதற்கு அரபியில் ‘ததய்யுர்’ எனப்படும். இது ‘தய்ர்’ எனும் பெயர்ச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். பறவைக்கு அரபியில் ‘தய்ர்’ என்பர்.
இதற்கான காரணத்தை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: -
அன்றைய அறியாமைக் கால மக்கள் ஒரு பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது பறவைகளை பறக்கச் செய்து அது பறக்கும் திசைக் கேற்ப அப்பிரயாணத்தின் முடிவைத் தீர்மானிப்பார்கள். அதாவது அப்பறவை வலப்புரம் பறந்தால் அதனை நற்சகுனமாகக் கருதி பிரயாணத்தைத் தொடர்பவர்களாகவும், அது இடப்புறம் பறந்தால் அது துர்ச்சகுனம் என்று ஆரம்பித்த பிரயாணத்தை நிறுத்தக் கூடியவர்களாகவும் இருந்தனர். எனவே அக்காலத்தில் பறவையை வைத்து சகுனம் பார்த்ததால் ‘ததய்யுர்’ என சகுனத்திற்கு பெயர் வந்தது.
இது அக்காலத்தில் வழக்கிலிருந்த சகுனமாகும். இன்று நமது நாட்டு மக்களைப் பொறுத்த வரை பல முறைகளில் சகுனம் பார்க்கிறார்கள். உதாரணமாக:
பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது, பூனை, வெற்றுக் குடம் சுமந்த பெண், விதவைப் பெண், கூன் குருடு போன்றோர் குறுக்கருத்தால் இதனை கெட்ட சகுனமாக கருதி ஆரம்பித்த பயணத்தை நிறுத்தி விடுதல்.
இராக் காலங்களில் யாராவது வீட்டில் ஆந்தை கத்தினால் இது கெட்ட சகுனம் எனக் கருதி அதனை விரட்டி விடுவார்கள். அதை விரட்டுவதற்கு அவர்கள் கையாளும் முறை அவர்களது நம்பிக்கையை விட அபத்தமாக இருக்கும். சிலர் ஆந்தையை விரட்ட எரியும் அடுப்பில் உப்பை போடுவார்கள். சிலர் எரியும் அடுப்பில் அடுப்பூதும் குழலை சூடேற்றுவார்கள் அப்படிச் செய்தால் அது பறந்து விடும் என்பது அவர்களது ஐதீகம்!
சிலர் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய நாடும்போது பல்லி கத்திவிட்டால் இவ்விடயத்தில் ஏதோ தீங்கு இருக்கின்றது எனக் கருதி அதை கைவிட்டு விடுவார்கள். அதனால் தான் தமிழில் கூட பல்லி கத்தும் என்று கூறாமல், பல்லி சொல்லும் என்பர். சகுனம் தமிழ் மொழியைக் கூட விட்டுவைக்கவில்லை!
  • சிலரது வீட்டில் பகற் நேரங்களில் தொடராக காகம் கறைந்தால் யாரோ வீட்டிற்கு விருந்தாளிகள் வரப் போகிறார்கள் என்று எண்ணுதல். காகம் கூடக் கறையக் கூடாதா?
  • வீட்டில் வளர்க்கும் புறா பறந்து சென்றுவிட்டால் பரக்கத்தும் பறந்து போய்விடும் என்று நினைத்தல்!
  • சிட்டுக் குருவி – ஊர்க் குருவி வீட்டில் கூடு கட்டினால் பரகத் கொட்டும் என எண்ணுதல்!
  • பயணத்தின் போது ட்ரஃபிக் சிக்னல் தொடராக மூன்றும் சிகப்பில் காணப்பட்டால் பிரயாணத்தில் தடை இருப்பதாக நினைத்தல்.
பார்த்தீர்களா நவீன கண்டு பிடிப்புகளைக் கூட மூட நம்பிக்கையினால் பினைத்துப் போடுகிறார்கள்!
  • வீட்டிலோ தொழில் நிறுவனங்களிலோ அசோக் மரம் நாட்டினால் துக்கம் சூழ்ந்து கொள்ளும் என நம்புதல். காரணம் அந்த மரத்தின் கிளைகள் எப்போதும் கீழ் நோக்கியே இருக்கும், அது சோகமாக காட்சி தருவது போன்று தெரிவதாக நினைத்து வீட்டிலும் சோகம் ஏற்படும் என்பது அவர்களது நம்பிக்கை!
  • சிலர் சில இலக்கங்களை ராசியான இலக்கங்களாகக் கருதுதல். உதாரணமாக: 13, 786 போன்றவற்றைக் கூறலாம்.
இப்படி நாட்டிற்க்கு ஏற்ப, இடத்திற்கு ஏற்ப, சமூகங்களுக்கு ஏற்ப சகுன முறைகளும், நம்பிக்கைகளும் வித்தியாசப்படுகின்றன. அதே போன்று சிலர் எந்த ஒன்றைச் செய்வதாக இருந்தாலும் நல்ல நேரம்இ சுப நேரம் பார்த்துத் தான் அதனை ஆரம்பிப்பார்கள்.
இந்துக்களால் வெளியிடப்படும் லீலா பஞ்சாங்க சித்திரக் கலண்டர், ராசி பலன் இவற்றையே நம்பி அவற்றில் மூழ்கி தமது வாழ்க்கையின் வளத்தை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது வெரும் காலத்தைக் கடத்தும் ஒரு செயல். மற்றும் வெறும் போலித்தனமான செயல் என்பதற்கு நாம் நாளாந்தம் காணும் செய்திகள் ஒரு எடுத்துக் காட்டாகும்.
உதாரணமாக, இருவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யும் போது ராசி பலன், ஜாதகப் பொருத்தம், சனி கிரகம், செவ்வாய் கிரகம் போன்றன இருக்கிறதா? என்றெல்லாம் பார்த்து, தோஷங்கள் இருந்தால் அவற்றிற்கு பரிகாரமெல்லாம் செய்து, பல நல்லோர்கள் என கருதப்படுபவர்களின் ஆசிர்வாதங்களோடு, கெட்டிமேளம் கொட்டி ஒரு திருமணம் சிறப்பாக நடந்தேரும். அடுத்த நாள் காலையில் தினப் பத்திரிக்கையைத் திறந்தால் நேற்று திருமண மண்டபத்திலிருந்து வீடு திரும்பிய புதுமணத் தம்பதிகள் வாகன விபத்தில் மரணம்! எனும் திடீர் தகவலை கொட்டெழுத்துக்களில் வெளியிட்டிருப்பார்கள். இது எதனைக் காட்டுகிறது. இது வரைக்கும் இவர்கள் செய்த சடங்கு சம்பிரதாயம், சகுனம் அனைத்தும் வெறும் போலி என்பதை இவர்கள் புரிந்து கொள்ளாத போது இறைவன் இப்படிச் சம்பவங்களை நிகழ்த்திக் காட்டுகிறான்.
இது இப்படியிருக்க காதலித்து கலப்பு திருமணம் செய்பவர்கள், ஓடிப் போய் பதிவுத் திருமணம் செய்து தம்பதியினராக வாழ்பவர்களுக்கு இந்த சடங்கு சமபிரதாயங்கள் பதில் கூறட்டும்.ஆக சகுனம் பார்த்தல், உலகில் மடமையை அதிகரிக்கச் செய்யும், மறுமையில் தண்டனையைத் தான் பெற்றுத் தரவல்லது. சுருங்கக் கூறின், சகுனம் இணைவைப்புக்கான வாயிலாகும்.
இமாம் இப்னுல் கையும் கூறுகிறார்கள்: -
‘சகுணமானது அதை நம்பக் கூடியவனையும் அதற்குப் பயப்படக் கூடியவனையும் தான் பாதிக்கும். ஆனால் யார் அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லையோ அவனை ஒரு பொழுதும் பாதிக்காது’.
சகுனம் பார்த்து தமது முன்னேற்றத்தைத் தடுத்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. வெறும் பித்தலாட்டம் மட்டும் தான்.
சகுனமாகக் கருதக் கூடிய ஒன்றைப் பார்க்க நேர்ந்தால் அல்லது கண்டால் என்ன கூற வேண்டும்?

(اللهم لا طير إلا طيرك ولا خير إلا خيرك ولا إله غيرك)

(اللهم لايأتي بالحسنات إلا أنت ولا يذهب بالسيئات إلا انت ولا حول ولا قوة إلا بك)

பொருள்: ‘இறைவா! உனது சகுனத்தைத் தவிர வேறு சகுனம் கிடையாது. உன நலவைத் தவிர வேறு நலவு கிடையாது. உன்னைத் தவிர வேறு நாயனில்லை’. (ஆதாரம்: அஹ்மத்).
மேலும் ‘இறைவா! உன்னைத் தவிர நன்மைகளைத் தருபவன் வேறுயாருமில்லை. தீமைகளைப் போக்குபவனும் உன்னைத் தவிர வேறு யாரும் கிடையாது. உன்னைத் தவிர வேறு எந்த சக்திகளும் எம்மைச் சூழ இல்லை’ என்று கூறுமாறு நபியவர்கள் எம்மைப் பணித்துள்ளார்கள்.
சகுனம் பற்றிய சட்டம்: -
சகுனத்தை மையமாகக் கொண்டு பிரயாணத்தை விடுவது பெரும் பாவமாகும் என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
‘சகுனம் பார்ப்பது இணைவைப்பாகும், சகுனம் பார்ப்பது இணைவைப்பாகும்’ என நபியவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரழி) கூறுகிறார்கள். (ஆதாரம்: திர்மிதி)
சகுனத்தை வெறுத்து ஒதுங்குவதனால் அது அவனை சுவனத்திற்கு இட்டுச் செல்லும் என்பது நபி மொழிகளில் இருந்து தெரிய வருகின்றது. நாளை மறுமையில் எந்த விதக் கேள்வி கணக்கோ, தண்டனையோ இன்றி சுவர்க்கம் நுழைபவர்கள் எழுபதுனாயிரம் பேர்களாவர். ‘அவர்கள் யாரென்றால், மந்திரிக்காதவர்கள், மந்திரிக்குமாறு யாரையும் பனிக்காதவர்கள், சகுனம் பார்க்காதவர்கள் மற்றும் அல்லாஹ்வையே (எப்போதும்) சார்ந்திருப்பவர்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
தாவுஸ் என்ற அறிஞர் தனது தோழருடன் ஒரு பிரயாணத்தில் இருக்கும் போது ஒரு காகம் கறைந்து கொண்டு அவர்களைக் கடந்து சென்றது. அதற்கு தோழர், நல்லது நடக்கட்டும் என்றார். இதனைக் கேட்ட தாவுஸ் அவர்கள்: அதனிடத்தில் என்ன நலவு இருக்கிறது! அல்லாஹ் மீது சத்தியமாகச் சொல்கிறேன் என்னுடன் பயணத்தைத் தொடரவேண்டாம் என்றார்கள்.
சகுனம் பார்ப்பதால் ஏற்படும் தீமைகள்: -
சகுனம் பார்ப்பதால் ஏராளமான தீமைகள் ஏற்படுகின்றன. அவற்றில் சிலதை மட்டும் இங்கு தருகிறோம்.
  • எமது இறை விசுவாசத்திற்கு நேர் எதிரானது
  • தவக்குல் எனும் அல்லாஹ்வைச் சார்ந்திருத்தலை தடுக்கின்றது
  • ஒரு நன்மையை தரவோ அல்லது ஒரு தீமையைத் தடுக்கவோ முடியாதது
  • சிந்திக்கும் திறன் இல்லாமைக்கு சான்றாக அமைகிறது
  • மனக் குழப்பத்தை தொடர்ந்தும் உண்டாக்கவல்லது
  • வாழ்க்கையில் தோழ்வியை தரக் கூடியது
  • அறியாமைக் கால மக்களின் பண்புகளில் ஒன்று
  • நன்மையோ, தீமையோ அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது எனும் விதியை நிராகரிக்க விடுக்கப்படும் ஒரு பகிரங்க அழைப்பு
  • நபிகளாரின் போதனைக்கு முரண்படுதல்
  • அடிப்படைகளற்ற விடயங்களை முற்படுத்தி அவற்றிற்கு அடிமைகளாக்குகின்றது!
  • சகுனம், சாத்திரம், சடங்கு, சம்பிரதாயம், ஜோதிடம், ராசி-பலன்… போன்ற மூட நம்பிக்கைகளில் தமது காலத்தை வீணடிக்கும் சமூகங்கள் இன்று வரைக்கும் முன்னேராமல் பின்தங்கியிருப்பதையும், இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளே தெரியாத மேற்கத்தியர் நன்றாக முன்னேறிக் கொண்டு செல்வதையும் பாருங்கள். இப்போதாவது சிந்திப்போமாக!
இது சகுனம் பற்றிய சுருக்கமான ஒரு அலசலாகும். இதன் பிறகும் கண்டதையெல்லாம் சகுனத்திற்கு உற்படுத்தி நம் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாமல் இத்தீமையிலிருந்து விலகி நடக்க வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் அருள்பாலிப்பானாக!


கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts