லேபிள்கள்

வியாழன், 13 ஜூன், 2024

குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா?


குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர் கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து வருகிறது.

இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் நீரிழிவு நோய், உயர் இரத்தஅழுத்த பிரச்சனை, அதிக கொழுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளின் உடல் பருமனை குறைக்க ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் கேடானதாகும். குழந்தைகளுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பதின்ம வயதுள்ளவர்கள் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தி வரும் நிலையில், இரவில் தாமதமாக உறங்கி வருகின்றனர்.

இதனால் உடல் பருமன் ஏற்படும். இரவில் உறங்கும் போதுதான் வளர்சிதை மாற்றம் ஏற்படும். இரவில் 7.30 மணிக்கு சாப்பிட வேண்டும்.

குழந்தைகளுக்கு நீர்ச்சத்துள்ள உணவுகளை வழங்குதல் மூலமாக அவர்களின் உடலில் நீர்சத்து இருக்கும். பகல் வேளைகளில் குளிர்பானம் குடிப்பதை தவிர்த்து, இயற்கை பழச்சாறு போன்றவை வழங்கலாம்.

வானவில் உணவு என்ற முறையில், பலவண்ணம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும். தினமும் பச்சைகாய்கறி சாப்பிடலாம்.

துரித உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள், நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை குறைந்தளவு கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது நல்லது. நொறுக்குத்தீனிகள் வேண்டும் என்றால் அதனை முறுக்கு, தட்டை என வீட்டில் தயார் செய்து கொடுக்கலாம்.

குழந்தை பருவத்திலேயே அவர்களை இயற்கை சார்ந்த மற்றும் வீட்டில் தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை கொடுத்து பழக்கப்படுத்திவிட்டால், வளரும் பருவத்தில் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும்.

குழந்தைகள் வீட்டிலேயே முடங்கி இருக்காமல், அவ்வப்போது வெளியே சென்று விளையாட அல்லது தாய்-தந்தையுடன் உடற்பயிற்சி செய்ய என அவர்களின் வாழ்க்கைமுறையை பயிற்றுவிக்க வேண்டும்.

சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவு பொருட்களில் தயார் செய்யப்படும் உணவு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.--

ஞாயிறு, 9 ஜூன், 2024

சமையல் எண்ணெய்களுக்கு எக்ஸ்பயரி தேதி உண்டா?"

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் சுந்தரம் என்ற வாசகர், " நாம் பயன்படுத்தும் எண்ணெய் பொருட்கள் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் கடுகு எண்ணெய் விளக்கெண்ணெய் போன்றவற்றிற்கு எக்ஸ்பயரி தேதி உண்டா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

சமையலில் முக்கியப்பொருள் எண்ணெய். எண்ணெய்யின் தன்மை பொறுத்து உணவின் சுவையே மாறும். ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் கிட்டத்தட்ட 40 கலோரிகள் வரை கொண்டது. நம் ஊர் சமையலில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் உள்ளிட்ட பலதரப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்துகிறோம். இவற்றை நம்முடைய தினசரி உணவில் சேர்த்துக்கொள்கிறோம். ஆனால், நாம் சமையலில் தினசரிப் பயன்படுத்தும் இந்த எண்ணெய்க்கு எக்ஸ்பயரி தேதி உண்டா என என்றைக்காவது யோசித்திருக்கிறோமா. நம் விகடன் வாசகர் ஒருவருக்கு அந்த சந்தேகம் எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

சமையல் எண்ணெய்

நம் வாசகரின் கேள்வியை 'தமிழ்நாடு ஆயில் அண்ட் சீட்ஸ் அசோசியேசனிடம்' முன்வைத்தோம். அவர்கள் கூறியதாவது, "மற்ற சமையல் பொருட்களைப் போல எண்ணெய்க்கும் எக்ஸ்பயரி தேதி உண்டு. பொதுவாக எண்ணெய் உற்பத்தி தேதியில் இருந்து 6 முதல் 9 மாதம் வரை நன்றாக இருக்கும். ஒரு வருட காலம் வரை கூடக் கெடாமல் இருக்கும். அது எண்ணெய்யின் வகை மற்றும் தன்மையைப் பொறுத்தது. நீங்கள் எண்ணெய் வாங்கும்போதே அந்த பாக்கெட்டின் பின்புறம் அதன் காலாவதித் தேதி போடப்பட்டிருக்கும். அதனைச் சரிபார்த்து வாங்க வேண்டும்.

எண்ணெய்க்கு நிறமும் மனமும் மிகவும் முக்கியம். நிறமும் அல்லது மனம் இரண்டில் ஏதாவது ஒன்றில் மாற்றம் தெரிந்தாலும் அந்த எண்ணெய் பயன்படுத்தத் தகுதியற்றது என அர்த்தம். அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது." என்று கூறினார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!

 சமையல் எண்ணெய்

மேலும், எண்ணெய்களை எப்படி வைத்திருக்கிறோம் என்பதும் முக்கியம். பெரும்பாலானோர் எண்ணெய் வைத்திருக்கும் பாட்டில்கள் அல்லது பாத்திரங்களைச் சரியாக மூடாமல் வைத்திருப்பார்கள். மேலும் சிலர், பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என நாம் சமைப்பதற்குப் பயன்படுத்தும் கேஸ் அடுப்புக்கு அருகிலேயே எண்ணெய்களை வைத்திருப்பார்கள். ஆனால், அப்படி வைத்திருக்கக் கூடாது. எண்ணெய் வைத்திருக்கும் பாட்டில்கள் அல்லது பாத்திரங்களைப் பயன்படுத்தி முடித்தவுடன் காற்றும் புகாத வகையில் மூடி வைக்க வேண்டும். அதோடு காற்றோட்டமான இடங்களிலும் எண்ணெய்யை வைக்க வேண்டும். நேரடியாகச் சூரிய ஒளியில் படும்படி அல்லது சூடான இடங்களிலோ எண்ணெய்யை வைத்திருக்கக் கூடாது. இவ்வாறு சரியான முறையில் வைத்திருந்தால், நீண்ட நாட்களுக்கு எண்ணெய்யை நம்மால் பயன்படுத்த முடியும்.


--

வியாழன், 6 ஜூன், 2024

வைட்டமின் டி மாத்திரைகளால் ஏற்படும் ஆபத்து.

இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமானோருக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. உலகெங்கிலும் இதே நிலை தான்.

வைட்டமின் டி குறைபாடு காரணமாக எலும்புகள் பலவீனமடைதல், மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தசை வலி ஆகியவை ஏற்படும் என்பதோடு, கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான நோய்களும் ஏற்படலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிகின்றனர். எனவே, உடலில் வைட்டமின் டி குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதனால், விட்டமின் டி (Vitamin D) குறைபாட்டை போக்க மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வைட்டமின் டி இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உடலில் வைட்டமின் டி அளவு 30 முதல் 60 ng/ml வரை இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது தீவிர உடல் பிரச்சனையாக மாறும். வைட்டமின் டி குறைபாட்டால் (Vitamin D Deficiency) ஏற்படும் பாதிப்பை பற்றி மருத்துவர்களிடம் பலமுறை கேட்டிருப்பீர்கள். ஆனால் உடலில் வைட்டமின் டி அளவு அதிகமாக இருந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை டாக்டர் ரேணு சாவ்லா தெரிவித்தார்.

வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் சோர்வு:

வைட்டமின் டி நம் உணவில் இருக்கும் கால்சியத்தை உடல் கிரகித்து கொள்ள உதவுகிறது. உடலுக்கு 8.5 முதல் 10.8 mg/dL கால்சியம் மட்டுமே தேவை. கால்சியம் அதிகமானால், நமது செரிமான அமைப்பு பாதிக்கப்படும். வயிற்றில் வலி, மலச்சிக்கல், சோர்வு போன்றவை ஏற்படும். அதிக அளவில் சிறுநீர் கழித்தல், பசியின்மை, சிறுநீரக கற்கள், உயர் இரத்த அழுத்தம், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் இதயம் தொடர்பான நோய்களூம் ஏற்படும். அதிகப்படியான கால்சியம் வாழ்க்கையை பாதிக்கலாம்.

மனச்சோர்வு மற்றும் மன நோய்:

உடலில் வைட்டமின் டி அதிகமாக இருப்பதால், கால்சியமும் அதிகமாக உள்ளது. இது மூளையின் செயல்பாட்டை பாதிக்கிறது. மனச்சோர்வு, குழப்பம் மற்றும் மனநோய் போன்றவை ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. வழக்கத்திற்கு மாறாக மன உளைச்சல் இருந்தாலோ, தேவையில்லாத கலக்க ஏற்பட்டாலோ, அல்லது சிறிய விஷயம் கூட உங்களை மனச்சோர்வடையச் செய்து குழப்பத்தில் ஆழ்த்தினாலோ, உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுகி பரிசோதித்து, விட்டமின் டி அதிகம் உள்ளதா என்பதை அறிய வேண்டும்.

சிறுநீரக செயலிழப்பு:

அதிகப்படியான வைட்டமின் டி காரணமாக, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுவதால், உடலில் நீர் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. சிறுநீரகத்தில் இருக்கும் இரத்த நாளங்கள் சுருங்கி, சிறுநீரகத்தின் செயல்பாடும் பாதிக்கப்படும்.

பசியின்மை மற்றும் வாந்தி:

வைட்டமின் டி அளவு அதிகமாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். பசியின்மை ஏற்படுவதோடு, வாந்தி, மயக்கம் வருவது போன்ற உணர்வும் பல சமயங்களில் ஏற்படும்.--

திங்கள், 3 ஜூன், 2024

காஃபி பழக்கத்தை கைவிட நினைக்திறீர்களா? உங்களுக்கான 5 ஆரோக்கியமான மாற்று பானங்கள்.

காஃபி சிலரை அடிமையாக்கிவிடும்.

அது சிலருக்கு உடல் நல பாதிப்புகளையும் உண்டாக்கலாம். கஃபைன் அதிகரிக்கும்போது உண்டாகும் பக்கவிளைவுகள் ஏராளம் உள்ளன. அதுமட்டுமன்றி சிலர் உடல் எடையை குறைக்க வேண்டி காஃபி பழக்கத்தை கைவிட நினைக்கலாம். உங்களுடைய காரணம் எதுவாக இருந்தாலும் காஃபி பழக்கத்தை கைவிட இந்த 5 பானங்கள் உதவலாம். டிரை பண்ணி பாருங்க.

ஆப்பிள் சைடர் வினிகர் : ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு குறைந்த கலோரி பானம். இது எடையைக் குறைக்கவும் உதவும். இது சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும். இதில் அசிட்டிக் அமிலம் என்ற கலவை உள்ளது கூடுதல் சிறப்பு. வெதுவெதுப்பான ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மெதுவாக பருகவும். பானத்தை இனிமையாக்க ½ தேக்கரண்டி தேனையும் சேர்க்கலாம்.

மட்சா டீ : இதுதான் இப்போது ஃபிட்னஸ் பிரியர்களின் டிரெண்டாக உள்ளது. மட்சா டீ என்பது ஒரு பச்சை நிற பானமாகும். ஜப்பானியர்களின் ஆரோக்கிய ரகசியத்திற்கு காரணம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. மட்சா டீயில் காஃபின் உள்ளது. ஆனால் காபி அளவுக்கு இல்லை. இது ஒரு வேர் செடியாகும். வெந்நீரில் 1-2 டீஸ்பூன் மட்சா பவுடரை கலந்து நன்றாக கிளறி குடிக்க வேண்டும்.

ஹாட் சாக்லெட் : குளிர்கால இரவில் சூடான ஒரு கப் ஹாட் சாக்லேட் பானம் என்றால் யார்தான் விரும்ப மாட்டார்கள்? கோகோ மற்றும் பால் கலவையான இது காஃபின் இல்லாத மாற்றாகும். சூடான சாக்லேட் காபிக்கு உங்கள் காலையையும் சுருசுருப்பாக மாற்றும்.

ஸ்மூதி : ஸ்மூத்தி என்பது ஒரு முழுமையான உணவு போன்றது. இரவு அதிகமாக உணவு சாப்பிட விரும்பவில்லை எனில் ஒரு கிளாஸ் ஸ்மூத்தி சாப்பிடுங்கள். உங்கள் விருப்பம்போல் பால் அல்லது தயிர் கலந்து ஸ்மூத்திகளை செய்யலாம். பால், வாழைப்பழம் மற்றும் பீனட் பட்டர் ஆகியவற்றின் கலவை குடித்தால் கூடுதல் ஆற்றல் கிடைக்கும் , இதனால் நீங்கள் நீண்ட நேரம் உற்சாகமாக இருப்பீர்கள். ஸ்மூத்தியில் பெர்ரி, ஆப்பிள் அல்லது உங்களுக்குப் பிடித்த பழங்களையும் சேர்க்கலாம்.

மஞ்சள் பால் : மஞ்சள் பால் என்பது ஒரு பாரம்பரிய இந்திய பானமாகும். இது உடனடி ஆற்றலை வழங்க பயன்படுகிறது. இது உங்களை மேலும் நீண்ட நேரம் ஆற்றலுடன் வைக்க உதவுகிறது. இதில் பயன்படுத்தப்படும் மஞ்சள் அற்புதமான ஆக்ஸிஜனேற்றியாகும். மஞ்சள் பாலை இரவில் உட்கொள்வதால் கூடுதல் நன்மை கிடைக்கும். ஏனெனில் இது செரிமானம் மற்றும் உடலின் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. பாலில் இலவங்கப்பட்டை, இஞ்சி, வெல்லம் மற்றும் கருப்பு மிளகுத் தூள் கூட சேர்க்கலாம், சுவையாகவும் இருக்கும்.--

புதன், 29 மே, 2024

காய்ச்சல் பற்றி அறிவோமா!

காய்ச்சலில் பல வகைகள் உள்ளன. சாதாரண காய்ச்சல், தொடர் காய்ச்சல், விட்டுவிட்டு வரும் காய்ச்சல், காய்ச்சல் அதிகமாகி குறைதல் ஆகியவை காய்ச்சலின் வகைகளுள் சிலவாகும்.

காற்று மூலம் பரவக்கூடிய சாதாரண காய்ச்சலுக்கு இன்புளூயென்சா என்று பெயர். பாக்டீரியா தொற்றின் காரணமாக மார்பு சளி, உடலில் சீழுடன் கட்டி ஆகியவை காரணமாக தொடர் காய்ச்சல் ஏற்படலாம். கொசு காரணமாக மலேரியா, டெங்கு, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோயின் அறிகுறியான கால்வீக்கத்துடன் கூடிய காய்ச்சல் ஆகியவை கொசுக்களில் பரவுகின்றன.

நோய்க்கிருமி உடலில் நுழைந்து பெருகி ரத்தத்தில் கலக்கும்போதுதான் வெளிப்பொருள் உடலில் இருப்பதற்கான அறிகுறியாக காய்ச்சல் ஏற்படுகிறது.

இன்புளூயன்சா:

இது சாதாரண காய்ச்சல், காய்ச்சல் உள்ள ஒருவர் தும்மும்போது அவருக்கு அருகில் ஆரோக்கியமாக உள்ளவருக்கு காற்றுமூலம் இக்காய்ச்சலுக்கான கிருமி உட்சென்று பரவுகிறது.

இக்காய்ச்சல் வரும்போது மூக்கிலும், கண்ணிலும் நீர் வடியும். உடல் வெப்பம் 104 டிகிரி வரை செல்லும். நோயாளியால் நோயின்போது இயல்பாக இருக்க முடியாது.

மலேரியா காய்ச்சல்:

சுத்தமற்ற தண்ணீரினால்தான் மலேரியாவைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. கிராமப் புறங்களில் வயல் வெளிகளில் தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன. நகர்ப்புறங்களில் நீர்த்தொட்டிகளில் உள்ள தண்ணீரில் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன.

அறிகுறி:

மலேரியா காய்ச்சல் மூன்று கட்டங்களாகக் கடுமையாகும். சில மணிநேரம் இடைவெளிக்குள் இந்த மூன்று கட்டங்களும் உடலில் வெளிப்படும். முதல் கட்டத்தில் லேசான குளிர்மட்டும் இருக்கும். காய்ச்சல் இருக்காது. இரண்டாவது கட்டத்தில் சட்டையை கழற்றி எறியும் அளவிற்குக் காய்ச்சல் இருக்கும். உடனடியாகக் காய்ச்சல் சிறிது இறங்கி வியர்வை வரும். மூன்றாவது கட்டத்தில் உடலில் நடுக்கம் ஏற்படும்.

போர்வையை உடல் முழுவதும் போர்த்திக் கொள் ளும் அளவுக்கு உடல் நடுக்கம் ஏற்படும். அத்துடன் விட்டு விட்டுக் காய்ச்சல், தலை வலி, குமட்டல், உடல்வலி, பசியின்மை ஆகியவை இருக்கும்.

டைபாய்டு:

இது ஒரு பாக்டீரியா காய்ச்சல். சுத்தமற்ற உணவை சாப்பிடுவதால் வரு கிறது. இந்நோய்க்கிருமி குடலில் தங்கி பல்கிப்பெருகி நச்சுத் தன்மை மிக்க திரவம் உற்பத்தியாகிறது. இத்திரவம் ரத்த்தில் கலப்பதால்தான் பாதிக்கப்பட்டவருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் காய்ச்சல் தொடர்ந்து இருக்கும். மூச்சுக்காற்று சூடாக இருக்கும். சில சமயம் காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கும் இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் சோப்பு போட்டு கைகழுவ வேண்டும்.

தேவையான மூலிகைகள்:

வேப்பிலை, கண்டங்கத்திரி, கீழாநெல்லி, வில்வம் ஆகியவற்றை பொடி செய்து பின் சமஅளவு ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதிலிருந்து ஒன்றரை ஸ்பூன் எடுத்து காலை, பகல், மாலை, இரவு ஆகிய நான்கு வேளைகளும் சாதாரண நீரில் கலந்து உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பாக சுமார் பதினைந்து நாட்கள் முதல் ஒரு மாதம்வரை தொடர்ந்து உண்ண வேண்டும்.

சுமார் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் அனைத்து விதமான காய்ச்சலும் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். தீராத பட்சத்தில் மூலிகை மருத்துவரின் ஆலோசனையை நாடவும்.--

ஞாயிறு, 26 மே, 2024

அல்சர் இருப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.

அல்சர் இருப்பவர்களுக்கு குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம். ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம். வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம். சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

சேர்க்கவேண்டியவை: கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு. தவிர்க்க வேண்டியவை: அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.--

வியாழன், 23 மே, 2024

தயிர் மற்றும் யோகர்ட் என்ன வித்தியாசம்? எது ஆரோக்கியமானது?

தயிர் மற்றும் யோகர்ட் இடையே உண்மையான வேறுபாடு உள்ளதா அல்லது இரண்டும் ஒன்றா? நமது அன்றாட உணவின் ஒரு பகுதியாக இருக்கும் மிகவும் ஒத்த அதேநேரம்' வேறுபட்ட பால் சார்ந்த இரண்டு தயாரிப்புகளைப் பற்றிய ஒரு சிறிய விவரம் இங்கே.

தயிர் , யோகர்ட் என்ன வித்தியாசம்?

தயிர் மற்றும் யோகர்ட் இரண்டும்' தோற்றத்தில் ஒரே மாதிரியானவை, ஆனால் அவற்றின் சுவை, அமைப்பு மற்றும் தயாரிப்பில் ஒரு தனித்துவமான வேறுபாடு உள்ளது.

தயிர் பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் உட்கொள்ளப்படுகிறது. இது சில பழைய தயிர் அல்லது எலுமிச்சை சாற்றை' சூடான பாலுடன் சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இப்படி செய்வதால், புரோபயாடிக் பாக்டீரியாத் தூண்டப்பட்டு, தயிர் உருவாகும்.

மறுபுறம், யோகர்ட்' பொதுவாக வணிக ரீதியாக தயாரிக்கப்படுகிறது. இது பாலை' செயற்கை அமிலங்களுடன் புளிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. மேலும் சரியான சுவை மற்றும் மென்மையான அமைப்பைப் பெறுவதற்கு உகந்த வெப்பநிலை தேவைப்படுகிறது.

தயிர் மற்றும் யோகர்ட் இரண்டிலும் புரோபயாடிக் பாக்டீரியாக்கள் இருந்தாலும், யோகர்ட்டில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு' தயிருடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. அதற்கு தயாரிக்கும் முறைதான் காரணம்.

மறுபுறம், தயிரில் ஒப்பீட்டளவில் குறைவான அளவு பாக்டீரியாக்கள் உள்ளன.

உதாரணமாக, ஒரு மீடியம் சைஸ் கிண்ணத்தில் இருக்கும் தயிரில்' தோராயமாக 3-4 கிராம் புரதம் உள்ளது. ஆனால் அதே அளவு யோகர்ட்டில்' தோராயமாக 8-10 கிராம் உள்ளது.

எது ஆரோக்கியமானது ?

உடலை குளிர்விப்பதில் செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை, இந்திய உணவு வகைகளில் தயிர் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இதில் சரியான அளவு பால் கொழுப்புகள், புரதம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது, இது எலும்புகள், பற்கள் மற்றும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

மறுபுறம், யோகர்ட்' ஆரோக்கியமான புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளது. உண்மையில், யோகர்ட்டில் பல வகைகள் உள்ளன. அதில் சில வகைகளில் இருமடங்கு புரதம் உள்ளது, இது வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டுவலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது.--

ஞாயிறு, 19 மே, 2024

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை தழுவும்.

இன்னும் சிலர் புரண்டு புரண்டு படுத்து தான் தூக்கத்தை வரவ ழைத்து கொள்வார்கள்.இன்னும் சிலர் உண்டு. அவர்கள் தலைகீழாக நின்று குட்டிகரணம் போட்டாலும் கூட தூக்கம் வருவது பெரிய பாடாகவே இருக்கும். இதெல்லாம் இன்றைய காலத்தின் கொடுமை என்று கூட சொல்லலாம்.

தூக்கத்தின் நிலையை மூன்றாக பிரித்துவைத்திருக்கிறார்கள் ஒன்று மந்தமான தூக்கம். சின்ன சத்தம் கேட்டால் கூட விழித்துவிடுவார்கள். இரண்டாவது கும்பகர்ணன் தூக்கம் என்று சொல்லகூடிய அளவு இடியே விழுந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் விழிப்பு வராது. இவர்களை தட்டிஉலுக்கி எழுப்பினாலும் அந்த கலக்கத்திலிருந்து வெளியே வர அதிக நேரம் பிடிக்கும். மூன்றாவது நிலை தூக்கமானது ஆழமான தூக்கத்தில் இருந்தாலும் சிறு அசைவு அல்லது எழுப்பினால் உடனடியாக எழுந்துவிடுவது. இதில் நீங்கள் எந்த ரகம் என்பது உங்களுக்கு தெரியும்.

தினமும் வாடிக்கையாக அதிக நேரம் பகல் தூக்கம் என்பது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடிய ஒரு விஷயமாகும். பகல் முழுவதும் உடல் உறுப்புகள் உற்சாகமாக செயல்பட்டு கொண்டிருக்கும். இப்படி இருக்கும் பொழுது திடீரென உடலுக்கு ஓய்வு அளிக்கும் பொழுது உடலானது குழம்பிப் போய்விடும். இந்த குழப்ப நிலை புற்று நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுத்து விடும். - இதைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆய்வாளர்களுக்கு மற்றவர்களை விட வயது முதிர்ந்தவர்கள் பகல் நேர தூக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கருத்து கூறியுள்ளனர். பகல் நேர தூக்கத்தை விட தூக்கமின்மை பிரச்சனை 2.3% அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இரவில் சரியான தூக்கமும், பகலில் சரியான உடல் உழைப்பும் இருப்பவர்களுக்கு தேவையற்ற நோய்களும் அவ்வளவு சீக்கிரம் நெருங்குவதில்லை. மதிய உணவை சாப்பிட்ட உடன் பலருக்கு தூக்கம் வருவது உண்டு. இதனை உண்ட மயக்கமா? என்று கிண்டல் செய்வது உண்டு. இப்படி சாப்பிட்டவுடன் படுத்து உறங்குபவர்களுக்கு உடல் எடை கணிசமாக உயர்ந்து விடுகிறது. இதனால் நீரிழிவு, இதயநோய் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பகலில் அதிக நேரம் தூங்குபவர்களுக்கு, இரவில் சரியான தூக்கம் வருவது இல்லை. இப்படி மாறுபட்ட முறையில் தூக்கம் என்கிற நிகழ்வு நிகழ்வதால் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது எனவே ஆரோக்கியமான உணவு முறை பழக்கத்தையும், தூங்கும் முறையையும் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக 45 வயதை கடந்தவர்கள் பகலில் அதிக நேரம் உறங்குவதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.--

வியாழன், 16 மே, 2024

பெண்கள் சமையலறையில் கேஸ் அடுப்பு பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

கேஸ் அடுப்பை பயன் படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமானது. கேஸ் அடுப்பை கையாளும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி 4 டிப்ஸ் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

காலையில் எழுந்ததும் நாம் செய்யும் முதல் வேலை அடுப்பை பற்ற வைத்து பால் காய்ச்சுவது. இப்போது, கிராமத்தில் கூட அதிக அளவில், விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு, பயன்பாடு குறைய துவங்கியுள்ளது. பொங்கல் திருவிழா காலங்களில் மட்டுமே விறகு அடுப்பு பயன்பாட்டில் உள்ளது. அதிக அளவிலான வீட்டில் கேஸ் அடுப்புகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. மற்றவை மலையேறிவிட்டன என்று தான் சொல்ல முடியும். ஏனெனில், கேஸ் அடுப்புகள் உபயோகப்படுத்துவது எளிதானது, விரைவாக சமைக்க முடியும் என பல நன்மைகள் இதில் இருக்கின்றன.

குறிப்பாக, காலையில் எழுந்து ஆஃபீஸ் ஃபோன் கால்ஸ், குழந்தைகள், குடும்ப வேலை இடையே சமையலறை என பிஸியாக இருக்கும் பெண்கள், கேஸ் அடுப்பை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமானது. நம்மை அறியாமல் செய்யும் தவறுகளால் விபத்துகள் நேரும் வாய்ப்புகள் உள்ளன. கேஸ் அடுப்பை கையாளும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்களைப் பற்றி கீழே பார்ப்போம்.

1. சிறு தீயில் வைப்பது:

கேஸ் அடுப்பின் தீயை அதிகம், மிதமானது, குறைவானது என நமது தேவைக்கேற்ப வைத்து கொள்ளலாம். சமைக்கும்போது, தேவை ஏற்பட்டால் தவிர, மற்ற நேரங்களில் குறைவான தீயில் சமைப்பதையே பின்பற்றுங்கள். அடுப்பை 'ஆன்' செய்துவிட்டு, லைட்டர் அல்லது பர்னரை உடனே பற்ற வைக்க வேண்டும். ஒருவேளை பற்றவில்லை என்றால் தொடர்ந்து பற்ற வைக்க வேண்டாம் உடனே உடனே அதை அணைத்து விட்டு, சிறிது நேரம் கழித்து ஆன் செய்து பற்ற வைப்பது பாதுகாப்பானது.

2. சுத்தம் முக்கியமானது:

சமைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு அடுப்பையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பதும் முக்கியமானது. தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒரு முறையோ அடுப்பை சுத்தம் செய்வதற்கு மறவாதீர்கள். அடுப்பின் மீது எண்ணெய் கறை இருந்தால், எலுமிச்சம்பழச்சாறு, பேக்கிங் சோடா கொண்டு சுத்தம் செய்யுங்கள். இல்லையெனில் சுத்தம் செய்வதற்காகவே சந்தைகளில் கிடைக்கும் பிரத்யேகமான திரவங்களைப் பயன்படுத்தலாம்.

3. அதிக கவனம் தேவை:

கேஸ் அடுப்பில் சமையல் செய்யும்போது கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும்போது தவிர்க்க முடியாத காரணங்களால், அங்கிருந்து நகர்வதற்கு நேரிட்டால், அடுப்பை அணைத்துவிட்டோ அல்லது குறைவான தீயில் வைத்துவிட்டோ செல்லலாம். எண்ணெய், தண்ணீர் உபயோகிக்கும்போதும் கவனமாக இருங்கள். அடுப்பைச் சுற்றி எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வைப்பதை தவிர்க்கவும். குளிர்சாதனப்பெட்டியை முடிந்த அளவிற்கு சமையல் அறையில் இருந்து வெளியே வைப்பது சிறந்தது.

4. நவீன காலத்து ஸ்மோக் அலாரம்:

சமைப்பதற்குத் தேவையான பொருட்கள், சமையல் அறை சாதனங்கள் போன்றவற்றைத் தவிர, சில அத்தியாவசியமான பொருட்களும் சமையல் அறையில் இருப்பது அவசியம். தீப்பிடிக்கும் அபாயம் ஏற்பட்டாலோ அல்லது தீப்பிடித்தாலோ, சத்தம் எழுப்பும் 'ஸ்மோக் அலாரம்' எனப்படும் கருவியை சமையல் அறையில் பொருத்துவது உதவி கரமானதாக இருக்கும். தற்போது பெரும்பாலான நவீன சமையல் அறையில் இது பொருத்தப்படுகிறது.

அடுத்ததாக சமையல் அறையில் அவசியமாக இருக்க வேண்டியது 'சிம்னி'. அடுப்பிற்கு ஏற்றவாறு சரியான சிம்னியை தேர்ந்தெடுக்க வேண்டும். இது புகை வெளியே போவதற்கு மட்டுமல்லாமல், சமைக்கும்போது வெளியாகும் எண்ணெய் பிசுக்கு சுவரில் படிவதையும் தடுக்கும்.--

குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா?

குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர் கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து...

Popular Posts