லேபிள்கள்

புதன், 29 நவம்பர், 2017

குடும்பச் சொத்து பத்திரம் செய்வது பற்றிய சட்டம்

குடும்பச் சொத்து பத்திரம் செய்வது பற்றிய சட்டம்
பாகப்பிரிவினை..!
''தந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை. அதாவது, குடும்பச் சொத்து உடன்படிக்கை பத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகப் பிரித்துக்கொள்ள முடியும். பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாகப் பிரிக்கப்படாதபட்சத்தில் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஆட்சேபனை இருந்தால் பாகப்பிரிவினையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
ஒருவருக்கு நான்கு வாரிசுகள் இருந்து, அதில் மூன்று வாரிசுகளுக்கு மட்டும் பாகம் பிரிக்கப்பட்டு, ஒரு வாரிசுக்கு மட்டும் பாகம் கிடைக்கபெறாமல் இருந்தால், அந்தப் பாகப்பிரிவினை செல்லாது என அவர் நீதிமன்றத்தை நாடலாம்.



தான பத்திரம்..!
சொத்து உரிமை மாற்றம் செய்து தருவதில் உள்ள ஒருமுறை, தான பத்திரம் மூலம் வழங்குவது. குறிப்பாக, நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்துகொள்ளும்போது இந்த முறையைக் கையாளலாம்.
ஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண்டு சொத்து உரிமை மாற்றம் செய்கிறபோது, அதை சொத்து விற்பனை என்று குறிப்பிடுகிறோம். இதுவே, தான பத்திரம் மூலம் மாற்றும்போது விற்பனை என்று ஆகாது. அதாவது, சகோதரர் தனது சகோதரிக்கு சொத்தை தானமாக வழங்கலாம். சொத்தை தானமாக வாங்கியவர் அதை தனது கணவருக்கு தானமாகக் கொடுக்கலாம். இப்படி செய்வதன் மூலம் முத்திரைத்தாள் கட்டணம் இல்லாமல் உரிமை மாற்றம் செய்துகொள்ளலாம்.

ஆனால், தான பத்திரம் பதிவதற்கான கட்டணம் சொத்து வழிகாட்டி மதிப்பில் 1 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய். இதுதவிர, பதிவு கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டும்.

உயில்..!
இது விருப்ப ஆவணம்; சொத்தை தனிப்பட்ட முறையில், தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதித்தரும் முறைதான் உயில் எனப்படும். ஒருவர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்துக்களை தனது இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபருக்கு சிக்கல் இல்லாமல் போய்சேர வேண்டும் என்பதற்காக தனது சுயநினைவோடு எழுதித் தருவது. ஆனால், பூர்வீகச் சொத்தை உயிலாக எழுத முடியாது.

தனிப்பட்ட சொத்தை தனது வாரிசுகளுக்குத் தான் உயில் எழுதவேண்டும் என்கிற கட்டாய மில்லை. ரத்த உறவு அல்லாத மூன்றாம் நபர்களுக்கோ, அறக்கட்டளைகளுக்கோ உயிலாக எழுதித் தரமுடியும். அதேநேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு சொத்து சேர்ந்துவிடும்.

மனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் எழுதப்பட்ட உயில் செல்லாது. மேலும், மைனர் மீது உயில் எழுதப்படுமாயின் அதற்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

பெண்களுக்கான சொத்துரிமை!
பெற்றோர்கள் வழிவரும் பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது. ஒருவேளை பெண் வாரிசுகள் தங்களுக்கு சொத்தில் பங்கு தேவையில்லை என்கிறபட்சத்தில், அதை இதர வாரிசுகள் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், திருமணமான பெண்களுக்கான சொத்து உரிமையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

2005-ம் ஆண்டு சட்ட திருத்தத்தின்படி, பெண்கள் தனது தந்தையின் காலத்திற்குப் பிறகு அவரது பூர்வீகச் சொத்தில் உரிமை கோரமுடியும். மேலும், 25.3.1989-க்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஓர் இந்துப் பெண் பூர்வீகச் சொத்தில் உரிமை கோர முடியாது. ஆனால், அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் உரிமை கோரமுடியும். அதேவேளையில், சொத்து 25.3.89-க்கு முன்னர் பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால், பாகப்பிரிவினை கோர முடியாது. ஒருவேளை அந்த சொத்து விற்கப்படாமல் அல்லது பாகம் பிரிக்கப்படாமல் இருந்தால் உரிமை கோர முடியும்.

வாரிசுச் சான்றிதழ்..!
வங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்திருந்து எதிர்பாராமல் இறக்கும் பட்சத்தில் நாமினிகளிடத்தில் இந்த சொத்துக்கள் ஒப்படைக்கப்படும். ஆனால், நாமினி இல்லாதபட்சத்திலோ அல்லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும்பட்சத்திலோ வாரிசுச் சான்றிதழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் சொத்துக்கள் ஒப்படைக்கப்படும்.

பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்கப்படும் பாகப்பிரிவினை செல்லாது. நீதிமன்றத்தில் இதை மறைத்து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரியவரும்போது அந்த தீர்வு ரத்து செய்யப்படும்.

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்கவில்லை. இதனால் இரண்டாவது மனைவிக்கு கணவனது சொத்தில் உரிமையில்லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும்''
பொதுவாக, சொத்து பாகப்பிரிவினையில் இதுபோன்று பல அடிப்படை விஷயங்களை கவனித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளை கையாள முடியும். வழக்கு நீதிமன்றம் என இழுத்தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்துகொள்ளலாம்
http://pettagum.blogspot.com/2016/01/blog-post_96.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 27 நவம்பர், 2017

குழந்தையின் மனத்துக்குப் பிடித்த உணவுகள்!

குழந்தையின் மனத்துக்குப் பிடித்த உணவுகள்!
 குழந்தையின் முதல் வருடம் முடித்ததும் குழந்தையுடைய உணவு பழக்கம், வளர்ச்சி முறை ஆகியவற்றில் பெரிய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்து விடும். 1-3 வயதில் வளர்ச்சி ஒரு வயதிற்குள் இருந்ததை விட குறைவாக இருக்கும். பசியும் குறைவாக இருக்கும். பற்களின் வளர்ச்சியும் ஓரளவு முழுமையாக இருப்பதால் எல்லா உணவுகளையும் சாப்பிட முடிகிறது. இந்த வயதில் மூளை வளர்ச்சி முழுமை அடைவதால் குழந்தைகளுக்கு பருப்பு, நெய், பால், முட்டை போன்ற உணவுகளை தினந்தோறும் கொடுக்க வேண்டும்.

3-4 வயது குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்று தாய்மார்கள் மிகவும் கவலைப்படுவார்கள். இந்த வயதில் வளர்ச்சி குறைவாக இருப்பதால், உணவின் தேவையும் மிதமாகத்தான் இருக்கும். அதனால் அதற்காக கவலைப்படத் தேவையில்லை. குழந்தையின் பசியை அறிந்து உணவளிக்க வேண்டும். பசி இல்லாத போது உணவைத் திணிப்பது ஒரு நாகரீகமான செயலும் அல்ல. நல்ல பழக்க வழக்கமும் இல்லை.
7-9 வயது வரை குழந்தைகளுக்கு மேலும் உணவு பழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகள் இதுவரை பெற்றோர்கள் சமைத்ததை குறை கூறாமல் உட்கொண்டவர்கள் இனி தானே சொந்தமாக தேர்ந்தெடுத்து விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் பருவம் இது.
பள்ளி பருவத்தில் சத்தான உணவு மட்டுமல்ல,  நல்ல உணவு பழக்கத்தை வலியுறுத்துவது பெற்றோர்களின் கடமையாகும். நிதானமாக மென்று சாப்பிட கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தையா இருக்கும் பொழுது அதிக உடல் பருமன் ஏற்பட்டால் 80% சதவிகிதம் வரை இவர்கள் வளர்ந்த பிறகு அந்த உடல் பருமன் பிரச்னை நீடிக்கும். நிறைய நொறுக்குத் தீனிகளை வீட்டில் சேமித்து வைக்காதீர்கள். மதிய அல்லது இரவு நேர வேளைக்குப் பிறகு குழந்தைகளுக்கு பழங்களை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு பழக்கி வந்தால் இடையில் நொறுக்குத் தீனிகளை குழந்தைகள் அதிகம் விரும்பி உட்கொள்ளமாட்டார்கள்.
"குழந்தைகள் சாதம் என்றால் சாப்பிட மாட்டேன் என்கிறார்கள். இதுவே சிற்றுண்டி என்றால் சாப்பிட விரும்புகிறார்கள். வளரும் குழந்தைகள் சாதம் சாப்பிட வேண்டாமா என்று நிறைய தாய்மார்கள் கேட்பார்கள். சாதம் தான் சாப்பிடவேண்டும் என்று எந்த விதிமுறையும் கிடையாது. இட்லி. தோசை, சப்பாத்தி இவற்றுள் எவையேனும் ஒன்றை குழந்தைகள் விருப்பப்பட்டால்  தாய்மார்கள் அவற்றை செய்து கொடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால் புளிக்க வைத்த மாவினால் செய்யும் இட்லி தோசையில் (fermented batter) சாதத்தை விட அதிக சத்து உள்ளது. ஆனால் நிறைய காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
போர் அடிக்கிற மாதிரி வாரத்திற்கு அதே காய்கறிகளை ரிபீட் செய்யக் கூடாது. சில குழந்தைகளுக்கு அடிக்கடி பசிக்கும். ஒரே வேளையில் எல்லா உணவுகளையும் திணித்து சாப்பிடு என்று வலியுறுத்தக் கூடாது.
அதிக பருமனுடைய குழந்தைகளுக்கு தாய்மார்கள் எந்த உணவை நீக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு தாய் ஒரு முறை என்னிடம் பள்ளிக்கு செல்லும் தன் 8 வயது குழந்தை அதிக உடல் பருமனுடையவனாக இருப்பதால் மற்ற குழந்தைகள் கேலி செய்கிறார்கள். இதனால் பால் கொடுப்பதை நிறுத்தி விட்டேன். பழச்சாறுதான் இரண்டு முறை கொடுக்கிறேன் என்று கூறினார்.
இந்த மாதிரி பால் கொடுப்பதை நிறுத்துவது உடலுக்கு நல்லது அல்ல. மற்றொரு விஷயம் பழச் சாறுகளில் உடல் பருமனை குறைக்கும் நார்சத்து வெளியேற்றப்படுகிறது. சர்க்கரை சேர்த்து உட்கொள்ளும் போது ஒரு நாளைக்கு ஏறக்குறைய 20 கலோரி வரை எடையைக் கூட்டும். அதனால் உணவுகளின் தன்மையை அறிந்து உணவுகளை அளிக்க வேண்டும்.
குழந்தைகளை சாப்பிடும் போது அவசரப்படுத்துதல் கூடாது. சீக்கிரம் சாப்பிட்டு எழுந்திரு பள்ளிக்கு நேரமாச்சு, இல்லை டியூஷனுக்கு போகணும் என்று அடுத்தடுத்து வேலைகளை கொடுத்து குழந்தையை அவசரப்படுத்தக் கூடாது. நிதானமாக சாப்பிடும் குழந்தையாக இருந்தால் உணவு உட்கொள்ளும் நேரத்தை சிறிது அதிகமாக ஒதுக்க வேண்டும்.
சாப்பிடும் போது குழந்தையின் பள்ளிக்கூட தேர்வில் பெற்ற மதிப்பெண்களைப் பற்றியோ அல்லது மன அழுத்தம் தரக் கூடிய எந்த விஷயத்தைப் பற்றியும் பேசக்கூடாது.
சமையல் அறைக்குள் குழந்தைகளை சின்னச் சின்ன வேலைகளில் ஈடுபடுத்தலாம். தன்னுடைய தட்டை தானே கழுவி வைத்துக் கொள்வது தண்ணீர் கொண்டு வந்து வைத்துக் கொள்வது போன்ற பழக்கங்களை ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பொதுவாக எல்லோருக்கும் கற்றுத் தர வேண்டும்.
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 25 நவம்பர், 2017

சளி, சைனஸ் என்றால் என்ன?

சளி, சைனஸ் என்றால் என்ன?
சளி என்றாலே எல்லோருக்கும் ஒரு அருவருக்கத்தக்க விஷயம் ! அந்த வளவளப்பான விஷயத்தை வெறுக்காதவர்கள் பூமியில் உண்டா என்ன? ஆனால் இதை பற்றி முழுக்க தெரிந்தவர்கள் இதை வெறுக்க மாட்டார்கள்! இது இயந்திரத்தின் பாகங்களில் போடப்படும் எண்ணெயை போன்றது! சளி என்ற ஒன்று நம் உடம்பில் இல்லை என்றால் , நம் உடம்பில் உள்ள பாகங்கள் எல்லாம் பழுதடைந்து தன் வேலையை நிறுத்திவிடும்!வியப்பாக இருக்கிறது அல்லவா! மேலும், சளி பற்றிய பல தெரியாத தகவல்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்

சளி நம் உடம்புக்கு மிக அவசியமான ஒன்று! சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள் , நம் வாய் , மூக்கு , தொண்டை , நுரையீரல் , இரைப்பை குடல் ஆகிய எல்லாவற்றிலும் ஒரு உட்பூச்சு கொடுத்தாற் போல் அமைந்து அவை அனைத்தையும் பாதுகாப்பு கவசம் போல பாதுகாக்கின்றன. தூசி , பாக்டீரியா , வைரஸ் போன்றவை , நாம் சுவாசிக்கும் காற்றோடு சேர்ந்து நம் நுரையீரலின் உள்ளே சென்று விடாமல் தடுக்கும் ஒரு வடிகட்டி போலவும் செயல் படுகிறது. சளியின் பிசுபிசுப்பு தன்மை அதற்கு இவ் விஷயத்தில் கை கொடுத்து உதவுகிறது. மேலும் சளியில், பாக்டீரியா வைரஸ்களை , நம் உடம்பு கண்டு கொள்வதற்காக , பிறபொருளெதிரிகளும் (Antibodies), இவ்வாறு எல்லை மீறி நுழைபவர்களை கொன்று குவிப்பதற்காக நொதிகளும்(enzymes ), பிசுபிசுப்பு தன்மையை ஏற்படுத்துவதற்காக புரதங்களும்(Protein ) , பல்வேறு உயிரணுக்களும்(Cells ) நிறைந்து இருக்கின்றன..
நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுதும் , உங்கள் உடம்பு சளியை உற்பத்தி செய்து கொண்டே தான் இருக்கும். ஒரு நாளைக்கு , ஒன்றில் இருந்து ஒன்றரை லிட்டர் சளியை நம் உடம்பானது உற்பத்தி செய்கிறது!
ஒரு உதாரணத்துக்கு ,தூசியோ , நமக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் ஏதோ ஒரு பொருள் , நம் மூக்கினுள் நுழைந்து விடும் போது , சளி உற்பத்தி செய்யும் அளவு கட்டுக்கடங்காமல் பெருகி விடுகின்றது.. அதாவது ,இந்த மாதிரி தருணங்களில் நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு உயிரணுக்கள்(Mast cells ), ஹிஸ்டமைன்(Histamine ) என்ற வேதி பொருளை, வெளிப்படுத்துகின்றன. இந்த ஹிஸ்டமைன் ஆனது , உடனே தும்மல் , அரிப்பு , மூக்கில் ஏதோ திணித்து வைத்தாற் போன்றதொரு உணர்வு , போன்றவற்றை தூண்டி விடுகிறது. இவ்வாறு தூண்டப்பட்டவுடன் , சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், சளியை தண்ணீரை போன்று கசிய விட , நம் மூக்கு திறந்து விட்ட குழாயை போல ஓட ஆரம்பிக்கின்றது !
சிலருக்கு சுவைப்புலன் நாசியழற்சி(gustatory rhinitis ) பிரச்சனை இருப்பதாலும் மூக்கு திடீரென்று ஓட ஆரம்பிக்கும்.. அதாவது , மிகுந்த காரமான உணவை எடுத்து கொள்ளும் போது இந்த பிரச்சனை உண்டாகும். மற்றும் சிலருக்கு , பால் பொருட்களை(Cow's Milk Protein Allergy(CMPA)) எடுத்து கொள்ளும் போது ,அவர்கள் உடம்பில் சளியின் உற்பத்தி அதிகமாகும்.
பெரும்பாலும் இந்த சளியானது, தெள்ளத்தெளிவாக எந்த நிறமும் இன்றி காணப்படும். ஆனால், உங்களுக்கு சளி (Cold)பிடித்திருக்கும் போது , உங்கள் மூக்கின் வழியே வெளியிடப்படும் சளியின் நிறம், மஞ்சள் அல்லது பச்சை வண்ணத்தில் காணப்படும். உடனே , பாக்டீரியா உடம்பின் உள்ளே நுழைந்து , நோய் தோற்று ஏற்பட்டு விட்டது என்று எந்த அர்த்தமும் இல்லை. உங்களுக்கு சளி பிடித்திருக்கும் போது , உங்கள் உடம்பின் நோய் எதிர்ப்பு அமைப்பு , நியூட்ரோபில்ஸ்(Neutrophils) என்னும் வெள்ளை இரத்த அணுக்களின் படையை அனுப்பும். இந்த வெள்ளை இரத்த அணுக்களில் ஒரு பச்சை நிற நொதி(Enzyme) உண்டு.. இந்த பச்சை நிறத்து நோதியே, உங்களை பிடித்து தொந்தரவு செய்யும் சளியின் பச்சை நிறத்தின் பின்னணியில் இருப்பது! சில சமயம் , சளி தெள்ள தெளிவாக , எந்த நிறமும் இன்றி காணப்படும்.. ஆனால் , உங்களுக்கு , காது நோய்த்தாக்கம்(Ear Infection ) மற்றும் சைனஸ் நோய் இருக்க கூடும்! ஆக, சளியின் நிறத்தை வைத்து கொண்டு எந்த கணிப்பும் செய்து விட முடியாது! அப்படியே , நோய் தொற்று ஏற்பட்டு இருந்தால் , சளியின் தொந்தரவோடு , மூக்கடைப்பு , காய்ச்சல் போன்ற பிற தொந்தரவுகளும் ஏற்பட்டு நோய் தொற்றை வெளிச்சம் போட்டு காட்டி கொடுத்து விடும்!
சில சமயங்களில் சளியோடு சேர்ந்து , சிகப்பு அல்லது பிரவுன் நிறத்தில் இரத்தம் காணப்படும்! இரத்தம் சிறிதளவில் காணப்பட்டால் ஒன்றும் பிரச்சனை இல்லை.. நீங்கள் அதிகமாக மூக்கை சீறுவதால்,இல்லை கைகளால் மூக்கை தேய்த்து கொள்வதால் , மூக்கில் உள்ள இரத்த குழாய்கள் சேதமுற்று , சிறிது இரத்தம் வந்திருக்கலாம்.. அதிக அளவு உதிர போக்கு இருந்தால் , மருத்துவரை அவசியம் பார்த்து விடுவது நல்லது!
நோய் தொற்று ஏற்படும் பொழுது என்ன ஆகின்றது? சைனஸ் பிரச்சனையும் , அதிக சளியால் அவதியும் ஏற்படுகிறது! சைனஸ் என்பது , நம் முகத்தில் அமைந்த, காற்று நிறைந்த வெற்று துவாரங்கள்.. இந்த துவாரங்களின் உட்புற சுவர்களில் சீத சவ்வுகள்(Mucous membranes ) நிறைந்திருக்கும். இந்த சீத சவ்வுகள் தான் சளியை உற்பத்தி செய்கின்றன! இந்த சீத சவ்வுகளில் , எரிச்சலோ , நோய் தொற்றோ உண்டாகும் போது , அதிகப்படியான சளியை உற்பத்தி செய்ய ஆரம்பித்து விடுகிறது. அவ்வாறு உற்பத்தி ஆகும் அதிகப்படியான சளி , அந்த வெற்று துவாரங்களை , கட்டி சளியால் நிரப்பி விடுகின்றது! எவ்வெவற்றால் இந்த சீத சவ்வுகளில் எரிச்சல் உண்டாகிறது என்பதை அடுத்து பார்க்கலாம்
1)பாக்டீரியா நோய் தொற்று
2)வைரஸ் நோய் தொற்று
3)ஒவ்வாமை (Allergy )
4) சுவாசகாசம்(Asthma )
5)சைனஸ் நோய் தொற்று
உங்கள் சைனஸ் துவாரங்களை அதிகப்படியான சளி அடைத்து கொள்வதால் மேலும் பல சிக்கல்களும் ஏற்படக்கூடும்..
1)சளி தொண்டையில் இறங்குதல்( Post Nasal Drip) உண்டாகும். அதனால், தொண்டையில் புண் , இருமல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும் .
2) அதிக சளியால் , காதுகள் அடைத்து , காது நோய்தாக்கம் உண்டாகலாம்!
அதிகப்படியான சளி உற்பத்தியால் ஏற்படும் தொந்தரவுகளை எப்படி தடுக்கலாம் என்று அடுத்து பார்க்கலாம்..
1) தூசியால் அல்லது ஒவ்வாமையால் உங்கள் மூக்கு தண்ணீராய் ஒழுக ஆரம்பிக்கும் போது ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மருந்தை(Anti Histamines) பரிந்துரை செய்வார்கள். இந்த ஒவ்வாமை எதிர்ப்பு மருந்து , நம் மூக்கின் உள்ளே வீங்கிய திசுக்களை சரி செய்து , மூக்கு ஒழுகுதலை நிறுத்தி விடுகிறது!
 2) அதிகப்படியான சளி உற்பத்தியால் , மூக்கடைத்து கொள்ளும் போது மூக்கடைப்பு நீக்க மருந்து(Decongestants ) பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த மருந்து, நம் நாசியில் வீங்கி இருக்கும் இரத்த நாளங்களை குறுக செய்கிறது. அதனால் , அந்த நாளங்களுக்கு செல்லும் இரத்தம் குறைகிறதுஅவ்வாறு இரத்த ஓட்டம் குறைய குறைய, அதிகப்படியான சளி குறைந்து , மூக்கடைப்பும் நீங்கி விடுகிறது!
3) தொண்டையில் சளி இறங்குதல் பிரச்சனை(Post Nasal Drip) இருக்கும் போது , கபத்தை வெளிக்கொணர உதவும் மருந்தை(Expectorant ) பரிந்துரைப்பர். இது கட்டி சளியை , மெல்லிய சளியாக மாற்றி விடும் இயல்புடையது.. அவ்வாறு மெல்லியதாக மாறும் சளியை, ஆவி(Steam ) பிடித்து சுலபமாக நம் உடம்பை விட்டு வெளியேற்றி விடலாம்!
அதிகப்படியான சளியால் ,இருமல் , தொண்டை புண் என்று அவதிப்படும் போது , அது எதனால் வந்தது , பாக்டீரியாவாலா இல்லை ஒவ்வாமையாலா என்று ஆராய்ந்து அறிந்து , அதற்கு தக்க , மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்! அந்த மருந்துகள் , சளியை உற்பத்தி செய்யும் , திசுக்களின் வீக்கங்களை குறைத்து , சளியை கட்டுக்குள் கொண்டு வந்து விடும்!
கட்டி சளி என்றால் என்னவென்று இப்பொழுது பார்த்து விடலாம்.. அதிகப்படியான சளியால் , சைனஸில் பிரச்சனை ஏற்பட்டு அவதிப்படும் போது , தொண்டையில் சளி இறங்குதல் பிரச்சனை உண்டாகும் . அச்சமயம் , தொண்டை புண் , இருமல் உண்டாகும் என ஏற்கனவே பார்த்திருந்தோம்.. இதற்கு முக்கிய காரணம் இந்த தொண்டையில் கட்டி கொள்ளும் கட்டி சளி தான் காரணம்! சளி தண்ணீர் இல்லாமல் காய்ந்து கட்டி ஆகி விடுகின்றது. சில சமயம் நாம் எடுத்து கொள்ளும் மருந்துகள் , சளியை காய்ந்து போக செய்கின்றன! இது போன்று சளி காய்ந்து , நம்மை பாடாக படுத்துவதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று பார்க்கலாம்!
1) புகை பிடித்தல் கூடாது
2) அதிகப்படியான சளியால் அவதியுறும் போது , குளிரூட்டப்பட்ட அறையிலோ , வெப்பமூட்டப்பட்ட அறையிலோ இருப்பதை தவிர்க்க வேண்டும்.
3) அதிகப்படியான தண்ணீரை குடிக்க வேண்டும்.
4) நம் உடம்பில் உள்ள தண்ணீரை வற்றி போகச் செய்யும் பானங்களான , காபி , தேநீர் , மதுபானம் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
5) கட்டி சளியால் அவதியுறும் போது , சளியை உலர்ந்து போக செய்யும் மருந்துகள் எடுப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அது பிரச்னையை இன்னும் தீவிரம் ஆக்கி விடும். அதாவது , மூக்கடைப்பு தீர்க்க உதவும் மருந்தையோ (Decongestants ) அல்லது ஒவ்வாமை எதிர்ப்பு மருந்தையோ (Anti Histamine) , இச்சமயங்களில் உட்கொள்ள கூடாது. கபத்தை வெளிக் கொணர உதவி புரியும் மருந்து(Expectorant ) தான் இந்த நேரங்களில் உட்கொள்வது பிரச்னையை தீர்க்க உதவும்!
கடைசியாக நெஞ்சு சளி(Phelgm ) என்றால் என்னவென்று பார்த்து விடுவோம்! இந்த நெஞ்சு சளிக்கும் , நம் மூக்கில் , சைனஸில் உற்பத்தியாகும் சளிக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது . இது வேறு , அது வேறு! மூச்சு குழாய் அழற்சி(Bronchitis ) , கபவாதம்(Pneumonia ) போன்ற நோய் தாக்கத்தால், இருமல் அறிகுறி ஏற்படும் போது தான் இந்த நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும்! இந்த நெஞ்சு சளியின் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தை வைத்து என்ன மாதிரி நோய் தொற்று என்பதை கணித்து விட முடியும்! இந்த நெஞ்சு சளியில் , இரத்தம் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது!
இந்த சளி என்பது நம் உடம்புக்கு மிக இன்றியமையாத ஒன்று. இந்த சளியானது சமநிலை தவறி அளவுக்கு அதிகமாக சுரந்து விடும் போது , அதை சமாளிக்க கற்று கொண்டால் , அது சகஜமான நிலைக்கு திரும்பும் வரை சற்று ஆறுதல் அளிக்கும்!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 23 நவம்பர், 2017

தொண்டையை பாதுகாக்க 10 வழிகள்!

தொண்டையை பாதுகாக்க 10 வழிகள்!
  1.  பேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது.
  2. தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு, வால்வு சரியாக வேலை செய்யாமல்போனால், மறுபடியும் மேலே வரும். இதைத்தான் நெஞ்சு எரிச்சல் என்போம். உணவை வேகவேகமாக விழுங்கக் கூடாது. தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். அதிகக் காரம், அமிலம் மற்றும் மசாலா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

  3. அவசர அவசரமாகச் சாப்பிடுவது, தண்ணீர் அருந்தாதது போன்ற காரணங்களால் விக்கல் ஏற்படுகிறது. சிலருக்குத் தண்ணீர், பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். அமைதியாக உட்கார்ந்து, ஐந்து நிமிடங்கள் மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டால், விக்கல் நிற்கும். இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் இருந்தால், நோய்த்தொற்று, இரைப்பைப் புண் இருக்கலாம். மருத்துவரிடம் காட்ட வேண்டும்.
  4. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற செயல்களால், தொண்டைப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். புகை மற்றும் மது அருந்தும் பழக்கத்தை, உடனடியாக நிறுத்த வேண்டும்.
  5. உண்ணும்போது நம்மை அறியாமலேயே, சில சமயம் காற்றும் உள்ளே போகும். இந்தக் காற்றானது வாய் வழியே, வெளியேறுவதே ஏப்பம். அளவுக்கு மீறும்போது இதுவே வாயுப் பிரச்னையாகிவிடும். அடிக்கடி ஏப்பம் வந்தால், வயிற்றுப் புண், அஜீரணம், அமில காரத்தன்மை அதிகமாதல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். எனவே, மருத்துவரை அணுக வேண்டும்.
  6. வைரஸ் தொற்று ஏற்பட்டு சளி, இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதைத் தொண்டைக் கட்டு என்கிறோம். குரலுக்கு ஓய்வு தருவது, நீர் ஆகாரங்கள் அருந்துவது, வெந்நீரில் உப்பு போட்டுக் கொப்பளிப்பது ஆகியவற்றின் மூலம் நிவாரணம் கிடைக்கும். இது தொடர்ந்து இருந்தால், தொண்டையில் சதை, கட்டி இருக்கலாம். மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.
  7. தொண்டையில் இருந்து காற்று வெளியேறுவதில் தடை ஏற்படுவதால் உண்டாவதுதான் குறட்டை. உடல் பருமன், மூக்கின் தண்டுப் பகுதி மற்றும் எலும்பில் ஏற்படும் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக குறட்டை வரும். மருத்துவ ஆலோசனை பெற்று, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் மூலம், குறட்டைப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
  8. அதிகக் குளிர்ச்சி, அதிக சூடு தொண்டையை பதம்பார்த்துவிடும். மிதமான சூடுள்ள உணவுகள், பானங்களே, தொண்டைக்குப் பாதுகாப்பு.
  9. புகையிலை மெல்வதால், தொண்டையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படும். புகையிலையை எந்த வடிவிலும் உட்கொள்ளக் கூடாது.
  10. குழந்தைகள் அடிக்கடி தொண்டை வலியால், உணவை விழுங்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுவர். கழுத்துப் பகுதி வீக்கம், தொண்டையில் உள்ள டான்சில் சதை வீங்குவது இதற்குக் காரணம். பாக்டீரியா தொற்றினால் இது ஏற்படுகிறது. ஐஸ்க்ரீம், குளிர்பானங்களைத் தவிர்த்து, வெந்நீரில் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிக்கலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.
நன்றி: குமரேசன் காது-மூக்கு-தொண்டை நிபுணர்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 21 நவம்பர், 2017

வாட்ஸ் அப்’ வாழ்க்கை!

வாட்ஸ் அப்' வாழ்க்கை!
உங்கள் கையில் ஆறாவது விரல் இருக்கிறதா? இல்லையென்று சொன்னால் நீங்கள் பெரிய அதிர்ஷ்டசாலி. இருந்தால்தானே அதிர்ஷ்டம் என்பார்கள். இது என்ன புதிதாக இருக்கிறது…?
ஆமாம், ஆறாவது விரல் இருந்தால், அதுவும் எல்லா நேரமும் இருந்தால் கிரகம் சரியில்லை என்று அர்த்தம். சோதிடம் போல இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். நம்மில் பலருக்கு உடலின் ஓர் அங்கமாக மாறி இருக்கும் செல்பேசி தான் அந்த ஆறாவது விரல். விஞ்ஞானத்தின் அற்புத படைப்பான செல்பேசியை இப்படி மாற்றியதில் பெரும்பங்கு வாட்ஸ் அப் (கட்செவி அஞ்சல்), பேஸ் புக் (முகநூல்) போன்ற சமூக வலைத்தளங்களுக்கு உண்டு.

பண்டிகை காலங்களில் கடைகடையாய் ஏறி இறங்கி வாழ்த்து அட்டைகளை வாங்கி, பிடித்தவர்களுக்கு அனுப்பியதில் கிடைத்த நிறைவு இப்போது இல்லாவிட்டாலும் 'வாட்ஸ் அப்' வாழ்த்து புது சுகம் தருகிறது. முந்திக்கொண்டு வாழ்த்து அனுப்பியவர்களுக்குப் பிடித்தமாதிரி 'நன்றி கார்டு' அனுப்பியதைவிட முகநூல் பதிவுக்கு கிடைக்கும் வரவேற்பில் இன்பம் அதிகமிருக்கிறது.
இதெல்லாம் காலத்தின் கொடை. இன்னும் சொல்லப்போனால் கட்டாயம். இவற்றைப் புறக்கணித்துவிட்டு 21–ம் நூற்றாண்டில் நாம் மட்டும் தனி தீவாக வாழ முடியாது.
அண்மையில் சென்னையை தாக்கிய பேய் மழையின் போது சமூக ஊடகங்களின் சக்தியையும் பார்த்தோம். பிரிந்து போன நட்பை மீட்டெடுத்தல், ஒத்த சிந்தனை கொண்டோரை ஒருங்கிணைத்தல், கோடிக்கணக்கானோரை ஒரே நேரத்தில் சென்றடைதல், அரசுகளைத் தீர்மானிக்கும் ஆற்றல் என நீளும் இவற்றின் அதீத வீச்சு மிரள வைக்கிறது. இதையெல்லாம் தாண்டி, எளியோரின் சொற்களையும் அம்பலம் ஏற்றி எல்லாரையும் சமமாக்குவதால் இவற்றைக் கொண்டாடவும் செய்யலாம். தப்பில்லை. அதனால் உலக அளவில் பேஸ்புக் பயன்படுத்துவோரின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதை நினைத்து மகிழலாம். 'வாட்ஸ் அப்' பயன்பாடும் அப்படியே. எவ்வளவு வசதி. என்னே வேகம். இன்றைய அவரச யுகத்திற்கு நிச்சயமாக இது தவமின்றி கிடைத்த வரம். பெரும் மகிழ்வு.
மகிழ்ச்சி எல்லாம் எதுவரையில்..? வரமாக இருக்கும் வரைதான். அதுவே சாபமாகி விட்டால் என்னாகும் என்கிற கவலை இப்போது எட்டிப்பார்க்கத் தொடங்கி இருக்கிறது. புகழ், பணம், வாழ்க்கை இப்படி எதுவுமே நமது கட்டுப்பாட்டில் இருக்கும் வரை பிரச்சினையில்லை. எதற்காவது அடிமையாகிவிட்டால் தொலைந்தோம். எல்லாவற்றிலுமே ஒரு போதை இருக்கிறது. அது இருமல் மருந்தில் இருக்கும் ஆல்கஹால் போல மிதமாக இருந்தால் ரொம்பது நல்லது.
குடிகாரர்களில் இரண்டு வகை உண்டு. எப்போதாவது, விரும்பிய போது அல்லது கொண்டாட்டங்களின் போது குடிப்பவர்கள் முதல் ரகம். இவர்களால் பெரிய வம்பில்லை. இரண்டாவது ரகம் குடி நோயாளிகள். இப்படிப்பட்டவர்கள் முழுக்கவும் மதுவுக்கு அடிமையானவர்கள். குடிக்காவிட்டால் கை, கால்கள் நடுங்கும். பேச்சே வராது. மூளை சொல்படி கேட்காது. முக்காலமும் மதுவையே நினைத்துக் கொண்டிருக்கும். கிட்டதட்ட மதுவைப் போலவே இன்றைக்குப் பலரையும் மயக்கி வைத்திருக்கின்றன சமூக வலைதளங்கள். என்ன, குடித்துவிட்டு தெருவில் கிடப்பவனைப் பளிச்சென தெரிகிறது. இதில் நடக்கும் பாதிப்புகள் மெல்லக் கொல்லும் நஞ்சாக சத்தமின்றி தனி மனித சக்தியை, குடும்பங்களை உறிஞ்சி குடித்து வருகிறது. குறிப்பாக வாட்ஸ் அப், பேஸ்புக் இரண்டிலும் கதியாக கிடப்பவர்களின் எண்ணிக்கை அச்சுறுத்தும் அளவுக்கு எகிறிக் கொண்டே போகிறது.
சாதாரணமாக நம்முடைய வீடுகளிலேயே கவனியுங்களேன். ஆளாளுக்கு கையில் ஒரு செல்பேசி. கிடைக்கிற நேரத்தில் எல்லாம் அதிலேயே மூழ்கி இருக்கிறார்கள். இதில் வயது, பாலின வித்தியாசமெல்லாம் கிடையாது. குழம்பு தாளிக்கும் நேரத்தில் கூட 'வாட்ஸ் அப்' பையும், 'பேஸ் புக்'கையும் விட்டுப் பிரிய முடியாத குடும்பத்தலைவிகள் அதிகரித்துவிட்டார்கள். குடும்பத்தலைவனைப் பற்றி கேட்கவா வேண்டும்? இரண்டும் பேரும் இப்படி என்றால் குழந்தைகளையும் மற்றவர்களையும் இவர்களால் எப்படி கேட்க முடியும்?
இரவு நெடு நேரம் சமூகத்தளங்களில் தேவையோ, நோக்கமோ இன்றி மேய்ந்துக் கொண்டிருக்கிறார்கள். காலையில் எழுந்ததும் கைகள் பர, பரவென்று ஆகின்றன. காலைக்கடன்களைக் கழிக்கிறார்களோ இல்லையோ, செல்பேசி முகத்தில்தான் விழிக்கிறார்கள். ஒரு நாள் பார்க்க முடியாவிட்டால் பட,படத்துப் போய்விடுகிறார்கள். இன்னும் சிலருக்கோ நாட்கணக்கெல்லாம் இல்லை. சில மணி நேரம் கூட பொறுக்க முடியாது. செல்பேசியோ, சமூக வலைத்தளங்களோ இல்லையென்றால் பைத்தியமாகிவிடுவார்கள். அதிலும் ஒரு கண் வைத்திருந்தால்தான் எந்த வேலையையும் செய்யமுடியும். சாமி கும்பிட கோவிலுக்குப் போனாலும் சரி; துக்கம் விசாரிக்க மரண வீட்டுக்குப் போனாலும் சரி; என்ன பதிவு வந்திருக்குமோ என குறுகுறுப்போடு பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதிலும் இஷ்டம் போல எல்லாவற்றையும் பதிவேற்றுவது கொடுமையிலும் கொடுமை. துக்க வீட்டில் போய் செல்ஃபி (கைப்படம்) எடுத்து, பதிவேற்றம் செய்பவர்களும் இருக்கிறார்கள். முக்கியமான வேலை இருந்தாலும், 'வேண்டாம்' என்று மனசு நினைத்தாலும் கைகள் தானாகவே 'வாட்ஸ் அப்', 'பேஸ்புக்' போன்வற்றுக்குப் போனால் 'முற்றி' போய்விட்டது என்று அர்த்தம். என்னவொன்று அடிமையாகிவிட்டோம் என்பதே இவர்களுக்குத் தெரியாது. இப்படியானவர்கள் முன்பு நாம் பார்த்த குடிநோயாளிகளைப் போன்றவர்கள். உடனடியாக மனநல மருத்துவர்களைப் பார்க்க வேண்டியவர்கள்.
குடியைப் போலவே 'சமூக வலைத்தள போதை'யில் சிக்கியிருப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் களும் ஏராளம். இவர்கள், எந்த வேலையிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறார்கள். வீட்டில் யாரோடும் மனம்விட்டுப் பேசாமல் எப்போதும் அதிலேயே மிதந்து கொண்டிருப்பதால் குடும்ப உறவுகளிடையே இடைவெளி விழுகிறது. அதிலும் குடும்ப வாழ்க்கைக்கு 'வாட்ஸ் அப்' பெரும் வில்லனாக உருவெடுத்திருப்பதைச் சமீபத்திய விவாகரத்து வழக்குகளில் காண முடிகிறது. மண வாழ்க்கை முறிவுக்கு மட்டுமல்ல; உளவியல் நோய், குழந்தைப் பேறின்மை போன்றவை அதிகரிப்பதற்கும் சமூக வலைத்தளங்கள் முக்கிய காரணியாகி வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தருகிறது.
இதற்காக அஞ்சி, நடுங்கி இவற்றை ஒரேயடியாக தவிர்க்கவும் முடியாது. இவற்றினால் கிடைக்கும் நன்மையைப் பெறாமல் போனால் அறிவலித்தனமாகிவிடும். அப்படியென்றால் என்ன வழி? நம்முடைய கட்டுப்பாட்டில் அவற்றை வைத்திருக்க வேண்டும். 'ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே சமூக வலைத்தளத்தில் செலவிடுவேன்; அதுவும் எனக்குத் தேவையற்ற குப்பைகளைப் பார்க்க மாட்டேன்' என்பதில் உறுதியாக இருக்கலாம். நிறைய நேரமிருப்பவர்கள் இதனை ஒரு மணி நேரமாக்கலாம். இந்த நேரத்தை வசதிப்படி பிரித்துக்கொள்ளலாம். ஆனால் அதைத் தாண்டி போகக்கூடாது; போகவே கூடாது. நம்முடைய நேரத்தைக் கொல்வதற்கு இடம் கொடுத்தோமானால், நாளை அது நம்மைக் கொல்வதற்கும் முயலும் என்பதை மறந்திடக் கூடாது.
குழந்தைகளோடு கொஞ்சுவதற்கு, குடும்பத்தோடு நேரம் செலவிடுவதற்கு, வாழ்க்கையைக் கொண்டாடுவதற்காகத்தான் அத்தனை வசதிகளையும் தேடுகிறோம். வசதியில் இவற்றைத் தொலைத்து விட்டு என்ன செய்யப்போகிறோம்? உலக நியதிப்படி எல்லாவற்றிலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும். வசதிகள், வரமாவதும் சாபமாவதும் நம் கைகளில்தான் இருக்கிறது. எவ்வளவு அதி அற்புதமான அமிர்தமானாலும் அளவைத்தாண்டிவிட்டால் நஞ்சு தானே!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 19 நவம்பர், 2017

பிழைக்க வெளி நாடு சென்றவரின் புலம்பல்! உண்மை சம்பவம்

பிழைக்க வெளி நாடு சென்றவரின் புலம்பல்! உண்மை சம்பவம்
 பலர் தங்களது பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஊர், உறவு குடும்பம் என்று அணைத்தையும் துறந்து செல்கின்றனர். பெரும்பாலும் வெளிநாடு சென்றவர்கள் முடிந்த வரை தங்களது கடின உழைப்பால் நன்றாக சம்பாரிக்கின்றார்கள்.
தங்களது குடும்பத்தின் நிலமையை மனதில் வைத்து தங்களது உறக்கம் ஓய்வு மற்றும் உள்ள ஆசைகளைத் துறந்து பார்ட் டைம் ஓவர் டைம் என்று சம்பாரிக்கிறார்கள்.  சம்பாரித்த பணத்தை அப்படியே தன் பெற்றோருக்கோ மனைவிக்கோ அனுப்பி விட்டு சில ரியால்களையே வெள்ளியையே கையில் வைத்து சிக்கனமாக தங்களது வாழ்க்கையை கடத்துகின்றார்கள்.

இப்படியே பல ஆண்டுகள் கழிந்து விடுகின்றன. சரி நாமும் இத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டு விட்டோமே ஊர் சென்று பிள்ளை குட்டிகளுடன் நிம்மதியாக இருக்கலாம் என்ற தங்களது யோசனையை ஊரில் தெரிவிக்கும் போது பெரிய புயலே உருவாகி விடுகின்றது.
ஏன் என்ன உனக்கு வயதாகி விட்டது. இங்கே வந்து இருந்தால் விலைவாசி ஏற்றத்தில் குடும்பம் எப்படி ஓடும் என்று அறிவான பல விதாங்கள் அவன் முன் வைக்கப்படும்.
வெளிநாட்டில் தங்களது வாழ்க்கையை தொலைத்த பலர்களது அனுபவம் தான் இது. காரணம் இவர்களின் கஷ்டங்கள் ஊரில் உள்ளவர்கள் அறிவது இல்லை. அலலது இவன் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை!
 அந்த வீட்டுக்காரி இப்படி செய்கிறாள் இந்த வீட்டுக்காரி இப்படி உடுத்துகிறாள் என்று தகுதிக்கு மேல் ஆசைப்பட்டு இவன் அனுப்பும் அணைத்தையும் செலவு செய்து காலியாக்கி வட்டிக்கு கடனும் பெற்று செலவு செய்கிறார்கள்.
திறமை என்பது சம்பாரிப்பதில் இல்லை. மாறாக அதை எப்படி பிரயோணமாகப் பயன்படுத்துவது என்பதில் தான் உள்ளது. நாளையை கொஞ்சம் சிந்தித்து ஒரு தொழில் செய்வதற்கு ஒரு ஏற்பாட்டைச் செய்யலாம். நிலம், நகை போன்றவற்றில் சில முதலீடு செய்யலாம். அதேபோல் நம்மை விட கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு முடிந்த உதவி செய்யலாம்.
பெண்கள் நிச்சயமாக இவர்களின் கஷ்டங்களை உணர வேண்டும். அக்கறை காட்ட வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் மீது அக்கறை கொள்ள வேண்டும். அல்லாஹ்விற்கு பயந்து நடப்பவகள் பலர் மிக சிறந்த முறையில் நடந்து கொள்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான கண்ணீர் மடல்களில் ஒன்று தான் கீழே உள்ள கடிதம் படித்து மாற்றிக் கொள்வோமாக!
வீடு திரும்ப விடை கிடைக்குமா ?
1980-ஒரு சிலர் மட்டும் நமதூரில் வெளிநாட்டில் இருந்தார்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்களை துன்பப்படுத்துகிறார்கள் என்று ஒரு சிலர் கூற என் மனம் படபடத்தது. ஏனென்றால்  எனக்கு வெளிநாடு செல்ல விசா ரெடியாக உள்ள நேரம், என்ன செய்வதென்று தெரியாமல் நான் குற்றாலத்தில் போய் ஒளிந்து இருந்தேன். எனது நண்பர் ஒருவருக்கு நான் இருக்கும் இடம் தகவல் அறிய என்னை அணுகி நீ இனி வெளிநாடு போக வேண்டாம் என மனதை மாற்றி வீட்டுக்கு அழைத்து வந்து, பின்பு வீட்டிலுள்ளவர்கள் என்னை சமாதனம் செய்து விசா வந்தாச்சு என்ன செய்வது ஒரு வருடம் முடிந்தவுடன் ஊர் வந்துவிடு என்று என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.
சென்னை வந்து சேர்ந்ததும் ரயில் நிலையத்தில் மக்கள் நெரிசலை கண்டேன். மனம்  படபடத்தது. அழைத்து வந்த agent என்னை ஒன்னும் பயப்பட வேண்டாம் நாம் பம்பாய் தான் போறோம் என்று சற்று புன்னகையுடன் கூற நான் மன பதட்டத்தில் அமைதியாக இருந்தேன். இரண்டு நாள் ரயில் பயணம் கழித்து பம்பாய் வந்து சேர்ந்தேன். ஒரு ரிக்சா வண்டியில் பயணம் செய்து ஒரு பள்ளிவாசலை அடைந்தோம். அங்கு ஏராளமான தமிழ் பேசும் நண்பர்களை கண்டேன். சற்று மனதுக்கு ஆறுதலாக இருந்தது. மறுநாள் காலை agent என்னை பார்க்கவேண்டும் என்றார். காலையில் அவசர அவசரமாக வாய் மாத்திரம் கொப்பளித்து விட்டு பேண்டை மாட்டிக்கொண்டு agent -  பார்க்க சென்றோம்.
காலை 11- மணி அளவில் அவரை பார்த்தேன். நாளை காலை உனக்கு பிளைட் என்றார். நானும் என்னை அழைத்து வந்தவரும் வெளிய வந்து டீ சாப்பிட்டதும் போய் பிளைட் டிக்கெட்டை வாங்கிகொண்டு தங்கி இருந்த பள்ளிவாசலை அடைந்தோம். காலையும், மதியமும் சாப்பிடவில்லை. கண்கள் செய்வதறியாது கலங்கியதை கண்டு ஒரு வெளிஊர் நண்பர் சாப்பிட்டாயா என்று கேட்டவுடன் கண்கள் இல்லை என்று கூற, வார்த்தைகளில் ஆமாம் என்று கூறினேன். இதை புரிந்து கொண்ட நண்பர் என்னை ஹோட்டலுக்கு அழைத்து சென்று வயரும், மனமும் நிறைய சாப்பாடு வாங்கி தந்தார். என்னுடைய வாழ்கையில் மறக்க முடியாத சம்பவங்களில் அதுவும் ஒன்று .
மறுநாள் அல்லாஹ்வின் கிருபையால் நான் சவூதி அரேபியா வந்து சேர்ந்தேன். வந்து பார்த்ததும் அனைத்து இடங்களிலும் மணல், மலை தூரத்திற்கு ஒன்று மட்டும் கண்களில் தென்படும் அளவுக்கு இருந்தது சவூதி அரேபியா. நான் என்னுடைய அரபியை பார்பதற்கு இரண்டு நாட்கள் ஆனது. இரண்டு நாட்களும் விமான நிலையத்தில் தான் இருக்க நேரிட்டது. காரணம் என்னை அழைப்பதற்கு யாரும் வரவில்லை. இரண்டு நாள்களுக்கு சாப்பாடு நான் ஊரில் இருந்து வரும்போது என் மனைவி கொடுத்தனுப்பிய அவல் எனக்கு கை கொடுத்தது. பின்பு  ஒரு காவல்துறை அதிகாரி என்னுடைய அரபியை தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து என்னை அவரிடம் ஒப்படைத்தார். எனக்கு வாய்த்த அரபியோ ஒரு நல்லவர் எனக்கு வேண்டிய எல்லா தேவைகளையும் செய்து கொடுத்தார். எனக்கு வேலை மளிகை கடை போன்ற ஒரு கடையில். இங்கு இதை பக்காலா என்பார்கள் .
நான் ஊரிலிருது வரும்போது எனக்கு மூன்று பெண் குழந்தைகள். நான் இங்கு வருகின்ற சமயத்தில் தென்காசி சென்று என் குடும்பத்தாருடன் எடுத்த கருப்பு வெள்ளை போட்டோவை என் கையோடு கொண்டு வந்தேன். இரவு வேலை முடிந்து வந்தவுடன் என் குடும்பத்தாருடன் எடுத்த போட்டோவை நான் பார்த்தேன் என் கண்களில் மளமளவென கண்ணீர் வழிந்தது. யாரும் இல்லாத  ரூமில் நான் சப்தமிட்டு அழுதேன். என்னையே  பிரமிக்க வைத்தது. அன்று கலங்கிய கண்கள் சிறுது காலங்களுக்கு பிறகு நான் நாடு போய் வந்த பின்பு எனக்கு மீண்டும் இரண்டு குழந்தைகள் பிறந்தன அதில் ஒன்று ஆண்மகன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் .
இத்தனை காலங்கள் நான் இங்கு கழித்து நான் தேடிய செல்வங்களில் என்னுடைய அனைத்து பெண் குழந்தைகளை சிறப்பாக வாழக்கூடிய அளவுக்கு அவர்களுக்கு நல்ல கணவர் அமைத்து கொடுத்தேன். என் மகனையும் பட்ட படிப்பு படிக்க வைத்தேன். ஆனாலும் எனக்கு இன்னும் சுமை குறையவில்லை. என் மகன் எனக்கு கை கொடுப்பான் என நினைத்திருந்தேன். அவன் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிவதாக  என்  மனைவி என்னிடம் கூறினாள். காலங்கள் கடந்தால் எனக்கு கை கொடுப்பான் என நினைத்திருந்த என் மகனும் கை கொடுக்கவில்லை. தயவுசெய்து என் மகனை போன்று எந்த ஆண்மகனும் இருந்து விடாதீர்கள் .
இப்போது சவூதி அரேபியா 6-ஆண்டுகளுக்கு அதிகமாக இருப்பவர்கள் ஊர் திரும்பவேண்டும் என்று ஓர் உத்தரவு பிறப்பித்தவுடன் எப்படி வெளிநாடு வேண்டாம் என ஓடி ஒழிந்தேன் அன்று இருந்த மனநிலை போன்று இன்றும் எனக்கு இருக்கிறது. காரணம் என்று பார்த்தால் சேமிப்பு இல்லாத வாழ்க்கை. தற்போது நமதூர் நண்பர்கள் ஊருக்கு போய் வரும்போது பிற நண்பர்களிடம் தன்னை பெருமையடிதுக் கொள்வதை பார்த்திருக்கிறேன், எப்படி என்றால் நான் லீவில் 50 ஆயிரம் செலவு செய்தேன் ஒரு லட்சம் செலவு செய்தேன் என்று சொல்கிறார்கள். ரிஸ்க் என்பது ஒரு குறிப்பிட்ட காலங்களில் தான் வரும் நாம் அதை சரிவர பயன்படுதிக்கொள்ளவில்லை என்றால் அல்லாஹ் அதன் பரக்கத்தை நிறுத்திவிடுவான். முறையான திட்டமிதுதல் இல்லாமல் இனி வரும் காலங்களில் என்னை போன்று இருக்காமல் முறையாக திட்டமிட்டு உங்களுடைய வரவுகளையும், செலவுகளையும் அமைத்துக்கொள்ளுங்கள்.
அன்பான சகோதரர்களே, நண்பர்களே இது என்னுடைய வாழ்கையில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு, இதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மேலும் என்னுடைய ஒரு அன்பான வேண்டுகோள் என்னவென்றால் உங்களுடைய வரவுகளையும், செலவுகளையும் முறையாக திட்டமிட்டு எதிர்கால வாழ்க்கைக்காக சேமிப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் .
அல்லாஹ் உங்கள் குடும்பத்திற்கும், என் குடும்பத்திற்கும் நல் அருள் புரிவானாக ! ஆமீன் .
இப்படிக்கு ..  கண்ணீரோடு …!  நானும் ஒரு சபுராளி


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 17 நவம்பர், 2017

ஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்

ஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்
 உடல்ரீதியான பலவீனத்தைவைத்து 'வீக்கர் செக்ஸ்' என்று பெண்களைத்தான் சொல்கிறோம். வலிமையான பாலினமாகக் கருதப்படும் ஆண்கள்தான், புற்றுநோய், சர்க்கரைநோய், இதயநோய் என அபாயகரமான நோய்களுக்கு அதிக அளவில் ஆளாகிறார்கள். அதிக உடல் வலிமை கொண்டவர்களாகக் கருதப்படும் ஆண்களுக்கு ஏன் இந்த நிலை? உடல்ரீதியாக அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் எவை? அவற்றுக்கான தீர்வுகள் என்ன?

ஆண், பெண் என பாலினம் வேறுபடுவதே நம் உடலில் உள்ள குரோமோசோம்களில்தான். பெண்கள் எக்ஸ் எக்ஸ் (XX) குரோமோசோம் வகையையும் ஆண்கள் எக்ஸ் ஒய் (XY) குரோமோசோம் வகையையும் சேர்ந்தவர்கள். ஒரே இன குரோமோசோம் வகையைக் கொண்ட பெண்கள், இயற்கையிலேயே ஆண்களைவிட அதிக வலிமை உடையவர்கள். இதனால்தான், ஆண்களை நோய்கள் எளிதில் தாக்குகின்றன. தவிர, மருத்துவ, சமூகரீதியான காரணங்களும் உண்டு. மன நலம் சார்ந்த பிரச்னைகளும் பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம். உலக அளவில் தற்கொலை செய்துகொள்வதும் அதிகம் ஆண்களே!
பதற்றமடையவைக்கும் பருவ வயது!
ஆண், பெண் இருபாலருக்கும் உடல் ரீதியாக ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக, பருவ வயதில் ஆண், பெண் இருவருமே பல உடல் மாற்றங்களைச் சந்திக்கின்றனர். பெண்கள் வயதுக்குவந்து விட்டால், அம்மாவோ, உறவினர்களோ அவர்களுடைய பாலியல் சந்தேகங்களை மேம்போக்காகத் தீர்த்துவைக்கின்றனர். ஆனால், பருவ வயதை எட்டும் ஆண்கள், பாலியல் விஷயங்களை, நண்பர்களின் மூலம் அரைகுறையாகத் தெரிந்துகொள்வதால், பாலியல் பற்றிய தவறான புரிதலைகொண்டிருக்கின்றனர். இந்த வயதில், இளம்பெண்களைக் கண்டால் ஒருவித ஈர்ப்புவரும். இதை காதல் என்று நினைத்து, மாணவப் பருவத்திலேயே, வாழ்க்கையைத் தொலைக்கின்றனர். இந்தத் தருணத்தில், குடும்பம், நண்பர்கள் சரியாக அமையாதபட்சத்தில் கடுங்கோபம், விரக்தி, தன்னைப் பற்றிய அதீத சுய மதிப்பீடு ஆகியவை அதிகரிக்கிறது. இதனால், திருட்டு, வன்முறை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு எனத் தவறான திசையில் பயணிக்க நேரிடும். உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக மைனர் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்கள் அதிகமாகி இருப்பதும் இதற்கு சாட்சி.
பாலியல் குறித்த சந்தேகங்களைத் தீர்த்துவைக்க யாரும் இல்லாமல் ஆண்கள் தடுமாறுகிறார்கள். அழகான பெண்களைப் பார்க்கும்போது, புத்தகங்கள், வலைத்தளம், திரைப் படங்கள் மூலமாக மனிதர்களின் அந்தரங்க உறுப்புகளைப் பார்க்கும் போது, இயல்பாகவே ஆண்களின் உடலில் ஹார்மோன் வேகமாகச் சுரக்கும். சிந்தனைகள் காமம் சார்ந்ததாக மட்டுமே இருக்கும். தன் உடல், தன் அந்தரங்க உறுப்பில் வரும் சந்தேகங்கள், சுய இன்பம் பற்றிய கேள்விகள் என ஆண்களின் டீன் ஏஜ் பருவம் குழப்பம் நிறைந்ததாக இருக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில் நகரத்தில் வாழும் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. மேலும் உடலுறவின்போது இயலாமையின் காரணமாக முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் ஆண்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. சரியான வழிகாட்டுதல், புரிதல் இன்மையே இதற்குக் காரணம்.
ஆண்ட்ரோபாஸ் பருவம்!
பெண்களுக்கு மெனோபாஸ் போல 40 வயதை அடையும்போது ஆண்களுக்கு ஆண்ட்ரோபாஸ் ஏற்படுகிறது. ஆண்களுக்கு மிக முக்கியமான காலகட்டம் இது. தனக்கு வயதாகிறதே என்ற கவலையோடு, குடும்பப் பொறுப்புகள் அதிகமாக இருக்கும் நேரம் இது. தன் பேச்சைக் கேட்டுத்தான் மனைவி, குழந்தைகள் செயல்படவேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். இந்த வயதில் அனைத்து ஆண்களுக்கும், மீண்டும் பாலியல் ஆசைகள் துளிர்விடும். இது இயல்பானது. 'இந்த வயதில் இதெல்லாம் தேவையா?' என மனைவி ஒத்துழைக்க மறுக்கும்பட்சத்தில், பக்குவமடையாத ஆண்களுக்குக் கோபம் வரும். பலர் தங்களது ஆசைகளை அடக்கினாலும், அது கோபமாக மாறி, வீட்டில் உள்ளவர்கள் மேல் பாயும். இந்த வயது ஆண்களுக்கு அறிவுரைகள் கேட்கப் பிடிக்காது. காதல், இரண்டாம் திருமணம் என ஆண்கள் வாழ்க்கையை சிக்கலாக்கிக்கொள்வது இந்தக் காலகட்டத்தில்தான்.
இளம் வயதில் இருந்தே கொடுக்கப்படும் முறையான உடல், மன நலப் புரிதல்கள்தான் இந்தப் பிரச்னைகளை கடந்துவர உதவும். நாற்பதுகளில் வரும் பல்வேறு நோய்களுக்கு, மன அழுத்தம் முதல் காரணம் என்பதைப் புரிந்துகொண்டு, மனதைப் பக்குவப்படுத்தினால், நாற்பது வயதிலும் நலமாக வாழலாம்.
மனநலப் பிரச்னையாபயப்பட வேண்டாம்!
ஆண் என்றால் அழக் கூடாது, வீரமாக இருக்க வேண்டும், மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் எனத் தவறான எண்ணம் இருப்பதால், ஆண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்வதே இல்லை. உணர்ச்சிகளைச் சரியான விதத்தில் வெளிப்படுத்தாததுகூட மன அழுத்தத்துக்கு காரணமாகிவிடும். இதனால் வீடு மற்றும் ஆபீஸில் டென்ஷனுடன் இருப்பார்கள். மரியாதை, அங்கீகாரம், பணம், புகழ் என ஏதாவது ஒன்றைக் காரணமாகவைத்து, மனதைக் குழப்பிக் கொள்வார்கள். யாரிடமும் தன் பிரச்னையை வெளிப்படையாகச் சொல்லாமல், மனதுக்குள் மறுகுவார்கள். இதன் காரணமாக கிரிமினல் பழக்கங்கள், தற்கொலை எண்ணங்கள் தலைதூக்குகின்றன. மன அழுத்தம், கோபம் காரணமாகப் பெரும்பாலான ஆண்கள் நிம்மதியாக இல்லை. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. வெளிப்படையான பகிர்தல் இல்லாததே ஆண்களுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை வருவதற்கு காரணம். தியானம், யோகா என மனதை அமைதிப்படுத்துவதன் மூலம் மட்டுமே ரத்த அழுத்தப் பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும்.
போதையா? 'நோ'!
புகை பிடித்தல், மது, கஞ்சா, புகையிலை மற்றும் பான்பராக் மெல்லுதல் எனப் போதைப் பழக்கத்தில் எதையாவது ஒன்றைக்கூட கற்றுக்கொள்ளாத இளைஞர்களைக் காண்பது இன்று அரிது. இதனால் கல்லீரல் சிதைவு, சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய், மாரடைப்பு, நரம்புத்தளர்ச்சி, இதயநோய் என, வாழ ஆசைப்படும் காலத்தில் வலுக்கட்டாயமாக மரணத்தின் வாசலுக்கு அழைத்துச் செல்கின்றன நோய்கள். காதல் தோல்வி, அலுவலக அவமானங்கள், உடல் வலி என அனைத்துக்கும் மதுவை நாடினால் பிரச்னையில் இருந்து விடுபட முடியும் என்றொரு தவறான நம்பிக்கை பல ஆண்களிடம் இருக்கிறது. மது அருந்தாதவர்களைக் இளக்காரமாகப் பார்ப்பதும், அவர்களை அந்நியப்படுத்துவதுமான சம்பவங்கள் இன்று பள்ளி, கல்லூரி இளைஞர்களிடம்கூட காண முடிகிறது. இதனால், சில ஆண்கள் தனக்கு நாட்டமில்லை என்றாலும்கூட, மது அருந்தினால் மட்டுமே சமூகம் தன்னை ஏற்றுக்கொள்ளும் என்ற அச்சத்தில் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர்.
தமிழகத்தில் ஆண்களில் 35 சதவிகிதம் பேருக்கு இளம் வயதிலேயே கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மது, உடல் நலத்தை மட்டுமின்றி, மன நலத்தையும் பாதிக்கும். மேலும், மது அருந்துபவர்களின் விந்தணுக்கள் வீரியம் இழப்பதால், இல்லறத்திலும் பிரச்னை ஏற்படுகிறது.
பக்கவாதம்!
மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்படுவதன் காரணமாக பக்கவாதம் வருகிறது. இந்த நோயும் பெண்களைவிட ஆண்களையே அதிகம் தாக்குகிறது. புகைபிடிப்பது, உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகள், உடல்பருமன், ரத்தத்தில் கொழுப்பு அதிகம் சேருவது இவையே பக்கவாதம் வர காரணங்கள். இது பரம்பரையாக அடுத்த தலைமுறையையும் தாக்கலாம். நம்முடைய மதுப் பழக்கத்துக்கு, அடுத்த தலைமுறைகளும் பலியாக வேண்டுமா?
ஹார்ட் அட்டாக் எண்ணிக்கை கேட்டாலே ஹார்ட் அட்டாக் வரும்!
உலக அளவில் ஆண்கள் மரணத்துக்கு அதிகம் காரணமாய் இருப்பது மாரடைப்புதான். புகைபிடிப்பது, மது அருந்துவது, கொழுப்புச் சத்துள்ள உணவை அதிகம் எடுத்துக்கொள்வது, உடல் எடையை கவனிக்காமல் இருப்பது, சர்க்கரையைக் கட்டுப்படுத்தாமல் இருப்பது, உயர் ரத்த அழுத்தம் போன்றவையே மாரடைப்புக்கு முக்கியமான காரணங்கள். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பதன் காரணமாக, மாதவிடாய் நிற்கும் வரை இதய நோய்கள் வருவது இல்லை. ரத்தக்குழாயில் கொழுப்பு சேருவதை ஈஸ்ட்ரோஜென் தடுக்கிறது. ஆனால் ஆண்களுக்கு ஹார்மோன்கள்ரீதியாக இயற்கையான பாதுகாப்பு கிடையாது. மேலும், உலகம் முழுவதும் 5 சதவிகிதம் ஆண்கள் எவ்விதத் தவறான பழக்கவழக்கங்கள் இல்லையென்றாலும் மன அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழக்கிறார்கள்.
'டயட்' கடைப்பிடிடயாபடீஸை விரட்டு!
சர்க்கரை நோயிலும் ஆண்களுக்கே முதலிடம். சிறுவயதில் இருந்தே முறையான சரிவிகித உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, உடற்பயிற்சி இன்மை, மன அழுத்தம், போதைப் பழக்கம் காரணமாக இன்றைக்கு 25 வயதிலேயே சர்க்கரை நோய் வந்து விடுகிறது. ஒருமுறை சர்க்கரை நோய் வந்துவிட்டால் நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும். சர்க்கரை நோயைக் குணமாக்க முடியாது ஆனால் கட்டுப்படுத்த முடியும். எனவே சர்க்கரை நோய் குறித்த விழிப்பு உணர்வு ஆண்களுக்கு அவசியம் தேவை. ''ஆம்பிளைப் பிள்ளை நல்லா சாப்பிடட்டும்'' என சிறு வயதில் கொழுப்புச்சத்துள்ள உணவை அதிக அளவில் ஊட்டி வளர்க்கின்றனர். இதனால் உடல்பருமன் அதிகமாகி பின்னால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.
60 வயதைத் தாண்டினால் ப்ராஸ்டேட் கேன்சர் அபாயம்!
ஆண்களின் இனப்பெருக்க உறுப்பான ப்ராஸ்டேட், சிறுநீர் பைக்குக் கீழே அமைந்துள்ளது. வயது அதிகரிக்கும்போது இது பெரிதாகி, சிறுநீர் செல்லும் குழாயை அடைத்துப் பிரச்னையை ஏற்படுத்துகிறது. அதேபோல ப்ராஸ்டேட் புற்றுநோயும் ஏற்படலாம். இந்தியாவில் ஆண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டாலும் இது பற்றிய போதிய விழிப்பு உணர்வு இல்லாததாலும், மற்றவர்களிடம் சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டும் மருத்துவமனைக்கு வருவதில்லை. இந்த புற்றுநோய் ஏன் வருகிறது எனத் தெளிவான முடிவுகள் இல்லை. சில ஆய்வுகள் வைட்டமின்-டி குறைபாடு காரணமாக அதிகப்படியான கால்சியம், உடலில் தங்குவதால் இந்த நோய் வரலாம் எனத் தெரிவிக்கின்றன. சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும் உணர்வு அதிகம் இருத்தல் போன்றவை புராஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள். இந்த நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள எந்த வழியும் கிடையாது. சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருப்பது போல தோன்றினால், மருத்துவரை சந்தித்து பி.எஸ்.ஏ (PSA – Prostate Specific Antigen) பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அதன் முடிவுகளை வைத்து பிறகு, பயாப்சி பரிசோதனைக்கு உட்படுத்தி புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டறிய முடியும்.
ப்ராஸ்டேட் புற்றுநோய்க்கு, இரண்டு வகையான சிகிச்சைகள் உண்டு. ஹார்மோன் சென்சிடிவ் டைப் மற்றும் ஹார்மோன் ரெசிஸ்டன்ஸ் டைப். ஹார்மோன் சென்சிடிவ் டைப்பில் விரைகளை நீக்கி ஆண்களுக்குச் சுரக்கும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வாழ்நாளை 15-20 வருடங்கள் நீட்டிக்க முடியும். ஹார்மோன் ரெசிஸ்டன்ஸ் டைப் வகையில், சிகிச்சைகள் அளித்தாலும் பலனளிக்காது. அவர்களுக்கு வாழ்நாள் அளவு குறைவு என்பது வருத்தத்துக்குரியது. புகையிலை காரணமாக சுவாசப் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. ஃபாஸ்ட் புட் உணவுகளால் பெருங்குடல் பகுதியில் புற்றுநோய் வருகிறது. மது அருந்துவதால் கல்லீரல், உணவுக்குழாய் புற்றுநோய்கள் ஆண்களையே அதிகம் தாக்குகின்றன.
புதிரான விஷயங்களைப் பற்றிய புரிதல் அவசியம்!
  • ஆண்கள், பெண்கள் இருவரையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.
  • பீட்சா, பர்கர், சாட் அயிட்டங்கள் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அனைவரும் ஏதேனும் ஒரு விளையாட்டில் தேர்ச்சியடைந்து, தினமும் பயிற்சி எடுத்துவந்தால் சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்க முடியும்.
  • மனதை ஒருமுகப்படுத்த தியானம், யோகா போன்ற பயிற்சிகளை செய்வதன் மூலம்மும், பிரச்னைகளை பாசிட்டிவாக அணுகுவதற்கும் கற்றுக்கொள்வதன் மூலமும் மனரீதியான பாதிப்பிலிருந்து மீளலாம்.
  • அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்றவற்றை கற்றுக்கொள்ள வேண்டும்.
  • நாற்பதைக் கடக்கையில், என்னென்ன பிரச்னைகள் வரும், அவற்றை எதிர்கொள்ள நாம் எவ்வாறு தயார் ஆக வேண்டும், அவற்றை எப்படி எதிர்கொண்டு, வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற புரிதல் ஆண்களுக்கு அவசியம்.
  • மதுவில் இருந்து விடுபட வேண்டும்.
  • ஓர் ஆணின் ஆண்தன்மை என்பது குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமே அல்ல என்பதைப் புரியவைத்து, திருமணத்துக்கு முன்பு, தாம்பத்யம் குறித்த மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம்.
டாக்டர் எழிலன், பொதுமருத்துவர்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

பழங்களில் உள்ள விதைகளின் பயன்கள்

பழங்கள் சாப்பிட சிறந்த பொருட்களில் ஒன்றாகும். சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதுடன் , ஒட்டு மொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பலவி...

Popular Posts