இரு பலிகளில் தப்பிய திருநபி
மு.அ. அபுல் அமீன் நாகூர்
இப்ராஹிம் நபி இறைவன் கட்டளைப்படி மகன் இஸ்மாயிலைப் பலியிட முயன்ற பொழுது அல்லாஹ் ஆட்டை அனுப்பி பலியிட செய்தார். இஸ்மாயில் நபி காப்பாற்றப்பட்டார். அந்த நபி வழி வாரிசான அப்துல் முத்தலிப் மக்காவில் வாழ்ந்த செல்வர். இவரே மக்காவில் "ஜம்ஜம்' கிணற்றைத் தோண்ட கனவு கண்டு கிணறு இருந்த இடத்தைத் திடமாய் அறிந்து கிணறு தோண்டியபொழுது வேண்டியபடி அவருக்குப் பத்துக்கு மேல் ஆண் குழந்தைகள் பிறந்தனர்.
அக்காலத்தில் பெண் குழந்தைகளை வெறுத்து ஆண் குழந்தைகளை அதிகம் பெற்ற அரபியர், ஆண் குழந்தைகள் வளர்ந்து வாலிபர்களாகியபின் அவர்களில் ஒருவரை அல்லது குறிப்பிட்ட ஒரு மகனை அவர்கள் வணங்கும் விக்கிரங்களுக்குப் பலியிடுவர். இவ்வழக்கப்படி அப்துல் முத்தலிபின் ஆண் மக்கள் வாலிபர்களான உடன் மக்களின் ஒப்புதலோடு பிள்ளைகளின் பெயர்களை எழுதி சீட்டு குலுக்கி எடுத்ததில் அப்துல்லாஹ் என்ற பெயர் வந்தது. அழகிய அப்துல்லாஹ்வைப் பலியிட குடும்பத்தினரும் விரும்பவில்லை. எதிர்ப்பு ஏற்பட்டது. பின்னர் அப்துல்லாஹ்விற்குப் பதில் ஒட்டகங்களைப் பலியிடுவது என்றும் ஏகோபித்து முடிவு செய்தனர். ஒட்டகங்களின் எண்ணிக்கையை ஒரு சீட்டிலும் அப்துல்லாஹ்வின் பெயரை மற்றோரு சீட்டிலும் எழுதி குலுக்கினர். ஒருநூறு ஒட்டகங்கள் என்ற சீட்டு எடுக்கப்பட்டது. ஒருநூறு ஒட்டகங்கள் பலியிடப்பட அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் பிழைத்தார். இப்படி இரு பலிகளிலிருந்து தப்பியவர்கள் திருநபி (ஸல்) அவர்கள்.
இறைமறை அருளப்பெற்று இறைதூதை எடுத்துரைத்தபொழுது ஏக இறை கொள்கையை ஏற்காத எதிரிகள் ஏந்தல் நபி (ஸல்) அவர்களைக் கொன்று பலியிட செய்த முயற்சிகள் முன்னோன் அல்லாஹ்வால் முறியடிக்கப்பட்டன.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்ற ஆறாம் ஆண்டில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தலையை கொய்து கொண்டு வருபவருக்கு நூறு ஒட்டகங்கள் பரிசளிப்பதாக அபூஜஹல் அறிவித்தான். முப்பத்தி மூன்று வயது முரட்டு மல்லன் உமர் வாளேந்தி வள்ளல் நபி (ஸல்) அவர்களின் தலையை வெட்டி கொண்டு வர புறப்பட்டான். அவனின் தங்கை குர் ஆன் ஓதுவதைக் கேட்டு கேண்மை நபி (ஸல்) அவர்களின் தலையை வெட்டும் வேகம் நீங்கி விவேகத்துடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். ஏக இறைவன் அல்லாஹ் ஏந்தல் நபி (ஸல்) அவர்களைக் காப்பாற்றினான்.
நபித்துவம் பெற்ற பதிமூன்றாம் ஆண்டு குறைஷி வாலிபர்கள் உருவிய வாளுடன் உறங்காது உத்தம நபி (ஸல்) அவர்களின் வீட்டை முற்றுகையிட்டு வெளியில் வரும் வள்ளல் நபி (ஸல்) அவர்களைக் கொல்ல ஆயத்தமாய் நின்றனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனின் யாஸீன் அத்தியாயத்தின் முதல் ஒன்பது வசனங்களை ஓதி ஒரு பிடி மண்ணை எடுத்து வீசிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களை அழைத்து கொண்டு மதீனா சென்று மாபெரும் இஸ்லாமிய அரசை நிறுவி உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.
ஸப்வான் காட்டிய பொருளாசையில் மயங்கி மக்காவிலிருந்து நஞ்சு தோய்ந்த வாளுடன் முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் கொல்ல சென்ற உமைருப்னு வஹப் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முன் நின்றான். ஸப்வான், உமைர் ஆகிய இருவரின் ரகசிய ஒப்பந்தத்தை ஒப்பற்ற நபி (ஸல்) அவர்கள் ஒப்பிப்பதைக் கேட்டதும் தப்பான எண்ணத்தைக் கைவிட்டு ஒப்பில்லா ஓரிறை கொள்கையை ஏற்றார் உமைருப்னு வஹப்.
சோதனைகளிலும் சாதனை படைத்த சாந்த நபி (ஸல்) அவர்கள் சாற்றி ஆற்று படுத்திய அறவழியில் முறையோடு நெறிபிறழாது நேர்மை தவறாது நிறை வாழ்வு வாழ்ந்து இறையருளைப் பெற இம்மீலாது நபி நந்நாளில் உறுதி பூணுவோம்.
https://azeezahmed.wordpress.com/
--