லேபிள்கள்

சனி, 29 ஏப்ரல், 2017

சுன்னத்தான தொழுகைகள் – 01

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
ஐவேளை பர்ழான தொழுகைகள் தவிர ஏராளமான சுன்னத்தான தொழுகைகளை இஸ்லாம் விதித்துள்ளது. இத்தொழுகை களுக்குப் பொதுவாக சுன்னத்தான தொழுகைகள் என்று கூறப்படும். அரபியில் 'ஸலாதுத் ததவ்வுஃ' என்று இதனைக் கூறுவார்கள். 'ததவ்வுஃ' என்றால் கட்டுப்படுதல், வழிப்படுதல் என்று அர்த்தம் கூறலாம். இஸ்லாமிய பரிபாiஷயில் ஸலாதுத் ததவ்வுஃ என்றால் பர்ழாக்கப்பட்ட ஐவேளை தொழுகைகள் தவிர்ந்த ஏனைய தொழுகை களைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தை என்று கூறலாம்.
நஜ்த் தேசத்தைச் சேர்ந்த ஒருவர் நபி(ச) அவர்களிடம் வந்து இஸ்லாம் பற்றிக் கேட்ட போது 'இஸ்லாம் என்றால் இரவும் பகலும் ஐவேளை தொழுகைகள் என்றார்கள். உடனே அவர் அத்தொழுகைகள் தவிர வேறு (தொழுகைகள்) ஏதாவது என்மீது கடமையா? என்றார். அதற்கு நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை' என நபியவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்
ஆதாரம்: புஹாரி: 46, முஸ்லிம்:11-8
நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு தொழுகை கடமை இல்லை என்பதைக் கூற நபி(ச) அவர்கள் 'இல்லா அன்ததவ்வஅ' என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தினார்கள்.
இவ்வகையில் சுன்னத்தான தொழுகை என்றால் பர்ழான ஐவேளைத் தொழுகை, ஜும்ஆ தொழுகை தவிர்ந்த கடமை இல்லாத தொழுகைகளைக் குறிக்கும். தொழுபவர் இவற்றை விரும்பிச் செய்வார் என்றால் அவரவர் விரும்பிய பிரகாரம் விரும்பிய எண்ணிக்கை தொழுவார் என்பது அர்த்தம் அல்ல. அல்லாஹ்வின் தூதர் வழிகாட்டி யிருப்பார்கள். தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் இத்தொழுகைகளை ஒருவர் தொழுவார்.
சுன்னத்தான தொழுகைகளின் முக்கியத்துவம்:
சுன்னத்தான தொழுகைகளை சிறப்பித்துக் கூறும் ஏராளமான நபிமொழிகளைக் காணலாம். அவற்றில் சிலவற்றைச் சுருக்கமாக நோக்குவோம்.
1. செயல்களில் சிறந்தது தொழுகை:
'
உறுதியாக இருங்கள். சடைவடையா தீர்கள். அமல் செய்யுங்கள். உங்களது அமல்களில் சிறந்தது தொழுகையாகும்….' என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தவ்பான்(வ)
ஆதாரம்: இப்னு மாஜா: 277, முஅத்தா: 81, தாரமி: 714-715, இப்னு ஹிப்பான்.
சுன்னத்தான தொழுகைகளும் அமல்களில் சிறந்தவை என்ற அந்தஸ்தைப் பெறுகின்றன.
2. சுவனத்தில் அந்தஸ்த்தை உயர்த்தும்:
சுன்னத்தான தொழுகைகள் சுவனத்தில் அந்தஸ்தை உயர்த்தக்கூடியவையாகும்.
'ரபீஅதுப்னு கஃபுல் அஸ்லமீ(வ) அவர்கள் நபி(ச) அவர்களுடன் இரவு தங்கி அவருக்குப் பணிவிடை செய்தார்கள். நபி(ச) அவர்கள் அவரிடம், 'என்னிடம் எதையாவது கேள்' என்றார்கள். அவர் 'நான் சுவனத்தில் உங்களுடன் இருக்க வேண்டும்' என்றார். 'வேறு ஒன்றும் இல்லையா?' என்று நபியவர்கள் கேட்டார்கள். 'அதுதான் வேண்டும்' என்றார். அதற்கு நபியவர்கள், 'அதிகமாக சுஜுது செய்வதன் மூலம் உனது வேண்டுதலை நிறைவு செய்ய எனக்கு உதவி செய்' என்றார்கள்.'
அறிவிப்பவர்: அபூ ஸலமா(வ)
ஆதாரம்: முஸ்லிம்: 226-489, நஸாஈ: 1138, அபூதாவூத்: 1320
'சுவனத்தில் என்னை நுழைவிக்கக் கூடிய ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என தவ்பான்(வ) அவர்கள் நபி(ச) அவர்களிடம் கேட்ட போது,
'அல்லாஹ்வுக்காக நீ அதிகம் சுஜூது செய்! அல்லாஹ்வுக்காக நீ ஒரு ஸஜதா செய்தாலும் அதன் மூலமாக உன் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்தாமல் விடுவதில்லை. உனது ஒரு பாவத்தை அழிக்காமல் விடுவதில்லை' என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதல்ஹா அல் யஃமரீ
ஆதாரம்: முஸ்லிம்: 488-225
அதிகமாக சுஜூது செய்வதென்றால் சுன்னத்தான தொழுகைகளை அதிகம் தொழுதாக வேண்டும். இதன் மூலம் சுவனத்தின் அதிகூடிய அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ளலாம் என இந்த நபிமொழிகள் கூறுகின்றன.
3. குறைகள் நீங்குகின்றன:
எவ்வளவு பக்குவமான மனிதன் என்றாலும் அவன் தனது கடமையான தொழுகைகளில் அதிகமான குறைகள் விட வாய்ப்புள்ளது. பர்ழான தொழுகைகளில் நாம் விடும் குறைகள் எமது சுன்னத்தான தொழுகைகள் மூலமாக நிவர்த்தி செய்யப் படுகின்றன.
'
நாளை மறுமையில் மனிதர்களின் அமல்களில் தொழுகை பற்றித்தான் முதலில் விசாரிக்கப்படும். அல்லாஹ் மலக்குகளிடம் 'எனது அடியான் தொழுகையைப் பூரணப்படுத்தியுள்ளானா? அல்லது குறை விட்டுள்ளானா? எனப் பாருங்கள்' என்று -அவன் உண்மை நிலை அறிந்த நிலையிலேயே- கூறுவான். தொழுகை குறைவின்றி இருந்தால் பூரணமான கூலி வழங்கப்படும். அதில் குறைபாடுகள் இருந்தால் 'எனது அடியானுக்கு சுன்னத்தான தொழுகை உண்டா? என்று பாருங்கள்' என்று கூறுவான். சுன்னத்தான தொழுகைகள் இருந்தால் பர்ழில் விடுபட்ட குறைகள் சுன்னத்தான தொழுகைகள் மூலமாக அடைக்கப்படும்…'
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(வ)
ஆதாரம்: அபூதாவூத்:864, தாரமி: 1494, திர்மிதி: 413, நஸாஈ: 465
பர்ழில் விடுபடும் குறைகள் சுன்னத்தான தொழுகைகள் மூலமாக நிவர்த்தி செய்யப்படுகின்றன என்பதை இதன் மூலம் அறியலாம்.
இஃதல்லாமல் தனித்தனியாக ஒவ்வொரு சுன்னத்தான தொழுகைகள் குறித்தும் சிறப்பித்து நபியவர்கள் பேசியுள்ளார்கள். குறித்த தொழுகைகள் பற்றி நோக்கும் போது அவற்றில் சிலவற்றை நாம் பார்க்கலாம்.
சுன்னத்தான தொழுகைகளின் வகைகள்:
1.
பொதுவான சுன்னத்துத் தொழுகைகள்:
தொழுவது தடை செய்யப்பட்ட நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் விரும்பும் போது விரும்பும் அளவில் தொழப்படும் சுன்னத்தான தொழுகைகளை இது குறிக்கும். அவரவர் சக்திக்கும் வசதி வாய்ப்புக்கும் ஏற்ப இதைத் தொழுது கொள்ளலாம்.
2. சுன்னதுர் ராதிப்:
ராதிபான சுன்னத்தான தொழுகைகள் என்பன ஐவேளைத் தொழுகைகளுக்கு முன்பின் தொழப்படும் சுன்னத்தான தொழுகைகளைக் குறிக்கும்.
ராதிபான- முன் பின் சுன்னத்துத் தொழுகைகளிலும் சுன்னா முஅக்கதா- கட்டாய சுன்னத்துக்கள், சுன்னா கைரு முஅக்கதா- அதிகம் வலியுறுத்தப்படாத சுன்னத்துக்கள் என்று இரு வகையாகப் பிரித்து நோக்கப்படும்.
3. சுனன் கைரு ரவாதிப் என்றால் ஐவேளை தொழுகையுடன் சம்பந்தப்படாத ஏனைய சுன்னத்தான தொழுகைகள் குறித்துக் கூறப்படும்.
ராதிபான சுன்னத்தான தொழுகைகள்:


இது குறித்து விரிவாக நோக்குவோம்.
தொழுகையுடன் தொடர்புபட்ட முன்-பின் சுன்னத்தான தொழுகைகளில் சில தொழுகைகளை நபி(ச) அவர்கள் தொடராகக் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். அல்லது அதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். அப்படியான தொழுகைகளையே சுன்னா முஅக்கதாகட்டாய சுன்னத்தான தொழுகைகள் என்று கூறப்படும். மற்றும் சிலவற்றை நபி(ச) அவர்கள் வலியுறுத்தாமல் விட்டிருப்பார்கள். அவை கட்டாயம் இல்லாத சுன்னத்துக்கள் என்று கூறப்படும்.
'நபி(ச) அவர்களிடமிருந்து 10 ரக்அத்துக்கள் தொழுகைகளை நான் பேணி வந்தேன். அவையாவன,
1. சுஹுக்கு முன்னர் 2.
2.
ழுஹருக்கு முன்னர் 2, பின்னர் 2.
3.
மஃரிபுக்குப் பின்னர் இரண்டு.
4.
இஷாவுக்குப் பின்னர் 2.
என்பனவே அவையாகும்' என இப்னு உமர்(வ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(
புஹாரி: 1180, அஹ்மத்: 5758)
இந்த அடிப்படையில் ராதிபான கட்டாய சுன்னத்துக்கள் 10 ரக்அத்துக்கள் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். மற்றும் சிலர் ழுஹருக்கு முன்னர் 04 ரக்அத்துக்கள் என்ற அடிப்படையில் 12 ரக்அத்துக்கள் என்று கூறுகின்றனர். இந்த இரண்டில் எதை வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்.
'முஸ்லிமான ஒரு அடியான் அல்லாஹ்வுக்காக தினமும் பர்ழ் அல்லாத சுன்னத்தான தொழுகைகள் 12 ரக்அத்துக்கள் தொழுதுவந்தால் அவனுக்கு சுவனத்தில் ஒரு மாளிகை வழங்கப்படாமல் இருப்பதில்லை. அல்லது அவனுக்கு சுவனத்தில் ஒரு மாளிகை கட்டப்படும்' என நபி(ச) அவர்கள் கூறியதாக அவர்களின் மனைவி உம்மு ஹபீபா(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.
(
முஸ்லிம்: 728-103, அபூதாவூத்:1250,
இப்னு குஸைமா:1185)
இதே ஹதீஸ் ஆயிஷா(ரழி) அவர்கள் மூலமும் (இப்னு மாஜா: 1140), அபூஹுரைரா(வ) மூலமும் (இப்னு மாஜா: 1142) அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
சுபஹுடைய முன் சுன்னத்து:
கட்டாய சுன்னத்துத் தொழுகைகளில் இது முக்கியத்துவம் பெறுகின்றது.
இது குறித்து அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
'நபி(ச) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.'
(
புஹாரி: 1169)
'நபி(ச) அவர்கள் இஷாத் தொழுதுவிட்டுப் பின்னர் எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் உட்கார்ந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். ஸுப்{ஹடைய பாங்குக்கும் இகாமத்துக்குமிடையே இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றை நபி(ச) அவர்கள் ஒருபோதும்விட்டது இல்லை.'
(
புஹாரி: 1159)
இது குறித்து இமாம் இப்னுல் கையிம் தனது ஸாதுல் மஆதில் குறிப்பிடும் போது,
'நபியவர்கள் சுபஹுடைய சுன்னத்தையும் வித்ரையும் பயணத்திலும் விட்டதில்லை. ஊரில் இருக்கும் போதும் விட்டதில்லை. பயணத்தில் இருக்கும் போது ஏனைய சுன்னத்தான தொழுகைகளை விட சுபஹுடைய சுன்னத்தையும் வித்ரையும் விடாது பேணி வந்துள்ளார்கள். இவ்விரு சுன்னத்துக்களைத் தவிர வேறு சுன்னத்துத் தொழுகைகளை அவர்கள் பயணத்தில் தொழுது வந்ததாக எந்த செய்தியும் எமக்குக் கிடைக்கவில்லை' என்று குறிப்பிடுகின்றார்கள்.
(
ஸாதுல் மஆத்' 1315)
இந்தவகையில் சுபஹுடைய முன் சுன்னத்து கட்டாய சுன்னத்துக்களில் ஒன்றாகும்.
இலேசாகத் தொழுதல்:
சுபஹுடைய சுன்னத்தை நீட்டி நிதானித்துத் தொழாமல் கடமைக்குக் குறைவு ஏற்படாத வண்ணம் விரைவாகத் தொழ வேண்டும்.
'நபி(ச) அவர்கள் இரவில் 13 ரக்அத்துக்கள் தொழுவார்கள். பஜ்ருடைய பாங்கைக் கேட்டதும் சுருக்கமாக இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள்.'
அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி)
ஆதாரம்: புஹாரி:1170
'நபியவர்கள் சுபஹுக்கு முன் இரண்டு ரக்அத்துக்களில் அல்ஹம்து ஓதினார்களா என நான் நினைக்கும் அளவுக்கு சுருக்கமாகத் தொழுவார்கள்' என ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புஹாரி: 1171)
பாத்திஹா ஓதாமல் தொழுதார்கள் என்பது இதன் அர்த்தமன்று. ஏனைய தொழுகைகளுடன் ஒப்பிடும் போது ஆயிஷா(ரழி) அவர்களுக்கு இப்படித் தோன்றியது என்பதே இதன் அர்த்தமாகும்.
'நபி(ச) அவர்கள் பஜ்ருடைய முன் சுன்னத்துத் தொழுகையில் குல்யா அய்யுஹல் காபிரூன் மற்றும் குல்ஹுவல்லாஹு அஹத் ஆகிய சூறாக்களை ஓதுவார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.' (முஸ்லிம்: 726-98, தாரமி: 1584,
இப்னு குஸைமா: 1114, அபூதாவூத்: 1256)
வேறு சில ஆயத்துக்களை ஓதியதாகவும் அறிவிப்புக்கள் வந்துள்ளன.
இந்த வகையில் பஜ்ர் தொழுகைக்கு முன்னர் இலேசாக இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத்துத் தொழுவது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான தொழுகைகளில் ஒன்றாகும் என்பதை அறியலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 27 ஏப்ரல், 2017

குழந்தை பாடசாலை செல்ல அஞ்சுவது ஏன்?

-by இம்தியாஸ் யூசுப் ஸலபி-
பாடசாலை அச்சநோய் (School Phobia)
பிள்ளைக்கு நான்கு வயதாகும்போது பாலர் பாடசாலைக்கும் ஐந்து வயதாகும் போது பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் ஏற்பாடு செய்வதை பார்க்கிறோம்.
பல பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும்போது மிகுந்த சந்தோசத்துடன் செல்கின்றனர். காரணம் பாடசாலையில் விளையாட்டுடன் கூடிய படிப்பும், நண்பர்களின் அறிமுகமும் ஆரவாரத்துடனான செயற்பாடுகளுமேயாகும். குறிப்பாக ஆசிரியர் பிள்ளையுடன் அதிக கவனத்துடனும் பாச பிணைப்புடன் பழகும்போது பிள்ளை அந்த ஆசிரியையுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறது. பாடசாலைக்குச் செல்வதற்கும் அதிக விருப்பத்தை தெரிவிக்கிறது.
அதேவேளை இன்னும் சில பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்கும் பெற்றோரிடமிருந்து பிரிந்து போவதையும் கண்டு அஞ்சுகிறது. பயப்படுகிறது. அழுது புலம்புகிறது. இவ்வாறான பிள்ளைகளை சமாளித்து நிதானப்படுத்துவதில் பெற்றோர்÷ஆசிரியர் பெரும் பாடுபடுவர்.
இந்த பிள்ளைகளின் இவ்வாறான மனநிலைக்கு முக்கியமான இரு காரணங்களை மனோ வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.
முதலாவது: பிள்ளைக்கும் ஆசிரியருக்கும் நெருங்கிய தொடர் அறுந்து விடுவதால், பிள்ளை பாடசாலைக்குப் போக பயந்து அழுது அடம்பிடிக்கிறது. பிள்ளையிடம் காணப்படும் குறைகள் கோளாறுகளை ஆசிரியர் கண்டிப்புடன் தண்டிக்கும்போது ஆசிரியரின் சுபாவத்தைக் கண்டு பாடசாலைக்குப் போக அஞ்சுகிறது. பாடசாலையைப் பற்றி கதைத்தாலே பிள்ளை அஞ்சுவதற்கு இதுவே காரணம்.
எல்லாப் பிள்ளைகளும் அறிவிலும் புத்திக் கூர்மையிலும் ஒரே நிலையில் இருக்க மாட்டார்கள். ஒரு பிள்ளை புரிந்து கொள்ளும் முறையில் மற்றப் பிள்ளை புரிந்து கொள்ளாது. ஒரு பிள்ளை சரியாக புரிந்து கொள்ளும் அதேவேளை மற்றப் பிள்ளை பிழையாக விளங்கிக் கொள்ளும்.
பிள்ளைகளிடத்தில் இவ்வாறான கோளாறுகள் இருப்பதை ஆசிரியர் புரிந்து கொண்டுதான் கற்பிக்க வேண்டும். பிள்ளைகளின் மனோநிலையையும் கோளாறுகளையும் கவனிக்காமல்÷கண்டு கொள்ளாமல் ஆசிரியர் பிள்ளைகளுக்கு கற்பிக்க முனைந்தால் ஆசிரியருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்காது. அப்போது ஆசிரியர் பிள்ளையிடத்தில் கடினமாகவே நடந்து கொள்ள முனைவர். பிள்ளை ஆசிரியரை விட்டு விலகி -பாடசாலையை விட்டு தூரமாகவே விரும்பும். நாளடைவில் அதுவே ஒரு அச்ச நோயாக மாறும். அதைத்தான் பாடசாலை அச்சநோய் எனக் குறிப்பிடப்படுகிறது.
பொதுவாக இந்த அச்ச நோய் பாடசாலை மட்டத்தில் காணப்படும் அதேவேளை முஸ்லிம்கள் நடாத்தும் குர்ஆன் பாடசாலையிலும் அதிகம் காண முடிகிறது. குர்ஆன் பாடத்தை கற்பித்துக் கொடுப்பதில் ஆசிரியர் (முஅல்லிம்) மிக மிக கடுமையாக பிள்ளைகளிடத்தில் நடப்பதால்தான் பிள்ளைகள் குர்ஆன் மத்ரஸாவுக்குச் செல்ல பயப்படுகிறார்கள்.
ஒரு வகுப்பில் நாற்பது அல்லது ஐம்பது மாணவ மாணவிகள் இருக்கும்போது அந்த வகுப்பை நடாத்திச் செல்வதில்÷கற்பித்துக் கொடுப்பதில் ஆசிரியருக்கு பல சிரமங்கள் ஏற்படும். குறிப்பிட்ட 45 நிமிடத்தில் எல்லா மாணவ மாணவிகளுக்கும் கவனம் செலுத்தி கற்பிப்பதில் ஆசிரியர் மிகுந்த சிரமத்தை மேற்கொள்கிறார்கள். இவ்வேளையில் ஆசிரியருக்க திருப்திகரமான முறையில் பிள்ளைகள் படிக்கவில்லை என்றால் அல்லது நடந்து கொள்ளவில்லை என்றால் ஆசிரியர் பிள்ளைகளுடன் கடினமாக நடந்து கொள்வார். பிள்ளைகளுக்கும் ஆசிரியருக்குமிடையில் ஏற்படுகின்ற இந்த இடைவெளியினால் பாதிக்கப்படுவது நிச்சயம் பிள்ளைகள்தான். எனவே நாளடைவில் பிள்ளை ஆசிரியரைக் கண்டு -அவரது பாடத்தைக் கண்டு- பயந்து தூரமாகி விடுகிறது.
கற்பித்தல் துறைக்கு தயாராகும் ஆசிரியர்ஆசிரியைகளுக்கு Educational Psychology கற்றுக் கொடுப்பது இந்த நிலையை தவிர்ப்பதற்குத்தான். சகல வளங்களாலும் முன்னேற்றமடைந்த பாடசாலைகளில் ஒரு வகுப்பில் 30 அல்லது 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் கற்பிப்பது இந்த School Phobia வை தவிர்ப்பதற்கும் பிள்ளைகளுக்கு நல்ல முறையில் கற்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை இந்த இடத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது தாயுடனுள்ள மிதமிஞ்சிய பிணைப்பு
(i)
அதாவது பிறந்ததிலிருந்து தாயுடைய மடியில், அரவணைப்பில் வளர்ந்து வந்த அந்தப் பிள்ளை முதன் முதலாக தாயை விட்டு பிரிந்து (பாடசாலைக்குச்) செல்வதாலும் பயந்து அஞ்சுகிறது. அறிமுகமற்றவர்களுடன் கலந்துறவாடுவதை பயப்படுகிறது. தாயின் அன்பும் பாசமும் கிடைக்காமல் போகுமோ என்று அஞ்சுகிறது.
(ii) அதுபோல், பெற்றோரின் பிரச்சினை அல்லது விவகாரத்தின் காரணத்தால் பெற்றோர் பிரிந்திருக்கும்போது அதனால் தாயுடைய தந்தையுடைய பாச பிணைப்பு கிடைக்காமல் தவிர்க்கும்போது பிள்ளை உள ரீதியாக பாதிப்படைந்து விடுகிறது. அதன் காரணமாகவும் தாயைவிட்டு பிரிந்து செல்ல அஞ்சுகிறது.
இந்தப் பயம் அச்சம் ஆரம்ப காலம் (முதலாம் ஆண்டு முடியும் வரை) சிலவேளை காணப்படலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

கப்ருடைய வாழ்வு

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
மனிதன் மரணித்த பின்னர் அவனது நிலை என்ன என்பது குறித்து இஸ்லாம் விரிவாகவே பேசுகின்றது. இஸ்லாமிய நம்பிக்கையில் மரணத்தின் பின் உள்ள மறுமை வாழ்வு பற்றிய நம்பிக்கை என்பது பிரதானமானதாகும். மனிதன் மரணித்ததில் இருந்து மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் காலம் வரைக்கும் உள்ள இடைப்பட்ட காலம் அல்லது அவனது வாழ்வு 'ஆலமுல் பர்ஸக்' – திரைமறைவு வாழ்வு என்று கூறப்படும். அதாவது, உலகிற்கும் மறுமைக்கும் இடைப்பட்ட வாழ்வு இந்த பர்ஸகுடைய வாழ்வில் நல்லவர்கள் இன்பத்தையும், தீயவர்கள் துன்பத்தையும் அனுபவிப்பார்கள்.
மனிதன் மரணித்து விட்டால் அவனை சிலர் அடக்கம் செய்கின்றனர். மற்றும் சிலர் எரித்துவிடுகின்றனர். பொதுவாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் அனைவருமே சடலத்தை அடக்கம் செய்கின்றனர். இந்த அடிப்படையில் ஹதீஸ்களில் இந்த 'ஆலமுல் பர்ஸக்' எனும் வாழ்வு கப்ருடைய வாழ்வு என்றும் பேசப்படுவதுண்டு.
கப்ரில் அடக்கம் செய்யப்பட்டாலும் சரி, எரித்து சாம்பலாக்கப்பட்டாலும் சரி, கடலில் அல்லது காட்டில் மரணித்து மீன்களுக்கு அல்லது விலங்குகளுக்கு உணவாக மாறினாலும் சரி மனிதனுக்கு பர்ஸகுடைய வாழ்க்கை என்று ஒரு வாழ்வு உண்டு. அதில் அவன் இன்பத்தையோ, துன்பத்தையோ அடைவது உறுதி! எனவே, கப்ரில் அடக்கப்படாதவர்களின் கப்ர் வாழ்க்கையின் நிலை என்ன என்ற கேள்விக்கு இடமில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
குர்ஆனும் ஸுன்னாவும் கப்ரில் குற்றவாளிகள் வேதனை செய்யப்படுவார்கள் என்று தெளிவாகக் கூறுகின்றன. நபி(ச) அவர்கள் தமது தொழுகைகளின் இறுதியில்
'யா அல்லாஹ்! கப்ருடைய வேதனையை விட்டும் நான் பாதுகாவல் தேடுகின்றேன்'
என்று தொடராகப் பிரார்த்தித்து வந்துள்ளதுடன் மக்களையும் கப்ருடைய வேதனையை விட்டும் பாதுகாவல் தேடும் படி போதித்துள்ளார்கள்.
'காலையிலும் மாலையிலும் நரகத்தில் அவர்கள் காட்டப்படுவார்கள். மேலும், மறுமை ஏற்படும் நாளில் பிர்அவ்னின் கூட்டத்தாரைக் கடும் வேதனையில் நுழைத்துவிடுங்கள் (என்று கூறப்படும்.)' (40:46)
இந்த வசனம் கப்ருடைய வேதனை உண்டு என்பதற்கான தெளிவான சான்றாக உள்ளது. பிர்அவ்னுக்கும் அவனது குடும்பத்திற்கும் காலையிலும், மாலையிலும் நெருப்பால் சூடுகாட்டப்படுகின்றது. மறுமை வந்துவிட்டால் அவர்கள் இதைவிடக் கடுமையான வேதனைக்குள்ளாக்கப்படுவார்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது.
இதில் மற்றுமொரு விடயமும் கவனிக்கத்தக்கதாகும். பிர்அவ்னும் அவனது குடும்பத்தினரும் கடலில் மூழ்கி மரணித்தனர். அவர்கள் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை. கப்ரில் அடக்கப்படாத பிர்அவ்னுக்கும் பர்ஸகுடைய வாழ்வில் வேதனை உண்டு என்பதை இது தெளிவுபடுத்துகின்றது. எனவே, கப்ரில் அடக்கப்படாதவர்களுக்கு எப்படி கப்ருடைய வேதனை இருக்கும் என்ற கேள்விக்கு இங்கே இடமில்லை என்பதை அறியலாம்.
'நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச் செய்வான். மேலும் அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுவான். அல்லாஹ் தான் நாடுவதைச் செய்வான்.'
(14:27)

இந்த வசனத்திற்கு நபியவர்கள் அளித்த விளக்கமும் கப்ருடைய வேதனை உண்டு என்பதை உறுதிப்படுத்துகின்றது. ஒருவரை நல்லடக்கம் செய்தால், அவருக்கு உறுதிக்காக துஆ செய்யுமாறு நபியவர்கள் கூறுவார்கள். அப்போது 'தப்பதகல்லாஹு பில் கவ்லித் தாபித்' – (நீ மொழிந்த லாயிலாக என்ற) உறுதியான வார்த்தை மூலமாக அல்லாஹ் உன்னை உறுதிப்படுத்துவானாக! என்று பிரார்த்திக்குமாறு நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
கப்ரில் கேள்வி கேட்கப்படும் போது முஃமின்கள் உறுதியாக இருப்பார்கள். காபிர்களும் பாவிகளும் பதில்சொல்ல முடியாமல் கத்துவார்கள், கதறுவார்கள். அப்போது அவர்கள் வேதனைக்குட்படுத்தப் படுவார்கள் என்றெல்லாம் ஏராளமான நபிமொழிகள் பேசுகின்றன.
கடந்த காலத்தில் வாழ்ந்த சில வழிகேடர்களும், ஸுன்னா மறுப்பாளர்களும் கப்ருடைய வேதனை இல்லை என மறுத்துள்ளனர். இதனால்தான் கடந்த கால இமாம்கள் 'இத்பாது அதாபில் கப்ர்' – கப்ருடைய வேதனை உறுதிப்படுத்துதல் என்ற தலைப்பில் தனி நூற்களையே எழுதியுள்ளார்கள். இதற்கு உதாரணமாக இமாம் பைஹகி அவர்களைக் குறிப்பிடலாம்.
குர்ஆனுக்கு முரணா?:
கப்ரில் வேதனை உண்டு என்று கூறும் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவதாக அவர்கள் வாதித்தனர். அதற்கு அவர்கள் குர்ஆனின் பின்வரும் ஆயத்தை ஆதாரமாகக் கொண்டனர்.
'பின்னர், ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் மண்ணறைகளிலிருந்து தமது இரட்சகனின் பால் விரைந்து செல்வார்கள்.
'எமக்கு ஏற்பட்ட கேடே! எமது தூங்கு மிடத்திலிருந்து எம்மை எழுப்பியவன் யார்?' எனக் கேட்பார்கள். அர்ரஹ்மான் வாக்களித்தது இதுதான். தூதர்கள் உண்மையே உரைத்தனர்' (என்று கூறப்படும்.)'
(36:51-52)

'சூர் ஊதப்பட்டு உயிர் கொடுத்து எழுப்பப்படும் போது எம்மை எமது தூங்கும் இடத்திலிருந்து எழுப்பியது யார்?' என அவர்கள் கேட்பார்கள் என இந்த வசனம் கூறுகின்றது. ஹதீஸ்கள் கூறுவது போல் கப்ருடைய வேதனை உண்டு என்றால் தூங்கும் இடத்திலிருந்து எழுப்பியது யார்? என்று அவர்கள் கேட்டிருக்கமாட்டார்கள். எனவே, கப்ரில் வேதனை உண்டு என்ற ஹதீஸ்களின் கூற்று இந்த வசனத்திற்கு நேரடியாக முரண்படுகின்றது. காபிர்கள், முஸ்லிம்கள் அனைவரும் கப்ரில் தூங்கிக் கொண்டுதான் இருப்பார்கள் என்றே இந்த வசனம் கூறுகின்றது என வாதிடுகின்றனர்.
குர்ஆனையும் ஹதீஸையும் புரிந்து கொள்ளாமல்தான் இவர்கள் இப்படி வாதிடுகின்றனர். ஒரு முறை சூர் ஊதப்பட்டதும் அனைவரும் அழிக்கப்படுவார்கள்.
' 'ஸூர்' ஊதப்படும். அப்போது, அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலிருப்போரும், பூமியிலிருப்போரும் மூர்ச்சையாகிவிடுவர். பின்னர் அதில் மறுமுறையும் ஊதப்படும். அப்போது அவர்கள் எழுந்து பார்ப்பார்கள்.' (39:68)
'(பூமியாகிய) அதன்மீதுள்ள அனைத்தும் அழியக் கூடியதே!'
'மகத்துவமும் கண்ணியமும் மிக்க உமது இரட்சகனின் (சங்கையான) முகமே நிலைத்திருக்கும்.'
(55:26-27)

முதல் சூர் ஊதி அழிக்கப்பட்டு, அடுத்த சூர் ஊதி மீண்டும் எழுப்பப்படும் வரை ஒரு கால அளவு உள்ளது. அது நாற்பது நாட்களாகவோ நாற்பது மாதங்களாகவோ, நாற்பது வருடங்களாகவோ இருக்கலாம். ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளருக்கு நாற்பது என்பது நினைவில் உள்ளது. ஆனால், நாட்களா?, மாதங்களா? வருடங்களா? என்பது மறந்துவிட்டது. எனினும் நாற்பது வருடங்கள் என்றே பலரும் அபிப்பிராயப்படுகின்றனர்.
இந்த நாற்பது வருடங்களில் யாருக்கும் எந்த வேதனையும் இருக்காது. இதன் பின் சூர் ஊதப்பட்டு எழுப்பப்படுவார்கள். அப்படி எழுப்பப்படும் போது எம்மை எமது தூங்கும் தளத்திலிருந்து எழுப்பியது யார்? என்று அவர்கள் கேட்பார்கள். இதனுடைய அர்த்தம் கப்ரில் வாழ்ந்த காலம் முழுவதும் அவர்கள் தூங்கிக் கொண்டுதான் இருந்தார்கள் என்பதன்று. நாம் ஏற்கனவே கூறிய ஹதீஸை வைத்து இந்த வசனத்தை இப்னு அப்பாஸ்(வ) அவர்கள் இப்படித்தான் விளக்குகின்றார்கள். அவர்கள் தூங்கியது குறிப்பிட்ட இந்த காலம் மட்டுமே என்பதே இதன் அர்த்தமாகும். இதற்கு முன்னர் அவர்கள் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை இது மறுக்காது!
எனவே, குர்ஆனுக்கு முரண்படுகின்றது எனக் கூறி கப்ருடைய வேதனையை மறுப்பதென்பது அறிவீனமானதும், வழிகேடான நிலைப்பாடுமாகும்.
மற்றும் சிலர் அல்லாஹ் வல்லமையைப் புரிந்து கொள்ளாமல் ஒரே கப்ரில் நல்லவரும் கெட்டவரும் அடக்கப்பட்டால் ஒருவருக்கு தண்டனையும் மற்றவருக்கு சுகமும் எப்படி அளிக்கப்படும்? கப்ர் விசாலமாக சாத்தியம் உள்ளதா? உடல்களை மண் தின்றால் எப்படி தண்டனை கொடுக்கப்படும் என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியும் கப்ருடைய வேதனையை மறுக்கின்றனர். இவர்கள் அல்லாஹ்வை உரிய முறையில் நம்பவில்லை என்பதுதான் இதன் அர்த்தமாகும்.
'அல்லாஹ்வை அவனது கண்ணியத்திற்கு ஏற்றமுறையில் அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. நிச்சயமாக அல்லாஹ் வலிமைமிக்கவன்ளூ யாவற்றையும் மிகைத்தவன்.'
(22:74)

எனவே, அல்லாஹ் நினைத்ததைச் செய்யும் ஆற்றல் உள்ளவன் என்பதை நம்புபவர்களுக்கு இத்தகைய சந்தேகங்கள் எழ முடியாது. எனவே, இது போன்ற வழிகெட்ட சிந்தனையிலிருந்து விலகி எமது கப்ருடைய வாழ்வு சிறக்க இன்றே உரிய முறையில் அமல் செய்வோமாக!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

ஆர்கானிக் எது?

ராஜ முருகன், 'நல்லசோறு' இயக்குனர்

நேர்த்தியான, அழகான காய்கறிகளாக கண்களைக் கவர்ந்தால், அவற்றை சந்தேகப்பட்டுப் பரிசோதிப்பது நல்லது.
புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை இதற்கே உரிய தனித்துவமான வாசம் வருகிறதா என முகர்ந்து பார்க்கலாம். மற்ற கீரைகளில் 'பச்சையம்' வாசம் வரவேண்டுமே தவிர, மருந்து வாசனை வரக் கூடாது.
காய், கனிகளில் அதற்கென வரும் வாசம் வருகிறதா எனப் பரிசோதியுங்கள். மிகவும் தளதளவென, பளபளப்பாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

தக்காளி ஒரு வாரம் வரை அழுகாமல் தோல் மட்டும் சுருங்கினால், அது ஆர்கானிக். அதுபோல வெண்டைக்காய், பாகற்காய் போன்றவற்றையும் சரிபார்த்து வாங்கவும்.
கோணலாகவும் சுருக்கமாகவும் இருந்தாலும் முகர்ந்து பார்த்துத் தேர்ந்தெடுப்பது நல்லது.
சின்ன காய்கள் கூட அதிக எடையுடன் இருப்பது ஆர்கானிக். அளவில் பெரிதாக அதிகமான எடையில் நிற்பது ஆர்கானிக் அல்ல.
கொஞ்சம் பருப்பு போட்டாலும் நிறைய இருப்பது போல் வெந்திருந்தால், அது ஆர்கானிக் முறையில் விளைந்தது. சாம்பார், கூட்டிலோ பருப்பு கரைந்து மாவாகிவிடக் கூடாது. ஆர்கானிக் பருப்புகள் நன்கு வெந்து வெடித்திருப்பது போல காணப்படும். ஆனால், கரைந்துபோகாது.

அரிசியைக் கைவிட்டு அள்ளும்போது மாவு போல கைகளில் பட்டால், அவை தீட்டப்பட்ட அரிசி அல்ல. மில்களில் அரிசி தீட்டும்போது எண்ணெய் சேர்ப்பதால், மாவு போல கைகளில் ஒட்டாமல் இருக்கும். இதுவே தீட்டப்படாத அரிசி கைகளில் வெள்ளை மாவாக ஒட்டிக்கொள்ளும்.
அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்களில் ஓரிரண்டு வண்டுகள் இருந்தால், அந்த உணவைத் தாராளமாக வாங்கலாம். அதை சுத்தப்படுத்தி நம் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.
சிறுதானியம் 'பளீர் வெள்ளை'யில் இருக்கக் கூடாது. ஏனெனில், அதில் பச்சரிசி, ஜவ்வரிசி குருணை கலக்கப்பட்டிருந்தால், பளிச்சென இருக்கும். சிறிது பழுப்பு நிறத்தில் இருக்கும் சிறுதானியங்களைத் தேர்ந்தெடுங்கள்.

அருகில் இருக்கும் மார்க்கெட்டோ, ஆர்கானிக் கடையோ, எங்கிருந்து காய்கறிகள் வருகின்றன என்று கேள்விகளை கேட்கும் பழக்கத்தை தொடங்குங்கள். எங்கிருந்து வருகிறது என தெரியாது என சொல்பவரிடம் வாங்குவதைத் தவிர்க்கலாம்.
பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, சிறிய வியாபாரிகளிடம் காய், கனிகளைப் பரிசோதித்து வாங்குவதே சரி.
சீசன் பழங்கள், காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். மார்ச் முதல் ஜூன் வரைதான் மாம்பழ சீசன். செப்டம்பர், அக்டோபரில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கக் கூடாது.
அந்தந்த சீசனில் விளையக்கூடிய காய், பழங்களை வாங்குங்கள். சீசன் அல்லாத காலங்களில் விளையக்கூடிய காய், கனிகள் அனைத்து சீசன்களிலும் விற்கப்பட்டால், அவற்றைப் பரிசோதித்து வாங்குவதே சரி. வாழை மட்டுமே அனைத்து சீசன்களில் கிடைக்கும்.

தேனை வாயில் வைத்தால், சிறு துவர்ப்புச் சுவை வரவேண்டும் அதுதான் ஆர்கானிக். தேனுக்கு காலாவதி தேதியே கிடையாது. ஆனால், தற்போது கடைகளில் வேகவைத்த தேனை அனுப்புகின்றனர். அதாவது சர்க்கரை, வெல்ல பாகைச் சேர்க்கின்றனர்.
நாட்டு சர்க்கரை அடர் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அடிநாக்கும், நடுநாக்கும் நாட்டு சர்க்கரையைச் சாப்பிட்ட பின் எரியக் கூடாது.
கருப்பட்டி, கருப்பாக இருக்க வேண்டும். பளபளப்புடன் மின்னக் கூடாது. மின்னுவதால் அதனுள் சர்க்கரையோ, கற்கண்டோ சேர்ந்து இருக்கலாம். கருப்பட்டி எளிதில் உடையக் கூடாது. சிறுகசப்புச் சுவை இருக்கும். அதிகமாக இனிக்காது.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

பழங்களில் உள்ள விதைகளின் பயன்கள்

பழங்கள் சாப்பிட சிறந்த பொருட்களில் ஒன்றாகும். சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதுடன் , ஒட்டு மொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பலவி...

Popular Posts