லேபிள்கள்

வியாழன், 11 நவம்பர், 2010

கணவரை மகிழ்விப்பது எப்படி?

 • பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.
 • முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.
 • உங்களை அழகுபடுத்தி, உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளுங்கள்.
 • சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி ஏதேனும் இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும்வரை பிற்படுத்தி வையுங்கள்.
 • அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).
 • கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை, சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).
இனிய குரலும் தேவையான கனிவும்
 • உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாகப் பேசுங்கள். கணவரைத் தவிர வேறு எந்த ஆணிடமும் – குறிப்பாக – மஹரம் அல்லாத ஆண்களுக்கு முன்னால் குழைந்து பேசக்கூடாது என்பதை மறந்துவிடவேண்டாம்.
 • உங்கள் கணவரிடத்தில் “உம்!! இல்லை!!” என்று அரைகுறையாகப் பேசி, அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்
நறுமணமும் அலங்கரிப்பும்
 • உடலை அழகு-ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிரத்தையுடன் முயற்சி செய்யுங்கள். (வீட்டு வேலைகளை வேலைக்காரியோ அல்லது இயந்திரங்களின் உதவியோ இன்றி நாமே செய்ய முயற்சி செய்யவேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்தையும் உடல் அழகையும் பேணுவதோடு பணச்செலவையும் குறைக்கலாம்).
 • உங்கள் கணவரோடு தனித்திருக்கும் வேளையில் மட்டும் மெல்லிய ஆடைகளைப் பயன்படுத்துங்கள்.
 • தினமும் குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் சுத்தமாக வைத்துக்கொள்ளுவதில் அதிகமாக அக்கறை செலுத்துங்கள்
 • வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். (அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்).
 • தடுக்கப்பட்ட முறையில் அதாவது ஹராமான முறையில் அலங்கரித்துக் கொள்ளக்கூடாது. (உதாரணமாக புருவத்தை மழித்துக் கொள்ளுதல், ஒட்டுமுடி வைத்துக் கொள்ளுதல்).
 • கணவனுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியம், கலர் துணிவகைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்.
 • முடி அலங்காரம், வாசனைத் திரவியங்கள், உடையின் வண்ணம் மற்றும் மாடல் ஆகியவற்றை கணவன் ரசிக்கும்படி அடிக்கடி மாற்றுங்கள். இவை அனைத்தும் மஹரம் இல்லாத ஆண்களுக்கு (திருமணம் முடிக்க தடை இல்லாத ஆண்களிடம்) வெளிப்படுத்துவது ஹராம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: “அனைவரையும் விடச் சிறந்த பெண் (மனைவி) யார்?” அண்ணலார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “எந்தப் பெண் தன் கணவன்தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும் தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்” ( நஸயீ).
இனிய வாழ்வின் திறவுகோல் தாம்பத்தியமே
திருமணத்தில் இணையும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களது இயற்கையான உடல் தாகங்களை (அனுமதிக்கப்பட்ட முறையில்) செம்மையாகப் பகிர்ந்து கொள்வது இஸ்லாமியத் திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும் என நபி (ஸல்) அவர்கள் உணர்த்தினார்கள் (புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ).
“கணவன் தாம்பத்தியத்திற்காக மனைவியை அழைத்து, அவள் காரணமின்றி மறுத்து, அதனால் கணவன்அவள்மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால், விடியும்வரை வானவர்கள் அப்பெண்ணை சபித்துக்கொண்டே இருப்பார்கள்” என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள் (புகாரி, முஸ்லிம், அஹ்மத்).
நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: “கணவன்ஊரிலிருக்கும்போது அவனது அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (நஃபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவன் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கக் கூடாது” (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், தாரமி).
 • உங்கள் கணவனுக்குத் தாம்பத்திய உறவு அவசியம் தேவை என்கிற சூழ்நிலையில் அதனை முதன்மைப் படுத்துங்கள் (பிறர் தவறாக எண்ணுவார்கள் என்றோ ஏதாவது பேசுவார்கள் என்றோ தள்ளிப்போடாதீர்கள்).
 • உங்களுடைய உடலை சுத்தமாகவும் வாசனையாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
 • கணவருடன் இனிய மொழியில் காதலைப் பரிமாறிக் கொள்ளுங்கள். (குடும்பத்தின் பிரச்சினைகளை மறந்துகூட அப்பொழுது வெளிப்படுத்தாதீர்கள். இல்லையென்றால் சந்தோஷமான சூழ்நிலையை சங்கடமான சூழ்நிலையாக அது மாற்றிவிடக்கூடும்)
 • உங்கள் கணவர் திருப்தி அடையும்வரை ஒத்துழையுங்கள்
 • தோதான நல்ல சூழ்நிலைகளில் உங்கள் கணவரை தாம்பத்தியத்திற்கு ஊக்குவியுங்கள் (உதாரணமாக வெளியூர் பயணத்திலிருந்து திரும்பியபோது அல்லது கணவருக்கு அமைதி தேவை என்னும் பட்சத்தில்).
அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு திருப்தி கொள்வது
 • உங்களுடைய கணவன் ஏழையாகவோ சாதாரண வேலையிலோ இருந்தால் அதற்காக வாழ்க்கையை வெறுத்துவிடாதீர்கள். (பிறரின் கணவர்கள்போல் நீங்கள் இல்லையே என ஒப்புமையும் செய்யாதீர்கள். அது உங்கள் கணவருக்கு உங்கள்மீது வெறுப்பை உருவாக்கும்).
 • ஏழைகள், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், ஊனமுற்றோர்கள் போன்ற நம் நிலைக்குக் கீழாக உள்ளவர்களைப் பார்த்தேனும் இறைவன் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.
 • தன்னம்பிக்கையும் கணவருக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கமும்தான் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
 • உலக விஷயத்திலேயே மூழ்கிவிடவேண்டாம்
 • இவ்வுலக வாழ்க்கை மட்டும்தான் நமக்கு நோக்கம் என்று இருந்திட வேண்டாம்.
 • இதன் அர்த்தம் அல்லாஹ் அனுமதித்த இன்பங்களை அனுபவிக்கக் கூடாது என்பதல்ல, மறுமையின் சுகவாழ்வுக்கு எதிரான விஷயங்களைக் கவனமாகத் தவிர்த்து வாழ வேண்டும் என்பதே.
 • உங்கள் கணவரின் செலவைக் குறைக்கச் சொல்லி அதனை தர்மம் செய்யவும், ஏழைகளுக்கும் தேவைப்படும் மக்களுக்கும் கொடுக்க ஆர்வம் ஊட்டுங்கள்
 • அவசியம் இல்லாத பொருள்களை வாங்கிக்கேட்டு கணவனை நச்சரிக்காதீர்கள். (உங்கள் பெற்றோர் வீட்டில் கிடைத்த மாதிரி கணவனிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கணவனின் வசதிக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்).
பொருட்செல்வமும் பிள்ளைச் செலவமும் இவ்வுலக வாழ்வின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும் எதிர்பார்க்கப் படுவதில் சிறந்ததுமாகும். (அல்குர்ஆன் 18:46).
கணவனின் உதவியை வரவேற்றல் நன்றி செலுத்துதல்
 • நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “பெரும்பான்மையான பெண்கள் கணவனின் உதவியை நிராகரித்ததன் காரணமாக அவர்களை நரகத்தில் பார்த்தேன்” என்பதாக. எனவே கணவன் செய்த உதவிகளை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்
 • உங்கள் கணவரின் உதவிகளுக்கு நன்றி செலுத்தும்போது உங்கள் கணவரை மேலும் உதவி செய்பவராகவும் உங்களைப் பலவழிகளில் சந்தோஷப் படுத்துபவராகவும் காண்பீர்கள்
 • உங்கள் கணவரின் நன்றியை மறக்கும்போது, உங்கள் கணவர் “இவளுக்குக் கூடுதலாக நல்லது செய்து என்ன பயன்?” என்று தன்னைத்தானே நொந்து கொள்வார்”
உறுதுணையும் உதவியும்
 • உங்கள் கணவருக்கு ஏதேனும் விபத்தின் காரணமாக ஊனம் ஏற்பட்டுவிட்டால் அல்லது வியாபாரத்தில் நஷ்டமடைந்துவிட்டால் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட சொந்தத் தொழில் மூலமாகவோ மற்றும் உங்கள் சொத்தின் மூலமாகவோ கணவனுக்குத் ‘தோள்’ கொடுங்கள்
கட்டுப்படுதல்
“ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை(செம்மையாக)த் தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டும் நடந்து கொண்டால், ‘நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்” என அவளிடம் (மறுமையில்) கூறப்படும்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (தப்ரானி, முஸ்னத் அஹ்மத்).
“ஒருவர் மற்றொருவருக்கு சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்யலாமென அனுமதி இருந்தால் மனைவியைக் கணவனுக்குத் தலை வணங்கி சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்ய ஆணையிட்டிருப்பேன்” என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், நஸயீ, திர்மி, இப்னுமாஜா, பைஹகி).
 • கணவனுடைய அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்றுங்கள் – அது இறைவனுக்கு மாற்றமாக இல்லாதபோது
 • ஓர் இஸ்லாமியக் குடும்பத்தில் கணவன் தலைவன் என்பதையும்மனைவி கணவனுக்கு உதவி செய்பவள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
அமைதிப்படுத்துங்கள் (கோபமாக இருக்கும் போது)
 • முதலாவதாக, கணவரை எது கோபப்படுத்துமோ அச்செயலை/பேச்சைத் தவிர்த்துவிடுங்கள். அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சமாதானப் படுத்துங்கள்.
 • நீங்கள் பிழை செய்திருந்தால் மன்னிப்புக் கேளுங்கள். (கோபமான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் வீசிக் கொள்ளும் உப்பு-சப்பு பெறாத வார்த்தைகள்தான் விவாகரத்தில் முடிகிறது என்பதை எல்லோருமே அறிவார்கள்).
 • கணவர் தவறு செய்திருந்தால் அதனை நல்ல சூழ்நிலை பார்த்து சொல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது அவருடைய கோபம் குறையும்வரை அமைதியாகக் காத்திருந்து சாந்தமான முறையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.
 • குடும்பத்துக்கு அப்பாற்பட்ட விஷயத்தில் கணவர் கோபமுற்று இருந்தால், கோபம் குறையும்வரை காத்திருந்து பிறகு அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள். (உதாரணமாக வேலையில் பிரச்சினை, மற்றவர்களால் அவமானப் படுத்தப்பட்டிருத்தல்).
 • அவருடைய பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்தக் கோபமான நிலையிலேயே பற்பல கேள்விகளை எழுப்பி தொந்தரவு செய்யாதீர்கள்.
 • “என்ன நடந்தது? என்று நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்” என்றோ “எது உங்களை கோபப்படுத்தியது? என்று எனக்கு தெரிந்துதான் ஆகவேண்டும்” என்றோ “நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள்! அதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு முழு உரிமை இருக்கின்றது!” என்றோ கேள்விக் கணைகளை எழுப்பி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாதீர்கள்.
பாதுகாப்பது (கணவர் வீட்டில் இல்லாத போது)
“இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்;. தங்கள் அலங்காரத்தை அதினின்று (இயல்பாக வெளியில்) தெரியக் கூடிய(கைகள், முகத்)தைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்” (அல்குர்ஆன்: 24:31).
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “நல்லொழுக்கமுள்ளமனைவியர் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்)” (அல்குர்ஆன்: 4:34).
 • தடுக்கப்பட்ட நட்புகளைவிட்டும் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்
 • குடும்பத்தின் ரகசியங்களை மற்றவரிடம் சொல்லாதீர்கள். (முக்கியமாக தாம்பத்தியம் மற்றும் உங்கள் கணவர் பிறரிடம் சொல்ல விரும்பாத விஷயங்கள்).
 • வீட்டில் உள்ள பொருள்களையும் குழந்தைகளையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
 • கணவனுடைய பணத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்து வையுங்கள்.
 • கணவனுடைய அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியேறாதீர்கள்.
 • அப்படியே உங்கள் கணவர் அனுமதித்தாலும் முழு ஹிஜாபுடனும் பாதுகாப்புடனும் வெளிச் செல்லுங்கள்.
 • உங்கள் கணவருக்குப் பிடிக்காதவர்களை வீட்டிற்குள் வர அனுமதிக்காதீர்கள்.
 • மஹரம் இல்லாத ஆண்களை நீங்கள் தனியாக இருக்கும் இடங்களில் அனுமதிக்காதீர்கள். (கணவனுடைய சகோதரர்கள், தாயின் சகோதரி மகன்கள், தந்தையின் சகோதரனின் மகன்கள் – போன்றவர்கள்தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்).
 • கணவருடைய பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் நல்லபடியாக நடந்து கொள்ளுங்கள் – குறிப்பாக – கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில்.
பொறுமையும் பாதுகாப்பளித்தலும்
 • கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது பொறுமையுடன் இருங்கள்.
 • வாழ்க்கையில் இழப்புகள் சோதனைகள் (உங்களுக்கு, உங்கள் கணவருக்கு, குழந்தைகளுக்கு, உறவினர்களுக்கு, சொத்துக்களுக்கு…) ஏற்படும்போது இறைவனின் கூலியை எதிர்பார்த்து பொறுமை கொள்வது அவசியம் (உதாரணமாக : நோய், விபத்துகள், இறப்புகள்…).
 • அழைப்புப்பணியில் துன்பங்கள் ஏற்படும்போது (சிறைபிடிக்கப்படுதல், ஊனமாக்கப்படுதல் …) பொறுமையுடன் இருந்து கணவரை மீண்டும் அல்லாஹ்வுடைய பாதையில் சுவர்க்கத்தை வேண்டி தியாகம் செய்ய உற்சாகப்படுத்துங்கள்.
 • உங்களிடம் உங்கள் கணவர் மோசமாக நடந்து கொள்ளும் வேளையிலும் அவரிடம் நீங்கள் நல்ல முறையாக நடந்து பாடம் புகட்டுங்கள். (இவள் நம்மீது இவ்வளவு அன்பு பொழியும்போது நாம் ஏன் இவளிடம் நல்ல முறையாக நடந்தக் கொள்ளக்கூடாது என்று நினைத்து வருந்தி தன் தவறுகளைத் திருத்திக் கொள்வார்).
இறைவனுக்கு அடிபணிவதிலும் அழைப்புப்பணி, தியாகம் ஆகியவற்றிலும் உதவியாக இருத்தல்
 • உங்கள் கணவருடன் ஒத்துழையுங்கள். கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை அவருக்கு நினைவுபடுத்துங்கள்.
 • இரவுத் தொழுகை தொழ அவருக்கு ஆர்வமூட்டுங்கள்.
 • அல்குர்ஆனை கேட்பதிலும் படிப்பதிலும் தனித்தும் கணவருடன் சேர்ந்தும் ஈடுபடுங்கள்.
 • இஸ்லாமிய பயான் கேஸட்டுகளைத் தனியாகவும் கணவருடனும் சேர்ந்தும் கேளுங்கள் (இருவரும் புரிந்து கொண்ட முக்கிய கருத்துகளை ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள்).
 • சுப்ஹுத் தொழுகைக்குப் பின்னரும், மஃரிப் தொழுகைக்கு முன்னரும் திக்ரு(இறைநினைவு)களில் ஈடுபடுங்கள்.
 • பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் செய்யப்படும் அழைப்புப் பணிகளில் உங்களையும் உட்படுத்திக் கொள்ளுங்கள்.
 • இஸ்லாமிய சட்டங்களையும் பெண்களுக்குரிய நல்ல பண்புகளையும் கற்றுக் கொண்டு செயல்படுத்துங்கள்.
 • உங்களுடைய அன்புக் கணவருக்கு ஒத்தாசையாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி, அவருக்குத் தேவையான நல்ல கருத்துகளைச் சொல்லி அவரின் துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.
 • உங்களுடைய பகுதி நேரத்தை ஒதுக்கி, கணவருடன் சேர்ந்து அழைப்பு பணிகளில் ஈடுபடுங்கள்.
 • அவசியமான நேரத்தில் அனைத்து தியாகங்களையும் செய்ய உங்கள் கணவருக்கு ஆர்வமூட்டி நீங்களும் உங்கள் குழந்தைகளும் அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் இருப்பதை நினைவுபடுத்துங்கள்.
அழகிய வீட்டுப் பராமரிப்பு
 • வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்
 • பொழுது போகாத நேரங்களில் வீட்டுப்பொருள்களை சீர்படுத்தி வையுங்கள். உங்கள் கைகளால் தயாரித்த அலங்காரப் பொருள்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துங்கள். (உங்கள் கணவர் மிக சந்தோஷம் அடைவார்).
 • தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான உணவுகளையும் புதிய வகையான உணவுகளையும் தயாரித்து உங்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுங்கள்.
 • அனைத்து வீட்டு வேலைகளையும் நேர்த்தியாகச் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
 • குழந்தைகளை எப்படி இஸ்லாமிய வழியில் வளர்ப்பது, பராமரிப்பது என்பதைக் கற்றுக்கொண்டு செயல்வடிவத்தில் வெளிப்படுத்துங்கள்.
குடும்பத்தையும் சொத்துக்களையும் பராமரித்தல்
 • கணவனுடைய பணத்தை, அவருடைய அனுமதி இல்லாமல் செலவழிக்காதீர்கள். (அது தர்மமாக இருந்தாலும் சரி. ஆனால், உங்கள் கணவர் உடன்படுவார் என்பது தெரிந்தால் செய்யலாம்).
 • வீடு, வாகனம் போன்றவற்ளை கணவன் வீட்டில் இல்லாத போது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
 • குழந்தைகளை சுத்தப்படுத்தி நல்ல ஆடைகளை அணிவித்து அழகூட்டுங்கள். குழந்தைகளுடைய பாதுகாப்பு மற்றும் கல்வி விஷயங்களில் பேணி நடந்து நல்ல பண்புகள், இஸ்லாமிய அறிவு, நபிமார்களின் சரித்திரங்கள் நபித்தோழர்களின் தியாகங்கள் ஆகியவற்றையும் போதியுங்கள்.
நல்ல மனைவி சுவர்க்கத்தின் துணைவி
 • நல்ல பெண்களுக்கு முன்மாதிரியாக நபித்தோழியர் கதீஜா, ஆயிஷா, உம்மு ஸலமா மற்றும் உம்முசுலைம் (ரலி) போன்றவர்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
 • கெட்ட பெண்களை அல்லது நடிகைகளைப் பின்பற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
 • கணவனுக்கு சமயோசித முடிவுகள் தேவையானபோது சொல்லிக் கொடுங்கள். (முதலில் அதற்கான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்).
 • கணவனுடைய திருப்தியைப் பெற்ற நிலையில் எப்பொழுதுமே இருக்க முயற்சி செய்யுங்கள்.
 • “ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள்” என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் (திர்மிதி, இப்னுமாஜா)

கருத்துகள் இல்லை:

ஒரு நாள் = 24 மணிநேரம் ' : முதலில் சொன்னது யார்..?

ஒரு நாள் என்பது 24 மணிநேரம்...! ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்...! ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்...! ....... இதெல்லாம்... எப...