லேபிள்கள்

ஞாயிறு, 29 ஜூலை, 2018

பிரச்சனைகளை அணுகும் முறைகள்

பிரச்சனைகளை அணுகும் முறைகள்

மௌலவி யூனுஸ் தப்ரீஸ்
மனிதர்களை அல்லாஹ் பிரச்சனைகளுக்கு மத்தியில் படைத்துள்ளான். அந்த பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்க வேண்டும் என்பதையும் அல்லாஹ் மிக அழகான முறையில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் மூலமாக வழிக்காட்டியுள்ளான். மார்க்கம் சொல்லும் வழிகளில் அந்த, அந்த பிரச்சனைகளை நாம் அணுகுவோம் என்றால் சம்பந்தப்பட்ட பிரச்சனையை மிக இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும்.

இரண்டு நண்பர்களுக்கு இடையில், அல்லது கணவன் மனைவிக்கு இடையில் அல்லது ஜமாத்தார்களுக்கு இடையில், சில பிரச்சனைகள் வரும். அது போல அரசியல் ரீதியாக மக்களுக்கும். அல்லது ஒரு சமுதாயத்திற்கும் வரலாம். இப்படியான சந்தர்பங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
பிரச்சனைகளை தீர்க்கும் வழிகள்


பின் வரும் குர்ஆன் வசனங்களை முதலில் கவனியுங்கள்.
முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான். (49-09)
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (49-10)
இந்த குர்ஆன் வசனங்கள் மூலம் ஒரு சமுதாயத்தில் பிரச்சனையின் காரணமாக இரண்டு குழுக்களாக பிரிந்து சண்டையிட்டுக் கொண்டால் அவர்களை சமாதானப் படுத்தி வைய்யுங்கள் என்று அல்லாஹ் நமக்கு வழிக் காட்டுகிறான். எனவே நடுநிமையான நடுவர் கூட்டம் ஒன்று சரியான முறையில் சமாதானப்படுத்தி வைக்க முயற்ச்சி செய்ய வேண்டும்.
பல வழிகளில் சமாதனத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களில் ஒரு கூட்டம் இறுதி வரை சமாதானத்திற்கு முன் வராவிட்டால், சமாதானத்திற்கு வரும் கூட்டத்துடன் நீங்கள் இணைந்து அவர்களுக்கு எதிரராக போராடுங்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
முஸ்லிம்கள் சமாதானமாகவே வாழ வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.
கணவன் மனைவி பிரச்சனை
கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியில் ஏதாவது பிரச்சனை வந்து விட்டால் உடனே தலாக் என்ற நிலைக்கு போய்விடக் கூடாது. முடிவுகள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இருக்க கூடாது.

கணவன் மனைவி முறிவுக்கு முன் பல வழிகளை இஸ்லாம் காட்டித் தருகிறது. அதைப்பற்றி அல்லாஹ் குர்ஆனில் இப்படி கூறுகிறான்.
(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான். (4-35)
இந்த வசனத்தின் மூலம் பிரச்சனைக்கு தீர்வு ஒரே அடியாக பிரிவது கிடையாது. பிரச்சனையை முடிந்தளவிற்கு சுமூகமாக பேசி தீர்த்து வைக்க முயற்ச்சி செய்ய வேண்டும்.
இரண்டு தரப்பாலும் நேர்மையான இரண்டு சாரார்கள் பேசி சமாதனப்படுத்தி வைக்க வேணடும் எனபதை படைத்தவன் சொல்லித்தருகிறான்.
மேலும் தொடர்ந்து அல்லாஹ் சொல்வதை கவனியுங்கள்.
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான். (4-34)
இந்த வசனத்திலும் தீர்வுக்கு முடிவு பிரிதல் கிடையாது, என்பதை அல்லாஹ் நமக்கு அழகாக சொல்லித் தருகிறான். மனைவி தவறு செய்யும் போது முதலாவது சிறந்த உபதேசங்களை செய்ய வேண்டும். அதற்கு மனைவி கட்டுப்படா விட்டால் இரண்டாவதாக படுக்கையிலிருந்து சற்று தள்ளி வையுங்கள் அதற்கும் மனைவி கட்டுப்படாவிட்டால் (காயம் ஏற்படாத அளவிற்கு லேசாக) அடியுங்கள்.அவைகள் அனைத்தும் செய்த பின்பும் சேர்ந்து வாழ முடியாவிட்டால் அழகிய முறையில் பிரிந்து விடுங்கள் என்று இஸ்லாம் நமக்கு வழிக்காட்டுகிறது.
இருந்தாலும் பிரியும் போதும் கூட ஒரே அடியாக பிரிந்து விடக் கூடாது படிப்படியாக தான் தலாக் சொல்ல வேண்டும்.என்று பிரச்சனைக்கு அழகான முறையில் வழிக்காட்டுகிறது. இப்படி சகல விடயத்திற்கும் இஸ்லாம் நமக்கு வழிக்காட்டுகிறது.
அணுகு முறையும் ஆர்ப்பாட்டங்களும்
அரசியல் ரீதியாகவோ, அல்லது அரசாங்க ரீதியாகவோ, அல்லது தனிப்பட்ட குழுக்கல் மூலமாகவோ சில பிரச்சனைகள் வரும் போது அந்த பிரச்சனைகளை எப்படி அணுக வேண்டும் என்று தெரியாமல் எடுத்த உடன் ஆர்ப்பாட்டங்கள் என்று களத்தில் குதிப்பதன் மூலம் பல விபரீதங்களை சம்பந்தப்பட்டவர்களும், அந்த சமுதாயமும் சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் படுகிறார்கள்.

ஒரு விடயம் எங்களுக்கு பாதகமாக வருகிறது என்றால் முதலில் அந்த விடயத்தை யார், ஏன் கொண்டு வந்துள்ளார்கள் அல்லது ஏன் எங்களுக்கு எதிராக துாண்டுகிறார்கள் என்பதை நிதானமாக சிந்தித்து அதற்கான ஆலோசனைகள் செய்து இறுதி முடிவெடுக்க வேண்டும்.
ஒரு தனி நபரின் பிரச்சனை என்றால் அதை எப்படி அணுகுவது, அல்லது ஒரு குழுவின் பிரச்சனை என்றால அந்த பிரச்சனையை எப்படி அணுகுவது. அல்லது ஒரு அரசியல் சார்பான பிரச்சனை என்றால் அதை எப்படி அணுகுவது என்பதை நிதானமாக சிந்தித்து களத்தில் இறங்க வேண்டும்.
பிரச்சனை ஏற்பட்டவுடன் முதலில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று சகலரும் சேர்ந்து ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும்.
குறிப்பாக நாட்டுக்கு நாடு சட்டங்கள், அதிகாரங்கள் வித்தியாசப்படும் அதை சரியாக கவனித்து சாணக்கியமாக செயல் படவேண்டும்.
இஸ்லாம் நமக்கு அப்படி தான் வழிக்காட்டுகிறது. முதலில் பேச்சுவார்த்தை அந்த பேச்சுவார்த்தை தோல்வியுறும் சந்தர்ப்பத்தில். அடுத்ததாக என்ன செய்யலாம் என்பதை ஆலோசனையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதாரங்களை கவனிப்போம்
சுலைமான் நபி ஆட்சி காலத்தில் ஸபவு நாட்டு அரசியுடன் களத்தில் இறங்கி போர் செய்யும் முன் ஹூத், ஹூத் பறவையின் மூலம் ஒரு கடிதத்தை கொடுத்து தூதாக அனுப்புகிறார்கள். அந்த கடிதத்தில் முதலில் சமாதானமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வரும்படியும், இல்லாவிட்டால் போர் நடக்கும் என்றும் எச்சரிக்கை கலந்த கடிதம் தூதாக செல்கிறது. அழகிய அணுகுமுறையால் அந்த நாட்டு அரசி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறாள்.

சுலைமான் நபி எடுத்த எடுப்பிலே யுத்தத்தில் இறங்கவில்லை, எதை எப்படி அணுக வேண்டும் என்று தஃவா களத்தில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
நபியவர்கள் காலத்து ஆதாரங்கள்
நபி (ஸல்) அவர்கள் பல நாட்டு அரசர்களுக்கு முதலில் இஸ்லாத்தைப் பற்றி கடிதம் அனுப்பினார்கள். பிரச்சனைகள் தலை துாக்கும் போது தனது தோழர்களோடு கலந்தாலோசனை செய்து முடிவெடுப்பார்கள்.

பத்ரு யுத்தம் செய்வதற்கு முன் பல தடவைகள் ஸஹாபாக்களுடன் ஆலோசனை செய்த பிறகு யுத்ததிற்கு இறங்கினார்கள்.
ஹுதைபிய்யா உடன் படிக்கையில் பல விதமான குழப்பத்திற்கு மத்தியிலும் நிதானமான முறையில் முடிவெடுத்து வெற்றி கண்டார்கள். நாங்கள் அதிக பலம் உடையவர்களாக இருக்கிறோம் யுத்தம் செய்வோம் என்று ஸஹாபக்கள் நபியவர்களிடத்தில் வேண்டிய போதும் பிரச்சனையை நபியவர்கள் விரும்பவில்லை. சாணக்கியமாக வெற்றிக் கண்டார்கள்.
எனவே எந்த சமுதாய பிரச்சனையாக இருந்தாலும் அது சம்பந்தமான துறையினர்களோடு சேர்ந்து வெற்றிகான முயற்ச்சி செய்ய வேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

வெள்ளி, 27 ஜூலை, 2018

வீண் விரயத்தைத் தவிர்ப்போம்!

வீண் விரயத்தைத் தவிர்ப்போம்!

வீண் விரயம் என்றால் என்ன என்பது பற்றி அர்ராகிப் என்ற அறிஞர் கூறும்போது:
"மனிதன் புரியும் அனைத்து காரியங்களிலும் எல்லை மீறுதலாகும்" என்கிறார்.
(அல்முப்ரதாத் பீ கரீபில் குர்ஆன்)

வீண்விரயத்தைச் சுட்டிக்காட்டும் முகமாக அரபு மொழியில் இரு வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை الإِسْرَاف ، التَّبْذِيْر ஆகியனவாகும். இவற்றுள் الإسْرَاف என்பது தனக்கு அவசியமான விடயங்களில் அளவுக்கதிகமாகச் செலவிடுவதைக் குறிக்கும். மற்றும், التَّبْذِيْر என்பது அவசியமற்ற விடயங்களில் ஒன்றைச் செலவு செய்வதாகும். இமாம் ஷாபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நவின்றார்கள்: "தனக்கு உரிமையில்லாதவற்றில் பணத்தை செலவு செய்தல் التبذير ஆகும்." (அல்ஜாமிஉ லிஅஹ்காமில் குர்ஆன்)


வீண்விரயம் தொடர்பாக அல்குர்ஆனில்
1. "இன்னும், (வீண்) விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்." (அல்அன்ஆம்: 141)
2. "மேலும், (அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாக) உண்ணுங்கள். மேலும், பருகுங்கள். (ஆனால்) வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்கமாட்டான்." (அல்அஃராஃப்: 31)
3. "(செல்வத்தை) அளவு கடந்து வீண் விரயம் செய்யாதுமிருப்பீராக! நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ, தன் இரட்சகனுக்கு நன்றி செலுத்தா(து மாறு செய்)தவனாக இருக்கின்றான்." (பனீ இஸ்ராயீல்: 26, 27)
4. "இன்னும், அவர்கள் எத்தகையோரெனில் அவர்கள் செலவு செய்தால், வீண் விரயம் செய்யமாட்டார்கள். (ஒரேயடியாக) சுருக்கிக் கொள்ளவும் மாட்டார்கள். அ(வ்வாறு செலவு செய்வதான)து அவ்விரண்டு நிலைகளுக்கும் மத்தியிலிருக்கும்." (அல்ஃபுர்கான்: 67)
வீண் விரயத்தை எச்சரிக்கும் சுன்னாவின் வரிகள்
• "வீண் விரயம் அல்லது பெருமை ஆகியன கலக்காத விதத்தில் உண்ணுங்கள்! பருகுங்கள்! தர்மம் செய்யுங்கள்! அணியுங்கள்!" (நஸாயி, இப்னு மாஜா)
• "(அல்லாஹ் உங்களிடத்தில்) செவியுற்றவற்றையெல்லாம் கதைப்பதையும் அதிகமாகக் கேள்வி கேட்பதையும் பணத்தை வீணாகச் செலவு செய்வதையும் வெறுக்கின்றான்." (புகாரி, முஸ்லிம்)
• "நான்கு விடயங்கள் குறித்து விசரிக்கப்படும் வரை ஓர் அடியானின் பாதம் மறுமைநாளில் அசையாது நிலைபெற்றிருக்கும்…. (அவற்றில் ஒன்று) அவனுடைய பணத்தைப் பற்றி விசாரிக்கப்படும். அதை எங்கிருந்து சம்பாதித்தான் என்றும் எவ்வழிகளில் செலவு செய்தான் என்பது பற்றியும் வினவப்படும்." (ஸஹீஹுத் தர்கீப்)
இப்படி பல செய்திகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
வீண் விரயம் குறித்து ஸலபுஸ் ஸாலிஹீன்கள் என்ன கூறுகிறார்கள்?!….
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: "நீ நாடியதைச் சாப்பிடு! நீ நாடியதை அணி! (அதன் போது) இருபண்புகள் உன்னைப் பீடிக்காது இருக்கட்டும்! (அவை) வீண் விரயமும் பெருமையுமாகும்." (இப்னு அபீ ஷைபா)
உஸ்மான் இப்னுல் அஸ்வத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "நான் ஒரு முறை முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடன் கஃபாவைத் தவாபு செய்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள்: ஒருவர் அல்லாஹ்வை வழிப்படுகின்ற விடயத்தில் பத்தாயிரம் திர்ஹம்களைச் செலவு செய்தாலும் அது வீண் விரயமாகக் கருதப்படமாட்டாது, மாறாக, அவர் ஒரு திர்ஹமையேனும் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் செலவு செய்தால், வீண்விரயம் செய்யக்கூடிய மக்களில் ஒருவராக அது அவரை ஆக்கிவிடும்" என்றார்கள். (தப்ஸீருல் குர்ஆன்)
வீண் விரயத்தின் தோற்றப்பாடுகள்:
வீண் விரயமானது பல்வேறுபட்ட அமைப்புக்களில் எமது சமுகத்திற்கு மத்தியில் தலைவிரித்தாடுகின்றது. அந்த அடிப்படையில்
1. பாவச் செயல்களைக் கொண்டு மக்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கால எல்லையை வீணாகக் கழித்தல். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து (பாவங்கள் செய்து)விட்டோராகிய என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளிலிருந்து (அவன் மன்னிப்பை விட்டும்) நிராசையற்றோராக நீங்கள் ஆகிவிட வேண்டாம்." (அல்ஜுமர்: 53)
2. உணவில் வீண்விரயமும் அளவுகடந்து வயிறு நிரம்ப உண்ணுதலும்
3. வுழு மற்றும் சுத்தம் விடயத்தில் நீரை வீண்விரயம் செய்தல்.
4. மின்சாரம் மற்றும் எரிபொருட்கள் உபயோகங்களின் போது வீண்விரயம் செய்தல்.
5. விருந்துபசாரங்கள், ஆடை அணிகலங்கள் போன்றவற்றில் நிகழும் வீண் விரயங்கள் என்று பட்டியல் படுத்திக் கொண்டே பேகலாம்.
வீண் விரயத்திற்கான காரணங்கள்:
வீண் விரயம் நிகழ்வதற்கான காரணங்களைப் பின்வருமாறு இனங்காட்டலாம்.
1. அறியாமை
2. சூழல் தாக்கம்
3. நெருக்கடிக்குப் பின் உண்டாகக் கூடிய வசதியான வாழ்க்கை
4. மறுமை தொடர்பான பொடுபோக்கு
5. வீண் விரயம் செய்யக்கூடியவர்களுடனான தோழமை.
6. சிறுபராயத்தில் இருந்து வீண் விரயம் தொடர்பாகக் கற்றுக் கொடுக்கப்படாமை. இப்படிப் பல காரணங்களைக் குறிப்பிடலாம்.
எனவே, எங்களுடைய விடயங்களில் எப்பொழுதும் நடுநிலைமையைப் பேணுவோம். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "மேலும், (உலோபியைப் போன்று செலவு செய்யாது) உம்முடைய கையை உம்முடைய கழுத்தில் கட்டப்பட்டதாக ஆக்கிக் கொள்ளாதீர்! அன்றியும், (உம்மிடம் இருப்பதை செலவழித்துவிட்டு) அ(க்கையான)தை ஒரே விரிப்பாக விரித்தும் விடாதீர்! அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராக, முடைப்பட்டவராக உட்கார்ந்துவிடுவீர்." (அல்இஸ்ரா: 29)
எனவே, எங்களுடைய செலவீனங்களில் அளவு கடந்து செல்லாமலும் எதையும் செலவு செய்யாது உலோபித்தனமாக இருக்காமலும் நடுநிலையாகச் செயற்பட அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்பாளிப்பானாக!
நன்றி: salaf.co


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

புதன், 25 ஜூலை, 2018

பெருகி வரும் போதைப் பாவனை

பெருகி வரும் போதைப் பாவனை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
உலக அழிவின் அடையாளங்களில் போதைப் பாவனை பெருகுவதும் ஒன்றாகும். அதை நாம் இன்று நிதர்சனமாகக் கண்டு வருகின்றோம். ஆரம்ப காலத்தில் சாராயம், கள் என்றிருந்த போதை இன்று பல்வேறு வடிவம் பெற்று புதுப்புது வடிவங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றது.
திடீர் பணக்காரனாக வேண்டும் என ஆசைப்படுபவர்கள் போதை வியாபாரத்தில் ஈடுபடுவதை அதற்கான இலகுவான வழியாகப் பார்க்கின்றனர். போதை வியாபார மாபியாக்கள் அரசியல் பண பலத்துடன் தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் நகர்ப்புறங்களைக் குறிவைத்த இவர்கள் இப்போது கிராமப் புறங்களையும் கூட குறிவைத்து குழிபறித்து வருகின்றனர்.
அப்பாவி இளைஞர்கள் மட்டுமன்றி யுவதிகள் கூட போதை முகவர்களின் வியாபார யுக்தியில் வீழ்ந்து வருகின்றனர்.
அடிமைப்பட ஆசையா?


உலகில் சுதந்திரத்திற்காகத்தான் அதிகமான உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளன. மனிதன் யாருக்கும் அடிமைப்பட்டு வாழ விரும்புவதில்லை. கட்டுப்பட்டு வாழக் கூட விரும்புவதில்லை. பெற்றோரின் கட்டுப்பாட்டை விரும்பாத பிள்ளைகள் ஆசிரியர்களின் கட்டுப் பாட்டை விரும்பாத மாணவர்கள், கணவனின் கட்டுப்பாட்டை விரும்பாத மனைவி…. என்று இப்படியே பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. நிலைமை இப்படியிருக்க, போதைக்கு ஒருவன் அடிமையாக பணத்தை செலவழிக்கின்றான் என்றால் இது எவ்வளவு பேதமையானது?

உங்களை நீங்கள் அடிமையாக்க விரும்புகின்றீர்களா? இல்லையென்றால் விளையாட்டுக்காகக் கூட போதையைத் தொட்டும் பார்த்துவிடாதீர்கள்.
அறிவை இழக்க ஆசையா?
மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய மிகப் பெரும் அருள்களில் ஒன்றுதான் அறிவாகும். இந்த அறிவை வளர்ப்பதற்காகவே இன்று மனிதன் பெரும் முயற்சிகள் செய்து கொண்டிருக்கின்றான். அறிவு வளர்ச்சிதான் மனித இனத்தின் வளர்ச்சியாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால், போதை மனித அறிவை மழுங்கடிக்கக் கூடியது. பணம் கொடுத்து கொஞ்ச நேரம் பைத்தியமாக இருப்பது எவ்வளவு பைத்தியகாரத்தனமானது! இது குறித்து இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறும் போது, பின்வருமாறு கூறுகின்றார்.

"பணம் கொடுத்து வாங்கக் கூடியதாக அறிவு இருந்தால் மக்கள் எவ்வளவு கொடுத்தும் வாங்குவார்கள். இப்படியிருக்க, அறிவை கெடுக்க கூடியதை பணம் கொடுத்து வாங்குவது ஆச்சரியமாக உள்ளது."
எனவே, இளைஞர்களே! உங்கள் அறிவை மழுங்கடித்து கொஞ்ச நேரம் உங்களைப் பைத்தியமாக்கும் போதையின் பக்கம் எட்டியும் பார்த்துவிடாதீர்கள்.
காரணங்கள்: இன்றைய இளம் சந்ததிகள் போதையின் பால் ஈர்க்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை இனம் கண்டு களைவது காலத்தின் கட்டாயமாகும்.
1. சரியான வளர்ப்பு முறையின்மை:
குடும்ப சூழல் இஸ்லாமிய மயப்படாத குடும்ப உறுப்பினர்கள் மிக விரைவாக போதைக்கு அடிமையாகலாம். சில பெற்றோர்கள் போதைப் பழக்கமுள்ளவர்களாக இருக்கலாம். தந்தை, சிலபோது தாயும் கூட குடிப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கலாம். இது குடும்ப உறுப்பினர்களையும் கெடுக்கும்.

சில தந்தையர்கள் தமது பிள்ளைகளிடம் சிகரட் வாங்கி வருமாறு கூறி கடைக்கு அனுப்புகின்றனர். இத்தகைய சிறுவர்கள் விரைவாக புகைத்தலுக்கு அடிமையாகலாம். புகைத்தலைத் தடுப்பதற்காக இலங்கை அரசு வரவேற்கத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. சிறுவர்களுக்கு சிகரட் விற்க முடியாது, பொது இடங்களில் புகைக்க முடியாதுபோன்ற சட்ட நடவடிக்கைகள் உள்ளன. இதே போன்று மது, போதைப் பாவனைக்கு எதிராகவும் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படல் வேண்டும். குறைந்த பட்சம் பொது இடங்களில் குடிக்க முடியாது, பொது இடத்தில் போதையுடன் நடமாடுவது தண்டனைக்குரிய குற்றம் என்ற அடிப்படையில் சட்டங்கள் இறுக்கப்பட வேண்டும்.
2. தீய நட்பு:
போதைப் பாவனை இளைஞர்களிடம் அதிகமாகப் பரவுவதில் தீய நட்புக்கு முக்கிய பங்குண்டு. நட்புக்காக மது அருந்துவோர், சிகரட் பிடிப்போர் உள்ளனர். போதை மாபியாக்களின் முகவர்கள் நண்பர்களாகப் பழகி போதைப் பழக்கத்தை ஏற்படுத்தி தமது வாடிக்கையாளர்களை அதிகரித்துக் கொள்கின்றனர். எனவே, இளைஞர்கள் போதைக்குத் தூண்டும் நட்புக்களைப் புறக்கணிக்க வேண்டும். அவர்கள் உங்கள் நண்பர்கள் அல்லர். மாறாக பகிரங்க எதிரிகள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

3. கெட்ட சூழல்:
பெரும்பாலும் தந்தை தொழில் செய்யும் இடத்திற்கு அருகில் குடியிருக்கவே அதிகமானவர்கள் விரும்புகின்றனர். மற்றும் சிலர் பிள்ளைகள் படிக்கும் பாடசாலைக்கு அருகில் குடியிருக்க விரும்புகின்றனர். நாம் குடியிருக்கும் சூழல் நல்லதா என்பதை பெரிதும் பார்ப்பதில்லை. வசதியையும் இலகுவையும் மட்டுமே பார்க்கின்றோம்.

போதைப் பாவனையாளர்கள் அல்லது அது போன்ற வியாபார நிலையங்கள் அதிகமாக உள்ள இடங்களில் வாழும் மக்கள் வெகு விரைவாக போதைக்கு அடிமையாகின்றனர். எனவே, மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப் படுவதைத் தவிர்க்க வேண்டும். அல்லது அத்தகைய இடங்களில் குடியிருப்பதை நாம் தவிர்க்க வேண்டும்.
4. தொலைத் தொடர்பு சாதனங்கள்:
மீடியாக்கள் இன்று எல்லாத் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஜாம்பவானாகத் திகழ்கின்றது. அந்த வகையில் போதைப் பாவனையை ஊக்குவிக்கும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் தொடராக மீடியாக்களில் இடம்பெறுகின்றன. வளர்ந்து வரும் இளைய சமூகத்தின் ஆடை, பேச்சு, நடையுடை பாவனைஅனைத்திலும் சினிமா இன்று பெரும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது. இத்தகைய தாக்கம் மிக்க சினிமா போதைப் பாவனையை ஊக்குவிக்கின்றது. போதைப் பாவனையை ஹீரோயிசமாகவும், ஸ்டைலாகவும், கலாசாரமாகவும் இன்னும் இன்னோரன்ன கோணங்களில் காட்டி இளம் சமூகத்தை தவறான பாதையில் செலுத்தி வருகின்றது.

சினிமாக்களை ஆரம்பிக்கும் போதும் இடைவேளை விடும் போதும் 'மது அருந்துவது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். புகை பிடிப்பது உயிரைக் கொல்லும்' என்ற விளம்பர வாசகத்தைப் போடுகின்றனர். ஆனால், அந்த சினிமாக் காட்சியில் பெரும்பாலான இடங்களில் மது மற்றும் புகை என்பன மேற்கூறிய வாசகங் களை மழுங்கடிக்கச் செய்து போதையை மனதில் நிறுத்தி வைக்கும் அளவுக்கு மதுவினதும் புகையினதும் விளம்பரம் உள்ளது என்றால் மிகையன்று.
எனவே, மக்களைத் தவறான வழியில் செலுத்தும் பொழுதுபோக்குகள், விளம்பரங்கள் போன்ற அனைத்தும் தடுக்கப்படல் வேண்டும். ஊடகச் சுதந்திரம் என்ற போர்வைக்குள் ஊடகங்கள் செய்யும் சமூக கட்டமைப்பைச் சிதைக்கும செயற்பாடுகள் இனங்காணப்பட்டு அவை தடுக்கப்பட வேண்டும்.
இன்றைய உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சினைகளில் போதைப் பாவனையும் ஒன்றாகும். இதைத் தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அத்தனையையும் தவிடு பொடியாக்கிக் கொண்டு அது முந்திச் செல்வதற்கு முக்கியமாக நாட்டின் அரசியல் தலைவர்கள் மற்றும் இலஞ்சமே வாழ்க்கை என்ற கதியில் இருக்கும் உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஒத்துழைப்புக் களே காரணமாகும்.
எனவே, போதை வியாபாரிகள் சமூகத் தலைவர்களாகவாவது இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
அத்துடன், அரசுகளே மதுக் கடைகளை எடுத்து நடாத்தும் நிலை இருக்கக் கூடாது. மதுபான விற்பனை மூலம் அரசுக்கு வருமானம் வருவதாக வாதிக்கப்படுகின்றது. அந்த வருமானத்தை விட அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்களே அதிகமானதாகும். இதை ஏன் கொஞ்சமாவது சிந்திப்பதில்லை?
போதையால் நடக்கும் விபத்துக்கள், கலவரங்கள், வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகள், குடும்ப முறிவுகள், கொலை, கொள்ளை, திருட்டு, கடத்தல், கற்பழிப்பு…. போன்ற பெரும் குற்றச் செயல்கள் மட்டுமன்றி அதனால் ஏற்படும் பாரிய நோய்கள் என அனைத்தும் நாட்டுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்துகின்றன.
நாட்டின் பெறுமதியான மனித வளம் சீரழிகின்றது. எதிர்கால சந்ததிகளின் முன்னேற்றம் தடைப்படுகின்றது. நாடு நலமாக இருக்க வேண்டும் என்றால் நாட்டு மக்கள் முதலில் நல்ல தேகாரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் உழைப்பு உயிர்பெற்று நாடு நல்ல வருமானத்தைப் பெறுவது மாத்திரமின்றி போதையால் நாளுக்கு நாள் பெருகும் நோய்களுக்கான செலவினங்களும் குறைந்து நாட்டின் வருமானம் இன்னும் அதிகரிக்கும்.
பெண்கள் வாழ்வின் நிம்மதியை இழக்கின்றனர். குடிகாரத் தந்தையர்களின் பிள்ளைகள் கல்வியை, சமூக அந்தஸ்தை இழக்கின்றனர். அண்டை அயலவர்கள் கூட நெருங்கிப் பழகுவதையும் இவர்களின் பிள்ளைகளுடன் சேர்வதையும் வெறுக்கின்றனர்.
நாட்டில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு குறிப்பாக தந்தையர்களாலேயே சொந்த மகள்கள் கற்பிழந்தும் தந்தையின் வாரிசைச் சுமந்தும் அவமானத் தைச் சந்தித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை சர்வ சாதாரணமாகவே இப்போது நடைபெற்று வருகின்றது. இவற்றுக் கெல்லாம் மூல காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் போதை என்ற நாமம்தான் அடிப்படையாகவும் முதன்மையானதாகவும் இருக்கின்றது.
எனவே, நாட்டின் ஒட்டுமொத்த நலனையும் கருத்திற் கொண்டு முழுமையான மது ஒழிப்புத் திட்டத்தை அரசுகள் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
நாடும் நாட்டு மக்களும் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் ஒற்றுமையாகவும் வாழ முழுமையான மது ஒழிப்புத் திட்டமே தீர்க்கமான முடிவாகும். அதிகாரத்தில் உள்ளோர் இதில் அக்கறை செலுத்துவார்களா?


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

திங்கள், 23 ஜூலை, 2018

ஆப்பிள் ஆயுளைக் கூட்டும்… வினிகர் ஆரோக்கியம் காக்கும்!

ஆப்பிள் ஆயுளைக் கூட்டும்வினிகர் ஆரோக்கியம் காக்கும்!
ஆப்பிள் சிடர் வினிகர் தரும் பலன்கள் ஒன்று, இரண்டல்லஏராளம்! அவை
* ஆப்பிள் சிடர் வினிகரில், `பெக்டின்' (Pectin) என்னும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. வயிற்றுப்போக்கை சரிசெய்யக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. நீங்கள் பருகும் எலுமிச்சைச் சாற்றிலோ, ஆரஞ்சு சாற்றிலோ ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு சரியாகும்.
* இரைப்பை அழற்சி, வீக்கம், அஜீரணம் ஆகியவற்றையும் குணப்படுத்தும். இது குடலின் இயக்கங்களை ஊக்குவிப்பதால் மலச்சிக்கல் நீங்கும். வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து, சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் குடித்துவர, உணவு எளிதில் செரிமானம் ஆகிவிடும் .
* இது மூக்கடைப்பையும் சரி செய்யும். அத்துடன் மூக்கிலுள்ள மியூகஸை உடைத்து சைனஸைக் குறைக்கும். வெதுவெதுப்பான நீரில் 5 மி.லி அளவுக்கு வெறும் ஆப்பிள் சிடர் வினிகரை மட்டும் கலந்து குடித்தால் சைனஸ் குறையும்.

* அமில இயல்புகளைக்கொண்ட ஆப்பிள் சிடர் வினிகர் வாய் மற்றும் ஈறுகளில் மறைந்துள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தைப் போக்கி, சுவாசப் புத்துணர்வைத் தரும். காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து 10 நொடிகள் வரை வாய் கொப்பளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யவேண்டும். இப்படிச் செய்துவர, கிருமிகள் அழிவதோடு, பற்களிலுள்ள கறைகள் நீங்கி வெண்மையாகப் பளிச்சிடும். ஆனால், இதை 15 நாட்களுக்கு ஒரு முறை செய்தால் போதுமானது .
* இதிலுள்ள கிருமி நாசினி பண்புகள் தோல் மற்றும் நகங்களிலுள்ள கிருமிகளையும் பூஞ்சைகளையும் அழிக்கக்கூடியவை. ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்த வெதுவெதுப்பான நீரில் கால்களை 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் சுத்தமான நீரால் கால்களைக் கழுவிவர கால் மற்றும் பாதத்தில் உள்ள பூஞ்சைகள் அழிந்துவிடும்.
* முகத்தில் உள்ள கருமை, கரும்புள்ளிகள் ஆகியவற்றைச் சரிசெய்து, முகத்தைப் பளபளப்பாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும். தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து அதைச் சிறிய பஞ்சால் முகத்தில் ஆங்காங்கே ஒற்றி எடுத்து, 10 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், முகம் பளபளப்பாகவும் சுருக்கங்கள் வராமலும் தடுக்கும்.
* இது, தலையிலுள்ள பொடுகை நீக்குவதோடு, அடர்த்தி இல்லாத முடியை அடர்த்தியாக்கவும் உதவும். தலையில் ஒவ்வொரு பகுதியாக வகுடு எடுத்து அங்கே  தண்ணீரில் நனைத்த ஆப்பிள் சிடர் வினிகரை அப்ளை செய்ய வேண்டும். பின்னர் வெந்நீரில் நனைத்த துண்டை நன்கு பிழிந்து, தலையைச் சுற்றிக் கட்ட வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து தலையை அலச, முடி உதிர்வது கட்டுப்படும்.
* சளி, இருமல், தொண்டைப் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வை அளிக்கும். ஒரு சிறிய துண்டு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, ஒரு கிளாஸ்  வெதுவெதுப்பான நீர், ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து குடிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.
* இதிலுள்ள அசிடிக் ஆசிட் (Acetic Acid) உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை சரிப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கத் துணைபுரிகிறது.
தினமும் இரண்டு லிட்டர் நீரில் 30 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து அடிக்கடி குடித்துவர, அதிகப்படியான நச்சுக்கள் மற்றும் கொழுப்புகள் வெளியேறும்.
கவனம்
ஆப்பிள் சிடர் வினிகர் பல நன்மைகளைத் தந்தாலும், அளவுக்கு அதிகமாக உபயோகிப்பதால் தலைவலி, ஏப்பம், வயிற்றுப்போக்கு, உணவுக்குழாய் மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்படும். நாள் ஒன்றுக்கு ஒரு டீஸ்பூன் அளவுக்கு மேல் வேண்டாம். தண்ணீர் மற்றும் ஜூஸ்களில் கலந்து குடிக்கும்போதும், முகத்தில் பூசும்போதும் அதன் வீரியம் குறைந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. அமிலத்தன்மை அதிகமாக இருப்பவர்கள், மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளலாம்.
நன்றி விகடன்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

சனி, 21 ஜூலை, 2018

நீதியான அறிஞர்கள் [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

நீதியான அறிஞர்கள் [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

3:18 – "நிச்சயமாக (உண்மையாக) வணங்கப் படத் தகுதியானவன் தன்னைத் தவிர வேறு யாருமில்லை என்று நீதியை நிலைநாட்டி யவனாக அல்லாஹ் சாட்சி கூறுகிறான். மேலும், வானவர்களும் அறிவுடையோரும் (சாட்சி கூறுகின்றனர். உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் யாவற்றையும் மிகைத்த வனும் ஞானமிக்கவனுமாவான்."
இந்த வசனம் அறிவின் சிறப்பை விளக்குகின்றது. அதே நேரம் ஏகத்துவத்தின் உண்மைத் தன்மையையும் விளக்குகின்றது. அல்லாஹ்வுடனும் மலக்குகளுடனும் அறிஞர்கள் இங்கே இணைத்துப் பேசப்படுகின்றனர். அதே வேளை எல்லா அறிஞர்களும் இந்த சிறப்பைப் பெற முடியாது. அறிவுடன் நீதியான நிலைப்பாடும் இருக்க வேண்டும் என்பதும் உணர்த்தப்படுகின்றது.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என அல்லாஹ்வும் மலக்குகளும் சாட்சி சொல்லும் அதே வேளை நீதியான, நியாயமான பார்வையுடைய அறிஞர்களும், இறைவன் ஒருவன்தான் என்ற ஏகத்துவக் கோட்பாடுதான் உண்மையானது என்று சாட்சி சொல்வார்கள் என இந்த வசனம் கூறுவதன் மூலம் நீதியான, நியாயமான அறிவுடையோர் பல தெய்வ வழிபாட்டை ஆதரிக்க மாட்டார்கள் என்பதையும் உணர்த்தி நிற்கின்றது.


விதண்டாவாதம் செய்பவர்களுடன் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை:
3:20 – (நபியே!) உம்மிடம் அவர்கள் தர்க்கித்தால், 'என் முகத்தை அல்லாஹ்வுக்கே அடிபணியச் செய்துவிட்டேன்ளூ என்னைப் பின்பற்றுவோரும் (அவ்வாறே செய்து விட்டனர்)' என்று கூறுவீராக! வேதம் கொடுக்கப்பட்டோரிடமும் (எழுத்தறிவற்ற) உம்மிகளிடமும் முஸ்லிம்களாகிவிட்டீர்களா? என்று கேட்பீராக! அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழி பெற்றுவிட்டனர். அவர்கள் புறக் கணித்தால், நிச்சயமாக எடுத்துரைப்பதுதான் உம்மீதுள்ள கடமையாகும். மேலும், அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவனாவான்.
விவாதிப்பவர்களுடனெல்லாம் எதிர்வாதம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதுதான் ஒருவன் சத்தியத்த்pல் இருக்கின்றான் என்பதற்கான சான்று என சிலர் நினைக்கின்றனர். அது தவறானது என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது.
நபி(ஸல்) அவர்களுடன் காபிர்களும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும் தர்க்கம் செய்தால் எதிர்வாதம் செய்யாமல் நானும் என்னைப் பின்பற்றுபவர்களும் அல்லாஹ்வின்பாலே எமது முகத்தைத் திருப்பிவிட்டோம். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று கேட்கச் சொல்கின்றது.
எனவே, விவாதம் செய்தால் எதிர்வாதம் செய்துதான் ஆக வேண்டும் என்பதற்கில்லை என்பதை புரியலாம்.
ஈஸா நபி விடயத்தில் தர்க்கம் செய்பவர்களுடன் விவாதம் செய்ய கட்டளை யிடாமல் 'முபாஹலா' அழிவுச் சத்தியத்திற்கு அழைக்குமாறு 3:61 வசனம் கட்டளையிடுகின்றது.
அல்லாஹ்விடத்தில் தர்க்கிப்பவர்களிடம் எங்கள் செயல்கள் எங்களுக்கு, உங்கள் செயல்கள் உங்களுக்கு எனக் கூறுமாறு குர்ஆன் கட்டளையிடுகின்றது. (பார்க்க 2:139)

எனவே, விவாதத்திற்கு அழைப்பவர்கள் அல்லது விவாதிக்க முற்படுபவர்களுடனெல்லாம் விவாதித்துத்தான் ஆக வேண்டும் என்பதற்கில்லை. அழைப்பவர்களுடனெல்லாம் விவாதிக்கச் செல்வது சத்தியத்திறகான அளவு கோலும் அல்ல என்பதை இவற்றிலிருந்து புரியலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

வியாழன், 19 ஜூலை, 2018

(மழை வேண்டித் தொழுகை)

 (மழை வேண்டித் தொழுகை)

ஸலாதுல் இஸ்திஸ்கா
(மழை வேண்டித் தொழுகை)

வரட்சியின் போது அல்லாஹ்விடம் மழையை வேண்டுவதற்காகத் தொழப்படும் தொழுகையே மழைவேண்டித் தொழுகை என அழைக்கப்படும். வரட்சியின் போது மக்கள், உயிரினங்கள், பயிர்-பச்சைகள் நீரின்றி வாடும் போது மழை வேண்டித் தொழுவது சுன்னா என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஏகோபித்த நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால், தொழும் முறை, அதனுடன் தொடர்புபட்ட மற்றும் பல விடயங்களில் அபிப்பிராய பேதங்கள் திகழ்கின்றன.
மழை இன்மையால் பூமி வரண்டு மக்கள் சிரமப்பட்டால் மழைவேண்டித் தொழுவது முஸ்தஹப்பாகும். இச்சந்தர்ப்பத்தில் இமாமுடன் மக்கள் முஸல்லாஹ் தொழுமிடத்துக்குச் செல்வார்கள். அவர் மக்களுக்கு இரண்டு ரக்அத்துக்கள் தொழுவிப்பார். குத்பாவும் இடம்பெறும்.
அப்துல்லாஹ் இப்னு ஸைத்(வ) அறிவித்தார்: 'நபி(ச) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கத் திடலுக்குச் சென்றார்கள். கிப்லாவை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். தம் மேலாடையை மாற்றிப்போட்டார்கள்.


மற்றோர் அறிவிப்பில் தம் ஆடையின் வலப்புறத்தை இடது தோளின் மீது போட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.'
(புஹாரி 1027, முஸ்லிம் 894)

இந்த ஹதீஸின் அடிப்படையில் மழை வேண்டித் தொழுவதற்காகத் திடலுக்குச் செல்வது சுன்னத்தாகும். இதில் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் மட்டும் மாற்றுக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். மழை வேண்டித் தொழுவதற்காக திடலுக்குச் செல்லவும் தேவையில்லை, தொழவும் தேவையில்லை என்று கருதுகின்றார்கள். நபி(ச) அவர்கள் மழை வேண்டித் தொழும் திடலுக்குச் செல்லாமலும் மழை வேண்டிப் பிரார்த்தனை செய்துள்ளதாக வந்துள்ள ஹதீஸ்களை இதற்கு ஆதாரமாகக் கொள்கின்றார்கள்.
நபி(ச) அவர்கள் மஸ்ஜிதில் வைத்து வெறும் பிரார்த்தனை மூலமாக மழை வேண்டியுள்ளார்கள் என்பது மழை வேண்டித் தொழுதுள்ளதையும் அதற்காகத் திடலுக்குச் சென்றுள்ளதையும் மறுப்பதற்கான ஆதாரமாகக் கொள்ள முடியாது. எனவே, இது குறித்த இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் நிலைப்பாடு மிகவும் பலவீனமானதாகும்.
1. தொழுகைக்கு முன்னரோ பின்னரோ குத்பா உரை நிகழ்த்துதல்:
மழை வேண்டித் தொழுகைக்கு குத்பா உண்டு என்பதில் ஏகோபித்த கருத்து நிலவுகின்றது. இமாம்களான மாலிக், ஷாபிஈ, அஹ்மத் (ரஹ்) மற்றும் அனேக அறிஞர்கள் தொழுகைக்குப் பின்னர் குத்பா நடைபெற வேண்டும் என்ற கருத்தில் உள்ளனர்.
'நபி(ச) அவர்கள் மழை வேண்டித் தொழுவதற்காக முஸல்லாவுக்கு வந்தார்கள். கிப்லாவை முன்னோக்கும் போது தமது மேலாடையை மாற்றிப் போட்டார்கள். குத்பாவுக்கு முன்னர் தொழுகையை ஆரம்பித்தார்கள். பின்னர் கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்தார்கள்.'
(அஹ்மத்: 441)

இந்த அறிவிப்பில் முதலில் தொழுகையும் பின்னர் குத்பாவும் இடம்பெற வேண்டும் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மழை வேண்டித் தொழும் தொழுகை பற்றி வரும் அறிவிப்புக்களில் 'பெருநாள் தொழுகை போல இரண்டு ரக்அத்துக்கள் தொழுவிப்பார்கள்' என்று இடம்பெற்றுள்ளது. (இப்னு குஸைமா 1405, அபூதாவூத் 1165, இப்னு மாஜா 1266)
இங்கு பெருநாள் தொழுகை போன்று தொழுதார்கள் என்றால் மேலதிக தக்பீர் கூறித் தொழுதார்கள் என்பது அர்த்தம் அல்ல. பெருநாள் தொழுகை போன்று முதலில் தொழுகையும் இரண்டாவது குத்பாவும் செய்தார்கள். தொழுகையில் கிராஅத்தை சப்தமிட்டு ஓதினார்கள் என்பதே அர்த்தமாகும். இந்த அடிப்படையில் முதலில் தொழுகை, இரண்டாவது குத்பா என்ற அடிப்படையிலும் குத்பா நிகழ்த்தலாம்.
இமாம் மாலிக் (ரஹ்) போன்ற அறிஞர்கள் முதலில் குத்பாவும் பின்னர் தொழுகையும் நடைபெற வேண்டும் என்ற கருத்தில் உள்ளனர். அதற்கு பின்வரும் அறிவிப்புக்களை ஆதாரமாகக் கொள்கின்றனர்.
'அப்துல்லாஹ் இப்னு யஸீது(வ) அறிவித்தார்: நபி(ச) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.' (புஹாரி: 1024)
அப்துல்லாஹ் இப்னு ஜைத்(வ) அறிவித்தார். நபி(ச) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டபோது அவர்களை பார்த்தேன். அப்போது அவர்கள் மக்களுக்கு முதுகைக் காட்டிக் கிப்லாவை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். பிறகு தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.' (புஹாரி: 1025)
இரண்டு விதமாகவும் அறிவிப்புக்கள் உள்ளதால் குத்பாவை தொழுகைக்கு முன்னரும் வைத்துக் கொள்ளலாம் அல்லது பின்னரும் வைத்துக் கொள்ளலாம் என்பது இமாம் ஷவ்காணி(ரஹ்) போன்றோரின் கருத்தாகும். இதுவே ஏற்றமானதாகவும் தெரிகின்றது. குத்பா என்பது எமது பாவங்களை உணர்த்தும் விதமாகவும் தவ்பாவை நினைவுறுத்தும் வண்ணமும் அமைந்திருப்பது ஏற்றமானதாகும்.
இமாம் பிரார்த்தனை செய்தல்:
இமாம் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்தப் பிரார்த்தனையின் போது கைகளை வெகுவாக உயர்த்திக் கேட்பதும் உள்ளங்கைகள் பூமியை நோக்கி இருப்பதும், இமாம் கிப்லாவை முன்னோக்கிப் பிரார்த்திப்பதும் சுன்னாவாகும். மஃமூம்களும் கரங்களை உயர்த்திப் பிரார்த்தனையில் பங்கு கொள்வார்கள். இமாம் தமது மேலாடையை மாற்றிப் போடுவதும் சுன்னாவாகும்.
ளூ கிப்லாவை முன்னோக்குதல்:
பொதுவாக குத்பாவோ அல்லது ஏனைய சந்தர்ப்பங்களிலோ துஆ செய்யும் போது இமாம் கிப்லாவை முன்னோக்குவதில்லை. ஆனால், மழை வேண்டித் தொழுகையின் போது இமாம் பிரார்த்திக்கையில் கிப்லாவை முன்னோக்கிப் பிரார்த்திக்க வேண்டும்.

'அப்துல்லாஹ் இப்னு யஸீது(வ) அறிவித்தார்: நபி(ச) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.' (புஹாரி: 1024)
இந்த ஹதீஸ் கிப்லாவை முன்னோக்கிப் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.
ளூ கைகளை வெகுவாக உயர்த்துதல்:
பிரார்த்தனையின் போது கைகளை உயர்த்துவது ஏற்றமானதாகும். மிம்பரில் குத்பாவின் போது இமாம் பிரார்த்தனை செய்ய நேரிட்டால் கரங்களை உயர்த்தக் கூடாது. ஆனால், மழை வேண்டித் தொழும் போது கைகளை முடிந்தவரை உயர்த்த வேண்டும்.

அனஸ்(வ) அறிவித்தார்: 'நபி(ச) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது தவிர எந்தப் பிரார்த்தனையிலும் தம் கைகளை உயர்த்த மாட்டார்கள். (மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது) தம் அக்குள் வெண்மை தெரியும் அளவிற்கு உயர்த்துவார்கள். ' (புஹாரி: 1031)
சாதாரண பிரார்த்தனைகளின் போது கையை உயர்த்தக் கூடாது என இந்த ஹதீஸை வைத்துப் புரிந்து கொள்ளக் கூடாது. மழை வேண்டித் தொழும் போது பிரார்த்தனையில் கையை உயர்த்துவது போல் வேறு பிரார்த்தனைகளின் போது உயர்த்த மாட்டார்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
ளூ உள்ளங்கைகள் பூமியைப் பார்த்து இருத்தல்:
பொதுவாக துஆவின் போது உள்ளங்கைகள் வானை நோக்கி இருக்கும் விதத்தில்தான் பிரார்த்திக்க வேண்டும். மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது உள்ளங் கைகள் பூமியைப் பார்த்திருக்கும் விதத்தில் உயர்த்துவது சுன்னாவாகும்.

'நபி(ச) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது தமது புறங்கையை வானை நோக்கி நீட்டினார்கள்..'
அறிவிப்பவர்: அனஸ்(வ)
ஆதாரம்: முஸ்லிம் 895-07

இந்த ஹதீஸின் அடிப்படையில் மழை வேண்டித் தொழுகையில் பிரார்த்திக்கும் போது கையை வெகுவாக உயர்த்த வேண்டும். கையின் புறங்கை வானத்தையும் உள்ளங்கை பூமியையும் பார்த்திருக்கும் விதத்தில் வைத்திருக்க வேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

செவ்வாய், 17 ஜூலை, 2018

நிகழ்வுகள் ஆதாரங்களாகுமா?

நிகழ்வுகள் ஆதாரங்களாகுமா?

ஸஹீஹான ஹதீஸ் மறுப்பாளருக்கு மறுப்பு!
மௌலவி யூனுஸ் தப்ரீஸ்
அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் நீங்கள் உண்மையாளராக இருந்தால் ஆதாரத்தை கொண்டு வாருங்கள் என்று குறிப்பிடுகிறான். நாம் செய்கின்ற ஒவ்வொரு அமல்களுக்கும் நபியவர்களின் செயல்பாடுகளே ஆதாரங்களாகும்.
மேலும் குர்ஆனிலும் மற்றும் ஹதீஸிலும் கூறப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் ஆதாரங்களாக எடுக்க முடியுமா? என்பதை அலசுவதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.
அல்லாஹ் குர்ஆனில் பல நபிமார்களின் சரிதைகளையும், நல்லடியார்கள் மற்றும் பாவிகளுடைய சரிதைகளையும் பல இடங்களில் எடுத்துக் காட்டுகிறான். அதே போல நபியவர்களின் ஹதீஸின் முலமும் இவைகளை நாம் காணலாம்.நபியவர்களுக்கு முன்னால் சொல்லப்பட்ட அத்தனை சான்றுகளையும் ஆதாரங்களாக அப்படியே எடுக்க முடியுமா என்றால் முடியாது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளவதோடு, தனக்கு முன்னால் நடந்த சம்பவங்களிலிலிருந்து எவற்றை நபியவர்கள் ஆதாரமாக வழிகாட்டுகிறார்களோ அவற்றை மட்டும் ஆதாரங்களாக நாம் எடுக்க வேண்டும். ஏனையவைகளை அந்த, அந்த காலங்களில் நடந்த ஒரு நிகழ்வாக தான் நாம் பார்க்க வேண்டும்.


இன்று தான் செய்த தவறை மறைப்பதற்காக சம்பந்தமில்லாத ஆதாரங்களை தவறாக சுட்டிக்காட்டி பேசும் நிலையை காணலாம். உதாரணமாக அபூபக்கர் (ரலி) அவர்கள் பிறரை ஏசினார்கள் என்றால் நாம் ஏன் பிறரை ஏசக் கூடாது என்று சொல்வதையும், அது போல ஸகாத் வசூலிக்க அனுப்பியவரை மக்களுக்கு மத்தியில் நபியவர்கள் தப்பாக சுட்டிக் காட்டி பேசினார்கள் என்றால் நாம் ஏன் பிறரை மானபங்கம் செய்யும் விதத்தில் பேசக் கூடாது என்று கேட்கும் அவல நிலையை காணலாம்.
குர்ஆனிலோ, ஹதீஸிலோ சொல்லப் பட்ட அனைத்தும் நமக்கு பினபற்றுவதற்றான ஆதாரங்கள் கிடையாது. குர்ஆனில் சொல்லப் பட்ட சில சம்பவங்களை நிகழ்வுகளாக மட்டும் பார்க்க வேணடும். அவற்றை ஆதாரமாக எடுக்க முடியாது. உதாரணமாக சூரத்துல் காஃபில் அந்த வாலிபர்களோடு ஒரு நாயும் பின் தொடர்ந்து சென்றது, அவர்கள் தங்கிய குகையின் வாசலில் படுத்துக் கொண்டது, இந்த சம்பவத்தை அல்லாஹ் குர்ஆனில் நினைவுப் படுத்துகிறான் இந்த சம்பவம் குர்ஆனில் வருகிறது என்பதற்காக நாமும் நாய் வளர்க்கலாம் என்ற சட்டத்தை ஆதாரமாக எடுக்க முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது. ஏன் என்றால் நமக்கு நாய் வளர்ப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. இந்த சம்பவத்தை ஒரு நிகழ்வாக தான் பார்க்க வேண்டுமே தவிர அல்லாஹ் குர்ஆனிலே சொல்லி விட்டான் என்று நாய் வளர்ப்பதற்கு ஆதாரமாக எடுக்க முடியாது.

அது போல மூஸா நபி தனது இனத்தை சார்ந்த ஒருவருக்கு சார்பாக எதிரி கூட்டத்தை சார்ந்தவரை குத்திய போது அந்த மனிதர் இறந்து விட்டார். (சுருக்கம் அல் குர்ஆன் 28:15) இந்த சம்பவத்தை ஆதாரம் காட்டி மூஸா நபியே ஒருவரை அடித்து கொலை செய்துள்ளார்கள் என்றால் நாம் ஏன் கொலை செய்யக் கூடாது என்று ஆதாரமாக எடுக்க முடியுமா என்றால் முடியாது. இதை ஒரு நிகழ்வாக தான் பார்க்க வேண்டும். ஏன் என்றால் கொலையை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
அது போல அல்லாஹ் இப்றாகீம் நபியை பின்பற்றும் படி கூறுகிறான் எனவே இப்றாகீம் நபி மூன்று பொய்களை சொல்லியுள்ளார்கள். நாமும் இப்படி பொய் சொல்லலாம் என்று ஆதாரம் எடுக்க முடியுமா என்றால் முடியாது? நடந்த சம்பவத்தை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். அதை ஒரு நிகழ்வாக தான் பார்க்க வேண்டுமே தவிர ஆதாரமாக எடுக்க கூடாது ஏன் என்றால் பொய் பேசுவதை பெரிய பாவமாக இஸ்லாம் கூறி நமக்கு தடை செய்துள்ளது.
அதே போல இப்றாகீம் நபி தனது மகனின் முதல் மனைவி சில குறைகளை சொல்லியதற்காக அந்த மனைவியை தலாக் விடும் படி இப்றாகீம் நபி கூறுகிறார்கள். அதற்காக ஒவ்வொரு தந்தையும் மருமகள் ஏதாவது குறையை சொன்னவுடன் மனைவியை தலாக் விடும் படி மகனிடம் சொல்ல முடியுமா என்றால் முடியாது? எடுத்த எடுப்பிலே தலாக்கிற்கு செல்வதற்கு நமக்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை, பல படித்தரங்களை இஸ்லாம் சொல்லித் தருகிறது. எனவே அதை ஒரு நிகழ்வாக தான் பார்க்க வேண்டுமே தவிர, இப்றாகீமின் வழியை அல்லாஹ் பின் பற்ற சொல்கிறான் என்று இதை ஆதாரமாக எடுக்க முடியாது.
இப்படி பல உதாரணங்களை குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் எடுத்துக் காட்டிக் கொண்டே போகலாம். சிந்தனையுடையவர்களுக்கு இந்த உதாரணங்கள் போதுமானதாகும்.
இந்த வரிசையில் பிறரை மானபங்கப் படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது, அருவருப்பாக பேசக் கூடாது, என்று கூறும் போது, நபியவர்களே பிறரை மானபங்கப் படுத்தி பேசியுள்ளார்கள் என்றால் நாம் ஏன் பேசக் கூடாது என்று எதிர் கேள்வியை கேட்பதை காணலாம்.நபியவர்கள் அப்படி என்ன பேசினார்கள், யாரை மானபங்கப்படுத்தினார்கள் என்று கேட்கும் போது பின் வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகிறார்கள்.
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்அஸ்த்" குலத்தாரில் ஒருவரை (பனூ சுலைம் குலத்தாரின்) "ஸகாத்"களை வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என அழைக்கப்பட்டார். அவர் ("ஸகாத்"களை வசூலித்துவிட்டு) வந்து (கணக்கு ஒப்படைத்தபோது), "இது உங்களுக்குரியது, இது எனக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது" என்று கூறினார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்துத் திரும்பிவந்து) "இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது" என்று கூறுகிறார். அவர் (மட்டும்) தம் தந்தையின் வீட்டிலோ அல்லது தாயின் வீட்டிலோ உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக! உங்களில் யாரேனும் அ(ந்தப் பொதுச் சொத்)திலிருந்து (முறைகேடாக) எதையேனும் பெற்றால் மறுமை நாளில் அதைத் தமது கழுத்தில் சுமந்துகொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக்கொண்டிருக்கும். மாடாகவோ ஆடாகவோ இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும்" என்று கூறினார்கள்.
பிறகு அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்திவிட்டு, "இறைவா! (உன் கட்டளையை) எடுத்துரைத்துவிட்டேனா?" என்று இரண்டு முறை கூறினார்கள். (முஸ்லிம் 3739)
ஸகாத் வசூலிக்க சென்று வந்த வரை நாளு பேருக்கு மத்தியில் வைத்து நபியவர்கள் இப்படி மானபங்கப்படுத்தி விட்டார்கள். எனவே நாமும் பிறரை மானபங்கப்படுத்தலாம் என்ற அடிப்படையில் இன்று பிறரை மானபங்கப்படுத்தி, சகட்டு மேனிக்கு அருவருப்பாக பேசப்படுவதை காணலாம். நபியவர்கள் வஹியோடு தொடர்பாக இருந்தார்கள். மக்களுக்கு மார்க்கத்தை சொல்லி கொடுக்கும் முகமாக இப்படி பல சந்தர்ப்பங்களை பயன்படுத்தி மார்க்கத்தை தெளிவு படுத்தியுள்ளார்கள். தனது மனைவிமார்கள் பிரச்சனைப்பட்ட நேரத்தில் உமர் (ரலி) அவர்கள் முன் மனைவிமார்களை எச்சரித்த செய்தி மேலும் தேன் விடயத்தில் மனைவிமார்களை எச்சரித்த செய்திகள், மேலும் மனைவிமார்களோடு பிரச்சனைப் பட்டுக் கொண்டு ஒரு மாதம் வர மாட்டேன் என்று சொன்ன செய்தி, யூதர்கள் தப்பாக நபியவர்களுக்கு ஸலாம் சொல்லிய போது அதற்கு மீண்டும் தப்பாக பதில் சொன்ன ஆயிஷா அவர்களை கண்டித்த செய்தி இப்படி பல சான்றுகளை சொல்லிக் காண்டே போகலாம். இவைகள் எல்லாம் பலருக்கு முன்னால் தான் நடந்தது. நபியவர்களைப் பொருத்தவரை மார்க்கத்தை படித்து தர வந்தவர்கள் மக்களின் தவறுகளை அந்த, அந்த இடத்தில் வைத்தே திருத்திக் கொடுப்பார்கள். அதற்காக வேண்டி நாங்களும் அப்படி தான் செய்வோம் என்று தவறாக விளங்கி விடக் கூடாது. அப்படி சொல்வதற்கு நபியவர்களுக்கு அல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளான். நபியவர்கள் முஸ்லிம்களில் யாரையாவது ஏசினாலோ, அல்லது சபித்தாலோ அது சம்பந்தப்பட்டவருக்கு நன்மையாக மாறி விடும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். பின் வரும் ஹதீஸை கவனியுங்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், "இறைவா! நான் உன்னிடம் ஓர் உறுதிமொழி எடுக்கிறேன். அதற்கு நீ மாறு செய்யமாட்டாய். (அது) நான் ஒரு மனிதனே. ஆகவே, நான் எந்த இறை நம்பிக்கையாளரையாவது (கடிந்து கொண்டு) மனவேதனைப்படுத்தியிருந்தால், ஏசியிருந்தால், சபித்திருந்தால், அடித்திருந்தால், அதையே அவருக்கு அருளாகவும் பாவப்பரிகாரமாகவும் மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாகவும் மாற்றிவிடுவாயாக!" என்று கூறினார்கள். ( முஸ்லிம் 5068)
மேலும்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரண்டு பேர் வந்தார்கள்; நபியவர்களிடம் எதைப் பற்றியோ பேசினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கோபப்படுத்திவிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் சபித்து ஏசிவிட்டார்கள். அவர்கள் இருவரும் சென்றதும், நான், "அல்லாஹ்வின் தூதரே! நன்மைகளில் எதையேனும் யார் அடைந்துகொண்டாலும், இவ்விருவர் (மட்டும்) அதை அடையப்போவதில்லை" என்று கூறினேன். அதற்கு "அது எதனால்?" என்று நபியவர்கள் கேட்டார்கள். நான், "அவ்விருவரையும் தாங்கள் சபித்தீர்களே? ஏசினீர்களே?" என்று பதிலளித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் என் இறைவனிடம் நிபந்தனையிட்டுக் கூறியுள்ளதை நீ அறியவில்லையா? "இறைவா! நான் ஒரு மனிதனே! நான் முஸ்லிம்களில் ஒருவரைச் சபித்திருந்தால், அல்லது ஏசியிருந்தால் அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் நன்மையாகவும் ஆக்கிவிடுவாயாக" என்று கூறியுள்ளேன்" என்றார்கள். ( முஸ்லிம் 5066)
நபியவர்கள் சபித்தார்கள் எனவே நாமும் பிறரை சபிக்கலாம் என்று யாரும் தப்பாக ஹதீஸை விளங்கி விடக் கூடாது. நபியவர்கள் பிறரை சபித்தாலோ அல்லது ஏசினாலோ அது சம்பந்தப்பட்டவர்களுக்கு அருளாகவும், அல்லாஹ்விடம் நெருக்கத்தை ஏற்ப்படுத்திக் கொடுக்கும். ஆனால் நாம் பிறரை ஏசினாலோ, சபித்தாலோ அருளாகவோ, அல்லாஹ்வின் பக்கம் நெருக்கத்தையோ ஏற்படுத்தி தராது மாறாக பாவத்தை தான் அதிகப்படுத்தும்.
எனவே தவறான முறையில் ஹதீஸை விளங்கி மக்களை பிழையான வழியில் அழைத்துச் செல்லக் கூடாது. மக்களும் ஒரு தடவைக்கு பல தடவைகள் சிந்தித்து அவர்கள் சொல்வது சரிதானா? அவர்கள் போகும் வழி சரிதானா என்று சிந்தித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அடுத்தது இவர்களின் தவறான கொள்கைகளில் ஒன்று தான் குர்ஆன் வசனத்திற்கு ஸஹீஹான ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஸஹீஹான ஹதீஸை மறுக்க வேண்டும் என்பதாகும். அந்த விரிசையில் இவர்களின் இந்த பிழையான கொள்கையின் படி பார்த்தாலும் பின் வரக் கூடிய குர்ஆன் வசனங்களுக்கு முரணாக மேற்ச் சுட்டிக்காட்டிய. (முஸ்லிம் 3739) ஹதீஸ் அமைந்துள்ளது.
"எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள். (24:19)
இவர்கள் சொல்வது போல அந்த ஹதீஸை அணுகினால் மேற்ச்சென்ற இந்த குர்ஆன் வசனத்திற்கு முற்றிலும் முரணாகவே அமைந்துள்ளது. அப்படியானால் இவர்களின் இந்த ஹதீஸ் மறுப்பு கொள்கையின் அடிப்படையில் அந்த ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும் மறுக்க வேண்டும் என்ற நிலைக்கு வர வேண்டும். ஏன் என்றால் பிறரை மானபங்கப் படுத்துவது கூடாது என்று குர்ஆன் சொல்கிறது இவர்களின் வாதப்படி மேற்ச்சென்ற ஹதீஸ் பிறரை மானபங்கப் படுத்துவற்கு அனுமதி அளிக்கிறது. என்றால்? ஹதீஸை மறுக்க வேண்டும். எனவே பிறரை மானபங்கப் படுத்த கூடாது என்ற குர்ஆன் வசனத்திற்கு கட்டுப்பட வேண்டும் . ஆனால் குர்ஆன் வசனத்தை அலச்சியப் படுத்தி அல்லாஹ் சொன்னாலும் கேட்க மாட்டோம். எங்கள் தலைவர் சொல்கிறார் அவர் சொல்வது தான் சரி என்று நாங்கள் பிறரை மானபங்கப் படுத்தும் விதமாக பேசுவோம் நடந்து கொள்வோம் என்று இவர்களின் அணுகு முறையை காணலாம்.
அடுத்து வரும் குர்ஆன் வசனங்களையும் நிதானமாக நன்றாக அவதானியுங்கள்.
"முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (49:11)
"முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (49-12)
மேற்ச் சென்ற குர்ஆன் வசனங்களிலும் பிறரை பரிகாசம் செய்ய வேண்டாம், இழிவாக எண்ண வேண்டாம், பழித்துக் கொள்ள வேண்டாம், கெட்ட பட்டப் பெயர் சொல்லி அழைக்க வேண்டாம், பிறரை துருவித் துருவி ஆராய வேண்டாம். இப்படி எச்சரிக்கையாக சொல்லும் போது நாங்கள் அப்படி தான் பேசுவோம் என்றால் இவர்கள் எப்படி தவறாக வழிகாட்டப்பட்டுள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இது போல பல குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் எடுத்துக் காட்டினாலும் எப்படி நீங்கள் சொல்லக் கூடிய விசயங்கள் குர்ஆனிலும், ஹதீஸிலும் இருந்தாலும் நாங்கள் மத்ஹப் சொல்வதை தான் கேட்போம் என்று மத்ஹபுகார்கள் பிடிவாதம் பிடித்து சொல்வதைப் போல எத்தனை குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் எடுத்துக் காட்டினாலும் எங்கள் தலைவர் சொன்னது மட்டும் தான் சரி என்று பிடிவாதம் பிடித்து தலைவர் அந்த கருத்தை மாற்றாத வரை தொண்டர்களும் மாறமாட்டார்கள். நாம் எப்படி நல்ல பண்பாடு உடையவர்களாக வாழ வேண்டும் என்று பின் வரும் ஹதீஸ்கள் பாடம் சொல்லித் தருகின்றன.
மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்:
முஆவியா(ரலி) அவர்களுடன் (இராக்கிலுள்ள) கூஃபா நகருக்கு வந்திருந்த அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அப்போது அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, 'அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை' என்று கூறிவிட்டு, 'நற்குணமுடையவரே உங்களில் மிகவும் சிறந்தவர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் கூறினார்கள்.
 (புகாரி 6029)
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட 'அவருக்கென்ன நேர்ந்தது? அவரின் நெற்றி மண்ணில் படட்டும்' என்றே கூறுவார்கள்.
 ( புகாரி 6031)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்:
ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறைமறுப்பு (போன்ற பாவச் செயல்) ஆகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 (புகாரி 6044)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒருவர் மற்றவரை 'பாவி' என்றோ, 'இறைமறுப்பாளன்' என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது. என அபூ தர்(ரலி) அறிவித்தார்.(புகாரி 6045)

மேலும் யூதர்கள் நபியின் மீது தவறான முறையில் ஸலாம் கூறிய போது அதற்கு ஆயிஷா ரலி அவரக்ள அதே அளவு பதில் சொல்லியும் கூட அதையும் நபியவர்கள் அப்படி சொல்லக் கூடாது என்று கண்டிக்கிறார்கள். அதை பின் வருமாறு காணலாம்.
நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார்கள்
யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸாமு அலைக்கும்' (-உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு 'வ அலைக்கும் அஸ்ஸலாமு வல்லஅனா (-அவ்வாறே உங்களின் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)' என்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்' என்று கூறினார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான்தான் 'வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)' என்று கேட்டார்கள்
 (புகாரி 6024)
எனவே மேற்ச் சென்ற முஸ்லிம் 3739 ம் ஹதீஸில் சொல்லப்பட்டதை அல்லாஹ் தனக்கு தனிப்பட்ட ரீதியில் கொடுக்கப்பட்ட அனுமதியால் பேசினார்கள் என்று பார்ப்பதோடு, மேலும் எவருக்கு பொறுப்பு கொடுத்து அவர் அதன் மூலம் மோசடி செய்கிறாரோ அவர் அதை மறுமை நாளில் சுமந்து வருவார் என்ற தகவலை நபியவர்கள் சொல்ல வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நபியவர்கள் அப்படி சொன்னதின் மூலம் அந்த தோழரின் மனது பாதிக்கப்பட்டிருந்தால் மேற்ச்சென்ற முஸ்லிம் 5068 ம் ஹதீஸில் சொல்லப்பட்டதை போல அது அவருக்கு நன்மையாக மாறிவிடும் என்பதை தான் நாம் புரிய வேண்டும்.
அதே போல அபூபக்கர் (ரலி) எதிரியை ஏசினார்கள் என்றால் நாம் ஏன் ஏசக் கூடாது என்ற வாதமும் ஹதீஸ்களை சரியாக அணுக தெரியாததினால் ஏற்ப்பட்ட விளைவேயாகும். ஸஹீஹான ஹதீஸ் மறுப்பாளர்களான இவர்களின் வாதப்படி ஒரு ஸஹாபியின் ஆதாரத்தை எடுப்பது வழிகேடாகும். நபியவர்கள் தவறான முறையில், அருவருப்பாக பேசுவதை தடை செய்துள்ளார்கள் என்ற ஹதீஸ்கள் எல்லாம் இந்த இடத்தில் மறந்து விட்டார்கள்.? இரண்டாவது அபூபக்கர் (ரலி) அவர்களை பொறுத்தவரை பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்டவர் மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் நடந்தாலும் விசேசமாக பத்ரில் கலந்து கொண்டவர்களை அல்லாஹ் மன்னித்து பொருந்திக் கொள்வான். அதை அல்லாஹ் குர்ஆனில் இப்படி எடுத்துக் காட்டுகிறான்.
(விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப் பணத்தை) எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும். (8- 67,68) பத்ரு கைதிகள் விடயத்தில் நபியவர்கள் எடுத்த முடிவு தவறானது என்று அல்லாஹ் கூறிவிட்டு, அல்லாஹ்வுடைய மன்னிப்பு ஏற்கனவே முடிவாகி விட்டது, அதனால் அல்லாஹ்உங்களை மன்னித்து விட்டான் என்று கூறவதை காணலாம்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு படையெடுத்து செல்வதற்கு முன் நபியவர்களின் படைகளிலிருந்து தனது குடுப்ப உறவுகளை பாதுகாப்பதற்காக ஹாதிப் பின் அபீ பல்த்தஆ (ரலி) அவர்கள் நபியவர்களின் வருகையை ஒரு அடிமை பெண் மூலமாக நபிக்கு தெரியாமல் இரகசிய கடிதம் அனுப்பிய போது இறுதியில் அவள் பிடிக்கப்பட்டு, கடிதமும் நபியவர்களிடம் கிடைத்த போது இந்த தவறை செய்த ஹாதிப் பின் அபீ பல்த்தஆ (ரலி) அவர்களை தலையை வெட்ட உமர் (ரலி) அவர்கள் நபியிடம் அனுமதி கேட்ட போது, உமரே! உமக்கென்ன தெரியும் பத்ரு போரில் கலந்து கொண்டவர்களிடம் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள் உங்களுக்கு சுவர்க்கம் உறுதியாகி விட்டது என்று கூறியிருக்கலாம் அல்லவா என்றார்கள். (ஹதீஸை விரிவாக பார்க்க புகாரி 6259)
மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதுாறு பழி சுமத்திய ஆயிஷா (ரலி) அவர்களின் உறவுக்காரா் மிஸ்தா (ரலி) அவர்கள் ஏசப்பட்ட போதும் பாதிக்கப்பட்ட ஆயிஷா அவர்கள் அவர் பத்ரில் கலந்து கொண்டவர் அவரை ஏசாதீர்கள் என்று சம்பந்தப்பட்டவரை மன்னித்ததை காணலாம். மிஸ்தஹ்வுக்கு உதவிகள் செய்த வந்த அபூபக்கர் (ரலி) அவரகள் இனி மேல் இந்த மிஸ்தஹ்வுக்கு உதவிகள் செய்ய மாட்டேன் என்று கூறிய போது அல்லாஹ்வுடைய மன்னிப்பு உங்களுக்கு தேவையில்லையா என்று அல்லாஹ் குர்ஆன் வசனத்தை இறக்கிய உடனே அல்லாஹ்வின் வசனத்திற்கு கட்ப்பட்டு தனது முடிவை அபூபக்கர் அவர்கள் மாற்றிக் கொண்டார்கள். இவர் தான் பகிரங்கமாக தவறு செய்தார் என்பதை தெரிந்தும் அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதை இஸ்லாம் அழகான முறையில் வழிக்காட்டுகிறது.
எனவே ஹதீஸ்களை சரியான முறையில் கையாள வேண்டும். தாம் உருவாக்கிய தவறான கொள்கைக்காக ஹதீஸ்களை தவறாக வளைக்கக் கூடாது என்பதை புரிந்து, சொல்லப்ட்ட செய்திகளை சரியாக விளங்கி வாழ்வதற்கு அல்லாஹ் அருள் பாலிப்பானாக!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.in

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts