லேபிள்கள்

வியாழன், 29 மார்ச், 2018

தினசரி இந்த 10 விஷயங்களை செய்ய தவறாதீர்கள்!


வேலை, குடும்பம், சமூகம் என பல வேலைகளில் நாம் பிஸியாக இருக்கிறோம். இதுபோன்ற சமயங்களில் நாம் செய்யும் சில செயல்கள் நம் உடல் ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிக்கிறது. இதனை எளிதாக தவிர்க்கலாம். இதனை தவிர்க்க 10 வழிகள் இதோ...

1. வேலை செய்யும் இடத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காதீர்கள். கொஞ்சம் ரிலாக்ஸாக அலுவலகத்துக்குள் பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். காபி மிஷினில் காபி அருந்துவது. க்ளைண்ட் அழைப்பை ரிலாக்ஸ் ரூமில் இருந்த படி பேசுவது போன்றவைகளை உங்கள் இருக்கையை விட்டு நகர்ந்து செல்வதற்கான காரணங்களாக்கி கொள்ளுங்கள்.

2. அலுவலகத்தில் லிஃப்ட் வசதி இருந்தால் தயவு செய்து காலையில் மட்டும் அதனை பயன்படுத்தாதீர்கள். முடிந்த வரை சீக்கிரம் வந்து படிகளில் ஏறி செல்வதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். அது உங்களை முழு கவனத்தையும் வேலையில் செலுத்த உதவி செய்யும்.


3. மாலை வீட்டுக்கு செல்லும் போது உங்கள் வாட்டர் பாட்டில் காலியாக உள்ளதா என்பதை செக் செய்யுங்கள். இல்லை என்றால் உங்கள் உடலுக்கு கட்டாயம் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னை வரும். அதனால் அதிகமாக தண்ணீர் அருந்துங்கள்.

4. முழு கவனத்துடன் பணிபுரிய வேண்டும் என்று எப்போது ஹெட்போனுடன் இருக்காதீர்கள். அது உங்கள் கேட்கும் திறனை பலவீனமாக்கும். ஹெட்போனை தவிப்பது நல்லது.

5.இரவு பணி முடிந்து அதிக நேரம் கழித்து உறங்க செல்லாதீர்கள். குறைந்த பட்சம் 7-8 மணி நேர தூக்கத்தை உறுதி செய்யுங்கள்.

6. உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பணி செய்யும் இடத்திலேயே சாப்பிடாதீர்கள் அது முதுகு தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அதனால் அமைதியாக‌ உணவருந்துங்கள். கூடிய மட்டும் வீட்டு உணவை சாப்பிடுங்கள் வெளி உணவை தவிர்ப்பது நல்லது.

7. அதிகமாக யோசிக்காதீர்கள். வேலை, குடும்பம், நண்பர்கள், காதல் இந்த விஷயங்களில் எல்லாம் அதிகமாக யோசித்து வெறுப்பாகாதீர்கள். நீங்கள் எதிர்பார்த்தது போல் யாரும், எதுவும் நடக்கவில்லை என்றால் கூலாக விடுங்கள். அதிகம் யோசித்தால் மூளையின் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
 
8. புதிய பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள், புத்தகம் படிப்பது, படம் வரைவது, வாக்கிங் செல்வது போன்ற தொழில்நுட்பம் தொடர்பில்லாத விஷயங்களாக இருக்க வேண்டும் அது உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பெருக்கும்.
9. உங்கள் உணவில் ஒரு பழத்தை கண்டிப்பாக சேர்த்து கொள்ளுங்கள். அது சிற‌ந்த உணவு முறைகளில்  ஒன்று. 

10. சமூக வலைதளங்களுக்கு குட் நைட் சொல்ல பழகுங்கள். இரவு 9 மணியோடு சமூக வலைதளங்களைவிட்டு குடும்பத்தோடு செலவிட வேண்டும் என முடிவெடுங்கள். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சிறிய இடைவேளைகளில் சமூக வலைதளங்களை அணுகுங்கள். அது உங்களை கிரியேட்டிவாக சிந்திக்க வைக்கும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 27 மார்ச், 2018

தயிரில் என்னவெல்லாம் செய்யலாம்


1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.
4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.
5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 வீதம் பால்தான் ஜீரணமாகியிருக்கும்.ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 வீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியைதூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.
9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.
10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.
12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.
16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல்இருக்கும்.
17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.
19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.
20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 25 மார்ச், 2018

பொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்!


தேவையற்ற பழக்கங்களை தவிர்ப்பதே இருதயத்திற்கு பலம். புகை பழக்கத்தை நிறுத்துவோம்இருதயத்தை காப்போம். இந்தியாவில் நாளுக்கு நாள் இருதய நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்துள்ளனர்.
புகை பழக்கம்: புகை பிடிப்பதன் தீமைகள் குறித்தும், அதை விலக்குவதற்காக எடுக்க வேண்டிய முறைகள் குறித்தும் சர்வதேச அளவில் கட்டுரைகளும், நுால்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
புகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் இருப்பதில்லை என்பதும், புகை பிடித்துப் பார்த்தவர்கள் அனைவரும் புகைக்கு அடிமையாவதில்லை; முதன் முதலாக புகை பிடிக்கும் போது புகை நமது மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்களே நாம் புகைக்கு அடிமை ஆவோமா, இல்லையா என்பதை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதே சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி முடிவு.
சிறுவயதில் திருட்டுத்தனமாக புகை இழுத்துப் பார்க்கும் போது யார் மிகவும் ஓய்வாகவும், இன்பமாகவும் உணர்கிறார்களோ அவர்களே புகைக்கு அடிமையாவதாக ஆராய்ச்சி சொல்கிறது. தினமும் விரல்களிடையே புகைந்து கருகும் சிகரெட்டுகள் எண்ணிகைக்கும், இருதய நோய் வரும் வாய்ப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு நாளைக்கு 20 சிகெரட் இழுத்து தள்ளுபவர்களில் 61 சதவீதம் பேர், இருதய நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
பதட்டப்படாதீர்கள்: குறித்த நேரத்தில் வேலைக்கு கிளம்ப, உணவு அருந்த, விளையாட, பொழுது போக்கில் ஈடுபட, குடும்பத்துடன் கலந்து பழக நேரத்தை திட்டமிடுங்கள். பஸ், ரயில், விமானப் பயணம் புறப்படுகிறீர்களா அதற்கு முன்பே குறித்த இடத்தில் சேர்ந்து விடுங்கள்.

உணவு சாப்பிடும் போது ஊர்க்கவலைகள், அலுவலகம், குடும்ப விஷயங்களை பேசி குழப்பி கொள்ளாதீர்கள். நண்பர்களுடன் கலகலவென சிரித்து, பேசி பழகுங்கள்.
எதிலும் நிதானம் தேவை:
உங்களைத் திடுக்கிடச் செய்ய பேசுவோரிடம் அப்படியா, பரவாயில்லை என, உறுதியாக பேசுங்கள். இரவில் படுக்கப் போகும் முன், பொழுது விடிந்தால் அவன் வருவானே, இவன்
வருவானே அந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று கவலையுடன் படுக்கச் செல்லாதீர்.
தினமும் 5 கி.மீ., நடைப் பயிற்சி: தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
நாள்தோறும் ஐந்து கி.மீ., துாரத்திற்கு குறையாமல் நடந்தால், எந்த இருதய நோயாக இருந்தா லும் அது தீவிரமடையாமல் தடுக்கலாம். நடப்பதைப் போல சைக்கிள் ஓட்டுவதும் நன்மை தரும்.
பழங்கள், பச்சை கீரை, காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிரட், சப்பாத்தி, ரொட்டி, புரோட்டா ஆகியவற்றை சாப்பிடும் போது வெண்ணெய், நெய், வனஸ்பதி போன்ற கொழுப்புப் பொருட்கள் சிறிதளவு சேர்க்கலாம் அல்லது தவிர்க்கலாம். தோல் நீக்கிய கோழி இறைச்சி, மீன் போன்ற கொழுப்பற்ற இறைச்சிகளை எண்ணெயில் பொரிக்காமல் உண்ணலாம்.
போட்டி, பொறாமை வேண்டாம்: எண்ணெய் பயன்படுத்தி தான் ஆக வேண்டும் என்றால் சூரிய காந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், சோயா பீன்ஸ் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவைகளை பயன்படுத்தலாம். பழச்சாறு, பால் சேர்க்காத டீ அல்லது சர்க்கரைக்கு மாற்றான வேறு பாதிப்பற்ற இனிப்பு கலந்து குடிக்கலாம்.
ஆண்கள் 35, பெண்கள் 40 வயதில் கட்டாயம் இருதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறை 'டி.எம்.டி' எடுத்து பார்த்துக் கொள்வது நல்லது. மன அழுத்தம் இருதய நோய்க்கு விடப்படும் அழைப்பு. மன அழுத்தத்தை குறைக்க கோயில் போன்ற அமைதியான இடங்களுக்கு செல்லலாம்.
இருதய அறுவை சிகிச்சை துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் வந்தாலும், இருதயத்திற்கு வரக்கூடிய பிரச்னைகளை நடை, புகைப்பதை தவிர்த்தல், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை மற்றும் யோகா, தியானம் போன்ற நல்ல பழக்க,வழக்கங்களால் இருதயத்தை பாதுகாக்கலாம்.
பணிபுரியும் இடங்களிலும், போட்டி பொறாமையின்றி வாழ்ந்தால், இருதய
நோயிலிருந்து எளிதில் தப்பிக்கலாம்.
டாக்டர்.எம்.சம்பத்குமார், மதுரை.
இருதயநோயிலிருந்து பாதுகாக்க வழிகள்
இன்றைய சூழலில் இருதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது. உலகில் அதிகளவிலான மரணத்துக்கு இருதயநோய் காரணமாக விளங்குகிறது.
இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 40 லட்சம் பேர் இருதய நோய்களால் மரணமடைகின்றனர்.  இருதய நோய்களால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 3 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது எதிர்காலத்தில் 20 சதவீதமாக கூட உயரலாம் என டாக்டர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இரவு பணிகள், அதிக நேரம் பணிபுரிவது, இதனால் குடும்பத்தில் ஏற்படும் நிம்மதியின்மை போன்றவை இருதய நோய்க்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது.
புகைப்பிடிப்பவர்களுக்கே அதிகம்:
அதே போல் உலகில் மாரடைப்பால் மரணமடைபவர்களில் 20 சதவீதம் பேர் புகைபிடிப்பவர்கள். புகை பிடிக்காதவர்களை விட புகைபிடிப்பவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். புகை பிடிப்பதனால் இருதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது.
புகை பிடிப்பவர்களுக்கு மட்டும் இதனால் பாதிப்பு என்றில்லை. அவர்களை சுற்றியுள்ளோரும் குறிப்பாக குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். நியூயார்க்கில் புகை பிடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் குறைந்திருக்கிறது. இந்தியாவிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் தேவை என டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். இல்லையெனில் 2020ல் உலகிலேயே அதிக இருதய நோயாளிகளை கொண்ட நாடு இந்தியாவாக இருக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
உடல் பருமனாதலாலும், சர்க்கரை நோய் காரணமாகவும் இருதய நோய்கள் ஏற்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயால் இருதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் சேதமடை வதால் மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு இந்த குறைபாடு இருக்கிறது. இதனால் இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. எனினும் சர்க்கரை நோயாளிகளுக்கு இருதய நோயை எளிதில் கண்டறிய முடிவதில்லை.
இருதய தசை பலவீனம் அடைவது ஏன்
இருதயம் ஒரு தானியங்கி தசை. ஒரு நிமிடத்தில் 72 முறை தானாகவே சுருங்கி விரியும் தன்மை படைத்தது. ஒவ்வொரு முறை சுருங்கி விரியும் போதும் 55 சதவீதத்துக்கு மேல் ரத்தத்தை வெளியில் அனுப்பும்.
இருதய தசை பலவீனம் அடையும் போது 40 சதவீதத்துக்கு கீழாகவே ரத்தத்தை வெளியில் அனுப்ப முடியும். இதனால் இருதயம் வீங்கி, நடக்கும் போது மூச்சிறைப்பு ஏற்படும். வியாதி முற்றும் போதும், ஓய்வில் படுக்கும் போதும் மூச்சிறைப்பு ஏற்படும். கால்களில் வீக்கம் ஏற்படும். இந்த வியாதி பிறந்த குழந்தை முதல் வயோதிகர் வரை எவரையும் பாதிக்கும் பரம்பரை காரணமாகவும், கிருமிகள் பாதிப்பினாலும் இருதயம் பலவீனம் அடையலாம்.
கர்ப்பிணிகளை யும் இது பாதிக்கும். மது அருந்துதல், வால்வு பழுது, மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மூலமும் இருதய தசை பலவீனம் அடையலாம். எக்கோ பரி
சோதனை மூலம் இருதய தசை பலவீனம் அடைவதை கண்டுபிடிக்க முடியும்.
முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், இருதய தசை பலவீனம் காரணமாக ஓராண்டில் 10
சதவீதம் பேர் மரணம் அடையும் அபாயம் உள்ளது. மாரடைப்புக்கு ஸ்டெண்ட், பைபாஸ்
செய்வதன் மூலமும், வால்வு மாற்று அறுவை சிகிச்சை மூலமும் இருதய தசை பலவீனத்தை குணப்படுத்தலாம். இருதய துடிப்பில் ஏற்படும் கோளாறுகளை மின் அதிர்வு மூலம் சரி செய்யும் தானியங்கி கருவியை மார்பில் தோலுக்கு அடியில் நிரந்தரமாக வைப்பதன் மூலம் திடீரென ஏற்படும் மரணங்களை தடுக்க முடியும்.
டாக்டர் ஜி. துரைராஜ்,மதுரை, 98421 05000
எப்படி தவிர்ப்பது
* புகை பிடிப்பதை முற்றிலும் தவிர்த்தால், இருதய நோய்கள் வருவதிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்.
* உப்பு அதிகளவில் பயன்படுத்துவதால் உடலில் ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் இருதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
* ரத்தத்ததில் கொலஸ்ட் ரால், சர்க்கரை, பிபி போன்றவற்றின்அளவை சீரான அளவில் வைத்திருக்க வேண்டும்.
* யோகா மற்றும் தியானம் செய்வது உடலுக்கு மிக நல்லது.
* தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது அவசியமானது.
* பெரும்பாலான நேரங்களில் எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் ஆகியவற்றை பயன்படுத்தாமல், மாடிப்படிகளை பயன்படுத்த வேண்டும். இதனால் மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறையும்.
* ஒரு நாளுக்கு சராசரியாக 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும். காலையில் ஒரு மணி நேரம் நடப்பது சிறந்தது.
* முறையான உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கம், உரிய முறையில் மருத்துவம் எடுத்துக்கொள்வது இருதய நோயிலிருந்து பாதுகாக்கும்.
* காய்கறிகள் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். மதுப்பழக்கத்தை அறவே கைவிட வேண்டும்.
உடல் பருமனாதலாலும், சர்க்கரை நோய் காரணமாகவும் இருதய நோய்கள் ஏற்படலாம்
என கண்டறியப்பட்டுள்ளது.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 23 மார்ச், 2018

ஆளுமைத்திறன் வளர்ப்போம்


ஆளுமை என்பது ஒருவரது ஒழுங்கமைந்த இயங்கியல் பண்புகளும் அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், உணர்வுகள், சிந்தனைகளை குறிக்கிறது. இவையனைத்துக்கும் நெற்றிப்பொட்டு வைத்தாற்போல சூழ்நிலைகேற்ப சரியான முடிவெடுக்கும் சக்தியும் பெரும்பங்கு வகிக்கிறது.
அணிகலன்களும் அலங்காரமும் மட்டுமே ஒருவரது ஆளுமை ஆகாது. உலகினில் எத்தனையோ மனிதர்கள் இருக்க அப்துல் கலாமும், காந்தியும், நெல்சன் மண்டேலாவும், ஆங் சான் சூகியும் ஒளிர்கிறார்கள் எனில் அதற்கு இவர்களது ஆளுமையே காரணம்.
இறைவா, இவர்கள் செய்வது என்னெவென்று தெரியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும் என்ற இயேசுவின் ஆளுமைக்கு நிகர் உண்டோ?
பர்சனாலிட்டி (Personality) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இச்சொல், முகமூடி, மறைப்பு எனும் பொருள் கொண்ட பர்சொனே (Persone) என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது. ஆகவே, ஆளுமை என்பது ஒருவரின் முகமூடி என்ற கருத்தை கொண்டது.
பலரும் ஒரே ஆளுமைத்தன்மையுடன் இருக்க நினைப்பது தவறு. படிப்பில் 90 மதிப்பெண் பெறும் ஒரு மாணவிக்கு ஒருவரது முகத்தைப்பார்த்து பேச இயலாது. ஒரு பெருங்கூட்டத்தின் முன்னே நின்று பேசும் திறன் கொண்ட மாணவனுக்கு படிப்பில் அக்கறையில்லை.

ஆளுமைத்தன்மையின் சில இயல்புகளாக நடத்தையில் காணப்படும் ஒழுங்கு, சீர்த்தன்மை உளவியல் உருவாக்கம் சூழலுக்கேற்ப நடப்பது மட்டுமல்லாது ஒரு குறிப்பிட்ட முறையில் நடப்பதுமாகும்.
நாம் வாழும் சமூக சூழலும் ஆளுமையை வளர்ப்பதில் பங்கு வகிக்கிறது. கிராமத்தில் படிக்கிற மாணவனுக்கும் நகரத்தில் வசிக்கும் மாணவனுக்குமிடையே பெரும் வித்தியாசமே இருக்கிறது.
கிராமச்சூழலும் நகரச்சூழலும் ஆளுமையின் அடிப்படைகளில் ஒன்று.
மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காக மக்களாலே நடத்தப்படும் ஆட்சி என்று முழக்கமிட்ட ஆபிரகாம் லிங்கனின் ஆளுமையும், பழமைவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகியும் பெண்குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராடிவரும் நோபல்பரிசு பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் ஆளுமையும், சாதாரண அன்னையாக இல்லாமல் தள்ளாத வயதிலும் தத்தி தத்தி நடந்து மதங்களை கடந்து உலக மக்கள் அனைவர் மனங்களிலும் கருணையின் உருவமாக விளங்கும் மறைந்த அன்னை தெரசாவின் ஆளுமையும் வெவ்வேறானவை.
இன்று வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு செல்லும்போது படித்து வாங்கிய பட்டங்களையும் மதிப்பெண்களையும் மட்டுமே கருத்தில் கொள்வதில்லை. மாறாக, இவரால் நம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய முடியும், இக்கட்டான சூழ்நிலைகளில் தகுந்த முடிவெடுக்கும் ஆற்றலும் இதற்கான ஆளுமைத்தன்மையும் உண்டா என்பதே அதிகம் பரிசோதிக்கப்படுகிறது.
மார்க்கெட்டிங் துறையில் தனது பேச்சினால் பிறரை கவரும் ஆற்றலும், பிரச்னைகளை கையாளும் திறமையும் அதிகம் விரும்பப்படுகிறது.
சில நேரங்களில், நகரவாசிக்கு கிடைக்காத வாய்ப்பு குக்கிராமத்திலிருந்து வரும் ஒருவருக்குக் கிடைக்கிறது. காரணம், அவரின் ஆளுமைத்திறன்.
எப்படிப்பட்ட நவீன வாகனத்தில் சென்றாய்? எத்தனை புத்தகங்களை சுமந்தாய்? என்பதல்ல முக்கியம். எந்தளவுக்கு உன்னை தரமேற்றிக்கோண்டாய் என்பதே முக்கியம்.
ஆளுமை மேம்பாட்டுக்கு வாழும் இடம் ஒரு காரணம் என்றாலும் நாம் எப்படிப்பட்டவர்களாக நம்மை மாற்றிக்கொள்கிறோம் என்பதும் முக்கியமே.
நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணா மேடையில் முழங்குவதில் சிறந்து விளங்கவும், தமிழக முதல்வரானதும், ஆங்கிலேயருக்கு நிகராக பேசுவதில் புலமை பெற்றதும் அவரது ஆளுமையே காரணம்.
தெருவிளக்கில் படித்து, தனது திறமையால் படிப்படியாக முன்னேறி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உயர்ந்த ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயர், எதற்கும் அஞ்சாத மன உறுதி படைத்தவர்.
ஒரு சமயம், உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆங்கிலேயரின் வீட்டுத்தோட்டத்தில் நுழைந்தமைக்காக ஒருவரை கடுமையாக தாக்கிவிட்டார் அந்த ஆங்கிலேய நீதிபதி. அடிவாங்கிய நபர், அந்த நீதிபதியின் மேல் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரிடம் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலர் ஐயரிடம் வந்து, குற்றம் சுமத்தப்பட்டவர் ஆங்கிலேய நீதிபதியாக இருக்கிறார். எனவே, அவரை நேரில் வந்து ஆஜராகுமாறு வற்புறுத்த வேண்டாம் என கூறினர்.
ஆனாலும், முத்துசாமி ஐயர் அந்த ஆங்கிலேய நீதிபதியை, நீதிமன்றத்துக்கு வரவழைத்து, அவர் செய்தது குற்றம் என தீர்ப்பளித்து, மூன்று ரூபாய் அபராதமும் விதித்தாராம்.
ஓர் இந்திய குடிமகனுக்காக, ஆங்கிலேய ஆட்சியில், ஓர் ஆங்கிலேயரை, அதுவும் உயர்நீதிமன்ற நீதிபதியையே தண்டித்த ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரின் நேர்மையும் துணிச்சலும் கூடிய ஆளுமை வியப்பளிக்கக்கூடியதல்லவா?
தன்னம்பிக்கையும் தலைமைப்பண்பும் இருந்தால் நம்மை யாரால் வெல்ல முடியும்? நாம் வளர்த்துக்கொள்ளும் ஆளுமைத்திறன் நம் வாழ்வில் அதிசயங்களை ஏற்படுத்தும்.
  ப. ஜஸ்டின் ஆன்றணி


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 21 மார்ச், 2018

பெருநாள் வாழ்த்துக் கூறலாமா?

பெருநாள் வாழ்த்துக் கூறலாமா?

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
பெருநாள் வாழ்த்துக் கூறலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது. பொதுவாக ஈத் முபாரக் என்ற வார்த்தையைப் பிரயோகித்தே பலரும் வாழ்த்துக் கூறுகின்றனர். பலரும் ஒரே வார்;த்தையைக் கூறும் போது இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வது இபாதத் என்ற எண்ணம் ஏற்படுவதால் இது பித்அத் ஆகும் என சிலர் கருதுகின்றனர்.

சந்தோசமான நேரங்களில் வாழ்த்துக் கூறுதல் என்பது பொதுவாக மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட அம்சமாகும்.
தபூக் போரில் பின்தங்கிய கஃப் இப்னு மாலிக்(வ) அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்கிய போது நபித்தோழர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர். (புஹாரி: 4418)
எனவே, மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் வாழ்த்துக் கூறுதல் என்பது மார்க்கத்தில் உள்ள ஓர் அம்சமாகும்.


பெருநாள் தினத்தில் வாழ்த்துக் கூறும் பழக்கமும் காலா காலமாக இருந்து வந்துள்ளது.
முஹம்மத் இப்னு ஸியாத்(ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.' நான் அபூ உமாமதுல் பாஹிலீ மற்றும் சில நபித்தோழர்களுடன் இருந்தேன். அவர்கள் பெருநாள் திடலில் இருந்து வந்தால் ஒருவர் மற்றவருக்கு 'தகப்பல்லாஹு மின்னா வமின்கும்' என்று கூறுவார்கள். என்று குறிப்பிடுகின்றார்கள். இதன் அறிவிப்பாளர் தொடர் 'ஜையி' நல்லது என இமாம் அஹ்மத் குறிப்பிடுகின்றார்கள். அல்பானி அவர்களும் மற்றுமொரு வாழ்த்துக் கூறும் செய்தியை உறுதிப்படுத்த இந்த செய்தியை ஆதாரமாகக் காட்டியுள்ளார்கள்.' (தமாமுல் மின்னா: 1355)
பெருநாள் தினத்தில் ஒருவர் மற்றவரைப் பார்த்து 'தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்' என்று கூறுவதில் பிரச்சினையில்லை என இமாம் அஹ்மத் அவர்கள் குறிப்பிட்டதாக இமாம் இப்னு குதாமா(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (முக்னீ: 2295)
இமாம் மாலிக்(ரஹ்) அவர்களிடம் இப்படி வாழ்த்துக் கூறுதல் பற்றிக் கேட்ட போது நான் அதை அறியவும் மாட்டேன், அதை மறுக்கவும் மாட்டேன் என்று பதில் கூறினார்கள். இது குறித்து இப்னு ஹபீப் அல் மாலிகி அவர்கள் விளக்கம் கூறும் போது நான் அறியமாட்டேன் என்றால் அது ஸுன்னா என அறியவில்லை. அதைச் சொல்பவரை நான் எதிர்க்கவும் மாட்டேன். ஏனென்றால், அது ஒரு நல்ல வார்த்தை. அத்துடன் அது துஆவாகவும் அமைந்துள்ளது என்பதனாலாகும் என்று கூறுகின்றார்கள்.
எனவே, பெருநாள் தினத்தில் 'ஈத் முபாரக்' என்ற வாழ்த்துக் கூறலாம். வாழ்த்துக் கூறும் போது இந்த வார்த்தையைத்தான் கூற வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வதில் தப்பும் இல்லை.
மக்கள் இந்த வார்த்தையைக் கூறித்தான் வாழ்த்துக் கூற வேண்டும் என நினைத்துக் கொண்டுள்ளனர். எனவே, இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வது பித்அத்தாகும் என சிலர் வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும். இப்படி வாதிடுபவர்கள், தொப்பி அணிகின்றனர். தொப்பி அணிவது மார்க்க விதி என்று மக்கள் நினைக்கின்றனர். சிலர் அதை வலியுறுத்துகின்றனர். இப்படி இருக்கும் போது தொப்பி போடுவது மார்க்கம் என மக்கள் நினைக்கின்றனர். எனவே, தொப்பி போடுவது பித்அத் என அவர்கள் கூறவில்லை. இது அவர்களின் வாதத்திற்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டையே எடுத்துக் காட்டுகின்றது. எனவே, இந்த வாதத்தை நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.
அல்லாஹு அஃலம்!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 19 மார்ச், 2018

ஆள்பாதி ஆடைபாதி

ஆள்பாதி ஆடைபாதி

மௌலவி. MSM.ஹில்மி(ஸலாமி), BA(Reading) SEUSL,
DIP.IN.LIBRARY AND INFORMATION SCIENCE

ஒவ்வொரு சமுதாயமும் தனக்கென பிரத்தியேகமான ஆடை கலாசாரங்களை கொண்டுள்ளன. அவை அனைத்தும் தமது சமயம், கலாசாரம், பாரம்பரியம் என்பவைகள் கூறும் விதமாக அவற்றை பிரதிபலிக்கும் வகையில் அமைதுள்ளன. ஒரு போதும் அதனை விட்டுக்கொடுப்பதோ அல்லது அந்நிய கலாசாத்தினை பிரதிபலிக்கும் வகையில் அமைத்துக் கொள்வதோ கிடையாது. ஆனால் முஸ்லிம்கள் மாத்திரம் தமது சமயம், கலாசாரம் என அனைத்தையும் மறந்து அந்நிய கலாசாரங்களை பிரதிபலிக்க செய்யும் அவல நிலையினை எமது சமுகத்தின் ஆடை கலாசாரங்கள் எமக்கு படம்பிடித்து காட்டுகின்றன.
இன்றை முஸ்லிம்களின் ஆடைகள் கலாசாரம் என்பது பெண்களுக்கு ஒப்பாக ஆண்களும,; ஆண்களுக்கு ஒப்பாக பெண்களும், மறைக்கப்பட வேண்டிய அங்கங்களை இருக்கமான ஆடைகள் அணிந்து வெளிப்படுத்தி காண்பித்தும்;, அணிந்தும் அணியாதவர்களாக மேற்கத்தேய மோகம் கொண்டு இஸ்லாமிய ஆடை விதிமுறைகளை புறக்கனித்து நடக்கும் துர்பாக்கியத்தை நோக்கி பயணிக்கின்றது.
இஸ்லாம் சகல துறைகளுக்கும் வழிகாட்டும் மார்க்கம். அதனால்தான் இன்று வரைக்கும் இஸ்லாமிய மார்க்கம் பாரெங்கும் வேரூண்டிக் கொண்டிருக்கிறது என்றால் யாரும் அதனை மறுப்பதற்கில்லை. மனித வாழ்விற்கு நடைமுறை சாத்தியமான மனித வாழ்வின் சகல துறைகளுக்கும் வழிகாட்டியான இஸ்லாமிய மார்க்கம் ஒரு முஸ்லிம் எப்படியான ஆடைகளை அணிய வேண்டும் எப்படியான ஆடைகளை அணிக்கூடாது என்று அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் வரையரைகளுடன் தெளிவாக கூறப்பட்டுள்ளது.


அல்லாஹ் தனது திருமறையிலே இவ்வாறு கூறுகின்றான்.

يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاساً يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشاً

'ஆதமுடைய மக்களே! உங்களுடைய வெட்கத்தளங்களை மறைப்பதற்காகவும், உங்கள் உடலுக்கு பாதுகாப்பாகவும் அலங்காரமாகவும் இருக்கக் கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு அருளியிருக்கின்றோம்' (07:26)
மேலுள்ள திருமறையிலே அல்லாஹ் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஆடை அணிகலன்களை அருளியுள்ளதனை விளங்கிக் கொள்ளலாம்.
01. வெட்கத்தளங்களை மறைத்தல் :
ஆடையை அல்லாஹ் அருளியதற்கு முதன்மையான நோக்கமாக வெட்கத்தளங்களை மறைப்பதனை அடையாளப்படுத்துகின்றான். ஆக இம்முதல் நிலை நோக்கத்தை நிறைவு செய்வதாக எமது ஆடை அணிகலன்கள் இருக்க வேண்டும்.
ஒரு முஸ்லிமான ஆண்; தொப்புள் முதல் முழங்கால் வரையான பகுதிகளையும் பெண் முகம், இரு கைகள் தவிர்ந்த ஏனை உறுப்புக்கள் அனைத்தையும் மறைக்கும் விதமாக ஆடைகள் இருக்க வேண்டும். (சில அறிஞர்கள் பெண்கள் உடல் முழுவதையும் மறைக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்)
02 உடலுக்கு பாதுகாப்பு :
ஒரு மனிதனின் நடத்தையினை தீர்மானிப்பதில் ஆடை என்பது பாரிய பங்கு வகிக்கின்றது. அவன் எப்படியான ஆடைகளை அணிகின்றானோ அவ்ஆடைக்கு ஏற்ப தனது செயற்பாடுகளை அமைத்துக் கொள்கின்றான். ஆக மனிதனின் செயற்பாடுகளை தீர்மானிப்பதில் ஆடை என்பது பாரிய பங்கு வகிக்கின்றது என்பது ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட முடிவாகும்..
ஆடை உடலுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது சூழலில் காணப்படும் அகப்புற சூழல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதனையே குறிக்கின்றது. ஒருவர் ஆடை அணிவதன் மூலம் புறத்தாக்கங்களிலிருந்து தனது உடலை பாதுகாப்பதை அனைனவரும் எதிர்பாhப்பது போன்று அக ரீதியாகவும் ஆடை உடலில் பாதிப்பு செலுத்தவும் துர் நடத்தைகளிலிந்து எம்மை பாதுகாக்கவும் வேண்டும் எதிர்பார்ப்பதும் அவ்வாரான ஆடைகளை அணிவதும் அவசியமாகும்.
04. அலங்காரம் :
ஆடை என்பது அலங்காரம் என்பதை யாரும் மறுப்பதில்லை இறைவனே அதனை தனது திருமறையிலும் தெளிவுபடுத்தியுள்ளான். ஆனால் அவ் அலங்காரம் வரையருக்கப்பட்டதாகும். அவ்வயைரைகளை தழுவியதாய் ஆடை அணிகலன்கள் இருத்தல் வேண்டும். நபிகளார்(ஸல்)அவர்கள் ஒரு முஸ்லிமின் ஆடையின் வரையரைகளை மிகவும் தெளிவாக கூறியுள்ளார்கள்.

05. காபிர்களுக்கு ஒப்பாக இருத்தல் கூடாது :
ஒரு முஸ்லிம் செய்கின்ற எந்த காரியமாக இருந்தாலும் அது காபிர்களுக்கு ஒப்பாக இருத்தல் கூடாது. ஆடை அணிவதாக இருந்தாலும் அது காபிர்களுக்கு மாற்றம் செய்;யும் விதமாக அமைய வேண்டும். இதனை நபிகளார் பின்வருமாறு தெளிவு படுத்தியுள்ளார்கள்.

'யார் ஒரு கூட்டத்தாருக்கு ஒப்பாகிறாரோ அவர் அவர்களை சார்ந்தவராவார்'
(அபூதாவுத்)

06. ஆண்கள் பெருமைக்காக அணிதல், கரண்டைக்கு கீழ் அணிதல் கூடாது :
ஆண்கள் கரண்டைக்கு கீழ் ஆடை அணிவது இஸ்லாத்தின் பார்வையில் தடைசெய்யப்பட்ட (ஹராம்) செயல்களில் ஒன்றாகும். கரண்டைக்கு கீழ் அணிவது பெருமைக்கான அடையாளம் எனவும் அல்லாஹ் மறுமையில் அவ்வாறு செய்பவர்களை பார்க்க மாட்டான் என்பதுவும் நபிகளார் (ஸல்) அவர்களது பொன் மொழிகள் மூலம் எமக்கு தெளிவாகின்றது.
அப்துர்ரஹ்மான் என்ற நபித்தோழரான அபூ ஸஈத் என்பவரிடம் கீழ் ஆடை தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் ஏதாவது கூற நீங்கள் கேட்டுருக்கின்றீர்களா?' என வினவினார்கள். அதற்கவர் 'ஆம் நபி (ஸல்) அவர்கள் 'விசுவாசிகளில் கீழ்ஆடை முழங்காலுக்கும் கரண்டைக்காலுக்கும் இடையில் நடுவில் இருக்க வேண்டும். எனினும் நடுவிலிருந்தும் கரண்டைக்கால் வரை இறங்கியிருந்தாலும் குற்றமில்லை. ஆனால் கரண்டைக்காலுக்குக் கீழ் ஆடை இறங்கியிருந்தால் அது நரகத்திற்கு இட்டுச்செல்ல வேண்டும் எனக்கூறிய பின்இ 'யார் பெருமைக்காக தரையில் கீழ் ஆடையை நிலத்தில் இழுபடச் செய்கிறாரோ அவரை அழ்ழாஹ் மறுமையில் பார்க்கமாட்டான் என மூன்று முறை கூறுவததைக் கேட்டேன் என்றார்கள்.'
அறிவிப்பாளர் அபூ ஸஈத் (ரழி)
(இப்னுமாஜாஹ் 3563)

07. ஆண்கள் பட்டாடை அணிதல் கூடாது :
ஆண்கள் பட்டாடை அணிவது இஸ்லாத்தின் பார்வையில் தடை செய்யபட்ட ஒன்று. இதனை பின்வரும் நபி மொழி தெளிவு படுத்துகின்றது.
'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பட்டை எடுத்து தனது வலது கையிலும் தங்கத்தை எடுத்து தமது இடது கையிலும் வைத்துக் கொண்டு இவ்விரண்டும் எனது உம்மத்தினரில் ஆண்களுக்கு ஹராமாகும்' என்று கூறினார்கள்.
(அபூதாவூத்)
அறிவிப்பவர் அலி(ரழி)

08. ஆண்கள் பெண்களுக்கு ஒப்பாகவும் பெண்கள் ஆண்களுக்கு ஒப்பாகவும் ஆடை அணிதல் கூடாது:
அல்லாஹ் மனிதனை ஆண், பெண் என இரு பிரிவினராக படைத்து ஆண்களையும் பெண்களையும் வேறுபடுத்தும் பல சிறப்பியல்புகள் மூலம் தனித்தனியே அடையாளப்படுத்தி காட்டுகின்றான். இதனால்தான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஆண்கள் பெண்களுக்கு ஒப்பாகுவதும், பெண்கள் ஆண்களுக்கு ஒப்பாகுவதும் அல்லாஹ்வின் சபாத்தை சம்பாதிப்பதற்கான வழி என எச்சரிக்கை விடுத்தார்கள்.

'பெண்களுக்கு ஒப்பாகும் ஆண்களையும் ஆண்களுக்கு ஒப்பாகும் பெண்களையும் அல்லாஹ் சபிக்கிறான்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் இப்னு அப்பாஸ்(ரழி)
புஹாரி, திர்மிதி, அஹ்மத்

ஆகவேதான் புத்தாடைகளை கொள்வனவு செய்கின்ற போது 'நான் ஒரு இஸ்லாமியன் எனது ஆடை இஸ்லாமிய வரையரைகளுக்கு உட்பட்டு அமைய வேண்டும்' என்ற எண்ணத்துடன் எமது ஆடைகளை அமைத்து கொள்ள வேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 17 மார்ச், 2018

[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-01] முஹ்கம் முதஷாபிஹாத்


'ஆல்' என்றால் குடும்பம் என்று அர்த்தமாகும். ஆலு இம்ரான் என்றால் இம்ரானின் குடும்பம் என்று அர்த்தமாகும். மர்யம்(ர) அவர்களது தந்தையே 'இம்ரான்' என்பவராவார். ஈஸா(ர) அவர்களின் பாட்டனாரான இவரையும் இவர் குடும்பத்தையும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் புகழ்ந்து பேசுகின்றான். அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பமாக இத குறிப்பிடப் பட்டுள்ளது.
'நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியினரையும், இம்ரானின் சந்ததியினரையும் அகிலத்தார் அனைவரையும் விட தேர்ந்தெடுத் துள்ளான்.' (3:33)
இந்த வகையில் இந்த அத்தியாயம் ஆலு இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) அத்தியாயம் என்று அழைக்கப்படுகின்றது. இது 200 வசனங்களைக் கொண்ட நீண்ட அத்தியாயமாகும். அல்குர்ஆனின் மூன்றாவது அத்தியாயமாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.


01. முஹ்கம் முதஷாபிஹாத்:
'அவன் தான் உம்மீது இவ்வேதத்தை இறக்கி வைத்தான். அதில் (கருத்துத் தெளிவுள்ள) 'முஹ்கமாத்' வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றும் சில (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) 'முதஷாபிஹாத்'களாகும். எவர்களின் உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப் பத்தை நாடியும், இதன் (தவறான) விளக்கத்தைத் தேடியும் அதில் பல கருத்துக்களுக்கு இடம்பாடான வற்றைப் பின்பற்றுகின்றனர். அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட் டார்கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ 'நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண் டோம். அனைத்தும் எங்கள் இரட்சகனிடமிருந்துள்ளவையே' என்று கூறுவார்கள். சிந்தனையுடையோரைத் தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.' (3:7)

இந்த வசனத்தில் குர்ஆனில் மிகத் தெளிவான 'முஹ்கமான' வசனங்களும் இருப்ப தாகவும் அவ்வாறே மூடலான, பல அர்த்தங்களுக்கு இடம்பாடான, முடிவு இதுதான் என அறுதியிட்டுக் கூற முடியாத முதஷாபிஹத்தான வசனங்களும் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
குர்ஆனின் சில வசனங்களைப் பார்க்கும் போது முழுக்குர்ஆனும் தெளிவானது என்ற அர்த்தம் தொனிப்பது போல் இருக்கும். உதாரணமாக,
'அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும். இதன் வசனங்கள் தெளிவுபடுத்தப்பட்டு பின்னர் யாவற்றையும் அறிந்த, ஞானமிக்கவனிடமிருந்து அவை விபரிக்கப் பட்டுள்ளன.' 11:1)

மற்றும் சில வசனங்களைப் பார்க்கும் போது முழுக் குர்ஆனும் முதஷாபிஹத்தானது என்ற அர்த்தம் தொனிப்பது போல் தோன்றும். உதாரணமாக,
'அல்லாஹ் மிக அழகான செய்தியை வேதமாக இறக்கி வைத்துள்ளான். அவை ஒன்றையொன்று ஒத்ததாகவும், திரும்பத் திரும்ப ஓதப்படுபவையாகவும் இருக்கின்றன. தமது இரட்சகனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களது தோல்களும், அவர்களது உள்ளங்களும் அல்லாஹ்வை நினைவு கூர்வதன் பால் மென்மையடை கின்றன. இது அல்லாஹ்வின் நேர்வழியாகும். இதன் மூலம் தான் நாடுவோரை அவன் நேர்வழியில் செலுத்துகின்றான். அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டு விடுகின்றானோ அவனை நேர்வழியில் செலுத்துபவர் எவருமிலர்.' (39:23)
ஆல இம்ரானின் ஏழாம் வசனம் முஹ்கமும் உண்டு, முதஷாபிஹாத்தும் உண்டு என்று கூறுகின்றது. இதை எப்படிப் புரிந்து கொள்வது என்ற குழப்பம் ஏற்படலாம்.
முதல் வசனத்தில் தெளிவுபடுத்தப்பட்ட வேதம் என்பது வசனங்களின் ஒழுங்கு உறுதித் தன்மை என்ற வகையில் எடுத்துக் கொண்டால் அல்குர்ஆனின்அனைத்து வசனங்களும் முஹ்கமானதுதான். தெளிவானது, உறுதி யானதுதான்.

இரண்டாம் வசனத்தில் 'கிதாபன் முதஷாபிஹா' என்ற வசனம் ஒட்டுமொத்த குர்ஆனின் கருத்தையும் எடுத்துப் பார்த்தால் ஒன்றுக் கொன்று முரண்படாமல் ஒன்றை யொன்று ஒத்துச் செல்வதாக இருக்கும். அந்த வகையில் இந்த குர்ஆன் முதஷாபிஹத்தான வேதம் என்று இங்கே கூறப்படுகின்றது.
குர்ஆனில் முஹ்கமான வசனங்களும் உண்டு. முதஷாபிஹத்தான வசனங்களும் உண்டு எனக் கூறும் இந்த வசனத்தைப் பொறுத்தவரையில் குர்ஆனில் மாற்றுக் கருத்துக் கூற முடியாத முஹ்கமான வசனங்களும் உள்ளன. பல கருத்துக்களுக்கு இடம்பாடான முதஷாபிஹத்தான வசனங்களும் உள்ளன. ஒரு வார்த்தை பல அர்த்தங்களைத் தரக்கூடியதாக அமைந்த வசனங்களை இந்த வகையில் சேர்க்கலாம்.
முஹ்கம், முதஷாபிஹாத் என்பனவற்றுக்கிடையில் சில வேறுபாடுகளை இப்படிக் கூறலாம்.
01.
முஹ்கமான ஆயத்துக்களின் முடிவு மிகத் தெளிவாக இரண்டாம் கருத்துக்கு இடமில்லாமல் இருக்கும்.

முதஷாபிஹத்தான வசனத்தின் முடிவு மூடலாக இருக்கும். சில அறிஞர்கள் சூறாக்களின் ஆரம்பத்தில் வரும் 'அலிப் லாம் மீம்'… போன்ற துண்டிக்கப்பட்ட எழுத்துக்களை அல்லாஹ் மட்டும் அறிந்த முதஷாபிஹத்தான வசனங்களாகக் குறிப்பிடுவர்.
02.
முஹ்கமான ஆயத்துக்களின் அர்த்தம் வெளிப்படையாக இருக்கும். பாவிக்கப்பட்ட வார்த்தை மூலம் அல்லது தஃவீல்-விளக்கத்தின் மூலம் அதை அறியலாம். ஆனால், முதஷாபிஹத் தான வசனங்களின் முடிவான அர்த்தத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான். உதாரணமாக துண்டிக்கப்பட்ட எழுத்துக்கள், மறுமை நிகழ்வு, தஜ்ஜாலின் வருகை, மறுமையின் அடையாளமான தாப்பதுல் அர்ழ் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

03.
முஹ்கம் என்றால் ஒரு அர்த்தத்தைத்தான் கொடுக்க முடியுமாக இருக்கும். முதஷாபிஹாத் என்றால் பல அர்த்தத்திற்கு இடம்பாடானதாக அமைந்திருக்கும்.

04.
மற்றும் சில அறிஞர்கள் முஹ்கமான ஆயத்துக்கள் தன்னளவில் தெளிவாக இருக்கும். வேறு விளக்கம் அதற்குத் தேவையாக இருக்காது. அல்லாஹ் ஒருவன் என்று கூறுங்கள் என்றால் இதன் பொருளும் முடிவும் தெளிவானது. இதற்கு வேறு விளக்கம் தேவைப்படாது.

முதஷாபிஹத்தான வசனத்தின் விளக்கம் இதுதான் என்று அடித்துக் கூற முடியாது. ஒரு கோணத்தில் பார்த்தால் இப்படியும், மறு கோணத்தில் பார்த்தால் அப்படியும் விளக்கம் கூறக் கூடிய வகையில் அமைந்திருக்கும். ஆனால், அவை வேதத்தின் அடிப்படையாகவும் பின்பற்றத் தக்கதாகவும் இருக்காது!
இவ்வாறு முஹ்கம், முதஷாபிஹாத் என்பவற்றை அறிஞர்கள் பலரும் பலவாறு விளக்கி யுள்ளார்கள். இந்த ஆயத்தில் முஹ்கம்தான் இந்த வேதத்தின் அடிப்படை என்றும் முதஷாபிஹாத் வசனங்களில் வழிகேடர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை செய்யப்படுகின்றது. இந்த எச்சரிக்கை உணர்வும் முஹ்கம், முதஷாபிஹாத் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்தவையே என்ற ஈமானும் அவசியம் என்று கூறப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 15 மார்ச், 2018

[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-02] தஃவீல் என்றால் என்ன?

02. தஃவீல் என்றால் என்ன?:
இந்த வசனத்தில் தஃவீல் என்ற பதம் இரண்டு விடுத்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்குர்ஆனின் இந்தப் பதம்; விளக்கம், தப்ஸீர் என்ற அர்த்தத்திலும் 'முடிவு' என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். உதாரணமாக,


'நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். இன்னும் இத்தூதருக்கும் உங்களில் அதிகாரமுடையோருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் ஏதேனும் ஒரு விடயத்தில் முரண்பட்டுக் கொண்டால், நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்வோராக இருந்தால், அதனை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் (தீர்வை வேண்டி) திருப்பிவிடுங்கள். இதுவே மிகச் சிறந்ததும் அழகான முடிவுமாகும்.' (4:59)
இங்கே முடிவு என்ற அர்த்தத்தில் இந்தப் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறே விளக்கம் என்ற அர்த்தத்திலும் சில இடங்களில் இப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சூறா யூசுபில் 'தஃவீலுல் அஹாதீஸ்' கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் கலை பற்றி பேசப்படுகின்றது.
இவ்வாறே தப்ஸீர் கலையில் குர்ஆனுக்கு இவர் 'தஃவீல்' பண்ணுகின்றார் என்ற பதம் பயன் படுத்தப்பட்டால் குர்ஆனின் வெளிப்படையான அர்த்தத்திற்கு முரணாக விளக்கம் சொல்கின்றார் என்பது அர்த்தமாகும்.
குர்ஆனுக்கு உரிய முறையில் விளக்கம் சொன்னால் அது அங்கீகரிக்கப்பட்ட தஃவீலாக இருக்கும். உள்ள அர்த்தத்திற்கு முரணான விளக்கத்தைச் சொல்வது பொதுவாக தஃவீல் செய்தல் என்று விமர்சிக்கப் படுவதைக் காணலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts