லேபிள்கள்

சனி, 29 ஜூலை, 2017

பருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்!

டீனேஜ் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். பொதுவாக இந்த பருவத்தில் நமக்கு வந்த பருக்கள் குறித்து சரியான பராமரிப்புக்களை மேற்கொண்டிருக்கமாட்டோம். மேலும் அப்போது சருமத்தின் மீது அதிக அக்கறை எடுத்து கவனித்திருக்கமாட்டோம். ஆனால் பல ஆண்டுகள் கழித்து, அப்போது ஏற்பட்ட பருக்கள் காரணமாக இப்போது கருமையான தழும்புகள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.


சந்தன ஃபேஸ் பேக் :-
சிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஊற வைத்து, பின்னர் நல்ல சுத்தமான தண்ணீரால் முகத்தை நன்கு கழுவுங்கள். இதனால் பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
வெந்தயக்கீரை ஃபேஸ் பேக் :-
சிறிது வெந்தயக்கீரை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக மைப்போல அரைத்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விடுங்கள்.
வெந்தய ஃபேஸ் பேக் :-
சிறிது வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, அவற்றை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்கு ஆறியதும், அதனை முகத்தில் தழும்புள்ள இடங்கள் மீது தடவுங்கள். மேலும் முகத்தைக் கழுவ இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக கழுவியப் பின்னர் துடைக்க வேண்டாம். அப்படியே காற்றினால் உலரவிடுங்கள்.
ஆலிவ் எண்ணெய் :-
ஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை ஜெல் :-
கற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் அது சாறு போலாகிவிடும். இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
தேன் மகத்துவம் :-
கருப்பான தழும்புகள் மீது சுத்தமான தேனை தடவி, சற்று நேரம் வைத்திருந்து நல்ல தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். இதனால் தேனின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையினால், கருப்பான தழும்புகள் நாளடைவில் மறையத் தொடங்குவதைக் காண்பீர்கள்.
எலுமிச்சை மருத்துவம் :-
எலுமிச்சைச் சாறு சிறிது எடுத்து முகத்தில் தடவுங்கள். அதிக நேரம் வைத்திருக்காமல், நல்ல தண்ணீரைக் கொண்டு கழுவி விடுங்கள். பளபளப்பான முகம் உங்களுடையதாகும்.
பன்னீர்/ரோஸ் வாட்டர் :-
சிறிது பன்னீர் எடுத்துக் கொள்ளுங்கள். பன்னீர் கிடைக்கவில்லையென்றால், புதிய ரோஜா இதழ்களை சிறிது எடுத்துக் கொண்டு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இந்த பன்னீரை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கு :-
ஒரு உருளைக்கிழங்கை எடுத்து சன்னமாகத் துருவிக் கொள்ளுங்கள். அதனை மிக்ஸியில் போட்டு மைப்போல அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனை முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவுங்கள். நன்றாகக் காயும் வரை வைத்திருந்து பிறகு கழுவி விடுங்கள்.
உடலில் நீர்ச்சத்தினை ஏற்றிக்கொள்ளுங்கள் :-
எப்பொழுதெல்லம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறிது சிறிதாக தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். போதுமான நீர்ச்சத்து உடலில் இருந்தால், முகம் பொலிவோடு இருக்கும், முகத்தழும்புகளும் மறைந்து காணப்படும்.
காய்கறி ஜூஸ் அருந்துங்கள்:-
ஊட்டச்சத்துக்களும், புரதமும் நிறைந்துள்ள காய்கறிகளை ஜூஸாக்கி அருந்துங்கள். வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது காய்கறி ஜூஸ் அருந்தி வாருங்கள். இதனால் சருமம் பொலிவுடன் பளபளப்பதைக் காண்பீர்கள்.
க்ரீன் டீ :-
உடலில் உள்ள நச்சுக்களை இயற்கையான வழியில் நீக்க சிறந்த வழி க்ரீன் டீ அருந்துதலே ஆகும். தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீன் டீ அருந்தி வந்தால், முகத்தில் உள்ள கருப்பான தழும்புகள் மறைந்துவிடும்.
தக்காளி:-
ஒரு தக்காளியை எடுத்துக் கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளூங்கள். அதனை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள்.
ஐஸ் கட்டிகள்:-
சிறிது ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு, அவற்றை முகத்தில் மென்மையாகத் தேயுங்கள். தழும்புள்ள இடங்களில் சற்று அதிகமாகத் தேயுங்கள். தினந்தோறும் தவறாமல் இதனை செய்யுங்கள். பின் அதன் பலன் தெரியும்.
டீ-ட்ரீ ஆயில் (Tea tree oil) :-
கொஞ்சம் டீ-ட்ரீ ஆயிலை எடுத்துக் கொண்டு. பாதிக்கப்பட்ட இடங்கள் மீது தடவுங்கள். ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்து தண்ணீர் கொண்டு அலசுங்கள். இது முகத்தில் தடிப்புகளையும், சிவந்த தோலையும் சரிசெய்யும்.
முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் :-
வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் குளிர்ந்த நீர் கொண்டு, முகத்தை நன்கு கழுவி வாருங்கள். இது முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குவதுடன், படிந்துள்ள பாக்டீரியாக்களையும் நீக்கும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 27 ஜூலை, 2017

வேலைக்கு விண்ணப்பிப்பது, இன்டர்வியூவுக்கு போவது எப்படி?

 பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படித்து முடித்ததும், அடுத்தகட்டமாக நல்ல நிறுவனத்தில் பணியில் சேர எடுக்கும் முயற்சி நமது வாழ்க்கைப் பயணத்தில் முக்கிய திருப்புமுனை. பணியில் சேர விண்ணப்பிப்பது சாதாரண விஷயமல்ல. அதில் முக்கியமான நடைமுறைகளை பலரும் கடைப்பிடிப்பதில்லை.
தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இ-மெயில் மூலமாகவே ரெஸ்யூம் அனுப்ப முடிகிறது. இக்கால இளைஞர்கள் ஜேம்ஸ்பாண்ட் ரவி, ஸ்மார்ட் கார்த்தி என விளையாட்டுத்தனமாக இ-மெயில் முகவரி வைத்திருக்கின்றனர். இதுபோன்ற இ-மெயில் முகவரியில் இருந்து விண்ணப்பிக்கும்போது, நிறுவனத்தின் பார்வையில், நம் மீதான நன்மதிப்பு குறையும்.
இ-மெயில் முகவரியில் நம்பர், குறியீடுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், பல நிறுவனங்களில் கணினியில் வைரஸ் பரவாமல் தடுக்க ஸ்பேன் ஃபில்டர் பயன்படுத்துகின்றனர். இதனால் எண், குறியீடுகளுடனான இ-மெயில் முகவரியில் இருந்து அனுப்பும் மெயில்கள் சென்று சேராமல் இருக்க வாய்ப்புள்ளது. நம் மீதான முதல் பார்வையே நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்பதால், தொழில் ரீதியாக இ-மெயில் முகவரியை வடிவமைத்து வைத்துக்கொள்வது நல்லது.


பணிக்கு செல்லும் நிறுவனத்தைப் பற்றி நன்கு ஆய்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். நிறுவனத்தின் தொழில் நடவடிக்கை, பணி சார்ந்த தகவல்கள் என்பது போன்ற முக்கிய தகவல்களை நேர்முகத் தேர்வுக்கு செல்லும் முன்பு, அந்நிறுவன இணையதளத்துக்கு சென்று தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். படித்த கல்வி நிறுவனம் பற்றிய தகவல்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது, உடன் கொண்டு செல்லும் ரெஸ்யூம் முக்கிய அம்சம். படிப்பு சார்ந்த அனைத்து தகவல்களும் அதில் இருக்க வேண்டும். சுய அறிமுகம், படித்த படிப்புகள், தெரிந்துவைத்திருக்கும் அம்சங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். இந்த ரெஸ்யூம் 2 பக்க அளவிலும், வேலைக்கு விண்ணப்பிக்கக் கூடியவரின் சுய திறமை குறித்த தகவல்கள் 20 பக்கம் வரையும் இருக்கலாம். அதில் முழுமையான விவரங்களுடன் கூடிய சுய அறிமுகம், தனித்திறமைகள், படிக்கும்போது செய்த சாதனைகள் என சகலவிதமான தகவல்களையும் அளிப்பதன் மூலம், பணிக்கு கூடுதல் வாய்ப்புண்டு.

ஆடை விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். பென்சில்பிட், லோ-ஹிப் பேன்ட், ஷார்ட் சுடிதார், ஜிகினா, கண்ணாடி, பூ வேலைப்பாடு ஆடைகளை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற ஆடைகள் விஷயத்துக்காக ஒரு ஐ.டி. நிறுவன நேர்முகத் தேர்வில் 50 பேரை திருப்பி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. ஃபார்மல் சுடிதார், பிளெய்ன், ஸ்டிரெய்ப்டு என பெண்கள் ஆடை விஷயத்தில் ஒழுங்குமுறை கடைப்பிடிக்க வேண்டும். ஆண்கள் முழுக்கை சட்டை அணிந்து மடித்துவிடுவது கூடாது. பலருக்கு டை கட்டத் தெரிவதில்லை. பேன்ட் பக்கிள்ஸ் வரை டையின் நுனிப்பகுதி இருக்க வேண்டும். ஃபார்மல் பேன்ட், சர்ட் அணிந்து நேர்முகத் தேர்வுக்கு செல்ல வேண்டும். ஆடையில் அலங்காரத்தை காட்டுவதைவிட நேர்த்தியை, தூய்மையைக் காட்டுவது அவசியம். மற்ற நடைமுறைகளைப் பற்றி நாளை தெரிந்துகொள்ளலாம்.
– கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி – -தி இந்து


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 25 ஜூலை, 2017

கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…

தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலியானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும். உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும்.
மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் பாதிப்பினாலே கணுக்கால் வலி உண்டாகின்றது.
கணுக்கால் அதாவது கால் பாதத்தை நன்கு ஊன்ற முடியாமல் குதிகாலில் பொறுக்கமுடியாத வலி உண்டாகும். காலை அழுத்தி, ஊன்ற முடியாது. மேலும் சிறு கட்டி போல் (எலும்புபோல்) காணப்படும்.
காலை எழுந்தவுடன் கால் ஊன்றி நடக்க முடியாது. வெயில் வர வர கொஞ்சம் கொஞ்சமாக வலி குறையும்.
பின் மாலை நேரத்திலும் வலி இருக்கும். மாடிப் படிகளில் ஏறி இறங்க முடியாது. கால் பாதத்தில் ஒருவிதமான எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். காலை அழுத்தி ஊன்றி நடக்காததால் நரம்புகளில் சுளுக்கு ஏற்பட்டு தொடையிடுக்கில் நெறி கட்டிக் கொள்ளும். இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் நடக்க இயலாமல் போய்விடும்.


கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்:
வாதம், பித்தம், கபம் போன்ற முக்குற்றங்களில் பித்தநீர் அதிகமாகி வாதநீருடன் சேரும்போது தலையில் நீராகக் கோர்த்து தலை வலியை ஏற்படுத்துகின்றது. இப்படி தலையில் கோர்க்கும் நீர் கழுத்து வழியாக இறங்கி காலின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கிவிடுகின்றது.
இதுபோல் கப தோஷம் (சூலை) பித்த நீருடன் கபம் சேர்ந்து நீராக மாறி, உடலின் தன்மைக்கேற்ப பாதம், கணுக்கால் பகுதியில் நீர் கோர்த்து கட்டி போல் இறுகி வலியை உருவாக்குகின்றது.
பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஒழுங்கற்ற உதிரப்போக்கு, நாள்கடந்த மாதவிலக்கு, ஜலதோஷம் போன்றவற்றால் கணுக்காலில் வலி உண்டாகும்.
அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வாயு நீரானது வாத நீராக மாறி கணுக்காலில் தங்கி வலி ஏற்படுத்தும்.
இப்படி உடல் கூறுகளின் தன்மையைப் பொறுத்து கணுக்காலில் தங்கும் நீரானது உப்புப் படிவமாக மாறி கட்டிபோல் உருவாகின்றது. இதை சிலர் எலும்பு வளர்ந்திருப்பதாகக் கூறுவார்கள். உப்பும் சுண்ணாம்புச் சத்தும் இணைவதால் திடப் பொருளாக மாறும். உடம்பில் உள்ள சர்க்கரையும் சேர்வதால் எலும்புபோல் உறுதியாகிறது.
பொதுவாக உடலில் சர்க்கரை இருக்கும். இந்த சர்க்கரையானது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும். அதில் உப்பு கலப்பதால் அவை கட்டியாகிவிடுகின்றன. உதாரணமாக சுண்ணாம்பு, சர்க்கரை, உப்பு, சேர்ந்தால் கட்டியாக மாறும். அதுபோல்தான் இனிப்பு நீர், உப்பு நீர், சுண்ணாம்பு நீர் சேர்ந்து கணுக்காலில் தங்கி கட்டியாகவிடுகின்றது. இதனால் பாத வெடிப்பு ஏற்படுவதற்கும் காரணமாகின்றது.
இரவில் அதிகமான கார உணவு உண்பதாலும் காலை, மதிய உணவிலும் காரத்தை சேர்த்துக்கொள்வதாலும் குடல் அலர்ஜியால் பித்த நீர் மேல் எழும்பி தலையில் நீர் கோர்த்து தலைவலி வந்து பின் கணுக்காலில் கட்டியாகி விடுகின்றது.
மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற வற்றால் கூட இந்த வலி உருவாகிறது.
பகல் தூக்கம், அதிக உடல் உழைப்பு, உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் கூட கணுக்கால் வலி உண்டாகும்.
உடல் எடை அதிகரித்தாலும் கணுக்கால் வலி உண்டாகும்.
மது, புகை போன்ற போதைப் பொருட்களாலும் உடலில் அலர்ஜி உருவாகி கணுக்கால் வலி உண்டாகும்.
முறையற்ற உணவு, நீண்ட பட்டினி போன்றவற்றாலும் உருவாகலாம்.
கணுக்கால் வலி வருமுன் காக்க:
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக வாயுவை உண்டுபண்ணும் உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருட்களை உட்கொள்வது நல்லது.
நாம் உண்ணும் உணவில் காரத்தன்மையைக் குறைக்க வேண்டும். கார உணவை மதிய வேளையில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் இரவு உணவில் காரம் சேர்க்கக் கூடாது.
கார உணவைப் பற்றி சித்தர்கள் அன்றே மாலைக்குப்பின் காரம் தேவையில்லை என்றார்கள். அதனால் கார உணவை தவிர்ப்பது நல்லது.
மதிய உணவுக்குப்பின் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டுமே ஒழிய அதிக நேரம் தூங்கக் கூடாது. நீண்ட தூக்கம் கொண்டால் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.
உடலில் இரும்புச் சத்து குறைவதாலும் கணுக்கால் வலி உண்டாகும். இதனால் இரும்புச் சத்து நிறைந்த பழங்கள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினமும் 1/2 மணி நேரமாவது நடைபயிற்சி செய்வது நல்லது. அதிகமாக நீர் அருந்த வேண்டும்.
கணுக்காலின் மேல்புறத்தில் தைல வகைகளான காயத்திருமேனி தைலம், கற்பூராதித் தைலம், வாத நாராயணத் தைலம் போன்ற வலி நிவாரண தைலங்களைத் தடவி 1/2 மணி நேரம் கழித்து இளம் சூடான நீரில் கழுவி வந்தால் கணுக்காலில் உண்டான கட்டி சிறிது சிறிதாக குறையும். காலையும், மாலையும் இவ்வாறு செய்வது நல்லது.
வசம்பு – 5 கிராம்
மஞ்சள் – 5 கிராம்
சுக்கு – 5 கிராம்
சித்தரத்தை – 5 கிராம்

எடுத்துப் பொடித்து முருங்கை இலை அல்லது வெற்றிலை சாறில் அரைத்து இளம் சூடாக்கி காலில் பூசி வந்தால் கணுக்கால் கட்டி நீங்கி வலி குணமாகும்.
எருக்கின் பழுத்த இலை – 5
வசம்பு – 5 கிராம்

இரண்டையும் சேர்த்து அரைத்து தண்ணீ­ரில் கொதிக்க வைத்து பசைபோல் வந்தவுடன் இளம் சூடாக காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குணமாகும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 23 ஜூலை, 2017

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 10 சூப்பர் உணவுகள் !!!

பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான மற்றும் எளிதில் ஜீரணமாகும் படியான உணவுகளையே கொடுக்க விரும்புகின்றனர். ஆனால் ஆரோக்கியமான உணவு தயாரித்தலில்திட்டமிடுதல் என்பது தேவைப்படுகிறது. அதிலும் வேலைக்கு செல்லும் பெற்றோர்களுக்கு, கடினமான வேலைக்கு நடுவில் குழந்தைகளை, பள்ளியில் இருந்து சரியான நேரத்தில் வீட்டிற்கு அழைத்து வருவதே கடினமாக இருக்கும். அதனால் வீட்டிற்கு வந்ததும் பதப்படுத்தப்பட்ட உணவான மாக்ரோனி மற்றும் சீஸ் அல்லது பீட்சா போன்ற உணவுகளை மட்டுமே ஒவ்வொரு உணவு நேரத்திலும் குழந்தைக்கு உணவிட முடிகிறது. அதற்காக கவலை பட தேவையில்லை. ஏனெனில் அந்த மாதிரியான நேரத்தில் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் வண்ணமயமான, சுவையான மற்றும் சத்துக்கள் நிரம்பிய சூப்பர் உணவுகளான முட்டை, நட்ஸ், பழங்கள் போன்றவற்றைக் கொடுக்கலாம். ஒரு பெற்றோர் என்ற முறையில், ஒருவர் தன் குழந்தையின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் அதே நேரத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கான சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும். அதிலும் சூப்பர் உணவுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் ஏராளம் உள்ளன. ஆகவே இப்போது குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவுகளைக் கொடுத்தால் நல்லது என்பதைப் பார்ப்போம்.


முட்டை
 முட்டையில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அவைகளில் கால்சியம் மற்றும் அவற்றை உடலில் உறிஞ்சுவதற்கு உதவும் வைட்டமின் டி போன்றவை நிறைந்துள்ளது. எனவே இந்த முட்டையை காலை வேளையில் கொடுத்தால், குழந்தைகளுக்கு நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும்
 ஓட்ஸ்
 ஆராய்ச்சி ஒன்றில் எந்த குழந்தைகள் ஓட்ஸை சாப்பிடுகிறார்களோ, அந்த குழந்தைகளுக்கு கவனக்குறைவு நீங்கி, படிப்பில் ஆர்வத்துடன் இருப்பார்கள் என்று சொல்கிறது. எனவே நார்ச்சத்து நிறைந்த தானியங்கள், ஓட்ஸ் போன்றவைகளை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவை மெதுவாக செரிமானமடைவதோடு, நிலையான ஆற்றலை குழந்தைகளுக்கு வழங்கும்
 பழங்கள்
 பழங்களில் குழந்தைகளுக்கான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் பழங்களில் கூட நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக குழந்தைகளுக்கு பெர்ரிப் பழங்கள், முலாம்பழம், கிவிப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்றவைகள் மிகவும் சிறந்த பழங்களாகும்.
நட்ஸ்
 நட்ஸ்களில் நல்ல கொழுப்புகள் அதிகம் , அதனை குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவை உடலின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும. அதிலும் காலையில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால், அது நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவி புரியும். குறிப்பாக நட்ஸில் பேரிச்சம் பழம் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள்
 பால்
 பால் பொருட்களில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. மேலும் இந்த உணவுப் பொருள் குழந்தையின் மூளை மற்றும் உடலுக்கு தேவையான எரிபொருளை வழங்குகிறது. மேலும் பாலிலுள்ள கால்சியம், குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்கவும், அதே நேரத்தில் புரதம், மூளைத் திசுக்களை உருவாக்கவும் உதவுகிறது.
பசலை கீரை
 பசலை கீரையில் எலும்புகள் மற்றும் மூளைக்கு தேவையான சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ, சி போன்றவை நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருளை குழந்தைக்கு கொடுத்தால் மிகவும் நல்லது.
தயிர்
 கால்சியம் மற்றும் புரதத்திற்கு ஒரு சிறந்த ஆதாரமாக தயிர் உள்ளது. இந்த தயிர், குழந்தைகளுக்கு வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பெரிதும் உதவுகிறது.
முழு தானியங்கள்
 முழு தானியங்களாலான உணவுகளில் ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி, டி மற்றும் கால்சியம் நிறைந்து காணப்படுகிறது. எனவே தானிய வகை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால், குழந்தைகளை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
அக்ரூட் பருப்புகள்
 அக்ரூட் பருப்புகள் சிறந்த புரத சிற்றுண்டி ஆகும். அவைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவைகள் குழந்தைகளின் மூளை செயல்பாடுகளை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைக்கிறது.
முட்டைக்கோஸ்
 குறுக்குவெட்டுதோற்றத்தையுடைய காய்கறியான முட்டைக்கோஸ், செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவை குழந்தைகளை நோய்கள் எளிதில் தாக்காதவாறு பாதுகாக்கும். இந்த காய்கறியானது அப்படியே திண்பதற்கும் மற்றும் அதன் மென்மையான சுவை தன்மையினால் பல உணவுகளில் பச்சையாக சேர்த்தும் கொடுக்கலாம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 21 ஜூலை, 2017

காதுகளில் பிரச்சனையா? இதோ பராமரிக்கும் வழிமுறை

ஒலியை கேட்கும் திறன் உள்ள உறுப்பான "காது" சரியான முறையில் செயல்படுதல் மனிதனுக்கு அவசியம்.
நமது தாடை அசைவின் போது தானாகவே அழுக்குகளை வெளியேற்றும் திறன் காதுகளுக்கு உண்டு.
கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் காதில் விட்டு குடைந்து அழுக்குகளை நீக்க முயற்சி செய்யக்கூடாது.



காது மடல் பிரச்சனை
அரிப்பு, கடி புண்ணாதல் போன்றவை ஓட்டையைச் சுற்றியுள்ள தோலில் ஏற்படுவதுண்டு. தோட்டில் கலந்துள்ள உலோகங்களால் சருமத்தில் அழற்சி ஏற்படும்.
தங்கம் அல்லாத உலோகங்களிலான அலங்காரத் தோடுகளாலேயே பெரும்பாலும் இது ஏற்படுகிறது.
சிலர் காது பகுதிக்கு சோப் போட்டுவிட்டு நன்கு அலசிக் கழுவாதுவிடுவதால் அழற்சி ஏற்படுவதும் உண்டு.
அத்தகைய தோடுகளைத் தவிர்பதுடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் க்ரீம்களை பூசுவதன் மூலம் குணமாகும்.
செவிப்பறையில் ஓட்டை விழும் அபாயம்

  1. காதில் எண்ணெய் விடுவதும் தவறான செயல். ஆதலால் தேவைப்படும் போது காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம் சென்று காதுகளைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.
    2. காது வலி, காது அடைப்பு, அல்லது காதில் இருந்து திரவம் வடிதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது தலைக்கு குளிப்பது, நீர்நிலைகளில் நீராடுதல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
    காதில் தண்ணீர் புகுந்து அடைப்பு ஏற்பட்டால் காது மடல்களை லேசாக அசைப்பதன் மூலம் தண்ணீர் வெளியேறி அடைப்பு தொல்லையை நீக்க முடியும். தேவைப்பட்டால் மெல்லிய பருத்து துணி மூலம் சுத்தப்படுத்தலாம்.
    3. காது குத்தும் போது மென்மையான காது மடலில் மட்டுமே காது குத்த வேண்டும். காதில் உள்ள குருத்தெலும்பு பகுதியில் காது குத்தினால் நோய் தொற்று ஏற்படுவதோடு காது சுருங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது.
    4. மூன்று மாதத்தில் இருந்து ஒரு வயது வரை உள்ள குழந்தைகள் சத்தம் செய்தால் திரும்பிப் பார்க்காமலோ பேச ஆரம்பிப்பதில் தாமதம் காட்டினாலோ உடனே காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

    காது கேட்கும் திறன் குறைந்து போனால் ஆரம்பத்திலேயே ஒலிக் கருவியை பொருத்துவதன் மூலம் இயல்பான பேசும் திறன் பழுதாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
    5. காதுக்குள் பூச்சி ஏதேனும் புகுந்து விட்டால் உப்பு நீரைக் காதில் விடுவதுதான் உடனடி முதல் உதவியாகும்.
    6. தொடர்ந்து ஓசை எழும்பும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் காதுக்கு மாஸ்க் அணிவது நல்லது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது காது கேட்கும் திறனை உரிய மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது அவசியம்.
    7. ஜலதோஷம் ஏற்பட்டு விட்டால் மூக்கைச் சிந்தும்போது மிகப்பலமாக சிந்துவதுகூடாது. இவ்வாறு செய்தால் காதுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
    8. நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், பரம்பரையாக காதுகேளாதோர் வழிவந்த குழந்தைகள், சிக்கலான பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பிறந்த உடனேயே மஞ்சள் காமாலை யாலும் மூளைக் காய்ச்சலாலும் தாக்கப்படும் குழந்தைகள் காது கேளாமையால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம் பரிசோதனை செய்வது அவசியம்.

  2. தவிர்க்கவேண்டியவை
    பெருத்த ஓசையுடைய வெடிகளை வெடிப்பதும், ஒலி பெருக்கியினால் அலறும் இசையைக் கேட்பதும் காதருகே அறைவதும் காதுகளுக்கு தீங்கு விளைவிக்ககூடிய செயல்கள்.
    தொடர்ந்து கைப்பேசியில் பேசுவதையும் ஓயாமல் இயர்போனில் (earphone) பாட்டுக்கேட்பதையும் தவிர்க்கவும்.
    சிலருக்கு எந்த காரணமும் இன்றி காதுகேட்கும் திறன் தீடீரென பாதிக்கப்படலாம். இதற்கு திடீர் கேட்புத்திறன் இழப்பு என்று பெயர். காது சம்பந்தமான பிரச்சனைகளை காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.
    செயற்கை காதுகள்
    செயற்கை காதுகள், இரத்தமும் சதையும் குருத்தெலும்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. வளைந்து மடியக் கூடிய உயிரோட்டம் உள்ள இந்த காதுகளை, காதுகேட்கும் திறனை இழந்ததவர்கள் பயன்படுத்தலாம்
http://www.puthiyatamil.net/t52265-topic

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 19 ஜூலை, 2017

மின்சாரம்: மழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவடிக்கைகள்

மழைக்காலத்தில் உயிரிழப்பைத் தடுப்பதற்காக கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது குறித்து, சென்னை வடக்கு கோட்ட மின் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மழைக் காலங்களில் புயல், வெள்ளம் காரணமாக பொருட்சேதங்கள் ஏற்படுவது மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்படக் கூடும். எனவே, பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளது. அதன் விவரம்:



1 ) மழைக்காலத்தில் மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.

2 ) உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும்.

3 ) டிவி ஆன்டனா, ஸ்டே ஒயர் மற்றும் கேபிள் டிவி ஒயர்களை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம்.

4 ) வீட்டுக்கு சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போட்டு அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும். மேலும், சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.

5 ) மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த வேண்டாம்.

6 ) மின் கம்பத்திலோ, அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது.

7 ) மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்.

8 ) மழை, புயல் காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகில் செல்லக் கூடாது. இதுகுறித்து, மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.

9 ) இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

10 ) இடி, மின்னல் ஏற்படும்போது மின்கம்பங்கள், மரங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 17 ஜூலை, 2017

காய்ச்சலோடு இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரணமா விடாதீங்க…

 தற்போது தமிழகத்தில் ஏராளமானோர் டெங்கு என்னும் கொடிய உயிர்கொல்லி காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை எலும்பு முறிவுக் காய்ச்சல் என்றும் அழைப்பார்கள். கொசுக்கள் மூலம் பரவும் இக்காய்ச்சலால் குழந்தைகள், பெரியவர்கள் உயிரை விட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு பலர் உயிரை விடுவதற்கு காரணம், அதற்கு எவ்வித தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படாதது தான்.

மேலும் பலருக்கு டெங்குவின் அறிகுறிகள் சரியாக தெரியாமல் இருப்பதும் ஓர் காரணம். டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளைக் கண்டறிந்து, ஆரம்பத்திலேயே போதிய சிகிச்சை எடுத்து வந்தால், நிச்சயம் டெங்குவின் கொடிய தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். பொதுவாக காய்ச்சல் வந்தால், பலரும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, ஏதோ ஒரு மாத்திரையைப் போட்டுக் கொள்வோம். டெங்கு காய்ச்சல் கூட ஆரம்பத்தில் காய்ச்சலில் தான் ஆரம்பிக்கும்.



அதன் தீவிரம் அதிகரிக்கும் போது, பாதிப்பும் அதிகம் இருக்கும். சரி, இப்போது டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளையும், அதனை தடுப்பது எப்படி, அதற்கான சிகிச்சை என்ன என்பதையும் பற்றிக் காண்போம்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் * 2-7 நாட்களுக்கு அதிகப்படியான காய்ச்சல் (104 F -105 F) * கடுமையான தலை வலி * கண்களுக்கு பின்புற வலி

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் * கடுமையான மூட்டு மற்றும் தசை வலி * மிகுதியான சோர்வு * குமட்டல்

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் * வாந்தி * சரும அரிப்பு (காய்ச்சல் வந்த 2-5 நாட்களுக்குள் ஏற்படும்) * மூக்கு, ஈறுகளில் இரத்தக்கசிவு

டெங்கு முற்றிய நிலையில்… ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் முற்றிய நிலையில் இருந்தால், காய்ச்சல் முடிந்த பின்னர், இந்த அறிகுறிகள் தென்படும். அதில் நம் ரத்தத்திலுள்ள தண்ணீர் உள் உறுப்புகளில் கசியக் கூடும். இது மிகவும் ஆபத்தானது. இரத்தத்தில் உள்ள தண்ணீர் கசியும் போது தட்டையணுக்களின் அளவு குறையும். தட்டையணுக்கள் குறைந்து, உடல் கிருமிகளை எதிர்த்துப் போராட முடியாமல், செயலிழந்துவிடும். மேலும் தாழ் இரத்த அழுத்தம், சுவாச சிக்கல், வயிறு புடைத்தல், இரையக குடலியப் பகுதியில் இரத்தக்கசிவு ஏற்படுதல் போன்றவை ஏற்படும். இன்னும் தீவிரமான நிலையில், கடுமையான வயிற்று வலி, சுயநினைவு இழத்தல், வலிப்பு, சொறி, தாழ் இதயத்துடிப்பு போன்றவை உண்டாகும்.

யாரைத் தாக்கும் டெங்கு காய்ச்சல் பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் தான் தாக்கும். குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களைத் தான் டெங்கு காய்ச்சல் விரைவில் தாக்கும். எனவே உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.

சுற்றுச்சூழல் சுத்தம் அவசியம் தற்போது மழை அதிகம் பெய்து, அதனால் வீட்டைச் சுற்றி நீர்த்தேங்கியுள்ளது. நீர்த்தேக்கங்களில் தான் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும் என்பதை மறக்காதீர்கள். ஆகவே உங்களுக்கு டெங்கு வராமல் இருக்க வேண்டுமெனில், வீட்டைச் சுற்றி தேங்கியுள்ள நீரை வெளியேற்ற முயல்வதோடு, வீட்டைச் சுற்றி பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க வேண்டும். நீரை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறைந்தது வாரம் ஒரு முறை தண்ணீர்த் தொட்டியில் மருந்து தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்.

கொசு கடிக்காமல் இருக்க… சருமத்தை முழுவதும் மூடக்கூடிய ஆடைகளை அணிவது, தூங்கும் போது கொசுவலைகளை உபயோகிப்பது, வீட்டில் கொசுக்கள் வருவதைத் தடுக்கும் செடிகளை வளர்ப்பது, கொசுவிரட்டிகளைப் பயன்படுத்துவது போன்றவை கொசுக்கடிப்பதில் இருந்து நல்ல பாதுகாப்புத் தரும்.

டெங்கு காய்ச்சல் சிகிச்சை டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், நம் சித்த மருத்துவத்தில் இதற்கு ஓர் தீர்வு இருப்பது தெரிய வந்துள்ளது. அது என்னவெனில் பப்பாளி இலைச்சாற்றினை காலை, மாலை என இரண்டு வேளை அருந்துவதன் மூலம், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, இரத்தத்தில் உள்ள தட்டையணுக்களின் அளவு குறையாமல் இருக்குமாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 15 ஜூலை, 2017

எளிய இயற்கை மருத்துவம் :-

1. மாம்பழம்:
முக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.

2. வாழைப்பழம்:
தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.



3. முகம் வழுவழுப்பாக இருக்க:
கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.

4. இரத்த சோகையை போக்க:
பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.

5. கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது:
தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

6. குழந்தைகளுக்கு:
குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

7. உடல் சக்தி பெற:
இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.

8. வெட்டுக்காயம் குணமாக:
நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

9. உடல் அரிப்பு குணம் பெற:
வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

10. காதில் சீழ்வடிதல் குணமாக:
வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 13 ஜூலை, 2017

பிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 4

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் –
கியாமுல் லைல் தொழுகையின் ஒழுங்குகள்:
இரவுத் தொழுகைக்காக தயாரானதும் இலகுவான இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்வது சிறந்ததாகும்.
"உங்களில் ஒருவர் இரவுத் தொழுகைக் காக எழுந்தால் இலகுவான இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதன் மூலம் தனது தொழுகையை ஆரம்பிக்கட்டும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்."
அறிவிப்பவர் : அபூஹுரைரா(வ)
நூல் : முஸ்லிம் (768-198),
இப்னு குஸைமா 1150

"நபி(ச) அவர்கள் இரவில் தொழ எழுந்தால் இலேசான இரண்டு ரக்அத்துக்கள் மூலம் தனது தொழுகையை ஆரம்பிப்பார்கள்" என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


நூல்: முஸ்லிம்- 767-197

பின்னால் தொழப்படும் தொழுகைக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதற்காக முதல் இரு ரக்அத்துக்களையும் தொழுவார்கள் என இதற்கு காரணம் கூறப்படுகின்றது. இந்த அடிப்படையில் இரவுத் தொழுகையை இலகுவான இந்த இரண்டு ரக்அத்துக்கள் மூலம் ஆரம்பிப்பது சிறந்ததாகும். இதற்கு மாற்றமாக நீண்ட ரக்அத்துக்களையே ஒருவர் முதலில் தொழுதாலும் குற்றமில்லை.
நபி(ச) அவர்கள் சில நேரங்களில் அப்படியும் செய்துள்ளார்கள். ஹுதைபா(வ) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸ் இதனை உணர்த்துகின்றது.
"நான் ஒரு நாள் இரவு நபி(ச) அவர்களுடன் தொழுதேன். முதலாவது, சூறதுல் பகராவை ஓத ஆரம்பித்தார்கள். நூறாவது வசனத்தில் ருகூஃ செய்வார்கள் என (மனதிற்குள்) சொல்லிக் கொண்டேன். தொடர்ந்து ஓதிக் கொண்டே சென்றார்கள். பகரா சூறாவை ஓதி ரக்அத்தை நிறைவு செய்வார்கள் என எண்ணினேன். அதன் பின் சூறா ஆல இம்றானையும் ஓதினார்கள்….."
நூல்: முஸ்லிம் (772-203), நஸாஈ (1664)

எனவே, இலேசான இரண்டு ரக்அத்துக்கள் இல்லாமல் கூட நேரடியாகவே கியாமுல் லைல் – நீண்ட இரவுத் தொழுகையை ஆரம்பிக்கலாம் என்பதை இதன் மூலம் அறியலாம்.
தக்பீரின் பின்னர்:
தொழுகைக்காக தக்பீர் கட்டியதன் பின்னர் வழமையாக ஓதும் துஆவையும் ஓதலாம். பின்வரும் துஆக்களை ஓதிக் கொள்வது சிறந்ததாகும்.
இப்னு அப்பாஸ்(வ) அவர்கள் அறிவித்தார்கள். "நபி(ச) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும்:
"இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி அவற்றிலுள்ளவை அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மையாளன். உன் வாக்குறுதி உண்மை. உன்னுடைய சந்திப்பு உண்மை. உன்னுடைய கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையாளர்கள். முஹம்மது உண்மையாளர். மறுமை நாள் உண்மை. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன்மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு. நீயே (சிலரை) முற்படுத்துபவன், (சிலரை) பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. உன்னுடைய உதவியின்றி நன்மை செய்யும் ஆற்றலோ தீமையிலிருந்து விடுபடும் ஆற்றலோ இல்லை" என்று கூறினார்கள். "
நூல்: புஹாரி- 1120

இவ்வாறே பின்வரும் துஆவையும் ஓதியுள்ளார்கள்.
"நபி(ச) அவர்கள் இரவில் தொழ எழுந்தால் நபி(ச) அவர்கள் தமது இரவுத் தொழுகையை எதைக் கொண்டு ஆரம்பிப்பார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள்,
அறிவிப்பவர் : அபூஸலமதிப்னு அப்துர் ரஹ்மான்(வ)
நூல் : நஸாஈ- 1625, அபூதாவூத்- 767, இப்னு ஹிப்பான்- 2600

இஃதல்லாத வேறு சில துஆக்களும் இடம்பெற்றுள்ளன. அவற்றை ஓதி தொழுகையை ஆரம்பிக்கலாம்.
தொழுகையை நீட்டுவது:
இரவுத் தொழுகையை விரைவாகத் தொழாமல் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது சிறந்ததாகும்.
"நீண்ட நேரம் நின்று தொழக்கூடிய தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும்" என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர்(வ)
நூல் : முஸ்லிம்- (756-164), இப்னு குஸைமா- 1155, இப்னுமாஜா- 1421, நஸாஈ- 2526

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு அதிகமான ருகூஃ, சுஜூத் வருவதற்காக கூடிய ரக்அத்துக்கள் தொழுவதை விட நீண்ட நிலையில் இருந்து தொழப்படும் குறைந்த எண்ணிக்கையில் தொழப்படும் தொழுகை சிறந்ததாகும் என இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள். அதிகமான ரக்அத்துக்கள் தொழ வேண்டும் என்பதற்காக வெகு வேகமாக தராவீஹ் தொழும் மக்கள் இதனைக் கவனத்திற் கொள்வது சிறந்ததாகும்.
"நபி(ச) அவர்கள் தமது பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள்" என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல்: புஹாரி- 1130

ஏற்கனவே நாம் குறிப்பிட்ட ஹூதைபா (வ) அவர்களது செய்தியும் ஒரே ரக்அத்தில் பகரா, நிஸா, ஆலஇம்றான் ஆகிய சூறாக்களை நபி(ச) அவர்கள் ஓதியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இரவுத் தொழுகையை நீட்டித் தொழுவதென்றால் நீண்ட சூறாக்களை ஓதுவதை மட்டும் அது குறிக்காது. நீளமான சுஜூது, ருகூஃகளை செய்யலாம், நடு இருப்புக்களைக் கூட நீளமானதாக அமைத்துக் கொள்ளலாம்.
ஹுதைபா(வ) அவர்களது அறிவிப்பில் நிலையில் நின்றதைப் போல் நீண்ட நேரம் ருகூஃ செய்தார்கள். அவர்களது சுஜூதும், கியாம் நிலையும் நெருக்கமாக இருந்தது என்று குறிப்பிடுகின்றார்கள்.

எனவே, நீண்ட ருகூஃ, நீண்ட சுஜூதுகளைச் செய்து தொழ முடியும். ஒருவர் நீண்ட நேரம் எடுத்துத் தொழாவிட்டாலும் கியாமுல் லைல் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும். தொழுகை எவ்வளவு நீளமாக இருக்குமோ அவ்வளவுக்கு அது ஏற்றம் பெற்றதாக அமையும் என்பதை கவனத்திற் கொள்ளவும்.
நீளமாகத் தொழ வேண்டும் என்பதற்காக அவரவர் தமது சக்திக்கு மீறி தம்மை வருத்திக் கொள்ளக் கூடாது.
சோர்வோ, தூக்கமோ மிகைத்தால் தொழுவதை நிறுத்திவிட வேண்டும்:
"நபி(ச) அவர்கள் மஸ்ஜிதுக்குள் நுழையும் போது இரு தூண்களுக்கிடையில் கயறு கட்டப் பட்டிருப்பதைக் கவனித்தார்கள். "இது என்ன?" எனக் கேட்ட போது, "இது ஸைனப்(ரலி) அவர்கள் தொழுவதற்காகக் கட்டப்பட்டது.. அவர்கள் தொழும் போது சோர்வுற்றால் அல்லது கால்கள் வீக்கமுற்றால் இதனைப் பிடித்துக் கொள்வார்கள்." என்று கூறப்பட்டது. அதற்கு நபியவர்கள், "அதை அவிழ்த்துவிடுங்கள்! உங்களில் ஒருவர் அவரது உற்சாகத்திற்கேற்ப தொழட்டும். சோர்வு ஏற்பட்டால் அவர் அமர்ந்து கொள்ளட்டும் என்றார்கள்."
அறிவிப்பவர் : அனஸ்(வ)
நூல்: இப்னு குஸைமா- 1180, அபூதாவூத்-312, முஸ்லிம்- (784-219), இப்னுமாஜா- 1371

எனவே, தூக்க மயக்கத்தில் தொழுவதைத் தவிர்க்க வேண்டும்.
நின்றவாறும், அமர்ந்தவாறும் தொழலாம்:
கியாமுல் லைல் தொழுகையை அமர்ந்து கொண்டும் தொழலாம்.
நபி(ச) அவர்கள் இறுதிக் கால கட்டத்தில் அவர்களுக்கு உடம்பும் போட்டுவிட்டது. இக்காலப் பகுதியில் அதிகமாக அமர்ந்த நிலையில் தொழுதுள்ளார்கள். பின்வருமாறு இதனை சுருக்கமாகக் கூறலாம்.

– நின்று தொழுதல்: அதிகமாக இப்படித்தான் செய்துள்ளார்கள்.
– இருந்து தொழுதல்: இறுதிக் காலப் பகுதியில் அதிகம் இப்படித்தான் தொழுதுள்ளார்கள்.
"நபி(ச) அவர்கள் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள், நீண்ட நேரம் அமர்ந்தும் தொழுவார்கள். நின்று தொழுதால் நின்றவாறு ருகூஃ செய்வார்கள். அமர்ந்து தொழுதால் அமர்ந்தவாறு ருகூஃ செய்வார்கள்."
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல் : முஸ்லிம்- 106, இப்னுமாஜா- 1228,
இப்னு குஸைமா- 1246

– நின்றும் இருந்தும் தொழுவது:
இருந்தவாறு தொழுவார்கள். குர்ஆன் ஓதுவதை நிறுத்துவதற்கு சற்று முன்னர் எழுந்து நின்று கொண்டு ஓதிவிட்டு பின்னர் நின்ற நிலையில் ருகூஃ செய்வார்கள். இது பற்றி ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் போது,
"நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தாச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போன்றே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கிவிட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள்."
அறிவிப்பவர் : ஆயிஷா(வ)
நூல் : புஹாரி- 1119,

இந்த மூன்று அடிப்படையிலும் தொழுதுகொள்ளலாம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால் ,...

Popular Posts