லேபிள்கள்

சனி, 29 மார்ச், 2014

குழந்தைகளின் வயிற்று வலிகள்

குழந்தைகளின் வயிற்று வலிகள்

மாதத்தில் ஒரு முறையாவது என்னைப் பார்க்காமல் அவன் இருந்திருக்கமாட்டான். வயிற்றைப் பொத்திக் கொண்டு அவனும், பதறியடித்துக் கொண்டு தாயும் கூட வருவார்கள். பார்க்க எனக்குச் சங்கடமாக இருக்கும்.
ஆனால் அவளோ?

"
டொக்டரட்டை மருந்தெடுத்துக் கொண்டுபோய் ஒருக்கால் குடுத்தால்போதும் பிள்ளைக்கு சுகமாகிவிடும்" என எனக்குப் பாராட்டுத் தருவாள்.

பிரச்சனை பாரதூரமில்லை. இதனைத் தாய்க்கு விளக்கியிருந்தபோதும் அவளால் அவனின் வலியைப் பார்த்துக் கொண்டிருக்க முடிவதில்லை.

சின்னப் பையன் 7-8 வயதுதான் இருக்கும். அடிக்கடி வருவது வயிற்று வலிக்காகத்தான். வாயைக் கட்டி இருக்கமாட்டான். வாயைக்கட்டும் வயதில்லைத்தான். இருந்தபோதும் கண்டகண்ட நொறுக்குத் தீனிகளை கண்ட நிண்ட இடங்களில் வாங்கிச் சாப்பிடுவான். வலி தேடி வந்துவிடும்.
அவள் மாத்திரமல்ல வேறு பல பெற்றோரும் வயிற்றுவலிக் குழந்தைகளுடன் வருவதுண்டு. ஏனெனில் குழந்தைகளில் அடிக்கடி தோன்றும் பிரச்சனைதான். பெரும்பாலும் உணவு ஒத்துக் கொள்ளாமையாக இருக்கலாம். அல்லது கிருமி தொற்றியிருக்கலாம்.

அடிக்கடி தோன்றும் பிரச்சனை என்றாலும் எல்லாமே ஆபத்தற்றவை என்றும் சொல்ல முடியாது. அப்பன்டிசைடிஸ், உணவுக் கால்வாய் கொழுவுதல் போன்ற சிக்கலான பிரச்சனைகளும் குழந்தைகளில் வருவதுண்டு.
காரணங்கள் என்ன?
மிக முக்கிய காரணம் கிருமித் தொற்றுத்தான். உணவு அல்லது நீராகாரம் மூலம் கிருமி தொற்றியிருப்பதற்கான சாத்தியங்களே அதிகம். பெரும்பாலும் வாந்தி, வயிற்றோட்டம் வலியுடன் கூடவே ஏற்படும். 'உணவு நஞ்சாதல்' என்ற கலங்கடிக்கும் தலைப்புடன் பத்திரிகைகளில் வெளிவருபவை இவைதான். பெரும்பாலான வைரஸ் தொற்றுகள் தானாகவே குணமாகிவிடும். ஆனால் சில் பக்றீரியா தொற்றுகளுக்கு அன்ரிபயோடிக் கொடுக்க நேரிடும்.

சில வகை உணவுகள் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதாலும் வயிற்றுவலி வரலாம். ஒவ்வாமையானது என்றால் தோலில் அரிப்பு, தடிப்பு என்பதாகத்தான் இருக்க வேண்டுமின்றில்லை. உணவுக்கால்வாயின் உட்பகுதியானது ஒவ்வாமையால் தடிக்கும்போது வலி ஏற்படும். சிலவேளை வாந்தியும் கூடவரும்.

எளிதில் செமிபாடடையாத உணவுகளும், அதிகளவு வாயுக்களை வெளியேற்றும் உணவுகளும் சில குழந்தைகளுக்கு வயிறு பொருமுதல், வயிற்று ஊதல், வயிறு அழுவது போன்ற கடாமுடாச் சத்தம்,  ஆகிய அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். சரியாக இதை விளக்க முடியாத குழந்தைகள் இதையும் வலி அல்லது நோ என்றே சொல்லுவார்கள்.

சில பிள்ளைகள் தேவையற்ற பொருட்களை வாயில் போட்டு விழுங்கிவிடுவதுண்டு. சோப், கல்லு, பட்டன், விளையாட்டுப் பொருட்களின் பாகங்கள் என எதையாவது விழுங்கிவிடுவார்கள். இவை பெரும்பாலும் வலியை ஏற்படுத்தாது. சற்றுப் பொறுமையோடு இருந்தால் மறுநாள் மலத்துடன் வெளியேறிவிடும். ஊசி, ஆணி போன்ற கூரான பொருட்கள் மற்றும் பட்டரி போன்றவை பிரச்சனையைக் கொடுக்கலாம்.

ஏற்கனவே குறிப்பிட்ட அப்பன்டிசைடிஸ், உணவுக் கால்வாய் கொழுவுதல் போன்றவை தீவிரசிகிச்சை தேவைப்படுபவை. சத்திரசிகிச்சை தாமதமின்றிச் செய்ய நேரிடும்.
குடும்பத்தில் மைக்கிரேன் தலைவலி உள்ளதாயின் குழந்தையின் வயிற்றுவலி (Abdominal Migraine) அதோடு சம்பந்தமானதா என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். பொதுவாக இது சற்று வளர்ந்த குழந்தைகளில் காணப்படுகிறது. வயிற்றுவலியுடன் ஓங்காளம், சத்தி, பசியின்மை, இவற்றுடன் கொட்டாவி விடுதல், தூக்கத்தன்மை போன்ற அறிகுறிகளும் தென்படும்
மருத்துவரிடம் செல்லு முன்னர் பெற்றோர் அவதானிக்க வேண்டியவை

எல்லாக் குழந்தைகளும் ஒரே விதமாகத் தமது பிர்ச்சனையை வெளிப்படுத்துவதில்லை. மிகச் சிறிய குழந்தைகளுக்கு வார்த்தையால் வெளிப்படுத்த முடியாது. அழுகை மட்டுமே அறிகுறியாக இருக்கும்.

சற்று வளர்ந்த குழந்தைகள் தமக்கு வலிக்கிறதெனச் சொல்லக் கூடும். கடுமையான வலியென்றால் மாத்திரம் சொல்லும் குழந்தைகளும் இருப்பார்கள். சற்று வலி என்றாலே ஆரவாரப்படுத்தும் குழந்தைகளும் இருப்பார்கள். உம்மொன்று முகத்தை வைத்துக் கொண்டு அடங்கிக் கிடப்பதை வைத்துத்தான் சிலரில் உணர முடியும். சுருண்டு படுத்துக்கிடப்பதை வைத்து வலியைக் கண்டுபிடிக்கவும் நேரலாம்.

எவ்வளவு நேரம்?

சாதாரண வலிகள் ஒரு சில மணிநேரத்தில் குணமாகிவிடும். அல்லது படிப்படியாக 24 மணிநேரத்திற்குள் மறைந்துவிடும். அவ்வாறின்றி வலி நீடித்தாலும் வர வரத் தீவிரமானாலும் மருத்துவரைக் காண்பது அவசியம்.
குழந்தையின் உடல்நிலைத் தோற்றம்

வலி என்று சொல்லிவிட்டு சற்று நேரம் விளையாடி ஓரளவு உற்சாகமாக இருந்தால் அது தீவிர நோயாக இருக்காது. மாறாக மிகவும் வருத்தமாகவும் களைப்பாகவும் சோர்ந்தும் இருந்தால் அது அக்கறை எடுக்க வேண்டியது என்பதில் சந்தேகம் இல்லை.

வலி எங்கே?

வயிற்றில் எங்கு வலிக்கிறது என்பதை அவதானியுங்கள். பொதுவாக வயிறு முழுக்க வலிக்கிறதா? அடி வயிற்றில் வலிக்கிறதா? அல்லது ஒரு பக்கம் மட்டும் வலிக்கிறதா என்பதை அவதானியுங்கள். வலது பக்க அடிவயிற்றில் குத்துவது அப்பன்டிசைடிஸ் ஆக இருப்பதற்கான சாத்தியம் அதிகம்.

வயிற்றோட்டம்

வயிற்று வலியுடன் வயிற்றோட்டமும் இருந்தால் அது பெரும்பாலும் வைரஸ் கிருமியால் ஏற்பட்டதாக இருக்கும். தானாகவே குணமாகிவிடும். ஆயினும் மலமானது சளி போல அல்லது இரத்தம் கலந்துபோனால் அது பக்றீரியாத் தொற்றாக இருக்கலாம்.

வாந்தி

இதுவும் ஒரு முக்கிய அறிகுறிகுறி. பொதுவாக ஒரு இரு முறை வாந்தி எடுத்த பின்னர் வலி குறைந்தால் அது உணவு செமிபாட்டின்மையாக இருக்கலாம். தானே குணமாகிவிடும். ஆயினும் வாந்தி தொடர்ந்து கொண்டிருந்தால் மருத்துவரைக் காண வேண்டும். நீரிழப்பு நிலை ஏற்பட்டுவிடலாம் என்பதுடன் வயிற்று வலிக்கு வேறு ஏதாவது தீவிர காரணம் இருக்கலாம். அத்துடன் வாந்தியின் நிறத்தையும் அவதானிக்க வேண்டும். மஞ்சளா, பச்சையா கோப்பி கலரா அல்லது இரத்தம் கலந்திருக்கிறதா என்பதையும் அவதானிக்க வேண்டும்.

காய்ச்சல் இருக்கிறதா
காய்ச்சல் இருக்கிறதா என்பதை அவதானிக் வேண்டும், காய்ச்சல் இல்லாமலும் பல ஆபத்தான வயிற்றுக் குத்துகள் வருவதுண்டு.

சிறுநீர்

சிறுநீர் போகும்போது எரிகிறதா, அத்துடன் அதில் ஏதாவது நிற மாற்றம் இருக்கிறதா என்பதும் அவதானிக்க வேண்டியதாகும். சுலபமாக வெளியேறுகிறதா அல்லது முக்கி வெளியேறுகிறதா என்பதும் கவனிக்க வேண்டியதாகும்.

ஆண் பிள்ளைகளில்

அடி வயிற்றிற்கு சற்றுக் கீழே விதைப்பையிற்கு மேலே வலியிருந்தால் உடனே கவனிக்க வேண்டும். விதை முறுகுதல் (Testicular torsion) என்பது விதையானது தனக்குள் தானே முறுகுவதாகும்.

உடனடியாகக் கவினிக்காது விட்டால் அதற்கான இரத்த ஓட்டம் தடைப்பட்டு அந்த விதை செயலிழந்து போகும் அபாயம் உண்டு. பையன்கள் வெட்கப்பட்டு வலிப்பது எங்கே என்பதை வெளிப்படுத்தாமல் இருக்கக் கூடும். பெற்றோர்கள் அக்கறையோடு விசாரிக்க வேண்டியதாகும்.
பெற்றோர்கள் செய்ய வேண்டியவை

தேற்றுதலும் ஆறுதலும்

பெற்றோர்களின் தேறுதல் வார்த்தைகளிலும் சற்று ஆறுதலும் எடுக்கவும் பெரும்பாலான வலிகள் தானாகவே மறைந்து விடும். ஆறுதலாகப் படுத்திருப்பதாலும் அல்லது குப்புறப்படுத்திருப்பதாலும் வலி குறையலாம். ஆயினும் கட்டாயப்படுத்த வேண்டாம். எந்த நிலையில் படுத்திருக்க வலி தணிகிறதோ அதையே குழந்தைகள் தாமாகவே தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

உணவு

வலியுடன் வாந்தியும் இருந்தால் குழந்தையால் உணவோ நீராகாரமோ எடுப்பது சிரமமாக இருக்கும். உணவு இல்லாமல் ஓரளவு நேரம் தாக்குப் பிடிக்கலாம். ஆனால் நீராகாரம் இல்லையேல் உடலில் நீரிழப்பு நிலை ஏற்பட்டுவிடும். எனவே சிறிது சிறதாகவேனும் ஏதாவது நீராகாரம் கொடுக்க வேண்டும். பசியிருந்து உண்ண விருப்பமும் இருந்தால் உண்பதில் தவறில்லை.

பால், மென்பானங்களை வலியிருக்கும்போது தவிர்ப்பது நல்லது. பால் சமிபாடடைய நேரமெடுப்பதாலும், மென்பானங்களில் காஸ் அதிகம் இருப்பதும் காரணம்.
மருந்துகள்

வலியைத் தணிக்க பரசிற்றமோல் உதவும் அதைத் தவிர வேறு மருந்துகள் கொடுப்பதைத் தவிருங்கள். முக்கியமாக அன்ரிபயோரிக் மருந்துகள், வலிநிவாரணிகள் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனை இன்றிக் கொடுக்க வேண்டாம்.

என்ன நோய் என்பதை நிர்ணயித்த பின்னரே மருத்துவர் சரியான மருந்தைத் தருவார்.

பரிசோதனைகள்

வயிற்று வலியும் ஒரு முறை வாந்தியும் எடுத்த மாணவனை பாடசாலையிலிருந்து நேரடியாக அழைத்து வந்திருந்தார் அவனது தந்தையார். கன்ரீனில் ஏதோ சாப்பிட்டிருந்தான்.

"
எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பமா எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பமா" என மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேயிருந்தார். உணவுப் பிரச்சனை எனச் சொல்லியும் கேட்வில்லை.

"
இப்ப மருந்து தாறன். பிள்ளையின் வேதனை தணிய நாளைக்கு எடுங்கோ. இரத்தம் சிறுநீரும் சோதியுங்கோ" என பரிசோதிப்பதற்கான சிட்டைகளையும் கொடுத்துவிட்டேன்.

மறுநாள் அவரோ பிள்ளையோ வரவில்லை. பின்னொரு நாளில் சந்தித்தபோது வலி சுகம் என்பதால் அந்தப் பரிசோதனைகளைச் செய்யவில்லை என்றார். மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். ஆம் அதைத்தானே நான் எதிர்பார்த்தேன்.

சிறுநீர்ப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, அல்ரா சவுண்ட் ஸ்கான்,CT Scan எனப் பல பரிசோதனைகள் குழந்தைகளின் வயிற்று வலிக்கான காரணத்தை நிர்ணயிக்கத் தேவைப்படலாம். ஆனால் அவை அவசியமானால் மட்டுமே செய்ய வேண்டியவை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

தயிர் தகவல்கள்.*

* தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன் , வெல்லம் சேர்த்துச் சாப்பிட உடல் ...

Popular Posts