லேபிள்கள்

ஞாயிறு, 16 மார்ச், 2014

காஞ்சி பட்டு

காஞ்சி பட்டு

ம.அறம்/காஞ்சிபுரம் : ஜரிகை மற்றும் கோறா விலை உயர்வு, கூலிப் பற்றாக்குறை உட்பட பல்வேறு காரணங்களால் காஞ்சிபுரத்தில், பட்டு நெசவுத் தொழில் நலிவடைந்துள்ளது. நெசவாளர்கள் தறிகளை ஓரம்கட்டிவிட்டு வேறு வேலைகளை தேடிச் செல்ல துவங்கி உள்ளனர். தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் பட்டுப்புடவைகள் உற்பத்தி செய்யப்பட்டாலும், காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளுக்கு தனிச்சிறப்பு உண்டு. நெய்யும் முறை, ஜரிகை தரம், கூடுதல் எடை போன்றவை மற்ற ஊர் சேலைகளிலிருந்து காஞ்சிபுரம் சேலைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
பட்டுச் சேலை நெய்யும் முறை: காஞ்சிபுரத்தில் பட்டு சேலைகள், கோர்த்து வாங்கும் முறை, கோர்த்து வாங்காமல் சாதாரண வாட் முறை என இரண்டு முறைகளில் நெய்யப்படுகிறது. பட்டுச் சேலைகளில் பயன்படுத்தப்படும் ஜரிகையின் தரம் முக்கியம். 245 கிராம் ஜரிகை ஒரு மார்க் என அழைக்கப்படுகிறது. இதில் 191 கிராம் வெள்ளி (78 சதவீதம்), 51.55 கிராம் பட்டு(21 சதவீதம்), 2.45 கிராம் தங்கம் (1 சதவீதம்) இருக்கும். தற்போது இந்நிலை இல்லை. காஞ்சிபுரம் பட்டுக் கூட்டுறவு சங்கங்களில் தங்கம் 0.59 சதவீதம், வெள்ளி 57 சதவீதம், பட்டு 24 சதவீதம், காப்பர் 18.41 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளில் இரு புறமும் ஜரிகை பார்டர் இருக்கும். ஜரிகை பார்டர் 2 முதல் 8 அங்குலம் அகலம் கொண்டதாக இருக்கும். சேலை மற்றும் முந்தியை தனியே நெய்து சேர்ப்பர். இம்முறைக்கு பிட்னி என்று பெயர்.
விலை உயர்வு: பட்டுச் சேலை மூலப்பொருட்களான ஜரிகை, பட்டு நூல் போன்றவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு கிலோ கோறா 1,400 ரூபாய் என விற்கப்பட்டது. தற்போது 3,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 2009ம் ஆண்டு ஒரு மார்க் ஜரிகை 5,800 ரூபாய். இன்று 11 ஆயிரம் ரூபாய். முகூர்த்த பட்டுப்புடவை தயாரிக்க 350 கிராமிலிருந்து 450 கிராம் வரை ஜரிகை, 500 கிராம் பட்டு நூல் தேவை. கூலி 3,500 ரூபாயிலிருந்து 4,500 ரூபாய் வரும். மூலப்பொருட்கள் விலை உயர்வால் முகூர்த்த பட்டுப்புடவை விலை குறைந்தபட்சம் 35 ஆயிரம் ரூபாய் என விற்கப்படுகிறது.
பட்டுப்புடவை விலை உயர்ந்துள்ளதால், காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் வாங்க மக்கள் தயங்குகின்றனர். விற்பனை குறைந்ததால், உற்பத்தியும் குறைந்து விட்டது. வேலை கிடைக்காததால் நெசவாளர்கள், வேறு வேலைகளை தேடிச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் தற்போதைய நிலை: காஞ்சிபுரத்தில் 23 பட்டுக் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் பாதி பேர் மட்டுமே நெசவு நெய்கின்றனர். லாபத்தில் இயங்கும் ஓரிரு சங்கங்களை தவிர மற்றவை மூடினால் கெட்டப் பெயர் ஏற்படும் என்பதற்காக, அரசு வீணாக அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்கிறது. பட்டுச்சேலை மூலப்பொருட்கள் விலை உயர்வால், பல சங்கங்களில் தரமற்ற ஜரிகை பயன்படுத்த துவங்கி விட்டனர். தனியார் பட்டுச்சேலை உற்பத்தியாளர்களிடம் 30 ஆயிரம் நெசவாளர்கள் நெசவு நெய்து வந்தனர். அவர்களில் 50 சதவீதம் பேர் இன்று வேறு வேலைக்கு செல்கின்றனர்.
காஞ்சிபுரத்தில் தினமும் 25 சதவீதம் மட்டுமே பட்டுச் சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. 75 சதவீதம் பிற ஊர் சேலைகள் விற்பனையாகின்றன. நெசவாளர்களின் பரிதாப நிலை: பட்டுச்சேலை மூலப்பொருட்கள் விலை உயர்வால், நெசவுத் தொழிலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மாதம் முழுவதும் சிரமப்பட்டு உழைத்தாலும் 5,000 ரூபாய் சம்பாதிப்பது சிரமமாக உள்ளது. எனவே, நெசவாளர்கள் வேறு வேலை களை தேடிச் சென்றுவிட்டனர்.
நெசவாளர் துரைராஜ் கூறும்போது: "நான் 2 தறிகள் வைத்து நெசவு செய்து வந்தேன். 3 புடவை நெய்தால் 1,200 ரூபாய் கூலி மட்டுமே கிடைத்தது. தற்போது திருமண மண்டபங்களில் வேலை செய்து, ஒரு திருமணத்திற்கு 2,000 ரூபாய் கூலி பெறுகிறேன்' என்றார்.
 காஞ்சிபுரம் கைத்தறி பட்டு ஜரிகை சேலை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் நாராயணசாமி கூறியதாவது: ஆண்டுக்கு 30 ஆயிரம் டன் முதல் 35 ஆயிரம் டன் பட்டு நூல் தேவை. நம் நாட்டில் 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் டன் வரை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. பற்றாக்குறையை போக்க சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. அவர்கள் பற்றாக்குறையைப் பயன்படுத்தி அதிக விலைக்கு விற்கின்றனர். இதை தவிர்க்க, அரசு நேரடியாக இறக்குமதி செய்ய வேண்டும் அல்லது பட்டுச் சேலை உற்பத்தியாளர்கள், சுங்கவரி இல்லாமல் நேரடியாக இறக்குமதி செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.


அதேபோல் தங்கம், வெள்ளி ஆன்- லைன் வர்த்தகத்தில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும். தங்கம், வெள்ளி விலை உயர்வால் ஜரிகை விலை உயர்கிறது. மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தினால் மட்டுமே பட்டு நெசவுத் தொழிலை காப்பாற்ற முடியும். அதேபோல் பிற ஊர்களில் நெய்யப்படும் சேலைகள், காஞ்சிபுரம் சேலைகள் என விற்கப்படுவதை தடுக்க சட்டப்பூர்வமான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
 சூரத்தை நம்பி ஜரிகை
பட்டுச் சேலைகள் தயாரிப்பிற்கு தேவையான ஜரிகைக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தை நம்பி இருக்க வேண்டியுள்ளது. வெள்ளி இழை, தங்கம், பட்டு நூல் ஆகியவற்றைக் கொண்டு ஜரிகை தயாரிக்கப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு அரசு ஜரிகை தொழிற்சாலை உள்ளது. இங்கு கூட சூரத்திலிருந்து வெள்ளி இழை வாங்கி வந்து, ஜரிகை தயாரிக்கின்றனர். சூரத்தில் ஜரிகை தயாரிப்பில் ஈடுபடுவோர், அதை குடும்பத் தொழிலாக செய்கின்றனர். ஜரிகை தயாரிப்பு தொழில்நுட்பம் வெளி நபர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக இந்த அணுகுமுறையை பின்பற்றுகின்றனர். இதனால், ஜரிகை தயாரிப்பு தொழில்நுட்பம் சூரத்திலே முடங்கியுள்ளது.
பட்டு புடவை பராமரிப்பு
பட்டு சேலையை பராமரிப்பது ஒரு தனி ஸ்டைல். முறையாக பராமரித்து வந்தால் பல ஆண்டுகளுக்கு உபயோகிக்க முடியும். பட்டுப்புடவை பராமரிப்பிற்று சில் எளிய டிப்ஸ்: விஷேசங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு புடவையை களைந்து உடனே மடித்து வைக்க கூடாது.
நிழலில் காற்றாட 2 அல்லது 3 மணி நேரம் உலரவிட்டு பின்பு அதனை கைகளால் அழுத்தி தேய்த்து மடித்து எடுத்து வைக்கவேண்டும். சாதாரண தண்ணீரால் மட்டும் அலசினால் போதுமானது. எக்காணரத்தை கொண்டும் பட்டுப்புடவையை சூரியஒளி படும்படி வைக்க கூடாது.
பட்டு புடவையின் மீது ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் போன்ற கடினமான கறைகளாக இருந்தால் அந்த இடத்தில் விபூதியை போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை வைத்து பின்பு தண்ணீர் விட்டு அலசவேண்டும்.
அடிக்கடி அயர்ன் செய்வதை தவிர்க்க வேண்டும், அயர்ன் செய்யும் பொழுதும் ஜரிகையை திருப்பிப்போட்டு அதன் மேல் லேசான துணி விரித்து அதன் பின்பு அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்யக்கூடாது.
பட்டுப்புடவைகளை அட்டை பெட்டிகளிலோ, பிளாஸ்டிக் கவர்களிலோ வைப்பதை காட்டிலும் துணிப்பைகளில் வைத்தல் அதன் தன்மையை பாதுகாக்கும்.  வருடக்கணக்கில் பட்டுபுடவையை தண்ணீரில் நனைக்காமல் வைக்க கூடாது. பயன்படுத்தாமல் இருந்தாலும் 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலரவிட வேண்டும்.
பட்டுப்புடவையை தாராளமாகத் துவைக்கலாம். புடவை ஒரு கலரிலும், பார்டர் ஒரு கலரிலும் இருந்தால், முந்தானையையும், பார்டரையும் ஒரு கயிற்றால் கட்டி, தண்ணீரில் படாமல், உடல் பகுதியை மட்டும் பூந்திக்கொட்டை ஊற வைத்த தண்ணீரில் நனைத்துத் துவைக்கலாம்.
பிறகு அதைக் காய வைத்து, அடுத்து பார்டர், முந்தானைப் பகுதிகளை வேறு தண்ணீரில் தனியே துவைத்து உலர்த்த வேண்டும். பட்டைத் துவைக்காமலோ, பாலீஷ் போடாமலோ அப்படியே உடுத்தினால், வியர்வை பட்டு, அதிலுள்ள உப்பு, ஜரிகைப் பகுதியை அரித்து விடும்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உடலில் ஏற்படும்சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எளிய மருத்துவக்குறிப்புகளை இங்கேபார்ப்போம்

உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். துளசி இலைகள் போடப்பட்ட ...

Popular Posts