Saturday, October 1, 2016

வெற்றிலையின் மருத்துவ குணம் !

சற்றே இதயவடிவம் போல கை அகல அளவில் சராசரியாக வளரும் பச்சை, இளம்பச்சை இலைகளே வெற்றிலையாக உண்ணப்படுகிறது.
புகையிலை, பாக்குடன் வெற்றிலை உண்பது தீய பழக்கமாகும்.
வெற்றிலை வலியைப் போக்கக்கூடியது. வீக்கத்தைத் தணிக்கக் கூடியது. வெற்றிலையை கடுகு எண்ணெய் விட்டு லேசாக வதக்கி வெதுப்பான சூட்டில் மார்பில் பற்றாகக் கட்டிவர மூச்சுத்திணறல் மற்றும் இருமல் குணமாகும்.
ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினில் பத்து துளிகள் எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும். நெஞ்சு சளி கரைந்து மலத்தோடு வெளியேறும்.
திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த மருந்தோடு வெற்றிலைச் சாறும் தேனும் கலந்து கொடுத்தால் ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு நோய், நெஞ்சுச் சளி இருமல் குணமாகும்.
பாம்பு கடித்தவருக்கு வெற்றிலைச் சாறு பருகக் கொடுப்பதால் விஷம் முறிந்து குணமாகும். இதனாலேயே இதற்கு நாகவல்லி என்றும் ஒரு பெயர் விளங்குகிறது.
வெற்றிலையை அரைத்து வாதம், விரைவாதம் ஆகியவற்றுக்கு மேல் பற்றாக கட்டினால், வீக்கமும் வலியும் குறைந்து நல்ல தீர்வு ஏற்படும். வெற்றிலைச் சாற்றோடு சமபங்கு இஞ்சிச்சாறும் தேனும் கலந்து குடித்தால் சுவாச கோளாறுகள் அத்தனையும் குணமாகும்.

அளவான வெற்றிலையை சுண்ணாம்புடன் மட்டும் சுவைப்பது பல்வேறு மருத்துவ குணம் கொண்டதாக அறியப்பட்டு உள்ளது.
வெற்றிலைச் சாற்றில் சிறிது கற்பூரம் சேர்த்து லேசாகக சூடு செய்து வெதுவெதுப்பான நிலையில் நெற்றிப் பொட்டுகளின் மேல் தடவ தலைவலி விலகும்.
இரவு தூங்கச் செல்லும் முன் 2 தேக்கரண்டி வெற்றிலைச் சாற்றுடன் சிறிது ஓமத்தைப் பொடித்து சேர்த்து குடித்துவர மூட்டு வலி, எலும்புவலி ஆகியன குணமாகும்.
வெற்றிலை அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்தது. 6 வெற்றிலைகளில் 80 முதல் 85 சதவீதம் நீர்ச்சத்து காணப்படுகிறது.
மேலும் புரதம், தாது உப்பு, நார்ச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ரசாயனப் பொருட்களும் இதில் உள்ளன.

எந்த பூச்சி கடித்தது என்று தெரியாமல் ஏற்படும் பாதிப்பான காணாக் கடிக்கு நடுநரம்பு நீக்கிய வெற்றிலை 5, மிளகு 10 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து, 200 மில்லி நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது 50 மில்லியாக ஆனவுடன் தினமும் 2 வேளை சாப்பிட்டு வர காணாக்கடி விரைவில் குணமாகும்.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பு தூண்டப்படுகிறது. அத்துடன், ஒருவித உற்சாக உணர்வும் கிடைக்கி றது.
வாத நோய்களை குணமாக்கும் "வாத நாராயணா" எண் ணெய் தயாரிப்பில் வெற்றிலை சாறும் ஒரு முக்கிய மூலப் பொருளாகும்.
தீப்புண் குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கி புண்ணின்மீது பற்றாக போடவேண்டும். விரை வில் அந்த புண் குண மாகும்.
வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற் றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந் து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.

வயிற்றுவலி நீங்க 2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரை த்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடு நரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக் கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மந்தம் குறையும்.
வெற்றிலை–4, வேப்பிலை ஒரு கைப்பிடி , அருகம் புல் ஒரு கை ப்பிடி. சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்றவை த்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.
அஜீரணக் கோளாறு அகல வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அத னுடன் 5 நல்ல மிளகுசேர்த்து நீர்விட்டு காய் ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந் தால் சிறுவர்களுக்கு உண்டாகும் செரியா மை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழு ங்கி வந்தால் அஜீரணக் கோளா றுகள் நீங்கும்.
தீப்புண் ஆற தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலை யுடன் அத்தி இலை 1 கைப் பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையை ச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.
தேள் விஷம் இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென் று விழுங்கி தேங்காய்துண்டுகள் சிலவற்றினை யும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.
விஷக்கடி குணமாக உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமா ன வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றி லையில் நல்ல மிளகு வைத்துமென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.
குறைந்த ஆற்றல் வழங்குபவை வெற்றிலைகள். 100 கிராம் வெற்றிலையால் உடலுக்கு 44 கலோரிகள் ஆற்றலே கிடைக்கிறது.
6 வெற்றிலையில் 3.5 சதவீதம் அளவு புரதமும், 3.3 சதவீதம் தாதுஉப்புக்களும், கொழுப்புப் பொருட்கள் மிகக் குறைவாக கொண்டது வெற்றிலை.
6 வெற்றிலையில் 0.4 முதல் 1 சதவீதம் வரையே கொழுப்பு பொருட்கள் காணப்படுகின்றன
.
நிகோடின் அமிலம் 100 கிராம் வெற்றிலையில் 0.89 மில்லிகிராம் அளவில் காணப்படுகிறது.
வைட்டமின்-ஏ 2.9 மில்லி கிராம் அளவும், இதர வைட்டமின்களான தயாமின் 70 மைக்ரோ கிராம், ரிபோபிளேவனி 30 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 0.01 சதவீதம் காணப்படுகிறது. இவை வளர்ச்சிதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு உடற்செயல்களில் ஈடுபடுபவை.
உடலுக்கு அத்தியாவசியமான தாதுஉப்புக்களான பொட்டாசியம் 4.6 சதவீதமும், கால்சியம் 0.5 சதவீதமும், நைட்ரஜன் 7 சதவீதமும் காணப்படுகிறது.
இதில் பொட்டாசியம் இதய செயல்பாடுகளுக்கும், கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கும் அவசியமாகும். இரும்புத்தாது மற்றும் பாஸ்பரஸ் குறைந்த அளவில் காணப்படுகிறது.
பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நோய்த் தொற்றுகளை தடுக்கவல்லவை.
டைபாய்டு, காலரா, காசநோய் கிருமிகளை கொல்லும் ஆற்றல்கூட இவற்றுக்கு உண்டு.
சில ரசாயனங்கள் மூளையை சுறுசுறுப்பாக செயல்பட தூண்டுகிறது.
புத்துணர்ச்சி தருகிறது.

வியர்வை சுரப்பிகள் நன்கு வேலை செய்ய தூண்டுகிறது.
6 வெற்றிலையை சுண்ணாம்பு தடவி சுவைப்பதால் ஒரு டம்ளர் பாலில் கிடைக்கும் தாதுக்கள் உடலுக்கு கிடைக்கிறதாம்.
வென்னீரில் வெற்றிலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தினமும் தண்ணீருக்குப் பதிலாக பருகி வந்தால் உடலில் பல்வேறு நோய்த்தொற்றுகளை தடுக்குமாம்.
மலச்சிக்கல், தலைவலி, சரும அரிப்பு, அழற்சி, நினைவிழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கான மருந்து தயாரிப்பில் வெற்றிலைகள் சேர்க்கப்படுகிறது.
பாக்கு கலக்காத வெற்றிலை உடலுக்கு நன்மை பயக்கும். வயிறு உப்புசம், வாதம், பித்தம், கபம் எனப்படும் முப்பிணியைக் குணமாக்கும்.
வெற்றிலை மற்றும் இஞ்சி ஆகியவற்றின் சாறு எப்பேர்ப்பட்ட நுரையீரல் நோய்களுக்கும் உடனடி நிவாரணமாக அமையும். நாள் பட்ட நுரையீரல் நோய்களுக்கும் தீர்வாகும். வெற்றிலையை உணவுக்குப் பின்பு உண்டால் செரிமானம் ஆகும்.

வெற்றிலையுடன் மிளகு சேர்த்துத் தயாரிக்கப்படும் கஷாயம் உணவு செரிமானத்துக்கும் சளி, கபம் போன்றவற்றுக்கும், விஷ முறிவுக்கும் அருமருந்து.
குழந்தைகளுக்கு வரும் இருமலை வெற்றிலை சாறு மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையை தொண்டை பகுதியில் தடவுவதன் மூலம் குணமாக்கலாம்.
அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.
வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.
வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.
வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.
வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.
கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.
வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.
சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.
வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும்.
சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.
நுண்ணுயிர் தாக்கத்தினை எதிர்க்க வெற்றிலைச்சாறு உதவுகிறது.சைனஸ் பிரச்சினைக்கு வெற்றிலைச்சாறு தகுந்த நிவாரணம் அளிக்கக்கூடியது.
வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.
வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும்.
வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.
இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.
புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு.
வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.
வெற்றிலை இரத்த விருத்தியை அதிகரிக்கும். சுண்ணாம்பு 'கால்சியம்' ஆனதால் எலும்புகள் வலிமை பெறும். பாக்கு குடலில் பூச்சிகள் தாக்காமல் தடுக்கும். ஏலக்காய், பச்சைக்கற்பூரம், வால் மிளகு சேர்த்துக் கொண்டால் கபம் சேர்வதை குறைக்கும்.

தாம்பூலம் வாய்க்கு புத்துணர்ச்சி உண்டாக்கி, துர்நாற்றத்தை போக்கும்.
தாம்பத்தய உறவை மேம்படுத்தும்.
வெற்றிலையில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் சக்தியால் ஆஸ்துமா, காசநோய்கள் நீங்கும்.
செரிமானத்தை தூண்டும்.
பற்கள் உறுதியடையும்.
தாம்பூலம் நோய்தடுப்பு மருந்தாகும்.
பெண்கள் தாம்பூலம் தரித்தவுடனே, நன்றாக வாய், நாக்கு சிவந்தால் அவர்களுக்கு அமையும் கணவன் அந்தப் பெண் மீது பிரியமாக இருப்பான் என்று சொல்வதுண்டு.
ஆனால், ஒரு எச்சரிக்கை: தாம்பூலம் தரிப்பதுடன் தற்போது புகையிலையை சேர்ப்பது வழக்கமாகி வருகிறது. இது நிச்சயமாக வாய்புற்றுநோயை வரவழிக்கும் வழக்கம். தவிர வெற்றிலை பாக்கு போடுவதும் அளவுக்கு மேல் போகக்கூடாது


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Thursday, September 29, 2016

எந்தெந்தப் பொருட்கள் எங்கெங்கு?

கிச்சனை இடநெருக்கடி இல்லாமலும், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள டிப்ஸ்கள் வழங்குகிறார், சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

வாங்கும் டப்பாக்கள் எல்லாம் ஒரே அளவிலோ அல்லது ஒரே டிசைனாகவோ இருந்தால் பார்க்க அழகாக இருக்கும்.

காய்கறி நறுக்கும்போது அடியில் ஒரு பேப்பரை போட்டுக்கொண்டால், சுத்தம் செய்வது எளிதாக இருக்கும்.

25 கிலோ அரிசியை வாங்கிவந்தால், அதை இரண்டு, மூன்று டப்பாக் களில் பிரித்துச் சேமிக் கலாம்.

எண்ணெய் வைக்கும் இடத்துக்கு அருகில் கத்தி, தேங்காய் துருவி, குட்டி ஸ்பூன் போன்றவற்றை வைத்தால், அவசரத் துக்கு தேடும்படி இருக்காது.

அன்றாட தேவைக்கான மளிகை, மசாலா பொருட்களை அடுப்புக்கு இடதுபுறத்தில் வைத்துக்கொள்ளலாம்.

எண்ணெய் கீழே கொட்டி விட்டால், உடனே அதன் மீது கோதுமை அல்லது அரிசி மாவைப் போட்டு, வழித்தெடுத்தால், எண்ணெய் பசை இருக்காது.

அடுப்புக்கு கீழே உள்ள 'சிலாப்'பில், தினமும் பயன்படுத்தும் குக்கர் மற்றும் கடாய்களை முதல் வரிசையில் வைத்துக்கொள்ளலாம். தேவைக்கு மட்டுமே பயன் படுத்தும் மாவு டப்பாக்களை அடுத்த வரிசையில் வைத்துக் கொள்ளலாம்.

முட்டை கீழே விழுந்து உடைந்துவிட்டால் உடனே அதன் மீது உப்பைக் கொட்டினால், வாடை குறைந்துவிடும், சுலபமாக சுத்தம் செய்யலாம். 

சமையலறையில் நாம் நிற்பதற்கு வலதுபுறத்தில் மிக்ஸி, கிரைண்டர், 'மைக்ரோவேவ் அவன்' போன்றவற்றை வைத்தால், கையாள சுலபமாக இருக்கும்.

கண்ணாடிப் பொருட்கள், கப் அண்ட் சாஸர் போன்றவற்றை எப்போதும் அடுப்புக்கு எதிர்புறத்தில், மேலேதான் வைக்க வேண்டும். அடுப்பு அருகில் வைத்தால் பிசுபிசுப்பு ஒட்டும். வாட்டர் ப்யூரிஃபையர் வைக்கும்போது, சிங்க் (தொட்டி) அருகிலேயே வைக்க வேண்டும். சமயங்களில் தண்ணீர் நிரம்பினால் சிங்க் வழியாக வெளியேற ஏதுவாக இருக்கும்.

வாட்டர் ப்யூரிஃபையர் வைக்கும்போது, சிங்க் (தொட்டி) அருகிலேயே வைக்க வேண்டும். சமயங்களில் தண்ணீர் நிரம்பினால் சிங்க் வழியாக வெளியேற ஏதுவாக இருக்கும்.

'சிலாப்'களாக இல்லாமல், மாடுலர் கிச்சன்களில் வரிசையாக பல 'டிரா'க்கள் வைத்திருப்பவர்கள், முதல் வரிசையில்... டீ, காபித்தூள், சர்க்கரை போன்ற... காலை எழுந்ததும் தேவைப்படும் பொருட்களை வைத்துக்கொள்ளலாம். இரண்டாவது அடுக்கில்... சாம்பார் பொடி, இட்லி மிளகாய்ப்பொடி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மசாலா பொருட்கள்; மூன்றாவது அடுக்கில்... பருப்பு வகைகள்; நான்காவது அடுக்கில்... அஞ்சறைப் பெட்டி, அருகிலேயே காய்ந்த மிளகாய் என வைத்துக்கொள்ளலாம். மொச்சை, பட்டாணி போன்ற பயறு வகைகளை ஐந்தாவது அடுக்கில் வைக்கலாம். கடைசி அடுக்கில் அரிசி வகைகளை வைக்கலாம்.

அடுப்புக்கு வலப்புறம் எண்ணெய் கன்டெய் னர்களை வைக்கலாம். சந்தையில் இப்போது பலவிதமான 'ஹூக்'கள் கிடைக்கின்றன. அவற்றை சுவரில் மாட்டி, ஆயில் கன்டெய்னரை  மாட்டிவிட்டால், கீழே சிலாப்பில் எண்ணெய் பசைபடும் என்கிற கவலை இல்லை. சுவரில் மாட்ட வசதியில்லை என்றால், சின்ன ஸ்டாண்டு வைத்து, அதில் தடிமனான அட்டை வைத்து, அதன் மீது எண்ணெய் கன்டெய்னரை வைத்துப் பயன்படுத்தலாம். அதை அடிக்கடி மாற்றிக்கொள்ளலாம்.

உப்பு ஜாடிகளில் இரண்டு பச்சை மிளகாய் போட்டு வைக்கலாம். வெறும் கையில் உப்பை எடுத்தால், உப்பில் நீர் கசியும். பச்சை மிளகாய் போட்டு வைத்தால் நீர் கசியாது. வாரம் ஒருமுறை அதனை மாற்றினால் போதுமானது.

துருவிய தேங்காயை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் பால் வைக்கும் டிரேயில் வைத்துவிட்டால், 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

'என் வீட்டு கிச்சனில் நான்தான் ராணி' என்ற நினைப்பு வரவேண்டும். அப்போதுதான் அதன் மீது உரிமையும், அக்கறையும், நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்ற ஆசையும் வரும்
பயனுள்ள குறிப்புகள் :

1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.

2. சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம்.

3. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.

4. உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும்.

5. முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.

6. அரிசி களைந்த இரண்டாவது கழு நீரை சமயலுக்குப் பயன் படுத்தலாம். இதில் வைட்டமின் B6 மற்றும் B12 இருக்கிறது. இந்த நீரில் புளி ஊற வைக்கலாம், காய்கறி வேக விடலாம்.

7. மிளகாய் வத்தலை வறுக்கும் முன்பு, அதனுடன் அரை தேக்கரண்டி உப்பைச் சேர்த்தால் நெடி வராது.

8. துவரம்பருப்பை வேக வைக்கும்போது, பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால், சாம்பார் இரவு வரை ஊசிப்போகாமல் இருப்பதுடன் உடம்புக்கும் நல்லது, குளிர்ச்சியும் கூட.

9. குலோப்ஜாமூனை ஆறிய பாகில் போட்டு ஊற வைத்தால் உடையவே உடையாது, விரிசலும் ஏற்படாது.

10. பொதுவாக எந்த ஊறுகாய்க்கும் கடுகு எண்ணெய் ஊற்றி விட்டால் விரைவில் கெட்டுப்போவதை தவிர்க்கலாம்.

11. தர்பூஸ் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு தூள் அல்லது மிளகாய் தூள், உப்பு தூவி எண்ணெய் விட்டு வதக்கவும். வெள்ளரிக்காய் பொரியல் போன்று சுவையுடனும், வித்தியாசமான மணத்துடணுமிருக்கும்.

12. கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு காரம் போட்டு பஜ்ஜி செய்யலாம்.

13. மணத்தக்காளி வத்தல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் ருசியே ருசிதான்.

14. வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கை கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.

15. எலுமிச்சை சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் வதக்கிய வெங்காய துருவலை சேர்த்தால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்
http://pettagum.blogspot.in/2014/10/blog-post_59.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Tuesday, September 27, 2016

மாஸ்டர் ஹெல்த் செக்கப் ஏன்? எதற்கு? எப்படி? டோட்டல் கைடு…

கூட்டுக் குடும்பங்கள் பெருகி இருந்த அந்த காலக் கட்டத்தில், ஒருவருக்கு ஏதேனும் உடல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டால், வீட்டில் உள்ள மூத்தவர்களின் கைவைத்தியமும், முதலுதவியும், அக்கம்பக்கத்தினரின் அணுகுமுறையும்ஒடுங்கி இருந்தவரை உற்சாகமாகத் துள்ளி எழவைத்துவிடும். மேலும், வீட்டுக்கு ஒரு குடும்ப டாக்டர் என்ற ஒரு நல்ல அமைப்பால், தனிப்பட்ட மனிதர்களின் உடல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்னைகள் முழுவதையும் அவ்வப்போதே தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், இன்றோ குடும்ப அமைப்பே மாறி, கூட்டுக் குடும்பங்களே இல்லாத நிலைமை. இதனால், 'குடும்ப மருத்துவர்' என்பதே மறைந்துவருகிறது.

தலைவலி வந்தால்கூட மூளை சிறப்பு மருத்துவரையும், நெஞ்சுவலி என்றால் இதய சிகிச்சை நிபுணரையும் தேடி ஓடி, ஆயிரக்கணக்கில் செலவு செய்வது வழக்கமாகிவிட்டது. ஒவ்வோர் மருத்துவரும் அவர்கள் துறை சம்பந்தப்பட்ட நோய்களை மட்டும் சிறப்பாகக் கவனித்துவிட்டு, மற்றவற்றை விட்டுவிடுகிறார்கள். ஒவ்வோர் உடல் உறுப்பின் பாதிப்புக்கும் அந்தந்தத் துறை மருத்துவரை அணுகவேண்டிய கட்டாய நிலை.

இரண்டு மணி நேரம் காத்திருக்கும் நோயாளியை மேலும் ஒரு மணி நேரம் பரிசோதித்து முழுவதையும் பார்ப்பதற்கு மருத்துவருக்கும் நேரம் இல்லை; அவ்வாறு முழுப் பரிசோதனைக்காகக் காத்திருக்க நோயாளிகளுக்கும் அவகாசம் இல்லை.

'முழு உடல் பரிசோதனைக்குப் பணம் அதிகம் தேவைப்படுமே. வியாதியே இல்லாதப்ப, எதற்கு செக்கப்?' என்கிற பொருமல்களுக்கும் குறைவே இல்லை.

ஆரோக்கியமான வாழ்வுக்கு முழு உடற் பரிசோதனை மிகவும் முக்கியம். பல்லாயிரக்கணக்கான

வர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிவைத்து அவர்களுக்கு எளிய வாழ்க்கை முறை மாற்றம் மூலம் உயிர் காப்பது முழு உடல் பரிசோதனைத் திட்டம்தான்.

யாரெல்லாம் செய்து கொள்ளவேண்டும்?
அனைவரும் செய்துகொள்ளலாம். உயிர் மேல் அக்கறையும் குடும்பத்தின் மேல் பாசமும், உடலின் [img]நலனைப் பாதுகாக்கவும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

அதிகம் செலவாகுமா?
முழு உடல் பரிசோதனையை உடல் நலன் காக்க செய்யப்படும் நல்ல முதலீடாகக்கூடக் கருதலாம். முன்பே கவனிக்காமல்விட்டுவிட்டதால், நோய் வந்த பிறகு ஏற்படும் பணக் கஷ்டம், மனக் கஷ்டம், வலி, வேதனை இவற்றுடன் ஒப்பிடும்போது, முதலிலேயே செய்துகொள்ளும் உடல் பரிசோதனைக்கு செய்வது மிகக் குறைந்த செலவுதான்.

அரசுப் பொது மருத்துவமனைகளில் 250 ரூபாய்க்கு செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனைகள் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் 3,500 முதல் 50,000 ரூபாய் வரை மினி பரிசோதனை, மாஸ்டர் பரிசோதனை, இதயப் பரிசோதனை, வயிறு, மூளை, நரம்பு, எலும்புப் பரிசோதனை சிறப்புப் பரிசோதனை மற்றும் அதிசிறப்புப் பரிசோதனை, எனப் பல்வேறு பேக்கேஜ்களில் கிடைக்கின்றன. உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள்.சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முழு உடல் பரிசோதனைக்கானக் கட்டணத்தையும் தந்துவிடுகின்றன.

யார் யாருக்கு என்னென்ன பரிசோதனை?
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வரும் கோளாறுகள், மரபணு மூலமாக வரும் வியாதிகள் போன்றவற்றைக் கண்டறிய என ஹெல்த் செக்கப் பேக்கேஜ்கள் உள்ளன.

பள்ளியில் சேருவதற்கு முன்பு, குழந்தைகளுக்கு நோய்த் தொற்று உள்ளதா? தடுப்பு ஊசியால் தடுக்கப்பட வேண்டிய நோய்கள் ஏதேனும் வந்துள்ளனவா? பல்லில் சொத்தை, சொறி சிரங்கு, அலர்ஜி, தேமல், தோல் நோய்கள், காது, மூக்கு, தொண்டை, டான்சில், அடினாய்டு நோய்கள், மூளை வளர்ச்சி, கண் பார்வைத் திறன், படிப்புத் திறன் குறைபாடுகள், இதயம், நுரையீரல், வயிறு, குடல் நோய்கள், சிறு நீரக நோய் தொற்றுகள் போன்றவை பற்றித் தெரிந்துகொள்ளலாம். மேலும் உடல் வளர்ச்சி சீராக உள்ளதா என்பதையும் அறியலாம்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்கள், புதிதாக வேலைக்குச் சேருபவர்களுக்கு என்றே சிறப்பு முழு உடல் பரிசோதனைகளும் கிடைக்கின்றன.

பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பரிசோதனைக்கான செலவுத் தொகையை முதல் மாத சம்பளத்திலேயே கொடுத்துவிடுகின்றன. ஆனாலும் பலர் எந்த சோதனைகளும் செய்யாமலேயே மருத்துவர்களிடம் (பொய்) சான்று பெற்று வருவதும் வேதனை. இது நம் உடலுக்கு நாமே வேட்டு வைப்பதுபோலத்தான்.

போலீஸ், ராணுவம், ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்பவர்கள், மருத்துவப் பணியாளர்கள் வருடாவருடம் உடல் நலத் தகுதிச் சான்று பெறவேண்டியது கட்டாயம்.

முழு உடற்பரிசோதனை செய்துகொள்ளக்கால இடைவெளி என்ன?
30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மூன்று வருடத்துக்கு ஒரு முறையும்,

40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு வருடத்துக்கு ஒரு முறையும்,

50 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருடத்துக்கு ஒரு முறையும் முழு உடல் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம்.

பரிசோதனைக்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?
முழு உடல் பரிசோதனைக்கு நீங்கள் முன்பதிவு செய்வது அவசியம்.

உங்களிடம் ஒரு கேள்வித்தாளைக் கொடுத்து சில கேள்விக்கான பதில்களை எழுதச் சொல்வார்கள். அவை பெரும்பாலும் ஆம் அல்லது இல்லை என்பது போன்ற பதில்களாக இருக்கும்.

கண், காது, மூக்கு, தொண்டை, தோல், பசி, தூக்கம், பல், நாக்கு, மார்பு, இதயம், வயிறு, பிறப்பு உறுப்பு நோய்கள், உடலில் மதமதப்பு, மரத்துப்போதல், வலி, கூச்சம், பெரியதாகும் மச்சம், ஆறாத புண்கள் பற்றிய கேள்விகளாகவும் இருக்கும். எளிதில் விடையளிக்கக்கூடியவையே.

சந்தேகம் இருந்தால் கேட்டுவிட்டுப் பதில் எழுதுங்கள். அந்தக் கேள்விகளை வைத்துத்தான் உங்கள் உடலில் எந்த இடத்தில் என்ன நோய் வர வாய்ப்பிருப்பதாக நினைக்கிறார்களோஅதற்கான கூடுதல் பரிசோதனைகள் செய்வார்கள்.

வீட்டில் உங்கள் பெற்றோரிடம், நீங்கள் சிறு வயதில் போட்டுக்கொண்ட தடுப்பு ஊசி, செய்துகொண்ட அறுவை சிகிச்சைகள், ஒத்துக்கொள்ளாத மருந்துகள், இதற்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அது பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மேலும், உங்கள் வீட்டில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு, வலிப்பு, சில பரம்பரை வியாதிகளான ஹீமோஃபீலியா போன்றவை இருந்தால், அதுபற்றிய விவரங்களையும் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

மனதளவில் எப்படித் தயாராவது?
இரவு சாப்பிட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்கி எழவேண்டும்.

காலையில் பல் துலக்கியதும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

பரிசோதனை முடியும் வரை டீ, காபி, பால், உணவு எதுவும் சாப்பிடக் கூடாது. வெறும் வயிற்றோடுதான் பரிசோதனைக்கு வர வேண்டும்.

ப‌ரிசோதனையின்போது உணவு வயிற்றில் இருக்கலாமா?
சர்க்கரை, கொலஸ்ட்ரால், நல்ல கொழுப்பு ஹெச்.டீஎல், கெட்ட கொழுப்பு எல்.டீ.எல் மற்றும் வீ.எல்.டீ.எல், ட்ரைகிளிசரைடு போன்றவற்றை அளவிடவேண்டும். உணவு வயிற்றில் இருந்தால், அளவு மாறி அது வியாதியால் ஏற்பட்ட பாதிப்பா அல்லது சாப்பிட்ட உணவா எனக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும், பித்தப் பையில் இருக்கும் பித்த நீர், உணவைச் செரிமானம் செய்ய வயிற்றுக்குள் சென்றுவிடும். பித்தப்பை காலியாக இருந்தால், அதில் கல் ஏதாவது இருக்கிறதா என்பதும் தெளிவாகத் தெரியாது.

இரைப்பைக்குக் கீழே கணையம் இருப்பதால், உணவு இரைப்பையில் இருந்தால் கணையம் தெரியாது. சர்க்கரை நோய்க்குக் கணையத்தில் ஏற்படும் கல், கட்டி, அழற்சி ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.

பரிசோதனைகளுக்கு முன்பு ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்?
வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்திருந்தால் மட்டுமே வயிற்றின் உள் உறுப்புகளை ஸ்கேன் செய்து பார்க்க முடியும்.

தண்ணீர் குடித்ததும், சிறுநீர்ப்பையில் சிறுநீர் நிரம்பி இருந்தால் மட்டுமே ஆண்களுக்குப் ப்ராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் வியாதிகளையும்; பெண்களுக்கு, கர்ப்பப்பை குறைபாடுகளையும், நீர்க்கட்டிகள், புற்றுநோய்க் கட்டிகள் ஆகியவற்றையும் தெளிவாக ஸ்கேன் செய்து பார்க்க முடியும்.

சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்குச் சிறுநீர் கழித்த பிறகும் உள்ளே சிறுநீர் தேங்கி இருக்கிறதா, எந்த அளவில் அது இருக்கிறது என்பன பற்றி தெரிந்துகொள்ள மீண்டும் ஒரு முறை ஸ்கேன் செய்து பார்ப்பார்கள்

பரிசோதனைக்கு வரும் தினத்தன்று கடைப்பிடிக்க வேண்டியவை?
கோட், சூட், டை, ஷூ, சாக்ஸ், ஜீன்ஸ், இறுக்கமான பனியன் போன்ற ஆடைகளைத் தவிர்த்து எளிதில் கழற்றக்கூடிய தளர்வான ஆடைகள் அணிவது நல்லது. கையில் இரண்டு கைக்குட்டைகள் வைத்துக் கொள்ளவேண்டும்.

பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிவது வசதியானது.
மாதவிலக்கு சமயங்களில் பரிசோதனையைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்ப் பரிசோதனை செய்ய முடியாமல் வேறு ஒரு நாள் திரும்பச் செல்ல நேரிடும்.

பரிசோதனைக்கு முந்தைய இரவு விருந்தும் வேண்டாம்; பட்டினியும் வேண்டாம்.

மது, புகை, வெற்றிலை, பாக்கு, பான்பராக் போன்றவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். புகைபிடித்த அடுத்த 30 நிமிடங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும்.

அளவான சாப்பாடும் நல்ல தூக்கமும் தேவை.

நாக்கைப் பரிசோதித்து ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள், சாதாரணப் புண், புற்று நோய், எய்ட்ஸ், டைஃபாய்டு, தைராய்டு குறைபாடுகள், மூளை பாதிப்புகள், ஈறு, பல்லில் ஏற்பட்டுள்ள நோய்கள், எச்சில் சுரப்பி சம்பந்தமான நோய்கள் என 40க்கும் மேற்பட்ட நோய்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும். ஆனால், வெற்றிலை, பாக்கு, பான்பராக் போன்ற பொருட்களை உபயோகித்தால், வியாதிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் போகும்.

உதட்டைப் பரிசோதித்து இதயம், நுரையீரல், வெண் புள்ளிகள், ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடியும். எனவே பரிசோதனைக்குப் போகும்போது லிப்ஸ்டிக் போட வேண்டாம்.

குறைந்தது 8 முதல் 12 மணி நேரத்துக்கு முன்பு சாப்பிட்டுருக்க வேண்டியது அவசியம்.

அதிக வாசனை உள்ள பவுடர், சென்ட், பூக்கள் பயன்படுத்த வேண்டாம்.

நகத்தில் வெடிப்பு, அதன் வளைவுகள், புள்ளிகள், கோடுகள், நிறம், குழிகள் போன்றவற்றைப் பரிசோதித்து, என்ன வியாதி எனக் கண்டுபிடிக்க முடியும். அதனால், நகச் சாயமும், மருதாணியும் பரிசோதனையின்போது வேண்டாம்.

செல்போனை சைலன்ட் மோடில் வைத்துவிடுங்கள் அல்லது அணைத்தும் விடலாம்.

உங்கள் உடலில் எங்கேனும் பெரியதாகி வரும் மச்சம், தழும்பு, மரு, படை, சிவப்புத் திட்டு, தடிப்பு, கட்டி, அரிப்பு, கண்கட்டி, முகத்தில் தேமல், நகச்சுத்தி, நீண்ட நாட்களாக ஆறாத புண், அவ்வப்போது வந்து போகும் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், படபடப்பு, அதிக வியர்வை, நாவறட்சி, கண் இருண்டு போதல் எனத் தொந்தரவுகள் ஏதேனும் இருந்தால், குறித்து வைத்துக்கொண்டு மருத்துவரிடம் சொல்லுங்கள். நீங்கள் சாப்பிடும் மருந்து மாத்திரைகள் ஏதாவது இருந்தால், அது பற்றிய குறிப்புகளையும் சொல்லுங்கள்.

மாஸ்டர் ஹெல்த் செக்கப் பற்றி டாக்டர் விரிவாக பேசுகின்றனர்.

என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன?
ரத்தப் பரிசோதனை
ரத்தத்தில் அணுக்கள் எண்ணிக்கை
ரத்தத்தில் சர்க்கரை அளவு
ரத்தத்தில் கொழுப்பு அளவு
ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், பிளுருபின், யூரிக் அமிலம் அளவுகள்
ரத்த அழுத்தம்
வயிறு மற்றும் செரிமான மண்டலம் ஸ்கேன்
சிறுநீர் பரிசோதனை
நெஞ்சக எக்ஸ்ரே
இ.சி.ஜி, எக்கோ
ஆண்களுக்கு ப்ராஸ்டேட் பரிசோதனை
பெண்களுக்கு கர்ப்பப்பை பரிசோதனை
மருத்துவர்கள் மற்றும் உணவு ஊட்டச்சத்து நிபுணர் ஆலோசனை

ரத்த பரிசோதனை
ரத்த செல் பரிசோதனை

ரத்த வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள், தட்டணுக்கள் மற்றும் ரத்த வகை, ஆர்.எச் டைப் எது எனப் பரிசோதிக்கப்படும்.

இந்த பரிசோதனையின் மூலம் ரத்தச் சோகை, ரத்தத்தில் நோய்த் தொற்று, ரத்தம் உறைதலில் பிரச்னை, ரத்தப் புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு போன்றவற்றைக் கண்டறியலாம்.

ரத்தச் சிவப்பு அணுக்கள்தான் ஆக்சிஜனை உடலில் உள்ள செல்களுக்கு சுமந்து செல்கிறது. ரத்த செல்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அவர்களுக்கு அனீமியா போன்ற பிரச்னை இருப்பதைக் கண்டறிந்துவிட முடியும். அதேபோல ஹீமோகுளோபின் அளவும் பரிசோதிக்கப்படும். ரத்தச் சிவப்பு அணுக்களின் அளவு, ரத்தத்தில் அதன் பரப்பு போன்றவையும் பரிசோதிக்கப்படும்.

ரத்த வெள்ளை அணுக்கள்தான் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியின் போர் வீரர்கள். நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடுபவை இவைதான். இதில் மீயூட்டோபில், லிம்போசைட், மோனோசைட், இயோசினோபில் என்று பல வகைகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை எப்படி உள்ளது என்று பரிசோதிக்கப்படும்.

விரலில் சின்னக்காயம் பட்டாலும் ஒரு சில நிமிடங்களில் அது காயத் தொடங்கிவிடுகிறது. இதற்கு ரத்தத் தட்டு அணுக்கள்தான் காரணம். ரத்தத் தட்டு அணுக்கள் போதுமான அளவில் இல்லை என்றால், ரத்தம் உறையாமை பிரச்னை ஏற்படும். டெங்கு காய்ச்சலின் போது தட்டு அணுக்கள் எண்ணிக்கை குறையும்.

ரத்த கெமிஸ்ட்ரி டெஸ்ட்
ரத்தத்தில் சர்க்கரை அளவு, கால்சியம், எலக்ட்ரோலைட், கொலஸ்டிரால், சிறுநீரக செயல்திறன் போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

ரத்தத்தில் சர்க்கரை
முதலில் எடுக்கப்படும் ரத்த மாதிரியைக்கொண்டு சாப்பிடுவதற்கு முன்பு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கண்டறியப்படும்.

சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து, மீண்டும் ஒரு முறை ரத்தப் பரிசோதனை செய்யப்படும். சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பது கண்டறியப்படும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு எச்பிஏ1சி பரிசோதனை செய்யப்படும். இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினைப் பரிசோதித்து கடந்த மூன்று மாதங்களில் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைத் துல்லியமாகக்காட்டும்.

கால்சியம் பரிசோதனை
நம் உடலின் மிக முக்கியமான தாது உப்பு, கால்சியம். ரத்தத்தில் கால்சியம் அளவு இயல்பு நிலைக்கு அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால், சிறுநீரகம், எலும்பு, தைராய்டு, புற்றுநோய், ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்னைகள் இருக்கலாம்.

எலக்ட்ரோலைட் பரிசோதனை
உடலின் நீர் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவது சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட், குளோரைட் ஆகிய தாது உப்புக்கள். இதை, 'எலக்ட்ரோலைட்' என்பர். இதன் அளவில் மாறுபாடு இருந்தால், நீரிழப்பு, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கலாம். இதைக் கண்டறிய இந்தப் பரிசோதனை உதவுகிறது.

சிறுநீரக செயல்திறன் பரிசோதனை
ரத்தத்தில் உள்ள யூரியா நைட்ரஜன் மற்றும் கிரியாட்டினின் அளவைக்கொண்டு சிறுநீரகத்தின் செயல்திறன் எப்படி உள்ளது என்று பரிசோதிக்கப்படும்.

ரத்த என்சைம் பரிசோதனை
நம் உடலில் ரசாயனங்களின் ஆற்றல் அல்லது வினை எப்படி உள்ளது என்பதைக் கண்டறிய, இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக மாரடைப்புக்கான வாய்ப்பு உள்ளதா என்பதை இந்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

இதய நோய்களைக் கண்டறிய உதவும் ரத்தப் பரிசோதனை
இதில் 'லிப்போபுரோட்டீன்' பரிசோதனை செய்யப்படுகிறது. அதாவது, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு கண்டறியும் பரிசோதனை. இதன் மூலம் இதய ரத்தக் குழாய் நோய்க்கான வாய்ப்பைக் கண்டறியலாம்.

பொதுவாக மொத்தக் கொழுப்பு 200க்கு கீழும், நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல் ஆண்களுக்கு 45க்கு மேலும், பெண்களுக்கு 50க்கு மேலும், கெட்டக் கொழுப்பான எல்.டி.எல் 100க்கு கீழாகவும், ட்ரைகிளிசரைடு 150க்கு கீழாகவும் இருக்க வேண்டும்.

இந்தப் பரிசோதனையைத் தனியாகவும் செய்யலாம். அதற்கு பரிசோதனை செய்வதற்கு 8 முதல் 12 மணி நேரத்துக்கு முன் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

ரத்தம் உறைதல் பரிசோதனை
ரத்தம் உறைதலில் பிரச்சனை இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களுக்கு, இந்தப் பரிசோதனை பிரத்யேகமாகச் செய்யப்படும்.

ரத்த அழுத்தம்
ரத்த அழுத்தம் 140/90 மிமி மெர்க்குரி இருந்தால் சரியான அளவு. இதற்கு மேல் இருந்தால், உணவில் உப்பைக் குறையுங்கள். புகை, மதுப் பழக்கங்களைத் தவிர்த்து மீண்டும் பரிசோதித்துப் பாருங்கள். குறையவில்லை என உறுதிப்படுத்திய பிறகு, வாழ்க்கைமுறை மாற்றம், உடல் உழைப்பு, உணவுக் கட்டுப்பாட்டின் மூலமும் மாத்திரைகள் மூலமும் கட்டுப்படுத்தலாம்.

சிறுநீர் பரிசோதனை
பரிசோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்கும்போதே சிறுநீரையும் பரிசோதனைக்குத் தரும்படி அறிவுறுத்துவார்கள்.

சிறுநீரைக் கொண்டு 100க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்ய முடியும்.

உடல் பரிசோதனையின்போது அதன் நிறம் எப்படி உள்ளது, நோய்த் தொற்று ஏதேனும் உள்ளதா, இகோலை தொற்று இருந்தால் சிறுநீரின் நாற்றம் அதிகமாக இருக்கும்.

ஏதேனும் தொற்று உள்ளதா, அதன் பி.எச் அளவு, சர்க்கரை, புரதம் போன்றவை வெளிப்படுகிறதா, கால்சியம், பாஸ்பேட், ரத்த சிவப்பணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள் ஏதேனும் வெளியேறுகிறதா? என்றெல்லாம் பரிசோதிக்கப்படும்.

மலம் பரிசோதனை
சில மருத்துவமனைகளில் முந்தைய நாளே ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பா கொடுத்து வீட்டிலேயே காலையில் சிறிதளவு மலத்தை அதில் எடுத்து வரும்படி சொல்லுவார்கள். சில மருத்துவமனைகளில் மருத்துவமனையிலேயே மலத்தைப் பரிசோதனைக்குத் தரும்படி கூறுவார்கள்.

இதன் மூலம் வயிற்றில் புழுக்கள், அமீபா, டைபாய்டு தொற்றுகள், சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், ஆசனவாய் நோய்த் தொற்றுகள், புற்றுநோய் பாதிப்புகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய முடியும்.

உணவுக் குழாயில் ரத்தக் கசிவு இருந்தால், மலம் கருப்பு நிறத்தில் வெளிவரும். அகல்ட் பிளட் (Occult Blood) பரிசோதனை மூலம் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிந்துவிட முடியும்.

எக்ஸ்ரே
நுரையீரல் நோய்களான நிமோனியா, காச நோய், ஆஸ்துமா, ரத்தம், நீர், சீழ், காற்று உள்ளே கோர்த்து மூச்சடைப்பை ஏற்படுத்துதல், இதய வீக்கம், இதய வால்வு நோய்கள், இதயச் சவ்வு, கட்டி, புற்று நோய்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நோய்கள் பற்றி தெரிந்து கொள்ள லாம்.

இ.சி.ஜி
இ.சி.ஜி என்னும் இதயச் சுருள் வரைபடம் மூலம், இதயத் துடிப்பின் எண்ணிக்கை, கால அளவு, மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, இதயத் தசை வீக்கம், மின்னோட்ட அமைப்பில் ஏற்படும் கோளாறுகள் என சுமார் 120 வகையான வியாதிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

உயரம்
உடலின் உயரத்தைப் பரிசோதித்து, சரியான வளர்ச்சி, உயரக் குறைபாடு, மிக அதிக உயரம் அல்லது குறைந்த உயரம் உள்ளவர்களுக்கு, வேறு ஏதேனும் ஹார்மோன் குறைபாடுகள் காரணமா என்று அறியலாம்.

எடை
உயரத்தை சென்டிமீட்டரில் குறித்துகொள்வார்கள். அதிலிருந்து 100ஐக் கழித்தால் வருவது உங்கள் ஆரோக்கியத்திற்கான எடை. அத்துடன் அதிகபட்சமாக 5 கிலோ கூடக் குறைய இருக்கலாம். உங்கள் எடையைக் கூட்டவோ குறைக்கவோ, மருத்துவ நிபுணரும், உணவியல் நிபுணரும் ஆலோசனை தருவார்கள்.

இடை அளவு
இடுப்பு மற்றும் அதற்கு மேல் தொப்புள் மேலே வைத்து இடை, இடுப்பு அளவுகளைக் கணக்கிடுவார்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் வர இருக்கும், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம். உடல் பருமன் போன்ற வியாதிகளைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம். அவை வராமல் தடுக்க ஆலோசனை பெறலாம். இடையளவு கூடக்கூட ஆயுள் அளவு குறையக்கூடும்.

ஆண்களுக்கு 90 செ.மீ.க்கு கீழும் பெண்களுக்கு 80 செ.மீ.க்கு கீழும் இருப்பது நலம்.

மார்பு விரியும் தன்மையைப் பரிசோதித்து, நுரையீரல் நோய்கள், மார்பு எலும்பு வடிவம் (கூன், கோணல், குழிவு, பீப்பாய், குறுகிய அகன்ற மார்பு) ஆகியவற்றில் ஏற்படும் வியாதிகளை பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

வயிற்று ஸ்கேன்
இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகங்கள், குடல், ரத்தக் குழாய்கள், சவ்வுகள், சிறுநீர்ப்பை, ப்ராஸ்டேட் சுரப்பி, கர்ப்பப்பை, என வயிற்றின் அனைத்து உள்உறுப்புகள் பற்றியும், அவற்றின், எடை, அளவு, அமைப்பு, ரத்த ஓட்டம், செயல்பாடு, 1 மி.மீட்டருக்கு மேல் உள்ள நீர்க் கட்டிகள், புற்று நோய், நோய்த் தொற்றுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கல்லீரல் பரிசோதனை
கல்லீரலானது, குளுக்கோஸ், ஆல்புமின் புரதங்கள், ரத்தத்தை உறையவைக்கும் முக்கியப் பொருட்கள், மருந்துகளைச் செரிமானம் செய்து வெளியேற்றுதல், உணவில் கொழுப்புப் பொருள்களைச் செரிமானம் செய்தல், புரத, மாவு, கொழுப்புச் சத்துக்களைச் சேர்த்துவைத்தல் போன்ற உயிர் காக்கும் மிக அத்தியாவசியமான பணிகளைச் செய்துவருவதால், கல்லீரல் செயல்பாட்டைப் பரிசோதிப்பது மிகவும் முக்கியமானது. அதில் ஏதாவது நோய்த் தொற்று, சேதம், காமாலை, அறிகுறி இருக்கிறதா எனப் பரிசோதித்து அறிவார்கள்.

சிறுநீரகப் பரிசோதனை
இரண்டு சிறுநீரகங்களின் அளவு, ரத்த ஓட்டம், செயல்திறன், உடலின் கழிவுகளை வெளியேற்றும் திறன் போன்றவற்றை, யூரியா, கிரியேட்டினின் பரிசோதனை மூலம் தெரிந்துகொள்வார்கள்.

கண்
பார்வைத்திறன் குறைபாடுகளான கிட்டப் பார்வை, தூரப் பார்வை, நிறக் குருடு, மாலைக்கண் நோய், கண்புரை, விழித்திரைக் குறைபாடுகள், நாள்பட்ட சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

காது
கேட்கும் திறன், சவ்வின் தன்மை, தலைச் சுற்றல், கிறுகிறுப்பு, தள்ளாட்டம், தொண்டையில் ஏற்படும் பாதிப்புகள், தொண்டை, மூக்கில் சதை வளர்ச்சி, நோய்த் தொற்றுகள் பற்றி ஆராய்ந்து சிகிச்சைக்குப் பரிந்துரைப்பார்கள்.

தோல்
சொரி, சிரங்கு, தேமல், படை, அரிப்பு, தடிப்பு, நிறம் மாறிய இடங்கள், வெண்மை, கருமை, சிவப்புப் புள்ளிகள், மருக்கள், சொரசொரப்பான முதலை அல்லது மீன் செதில் போன்ற தோல், நிறம் மாறுதல், முகப்பரு, கால் ஆணி, போன்ற பாதிப்புகளுக்கான சிகிச்சைகள் அனைத்திற்கும், தோல் நோய் நிபுணர் ஆலோசனை தருவார்.

ஸ்கேன் சிடி ஸ்கேன்
சிடி ஸ்கேன் என்பது கம்ப்யூடட் டோமோகிராபி என்பதன் சுருக்கம். முப்பரிமாணம் உள்ள உறுப்பைப் பல கோணங்களிலும் படம் எடுத்து, அதை ஒருங்கிணைத்து, இரு பரிமாணப் படங்களாகத் தருவதுதான் சிடி ஸ்கேன் செய்யும் பணி.

மென்மையான திசுக்கள், இடுப்புப் பகுதி, ரத்தக் குழாய்கள், நுரையீரல், வயிறு, எலும்புகள் மற்றும் மூளை போன்ற பகுதிகளில், அதிக அளவு விவரங்கள் தேவைப்படும் சமயத்தில், சிடி ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது.

பலவகை புற்றுநோய்களையும், கட்டிகளையும் கண்டறிவதற்கு ஸ்கேன் பேருதவியாக இருக்கும். ஒரு கட்டியின் துல்லியமான அளவு மற்றும் இருப்பிடம், அது எந்த அளவுக்கு அருகில் இருக்கும் திசுக்களைப் பாதித்திருக்கிறது என்பன போன்ற விவரங்கள் சிடி ஸ்கேன் மூலம் தெரியும்.

உள்உறுப்புகள் மற்றும் ரத்தக் குழாய்களில் வீக்கமோ அல்லது கட்டிகளோ இருப்பதையும் சிடி ஸ்கேன் காண்பிக்கும்.

கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்களில் காயங்களோ, கட்டிகளோ இருந்தால் தெரிந்துவிடும். கதிரியக்கம் அளிக்க வேண்டிய இடத்தையும், பையாப்சி எனப்படும் திசு அகழ்வு செய்ய வேண்டிய இடத்தையும் துல்லியமாகக் காட்டிவிடும்.

புற்றுநோய், நிமோனியா மற்றும் மூளையில் அடிபட்டு ரத்தக் கசிவு, உடைந்துபோன எலும்புகள் போன்றவற்றை ஆய்வு செய்ய சிடி ஸ்கேன் சிறந்தது.

எலும்பு நோய்கள், எலும்பு அடர்த்தி, மற்றும் முதுகெலும்பின் தன்மை ஆகியன தெரியவரும். பக்கவாதம், சிறுநீரகச் செயல் இழப்பு, போன்றவற்றுக்குக் காரணமான குறைபாடுள்ள ரத்தக் குழாய்களின் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

எம்.ஆர்.ஐ ஸ்கேன்
எம்.ஆர்.ஐ ஸ்கேன் என்பது மேக்னடிக் ரிசோனன்ஸ் இமேஜிங் என்பதன் சுருக்கம். இதுவும் சிடி ஸ்கேன் போன்றதுதான் என்றாலும், சில வேறுபாடுகள் உள்ளன.

எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் காந்தமும் ரேடியோ அலைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

எலும்புகளையும் தசைகளையும் இணைக்கும் நாண்கள் எம்.ஆர்.ஐ.ஸ்கேனில்தான் தெரியும்.

முதுகுத் தண்டுவட ஆய்வு, மற்றும் மூளைக்கட்டி போன்றவற்றிற்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சிறந்தது.

பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி
˜ பெட் ஸ்கேன் என்று அழைக்கப்படும் இந்தப் பரிசோதனை முறையில் பாதிப்பு இல்லாத சிறிய அளவில் கதிர்வீச்சை வெளியிடும் பொருள் உடலின் உள்ளே செலுத்தப்படும். இந்த கதிர்வீச்சானது எஃப்.டி.ஜி என்ற ஒரு வகையான சர்க்கரை.

உடலில் செல்கள் இயங்க சர்க்கரைத் தேவை. புற்றுநோய் உள்ளிட்ட உடலின் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு சர்க்கரையின் தேவை இயல்பைவிட மிக அதிகமாக இருக்கும்.

இப்படி பாதிப்பு உள்ள இடங்களில் இந்த சர்க்கரையானது ஒன்றுசேர்ந்து கதிர்வீச்சை வெளியிடும். அதை கம்ப்யூட்டர் உதவியுடன் வரைபடம் ஒன்றைத் தயாரித்து எந்த இடத்தில் பாதிப்பு உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறியலாம்.

இந்தக் கருவியின் மூலம் புற்றுநோய் பாதிப்பை மட்டுமின்றி, உறுப்புக்களின் தோற்றம், அவற்றின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ஆக்சிஜன் பயன்பாடு, சர்க்கரை பயன்பாடு உள்ளிட்டவற்றையும் கண்டறியலாம்.

உடலினுள் செலுத்தப்பட்ட கதிர்வீச்சு வெளியிடும் சர்க்கரையானது ஒன்றரை மணி நேரத்தில் செயல் இழந்துவிடும். 12 மணி நேரத்தில் இது உடலில் இருந்து வெளியேறிவிடும்.

கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், குழந்தைகள் தவிர்த்து யாருக்கு வேண்டுமானாலும் இந்த ஸ்கேன் செய்யலாம்.

புற்றுநோய் கண்டறியும் ரத்தப் பரிசோதனை
ஒரே ஒரு துளி (3மி.லி.) ரத்தம் போதும். அதைக்கொண்டு கர்ப்பபை புற்றுநோய், கருமுட்டை, பெருங்குடல், கணையம், பித்தப்பை, கல்லீரல், தைராய்டு, ரத்தம், ப்ராஸ்டேட், மார்பகம், எலும்பு, வயிறு, சிறுநீரகம், ரத்தக் குழாய் உள்ளிட்ட 25 வகையான புற்றுநோய்கள் ஒருவருக்கு உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும்.

புற்றுநோய் மார்க்கர் என்று ஒன்று உள்ளது. பிராஸ்டேட் புற்றுநோய் உள்ளதா என கண்டறிய பி.எஸ்.ஏ என்ற மார்க்கர் உள்ளது. பொதுவாக ரத்தப் பரிசோதனையில் இதன் அளவு 5க்கு கீழ் இருக்க வேண்டும். ஆனால் ஆறுக்கு மேல் சென்றால், ஏதோ ஒரு பிரச்னை உள்ளது என்று அர்த்தம்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு, நோய்த் தொற்று காரணமாகவும் இந்த அளவு அதிகரிக்கலாம். எனவே, ஆன்டிபயாட்டிக் கொடுத்து மீண்டும் பரிசோதனை செய்யப்படும். இப்படி ஆரம்ப நிலையிலேயே பிரச்னையைக் கண்டறிவதன் மூலம் மிகப்பெரிய பாதிப்புகளில் இருந்து தப்பலாம்.

கருமுட்டைக்கு சிஏ125, பெருங்குடலுக்கு சி.ஈ.ஏ, வயிறுக்கு சி.ஏ72.4 என்று மார்க்கர்கள் உள்ளன. இவற்றைக்கொண்டு புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை எளிதில் கண்டறிந்துவிடலாம். அப்படியே புற்றுநோய் இருப்பது தெரியவந்தால் அதை உறுதிப்படுத்த, மேற்கொண்டு பரிசோதனைகளுக்கு பரிந்துரைக்கப்படும்.

மகளிருக்கான சிறப்புப் பரிசோதனை பேப் பரிசோதனைகள்
ஓரிரு நிமிடங்களில் பெண் உறுப்பு மற்றும் கர்ப்பப்பையின் திசுக்களைச் சேகரித்து ஆய்வு நடைபெறும்.

பெண்களுக்கு வரக்கூடிய கர்ப்பப்பைப் புற்றுநோய் மற்றும் இதர நோய்த் தொற்றுகளின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியலாம்.

21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.

மேம்மோகிராம்
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டறியும் பரிசோதனை இது. மார்பகத்தை எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதிப்பார்கள். வலி இருக்காது.

40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது. இப்படிப் பரிசோதித்துக்கொள்ளும் பெண்களில் சுமார் 10% பேருக்குத்தான் மேல்சிகிச்சை தேவைப்படும். அதிலும் மிகச் சிலருக்குத்தான் மார்பகப் புற்றுநோய் இருக்கும். மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்துவது எளிது.

கவனிக்க
அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பிறகு ஒரு பொது மருத்துவ நிபுணர் உங்களைப் பரிசோதித்து தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குவார்.

உணவு ஆலோசகரின் பங்கு முழு உடல் பரிசோதனையில் மிகவும் முக்கியமானது. அநேகமாக எல்லோரும் அவரின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டியிருக்கும்.

முழு உடல் பரிசோதனை மூளைக்கு இல்லையா?
முழு உடல் பரிசோதனையில், எல்லாப் பரிசோதனைகளும் செய்கிறார்கள். ஆனால், மூளைப் பரிசோதனை மட்டும் ஏன் செய்வதில்லை? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழதான் செய்யும்.

"மூளை நன்கு செயல்படுபவர்கள் மட்டும்தான் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வார்கள்." என்றார் டாக்டர்.

மருத்துவர் சொல்வதுபோல், எல்லோருமே சிந்தித்து செயல்படவேண்டிய முக்கியமான விஷயம் இது. நிச்சயம் ஆரோக்கியம் நம்மை அரவணைக்கும். நோய் வருமுன் காப்போம். செலவைக் குறைப்போம்.

http://www.muthamilmantram.com/viewtopic.php?f=158&t=42504


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com