லேபிள்கள்

செவ்வாய், 15 மே, 2018

ஜீரணத்தை சீராக்கும் வழிமுறைகள்! நலம் நல்லது-10!

ஜீரணத்தை சீராக்கும் வழிமுறைகள்! நலம் நல்லது-10!
மருத்துவர் கு.சிவராமன்!!
சிலருக்கு நெஞ்சு எலும்புக்குக் கீழே ஒருவித எரிச்சலுடன்கூடிய வலி, மாரை அடைப்பது போன்ற உணர்வு வரும். காரணம், நாம் சாப்பிட்ட உருளைக்கிழங்கு போண்டா, சாம்பாருடன் கூடிய பொங்கல் என ஏதோ ஒன்று செரிமானம் ஆகாததால் வந்த நெஞ்செரிச்சலாக இருக்கலாம். ஜீரணம் என்பது, உமிழ்நீரில் ஆரம்பித்து மலக்குடல் வரை நடக்கிற செயல்பாடு. இலையில் பிடித்த பதார்த்தத்தைப் பார்த்ததும், உமிழ்நீர் சுரப்பதில் ஆரம்பிக்கும் ஜீரணம் சரியாக நடைபெற, பல சுரப்புகள், நுண்ணுயிரிகள் என ஏராளமான விஷயங்கள் சரியாக நடைபெற வேண்டும். நினைத்தபோது, நினைத்தபடி, நினைத்தவற்றைச் சாப்பிடுவதுதான் மொத்த ஜீரண நிகழ்வுகளும் தடம்புரளக் காரணங்கள். செரிமானக் கோளாறுகள் பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பவை என்பதை கவனத்தில் கொள்வோம்.



இனி, ஜீரணத்தை சீராக்க சில வழிமுறைகள்...
* ஆரோக்கியமான உடலுக்கு இரு நேர சிற்றுண்டியும், ஒரு வேளை பேருண்டியும் போதுமானது. இரு சிற்றுண்டிகளில் ஒரு வேளை (இரவு அல்லது காலை) பழ உணவும் இயற்கையில் விளைந்த சமைக்காத உணவும் இருப்பது சிறப்பு.

* காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
 இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்கு காலையில் உடல் பித்தத்தைக் குறைக்கும்படியான குளிர்ச்சியான உணவு அவசியம். அவல் பொங்கல் அல்லது உப்புமா, கைக்குத்தல் புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிறு குழந்தைகளாக இருந்தால் நவதானிய / சிறு தானிய / பயறு நிறைந்த கஞ்சி நல்லவை. வளரும் குழந்தைக்கு ஒரு வாழைப்பழத்துடன் இட்லி அல்லது தானியக் கஞ்சி கொடுக்கலாம். இளைஞர்கள் பழத்துண்டுகளுடன் அவல் பொங்கல் அல்லது வெண்பொங்கல் சாப்பிடலாம். பெரியவர்கள் சிவப்பரிசி அவலுடன், பப்பாளித் துண்டுகள், இளம் பழுப்பில் உள்ள கொய்யா இவற்றுடன் புழுங்கல் அரிசி உணவு அல்லது கேழ்வரகு உணவு சாப்பிடலாம். ஜீரணத்தை சீராக்கும்.
* மதிய உணவில் நிறையக் காய்கறிகள், கீரைக் கூட்டு / கடைசல் இவற்றுடன் அரிசி உணவை அளவாகச் சாப்பிட வேண்டும்.
* அதிகக் காரத்தைத் தவிர்க்கவும். காய்ந்த மிளகாய் பயன்படுத்தவேண்டிய உணவுகளில், அதற்குப் பதிலாக மிளகைப் பயன்படுத்த வேண்டும்.
* ஜீரணத்தை எளிதாக்க, எண்ணெயில் பொரித்த உணவைத்
 தவிர்ப்பது நல்லது.
* சரியான நேரத்துக்கு உணவைச் சாப்பிட்டுவிட வேண்டும்.
* அவசியமின்றி வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.
* எப்போதும் டென்ஷனுடன் இருப்பவர்களுக்கு ஜீரணக் கோளாறு வந்துவிடும். மனதை லகுவாக வைத்திருக்கவும்.
* புகை, மது இரண்டும் கேன்ஸரை வயிற்றுப்புண் வழியாக அழைத்து வருபவை. இரண்டையும் தவிர்க்கவும்.
* காலை உணவில் இட்லிக்கு பிரண்டைத் துவையல் நல்லது.
* துவரம்பருப்பு சாம்பாருக்கு பதிலாக பாசிப்பருப்பு சாம்பார் செய்து சாப்பிடலாம்.
* வெள்ளைக் கொண்டைக்கடலைக்குப் பதில், சிறு சிவப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்தலாம். அதுவும்கூட குறைந்த அளவில், மிளகு சீரகம் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும்.
* காலை 11 மணிக்கு நீர் மோர் இரண்டு டம்ளர் அருந்தலாம்.
* மதிய உணவில் காரமில்லாத, பாசிப் பயறு சேர்த்த கீரைக் குழம்பு, தேங்காய்ப் பால் குழம்பு (சொதி), மிளகு-சீரக ரசம், மணத்தக்காளி கீரை என சாப்பிடவும். சாப்பிட்டு முடித்ததும் இரண்டு குவளை சீரகத் தண்ணீர் அருந்துவது ஜீரணத்தை எளிதாக்கும்.
* இரவில் வாழைப்பழம், ஆவியில் வேகவைத்த அல்லது சமைக்காத இயற்கை உணவு சாப்பிடவும்.
* கொத்தவரை, காராமணி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளைத் தவிர்க்கவும். அதிக அளவிலான மாம்பழமும் பலாப்பழமும்கூட வாயுவை உண்டாக்கும்.
* சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பெருஞ்சீரகம், ஏலம், பெருங்காயம், கறிவேப்பிலை சம பங்கு, உப்பு பாதிப் பங்கு சேர்த்து லேசாக வறுத்து பொடியாக்கி, சூடான உணவில் முதலில் பருப்புப் பொடிபோல் போட்டு சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படாது. சாப்பிட்டதும் வயிற்று உப்புசம் வருபவர்களுக்கு இந்த அன்னப்பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, மோருடன் சாப்பிடக் கொடுக்க வேண்டும். உடனடியாக வாயு விலகி, வயிற்று உப்புசம் நீங்கும்.
* சித்த மருத்துவரிடம் கிடைக்கும் ஜீரண சஞ்சீவி, சீரக விவாதி மருந்துகள் அஜீரணத்தை அகற்ற உதவுபவை.
* தினமும் நடைப்பயிற்சி மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.
அடுப்பங்கரையில் கொஞ்சம் அக்கறை காட்டினால் அஜீரணத்தை வெல்லலாம்!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 13 மே, 2018

சமையல் பொருட்களின் கப் அளவுகள் கிராம் கணக்கில்!

சமையல் பொருட்களின் கப் அளவுகள் கிராம் கணக்கில்! 
1 கப் மைதா - 125 கிராம்
1 கப் கோதுமை மாவு - 120 கிராம்
1 கப் சர்க்கரை - 200 கிராம்
1 கப் ஐசிங் சுகர் - 125 கிராம்
1 கப் ப்ரவுன் சுகர் - 200 கிராம்
1 கப் ரவை - 160 கிராம்
1 கப் தயிர் - 245 கிராம்
1 கப் சாதாரண பொன்னி அரிசி - 200 கிராம்
1 கப் பாசுமதி அரிசி - 195 கிராம் (200 ன்னே வெச்சுக்கலாம் பொதுவா அரிசிக்கு)
1 கப் அரிசி மாவு - 160 கிராம்
1 கப் வெண்ணெய் என்பது ஏறக்குறை 225 கிராம்
1 ஸ்டிக் பட்டர் என்பது ஏறக்குறைய 113 கிராம்.
1 கப் கொக்கோ பவுடர் என்பது 120 கிராம்.
இம்புட்டு நான் அவசர தேவைக்கு ஸ்டோர் பண்ணி வெச்சிருக்கது. உதவும்னு நம்பறேன்)இதை வெச்சு 1/2 கப், 1/4 கப் கணக்கை எல்லாம் சமைக்கும் போது போட்டுக்குவேன். இந்த சார்ட் ஒன்னு அடுப்படியில் இருந்தா அவசரமா தேட வேண்டி இருக்கிறதில்ல... ஏன்னா என்னால அரிசி, மாவு அளவை தவிற மற்றதை எல்லாம் நியாபகத்தில் வெச்சுக்க முடியுறதில்லை.
http://pettagum.blogspot.com/2016/11/blog-post_8.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 11 மே, 2018

வீட்டில் உள்ள தரை பளிச்சிட !

வீட்டில் உள்ள தரை பளிச்சிட !

கீறல்கள் மறைய
தளத்தில் உள்ள கீறல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத்துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீறல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த பிறகு பாருங்கள். கீறல் விழுந்த தடமே இல்லாமல் போய்விடும்.

* வினைல் தளம்
வினைல் தளமாக இருந்தால், பேக்கிங் பவுடரை சிறிதளவு எடுத்து தளத்தில் தூவி விடுங்கள். பிறகு, கறைபடிந்த தரையை, வினிகரில் நனைத்த துணியால் அழுத்தி துடைத்து விடுங்கள். அதன்பிறகு சுத்தமான நீரில் துணியை நனைத்து பிழிந்து தரையை சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதால், வினிகரின் மணம் பரவாமல் தடுக்கப்படும்.



* காங்கிரீட் தளம்
சில துளிகள் வீரியமிக்க டிடர்ஜென்ட் பவுடர் கலந்த நீரை காங்கிரீட் தரையில் இட்டு, தரையை பிரஷால் அழுத்தித் துடைத்துவிட்டு, ஸ்பான்ஜை வைத்து ஈரமான தளத்தை ஒற்றி எடுங்கள். இந்த தளத்தில் எண்ணை பிசுக்குகள் இருந்தால், கறைபடிந்த இடங்களில் ஆல்கலின் சோப் போட்டு, அழுத்தமாக தேய்த்து கழுவி விடுங்கள்.

* மார்பிள் தளம்
பேக்கிங் சோடா பேஸ்டை எடுத்து, ஊறவைத்த துணியால் தரை முழுவதும் தேய்த்து விடுங்கள். பின்பு உலர்ந்த துணியால் சுத்தமாக துடைத்து விடுங்கள். இப்போது கறைபடிந்த மார்பிள் தரை, சுத்தமாக பளிச்சென்று இருக்கும்.

* எண்ணை பிசுக்குளை நீக்க
சொரசொரப்பான தளத்தில் படிந்துள்ள எண்ணை பிசுக்குகள் போன்ற கறையைப் போக்க ஐஸ்கட்டியுடன் மென்மையான ஸ்பாஞ்ச்சைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இது தரையைக் குளுமைப்படுத்துவதோடு மட்டுமின்றி `பளிச்' என பளபளக்கும். வீட்டின் தரையை எப்போதும் துடைத்துக் கொண்டே இருங்கள்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 9 மே, 2018

ஹெல்த்தியா இருக்க கை தட்டுங்கள்!

ஹெல்த்தியா இருக்க கை தட்டுங்கள்!
கிளாப்பிங் தெரப்பி
நம் அபிமான கிரிக்கெட் வீரர் சிக்ஸ் அடிக்கும்போது, மிகப்பெரிய விஷயத்தை ஒருவர் செய்யும்போது அவரைப் பாராட்ட, நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த கை தட்டுவோம். சாதாரணமான விஷயம் என்று நினைக்கும் கைதட்டுதலில் நினைத்துக்கூட பார்க்க முடியத அளவுக்கு பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. கை தட்டுவது ஒரு யோகப் பயிற்சிக்கு இணையானது. தினமும் கைதட்டும் பயிற்சி செய்துவந்தால், மருந்துகளால்கூட ஏற்படுத்த முடியாத நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.

கை தட்டுவதன் நற்பலன்கள்
நம் கைகளில் 39 அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. கைகளைத் தட்டும்போது ஏற்படும் உராய்வினால் வெப்பம் ஏற்பட்டு, உள்ளங்கையில் இருக்கும் ரிசப்டார்கள் தூண்டப்படுகின்றன.
  இதனால், 'சுஜோக்' சிகிச்சை முறையில் கிளாப்பிங் தெரப்பியைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, கைப் பள்ளதாக்குப் புள்ளி (Hand valley point), கட்டைவிரல் அடிப்புள்ளி (Base of thumb piont), மணிக்கட்டுப்புள்ளி (Wrist Point), கட்டை விரல் நகப்புள்ளி (Thumb nail point) ஆகிய முக்கியமான புள்ளிகள் நன்கு தூண்டப்பட்டு பலன்கள் கிடைக்கின்றன.



*ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் பிரச்னைகள் கட்டுக்குள் வருகின்றன. நுரையீரல் வலுப்பெறும்.

*கழுத்துவலி, முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுவலி சரியாகும்.

*ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்.

*செரிமானத்தை மேம்படுத்துகிறது.

*நினைவாற்றலை மேம்படுத்துகிறது. கவனத்திறனைக் கூர்மையாக்குகிறது.

*நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

*தினமும் அரை மணி நேரம் கை தட்டுவதால், சர்க்கரை நோய், ஆர்த்ரைட்டிஸ், தலைவலி, இன்சோம்னியா எனும் உறக்கமின்மைப் பிரச்னை, கண் பிரச்னை ஆகியவை நீங்கும்.

*எப்போதும் ஏ.சி-யிலேயே இருப்பவர்கள், வியர்வை சுரப்புக் குறைவாக உள்ளவர்கள் கிளாப்பிங் தெரப்பி செய்வதால், ரத்த ஓட்டம் மேம்பட்டு, ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

*மூளையின் நியூரோடிரான்ஸ்மீட்டர்கள் தூண்டப்பட்டு, செரட்டோனின் சுரப்பு மேம்படும். இதனால், மூளை சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் செயல்படுகிறது.

*உற்சாகம் குறைவாக, சோர்வாக இருக்கும் நேரத்தில் கை தட்டினால், அது நம் மனநிலையை மாற்றி உற்சாகப்படுத்தும்.

*ரத்த ஓட்டம் மேம்படுவதால், சிறுநீரகத்தின் செயல்பாடுகள் இயல்பாகும்.

*குழந்தைகளுக்குக் கை தட்டுவதைக் கற்றுத் தருவதால், அவர்களின் 'ஃபைன் மோட்டார்' திறமைகள் எனப்படும் எழுதுவது, ஓவியம் வரைவது போன்ற திறன்கள் மேம்படும்.

*கை தட்டுவதைப் பற்றிய ஒரு சூப்பர் மேட்டர்தானே இது! உற்சாகமாகக்் கை தட்டுங்க; ஆரோக்கியத்தை உங்கள் வசமாக்குங்க!

கிளாப்பிங் தெரப்பி எப்படி செய்வது?
தினமும் காலையில் உள்ளங்கையில், விரல்களில் தேங்காய் எண்ணெயைத் தேய்த்துக்கொண்டு, இரண்டு உள்ளங்கைகளும் விரல்களும் ஒன்றன்மீது ஒன்று படுமாறு ஒரே சீரான வேகத்தில் 20 - 30 நிமிடங்கள் கை தட்ட வேண்டும். மிக அழுத்தமாகவோ பட்டும் படாமலோ தட்டக் கூடாது. இயல்பான அழுத்தத்தில், சற்று தளர்வாகக் கைகளை வைத்துக்கொண்டு தட்ட வேண்டும். கைகளில் தேங்காய் எண்ணெய் தடவியிருப்பதால், கைகளில் உள்ள நுண்துவாரங்களில் எண்ணெய் இறங்கி, கை தட்டுவதன் பலனை உடலுக்குள் கொண்டு செல்லும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 7 மே, 2018

மூட் டிஸ்ஆர்டர்கள் அறிவோம்!

மூட் டிஸ்ஆர்டர்கள் அறிவோம்!
மனம் என்பது உணர்வுகள், எண்ணங்களால் ஆன அற்புதப் பெட்டகம். அன்றாடம் நிகழும் எண்ணற்ற நிகழ்வுகள் நம் மனதைப் பாதித்தபடியே உள்ளன. நிகழ்வுகளுக்கு ஏற்ப நம் மனம் சலனம் அடைந்துகொண்டே இருக்கிறது. ஆனந்தத்தில் கொண்டாடித் திளைப்பதும், துன்பத்தில் உழன்று, மருகுவதும் நம் சுபாவம். இப்படி, சம்பவங்களுக்கு ஏற்ப சரியான எதிர்வினை செய்யும் வரை நம் மனநிலையில் எந்தச் சிக்கலும் இல்லை. இதில் தடுமாற்றம் ஏற்படும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது.

பொதுவாக, மனநிலை மாற்றங்கள் பெரும்பாலானோருக்கு ஏற்படுபவைதான். இவை இயல்பானவை, தற்காலிகமானவை. ஆனால், சிலருக்கு இந்தப் பாதிப்பு மாதக்கணக்கில் தொடரும்போது அது ஒரு குறைபாடாகிறது. இதை நாம் மனநிலை பாதிப்பு (மூட் டிஸ்ஆர்டர்) என்கிறோம். மூட் டிஸ்ஆர்டரில் என்னென்ன வகைகள் உள்ளன, இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன, இதற்கான தீர்வு என்ன என்று பார்ப்போம்.

மூட் டிஸ்ஆர்டர்
மூட் டிஸ்ஆர்டரை ஒருதுருவ பாதிப்பு (யூனிப்போலார் டிஸ்ஆர்டர்), இருதுருவ பாதிப்பு (பைபோலார் டிஸ்ஆர்டர்)
  என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். யூனிப்போலார் டிஸ்ஆர்டரில் பெரும்பாலானவற்றின் அறிகுறிகள் ஏறக்குறைய ஒன்று போலவேதான் இருக்கும். கடுமையான மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, சோம்பல் போன்ற குணங்கள் எல்லா மூட் டிஸ்ஆர்டர்களுக்கும் பொதுவானவை. இதை `டிப்ரஷன்' என்போம். பைபோலார் என்பது டிப்ரஷனும், `மேனியா' எனப்படும் அதீத உற்சாகமும் மாறி மாறி ஏற்படுவது. 


யூனிபோலார் டிஸ்ஆர்டர்
மேஜர் டிப்ரஸிவ் டிஸ்ஆர்டர்

இதை, கிளினிக்கல் டிப்ரஷன் என்றும் சொல்வார்கள். மூட் டிஸ்ஆர்டர்களில் இதுதான் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்னை. அதீத மனச்சோர்வு இது. இந்தக் குறைபாடு உள்ளவர்கள் எதிலும் விருப்பமின்மை, வெறுப்பு, தன்னம்பிக்கை குறைவாக இருத்தல், தாழ்வு மனப்பான்மை, தன்னால் ஏதும் ஆகாது என்ற எதிர்மறை எண்ணங்களுடன் இருப்பர். தற்கொலை குறித்த எண்ணங்கள் அடிக்கடி ஏற்படும். சிலர் ஓரிரண்டு நாட்களிலேயே மேனியா எனப்படும் அதீத உணர்வுநிலையால் பாதிக்கப்பட்டு மிகவும் கடுமையானவர்களாக, மற்றவர்களை அடிப்பது, தாக்குவது என முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள். இதுவும் டிப்ரஷனின் ஒரு நிலைதான் இவர்களை மருத்துவமனையில் சேர்த்து உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.

ஏடிபிக்கல் டிப்ரஷன் (Atypical depression)
டிப்ரஷனின்போது சரியாகத் தூக்கம் வராமல், சாப்பிடாமல் சோர்வாக இருப்பார்கள். ஆனால், ஏடிபிக்கல் டிப்ரஷன் பிரச்னை இருப்பவர்கள், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவார்கள். நீண்ட நேரம் தூங்குவார்கள். இதனால், உடல்பருமனாக இருப்பர். சமூகத்தோடான உறவு மிகவும் அரிதாக இருக்கும். மிகுந்த தனிமை உணர்வோடு இருப்பார்கள். இந்தப் பாதிப்பு இருப்பவர்களுக்கு கவுன்சலிங் அவசியம். தனிமையில் இருக்கவிடக் கூடாது.

பருவ மனநிலை பாதிப்பு (Seasonal affective disorder)
குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டும் மிகுந்த மனச்சோர்வோடு இருப்பார்கள். இது பொதுவாக, பனிக் காலத்தில் குளிர்ப் பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு ஏற்படும். பருவ நிலை மாறும்போது இயல்புநிலைக்குத் திரும்புவார்கள். இவர்கள், குளிர்காலங்களில் டிப்ரஷனுக்கான மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல் நலம்.

துயர மனநிலை (Melancholic depression)
 இந்தப் பாதிப்பு உடையவர்கள் எப்போதும் துயரமான மனநிலையுடனேயே இருப்பார்கள். மிகவும் சூன்யமான மனநிலையில் தீவிரமாக இருப்பதால் இவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருக்கும். சந்தோஷப்படவேண்டிய விஷயங்களைக்கூட மிகவும் துயரமான ஒன்றாகவே பார்ப்பார்கள். வாழ்வையே வெறுத்துவிடுவார்கள். இதனால், சாப்பிடுவதில் ஆர்வம் இருக்காது. எடை இழப்பு இருக்கும். பொதுவாக, காலை வேளையில் இவர்களுக்கு மனச்சோர்வு அதிகமாக இருக்கும். இவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம்.

கேட்டடோனிக் டிப்ரஷன் (Catatonic depression)
 
அரிதான மோசமான டிப்ரஷன் வகைகளில் ஒன்று. இந்த நிலையில் இருப்பவர்கள் பேச்சோ உணர்வோ இன்றி, அசைவற்று இருப்பர். வலி போன்ற உணர்வுகள் மட்டுமே இருக்கும். இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு மருத்துவமனையில் வைத்துத்தான் சிகிச்சை அளிக்க முடியும். மருத்துவர்கள் மூட் ஸ்டெபிலைசர்கள் தருவதோடு, எலெக்ட்ரோகன்வல்சிவ் தெரப்பியும் தரவேண்டி இருக்கும்.

பிரசவ கால மனச்சோர்வு (Pospartum depression)
பிரசவத்துக்குப் பின்னர் சில பெண்கள் அதீத மனச்சோர்வோடு இருப்பார்கள். எதையோ இழந்ததைப்போன்ற மனநிலை, விரக்தி போன்றவற்றோடு காணப்படுவார்கள். பொதுவாக, பிரசவத்துக்குப் பிறகு மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை இந்த மனச்சோர்வு இருக்கும். இதனால், குழந்தைப் பராமரிப்பு, பாலூட்டுதல் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். கவுன்சலிங் மற்றும் குடும்பத்தாரின் ஆதரவு போன்றவற்றாலேயே குணமாக்க முடியும்.

டிஸ்தீமியா (Dysthymia)
இதை, `நாட்பட்ட மனச்சோர்வு' எனலாம். இதற்கு மேஜர் டிப்ரசிவ் டிஸ்ஆர்டர் போன்றே அறிகுறிகள் இருந்தாலும் இது சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து காணப்படும். இவர்களுக்கு கவுன்சலிங் மற்றும் மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

மனச்சோர்வு ஆளுமை (Depressive personality disorder)
சிலர் இயல்பாகவே எப்போதும் மனச்சோர்வுடன், எதிர்மறையான அணுகு முறையுடன்,
  தாழ்வுமனப்பான்மையுடன் இருப்பார்கள். இப்படி டிப்ரஷன் என்பது இயல்பான குணமாக இருப்பதை `டிப்ரசிவ் பெர்சனால்டி டிஸ்ஆர்டர்' என்பார்கள். இவர்களுக்கு, தொடர்ந்து மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் தர வேண்டியது இருக்கும்.

ரெக்கரன்ட் டிப்ரெஸிவ் டிஸ்ஆர்டர் (Recurrent depressive disorder)
மிகக் குறுகிய காலத்திலேயே திரும்பத் திரும்ப மனச்சோர்வுக்கு ஆட்படுதல், பிறகு அதில் இருந்து விடுபடுதல் என்று இருப்பர். பெண்களுக்கு இந்த வகை டிஸ்ஆர்டர் அதிகமாக வர வாய்ப்பு உண்டு. குறிப்பாக மாதவிலக்கு சமயங்களில் இந்தப் பிரச்னை அதிகமாக ஏற்படும். பெரும்பாலும் ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்தப் பாதிப்புகள் இருக்கலாம். உடலில் என்ன பிரச்னை எனக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்த மூட் டிஸ்ஆர்டர் பிரச்னையில் இருந்து வெளியேறலாம்.
 

பைபோலார் டிஸ்ஆர்டர்
பைபோலார் டிஸ்ஆர்டர் என்பது மேனியா எனப்படும் அதீத உற்சாக மனநிலை மற்றும் டிப்ரஷன் எனப்படும் அதீத சோர்வு மனநிலை என்ற இரண்டு நிலைகளும் மாறி மாறி ஏற்படும். மேனியா நிலையில் இருக்கும்போது, `தன்னால் எதுவும் முடியும்; தானே இந்த உலகில் மிகப்பெரியவன் மிக வலிமையானவன்' என்கிற உற்சாக மனவலிமையோடு செயல்படுவார்கள். டிப்ரஷன் நிலையில், `தன்னால் எதுவுமே முடியாது' என்ற ஆழமான அவநம்பிக்கை மற்றும் தாழ்வு மனப்பான்மையில் பிரச்னைகளை எதிர்கொள்ளவே தயங்குவார்கள். டிப்ரஷனின் போது சரிவர உண்ணாமலும் உறங்காமலும் மேனியாவின்போது அளவுக்கு அதிகமாக உண்டு, உறங்குவதாலும் இவர்களின் உடல்நலம் பாதிப்படுகிறது. இவர்களுக்கு கவுன்சலிங் தருவதோடு மருந்து மாத்திரைகள் கொடுப்பதன் மூலம் இதைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

ரேபிட் மூட் சைக்கிளிங்
ரேபிட் மூட் சைக்கிளிங் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேனியா, டிப்ரஷன் காலங்கள் வாரக்கணக்கில்கூட மாறிமாறி ஏற்படும். இவர்கள் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பில் இருக்கவேண்டியது அவசியம். கவுன்சலிங், மூட் ஸ்டெபிலைசர்கள் போன்வறவை அவசியம்.

மதுவால் தூண்டப்படும் மனச்சோர்வு
மதுவுக்கும் மனச்சோர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆல்கஹால் மூளையில் ஏற்படும் இயல்பான வேதி வினைகளை முடக்கி, மூளையைச் சோர்வுறச் செய்யும் வலிமை உடையது. தொடர்ந்து மதுவைப் பயன்படுத்தும்போது அது டோபமைன் உள்ளிட்ட சுரப்புகளை பாதித்து, அதீத மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. இவர்களுக்கு டிஅடிக்‌ஷனுக்கான கவுன்சலிங் மற்றும் மாத்திரைகள் கொடுத்து மதுப் பழக்கத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். மதுவற்ற இயல்பான வாழ்க்கை வாழும் வரை இவர்களை நன்கு கவனிக்க வேண்டும்.

சிகிச்சைகள்
பொதுவாக, மனநல பாதிப்பு உள்ளவர்களுக்கு கவுன்சலிங் மிகவும் முக்கியம். காக்னடிவ் பிஹேவியரல் தெரப்பி என்று இதைச் சொல்வார்கள். இதில், பாதிக்கப்பட்டவருக்கு தன்னை, தான் சார்ந்து இருக்கும் சூழலை, சமூகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்று சொல்லித் தரப்படும். அவருக்கு மன நெருக்கடி ஏற்படுத்தும் நினைவுகளை, விஷயங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கற்றுத்தரப்படும். இதனோடு `ஃபேமிலி தெரப்பி' எனப்படும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாருக்கும் கவுன்சலிங் தரப்படும்.
  இதனுடன் மூட் ஸ்டெபிலைஸர்கள் எனப்படும் நியூரோடிரான்ஸ்மிட்டரை தூண்டும் மருந்து, மாத்திரைகளும் தரப்படும். பாதிக்கப்பட்டவர் கவுன்சலிங் உடன் மருந்து மாத்திரைகளையும் பரிந்துரைக்கப்பட்ட காலம் வரை எடுத்துக்கொண்டால்தான் நல்ல தீர்வு கிடைக்கும். சிலர், கொஞ்ச நாட்கள் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பியதும் மருந்து மாத்திரைகளை நிறுத்திவிடுகிறார்கள். இது மிகவும் தவறு. பரிந்துரைக்கப்பட்ட காலம் வரை தொடர்ந்து மருந்து மாத்திரைகள் உண்பது நல்லது.

மனநிலை பாதிப்பின் அறிகுறிகள்...
உணர்வுகள் (Feelings)
1. சோகம் மற்றும் பதற்றம்
2. நம்பிக்கையின்மை
3. ஊசலாட்ட எண்ணங்கள்
4. எரிச்சல் உணர்வு

எண்ணங்கள் (Thinking)
1. தன்னைத் தானே மட்டமாக நினைப்பது
2. எதிர்மறை எண்ணங்கள்
3. மோசமான நினைவாற்றல் மற்றும் கவனம்
4. முடிவுகள் எடுக்க இயலாமை
5. தற்கொலை எண்ணங்கள்

நடத்தை (Behaviour)
1. அழுகை
2. எதிலும் பின்வாங்கும் மனோபாவம்
3. உற்சாகமின்மை
4. தோற்றம் பற்றிய கவனம் இன்மை
5. மிகக் குறைந்த அல்லது மிக அதிகமான உறக்கம்
6. அதிகமான அல்லது மிகக்குறைந்த அளவில் உண்பதால் ஏற்படும் எடை குறைவு அல்லது அதிகரிப்பு
7. வலிமை இழந்தது போன்ற நாட்பட்ட சோர்வு
8. காதல், உடலுறவில் ஆர்வம் இன்மை

யார் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்?
பொதுவாக, நம் நவீன வாழ்கைமுறை மாற்றங்களால் மூட் டிஸ்ஆர்டர்கள் மொத்த மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேருக்கு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக, வயதானவர்கள், தனிமையில் இருப்பவர்கள், இதய நோய்கள், புற்றுநோய், பக்கவாதம் போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட் டிஸ்ஆர்டர் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
  பெண்களுக்கு வருவதற்கு 2:1 என்ற விகிதத்தில் வாய்ப்புகள் அதிகம்.

உடலியல் காரணங்கள்
செரடோனின் மற்றும் நோரபினாப்ரைன் (Serotonin
 and norepinephrine), டோபமைன் போன்ற நியூரோ டிரான்ஸ்மிட்டர்களின் அளவுகளில் ஏற்படும் மாற்றத்தால் இந்த மூட் டிஸ்ஆர்ட்கள் ஏற்படுகின்றன. இந்தப் பாதிப்புகள் ஏற்பட தொடர் தோல்விகள், தனிமையுணர்வு, பாதுகாப்பின்மை, மோசமான அவமானம், சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுதல் போன்ற வாழ்வியல் காரணிகள் முக்கிய இடம் வகிக்கின்றன. சிலருக்கு மரபியல் காரணங்களாலும் மூட் டிஸ்ஆர்டர் பாதிப்புகள் ஏற்படக்கூடும். பொதுவாக, பைபோலார் டிஸ்ஆர்டர் போன்ற பிரச்னைகள் ஏற்பட 25 சதவிகிதம் மரபியல் காரணங்கள் பின்னணியாக உள்ளன


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 5 மே, 2018

உங்கள் வீட்டில் ‘ஹெல்த் கிட்’ இருக்கிறதா?

உங்கள் வீட்டில் 'ஹெல்த் கிட்' இருக்கிறதா?
வீட்டுக்கு என என்னென்னவோ பொருட்களைத் தேடித் தேடிச் சேர்க்கிறோம். ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகளைப் பெரும்பாலானவர்கள் வாங்கிவைப்பது இல்லை. குழந்தைகள், முதியவர்கள் உள்ள வீடுகளில் மருத்துவ உதவி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேவைப்படலாம். எனவே, ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஹெல்த் கிட் என்னென்ன என்று பார்ப்போம்...

குழந்தைகள் வீட்டில் என்ன இருக்க வேண்டும்?

ஒஆர்எஸ் (Oral Rehydration solution) சொல்யூஷன்
வயிற்றுப்போக்கு, அதிகப்படியான வெப்பம் காரணமாக நீரிழப்பு ஏற்படலாம். உடலில் உள்ள நீரோடு சத்துக்களும் வெளியேறிவிடுவதால், குழந்தைகள், முதியவர்கள் துவண்டுபோய்விடுவர். அந்த நேரத்தில், ஓ.ஆர்.எஸ் கொடுக்கலாம். அனைத்து மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதை வாங்கி வீட்டில்வைத்திருக்க குழந்தைகளின் வயிற்றுப்போக்குப் பிரச்னையை பதற்றமின்றி எதிர்கொள்ள முடியும். ஓ.ஆர்.எஸ் இல்லாதபோது, ஒரு லிட்டர் கொதிக்க வைத்து ஆறிய நீரில், சாதாரண உப்பு ஒரு சிட்டிகை, சர்க்கரை ஒரு ஸ்பூன் கலந்து கொடுத்த பின் மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்.



பாராசிட்டாமால் மாத்திரை
காய்ச்சலில் குழந்தைகள் தவிக்கும்போது பயன்பட பாராசிட்டாமால் சிரப், மாத்திரையை வைத்திருப்பது நல்லது. சிறிய குழந்தைகளுக்கு சிரப் ஏற்றது. சிறுவர், சிறுமியருக்கு மாத்திரை ஏற்றது.

குழந்தைகள் இருக்கும் வீட்டில்கவனிக்க வேண்டியவை...
பேஸ்ட், தைலம், பெயின்ட், பூச்சிக்கொல்லி, எலி மருந்து, கொசு, கரப்பான் ஸ்ப்ரே, நெயில் பாலிஷ் ரிமூவர், கழிப்பறை சுத்தப்படுத்தும் கெமிக்கல்கள், எறும்புகளுக்குப் போடும் சாக்பீஸ் ஆகியவற்றை குழந்தைகளின் கைகளுக்கு எட்டும் தூரத்தில் வைக்கக் கூடாது.

 டெபிட் ஸ்பான்ஞ் (Tepid sponge)
வெள்ளைப் பருத்தி துணிதான் இது. அதிகக் காய்ச்சல், குழந்தைகளுக்கு வலிப்பை ஏற்படுத்தும் என்பதால், உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்த இதைப் பயன்படுத்தலாம். சுத்தமான நீரில் இதை நனைத்து, நெற்றி, மார்பு, அக்குள் பகுதிகளில் ஒத்தடம் போல் ஒற்றி எடுக்க வேண்டும்.

தெர்மாமீட்டர்
பாதரசம் மற்றும் டிஜிட்டல் தெர்மாமீட்டர்கள் சந்தையில் கிடைக்கின்றன. டிஜிட்டல் தெர்மாமீட்டர் பயன்படுத்த எளிமையானது. அக்குளில் வைத்து, காய்ச்சலின் வெப்ப நிலையை அறியலாம். இயல்புநிலை வெப்பநிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் (37 டிகிரி செல்சியஸ்)இருக்க வேண்டும்.

வயதானவர்கள் வீட்டில் என்ன இருக்க வேண்டும்?
பி.பி மெஷின்
தற்போது எளிய டிஜிட்டல் ரத்த அழுத்த அளவீடு கருவிகள் வந்துவிட்டன. கையில் மாட்டி, பட்டனைத் தட்டினால், 30 விநாடிகளில் ரத்த அழுத்த அளவைக் காண்பித்துவிடும். அது இயல்புநிலையா, அதிகமா குறைவா என்பதையும் கருவியே காண்பித்துவிடும்.  முதியவர்கள் இருக்கும் வீட்டில் இது கட்டாயம் இருக்க வேண்டும்.

அதேபோல், சர்க்கரை நோயாளிகள் இருக்கும் வீட்டில், சர்க்கரை அளவை கணக்கிடும் மெஷின் இருப்பது அவசியம்.

வயதானவர்கள் வீட்டில் இருக்க வேண்டியவை...
கைப்பிடி, கிரிப்பர் செருப்பு, வெஸ்டர்ன் கழிப்பறை, குளியல் அறை மற்றும் கழிப்பறையில் வழுக்காத தரைத்தளம் இருக்க வேண்டும்.

ஐசார்டில் (Isordil) மாத்திரை
இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், நுரையீரல் நோயாளிகளுக்கு திடீரென நெஞ்சுவலி, மயக்கம் போன்றவை ஏற்படலாம். ஐசார்டில் Isordil (Isosorbide Dinitrate) என்ற மாத்திரையை வீட்டில் வைத்திருக்க வேண்டும். நெஞ்சுவலி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம் என்பதால், அவர்கள் இந்த மாத்திரையை பாக்கெட்டில் வைத்திருப்பது நல்லது. நாக்குக்கு அடியில் வைத்துக்கொண்டால், நெஞ்சுவலி உடனே குறையும்.

ரப்பர் ஒத்தட பேக்
உடல்வலி, மூட்டுவலி, ஊசி போட்ட இடத்தில் வீக்கம், வலி ஆகியவற்றுக்கு ஹாட் பேக் ஒத்தடம் கொடுக்கலாம். கணுக்காலில் அடி, வீக்கம் எனில், அதற்கு ஐஸ் பேக் ஒத்தடம் கொடுக்கலாம். வீக்கங்கள் குறைய ஐஸ் ஒத்தடம், வலிகளுக்கு சுடு ஒத்தம் கொடுக்க வேண்டும்.

அவில்/செட்ரிஸைன்
வீட்டில் திடீரென பூச்சி கடித்துவிட்டது ஒரே அரிப்பு, நமைச்சல் எனத் தொல்லை இருந்தால், அவில் (Avil) அல்லது செட்ரிஸைன் (Cetirizine) மாத்திரைகளைச் சாப்பிடலாம். பிறகு, மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறலாம். ஒருமுறை, ஒரே ஒரு மாத்திரை போடுவதால் பாதிப்புகள் கிடையாது. இந்த மாத்திரைகளை ஆன்டிஹி ஸ்டமைன் (Antihistamine) என்று சொல்வர்.

ஆஸ்பிரின்
ரத்தம் உறைவதைத் தடுக்கக்கூடியது. எனவே, இதய நோயாளிகள் தங்களது பாக்கெட்டில், ஆஸ்பிரின் மாத்திரையை அவசியம் வைத்திருக்க வேண்டும்.

சாக்லெட்
சர்க்கரை நோயாளிகள் காலையில் சரியாகச் சாப்பிடாமல், சர்க்கரை நோய்க்கான மாத்திரை சாப்பிடுவதால், சர்க்கரையின் அளவு குறைந்து, உதறல், மயக்கம் போன்றவை வரலாம். இதற்கு, எப்போதும் தங்களது பாக்கெட்டில் ஒரு சாக்லெட் வைத்திருக்க வேண்டும். சாக்லெட் சாப்பிட்ட உடனே, உடலில் சர்க்கரையின் அளவு நார்மலாக மாறிவிடும். லோ சுகர் பிரச்னை இருப்பவர்களும் கையில் சாக்லெட் வைத்திருப்பது நல்லது.

கிரிப்பர்/சோல் செருப்பு
கழிப்பறைக்கு என, பிடிமானம் உள்ள, எளிதில் வழுக்கிவிடாத செருப்புகளை  வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. வீட்டு உபயோகத்துக்குத் தானே என தரமற்ற செருப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.


பெண்கள் கவனிக்க!
மாதவிலக்குச் சமயத்தில் வயிற்றைக் கசக்கிப் பிழியும் வலி, உடல்வலி, சோர்வு, கோபம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதற்கு, பெயின் கில்லர் மாத்திரை போடலாம். அதாவது, ஒரு பாராசிட்டாமல் போட்டால் தவறு இல்லை. தாங்க முடியாத வலி இருந்தால், குடும்ப மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரைப்படி மாத்திரைகள் சாப்பிடலாம். வலியை, இன்னொரு வலியைக்கொண்டு சரிசெய்யலாம். அதுதான் சூடான ஒத்தடம்.
  வயிறு, முதுகு, இடுப்பு ஆகிய இடங்களில் ஒத்தடம் கொடுக்கையில் வலியில் இருந்து விடுபட முடியும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 3 மே, 2018

பைல்களை பேக் அப் செய்திடுவோம்!

பைல்களை பேக் அப் செய்திடுவோம்!
'நாம் உருவாக்கும் பைல்கள் எப்போது வேண்டுமானாலும் தொலைந்து விடும். இவற்றிற்கு பாதுகாப்பாக நகலிகளை எடுத்து வைக்க வேண்டும்' என்ற எண்ணம் நம் மனதின் ஓரத்தில் எப்போதும் இருந்து கொண்டே உள்ளது.

ஆனால், நாம் அவற்றிற்கான பாதுகாப்பு செயல்பாடுகளை மேற்கொள்கிறோமா என்றால், பெரும்பாலானவர்கள் இல்லை என்றுதான் பதிலளிப்பார்கள். இதற்குக் காரணம், கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் இன்னும் பல ஆண்டுக்கு நம்மை கைவிடாது என்று பல ஆண்டுகளாக அனைவரும் எண்ணுவதுதான். ஆனால், திடீரென ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போய், அத்தனை டேட்டா பைல்களும் நமக்கு இல்லை என்ற நிலை வரும்போதுதான், தலையில் கை வைத்து புலம்பத் தொடங்குகிறோம்.



ஆனால், கண்ணும் கருத்துமாகப் பணியாற்றுபவர்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில், தங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டேட்டா பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைக்கின்றனர். ஒரு சிலரோ, எனக்கு ஆவலாக உள்ளது. ஆனால், என்ன செய்திட வேண்டும்? எது எளிதான வழி எனத் தெரியவில்லையே என்ற கேள்விகளுடன் எதுவும் செய்திடாமல் இருந்து விடுகின்றனர். இவர்களுக்கான கட்டுரையே இது.
முன்பெல்லாம், பேக் அப் என்பது எப்படி எடுக்க வேண்டும், எதில் பேக் அப் பைல்களை வைக்க வேண்டும், எந்த பைல்களை எடுக்க வேண்டும்
என்பதெல்லாம், மிகப் பெரிய சவாலான செயலாக இருந்தது. இப்போதைய கால கட்டத்தில், நமக்குக் கிடைக்கும் சாப்ட்வேர் வசதிகள், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் தேக்ககங்கள் ஆகியவை பேக் அப் பணிகளை எளிதாக மாற்றியுள்ளன. இப்போதும் நாம் அவற்றைப் பயன்படுத்தி, பேக் அப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றால், நம்மிடம் தான் குறை உள்ளது. இங்கு, எப்படி, எந்த வகைகளில் பேக் அப் செய்வது என்பது குறித்துப் பார்க்கலாம்.

எவற்றை எல்லாம் பேக் அப்?
சில பைல்களை 'நாம் பேக் அப் காப்பி எடுத்தே ஆக வேண்டும்' என்ற வகையில் அனைவரும் வைத்திருப்போம். இவற்றுக்கு ஏதேனும் ஒரு வகையில் பேக் அப் கம்ப்யூட்டரில் அல்லது வேறு தேக்கக மீடியாவில் வைத்திருப்போம். இத்தகைய பைல்கள் தவிர, நாம் எவற்றை பேக் அப் செய்திட வேண்டும்?
உங்களுடைய பைல்களை, அவை கொண்டுள்ள டேட்டாவின் அடிப்படையில், பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் பிரித்து வைத்திருந்தால், நாம் பேக் அப் செய்திடப் பயன்படுத்தும் சாப்ட்வேர் செயலிக்கு, பேக் அப் செய்திட வேண்டிய பைல்களின் வகையைக் (டாகுமெண்ட், படங்கள், விடியோ மற்றும் நம் மியூசிக் போல்டர்கள்) காட்டிவிடலாம். இருப்பினு, வேறு சில வகை டேட்டாவினையும் நாம் பேக் அப் செய்தாக வேண்டும்.
மின் அஞ்சல்
நமக்கு வந்திருக்கும் மின் அஞ்சல்களைப் பெற்று, நம் கம்ப்யூட்டரில் தங்க வைக்கும், இமெயில் க்ளையண்ட் செயலிகளைத் (தண்டர்பேர்ட், ஆப்பரா போன்றவை) தற்போது அவ்வளவாக யாரும் பயன்படுத்துவது இல்லை. இத்தகைய செயலிகளில், எப்படி பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது என்ற அமைப்பினை, அந்த செயலிகளிலேயே அறிந்து பயன்படுத்தலாம்.

ஜிமெயில் அல்லது அவுட்லுக் டாட் காம் போன்ற இணையத்தில் இயங்கும் இமெயில் தளங்களையே நாம் பயன்படுத்துகிறோம். எனவே, அவற்றை எப்படி பேக் அப் காப்பி எடுக்கலாம் என்பதனை, அந்த தளத்தில் தரப்பட்டுள்ள வழிவகைகளைத் தெரிந்து பின்பற்றலாம். அல்லது, eM Client போன்ற டெஸ்க்டாப் சாப்ட்வேர் செயலிகலைப் பயன்படுத்தி, அந்த அஞ்சல்களைப் பெறலாம். இந்த செயலிகள், இணையத்தில் இருந்தவாறே இயங்கும் அஞ்சல் தளங்களிலிருந்து அஞ்சல்களைப் பெற உதவுகின்றன. இவை, ஜிமெயில், கூகுள் ஆப்ஸ், ஐ க்ளவ்ட், அவுட்லுக் டாட் காம் மற்றும் இது போல இயங்குகிற இணைய தள மெயில் செயலிகளை சப்போர்ட் செய்கின்றன. இந்த செயலியில் தொடர்ச்சியாக பேக் அப் செய்திட செட்டிங்ஸ் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. Tools > Settings > Backup எனச் சென்று, பேக் அப் செய்வதற்கென ஒரு போல்டரை அமைத்து, தொடர்ச்சியாக பேக் அப் செய்திடலாம்.
பிரவுசர்கள்
உங்களுடைய பிரவுசர்களில், நீங்கள் கவனமாக சில புக்மார்க்குகள் அல்லது பேவரிட் எனப்படும் குறியீடுகளை, அடிக்கடி பார்க்க வேண்டிய தளங்களுக்காக ஏற்படுத்தி இருக்கலாம். இவை எப்போதும் நமக்குத் தேவைப்படும். கம்ப்யூட்டர் கிராஷ் ஆவதனால், இவற்றை நாம் இழக்கும் நிலை ஏற்படலாம். எனவே, இவற்றையும் ஒரு பைலில் அமைத்து, அதற்கான பேக் அப் எடுத்து வைப்பதே நல்லது.

சில பிரவுசர்கள் இதற்கான வழிமுறைகளையும் கொண்டுள்ளன. மொஸில்லா, தன் பயர்பாக்ஸ் பிரவுசரிலேயே, இவற்றைச் சுருக்கி பேக் அப் செய்திடும் வழியினைக் கொண்டுள்ளது. வலது மேல் பக்கம் உள்ள மூன்று கோடுகள் அடங்கிய ஐகானில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனு மூலம், இதற்கென அக்கவுண்ட் ஒன்றை ஏற்படுத்தி பேக் அப் செய்திடலாம். இதனை பயர்பாக்ஸ் இயங்கும் உங்களுடைய அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பெறும் வகையில் அமைக்கலாம். பயர்பாக்ஸ் செயலியை ஏற்று இயங்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். போன்களிலும் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

கூகுள் குரோம் பிரவுசரிலும் இதே போன்ற ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி, குரோம் பிரவுசரில் நாம் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் ((bookmarks, extensions, themes,) பேக் அப் பைலாக மாற்றி, நம் கூகுள் அக்கவுண்ட் கணக்கில் வைத்துக் கொள்ளலாம். இவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டால், மற்ற கம்ப்யூட்டர்களில், நாம் நம் கூகுள் அக்கவுண்ட் மூலம் குரோம் பிரவுசரைப் பயன்படுத்துகையில், மாற்றங்களும் பேக் அப் பைலில் அப்டேட் செய்யப்படும்.

நம்மில் பலர் ஒரே ஒரு பிரவுசர் மட்டுமே பயன்படுத்துவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசரைப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு பிரவுசரிலும் புக்மார்க்குகளை அமைக்கிறோம். ஒவ்வொரு பிரவுசருக்கும் ஒரு புக்மார்க் பேக் அப் பைல் உருவாக்கி வைப்பது, நம் நேரத்தை வீணாக்கும். இந்த சிரமத்தினைப் போக்கும் வகையில் எக்ஸ்மார்க்ஸ் (Xmarks) என்னும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பயர்பாக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்புளோரர், சபாரி உட்பட அனைத்து பிரவுசர்களிலும் அமைக்கப்படும் புக்மார்க்குகளை இது ஒருங்கிணைத்துத் தருகிறது. நீங்கள் ஏற்படுத்திய புக்மார்க்குகளில் சின்ன மாற்றத்தை ஏற்படுத்தினாலும், அது உடனே மாற்றத்துடன் பேக் அப் பைலுக்கும் செல்கிறது.
ட்ரைவர் பைல்கள்
கம்ப்யூட்டரோடு அதன் துணை சாதனங்களை இணைத்துப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால், அவற்றை இணைத்து இயக்குவதற்கான செயலிகளே, 'ட்ரைவர் பைல்கள்' என அழைக்கப்படுகின்றன.
நம் கம்ப்யூட்டர், விடியோ கார்ட், அச்சுப் பொறிகள், ஸ்கேனர்கள் மற்றும் இது போன்றவற்றுடன் "பேசுவதற்கு" இந்த ட்ரைவர் பைல்கள் தேவைப்படுகின்றன. இந்த பைல்கள் நமக்குத் தனியே அனைத்தும் கிடைப்பதில்லை. அவை தாமாகவே, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தால் எடுத்துப் பதியப்பட்டுக் கொள்ளப்படுகின்றன. அப்படியானால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி, மீண்டும் இயக்கப்படுகையில், இந்த துணை சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்களின் தேவையை எப்படி நிறைவேற்றிக் கொள்வது? ட்ரைவர் பைல்களை பேக் அப் செய்வதற்கென்றே ஒரு சில சாப்ட்வேர் புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில், DriverMax என்னும் செயலி பலராலும் விரும்பி பயன்படுத்தப்படுகிறது. http://www.drivermax.com/ என்ற இணைய தளத்தில் இதனை இலவசமாகப் பெறலாம். ஆனால், இதனை உங்கள் கம்ப்யூட்டரில் பதியும் போது சற்று கவனமாக இருக்கவும். இது கூடுதலாகச் சில டூல் பார்களையும் பதிகிறது. மாற்றாக Slim Drivers என்ற செயலியை நிறுவலாம். இந்த செயலியும் ட்ரைவர் பைல்களை பேக் அப் எடுத்து வைப்பதுடன், பேக் அப் எடுத்துள்ள ட்ரைவர் பைல்களுக்குத் தற்போதைய மேம்படுத்தப்பட்ட பதிப்பு உள்ளதா எனத் தேடி அறிவிக்கிறது.

ட்ரைவர் பைல்களை பேக் அப் எடுத்து வைக்காவிட்டால், அவற்றைத் தேடி, துணை சாதனங்களைத் தயாரித்து வழங்கிய நிறுவனங்களின் இணைய தளங்களைத் தேடி அலைய வேண்டும். எனவே, மேலே கூறிய இரண்டு செயலிகளில், ஏதாவது ஒன்றின் மூலம், அனைத்து ட்ரைவர்களுக்கும் பேக் அப் எடுத்து வைப்பதே நல்லது.
சமுதாய வலைத் தளங்கள்
குறைந்த பட்சம் ஒரு சமுதாய இணைய தளத்திலாவது நாம் நமக்கென பக்கம் வைத்து இயங்கி வருகிறோம். ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் தங்களுக்கென கணக்கில்லாத கம்ப்யூட்டர் பயனாளரை நாம் காண்பது அரிது. இந்த தளங்களில் நாம் பதிவு செய்த தகவல்கள், படங்கள் ஆகியவற்றை நாம் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்த தளங்கள் கிராஷ் ஆகாது என்று அனைவரும் நம்பிக்கையுடன் உள்ளனர். இருப்பினும், நாம் இதனை பேக் அப் எடுத்து வைத்து, மீண்டும் மீள் பதிவினை ஏற்படுத்தப் போவதில்லை.
நாம் பதிந்த தகவல்களுக்கும் படங்களுக்கும் நம்மிடம் ஒரு காப்பி இருப்பது நல்லதுதானே.

ட்விட்டர் வலைத்தளத்தில், வேறு தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் இதற்குத் தேவை இல்லை. உங்களுடைய அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கம் சென்று, செட்டிங்ஸ் பிரிவில் "Request your archive" என்ற இடத்திற்குச் செல்லவும். நீங்கள் பதிவு செய்த அனைத்து தகவல்களும் படங்களும் மொத்தமாக உங்களுக்குக் கிடைக்கும். அதற்கான லிங்க் உங்களுடைய மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

பேஸ்புக் வலைத் தளத்தில், General Account Settings செல்லவும். அங்கு கீழாகச் சென்றால், "Download a copy of your Facebook data" என்று ஒரு லிங்க் இருக்கும். உங்கள் அனைத்து பதிவுகளும் எடுக்கப்பட்டு, தொகுக்கப்படும். இதனைப் பெறுவதற்கான லிங்க் உங்களுடைய மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
பேக் அப் வகைகள்
பேக் அப் செய்வது என்பது, பைல் ஒன்றை இன்னொரு இடத்தில் காப்பி செய்வதைப் போல எளிதானதுதான். உங்கள் ஹார்ட் ட்ரைவிலிருந்து, ஒரு ப்ளாஷ் ட்ரைவிற்குக் காப்பி செய்வதும் ஒரு வகையான பேக் அப் தான். இருப்பினும், மீண்டும் மீண்டும் பெறும் வாய்ப்புகள், பாதுகாப்பான பேக் அப், பேக் அப் செய்ததனை அணுகிப் பெறும் முறை ஆகியவையே, எந்த வகை பேக் அப் முறையினை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதனை முடிவு செய்கின்றன.

குறிப்பிட்ட வகை டேட்டாவினை மட்டுமே பேக் அப் செய்திட வேண்டும் என எண்ணினால், அதனை எளிதாக்கும் சாப்ட்வேர் ஒன்றைப் பயன்படுத்தவும். பேக் அப் என்பது, பைல் ஒன்றை ஒரு காப்பி எடுப்பது மட்டுமல்ல. இரண்டு நகல்களாவது ஏற்படுத்த வேண்டும். எனவே, போல்டர் முழுவதையும் காப்பி செய்து, பின்னர் அதே போல்டரில் மீண்டும் பைல்களை இணைக்கையில், போல்டர் முழுவதையும் பேக் அப் எடுத்து வைக்கலாம். இதற்கென பல செயலிகள் உள்ளன. விண்டோஸ் 7 சிஸ்டத்தில், அதனுடன் இணைத்துத் தரப்பட்டுள்ள Backup and Restore என்ற வசதியை இதற்குப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 8 முதல் File History என்ற பேக் அப் டூல் தரப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, ஹார்ட் டிஸ்க்கின் முழு இமேஜையும் பேக் அப் எடுக்கலாம். விண்டோஸ் 10 சிஸ்டத்தில், ஹார்ட் டிஸ்க்கின் முழு பேக் அப் எடுக்க, Bvckup2, SyncBackSE or SyncBackPro, மற்றும் AOMEI Backupper Standard ஆகிய செயலிகளைப் பயன்படுத்தலாம்.

க்ளவ்ட் தேக்ககம்
ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தி வருவோருக்கு, க்ளவ்ட் ஸ்டோரேஜ் பேக் அப் மிகவும் வசதியான ஒன்றாகும். இதன் மூலம், நாம் பயன்படுத்தும் எந்த கம்ப்யூட்டரிலும், நம்முடைய பைல்கள் அனைத்தையும் பெற்றுப் பயன்படுத்தலாம். இந்த வசதியில் தரப்படும் டூல், நம் பைல்களை அனைத்தையும், க்ளவ்ட் முறையில் பேக் அப் எடுத்து வைப்பதால், நாம் எந்த கம்ப்யூட்டர் வழியாகவும், அவற்றைப் பெற்று பயன்படுத்தலாம். ஸ்மார்ட் போன்களிலும் இவற்றைப் பெறலாம்.

க்ளவ்ட் பேக் அப் செயல்பாடுகளுக்கு, பல இணைய தளங்கள் வழி தருகின்றன. 2 ஜி.பி.முதல் பல அளவுகளில் இடம் தரப்படுகின்றன. கட்டணம் செலுத்தியும் கூடுதல் இடத்தினைப் பெற்று க்ளவ்ட் ஸ்டோரேஜ் முறையில், நம் பைல்களுக்குப் பேக்கப் எடுக்கலாம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 1 மே, 2018

முடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில டிப்ஸ்... !

முடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில டிப்ஸ்... !

சிறு வயதிலிருந்தே சாப்பாட்டில் முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை சேர்த்துச் சாப்பிட வேண்டும். கம்மஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலைத் துவையல்... போன்றவற்றை வாரத்துக்கு 2-3 நாட்கள் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மாதுளை ஜூஸ், உலர்ந்த திராட்சை, உலர் அத்திப்பழம் சாப்பிடுவது மிக நல்லது.

வாரத்துக்கு ஒரு நாளைக்காவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம்.



தினமும் தலைக்குக் குளித்தால் முடி கொட்டும் '
 என்பது மூட நம்பிக்கை. தலைக்குக் குளிப்பது முடியை வளர்க்கும் என்பதே உண்மை.

சிறு வயதிலிருந்தே வீட்டில் அடிக்கடி சுண்டல், நவதானியச் சத்துமாவுக் கஞ்சி, சிறுதானிய உணவு, பீன்ஸ், அவரை முதலான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது, முடி கொட்டும் குறைபாட்டைத் தடுக்கும்.

பொடுகுத் தொல்லை, தலையில் உள்ள சரும உலர்வால் ஏற்படுவதே தவிர, பூச்சித் தொற்று காரணம் கிடையாது. இதைத் தவிர்க்க,
'பொடுதலை ' என்ற மூலிகையின் சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, வாரம் 2-3 நாட்கள் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். Scalp Psoriasis எனும் தோல் நோயை பலரும் பொடுகுத் தொல்லை எனத் தவறாக நினைத்து அலட்சியப்படுத்துகின்றனர். பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால், மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்.

 சிலர் தொடர்ந்து தலைக்கு டை அடித்துக்கொள்வார்கள். கேட்டால், 'இயற்கையான மூலிகை டைதான் போடுகிறோம் ' என்பார்கள். 100 சதவிகித 'மூலிகை டை ' என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. கறுப்பு வண்ணம் தரும் நிறமி மட்டும்தான் மூலிகை. அதைத் தலையில் நிறுத்துவது ரசாயனக் குழம்பே! எனவே, டை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்கவும். அதைத் தவிர்ப்பதே நல்லது


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

மட்டனா?சிக்கனா? நீரிழிவுநோயாளிகளுக்கு எது நல்லது?

நீரிழிவு நோய் இன்று மக்களிடையே மிகவும் பொதுவானதாகி விட்டது. இந்த கோளாறில் , இரத்தத்தில் சர்க்...

Popular Posts