லேபிள்கள்

சனி, 5 மே, 2018

உங்கள் வீட்டில் ‘ஹெல்த் கிட்’ இருக்கிறதா?

உங்கள் வீட்டில் 'ஹெல்த் கிட்' இருக்கிறதா?
வீட்டுக்கு என என்னென்னவோ பொருட்களைத் தேடித் தேடிச் சேர்க்கிறோம். ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகளைப் பெரும்பாலானவர்கள் வாங்கிவைப்பது இல்லை. குழந்தைகள், முதியவர்கள் உள்ள வீடுகளில் மருத்துவ உதவி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேவைப்படலாம். எனவே, ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஹெல்த் கிட் என்னென்ன என்று பார்ப்போம்...

குழந்தைகள் வீட்டில் என்ன இருக்க வேண்டும்?

ஒஆர்எஸ் (Oral Rehydration solution) சொல்யூஷன்
வயிற்றுப்போக்கு, அதிகப்படியான வெப்பம் காரணமாக நீரிழப்பு ஏற்படலாம். உடலில் உள்ள நீரோடு சத்துக்களும் வெளியேறிவிடுவதால், குழந்தைகள், முதியவர்கள் துவண்டுபோய்விடுவர். அந்த நேரத்தில், ஓ.ஆர்.எஸ் கொடுக்கலாம். அனைத்து மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதை வாங்கி வீட்டில்வைத்திருக்க குழந்தைகளின் வயிற்றுப்போக்குப் பிரச்னையை பதற்றமின்றி எதிர்கொள்ள முடியும். ஓ.ஆர்.எஸ் இல்லாதபோது, ஒரு லிட்டர் கொதிக்க வைத்து ஆறிய நீரில், சாதாரண உப்பு ஒரு சிட்டிகை, சர்க்கரை ஒரு ஸ்பூன் கலந்து கொடுத்த பின் மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்.பாராசிட்டாமால் மாத்திரை
காய்ச்சலில் குழந்தைகள் தவிக்கும்போது பயன்பட பாராசிட்டாமால் சிரப், மாத்திரையை வைத்திருப்பது நல்லது. சிறிய குழந்தைகளுக்கு சிரப் ஏற்றது. சிறுவர், சிறுமியருக்கு மாத்திரை ஏற்றது.

குழந்தைகள் இருக்கும் வீட்டில்கவனிக்க வேண்டியவை...
பேஸ்ட், தைலம், பெயின்ட், பூச்சிக்கொல்லி, எலி மருந்து, கொசு, கரப்பான் ஸ்ப்ரே, நெயில் பாலிஷ் ரிமூவர், கழிப்பறை சுத்தப்படுத்தும் கெமிக்கல்கள், எறும்புகளுக்குப் போடும் சாக்பீஸ் ஆகியவற்றை குழந்தைகளின் கைகளுக்கு எட்டும் தூரத்தில் வைக்கக் கூடாது.

 டெபிட் ஸ்பான்ஞ் (Tepid sponge)
வெள்ளைப் பருத்தி துணிதான் இது. அதிகக் காய்ச்சல், குழந்தைகளுக்கு வலிப்பை ஏற்படுத்தும் என்பதால், உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்த இதைப் பயன்படுத்தலாம். சுத்தமான நீரில் இதை நனைத்து, நெற்றி, மார்பு, அக்குள் பகுதிகளில் ஒத்தடம் போல் ஒற்றி எடுக்க வேண்டும்.

தெர்மாமீட்டர்
பாதரசம் மற்றும் டிஜிட்டல் தெர்மாமீட்டர்கள் சந்தையில் கிடைக்கின்றன. டிஜிட்டல் தெர்மாமீட்டர் பயன்படுத்த எளிமையானது. அக்குளில் வைத்து, காய்ச்சலின் வெப்ப நிலையை அறியலாம். இயல்புநிலை வெப்பநிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் (37 டிகிரி செல்சியஸ்)இருக்க வேண்டும்.

வயதானவர்கள் வீட்டில் என்ன இருக்க வேண்டும்?
பி.பி மெஷின்
தற்போது எளிய டிஜிட்டல் ரத்த அழுத்த அளவீடு கருவிகள் வந்துவிட்டன. கையில் மாட்டி, பட்டனைத் தட்டினால், 30 விநாடிகளில் ரத்த அழுத்த அளவைக் காண்பித்துவிடும். அது இயல்புநிலையா, அதிகமா குறைவா என்பதையும் கருவியே காண்பித்துவிடும்.  முதியவர்கள் இருக்கும் வீட்டில் இது கட்டாயம் இருக்க வேண்டும்.

அதேபோல், சர்க்கரை நோயாளிகள் இருக்கும் வீட்டில், சர்க்கரை அளவை கணக்கிடும் மெஷின் இருப்பது அவசியம்.

வயதானவர்கள் வீட்டில் இருக்க வேண்டியவை...
கைப்பிடி, கிரிப்பர் செருப்பு, வெஸ்டர்ன் கழிப்பறை, குளியல் அறை மற்றும் கழிப்பறையில் வழுக்காத தரைத்தளம் இருக்க வேண்டும்.

ஐசார்டில் (Isordil) மாத்திரை
இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், நுரையீரல் நோயாளிகளுக்கு திடீரென நெஞ்சுவலி, மயக்கம் போன்றவை ஏற்படலாம். ஐசார்டில் Isordil (Isosorbide Dinitrate) என்ற மாத்திரையை வீட்டில் வைத்திருக்க வேண்டும். நெஞ்சுவலி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம் என்பதால், அவர்கள் இந்த மாத்திரையை பாக்கெட்டில் வைத்திருப்பது நல்லது. நாக்குக்கு அடியில் வைத்துக்கொண்டால், நெஞ்சுவலி உடனே குறையும்.

ரப்பர் ஒத்தட பேக்
உடல்வலி, மூட்டுவலி, ஊசி போட்ட இடத்தில் வீக்கம், வலி ஆகியவற்றுக்கு ஹாட் பேக் ஒத்தடம் கொடுக்கலாம். கணுக்காலில் அடி, வீக்கம் எனில், அதற்கு ஐஸ் பேக் ஒத்தடம் கொடுக்கலாம். வீக்கங்கள் குறைய ஐஸ் ஒத்தடம், வலிகளுக்கு சுடு ஒத்தம் கொடுக்க வேண்டும்.

அவில்/செட்ரிஸைன்
வீட்டில் திடீரென பூச்சி கடித்துவிட்டது ஒரே அரிப்பு, நமைச்சல் எனத் தொல்லை இருந்தால், அவில் (Avil) அல்லது செட்ரிஸைன் (Cetirizine) மாத்திரைகளைச் சாப்பிடலாம். பிறகு, மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறலாம். ஒருமுறை, ஒரே ஒரு மாத்திரை போடுவதால் பாதிப்புகள் கிடையாது. இந்த மாத்திரைகளை ஆன்டிஹி ஸ்டமைன் (Antihistamine) என்று சொல்வர்.

ஆஸ்பிரின்
ரத்தம் உறைவதைத் தடுக்கக்கூடியது. எனவே, இதய நோயாளிகள் தங்களது பாக்கெட்டில், ஆஸ்பிரின் மாத்திரையை அவசியம் வைத்திருக்க வேண்டும்.

சாக்லெட்
சர்க்கரை நோயாளிகள் காலையில் சரியாகச் சாப்பிடாமல், சர்க்கரை நோய்க்கான மாத்திரை சாப்பிடுவதால், சர்க்கரையின் அளவு குறைந்து, உதறல், மயக்கம் போன்றவை வரலாம். இதற்கு, எப்போதும் தங்களது பாக்கெட்டில் ஒரு சாக்லெட் வைத்திருக்க வேண்டும். சாக்லெட் சாப்பிட்ட உடனே, உடலில் சர்க்கரையின் அளவு நார்மலாக மாறிவிடும். லோ சுகர் பிரச்னை இருப்பவர்களும் கையில் சாக்லெட் வைத்திருப்பது நல்லது.

கிரிப்பர்/சோல் செருப்பு
கழிப்பறைக்கு என, பிடிமானம் உள்ள, எளிதில் வழுக்கிவிடாத செருப்புகளை  வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. வீட்டு உபயோகத்துக்குத் தானே என தரமற்ற செருப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.


பெண்கள் கவனிக்க!
மாதவிலக்குச் சமயத்தில் வயிற்றைக் கசக்கிப் பிழியும் வலி, உடல்வலி, சோர்வு, கோபம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதற்கு, பெயின் கில்லர் மாத்திரை போடலாம். அதாவது, ஒரு பாராசிட்டாமல் போட்டால் தவறு இல்லை. தாங்க முடியாத வலி இருந்தால், குடும்ப மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரைப்படி மாத்திரைகள் சாப்பிடலாம். வலியை, இன்னொரு வலியைக்கொண்டு சரிசெய்யலாம். அதுதான் சூடான ஒத்தடம்.
  வயிறு, முதுகு, இடுப்பு ஆகிய இடங்களில் ஒத்தடம் கொடுக்கையில் வலியில் இருந்து விடுபட முடியும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை...

Popular Posts