லேபிள்கள்

சனி, 29 செப்டம்பர், 2018

அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிப்பது எப்படி?

குழந்தைகளை எழுப்புவதில் இருந்து தூங்க வைப்பது வரை ஒவ்வொரு செயலும் பெற்றோருக்குச் சவாலான விஷயம். பெற்றோர்களும் குழந்தைகளாக மாறி, இணையாகப் பேசி விளையாடி, குழந்தைகளை வழிநடத்துவது அவசியம். எவ்வளவுதான் பொறுமையாக சொன்னாலும் சில குழந்தைகள் 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' என்பது போல பிடிவாதமாக இருப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் சமாளிப்பது சவாலின் உச்சமாக இருக்கும். அதிலும் வெளியில் வந்திருக்கும்போது 'இதுதான் வேண்டும்' என அடம்பிடித்து கீழே விழுந்து உருளும் குழந்தைகளைப் பார்க்கலாம். இப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளைப் பற்றியும் சமாளிக்கும் வழிகள் பற்றியும் விளக்குகிறார், மதுரையைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர், ராணி சக்கரவர்த்தி.
''ஒன்று சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். பொதுவாக, குழந்தைகளிடம் அடம்பிடிக்கும் பழக்கம் மூன்றாவது மாதத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது. அம்மா நம்மைத் தூக்கியே வைத்திருக்க வேண்டும் என அழுது அடம் பிடிப்பார்கள். கொஞ்சம் பெரியவர்கள் ஆனதும், சாப்பிடுவது முதல் பொம்மை கேட்பது வரை பட்டியல் நீளும். அடம்பிடித்தல் என்பது மரபணு வழியாகவும், பழக்கத்தாலும் வருகிறது. சமீப காலமாக அடம்பிடிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இத்தகைய குழந்தைகளைச் சமாளிக்க தெரியாத பெற்றோர்களில் பலர், மனநல மருத்துவரிடமும் மனோதத்துவ நிபுணரிடம் செல்கிறார்கள்.

அடம்பிடிக்கும் பழக்கம் எந்த வழியில் வந்தாலும், குடும்பத்தினர் ஒன்றிணைந்து தொடர் முயற்சி செய்தால் சரிசெய்யலாம். குழந்தைகள் எல்லோருமே சூழல் புரியாமல் அடம்பிடிப்பது இல்லை. இவர்கள் ஒரு வகையில் புத்திசாலிக் குழந்தைகள் எனச் சொல்லலாம். தங்கள் மனதில் உள்ள விஷயத்தைச் செய்வதற்கு அவர்கள் எடுத்துள்ள ஆயுதமே அடம்பிடித்தல். டவுன்சிண்ட்ரோம், ஆட்டிசம், டிளே டெவலப்மெண்ட் உள்ள குழந்தைகளிடமும் இந்த அறிகுறிகள் தென்படும்.

ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்ய வலியுறுத்தி அடம்பிடிப்பார்கள். 'உடனே கடைக்கு கூட்டிட்டுப் போக வேண்டும், டிவி போட வேண்டும்' என எதுவாகவும் இருக்கலாம். நினைத்தது நிறைவேறவில்லையென்றால் புரண்டு அழுதல், பொருளைப் போட்டு உடைத்தல் எனச் செய்வார்கள். இத்தகைய செயல்களில் குழந்தைகள் ஈடுபடும்போது, பெற்றோர்களும் சம்மதித்துவிடுவார்கள். அல்லது, அதற்கு மாற்றாக வேறு ஏதாவது செய்கிறேன் என வாக்குறுதி அளித்து சமாளிப்பார்கள். எடுத்துக்காட்டாக, பொம்மை வேண்டும் என அடம் பிடித்தால், உடனே வாங்கித் தரக்கூடாது. நாளை வாங்கித் தருகிறேன் என சமாளிக்கவும் கூடாது. எப்போது முடியும் அல்லது ஏன் முடியாது என்பதைத் தெளிவாக, திட்டவட்டமாகக் கூற வேண்டும். அடம்பிடித்துக் கீழே உருண்டாலும் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் வீட்டில் இருக்கும் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என எல்லோரும் ஒருமித்த கருத்தில் இருக்க வேண்டும். ஒருவர் கண்டிக்கும்போது, மற்றொருவர், சப்போர்ட் செய்யக் கூடாது. இதனால், யாரிடம் கேட்டால் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, நினைக்கும் காரியத்தை சாதிக்க நினைப்பார்கள்.

பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை சில பெற்றோர்கள் அடித்துத் துன்புறுத்துவார்கள். அடித்துவிட்டு பின்னர் கேட்டதை வாங்கித் தருவார்கள். இதுவும் தவறான அணுகுமுறை. அடிப்பதும் தகாத வார்த்தைகளால் திட்டுவதும் பிடிவாதத்துக்குத் தீர்வாகாது. அவற்றை நாளடைவில் பழக்கப்படுத்திக்கொண்டு தொடர்ந்து அடம்பிடிப்பார்கள். இன்னும் சில பெற்றோர், அறைக்குள் போட்டு அடைப்பது, பூச்சாண்டியிடம் விட்டுவிடுவேன். மிஸ்ஸிடம் சொல்லிவிடுவேன் என பயமுறுத்துவார்கள். இதுவும் தவறான அணுகுமுறையே.

சில குழந்தைகள் வீட்டில் நினைத்ததைச் சாதிக்க முடியாது என்பதற்காக, வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் அடம்பிடிப்பார்கள். மற்றவர்கள் நம்மைப் பார்ப்பதை தவிர்க்க, பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்துவிடுவார்கள் எனக் குழந்தைகள் நினைக்கும். இத்தகைய புத்திசாலி குழந்தைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, பொது இடம் எனப் பதறாமல், கோபத்தைக் காட்டாமல் கண்டுகொள்ளாமல் இருக்கும் நடைமுறையை இங்கும் பயன்படுத்த வேண்டும். யாரும் நம்மைக் கண்டுகொள்ளவில்லை என்ற மனநிலைக்கு நாளடைவில் வந்துவிடுவார்கள்.

முக்கியமான விஷயம், இதுபோன்ற நடைமுறைகளைப் பின்பற்றும்போது உடனே இதற்கான பலன் கிடைக்காது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ரிசல்ட் தெரியவரும். முயற்சியை விட்டுவிடாமல் தொடர வேண்டும். முடிந்தவரை இரண்டு அல்லது மூன்று வயதிலேயே குழந்தைகளின் அடம்பிடிக்கும் போக்கை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், பள்ளிக்குப் போக மாட்டேன் என்பதில் ஆரம்பித்து சைக்கிள், பைக் வரை சென்று நிற்பார்கள். தற்போதைய சூழலில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளே பெற்றுக்கொள்கின்றனர். பெற்றோர்களும் வேலைக்குச் செல்வதால், குழந்தைகளின் சின்ன அழுகையையும் தாங்கமுடியாமல் கேட்பதை வாங்கிக் கொடுக்கும் மனநிலைக்குச் சென்றுவிடுகின்றனர். இத்தகைய குழந்தைகள், எதிர்காலத்தில் சின்ன ஏமாற்றத்தையும் தாங்கிக்கொள்ளா இயலாமல், சமூகத்தை எதிர்கொள்வதில் பல சிக்கல்களைச் சந்திக்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். சிறு வயதிலேயே குழந்தைகளின் பிடிவாதத்தைக் கட்டுப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்'' என்கிறார் டாக்டர் ராணி சக்கரவர்த்தி



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

நல்ல பாம்பு: பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் காணப்படக்கூடிய 338 பாம்பினங்களில் 71 (22 சதவீதம்) பாம்புகள் தான் நஞ்சுடையவையாக அறியப் பட்டிருக்கின்றன. இவற்றில் 4 (...

Popular Posts