லேபிள்கள்

புதன், 19 செப்டம்பர், 2018

கழிப்பறையின் ஆரோக்கிய விதிகள்.!

உணவு, உறக்கம், ஓய்வு மூன்றும் மனிதனுக்கு அடிப்படை. அதைப்போலவே உண்ட உணவு நல்லவிதமாக செரிமானமாகி, குறித்த நேரத்தில் மலமாக வெளியேறவேண்டியதும் மிக மிக அவசியம். செரிமானத்தில் சிக்கல் ஏற்படும்போது, உடலின் ஒட்டுமொத்த செயல்பாடும் முடங்கிப்போகிறது. உடலைவிட்டு வெளியேறும் மலம், நமது மலச்சிக்கல் முதல் மனச்சிக்கல் வரை ஆரோக்கியம் காட்டும் கண்ணாடியாக இருக்கிறது. உடல்நிலை சொல்லும் ஸ்டூல் சார்ட் இங்கே…
டைப் 1: மலம் கழிக்க மிகவும் சிரமமாக இருப்பது. தனித்தனியாக சிறு சிறு உருண்டைகள்போல வெளிவருவது. இந்த நிலை இருந்தால், மோசமான மலச்சிக்கல்.
தீர்வு: உடனடியாக, மருத்துவரை அணுக வேண்டும். மோசமான மலச்சிக்கல் ஏற்படுவதற்கு, நாட்பட்ட நோய்கள், புற்றுநோய், செரிமான மண்டல நோய்கள், சர்க்கரைநோய், கடுமையான மனநல பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். மலச்சிக்கலைச் சீராக்க, தேவையான மலமிளக்கிகள் (Laxatives) எடுத்துக்கொண்டு, உணவுமுறை மாற்றம், வாழ்வியல் மாற்றம் போன்றவற்றுடன் அதற்கு மூல காரணமான நோயைக் கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
டைப் 2: மலம் கழிப்பதில் சிரமமும் மலம் வறட்சியாக இருப்பதும் பிரச்னைதான். மலம் கழிக்கும்போது எரிச்சலான உணர்வு இருப்பது, இந்த நிலை பொதுவான மலச்சிக்கல் பிரச்னை.
தீர்வு: இதற்கு, செரிமான மண்டலக் கோளாறுகள், மனஅழுத்தம் போன்ற காரணங்கள் இருக்கக்கூடும். மருத்துவரை அணுகி மலமிளக்கிகள் எடுத்துக்கொள்ளலாம். ஆரோக்கியமான உணவுப் பழக்கம், வாழ்வியல் முறை மூலம் தீர்வு காணலாம்.
டைப் 3: மலம் கழிக்கும்போது லேசான எரிச்சல் இருந்து தொல்லை கொடுக்கும். வறட்சியாக, விரிசல்களோடு மலம் வெளியேறும். இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படலாம்.
தீர்வு: ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமே இதற்கு முக்கியமான காரணமாக இருக்கக்கூடும் எனவே, போதுமான அளவு நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது.
டைப் 4: பாம்புபோல நீளமாக மலம் வெளியேறும். மலம் வெளிவரும்போது எந்த எரிச்சல் உணர்வும் இருக்காது. இதுதான் இயல்பான நிலை.
தீர்வு: இது ஆரோக்கியமான நிலை. உங்களின் செரிமானம் சீராக இருக்கிறது என்று அர்த்தம். தினசரி சமச்சீரான உணவை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சிகளை செய்வது, போதுமான ஓய்வு எடுப்பதன் மூலம் ஆரோக்கியமான செரிமானத்தை தக்கவைத்துக்கொள்ளலாம்.
டைப் 5: எளிதாக மலம் வெளியேறும். ஆனால், தனித்தனியாக துண்டுகளாக வெளியேறும்.
தீர்வு: இது ஆபத்து இல்லாத நிலை என்றாலும், உணவில் நார்ச்சத்து குறைவாக இருப்பதே மலம் இப்படி வெளியேறக் காரணம். எனவே, நார்ச்சத்து மிகுந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரைகள், பழங்கள், காய்கறிகளில் நார்ச்சத்துக்கள் உள்ளன. அவற்றை நாள்தோறும் சாப்பிடலாம்.
டைப் 6: திரவ நிலை அதிகமாகவும் கொஞ்சம் திடமாகவும் மலம் வெளியேறும். இது வயிற்றுப்போக்கின் ஆரம்பநிலையாக இருக்கலாம்.
தீர்வு: ஆரோக்கியமற்ற உணவு, சுகாதாரமற்ற நீர் போன்றவையே வயிற்றுப்போக்குக்கு முக்கியக் காரணம். உடனே மருத்துவரை அணுக வேண்டும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக்கொண்டு, உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெற குளூக்கோஸ், சலைன் நீர் ஏற்றிக்கொள்ள வேண்டும்.
டைப் 7: திரவ நிலையில் மலம் வெளியேறும். அடிக்கடி வயிறு வலித்து, இதேபோல தொடர்ந்து போகும். இது தீவிர வயிற்றுப்போக்கு பிரச்னை.
தீர்வு: சுகாதாரமற்ற உணவுகளையும் நீரையும் தொடர்ந்து பயன்படுத்தும்போது, இப்படி வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும், தீவிரமான செரிமான மண்டலப் பிரச்னை இருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படும். தாமதிக்காமல் வயிறு, இரைப்பை நிபுணர் ஒருவரை அணுக வேண்டும்.
நன்றி:  இளங்கோ கிருஷ்ணன் – விகடன் –--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts