லேபிள்கள்

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

கழிவுகளால் நேரும் அழிவுகள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
(ஆசிரியர்: உண்மை உதயம்)
உலகு எதிர் கொள்ளும் பெரும் பிரச்சினைகளில் கழிவுகளும் ஒன்றாகும். முன்பெல்லாம் கழிவுகள் பெரும்பாலும் உக்கி மண்ணோடு மண்ணாகிவிடும் பொருட்களாகவே இருந்தன. இப்போது எல்லாம் பிளாஸ்டிக் மயமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் சில பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கப்கள், பக்கட் வகைகள்… போன்ற எண்ணற்ற கழிவுகளை வெளிவிடுகின்றான். இவை ஆண்டாண்டு காலம் சென்றாலும் உக்கி மண்ணோடு மண்ணாகிப் போவதில்லை. மாறாக அவை நச்சாக மாற்றம் பெறுகின்றன.
எமது மண் வளத்தைக் கெடுக்கும் பொருட்கள் மாத்திரம் நம் மண்ணோடு தேங்கிவிடுகின்றன. இது மனித இனத்திற்குப் பேரழிவாக மாறி வருகின்றது.
முன்பு வாழை இலையில் சோறு போட்டு சாப்பிடுவர். அது சோற்றுக்கும் நல்ல மணத்தைத் தரும். உண்டு முடிந்த பின்னர் அந்தக் கழிவு மண்ணுக்கு வளமாகவே மாறிவிடும். ஆனால், இன்று அந்தளவுக்கு வாழை இலைகளைப் பெற முடியாதுள்ளது. பரவாயில்லை போயிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடாமல் வாழை இலையை பொலித்தீனில் செய்து அதில் நமது மக்கள் சாப்பிட்டுவிட்டு வாழை இலையில் சாப்பிட்ட பெருமிதத்தையும் பேரானந்தத்தையும் அடைகின்றனர்.
ஆனால், அந்தப் பொலித்தீனின் பாதிப்பைத்தான் நாம் வாழும் பூமி சுமக்க நேரிடுகின்றது. இது கொடுமைதானே?
நாம் வாழும் மண், சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர் என்பவற்றையும் எமது ஜீவாதாரமாக இருக்கும் விவசாயத்தையும் சேர்த்து இந்தக் கழிவுகள் அழித்து வருகின்றன.
வளர்ந்த நாடுகள் இந்தக் கழிவுகளை நல்ல முறையில் கையாண்டு அதன் மூலம் பயனடையக் கற்றுக் கொண்டுள்ளன. மரக்கறி இலை-குலைக் கழிவுகளை அகற்ற கால்நடைகளைப் பயன்படுத்தி அதன் மூலம் இயற்கைப் பசளை உற்பத்தியைச் செய்கின்றன.
பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகளை மீள் பாவனைக்காக மீள் உற்பத்தி செய்கின்றன. பின்தங்கிய நாடுகள்தான் தொடர்ந்து தமது நாட்டைக் குப்பையாக்கிக் கொண்டிருக்கின்றன. நாடும் மக்களும் ஒன்றிணையாமல் குப்பைப் பிரச்சினைகளுக்கு 'குட் பை' சொல்ல முடியாது.
குப்பைகளையும் கழிவுகளையும் நாட்டு நலன்களுக்குப் பயன்படுத்துவதற்கு முன்னர். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதிப்பில்லாத முறையில் கையாள்வதற்குக் கற்றுக் கொள்வது அவசியமாகின்றது என்பதை சமீபத்திய வெல்லம்பிடிய மீத்தொட்டுமுள்ள நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகின்றது.
ஒவ்வொரு நாளும் கழிவுகளால் பலதரப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்து வரும் உலகை ஒரு போர் மேகம் சூழ்ந்து கொண்டிருக்கின்றது. வாழ்வதற்கான வசதியைக் காண்பதை விட அழிவதற்கான வழிகளைத்தான் மனிதன் தினம் தினம் தொழில்நுட்ப வளர்ச்சி வேகம் என்ற போர்வையில் தேடிக் கொண்டிருக்கின்றான்.
வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் நீண்ட நெடிய நாட்களாக சொல்போர் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது இரு நாடுகளும் யுத்த மேகத்தை அண்மித்துவிட்டன. இரண்டுமே அணுவாயுத வல்லமை கொண்ட நாடுகள். போர் மூண்டால் அது உலகுக்கே பெரிய இழப்பை ஏற்படுத்தும். அது மட்டுமன்றி அமெரிக்காவின் நேச நாடுகள் ஒரு அணியாகவும் எதிரிகளான வடகொரியா, சீனா, ரஷ்யா மறு அணியாகவும் மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகைத் தள்ளிவிடுமோ என்ற அச்சமும் நிகழ்ந்துள்ளது.
மூன்றாம் உலகப் போர் நடந்தால் உலகில் மிகப்பெரும் அழிவுகள் நிகழும். எல்லா நாடுகளும் அடுத்த நாடுகளை அச்சுறுத்துவதற்காக தாராளமாகவே ஆயுதங்களைத் தயார் செய்து வைத்துள்ளன.
எதிரியை முந்திவிட வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக ஒரு நாடு மற்றைய நாட்டை அழிக்கத் துடிக்கலாம். இதனால் பாரிய அழிவுகள் நிகழலாம். உலகை மூன்றாம் உலகப் போருக்குள் தள்ளி அழித்துவிடுவதற்காக இலுமுனாட்டிகள் திட்டமிட்டு இயங்கிவருகின்றனர். மூன்றாம் உலகப் போர் மூலம் உலக சனத்தொகையை பெருமளவில் குறைத்து உலகை ஒட்டுமொத்தமாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவர்களது திட்டம்தான். ஆனால், எது எப்படி நடக்கும் என்ன விளைவு ஏற்படும் என்பதை நன்கறிந்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனேயாவான்!
எம்மை நோக்கி புனித ரமழான் வந்து கொண்டிருக்கின்றது. எமது மறுமையை வளப்படுத்தும் மாதமாக இம்மாதம் திகழ்கின்றது. எமது கழிவுகளாகிய பாவங்களை அழித்தொழித்து நன்மைகளை உற்பத்தி செய்யும் ஓர் தலைசிறந்த மாதமாக இம்மாதம் உள்ளது. அப்படிப்பட்ட பல சிறப்புக்களைக் கொண்ட இந்த ரமழான் மாதத்தை உரிய முறையில் நன்கு திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்வது எமது கட்டாயக் கடமையாகும்.
மாறும் உலக அரசியல் முஸ்லிம் உலகுக்கு நலனாக அமைய அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். ரமழானை சர்ச்சைக்குரிய மாதமாக ஆக்காமல் அமல்களுக்குரிய மாதமாக ஆக்கி நபிவழியில் எமது அமல்களைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
எமது பாவக் கழிவுகளை தவ்பா எனும் இயந்திரத்தினுள் போடுவதன் மூலம் அவற்றை முற்றாக ஒழித்து நல்லமல்களை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த வழிமுறைகளில் அமைத்து பாவங்களையே நன்மைகளாக மாற்றிக் கொள்ள முயல வேண்டும்.
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றி ஈமானிய உரத்தையும் வரத்தையும் பெற முயற்சிக்க வேண்டும். இதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ் அந்தப் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சூரிய ஒளியில் சூடேற்றப்பட்ட தண்ணீர் பற்றி தெரியுமா? ஆயுர்வேத முறையில் அதன் பயன்கள்.

ஆயுர்வேத அறிவியல் என்பது பல நூற்றாண்டு வரலாற்றை கொண்டது. ஆயுர்வேத வாழ்க்கை முறையை கடைப் பிடிப்பதால் நம் உடல் நலனை சீராக வைத்துக் கொள்ள ...

Popular Posts