லேபிள்கள்

புதன், 27 டிசம்பர், 2017

வெள்ளிக் கிழமை சிறந்த நாள்

வெள்ளிக் கிழமை சிறந்த நாள்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்-
அல்லாஹ் மாதங்களை பன்னிரெண்டாக அமைத்து அதில் சில மாதங்களை புனித மாதம் என்று கூறுகிறான். அதை போல வாரத்தில் ஏழு நாட்கள், அந்த நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும் என்று இஸ்லாம் உறுதிப் படுத்கிறது. பொதுவாக எல்லா நாட்களும் இறைவனால் படைக்கப்பட்ட நாட்களாகும்.என்றாலும் சில அமல்கள் மூலம் குறிப்பிட்ட அந்த நாட்கள் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் வெள்ளிக் கிழமைநாளில் ஜும்ஆ என்ற அமலை முன் நிறுத்தி பல சிறப்புகளை (நன்மைகளை) வழங்கி அந்த நாள் நாட்களில் சிறப்பான நாளாக இஸ்லாம் அறிவித்துள்ளது. அல்ஹம்து லில்லாஹ்!
பின்வரக் கூடிய ஹதீஸ்களை நன்றாக அவதானியுங்கள்.

சிறந்த நாள்
" நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம் 1548)

மேலும் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாம்தாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். எனினும், (நமக்கு முன்வந்த) ஒவ்வொரு சமுதாயத்தாரும் (யூத மற்றும் கிறித்தவர்) நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அல்லாஹ் நம்மீது விதியாக்கியுள்ள இந்த (வெள்ளிக்கிழமை) நாளை அல்லாஹ் நமக்காக(த் தேர்ந்தெடுத்து) அறிவித்தான். (வார வழிபாட்டு நாள் தொடர்பாக) மக்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (வெள்ளிக்கிழமை நமது வழிபாட்டு நாள் எனில்) அடுத்த நாள் (சனிக்கிழமை) யூதர்களின் (வழிபாட்டு) நாளாகும். அதற்கடுத்த நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறித்தவர்களின் (வழிபாட்டு) நாளாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம் 1549)

எனவே ஆதம் நபியை முக்கியத்தும் படுத்தியும், அமல்கள் ரீதியாக வெள்ளிக்கிழமை சிறப்பான நாளாகவும் நபியவர்கள் பிரகடனப் படுத்தியுள்ளார்கள்.
வியாபாரம் செய்ய தடையா?
வெள்ளிக்கிழமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக ஜும்ஆ நடக்கும் நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது என்ற தடையை அல்லாஹ் குா்ஆன் மூலம் எச்சரிக்கிறான். அதை பின் வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் அறியலாம்.

ஈமான் கொண்டவர்களே! ஜும்ஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். 62:9.
பின்னர், (ஜும்ஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். 62:10.
அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; "அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. 62:11.
ஜும்ஆ நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது அவைகளை நிறுத்தி விட்டு நேரத்தோடு பள்ளிக்கு வர வேண்டும் என்பதை இந்த வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதிகமான மக்கள் பின் வரும் கேள்வியை கேட்கிறார்கள். அதாவது ஆண்கள் பள்ளிக்கு (ஜும்ஆவிற்கு) செல்வதற்காக வியாபாரத்தை விடும் படி இறைவன் சொல்கிறான் அப்படியானால் பெண்கள் அந்த நேரத்தில் வியாபாரம் செய்யலாமா? அல்லது கடையை பூட்டாமல், அல்லது தொழில் சாலையை பூட்டாமல் அந்த நேரத்தில் அந்நியர்கள் மூலம் வியாபாரம் செய்யலாமா? என்ற கேள்வி பரவலாக கேட்பதை காணலாம்.
நேரடியான தடையை இதற்கு நாம் காணா விட்டாலும், வியாபாரத்தை விடுங்கள் என்ற வாசகம் வியாபாரம் செய்யக் கூடாது என்ற விளக்கத்தை தருகிறது. சனிக்கிழமை மீன் பிடிக்க கூடாது என்ற இறைவனின் சட்டத்தை மீறி தந்திரமாக கையாண்டதினால் அவர்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும், மாற்றப் பட்டார்கள். அவர்களை இறைவன் கடுமையாக தண்டித்தான் என்பதை குர்ஆனில் காண்கிறோம் என்றால் பொதுவாக அந்த ஜும்ஆ நேரத்தில் மட்டும் அனைவரும் வியாபாரத்தை விடுவது தான் மிகவும் பொருத்தமாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
சிலர் வெள்ளிக் கிழமையின் முக்கியத்துவத்தால் அன்றைய நாள் முழுவதும் வியாபாரத்துக்கு விடுமுறை அளிக்கிறார்கள், இன்னும் சிலர் ஜும்ஆ செல்வதற்காக அரை நாள் விடுமுறை எடுத்து, ஜும்ஆவிற்குப் பின் தன் வியாபாரத்தை ஆரம்பிக்கிறார்கள், இன்னும் சிலர் ஜும்ஆ-விற்கு முன் நேரத்தோடு வியாபாரத்தை விட்டு விடுகிறார்கள். அல்லாஹ் இவர்களுக்கு அருள்பாளிப்பானாக!
எனவே ஜும்ஆ நேரத்தை மைய்யப் படுத்தி சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை கொடுக்கலாம். இது நமது ஈமானுக்கும் பாதுகாப்பும் , நமது செல்வத்திற்கும் பாதுகாப்பாகும்.
இதன் மூலம் அந்நியர்கள் நமது மார்க்கத்தை விளங்கிக் கொள்வதற்கும், இஸ்லாத்தின் மீது உறுதியை அறிந்து கொள்வதற்கும், இது ஒரு அழகான வழி முறையாகும்.
ஜும்ஆ தொழுதால்
" நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் (வெள்ளிக்கிழமை அன்று) குளித்துவிட்டு ஜுமுஆத் தொழுகைக்குச் சென்று, அவரது விதியில் எழுதப்பட்டிருந்த அளவு (கூடுதலாகத்) தொழுதார்; பிறகு இமாம் தமது சொற்பொழிவை (குத்பா) முடிக்கும்வரை வாய்மூடி மௌனமாக உரையைக் கேட்டுவிட்டு, அவருடன் சேர்ந்து தொழுகையை நிறைவேற்றுகிறார். இத்தகையவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரையும் மேற்கொண்டு மூன்று நாட்கள்வரையும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம்1556)

ஜும்ஆ தொழுகைக்காக குளித்து விட்டு, தலைக்கு எண்ணை பூசி, நறுமணங்களை பூசிக்கொண்டு, நேரத்தோடு பள்ளிக்குச் சென்றால் சுமார் பத்து நாட்களின் சிறு பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை அவதானியுங்கள்.
மலக்குமார்கள் பள்ளியில்
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடைபெறும்) பள்ளி வாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் நின்று கொண்டு, முதன்முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால், வானவர்கள் அந்த (பெயர் பதிவு) ஏடுகளைச் சுருட்டிவைத்துவிட்டு வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகின்றனர். (ஜுமுஆவுக்காக) நேரத்தோடு வருபவரது நிலையானது,ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஓர் ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும், அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றவர்கள் ஆவர்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் 1554 )

மேலும் ". அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெருந்துடக்கிற்காகக் குளிப்பதைப் போன்று வெள்ளியன்று குளித்துவிட்டு (நேரத்தோடு பள்ளிவாசலுக்கு)ச் செல்பவர், ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். (அதற்கடுத்த) இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைக் குர்பானி செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (தமது அறையிலிருந்து) வெளியேறி (பள்ளிவாசலுக்குள் வந்து)விட்டால், (பெயர்களைப் பதிவு செய்யும்) வானவர்களும் இமாமின் சொற்பொழிவைச் செவியுற (உள்ளே) வந்துவிடுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் 1540 )

எனவே நாம் நேரத்தோடு இமாம் மிம்பருக்கு ஏறுவதற்கு முன் பள்ளிக்குள் சென்று விட்டால் மேற்ச் சுட்டிக்காட்டிய சிறப்புகளையும், நன்மைகளையும் இலகுவாக பெற்றுக் கொள்ளமுடியும்.
து ஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்!
வெள்ளிக் கிழமை நாள் ஒரு நேரம் இருக்கிறது அந்த நேரத்தில் ஓர் அடியான் தொழுது விட்டு அல்லாஹ்விடம் து ஆ கேட்டால், அந்த து ஆவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதாக நபியவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்.

"அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் "அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அது மிகக் குறைந்த நேரம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. ( முஸ்லிம் 1543 )

மேற்ச் சென்ற ஹதீஸில் தொழுகையில் ஈடுப் பட்டு, பிறகு துஆ கேட்டால் என்ற வாசகத்தின் மூலம் ஜும்ஆ தொழுகையை முடித்து விட்டு துஆ கேட்க வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் மிக அறிந்தவன். மேலும் வெள்ளிக் கிழமை நாளில் ஒரு நேரம் என்ற வாசகமும், தொழுகையில் ஈடு பட்டு விட்டு து ஆ கேட்க வேண்டும் என்ற வாசகமும் அது வெள்ளிக் கிழமை நாளின் சுப்ஹூ தொழுகை, ஜும்ஆ தொழுகை, அஸர் தொழுகை, ஆகிய தொழுகையின் பின்னால் ஏதோ ஒரு நேரமாகவும் இருக்கலாம் என்பதையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது அல்லாஹ் மிக அறிந்தவன்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பெண்கள் சமையலறையில் கேஸ் அடுப்பு பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

கேஸ் அடுப்பை பயன் படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமானது. கேஸ் அடுப்பை கையாளும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற...

Popular Posts