லேபிள்கள்

செவ்வாய், 19 டிசம்பர், 2017

எக்ஸாம் டிப்ஸ்!ஈஸியா பாஸாகலாம்!

எக்ஸாம் டிப்ஸ்!ஈஸியா பாஸாகலாம்!

ப்ளஸ் டூ, எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் தொடங்கி நடந்துவருகின்றன. ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெறுவதால், ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே நன்கு படிக்க இடைவெளியும் உள்ளது. பொதுவாக, ப்ளஸ் டூ, எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதும் மாணவர்களின் வீடுகள் பரபரப்பாக இருக்கும். வீட்டில் டி.வி இணைப்பைத் துண்டித்து, தூங்கும் நேரத்தைக் குறைத்து, ஒருநாளைக்கு 16 - 18 மணி நேரம் படிக்கச் சொல்வார்கள். இதனுடன் `ஸ்பெஷல் கிளாஸ்', கோச்சிங் என்றெல்லாம் சேர்த்து, தேர்வு எழுதும் மாணவருக்கு எக்ஸாம் ஃபீவர் வர வைத்துவிடுவார்கள். மாணவர்களைக் காட்டிலும், அவர்களின் பெற்றோர்களுக்கு இந்தப் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.அந்தப் பதற்றத்தையும் பயத்தையும் போக்க ஆலோசனை தருகிறார் பொதுநல மருத்துவர் கூ.சுப்ரஜா...

உடல் ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் பொதுவானது. நாம் ஆரோக்கியமுடன் இருந்தால்தான், மனம் தைரியப்படும். ப்ளஸ் டூ மற்றும் 10-ம் வகுப்பு முடிவுகள், எதிர்கால வாழ்க்கையை முடிவுசெய்யும் காரணிகளாக இருக்கின்றன. ஒரு மாணவருக்கு இருக்கும் உடல்நிலையும் மனநிலையும் மற்ற மாணவர்களுக்கு இருப்பது இல்லை. சின்ன பயம்கூட பெரிய அளவிலான குழப்பத்தையும், அதனால் பாதிப்புக்களையும் ஏற்படுத்திவிடும். `எல்லாத் தடைகளும் மனத்தடைகளே' என விட்டுவிட முடியாது. அதனுள், உடல் தடைகளும் மறைந்திருக்கலாம். நலம் வாழ பல வழிகள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொண்டாலே போதும், வெற்றி நமக்குத்தான்.

கல்வி பயில்வதற்கு மட்டும் அல்ல, படிப்பதற்குக்கூட உகந்த நேரம், கற்கும் சூழல் இரண்டையும் ஒழுங்குபடுத்துவதும், தேர்ந்தெடுப்பதும் அவசியம். முக்கியமாக, சில செயல்களை அவசியம் செய்ய வேண்டும். பல செயல்களைத் தவிர்ப்பதே மேல். அவற்றைச் சரிசெய்தாலே போதும், வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்.

மாணவர்கள் செய்யவேண்டியவை!
நம் உடல் பற்றிய தெளிவு இருப்பது அவசியம். உடலினை உறுதிசெய்ய வேண்டும். அது எப்போதும் கைகொடுக்கும். நிதானம் மற்றும் சந்தோஷமான தருணங்களில் படிப்பது என்பது, மனதுக்கு மட்டும் அல்ல, உடலுக்கும் சுகமானது.

தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் இன்று படித்தது போதும் என்ற மனநிலைக்கு நாமே வந்துவிடுவோம். ஒரே நாளில் அதிகம் படித்தால், தேவை இல்லாத டென்ஷன் ஏற்படும்.

நம் சுகாதாரத்தில் குடும்பத்தின் ஆரோக்கியமும் இருக்கிறது. அதனால், தேர்வுக் காலங்களில் ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொள்வது அவசியம்.
  நாம் வழக்கம்போல் சாப்பிடும் உணவையே சாப்பிட வேண்டும். எளிதில் செரிமானம் ஆகும் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எலுமிச்சைச் சாறு, மோர், இளநீர், போன்ற எனர்ஜியான பானங்களையும் அருந்தலாம். புத்துணர்வு தரும் உணவை எடுத்துக்கொள்வதும் அவசியம்.

தேர்வு நேரங்களில் நல்ல தூக்கம் வேண்டும். குறைந்தது 7 - 8 மணி நேரமாவது தூங்க வேண்டும்.

சின்னச்சின்னப் பிரச்னைகள் வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக அர்த்தம். எனவே, நோய் எதிர்ப்பு சக்திகொண்ட உணவுகளை உண்பதும் அவசியம்.

மாணவர்கள் செய்யக்கூடாதவை!
நெருக்கடியான நேரத்தில் படிக்க வேண்டாம். படிக்கும் நேரத்தில் நெருக்கடி வேண்டாம். மனநிலையைத் தாண்டி நாம் எது செய்தாலும், அது தோல்வியைத்தான் தரும்.

பொதுவாக, நமது மூளையில் சில விஷயங்கள் பதிவதற்கு சில விநாடிகளாவது ஆகும். அதற்குக்கூட நேரம் கொடுக்காமல் படித்துக்கொண்டே இருந்தால், நஷ்டம் நமக்குத்தான். எல்லா பாடங்களையும் படிக்க வேண்டும்தான். ஆனால், அதற்காக எல்லாவற்றையும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் படிக்க முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

தேர்வுக் காலங்களில் படிக்கும்போது பொதுவாக காய்ச்சல், சளி, இருமல், தலைவலி போன்றவையே பெரும்பாலும் ஏற்படும். இதற்கு, மன அழுத்தம்கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், மனஅழுத்தத்துக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தியானம், யோகா உள்ளிட்ட மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகள் செய்யலாம்.

புதியவகை உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, எண்ணெயில் பொரித்த உணவு, குளிர்பானம் மற்றும் சாக்லெட் உணவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.

மன அழுத்தத்துக்கு ஆளாகி தூங்காமல் இருந்தால், படித்ததும் மறந்துபோகும். பெற்றோர் உடன் இருந்து, உதவ வேண்டும்; ஊக்கப்படுத்த வேண்டும்.

அரை மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் அமரக் கூடாது.
  இடைவேளைவிட்டு படிப்பது, எழுதுவது நல்லது. படிப்புக்கு இடையே சின்னதாக உடற்பயிற்சி செய்யலாம்.

தேர்வு அறைக்கு அவசர அவசரமாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுவே, ஒருவிதப் பதற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

`ரிலாக்ஸ்' எனச் சொல்லி, அதிக நேரம் விளையாடுவது கூடாது. தேர்வு நேரங்களில் சினிமாவுக்குப் போவதோ, அதிக நேரம் டி.வி பார்ப்பதோ கூடாது.

பெற்றோர்கள் கவனித்துச் செயல்பட வேண்டியவை!
மறதி என்பது ஒரு சாதாரணக் குறை. அதில் இருந்து சுலபமாக விடுபட முடியும். அதைப் பெரிதுபடுத்தி எதுவும் பேச வேண்டாம். பிள்ளைகளைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதே சிறந்தது. மாணவர்களின் மனநலம் குறித்துப் பகிர்ந்துகொள்கிறார் குழந்தைகள் மனநல நிபுணர் பி.பி.கண்ணன்.

மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?
நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை நமக்குள் எப்போதும் வேண்டும். அதுதான் வெற்றிக்கான முதல் படி. நாம் அன்றாடம் படித்த பாடத்தைத்தான் தேர்வுக்கு முன்பாகப் படிப்போம். அதனை ஞாபகம் மட்டுமே படுத்த வேண்டும். அதுவும், வேகமாகப் படிக்க வேண்டும். இதனால், பதற்றமும் பயமும் நம்மில் ஏற்பட வாய்ப்பே இல்லை. எந்தக் கேள்விக்கும் நம்மிடம் பதில் இருக்கிறது. நாம் படித்த கேள்வி-பதில்கள்தான் வரும் என்ற நம்பிக்கை மட்டும் போதும்.

படிக்கும்போதே திட்டமிட்டுப் படிக்க வேண்டும். எதை, எப்போது படிக்க வேண்டும் என்பது மட்டும் இல்லாமல், குறிப்பிட்ட ஒரு பதிலில் எத்தனை கேள்விகள் அடங்கி இருக்கின்றன என்பதையும் திட்டமிட்டு யூகித்துக்கொள்ள வேண்டும்.

மாதிரி வினாத்தாள்களை அடிக்கடி பார்க்க வேண்டும். அதன்படி சுயபரிசோதனை செய்யும் விதமாக, நமக்கு நாமே தேர்வு எழுதிப் பரிசோதித்துக்கொள்ளலாம். அப்போதுதான், தேர்வு எழுதுவதை இன்னும் எளிமைப்படுத்த முடியும்.

நம்மிடையே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமை மற்றும் சக்தி இருக்கும். ஒருவருக்கு அழகாக எழுதும் திறன் இருக்கும். மற்றவருக்கு ஓவியம் நன்றாக வரையத் தெரிந்திருக்கும். சிலருக்குப் பதில் எழுதும் விதம் நன்றாக வரும். இந்தக் கலைகளை அப்படியே இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதில், மதிப்பெண் குறைபாடு பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒவ்வொருவருக்கும் உள்வாங்கக்கூடிய நேரம், அளவு மாறுபாடும். அதனால், தேர்வு எழுதப்போகும் பதில் மட்டுமே, நமது நோக்கமாக இருக்க வேண்டும். தன்னைப் பற்றி உயர்வான உணர்வு இருக்க வேண்டும். மனதில் எழும் உணர்வுதான் நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

எந்தவிதமான கேள்வி-பதிலைப் படித்தாலும், உடனடியாக எழுதிப்பார்த்துவிட வேண்டும். அப்போதுதான், நாம் படித்தது முழுவதுமாக மனதில் பதியும்.

படிப்பு தொடர்பாகச் சில நுணுக்கங்களை நாம் கற்றுக்கொள்ளத் தயங்கக் கூடாது. கற்றுக்கொள்ளும் விஷயத்தில் வெட்கம், கூச்சம் அறவே கூடாது. தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை எழவே கூடாது.
மாணவர்கள் என்னவெல்லாம் செய்யக் கூடாது?
நம்மால் முடியாது என்ற உணர்வை ஒருபோதும் உருவாக்கிக்கொள்ளக் கூடாது. அந்த உணர்வுதான் பயத்துக்கான ஆரம்பம். தோல்விக்கான முதல் படி.

தேர்வுக்குச் சில மணி நேரம் முன்பாக நாம் எதையுமே படிக்கக் கூடாது. எதையுமே ஏனோ தானோ எனப் படிக்கக் கூடாது. படிக்கும்போது நாம், வேறு ஒரு சிந்தனையில் இருப்பது நிச்சயம் கூடாது.
படிக்கும்போதோ தேர்வு எழுதும்போதோ எதிர்காலப் படிப்பு மற்றும் வேலை பற்றி சிந்திக்கவே கூடாது. மற்றவர்களை நம்முடன் ஒப்பிட்டுப் பார்க்கவே கூடாது.

பெற்றோர்கள் செய்யவேண்டியவை; செய்யக் கூடாதவை
ஒவ்வொரு பெற்றோருக்குமே தங்களின் குழந்தை பொக்கிஷம்தான். இந்த நினைப்பு மட்டும் இருந்தால் போதும்.

நமது குழந்தைகளிடம் உள்ள திறமையைக் கண்டுபிடிக்க வேண்டும். நமது குழந்தைகளிடம் பன்முகத்திறமை இருப்பதை முதலில் நாம் நம்ப வேண்டும். தொடர்ந்து, அதை ஊக்கப்படுத்தும்விதமாக நாம் நடந்துகொள்ள வேண்டும்.
குழந்தைகள் செய்யும் சிறிய செயல்களையும் நாம் உற்சாகப்படுத்திப் பாராட்ட வேண்டும். உற்சாகப்படுத்துகிறோம் என நமது கருத்துக்களைக் குழந்தைகள் மனதில் திணிப்பதும் தவறுதான்.

மதிப்பெண் பெறுவது என்பது நீண்டகாலத் திட்டம். இதில் மாணவர்களோடு சேர்ந்து பெற்றோர்களும் திட்டமிடலாம். குழந்தைகளின் திறன் அறிந்து அதற்கு தகுந்தாற்போல வெற்றிக்கான மதிப்பெண் நோக்கியே நாம் திட்டமிடுவது அவசியம். அவர்களுக்கு உதவி தேவைப்படும் இடங்களில் நாம் உதவலாம்.

நான் இவ்வளவு செலவு செய்திருக்கிறேன் என்று, சொல்லி காண்பிக்கக் கூடாது. பிறர் முன் தவறுகளை சுட்டிக்காட்டுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
வாழ்க்கை என்பது, மதிப்பெண்களில் இல்லை என்பதை, மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். நாமும் அதை அர்த்தத்துடன் புரிந்துகொண்டால், வாழ்க்கை இன்னும் இனிமையாக இருக்கும்.
  தடைகளைத் தாண்டும் அனைத்துப் படிகளுக்கும் வழி சொல்லியாயிற்று; வெற்றிக்கான வாசல் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளன; இனி ஜெயிப்பதும் முன்னேறுவதும் உங்கள் கையில்! கனவு மெய்ப்படட்டும்!
http://pettagum.blogspot.com/2016/03/blog-post_24.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சமையல் எண்ணெய்களுக்கு எக்ஸ்பயரி தேதி உண்டா?"

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் சுந்தரம் என்ற வாசகர் , " நாம் பயன்படு...

Popular Posts