லேபிள்கள்

சனி, 23 டிசம்பர், 2017

யார் ஏமாளி?

யார் ஏமாளி?

சபிதா காதர்.
இன்றைக்கு தொலைகாட்சியைத் திறந்தால் நாம் காண விரும்பும் நிகழ்ச்சிகளை விட அதிகம் ஆக்கிரமித்திருப்பவை விளம்பரங்கள் மட்டுமே.
சினிமா நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்கள், விளம்பர மாடல்கள் என்று அனைவரும் இந்த தொலைக்காட்சி வாயிலாக "இதை வாங்குங்க" "இந்த கடையில் வாங்குங்க" "இதுக்கு இதை இலவசமாக வாங்குங்க" "இவ்வளவு விலை குறைப்பு செய்து தருகிறோம்" "எங்களை போல இந்த உலகத்திலும் கிடையாது" என்று டிசைன் டிசைனாக வலை விரிக்கிறார்கள். காண்பவரும் அப்படியே மதி மயங்கிவிடுவதும் மனித இயல்பு.


உண்மையிலேயே ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவருடைய ஆசையை முதலில் தூண்டி விட வேண்டும். அதைத்தான் இன்றைய விளம்பரங்கள் பிரமாண்டம் என்றும் தள்ளுபடி என்றும் தூண்டில் போடுகிறார்கள்.அவர்களின் நிலையை சொல்லியும் குற்றமில்லை. வீட்டில் உட்கார்ந்த படியே இணையத்தில் அனைவரும் பொருட்களை வாங்கிவிட்டால் எதைச்சொல்லி அவர்களை கடையை நோக்கி இழுப்பது என்பதுதானே அவர்களது கவலை.
கோடிகள் பல கொடுத்து அழைத்து வருகிற சினிமா நட்சத்திரங்களுக்கான செலவும் நம் தலையில் தான் விழுகிறது என்று தெரியாத முட்டாள்கள் யாரும் இங்கே இல்லை. சிகப்பழகு தன்னம்பிக்கையைத் தருகிறது என்கிற 25 ஆண்டு கால ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்தைக் காணும் போது (ஆசிட்)திராவக வீச்சினால் முகஅழகு மாறிப்போனாலும் உள்ளத்தால் உருமாறி போகாதவர்களாய் அபாரமான தன்னம்பிக்கையுடன் டெல்லியில் உணவகம் நடத்தும் எம் சகோதரிகள் இயல்பாய் மனதில் வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த ஃபேர் அண்ட் லவ்லியா தன்னம்பிக்கையினை விதைத்தது? தன்னம்பிக்கை என்பது முழுக்க முழுக்க மனம் சார்ந்தது என்று மக்கள் விளங்கிக்கொள்ளும் நாள் என்று வரும்?
ஆக்ஸ் எனும் ஸ்ப்ரேயை அடித்து கொண்டு செல்பவர் பின்னாடி பத்து பெண்கள் அவரது ஆண்மையைப் பரிசோதிக்க துரத்துகிறார்களாம். எவன் ஒருவன் பெண்ணை சக மனிஷியாய் பாவித்து நடத்துகிறானோ அவனே ஆண்மையுள்ள ஆண்மகன்.இப்படி பட்ட விளம்பரங்கள் தான் பெண்ணைப் போகப்பொருளாய்ப் பார்க்கும் வக்கிரத்தை நெஞ்சில் விதைக்கிறது. இத்தகைய விளம்பரத்தினை இயக்கியவருக்குத் தன்னம்பிக்கை சுத்தமாக இல்லை என்பதையே அவரது இந்த வக்கிரக் கருத்து கூறுகிறது.
விவசாய நிலங்கள் விலை நிலங்களாக்கப்பட்டு அதை விளம்பரப்படுத்தவும் விற்காத பெரிய ப்ராண்ட் தயாரிப்புகளை மக்களிடையே பிரபலப்படுத்தவும் இவர்கள் மெனெக்கெடுவதைப் பார்த்தால் அத்தனை வியப்பு தான் வரும். இந்த மெனெக்கெடல்களைத் தம் ஆக்கப்பூர்வமான தயாரிப்புகளுக்குச் செலவிட்டிருந்தால் அவை தானாக மக்களிடையே பிரபலமாகியிருக்குமே? இதனை மக்கள் சிந்திப்பார்களா?


விளம்பரங்களின் பாதிப்புகளில் சில
ஒரு டிவி ஷோரூமில் நின்று கொண்டிருந்தேன். அந்த தொலைக்காட்சியின் பெயரைஅதுவரை கேள்விப்பட்டதே இல்லை. இதப் பற்றி 40 வயதுக்குட்பட்ட தம்பதி விசாரித்துக் கொண்டிருந்தனர். "சூர்யா இந்த டிவிக்கு வெளம்பரத்த்துல வரான்அப்ப லோக்கல் டிவி லாம் இல்லதரமானதாகத் தான் இருக்கும். வெலயும் கம்மியா இருக்கு ..இதே வாங்கிடலாம்"என முடிவெடுத்து வாங்கினர்.
இப்படித்தான் போலியான நம்பகத்தன்மை விதைக்கப்படுகிறது. பொருள்களின் விளம்பரங்களில் வரும் நடிகர், நடிகைகளால் சில பொருட்கள் பிரபலமாகின்றன என்றால் பொருட்களின் விளம்பரத்தால் சில நடிகைகள் பிரபலமாகின்றனர். இவற்றிற்கிடையே மக்கள் ஏமாறுகின்றனர். சினிமாவில் பொய்யாக டயலாக் பேசுவதுபோல் தான் இவர்கள் விளம்பரங்களிலும் பேசுகின்றனர் என்பதை நாம் உணர வேண்டும். இத்தகைய சமூகப்பொறுப்பென்பது சிறிதும் இல்லாத இந்நடிகர்களை மானசீகக் குருவாகவும் முன்னுதாரணமாகவும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு விரைவில் மறைய வேண்டும்.
என்றாலும் அத்தி பூத்தது போல ஒன்றிரண்டு விளம்பரங்கள் மனதை நெகிழச்செய்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. புற்று நோயை எதிர்த்து போராடும் பெண் ஒருவர் தயக்கத்தோடு இந்த உலகத்தை எதிர்கொள்ளும் போது கணவன் மற்றும் நண்பர்கள் தைரியமூட்டும் வகையில் எடுக்கப்பட்ட வாடிக்கா விளம்பரம் ஒரு மைல் கல்.நம் நாட்டின் பன்முகத்தன்மை தன்னுடைய தயாரிப்பின் இரண்டறக் கலந்த AMUL THE TASTE IF INDIA என்ற விளம்பரம் பால்ய காலம் தொட்டு என் மனதுக்கு நெருக்கமானவை.
உண்மையிலேயே மக்கள் மனதில் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டிய விளம்பரங்கள் காமெடி ஆக்கப்படுகிறது என்பது தான் வேதனையளிக்கிறது. உதாரணமாக புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்கிற விளம்பரம் மக்களை சென்றடைந்தாலும் அதன் நோக்கம் மக்களை சேரவில்லை .ஆணுறைகள் பயன்படுத்துவதன் மூலம் எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் பரவாமல் தடுக்கலாம் .விளம்பரம் சொல்லும் கருத்து இது தான்.இது எத்தனை பேரை சென்றடைந்தது?
நுரையீரல் ஒரு பஞ்சு போன்ற உறுப்பு என்று ஆரம்பிக்கும் முகேஷ் விளம்பரம் புகைப்பிடித்தலின் கேடுகளை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டது. அதைக்கூட ஒரு சினிமாவில் கேலியாகத் தானே சித்தரித்தனர்?
உலகமயமாக்களின் முக்கியமான அங்கம் வகிப்பது விளம்பரங்களே என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்காக நீங்கள் காதில் சுத்தும் பூவை நம்புவதற்கு எல்லோரும் தயார் இல்லை என்பதற்கு அண்மையில் எடுக்கப்பட்ட 4G விளம்பரமும் அது குறித்த விழிப்புணர்வும் தக்க சான்று.
மேகியில் ஈயம் அதிகமாக உள்ளது என வெளியிடப்ப ஆய்வறிக்கையினால் பல இந்திய மாநிலங்களில் உடனடியாகத் தடையும் செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகு இந்தியாவில் விற்கும் பொருளுக்கு அமெரிக்கா, மற்றும் இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மேகியில் ஆபத்து இல்லை என்று மீண்டும் பிரச்சாரம் செய்வது ஏன்? அப்படியெனில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தவறானவையா? இவை போன்ற வழக்குகள் மூலம் தான் மக்களுக்குத் தான் எவ்வாறு ஏமாற்றப்படுகிறோம் என்பதே புரிகிறது.
மக்களை ஏமாற்றும் இத்தகைய விளம்பரங்கள் இன்னும் வருவதையும் நம் எதிர்கால சந்ததியினரை ஏமாற்றுவதையும் தடுக்க வேண்டுமென்றால் மக்கள் விழிக்க வேண்டும். நடிகர், நடிகைகள் கூறுவதெல்லாம் உண்மை என்ற எண்ணத்தை உடைத்தெறிய வேண்டும். என்ன கூறினாலும் பொருட்கள் விற்பனையாகும் என்ற தயாரிப்பாளர்களின் நோக்கத்தை மக்கள் தாம் அழிக்க வேண்டும். உதாரணத்திற்கு இமாமியின் விளம்பரத்தில் நடித்த நடிகர் இரண்டே வாரங்களில் சிகப்பழகு என விளம்பரப்படுத்த, அதனை எதிர்த்து ஒரு சமூக ஆர்வலர் வழக்குத் தொடுத்து தன் வாதத்தில் வெற்றியும் பெற்றார்.
இன்னும் பிரபல கல்லூரிகளின் விளம்பரத்தில் நடித்த நடிகைகள் "விளம்பரத்தில் நடித்தது தவிர அந்நிறுவனத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என பிறகு பின்வாங்கியதிலிருந்தாவது மக்கள் உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் சகோதரி
சபிதா காதர்.

http://www.islamiyapenmani.com/2015/11/blog-post_17.html
https://seasonsnidur.wordpress.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பழங்களில் உள்ள விதைகளின் பயன்கள்

பழங்கள் சாப்பிட சிறந்த பொருட்களில் ஒன்றாகும். சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதுடன் , ஒட்டு மொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பலவி...

Popular Posts