லேபிள்கள்

வியாழன், 7 டிசம்பர், 2017

மனதை படித்த மருத்துவர்! பெட்டகம் சிந்தனை!!

மனதை படித்த மருத்துவர்! பெட்டகம் சிந்தனை!!
மூத்தவர்களை கவனித்துக் கொள்ளும் விதம்!
சமீபத்தில், மும்பையிலுள்ள எங்கள் குடும்ப டாக்டரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டில், 90 வயதான அவரது பாட்டியும் இருந்தார். எங்களைப் பார்த்ததும் அப்பாட்டிக்கு ரொம்ப சந்தோஷம். அவருக்கு, எங்களை அறிமுகப்படுத்திய டாக்டர், பின், தன் பாட்டியை கலாய்க்க ஆரம்பித்தார்...'பாட்டி... இவங்க சொல்றாங்க... நீ ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்கியாம்... உன் திருமணத்தில் நடந்ததை இவங்களுக்கு சொல்லு...' என்றும், 'நான் சின்னக்குழந்தையா இருந்தப்போ ஒரு பாட்டு பாடுவியே... அதை இவங்களுக்கு பாடிக் காட்டு...' என்றும் கூறி, அவரது பழைய நினைவுகளை நினைவுபடுத்தினார்.

சிறிது நேரத்திற்கு பின், 'பாட்டி... நீ ஒரு கோலம் போடு; இவங்களையும் ஒரு கோலம் போடச் சொல்லலாம். யாரோடது அழகா இருக்குன்னு நீயே பார்த்து சொல்லு...' என்று கோலப்பொடி டப்பாவை பாட்டியிடம் நீட்ட, பாட்டியும் சரியாக புள்ளி வைத்து, அதைக் கணக்கிட்டு அழகாக கோலம் போட்டார்.

பின், அங்கிருந்த தொப்பியை எடுத்து, பாட்டி தலையில் மாட்டி, அவரை சிரிக்க வைத்தும், பொம்மைகளைக் கொடுத்து, 'இதை நீ கையில் வச்சுக்கோ, போட்டோ எடுக்கலாம்...' என்று பேச்சுக் கொடுத்தபடியே இருந்தார். அவரது கலாட்டா சற்று அதிகமோ என்று நினைத்து, மெதுவாக அதுபற்றி கேட்டேன்.
'பாட்டியிடம் பழைய விஷயங்களைப் பற்றி பேச்சு கொடுப்பதுடன், தினமும் பத்து நிமிடமாவது சிரிக்க வச்சுடுவேன். இதனால், அவங்களுக்கு நினைவுத் திறன் நன்றாக இருப்பதுடன், ரொம்ப சந்தோஷமாகவும் இருப்பாங்க. அதோட, தினமும் அவரது காலில் விழுந்து வணங்கி, என் நெற்றியில் திருநீறு பூசப் சொல்வேன். அவரும் மனம் நிறைந்த ஆசி வழங்கி, திருநீறு பூசி விடுவார்...' என்றார்.

வயதானலே தொல்லையென சலித்துக்கொள்வோருக்கு மத்தியில், இவரைப் போன்றோரும் இருக்கின்றனரே... என எண்ணி, அவரை பாராட்டி விடைபெற்றேன்.
நாமும், நம் வீட்டில் உள்ள பெரியவர்களுடன் அமர்ந்து, தினமும் சிறிது நேரமாவது அவர்களது பழைய நினைவுகளை கிளறி, சிரித்து பேசுவதன் மூலம், அவர்கள் உற்சாகமாக இருப்பதோடு, நமக்கு அவர்களது நல்லாசியும் கிட்டும் என்பதை கூறவும் வேண்டுமோ!

நல்லதை எடுத்துக் கொள்வதே...
புது வீட்டில் குடியேறிய என் தோழியைக் காண, குடும்பத்தோடு சென்றிருந்தோம். வீட்டைச் சுற்றிப் பார்த்த போது, ஹால் மட்டுமே நவநாகரிக முறையில் இருந்தது. மற்றபடி, சமையலறையில், அழகிய கயிற்றில், உறி ஒன்று தொங்கியது. மற்றொரு புறம், தண்ணீர் ஊற்றப்பட்ட தாம்பாளத்தின் மீது, ஒரு பாத்திரம் இருந்தது. மேலும், அவர்கள் வீட்டில் மிக்சி, கிரைண்டர் மற்றும் வாஷிங் மிஷின் போன்ற உபகரணங்கள் இருந்த போதிலும், அம்மி, உரல் மற்றும் துணி துவைக்கும் கல்லும் இருந்தன.

இதனால், ஆச்சரியமடைந்த நான், 'என்னடி... உன் வீடு பொருட்காட்சி மாதிரி இருக்கு...' என்றேன். அதற்கு தோழி, 'இந்த வீட்டை வடிவமைக்கும் போது, என் மாமனாரும் சில யோசனைகள் கூறினார். பால், தயிர், நெய் வைக்க உறி; எறும்பு ஏறாமல் இருக்க தண்ணீர் தாம்பாளம்; மின்சாரம் இல்லாத போது அரைக்க, அம்மி, உரல் என்று அவர் கூறியதில், நல்ல விஷயங்கள் இருக்கவே, அதற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளோம்...' என்றாள்.
வீட்டின் பின்புறம் செடி, கொடிகளுக்கு நடுவில் கூண்டில், வான்கோழி ஒன்றும் இருந்தது. அதற்கு தோழி, 'தோட்டத்தில், புழு, பூச்சிகள், பூரான், பாம்பு போன்ற விஷ ஜந்துகள் வந்தால், வான்கோழி ஒரு கை பார்த்துவிடும் என்பதால் இதுவும் என் மாமனார் சாய்ஸ் தான்...' என்றவள், 'விவசாயியான என் மாமனார், கடுமையாக உழைத்து, என் கணவரை படிக்க வைத்தார். இன்று நாங்கள் நல்ல நிலையில் இருந்தாலும், எந்த ஒரு விஷயத்திற்கும், அவரை கலந்து கொள்ளாமல், நாங்களாகவே முடிவெடுப்பதில்லை. வீட்டுப் பெரியோர் சொல்லும் நல்ல விஷயங்களை நாம் ஏற்றுக்கொண்டால், அது, நம் குழந்தைகளுக்கும் பயன்படும்...' என்றாள்; பிரமித்துப்போனேன்.
என்ன தான் நாகரிகத்தின் பாதையில் சென்றாலும், பழமையான பாரம்பரியத்தில் உள்ள அருமையான விஷயங்கள் அழிந்து விடாமல் பின்பற்றுவது சிறப்பு தானே!

மனதை படித்த மருத்துவர்!
சமீபத்தில், எலும்பு முறிவு மருத்துவரை பார்க்க அவருடைய கிளினிக்கிற்கு சென்றிருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, நடுத்தர வயதுக்காரர் ஒருவரை தூக்கி வந்தனர். முழங்காலுக்கு கீழ், எலும்பு உடைந்திருந்ததால், வலியில் துடித்தார். அவரை பரிசோதித்த டாக்டர், 'கவலைப்படாதீங்க... சிறிய எலும்பு முறிவு தான்; ஒரு வாரத்தில குணமாகிடும்...' என்று கூறி, சிகிச்சை அளித்தார். பின், அறைக்கு வந்தவரிடம், 'என்ன டாக்டர்... எலும்பு முறிஞ்சு தொங்குது; எழுந்து நிக்கவே ஆறு மாசம் ஆகும் போல இருக்கே... நீங்க என்னடான்னா, நோயாளியிடம் சின்ன பிரச்னை தான்னு சொல்றீங்க...' என்றேன்.

அதற்கு அவர், 'நீங்க சொல்ற மாதிரி அது, பலமான எலும்பு முறிவு தான்; ஆனா, நான் சொன்ன அந்த வார்த்தைகள், அவருக்கு நம்பிக்கைய ஏற்படுத்தும். மருத்துவர்கள், நோயாளிகளுக்கு தரும் முதல் மருந்தே, நம்பிக்கையான வார்த்தைகள் தான். அதிலேயே அவங்களுக்கு பாதி நோய் குணமாகிடும்...' என்றார்.
அவர் கூறியதைப் போலவே, கால் முறிந்த அந்த நபர், அழுவதை நிறுத்தி, சகஜமாக மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
நோயாளிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி, பணம் பிடுங்கும் டாக்டர்களுக்கு மத்தியில், இவர் எனக்கு வித்தியாசமாக தெரிந்தார்.
இதை மற்ற மருத்துவர்களும் செய்யலாமே!
http://pettagum.blogspot.com/2016/01/blog-post_31.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சமையலறைக் குறிப்புகள்.

சர்க்கரை டப்பாவில் எறும்பு மொய்க்காமல் இருக்க நமது சமையலறையில் ' சர்க்கரை ' முக்க...

Popular Posts