லேபிள்கள்

வியாழன், 21 டிசம்பர், 2017

மாமியார் மெச்சும் மருமகளாக, மருமகள் போற்றும் மாமியாராக வாழ்வதெல்லாம் இறைவன் கொடுத்த வரமா? ஒரு அலசல்

மாமியார் மெச்சும் மருமகளாக, மருமகள் போற்றும் மாமியாராக வாழ்வதெல்லாம் இறைவன் கொடுத்த வரமா? ஒரு அலசல்

மாமியார் மருமகள் சண்டை உருவாக காரணம் யார்? மனைவியா? மாமியா? கணவரா? அல்லது மூவருமா?
அம்மாவா, நானா? இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க" என கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் எக்கச்சக்கம் என்கின்றனர் "மேரிடல் கவுன்சிலிங்" வல்லுனர்கள். இங்கிலாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 60 சதவீதம் பெண்களுக்கு மாமியாருடன் சண்டையாம். அது வாழ்நாள் முழுதும் ஒரு விதமன அழுத்தத்தைக் கொடுக்கிறதாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டெரி அப்டர் நடத்திய ஆய்வின் முடிவு இது.
எனவே மாமியார் மருமகள் பிரச்சினை ஏதோ தமிழர்கள் பிரச்சினை என்று நினைக்கவேண்டாம். மாமியார்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஒரு சர்வதேசப் பிரச்சினை இது!


அவரது ஆய்வில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் தங்கள் கணவன்மார் அம்மாப் பிள்ளையாக இருக்கிறார்கள் என குறைபட்டுக் கொண்டனர். அதே சமயம், மூன்றில் இரண்டு பங்கு மாமியார்களோ, தங்கள் பையன் தங்களை தனிமைப்படுத்துகிறான், பொண்டாட்டி தாசன் ஆகிவிட்டான் என வருந்துகின்றனர். எனவே இது ஒரு விதத்தில் அக்கரைப் பச்சை அனுபவம் தான். ஒவ்வொருவரும் அடுத்தவர் பார்வையில் பார்க்க ஆரம்பிக்கும் போது பல விஷயங்கள் எளிதில் புலனாகும். சிக்கல்கள் தீரத்துவங்கும்.தன் பிள்ளை தன்னைக் கவனிக்கவில்லையே என அம்மா கவலைப்பட ஆரம்பிப்பதும், தன் கணவர் தன்னைக் கவனிக்கவில்லையே என மனைவி கவலைப்படுவதும்தான் பிரச்சனைக்ளுக்களை உருவாக்கும் முதல் புள்ளி. அந்த சிந்தனையே வராமல் தடுத்தால் சிக்கலே இல்லை என்கிறார் ஒரு ஆலோசகர்.
அம்மாவிடம் மகன் பாசமாய் இருப்பது இயல்பே!
அம்மாவிடம் பையன் பாசமாய் இருப்பது இயல்பு. அப்படி இல்லாமல் இருந்தால் தான் கவலைப்பட வேண்டும். சரியாக வளர்க்கப்படாத மகன் சரியான பாதையில் செல்லாமல் இருக்க வாய்ப்பு அதிகம். எனவே அம்மாவின் மீது பாசமான பையன் என்பது ஒரு குறையல்ல. அது நல்ல விஷயம் எனும் எண்ணம் தான் முதலில் பெண்களுக்கு வரவேண்டும்.

"மனைவியா? அம்மாவா? யாருக்கு ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என ஆண் குழந்தைகளோட அம்மாக்களிடம் கேட்டுப் பாருங்கள். என் கணவன் எனக்கும் (அவரோட மனைவிக்கும்), என் பிள்ளை அவனோட அம்மாவுக்கும் என்பார்கள். அதாவது எல்லா பெண்களுக்கும் தன் கணவன் தன்மீது அன்பு செலுத்த வேண்டும், அதே போல தனது மகனும் தன் மீது அன்பாய் இருக்க வேண்டும் எனும் ஆழமான ஆசை உண்டு. கணவனைப் பொறுத்தவரை தனது மனைவியை அவன் முழுமையாக ஏற்று அன்பு செய்ய வேண்டும். அது தனது அம்மாவை நிராகரித்துத் தான் நடக்க வேண்டும் என்பதில்லை.
சிக்கலில் மிக நுட்பமான பகுதி!
இந்த சிக்கலில் மிக நுட்பமான பகுதியைச் கவனியுங்கள். உங்க கணவன் அவரின் அம்மாவிடம் ரொம்ப நெருங்கக் கூடாதா? ஒரு சின்ன வழி, நீங்க அவரின் அம்மாவிடம் அதிகமா நெருங்கிப் பாருங்கள். குழம்ப வேண்டாம். தனது தாயைப் பார்த்துக் கொள்ள தன் மனைவி இருக்கிறாள் எனும் நிம்மதி கணவனுக்கு மிகப்பெரிய நிம்மதியாகும். அது கணவன் தன் மனைவியிடம் அதிகம் அன்பு காட்டும் முக்கிய காரணியாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதே நிலை தான் மறு பக்கமும். தனது அம்மாவை தன் புருஷன் (மாமியை) நன்றாகக் கவனிக்கிறார் என்றால் அந்த நிம்மதி மனைவிக்கும் மிகப்பெரிய சுகம். மனைவி கணவனை அன்போடு ஆதரிப்பாள்.

வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்!
வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்க்கு அந்த ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது மகனுடைய கடமையும் கூட. ஆனால் அது மனைவியின் உரிமைகளை மீறியதாக இருக்கக் கூடாது என்பது மட்டுமே இங்கே பிரச்சினை. மகன் மட்டுமல்ல மருமகளுக்கும் அந்த கடமை இருக்கிறது என்பதனை மருமகள் மறந்து விடக்கூடாது. இங்கே மகன் தனிப்பட்ட முறையில் தாய் மீது அக்கறை கொள்ளும் போது தாய் மருமகள்மீது வெறுப்பாகின்றாள். அதனால் மருமகள் தானாகவே ஒதுங்கி விடுகின்றாள் என்பதுதான் யதார்த்தம். இவ்வாறான நிலைமை ஏற்படாதிருக்க மகனும் மருமகளும் இணைந்து செயற்படுவதே சாலச் சிறந்தது.

திருமணம் ஆன புதிதிலேயே புதுமணப் பெண் நினைத்தால் இத்தகைய பிரச்சினைகள் பிற்காலத்தில் பூதாகரமாக வெடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். முதலாவதாக மாமியாரைப் பற்றி கணவனிடம் குறை கூறுவதை நிறுத்த வேண்டும். தொன்னூற்று ஒன்பது விழுக்காடும் அதைக் கணவன் நம்பப் போவதில்லை. அப்படியே நம்பினாலும் அது அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு நல்லதா என்றால் இல்லை. எல்லோருமாகச் சேர்ந்து அன்பாக வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமானது. சண்டையிட்டு ஒருவர் வெல்வதல்ல. மாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவன் கிட்டே பேசுங்கள்!
யோசித்துப் பாருங்கள். எப்போ கடைசியா உங்க மாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவனுடன் பேசியிருப்பீர்கள். முக்கால் வாசி பேரோட வாழ்நாளிலே அப்படி ஒரு விஷயம் நடந்திருக்காது. மாமியாரைப் பற்றி நல்ல விஷயங்களை கணவனிடம் சொல்ல ஆரம்பியுங்கள். இயல்பானதைப் பேசினா போதும். "உங்க அம்மா கையால ரசம் சாப்பிட்டா மனசு நிறைஞ்சு போயிடுதுன்னு சும்மா சொல்லிப் பாருங்கள்". சொல்றது போலித்தனமா இருக்கக் கூடாது என்பது முக்கியம்.
மாமியாருக்கு மதிப்பு கொடுங்கள்!
உங்கள் மாமியார் உங்களை விட வயசில பெரியவர். அவங்க ஒரு கால் நூற்றாண்டு காலம் கஷ்டப்பட்டு தன்னோட மகனை வளர்த்திருக்கிறார். அவங்க வாழ்க்கையில் விலை மதிக்க முடியாத சொத்தான மகனை உங்களிடம் தந்திருறார். அதை நினைவு கூர்ந்து மதியுங்கள். யாருக்கு அதிகம் உரிமை என்பதெல்லாம் தேவையற்ற விவாதம். எந்தக் கண் தனக்குத் தேவை என்று தலையிடம் கேட்டால் என்ன முடிவு கிடைக்கும்? இரண்டு கண்ணும்தான். எனவே மாமியினுடைய வயசுக்கு மரியாதை கொடுங்கள். பொறுமையும், புன்னகையும் பெண்களோட மிகப்பெரிய ஆயுதம். மறக்க வேண்டாம். உங்கள் ஆயுதத்தை மாமியிமும் தவறாது பாவியுங்கள். மாமியை நீங்க மதிக்காவிட்டால் யார் மதிப்பார்கள் என்பதை மனதில் வைத்திருங்கள்.

உங்கள் மாமியாருடன் அதிக நேரம் செலவிடுங்கள். உங்க அம்மாவுடன் இருக்கும்போது எப்படி இயல்பாகவே உற்சாகமாக பேசுவீங்கள் ? அதே உற்சாகம் பிளஸ் அன்புடன் மாமியாரிடம் பேசிப் பாருங்கள். வயசானவங்களுக்கு முக்கியமான தேவை, பேசுவதற்கும், கேட்பதற்கும் ஒரு நல்ல துணை தான். அந்த துணையாக நீங்க இருங்கள் இருந்து விட்டால் பிரச்சனையே இருக்காது.
உங்கள் பிள்ளைகளுக்கு உங்க தாத்தா பாட்டி செல்லம் கொடுக்கிறார்களா? ஜங்க் ஃபுட் குடுக்கிறாங்களா, டி வி போட்டு குடுக்கிறாங்களா ? டென்ஷன் ஆகாதீங்க. தாத்தா பாட்டிக்குன்னு சில விருப்பங்கள் உரிமைகள் உண்டு. நீங்க அந்த பருவம் வரும்போது அதனைப் புரிந்து கொள்ளுவீர்கள். அதனால சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் உலக மகாபிரச்சினைகள் போல எடுத்து பேசாதீர்கள். அவர்களுடைய சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கு மதிப்பு கொடுங்கள்.
தன் உதிரத்தை பாலாக ஊட்டி வளர்த்தெடுத்து, சமூகத்தில் சிறந்த ஆண் மனாக்கி என்னை கைபிடிக்க வைத்த மாமியாரை நன்றிக்கடனுடன் அன்பு செலுத்துதல் எனது கடமை என் உணருங்கள்.
மருமகளை மதித்து நடவுங்கள்
உங்கள் மருமகள் உங்கள் குடும்பத்திற்கு விளக்கேற்ற வந்த மகாலட்சுமி என எண்ணி மரியாதையாக நடவுங்கள். அவர்களின் ஆசைக்கு இடஞ்சலாக இருக்காது விலக முயலுங்கள். உங்கள் காலத்தில் நீங்கள் வாழ்ந்த்துபோல் இக் காலத்தில் வாழும் மருமக்கள் வாழ் வேண்டும் என எண்ணாதீர்கள். காலம் ரொம்ப மாறிப் போச்சு.

நீங்கள் எவ்வளவுக்கு மருமகளை மதிக்கிறீர்களோ அதற்கேற்பவே உங்கள் பிள்ளைகளும் உறவினர்களும் ஏன் சுற்றமும் உங்கள் மருமகளை மதிக்கும் என உணர்ந்து கொள்ளுங்கள். நீங்களே மருமகளை திட்டினால் மற்றவர்கள் தூற்றுவார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள்.
மருமகளைப் பற்றி மகனிடம் குறை சொல்லாதீர்கள். குறை இருந்தால் அவவிடமே கூறுங்கள். அல்லது மறந்து விடுங்கள். அவர்களுக்குள் பிரச்சனை வந்தால் உங்கள் குடும்பத்திற்குதான் அவமானம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். குடும்பப் பிரச்சனை வந்து குடும்பம் பிரிய நீங்கள்தான் காரணமாக இருந்தால் உலகம் உங்களை ஒதுக்கி வைத்துவிடும் என்பதை உணருங்கள். உங்கள் கணவர் உங்களுடன் எவ்வளவு அன்பாக இருக்கிறாரோ அதே போல் அவரையும் அவரது கண்வருடன் அன்பாக இருக்க அனுமதியுங்கள். உங்கள் மகன் குடும்பத்தில் நீங்கள் இப்போ இரண்டாமவர் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் அன்பாக ஆசையாக வளர்த்த உங்கள் மகன் இறுதிவரை காப்பேன் என அக்கினி சாட்சியாக பொறுப்பேற்ற மருமகள் உங்கள் மகனின் ஆசாபாசங்களை நிறைவேற்றி, வம்சத்தை பெருக்கவும் மகனை தடுக்கி விழாது தோழ் கொடுத்து காப்பவளை மதிப்பளிது எமது கடமை என உணருங்கள்.
புகுந்த வீட்டிலும் இயல்பாக இருங்கள்!
கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் உங்க அம்மாவீட்டில் நீங்கள் இருக்கும்போது எப்படி இயல்பாக கலகலப்பா இருப்பீங்களோ அப்படியே புகுந்த வீட்லையும் இருக்க முயற்சி பண்ணுங்கள். அது நிரம்பிய பயனளிக்கும்.

ஊர், குலம் மாறி திருமணம் செய்திருந்தால்; அவர்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. நீங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. இப்போது இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்கப் போகிறீர்கள், ஒரு வகையில் இது ஒட்டுச் செடி போன்ற அனுபவம். எனவே நன்றாக ஒட்டிச் சேர நேரம் தேவைப்படும். அவசரப் படக் கூடாது. ஒட்டுப் பிடிக்கவில்லையே என முடிவெடுக்காதீர்கள். ஒட்டும்படி ஒட்டி, விட்டுக்கொடுத்து வாழுங்கள். வெட்டிவிட்டால் குடும்ப வாழ்க்கை சர்வமும் நாசமாகிவிடும்.
அம்மாக்களைப் பொறுத்தவரை மகன் ஆனந்தமாக இருக்கவேண்டும் எனும் எண்ணமே பிரதானமாய் இருக்கும். ஒருவேளை மனைவி அவனை நன்றாகக் கவனிக்கவில்லையோ எனும் கவலையும் ஒரு புறம் இருக்கலாம். அல்லது அதிகமாய்க் கவனித்து என்னை விட்டுப் பிரித்து விடுவாளோ எனும் பயம் இன்னொருபுறம் இருக்கலாம். இது போன்ற நிலையில் மாமியார் மருமகள் இடையேயான ஆழமான உரையாடல்களுக்குப் பின்பு தான் இயல்பு நிலையை அடையும்.
மாமிமார் பிரச்சினைவாதிகளாய் மாற காரணங்கள் பல!
மாமியார்கள் பிரச்சினை வாதிகளாய் மாற பல காரணங்களை உளவியலார்கள் சொல்கின்றனர். தனது கணவன் தன்னை சரியான அளவுக்குக் கவனிக்காத ஏக்கம், சின்ன வயதிலேயே தான் இல்லாமல் மகனால் எதுவும் செய்ய முடியாது என உருவாக்கும் பிம்பம், தனது மகனிடமோ, மகளிடமோ உருவாக்கும் குற்ற உணர்வு. நான் முந்தானையில் வைத்து வளர்த்த பிள்ளையை மருமகள் தன் முந்தானைக்குள் மடக்கிப்போட்டாள் என்னும் உணர்வு. இப்படி பல காரணங்களை அவர்கள் அடுக்குகின்றனர். சில மருமகள்கள் தன்னை விட மாமனாரிடம் அன்பாய் இருப்பது கூட மாமியாருக்கு எரிச்சலைக் கிளப்புமாம். தாழ்வு மனப்பான்மையும் ஒரு காரணமாக அமைகின்றது.

மருமகள்மார் பிரச்சனைவாதிகளாக காரணம் சில:
தன்னுடன் தன் கணவன் அன்பாக இருப்பதைக் கண்டால் மாமிமாருக்கு பொறுக்கேலாதாம். அதுவும் கணவனை இழந்து பலகாலம் தனிமையாக வாழ்ந்த மாமிமாருக்கு இது சகசமாம். சின்னஞ் சிறிதுகள் வாழும் வயதில் சந்தோசமாக இருக்கட்டும் என ஒதுங்க மாட்டார்களாம். கணவனும் மனைவியும் சந்தோசமாக தனிமையில் கதைத்துக் கொண்டிருக்கும் போது நடுவே வந்து உட்காந்து விடுவார்களாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் இரகசியம் எல்லாம் அம்மாவும் தெரிந்து கொள்ளவேண்டுமாம். மனைவி தாம் இருக்கும் வீடு தனது வீடு என எண்ணிக் கொண்டிருப்பார் மாமியார் இது எனது மகன் வீடு எனது வீடு என உரிமை கொண்டாடுவாராம்.

குடும்ப பிரச்சனைகள் எல்லாம் மாமிக்கும் சொல்ல வேண்டுமாம். எங்கு சென்றாலும் தன் மகன் தன்னுடனே இருக்க வேண்டுமாம். தான் சொல்வதுபோல் நடக்க வேண்டும் என அடம் பிடிப்பார்களாம். அப்போ நாம் எப்போது புருஷ சுகம் அனுபவிப்பது என்பது மருமக்களின் ஏக்கம். அத்துடன் சம்மந்தி வீட்டார் வீட்டுக்கு வந்தால் மூஞ்சையை மற்றப் பக்கம் திருப்பி வெறுப்பை காண்பிப்பாராம். அத்துடன் "மாமியார் உடைத்தால் மண் சட்டி மருமகள் உடைத்ததால் பொன் சட்டி" என ஆத்திரங் கொள்வார்களாம்.
அத்துடன் தாயும் மகனும் இரகசியம் கதைப்பார்களாம். தாய் தன்னைப்பற்றி சொல்வதெல்லாம் மெய் என நம்பி தன்னை ஏன் என்று கேட்காமலே குற்றவாளியாக்கி மாமிக்கு முன்னாலே அடிப்பாராம். தாய்க்கு முன்னால் தன்னையும், தனது குடும்பத்தாரையும் இழிவாக பேசுவாராம். தனது தாய் தனது தலையிலும் மனைவி நீ காலுக்கையும் என்றும் கூறுவாராம். மனைவி தன் பெற்றோருடன் ரெலிபோனில் கதைப்பது மாமிக்கும், கணவருக்கும் பிடிக்காதாம். இது போன்ற பல விடயங்கள் மாமி மீது மருமகள் வெறுப்பு ஏற்படக் காரணமாகின்றன. அதுவே குடும்பப் பிரச்சனையாகி பிரிவினைக்கும் செல்கிறார்கள்.
கணவன் மகன் எங்கே தவறுகிறார்.
உதிரத்தை பாலாக ஊட்டி, என் மகன் என்னை பின்னடிக்கு பாப்பான் என்ற கனவுடன் அன்பாக, அறிவாளியாக வளர்த்து விட்ட தாயாரையும்; அப்படி வாழ்வேன் இப்படி வாழ்வேன் என எத்தனையோ கனவுகளை சுமந்து கொண்டு கணவனை நம்பி வந்த மனைவியையும் அன்பு குறையாது பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை மகனுக்கும் கணவனுக்கும் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. அவர்கள் இருவருக்குள்ளேயும் பிரச்சனை உருவாகுவதற்கு மகனின் செயல்களே காரணமாக அமைவதாக இருசாராரும் குறை கூறுகின்றார்கள்.

இங்கே "ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம். இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம்" என்ற நிலை. இங்கே கொஞ்சம் அவதானம் தேவை. பிரச்சனை என்று வந்து விட்டால் புத்திசாலித்தனமாக தீர்த்து வைக்க முயலுங்கள். மனைவியின் முன்னால் தாயையும், தாயின் முன்னால் மனைவியையும் கண்டிக்காதீர்கள். அப்படி ஒருவரை குறைவாக நீங்கள் தாக்கும்போது மற்றவர் அவர் மீது ஆதிக்கம் செலுத்தப் பார்க்கிறார்கள் என்பதை உணருங்கள். இருவரும் உங்களை நம்பி வாழ்பவர்கள் எனவே இருவருக்கும் நீங்கள் சமஉரிமை கொடுத்து நடவுங்கள்..
இருவர் கூறும் குறை நிறைகளை செவிமடுக்காதீகள். அப்போது ஒருவரைப் பற்றி மற்றவர் குறை சொல்ல வரமாட்டார். பிரச்சனை வருமுன் காதுகளைப் பொத்திக் கொள்ளுங்கள். பிரச்சனை என்று வந்த பின் படத்தில் உள்ளது போல் காதுகளைப் பொத்தி கொள்வதால் உங்கள் பிரச்சனை தீர்ந்துவிடாது என உணருங்கள். நீங்கள் அம்மாச் செல்லமாக இருந்தால் மனைவியை இழக்கவும் நேரிடலாம். அதுபோல் மனைவிச் செல்லமாக இருந்து விட்டால் அம்மாவை இழக்கவும் நேரிடலாம். எப்பொழுதும் அம்மாச் செல்லமாகவும், மனைவிச் செல்லமாகவும் இருக்க முயலுங்கள். உங்கள் குடும்ப ஒற்றுமை உங்கள் கையில்தான் இருக்கின்றது என்பதை உணருங்கள்.
மாமியாரை மருட்டுவது எப்படி?
நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்துங்கள்! சரி, ஒரு சின்ன கேள்வி. உங்களில் எத்தனை பேர் உங்கள் மாமியாருக்கு நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்தியிருக்கிறீர்கள்? தலையைச் சொறிய வேண்டாம். பதில் எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்புறம் என்னங்க ? கணவன் அம்மா பிள்ளையா இருக்கிறதுல என்ன ஆச்சரியம் இருக்கப் போவுது ?

மகிழ்சியான குடும்ப வாழ்க்கை மாமியாருடன் இணக்கமாகவும், அன்பாகவும் இருக்க உதவும். தனது தாயுடன் நல்ல அன்பாகவும் நட்பாகவும் இருக்கும் பெண்களில் 78 சதவீதம் பேர் மாமியாருடன் இணக்கமாக இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. அதே போல குடும்ப வாழ்க்கையில் ஆனந்தமாய் இருப்பவர்களில் 57.9 % பேர் தங்கள் மாமியார் ரொம்ப நல்லவங்க எனும் சர்டிபிகேட் தருகிறார்கள். அவர்கள் சொல்லும் சிம்பிள் அட்வைஸ், மாமியார் சொல்ற விஷயத்தை அம்மா சொன்னா என்ன ரியாக்ஷன் தருவீங்களோ, அதை மட்டும் தாங்க என்பது தான்! குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை மூட்டை கட்டி வையுங்கள்!
அடுத்தவர்களுடைய குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை இன்னொரு மூட்டை கட்டி வையுங்கள். அது நல்ல ஆரோக்கியமான பழக்கம் அல்ல. "அவர்களுடைய பழக்கம் அவர்களுக்கு" என எடுத்துக் கொள்ளும் இளகிய மனம் இருக்கட்டும். "என் பையனுக்கு என் சாப்பாடு ரொம்பப் புடிக்கும்" ன்னு மாமியார் சொன்னா, "ஆமா.. என் சாப்பாடு மட்டும் புடிக்காதா" என்று எதிர் கொடி புடிக்காதீங்க. அடிக்கடி போன் பண்ணினா, எப்பவும் அம்மா கூட பேசறது தான் வேலையான்னு முகத்தைத் தூக்கி வெச்சுக்காதீங்க. அம்மா கிட்டே சிரிச்சுப் பேசினா "உங்க ஆளுங்க கிட்டே பேசும்போது மட்டும் எப்படித் தான் இந்த சிரிப்பு வருதோ" ன்னு நக்கல் அடிக்காதீங்க.
சுருக்கமா சொல்லணும்ன்னா ஈகோவைக் கழற்றி வைத்து விட்டு ஆனந்தமான வாழ்க்கை வாழவேண்டுமென முடிவெடுத்து களமிறங்குங்கள். பிரச்சினைகளெல்லாம் பறந்தோடிப் போய்விடும் என்பது மட்டும் நிஜம்.
"வளர்த்தெடுத்து மனிதனாக்கி விடுபவள் தாய் உற்ற துணையாக நின்று இறுதிவரை வெற்றி பெறச்செய்பவள் மனைவி"
நன்றி
http://www.panippulam.com/

https://seasonsnidur.wordpress.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts