லேபிள்கள்

வியாழன், 19 நவம்பர், 2020

பிறப்பு இறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி?

எல். துரைராஜ்

இந்தியாவில் தற்போது குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல், பல்வேறு அரசு நடைமுறைகளுக்கு வயதை உறுதி செய்தல் போன்ற பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழும், குடும்பத்திலுள்ள ஒருவர் இறந்து விட்ட நிலையில் அவருடைய சொத்துக்கள் பகிர்வுகளுக்கும், அவர் தொடர்பான பிற அரசு நடைமுறைகளுக்கும் இறப்புச் சான்றிதழும் அவசியமாக உள்ளது. பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்வதன் அவசியம், அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகள் போன்றவைகளையும் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.

பிறப்பு/இறப்பு பதிவுகள்
இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் இந்தியப் பெற்றோர்களுக்கு நிகழும் ஒவ்வொரு பிறப்பிற்கும், அல்லது நிகழும் ஒவ்வொரு இறப்பிற்கும் பதிவு செய்தல் என்பது சட்டப்படி (Registration of Births and Deaths Act, 1969) கட்டாயமாகிறது. எனவே பிறப்பு மற்றும் இறப்பை முறையாகப் பதிவு செய்தல் அனைவரது கடமையாகும். இது திட்டமிடல் உள்ளிட்ட பல பணிகளுக்கு அரசிற்கு உதவிகரமாக இருக்கும். எனவே அனைவரும் பிறப்பு மற்றும் இறப்பைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும். முன்பெல்லாம் குழந்தை பிறத்தல் என்பது வழக்கமாக வீடுகளிலேயே நிகழும் ஒரு நிகழ்வு என்பதால், உள்ளூரிலேயே உள்ள 'மணியகாரர், 'தண்டல்'காரர்கள்' (சிற்றூர் -கிராம- உதவியாளர்கள்) உள்ளிட்டவர்களே பிறப்பைப் பதிவு செய்வதில் அனைத்து வேலைகளையும் செய்து விடுவார்கள். பல பதிவு செய்யப்படாமல் விடுபட்டும் போயிருக்கும். ஆனால், தற்போது பெரும்பான்மையாகக் குழந்தைப் பிறப்பு என்பது மருத்துவமனைகளிலேயே நிகழ்கிறது. இதனால் மருத்துவமனை நிர்வாகங்களே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிலோ அல்லது வருவாய்த்துறை அமைப்பிலோ குழந்தை பிறப்பு குறித்த தகவல்களைப் பதிவு செய்து விடுகின்றன. வீட்டிலேயே குழந்தை பிறப்பு நிகழும் நிலையிலும் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



இதுபோல் இறப்புகள் மருத்துவமனைகளில் நிகழ்ந்தால் மருத்துவமனை நிர்வாகங்கள், சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் இறப்பைப் பதிவு செய்து விடுகின்றன. வீடுகளில் நிகழும் இறப்புக்களை குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பிறப்பு/இறப்பு பதிவு அலுவலகங்கள்
சிற்றூர்களில் நிகழும் குழந்தை பிறப்புகள் அனைத்தும், அந்த சிற்றூருக்கான கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்யப்பட வேண்டும். பேரூராட்சிப் பகுதியில் பேரூராட்சியின் செயல் அலுவலர் அலுவலகத்திலும், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் அந்தப் பகுதிக்கான சுகாதார ஆய்வாளர் அல்லது நகர/மாநகரச் சுகாதார அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

பிறப்பு/இறப்பு சான்றிதழ்கள் பெறுவது எப்படி?
குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டிய நிலையில் பிறப்புச் சான்றிதழ் தேவையாக உள்ளது.இந்நிலையில் பிறப்புச் சான்றிதழ் கோரி யாரிடம் விண்ணப்பிப்பது என்கிற கவலை எழலாம்?

குழந்தை மருத்துவமனையில் பிறந்திருந்தால் அந்த மருத்துவமனை அமைந்துள்ள இடம் சிற்றூராக இருந்தால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமும், பேரூராட்சியாக இருந்தால் பேரூராட்சி செயல் அலுவலரிடமும், நகராட்சி அல்லது மாநகராட்சிப் பகுதியாக இருந்தால் சுகாதார ஆய்வாளர்/சுகாதார அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் இதற்கென விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கின்றன. இந்த விண்ணப்பப் படிவங்களைப் பெற்று குழந்தை பிறந்த நாள், தாய், தந்தை பெயர், பிறந்த இடம் போன்ற தகவல்களை நிரப்பி அதற்கான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். நாம் விண்ணப்பப் படிவத்தில் நிரப்பிய தகவல்களும், பதிவு செய்யப்பட்ட தகவல்களும் சரியாக இருக்கும் நிலையில் இரு நாட்களுக்குள்ளாக பிறப்புச் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தால் வழங்கப்படுகின்றன.

சிற்றுராக இருந்தால் கிராம நிர்வாக அலுவலகங்களில் விண்ணப்பித்துப் பெறலாம்.
இதுபோலவே இறப்புச் சான்றிதழ்களுக்கும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் விண்ணப்பித்துப் பெறலாம்.

பிறப்பு/இறப்புச் சான்றிதழ்களில் மாற்றங்கள்
பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் மருத்துவமனை நிர்வாகத்திலிருந்து கொடுக்கப்பட்ட தகவல்களில் சிறு பிழைகள், தவறுகள் போன்றவை இருந்திருக்கலாம். குறிப்பாக, தாய், தந்தை பெயர்களில் எழுத்துப் பிழைகள் அல்லது தாய், தந்தை பெயர் இட மாற்றங்கள் போன்ற தவறுகள் இருந்திருக்கலாம். இது போன்ற சூழ்நிலையில் நாம் சரியான தகவல்களை ஆதாரத்துடம் அளித்து பதிவு செய்யப்பட்ட தகவல்களில் திருத்தங்கள் செய்ய வேண்டுகோள் கடிதம் ஒன்றை அளிக்க வேண்டும். இதைப் பரிசீலிக்கும் அலுவலர்கள் நாம் கொடுக்கும் தகவல்கள் சரியானவை என முடிவு செய்யும் நிலையில் பதிவு செய்யப்பட்ட தகவல்களில் திருத்தங்கள் செய்வர். அதன் பின்னர் பிறப்புச் சான்றிதழ்களை வழக்கம் போல் விணப்பித்துப் பெற முடியும்.

குழந்தை பிறந்த நிலையில் குழந்தைப் பெயர் இல்லாமல் குழந்தையின் பாலினம் மட்டும் குறிப்பிட்டு தாய், தந்தை பெயர், பிறந்த நாள் போன்ற தகவல்கள் முதலில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்நிலையில் பிறப்புச் சான்றிதழில் குழந்தைப் பெயரையும் சேர்த்து சான்றிதழ்கள் பெற விரும்பினால் குழந்தைப் பெயர் சேர்த்துக் கொள்ள வேண்டுதல் கடிதம் அளிக்கலாம். அதற்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இதுபோலவே இறப்புச் சான்றிதழ்களிலும் தேவையான மாற்றங்களை ஆதாரங்களுடன் தெரிவித்து மாற்றம் செய்து கொள்ள முடியும்.

பிறப்பு/இறப்பு தாமதப் பதிவுகள்
குழந்தைகள் பிறப்பு அல்லது இறப்புகள் வீடுகளில் நிகழ்ந்துள்ள நிலையில் அதைச் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் குறிப்பிட்ட நாட்களுக்குள் (பிறப்பு - 15 நாட்கள், இறப்பு- 30 நாட்கள்) பதிவு செய்யாமல் விடுபட்டுப் போய் விடலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒரு வருடம் வரை பதிவு செய்ய முடியாத நிலையைத் தெரிவித்து, தகுந்த ஆதாரங்களுடன் அதற்கான தாமதக் கட்டணத்தைச் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் அருகிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிமன்ற உத்தரவு பெற்ற பின்னரே சான்றிதழ் பெற முடியும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 16 நவம்பர், 2020

வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி?

எல். துரைராஜ்

ஒருவர் இறந்து விட்ட பின்பு அவரின் பணம் மற்றும் சொத்துக்களை அவருடைய வாரிசுகள் அனைவரும் பகிர்ந்து கொள்வதற்கு அவர்களிடையே பிரச்சனைகள் ஏதும் வராமலிருப்பதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது. இந்த வாரிசுச் சான்றிதழ் என்பது சொத்துக்கள் குறித்த நடைமுறைகளுக்கே பெரும்பாலும் தேவைப்படுவதால், இது இன்றியமையாத சான்றிதழாகக் கருதப்படுகிறது.

வாரிசுச் சான்றிதழ் மதச் சட்டங்களின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அவர் சார்ந்துள்ள மதங்களுக்கான தனிச் சட்டங்களின்படி வாரிசுச் சான்று வழங்கப்படுகிறது. இந்து சமயத்தவர்களுக்கு இந்து திருமணச் சட்டத்தின் வழிகாட்டல்களின் அடிப்படையில் வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது. வட்டாட்சியர் அளிக்கும் வாரிசுச் சான்றிதழில் குறிப்பிடப்படும் அனைத்துத் தகவல்களுக்கும் வட்டாட்சியரே முழுப் பொறுப்பாவார். வாரிசுதாரர்களில் எவரேனும் ஒருவர் பெயர் விட்டுப்போயிருந்து அது பின்னாளில் ஒரு பிரச்சினையானாலும் அதற்கு வட்டாட்சியரே முழுப் பொறுப்பாவார். எனவே வட்டாட்சியர்கள் இச்சான்றிதழ் அளிப்பதில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர்.



விண்ணப்பப்படிவம்
இன்றைய நிலையில் உள்ள வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கிறது. இணையத்தில் கிழ்காணும் முகவரிக்குச் சென்றும் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

http://www.tn.gov.in/appforms/cert-legalheir.pdf

விண்ணப்பிக்கும் முறை
வாரிசுச் சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தினை நிரப்பி அதற்கான ஆவணங்களை இணைத்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் வழியாக அவர்களது விசாரணப் பரிந்துரைகளுடன் வட்டாச்சியரிடம் விண்ணப்பப் படிவத்தை அளிக்க வேண்டும். இதன் மேல் வட்டாட்சியர் தகுந்த விசாரணை அறிக்கைகள் பெறுவதுடன் அந்த விண்ணப்பத்தின் உண்மை நிலை அறிந்து வாரிசுச் சான்றிதழை வழங்குவார்.

வாரிசுச் சான்றிதழும் சில பிரச்சனைகளும்
வாரிசுச் சான்றிதழுக்கான விண்ணப்பப் படிவத்தில் முதல் நிலை வாரிசுகளின் பெயர்கள் மட்டும் இடம் பெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வகையில் இது தவறானதாகும். வாரிசுகளில் முதல்நிலை வாரிசுகள், இரண்டாம் நிலை வாரிசுகள் மற்றும் மூன்றாம் நிலை வாரிசுகள் என அனைத்துத் தகவல்களும் இடம்பெறவேண்டும்.

இந்த விண்ணப்பத்தில் கீழே ஒரு அட்டவணை தரப்பட்டுள்ளது. இந்த அட்டவணையின் ஐந்தாவது கலத்தில் ஒரு வாரிசு திருமணமானவரா அல்லது ஆகாதவரா என்ற ஒரு கேள்வி இடம் பெற்று உள்ளது. அது அத்துடன் முடிந்துவிடுகிறது. இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. இதைச் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

ஒருவர் இறந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு, அவர் வாழும் ஊரில் இல்லாமல் சுமார் நூறு 'கிலோ மீட்டர்' தொலைவில் ஒரு ஐம்பது 'ஏக்கர்' விவசாய நன்செய் நிலம் உள்ளது என்றும் வைத்துக் கொள்வோம். அவருக்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்; அந்த இரண்டு மகன்களில் ஒருவருக்குத் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் எனவும் வைத்துக் கொள்வோம். இங்கு இறந்து போனவர் தானாகத் தனது உழைப்பால் சம்பாதித்த தனது ஐம்பது 'ஏக்கர்' நிலத்தை யாருக்கும் உரிமை மாற்றம் செய்யாமல் இறந்து விடுகிறார். அவர் இறந்த உடன் அந்தச் சொத்து சட்டப்படி அந்தக் குடும்பச் சொத்தாக மாறிவிடுகிறது.

அச்சொத்தில் அவருடைய மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகனின் மனைவி மற்றும் அவரின் இரு குழந்தைகள் ஆகிய அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு உரிமை உள்ளது. தற்போது வழங்கப்படும் வாரிசுச் சான்றிதழில் இறந்தவருடைய மனைவி மற்றும் இரண்டு மகன்கள் மட்டுமே இடம் பெறுவர். ஒருவர் திருமணமானவர் என்று வேண்டுமென்றால் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், அவருடைய மனைவி அல்லது அவருடைய குழந்தைகள் குறித்த எந்த விவரமும் இருக்காது. ஆக, இறந்தவருடைய சொத்துக்கான 'பட்டாவை' மாற்றும் பொழுது வாரிசுச் சான்றிதழின் அடிப்படையில் இறந்தவரின் மனைவி, மற்றும் இரண்டு மகன்கள் பெயரிலேயே புதிய 'பட்டாவை' வழங்குவார்கள். அப்படி வழங்கப்படும் பட்டாவை வைத்துக்கொண்டு அச்சொத்தை இந்த மூவருமே இன்னொருவருக்கு விற்றுவிட முடியும். திருமணமான மகன் தனது மனைவிக்குத் தெரியாமல் இதைச் செய்யமுடியும். இவர்களின் சொத்து வெளியூரில் இருப்பதால், அங்குள்ளவர்களுக்கு இவர்களின் வாரிசுகள் பற்றிய தகவலும் தெரியாது. அவர்கள் என்ன செய்வார்கள்? பட்டாவை மட்டுமே வைத்துக்கொண்டு இவர்கள் தான் அச்சொத்தின் முழு உரிமையாளர்கள் என்று நினைத்து விடுவார்கள்; அங்குள்ள ஆவணப் பதிவாளரும் 'பட்டா' மற்றும் வாரிசுச் சான்றிதழின் அடிப்படையில் சொத்தின் உரிமையை மாற்றி, எந்தவித ஆட்சேபனையும் இன்றிப் பதிவு செய்து கொடுத்து விடுவார்.
ஒரு சொத்தை வாங்கும் எவரும், சொத்தை வாங்கும் பொழுது வாரிசுச் சான்றின் அடிப்படையிலேயே வாரிசுகளைக் கண்டறிய முடியும். ஆனால், இப்படி வட்டாட்சியர்கள், வாரிசுச் சான்றிதழில் நேரடியான வாரிசுகளை மட்டுமே கொண்டு வருகிறார்கள். ஒருவேளை அந்த நேரடியான வாரிசுகளில் ஒருவர் ஏறகனவே இறந்து விட்டிருந்தால், அவருக்குத் தனியாக இன்னொரு வாரிசுச் சான்றிதழ் வாங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இது தேவையற்றது.

இந்தத் தேவையற்ற அலைச்சலைக் குறைக்க, இறந்தவரின் மகன் மற்றும் மகள்கள் குறித்த விவரங்கள், அவர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் குறித்த விவரங்களையும் சேர்த்தே வழங்கவேண்டும். அதேபோல, ஒருவர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், அவருக்கு வட்டாட்சியர் வாரிசுச் சான்றிதழ் வழங்குவதில்லை. மாறாக, நீதிமன்றத்தின் மூலம் தீர்வு (பரிகாரம்) தேடிக்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது. இதுவும் தவறு. ஒருவர் இறந்து பல ஆண்டுகாலம் ஆகிவிட்ட பின்பு, அவருடைய வாரிசுகளைக் கண்டுபிடிப்பதில் பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்தால், அல்லது வாரிசு உரிமையில் சிலர் பிரச்சினை செய்தால் மட்டுமே வட்டாட்சியர் அந்த வாரிசுச் சான்றிதழுக்கான மனுதாரரிடம் நீதிமன்றத்தின் வாயிலாகத் தீர்வு பெற அறிவுறுத்தலாம்.

மேலும், ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும், அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புவது அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர அது வட்டாட்சியரை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்தக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக 'அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்' என்று சான்றுகளை அளித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு வாரிசுச் சான்றிதழ் வழங்கலாம். இல்லையெனில், அதாவது ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகியும் அவர் காணாமல் போனது குறித்துக் காவல்துறையில் சரியான புகார் அளித்தும், 'அவர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறார்' எனச் சட்டப்பூர்வமான சான்றுகளின்றி ஒருவர் வந்தால், காணாமல் போனவரின் பெயரையும் சேர்த்தே வாரிசுச் சான்றிதழ் வழங்கமுடியும். இதையும் பல வட்டாட்சியர்கள் செய்வதில்லை.

ஒருவர் தனது பெயரில் வங்கியில் பலகோடி ரூபாய்களை வைப்புநிதியாக வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தனது குடும்பத்துடன் வேறு ஒரு இடத்திற்குத் தனது வாழ்விடத்தை மாற்றிக்கொள்கிறார் எனவும் வைத்துக்கொள்வோம். பின்பு சில நாள்களில் அவர் மரணமடைந்து விட்டால், அவருடைய மனைவி வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கும் பொழுது, 'அவர் தற்போதைய வசிப்பிடத்தில் மிகக் குறுகிய காலத்திற்கு முன் தான் வந்தார்; ஆனால் பல்லாண்டுகள் வேறு ஒரு இடத்தில் வசித்திருக்கிறார்; அங்கு இன்னொரு திருமணம் செய்திருக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது; அப்படித் திருமணம் செய்திருந்தால் அங்கும் வாரிசுகள் இருக்கலாம்' போன்ற சந்தேகங்கள் வட்டாட்சியருக்கு ஏற்படுமாயின், உடனடியாக அவர், மனுதாரரின் கணவர் முன்பு வசித்த பகுதியின் வட்டாட்சியருக்கு ஒரு அலுவல் சார் கடிதம் எழுதி விவரங்களைக் கேட்கலாம்.

அப்போது அந்த வட்டாட்சியரும் அவர் முன்பு வசித்த பகுதி சிற்றூர்(கிராம) நிர்வாக அலுவலர் மற்றும் நில வருவாய் அலுவலரிடம் அறிக்கை பெற்று அதை இந்த வட்டாட்சியருக்கு அனுப்பினால், அதையும் ஒரு சான்றாக வைத்துக்கொண்டு இந்த வட்டாட்சியர் சான்று வழங்குவார்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 13 நவம்பர், 2020

மெட்ரிக் பள்ளி தொடங்குவது எப்படி?


கணேஷ் அரவிந்த்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்து போயிருப்பதால், ஆங்கில வழிக் கல்வியின் மேலான ஆர்வம் அதிகரித்து மெட்ரிக் பள்ளிகள் அதிகமாகத் தொடங்கப்பட்டன. இவை ஆங்கில மொழியை பயிற்று மொழிப் பாடமாகக் கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறது. இந்த மெட்ரிக் பள்ளிக் கல்வி நிறுவனங்கள் தனியார் அமைப்புகளால் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன. பள்ளிக்குத் தேவையான ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களைத் தனியார் அமைப்புகளே நியமித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, மாணவர்களிடம் தேவையான கல்விக் கட்டணங்களைப் பெற்றுக் கொள்கின்றன. இந்த மெட்ரிக் பள்ளிகளைத் தொடங்க என்ன செய்ய வேண்டும்?

மெட்ரிக் பள்ளி தொடங்கத் தேவையானவை



அமைப்பு பதிவு
மெட்ரிக் பள்ளி தொடங்கவிருக்கும் அமைப்பு ஒரு சங்கமாக (Society) அல்லது அறக்கட்டளை (Trust) ஆகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நிலம்
மெட்ரிக் பள்ளி தொடங்க உள்ள பதிவு செய்யப்பட்ட அமைப்பின் பெயரில் நிலம் கிரயமாகப் பெற்றிருக்க வேண்டும் அல்லது நிலம் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் (50 வருடத்திற்கு மேற்பட்ட ஒப்பந்தமாக) பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.இந்த நிலத்தின் அளவு குறைந்தது ஊரகப் பகுதியாக இருந்தால் 3 ஏக்கர் நிலமும், பேரூராட்சிப் பகுதியாக இருந்தால் 1 ஏக்கர் நிலமும், நகராட்சிப் பகுதியாக இருந்தால் 55 சென்ட் நிலமும் இருக்க வேண்டும்



கட்டிடங்கள்
1. மெட்ரிக் பள்ளிகளில் தொடக்கத்தில் ஒன்று முதல் ஆறு வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுவதால் ஆறு வகுப்புகளுக்குத் தேவையான கட்டிடங்கள் பாதுகாப்பு வசதிகளுடன் குறிப்பிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்று கட்டப்பட்டிருக்க வேண்டும்.
2. இந்தக் கட்டிடங்களுக்கு கட்டிடங்களுக்கான வரையறுக்கப்பட்ட மற்றும் தமிழ்நாடு அரசால் அனுமதியளிக்கப்பட்ட பொறியாளரிடமிருந்து கட்டிடத்திற்கான உறுதிச் சான்று பெற வேண்டும்.
3. இந்த கட்டிடங்களுக்கு பள்ளி அமையவுள்ள பகுதி வட்டாட்சியரிடம் கட்டிடத்திற்கான அனுமதி ( Building License) சான்றிதழ் பெற்றிட வேண்டும்.
4. இந்தக் கட்டிடங்களில் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருப்பதற்கான சான்றிதழை நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதியாக இருந்தால் குறிப்பிட்ட பகுதியின் சுகாதார ஆய்வாளரிடம் சுகாதாரச் சான்றிதழ் பெற வேண்டும். பிற பகுதிகளுக்கு மாவட்ட அளவிலான சுகாதாரத் துறை துணை இயக்குனர் அலுவலகத்திலிருந்து சான்றிதழ் பெற வேண்டும்.
5. கட்டிடங்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட அளவிலான கோட்டத் தீயணைப்பு அதிகாரியிடம் சான்று பெற வேண்டும்.

ஆசிரியர் மற்றும் பிற பணியாளர்கள்
பள்ளிக்குத் தேவையான தகுதியுடய ஆசிரியர் மற்றும் பிற பணியிடங்களுக்கானவர்கள் தேர்வு செய்து வைத்திருக்க வேண்டும்.

பள்ளியின் பங்களிப்புத் தொகை
பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி பள்ளிக்கான நிர்வாகத்தின் பங்களிப்பாக அரசுக்கு கரூவூலத்தின் வழியாகப் பணம் செலுத்தப்பட்டு அதற்கான ரசீது இணைக்கப்பட வேண்டும்.

500 க்குக் குறைவான எண்ணிக்கையுடைய மாணவர்கள் கொண்ட பள்ளிகள் - ரூபாய் 10,000
500 -லிருந்து 750 வரையிலான மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் - ரூபாய் 20,000
750 -லிருந்து 1000 வரையிலான மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் - ரூபாய் 40,000
1000 -லிருந்து 1500 வரையிலான மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் - ரூபாய் 60,000
1500 -லிருந்து 2000 வரையிலான மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் - ரூபாய் 80,000
2000 க்கும் அதிகமான மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் - ரூபாய் 1,00,000
செலுத்த வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்
பள்ளியின் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 1000/-ஐ அரசுக்கு கரூவூலத்தின் வழியாகப் பணம் செலுத்தப்பட்டு அதற்கான ரசீது இணைக்கப்பட வேண்டும்.

ஆய்வுக் கட்டணம்
பள்ளியின் ஆய்வுக்கட்டணமாக ரூபாய் 2500/-ஐ அரசுக்கு கரூவூலத்தின் வழியாகப் பணம் செலுத்தப்பட்டு அதற்கான ரசீது இணைக்கப்பட வேண்டும்.

பள்ளியின் நிதி ஆதாரம்
பள்ளியை நடத்தவிருக்கும் அமைப்புக்கு பள்ளியை நடத்த போதுமான நிதி ஆதாரம் இருப்பதற்கான சான்றாக பள்ளியின் பெயரில் வங்கியில் வகுப்புக்கு 20, 000 ரூபாய் வீதம் நிரந்தர வைப்புத் திட்டத்தில் செலுத்த வேண்டும்.

பள்ளியின் நடப்புச் செலவு நிதி
பள்ளியை நடத்தவிருக்கும் அமைப்புக்கு பள்ளியை ஓராண்டுக்கு நடத்த போதுமான நிதி ஆதாரம் இருப்பதற்கான சான்றாக பள்ளியின் பெயரில் வங்கியில் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் குறிப்பிட்ட அளவு பணம் சேமிப்பில் வைத்திருக்க வேண்டும்.

அருகிலுள்ள பள்ளிகளின் தடையில்லாச் சான்றிதழ்
பள்ளி அமையவுள்ள இடத்திலிருந்து உள்ளாட்சி அமைப்புகளின் நிலைக்கு ஏற்ப அதன் சுற்றளவிலான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து இந்த மெட்ரிக் பள்ளி தொடங்க தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். குறிப்பாக அருகிலுள்ள தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் பெற வேண்டும்.

விண்ணப்பப் படிவம்
விண்ணப்பப் படிவம் முழுவதும் நிரப்பப்பட்ட பின்பு அமைப்பின் செயலாளர் அல்லது பள்ளியின் தாளாளர் அல்லது பள்ளியின் மேலாளர் படிவத்தில் குறிப்பிட்ட உறுதிமொழிக்கு ஒப்புதல் அளித்து கையொப்பமிட வேண்டும். கையொப்பத்தின் கீழ் பள்ளியில் அவருடைய பொறுப்புக்கான முத்திரை இடப்பட வேண்டும்.

விண்ணப்பத்தில் இணைக்க வேண்டியவை
1. பள்ளியின் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 1000/- கருவூலத்தில் செலுத்தியதற்கான ரசீது. (உண்மையானது)
2. பள்ளியின் ஆய்வுக்கட்டணமாக ரூபாய் 2500/-ஐ கருவூலத்தில் செலுத்தியதற்கான ரசீது.(உண்மையானது)
3. பள்ளிக்கான நிர்வாகத்தின் பங்களிப்பாக கருவூலத்தில் செலுத்தியதற்கான தொகைக்கான ரசீது.(உண்மையானது)
4. உள்ளாட்சி அமைப்பில் கட்டிடங்களுக்கான அனுமதிக்குப் பெற்ற அனுமதிக் கடிதம் மற்றும் கட்டிடத்திற்கான வரைபட நகல்கள்
5. தமிழ்நாடு அரசால் அனுமதியளிக்கப்பட்ட பொறியாளரிடமிருந்து பெறப்பட்ட கட்டிடத்திற்கான உறுதிச் சான்று நகல்கள்
6. வட்டாட்சியரிடம் பெற்ற கட்டிடத்திற்கான அனுமதிச் சான்றிதழ் நகல்
7. கட்டிடங்களில் செய்யப்பட்டுள்ள சுகாதார வசதிக்கான சான்றிதழ் நகல்
8. கட்டிடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்த கோட்டத் தீயணைப்பு அதிகாரியின் சான்றிதழ் நகல்
9. பள்ளியின் பெயரில் வங்கியில் செலுத்தப்பட்ட நிரந்தர வைப்பு நிதிச் சான்றிதழின் நகல்
10. பள்ளியின் பெயரில் வங்கிக் கணக்கில் உள்ள சேமிப்புப் புத்தகத்தின் கணக்கு நகல்.
11. பள்ளிக்கு அருகிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தடையில்லாச் சான்றிதழ் நகல்கள்
12. பள்ளிக் கட்டிடத்தின் முன் தோற்றம் மற்றும் விளையாட்டு மைதானத்துடன் சேர்ந்த புகைப்படம், பின் தோற்றம் புகைப்படம்
13. பள்ளிக் கட்டிடத்தில் செய்யப்பட்டிருக்கும் இரு பாலின மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இருக்கை வசதிகள், உணவுக்கூட வசதிகள், கழிப்பிட வசதிகள், நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகள் போன்ற புகைப்படங்கள்
14. மெட்ரிக் பள்ளிக் கல்வி இயக்குனரகத்தால் அவ்வப்போது செயல்படுத்தப்படும் ஆணைப்படியான தேவைகள்
நகல்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பதிவு பெற்ற அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற்று இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பப் படிவம் அனுப்புதல்
மெட்ரிக் பள்ளிக் கல்வி இயக்குனர் முகவரிக்கு விண்ணப்பக் கடிதம் ஒன்றுடன் நிரப்பப்பட்ட விண்ணப்பபடிவம் இரண்டு படிவங்களாகத் தயார் செய்யப்பட்டு, மாவட்ட அளவிலான மெட்ரிக் பள்ளியின் ஆய்வாளருக்கு முதலில் அனுப்பப் பட வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் இணைப்புகள் அனைத்தும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மெட்ரிக் ஆய்வாளர் ஆய்வு
விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொண்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் விண்ணப்ப் படிவம் கிடைக்கப் பெற்ற சில நாட்களுக்குப் பிறகு விண்ணப்பப் படிவம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட இணைப்புகளை ஆய்வு செய்கிறார். அவை சரியாக இருக்கும் நிலையில் பின் பள்ளியில் ஆய்வு செய்ய ஒரு தேதியைக் குறிப்பிட்டு நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்புகிறார். கடிதத்தில் குறிப்பிட்ட நாளில் பள்ளிக்கான கட்டிடத்தில் நேரடி ஆய்வு மேற்கொள்கிறார். இந்த ஆய்வின் போது விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்பட்ட நகல்கள் அனைத்தின் உணமைச் சான்றுகளைப் பார்வையிட்டு அவை சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்கிறார். மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அனைத்தும் சரியாக இருக்கிறது என்று கருதும் நிலையில் அவர் மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனருக்கு ஒரு படிவத்தை இணைந்து பரிந்துரைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கிறார்.

மெட்ரிக் பள்ளி இயக்குனர் அனுமதி
மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தின் அடிப்படையில் விண்ணப்பப் படிவத்தில் வேறு குறைபாடுகள் எதுவுமிருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அனைத்தும் சரியாக இருக்கிறது என்று கருதும் நிலையில் அந்த பள்ளி தொடங்குவதற்கான அனுமதியை அளிக்கிறார்.

பிற அனுமதிகளும் அங்கீகாரங்களும்
1. பள்ளியில் கூடுதல் வகுப்புகளுக்குத் தேவையான கட்டிடம் மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டு குறிப்பிட்ட விண்ணப்பப் படிவம் பெற்று தேவையானவைகளை நிறைவு செய்து விண்ணப்பித்துப் பெறலாம்.
2. ஒன்று முதல் ஆறு வகுப்பு வரை பள்ளிக்கான தொடக்க அனுமதி பெற்ற பிறகு மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்கி பள்ளியை நடத்தலாம்.
3. பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்குப் பின்பு பள்ளிக்கான தற்காலிக அங்கீகாரம் கோரி அதற்கான விண்ணப்படிவம் நிரப்பி அனுப்பி தற்காலிக அங்கீகாரம் பெற வேண்டும்.
4. அதன் பிறகு ஏழு முதல் எட்டு வகுப்புகளுக்கு தொடக்க அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
5. அதன் பிறகு எழு முதல் எட்டு வகுப்புகளுக்கான தற்காலிக அங்கீகாரம் பெற வேண்டும்.
6. அதன் பிறகு ஒன்பது மற்றும் பத்து வகுப்புகளுக்கான தொடக்க அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
7. அதன் பிறகு ஒன்பது மற்றும் பத்து வகுப்புகளுக்கான தற்காலிக அங்கீகாரம் பெற வேண்டும்.
8. பின்னர் மேல்நிலை வகுப்புகளுக்கான சில பிரிவுகள் குறிப்பிட்டு தொடக்க அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
9. அடுத்து மேல்நிலை வகுப்புகளுக்கான தற்காலிக அங்கீகாரம் பெற வேண்டும்.

மெட்ரிக் பள்ளியின் கல்விக் கட்டணம்
தமிழ்நாடு அரசு, மெட்ரிக் பள்ளிகள் மாணவர்களிடம் பெறும் கட்டணத்தை நிர்ணயம் செய்யாததால் கட்டணத்தில் அதிக வேறுபாடுகள் இருந்தன. தற்போது இந்த பதின்மப் பள்ளிகளுக்கான கட்டணங்களை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையின் கீழான அமைப்பு ஒன்று நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமச்சீர்க் கல்வி
தமிழ்நாட்டில் முன்பு மெட்ரிக் பள்ளிகளில் மெட்ரிக் பாடத் திட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது, சமச்சீர்க் கல்வி முறையிலான ஆங்கில வழிப் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.

மெட்ரிக் பள்ளித் தேர்வுகள்
மெட்ரிக் பள்ளிகளில் மெட்ரிக் எனப்படும் பத்தாம் வகுப்புத் தேர்வும், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளும் தமிழ்நாடு அரசின் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் அளிக்கப்படுகின்றன.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 9 நவம்பர், 2020

நரகத்தைநிச்சயிக்கும் திருமணங்கள்

திருமணம் என்பது நபி (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இறைவன் தன் திருமறையில் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதைத் தன்னுடைய சான்றாகக் கூறுகிறான்.

وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(
அல் குர்ஆன் 30:21)



இந்த உறவிற்குப் பாலமாக அமைவது திருமணம் தான். ஆனால் பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு மத்தியில் இந்தத் திருமணங்கள் தான் ஓரிறைக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் களங்களாகத் திகழ்கின்றன.

வரதட்சணைக் கொடுமைகள் மற்றும் ஏராளனமான பித்அத்தான காரியங்கள் ஒருபுறம் இருந்தாலும் அதை விடக் கொடியதான இணை வைப்புக் காரியங்கள் தான் நம்முடைய இஸ்லாமியர்களின் திருமணங்களின் ஒவ்வொரு நிகழ்விலும் நிறைந்து காணப்படுகின்றன. இத்தகைய காரியங்கள் நம்மை நிரந்தர நரகத்தில் தள்ளிவிடும் என்பதை அறியாமல் ஆண்களும், பெண்களும் இவற்றைச் செய்கின்றனர்.

வரதட்சணை வாங்கும் போதும் இணைவைப்பு
திருமணத்திற்கு முன்பாக மாப்பிள்ளைக்குப் பெண்ணை முடிவு செய்வதற்காக நிச்சயதார்த்தம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி அரங்கேறும். அதில் தான் ஆலிம்சாவும், ஊர் ஜமாத்தார்களும், இரு வீட்டு குடும்பத்தார்களும் கூடி அமர்ந்து ஃபாத்திஹா ஓதி வரதட்சணைப் பணத்தை மணமகன் வீட்டாரிடம் ஒப்படைப்பார்கள். அடுத்தவன் காசை அநியாயமாகப் பறிப்பதே நரகத்திற்குக் கொண்டு செல்வதற்குப் போதுமான பாவம் என்றாலும் நிரந்தர நரகத்தை நிச்சயிக்க வேண்டும் என்பதற்காக அந்த வரதட்சணைப் பணத்தை ஒரு மஞ்சள் பையில் வைத்துக் கொடுப்பார்கள். அதில் மஞ்சள், வெற்றிலை, கற்கண்டு போன்றவை கணக்கிட்டு வைக்கப்பட்டிருக்கும். மஞ்சள் பை தான் மங்களகரமானது அவற்றைத் தான் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். மற்ற கலர்கள் நமக்குக் கேடு விளைவிக்கக் கூடியவை என்ற நம்பிக்கையில் தான் இவ்வாறு செய்கின்றனர்.

وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَۚ وَاِنْ يُّرِدْكَ بِخَيْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ‌ ؕ يُصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(
அல்குர்ஆன் 10:107)

நிச்சயமாக இறைவன் தான் இன்பங்களையும் துன்பங்களையும் தரக் கூடியவன் என்ற உண்மையை மறந்து மஞ்சள் நிறம் தான் மங்களம் என்பது நம்மை நரகிற்கு இட்டுச் செல்லும் இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்தல்
நிச்சயதார்த்தம் என்ற சடங்கு முடிந்தவுடன் குடும்பப் பெரியவர்கள் கூடி உட்கார்ந்து திருமண நாளை முடிவு செய்வார்கள். கண்டிப்பாக திருமணத்தை சனிக்கிழமை, அல்லது செவ்வாய்கிழமை வைக்கவே மாட்டார்கள். ஏனென்றால் இக்கிழமைகள் இவர்களின் பார்வையில் கெட்ட நாட்களாகும். நிச்சயமாக இந்த நம்பிக்கை இறை மறுப்புக் காரியம் என்பதில் சந்தேகம் இல்லை.

சனி, செவ்வாய் அல்லாத மற்ற கிழமைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வதற்காக பஞ்சாங்கம் போடப்பட்ட சிவகாசி காலண்டரை எடுத்து நல்ல நேரம், கெட்ட நேரம், இராகு காலம், எமகண்டம் பார்ப்பார்கள். அல்லது இமாம் சாபிடம் சென்று பால்கிதாப் போட்டுப் பார்த்து ஒரு நல்ல நாளைக் கூறுமாறு ஜோசியம் கேட்பார்கள். இவையெல்லாம் நம்மை நிரந்தர நரகத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய காரியங்கள் என்று நம்முடைய இஸ்லாமியச் சமுதாயத்தவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.

நல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது இறைவனை திட்டுவதாகும். ஏனென்றால் நமக்கு ஏற்படுகின்ற இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் அது இறைவனின் நாட்டப்படி தான் ஏற்படுகிறது. எந்த ஒரு நாளின் காரணமாகவும் அது நிகழ்வதில்லை.

4452 –
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا الزُّهْرِيُّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ بِيَدِي الْأَمْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஆதமுடைய மகன் காலத்தைத் திட்டுவதால் எனக்குத் துன்பம் தருகிறான். நான் தான் காலமாக இருக்கிறேன். என்னுடைய கையில் தான் அதிகாரம் உள்ளது. நான் தான் இரவையும் பகலையும் புரட்டுகிறேன்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி). நூல்: புகாரீ (4826)

மேலும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல், பால் கிதாப் பார்த்தல் இவையனைத்தும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் காரியங்களாகும். மேலும் நமக்கு நாளை என்ன நடக்கும்? நாளை நமக்கு நல்ல நேரமாக அமையுமா? அல்லது கெட்டதாக அமையுமா? என்று அறியக் கூடிய மறைவான ஞானம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக நம்புபவன் இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடியவன் தான்.

قُلْ لَّا يَعْلَمُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَيْبَ اِلَّا اللّٰهُ‌ؕ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ‏
அல்லாஹ் கூறுகிறான்: "வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக!
(
அல்குர்ஆன் 27:65)

وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ‌ؕ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்.
(
அல்குர்ஆன் 6:59)

9532 –
حدثنا عبد الله حدثني أبي ثنا يحيى بن سعيد عن عوف قال ثنا خلاس عن أبي هريرة والحسن عن النبي صلى الله عليه و سلم قال : من أتى كاهنا أو عرافا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه و سلم
تعليق شعيب الأرنؤوط : حسن رجاله ثقات رجال الصحيح

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்து விட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அஹ்மத் (9171)

4137 –
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ حَدَّثَنَا يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ صَفِيَّةَ عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

அறிவிப்பாளர்: ஸஃபிய்யா, நூல்: முஸ்லிம் (4137)

5316 –
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَكَمِ حَدَّثَنَا النَّضْرُ أَخْبَرَنَا إِسْرَائِيلُ أَخْبَرَنَا أَبُو حَصِينٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا عَدْوَى وَلَا طِيَرَةَ وَلَا هَامَةَ وَلَا صَفَرَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்று நோய் என்பதும் கிடையாது, சகுனம் என்பதும் இல்லை. ஆந்தை சகுனமும் கிடையாது. ஸபர் (பீடை) என்பதும் கிடையாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (5757)

3912 –
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ عَنْ عِيسَى بْنِ عَاَصِمٍ عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « الطِّيَرَةُ شِرْكٌ الطِّيَرَةُ شِرْكٌ ». ثَلاَثًا « وَمَا مِنَّا إِلاَّ وَلَكِنَّ اللَّهَ يُذْهِبُهُ بِالتَّوَكُّلِ ».

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சகுனம் பார்ப்பது இணை கற்பித்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி). நூல்: அபூதாவூத் (3411)

7045 –
حدثنا حسن حدثنا ابن لهيعة أخبرنا ابن هُبَيْرة عن أبي عبد الرحمن الحُبُلي عن عبد الله بن عمرو، قال: قال رسول اللهصلي الله عليه وسلم -: "من

مَنْ رَدَّتْهُ الطِّيَرَةُ مِنْ حَاجَةٍ فَقَدْ أَشْرَكَ". قَالُوا يَا رَسُولَ الله مَا كَفَّارَةُ ذَلِكَ؟، قَالَ: "أَنْ يَقُولَ أَحَدُهُمْ: اللَّهُمَّ لاَ خَيْرَ إِلاَّ خَيْرُكَ وَلاَ طَيْرَ إِلاَّ طَيْرُكَ، وَلاَ إِلَهَ غَيْرُكَ".

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவன் சகுனம் பார்த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான்.

அறிவிப்பவர்: இப்னு அம்ரு (ரலி). நூல்: அஹ்மத் (6748)

மார்க்கம் தடுத்த இத்தகைய பாவச் செயல்கள் தான் இன்றைக்கு இஸ்லாமியர்களின் திருமணங்களில் நிறைந்து காணப்படுகின்றன.

பந்தலிலும் ஓர் பாவ காரியம்
பிறகு திருமணத்திற்காகப் பந்தல் போடும் போது அதிலும் ஓர் அநியாயம் அரங்கேறும். பந்தலில் குலை தள்ளிய வாழை மரத்தைக் கட்டி வைப்பார்கள். குலை தள்ளிய மரத்தைக் கட்டி வைத்தால் இந்த மணமக்களுக்குக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை தான். குழந்தையைத் தரக்கூடிய அதிகாரம் எந்த வாழை மரத்திற்கும் கிடையாது. படைத்த இறைவனுக்கு மட்டும் தான் அந்த அதிகாரம் இருக்கிறது என்பதை இவர்கள் அறியவில்லை.

இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

لِّـلَّـهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ يَخْلُقُ مَا يَشَآءُ‌ ؕ يَهَبُ لِمَنْ يَّشَآءُ اِنَاثًا وَّيَهَبُ لِمَنْ يَّشَآءُ الذُّكُوْرَ ۙ‏
اَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا‌ ۚ وَيَجْعَلُ مَنْ يَّشَآءُ عَقِيْمًا‌ؕ اِنَّهٗ عَلِيْمٌ قَدِيْرٌ
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றல் உடையவன்.
(
அல்குர்ஆன் 42:49,50)

இப்ராஹீம் நபி, ஜகரியா நபி போன்ற நல்லடியார்கள் கூட தாம் நாடிய நேரத்தில் தங்களுக்கு ஒரு சந்ததியை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களின் தள்ளாத வயதில் தான் இறைவன் அவர்களுக்குக் குழந்தை பாக்கியத்தை வழங்குகின்றான் என்ற சரித்திரத்தையும் திருமறைக் குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது. ஆனால் நம் சமுதாயமோ வாடிப் போகும் வாழையில் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள்.

மாலையில் மறைந்துள்ள மர்மம்
மணமகன் திருமணத்திற்காகச் செல்லும் போது தன் கழுத்தில் மலர் மாலைகளைத் தொங்க விட்டுக் கொள்வார். மணத்திற்கு மாலை அணிவதாக நம் ஆலிம்கள் சப்பைக் கட்டு கட்டினாலும் மக்கள் ஒரு மர்மத்திற்காகவே இந்த மாலையை மாட்டுகிறார்கள்.

அதாவது திருமணம் முடிந்தவுடன் அந்த மாலையைக் கழற்றி, வீட்டின் ஒரு மூலையில் தொங்க விட்டு விடுவார்கள். அது சில காலங்கள் அப்படியே கிடக்கும். சில காலம் கழிந்தவுடன் அதை அப்படியே எடுத்து யாருடைய பாதமும் அதில் பட்டு விடக் கூடாதாம். பட்டால் திருமணத் தம்பதியினருக்கு ஆகாதாம். அதனால் அதனை குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள். அல்லது கிணறு அல்லது ஆற்றில் போட்டு விடுவார்கள். இப்படிப்பட்ட மர்மங்கள் இந்த மாலையில் மறைந்துள்ளன.

நிச்சயமாக நமக்கு ஏற்படக்கூடிய இன்ப துன்பங்கள் யாவும் இறைவனின் நாட்டப்படி தான் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் மாலையில் கால் பட்டால் மணமக்களுக்கு ஆகாது என்ற மூடநம்பிக்கை நம் சமுதாய மக்களின் மனங்களில் நிறைந்து காணப்படுகிறது. இதோ இறைவன் கூறுவதைப் பாருங்கள்

قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا ۚ هُوَ مَوْلٰٮنَاۚ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏
"
அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்" என்று கூறுவீராக.
(
அல்குர்ஆன் 9:51)

இந்த இறை நம்பிக்கையைக் குழி தோண்டிப் புதைக்கின்ற மர்மம் தான் மாலையில் மறைந்துள்ளது என்பதை மக்கள் என்றைக்கு உணர்வார்களோ தெரியவில்லை.

தாலி கட்டுதல்
தாலி என்ற வார்த்தையே மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பி அடிக்கப்பட்ட ஒன்றாகும். தாலிக்கும் இஸ்லாத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்று தாலி இல்லாவிட்டால் திருமணமே இல்லை என்ற நிலை தான் இஸ்லாமியர்களிடம் நிறைந்து காணப்படுகிறது.

மணமகன், மணமகளின் கழுத்தில் கட்டுவதற்காகத் தாலி என்று ஒன்றைத் தயார் செய்வார்கள். அதில் இத்தனை கருகமணிகள் இருக்க வேண்டும். அதற்குப் பின் ஒரு தங்கத்தால் ஆன ஒரு கோதுமையைக் கோர்ப்பார்கள். அதற்குப் பின் ஒரு பவளத்தைக் கோர்ப்பார்கள். பிறகு கருகமணி என்று இந்த வரிசையில் கோர்த்து, தாய்மார்கள் தாலியைத் தயார் செய்வார்கள். இன்றைக்கு ரெடிமேடாக தாலிச் சங்கிலி என்றே தயாரிக்கப்படுகிறது. நிச்சயமாக இந்தத் தாலி என்பதும், தாலி கட்டுதல் என்பதும் பகிரங்கமான இணை வைப்புக் காரியமே!

இந்தத் தாலியின் மூலம் தான் மணமக்கள் இணைந்து வாழ்கிறார்கள். அதில் உள்ள கருகமணிகளும் கோதுமையும் பவளமும் தான் இவர்களுக்கு நல்ல வாழ்வைத் தரும் என்ற நம்பிக்கையிலேயே இவற்றை மணப் பெண்ணின் கழுத்தில் தொங்க விடுகிறார்கள். நமக்கு நன்மை தரும் என நம்பி எதைத் தொங்க விட்டாலும் அது இணை வைப்புக் காரியம் தான்.

17558-
حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي مَنْصُورٍ ، عَنْ دُخَيْنٍ الْحَجْرِيِّ ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ إِلَيْهِ رَهْطٌ ، فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ ، فَقَالُوا : يَا رَسُولَ اللهِ ، بَايَعْتَ تِسْعَةً وَتَرَكْتَ هَذَا ؟ قَالَ : إِنَّ عَلَيْهِ تَمِيمَةً فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا ، فَبَايَعَهُ ، وَقَالَ : مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தாயத்தைத் தொங்க விடுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.

அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர்(ரலி). நூல்: அஹ்மத் (16781)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

17539-
حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ ، أَخْبَرَنَا حَيْوَةُ ، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عُبَيْدٍ ، قَالَ : سَمِعْتُ مِشْرَحَ بْنَ هَاعَانَ ، يَقُولُ : سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ ، يَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : مَنْ تَعَلَّقَ تَمِيمَةً ، فَلاَ أَتَمَّ اللَّهُ لَهُ ، وَمَنْ تَعَلَّقَ وَدَعَةً ، فَلاَ وَدَعَ اللَّهُ لَهُ.

யார் தாயத்தைத் தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான். யார் சிப்பியைத் தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்ற மாட்டான்.

அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர்(ரலி). நூல்: அஹ்மத் (16763)

20242-
حَدَّثَنَا خَلَفُ بْنُ الْوَلِيدِ ، حَدَّثَنَا الْمُبَارَكُ ، عَنِ الْحَسَنِ قَالَ : أَخْبَرَنِي عِمْرَانُ بْنُ حُصَيْنٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْصَرَ عَلَى عَضُدِ رَجُلٍ حَلْقَةً ، أُرَاهُ قَالَ مِنْ صُفْرٍ ، فَقَالَ : وَيْحَكَ مَا هَذِهِ ؟ قَالَ : مِنَ الْوَاهِنَةِ ؟ قَالَ : أَمَا إِنَّهَا لاَ تَزِيدُكَ إِلاَّ وَهْنًا انْبِذْهَا عَنْكَ ؛ فَإِنَّكَ لَوْ مِتَّ وَهِيَ عَلَيْكَ مَا أَفْلَحْتَ أَبَدًا.
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவருடைய கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் இருந்தது. இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர், "வாஹினா (தொடையில் ஏற்படும் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்)" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் "இதைக் கழற்றி விடு! இது உனக்கு பலஹீனத்தைத் தான் ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் நீ ஒரு போதும் வெற்றி பெற மாட்டாய்" என்று கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (19149)

எனவே தாலி என்ற பெயரில் நாம் கட்டுகின்றவைகள் எவ்வளவு பெரிய மாபாதகச் செயல் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆரத்தி எடுத்தல்
பிறகு மணமகனையும், மணமகளையும் நிறுத்தி வைத்து அவர்கள் மீது பட்ட கண் திருஷ்டியெல்லாம் நீங்க வேண்டும் என்பதற்காக ஆரத்தி எடுப்பார்கள்.

ஒரு தட்டிலே கற்பூரத்தைக் கொளுத்தி வைத்து அதை மணமகன், மணப்பெண் ஆகியோரின் மீது முகத்திற்கு நேராக மூன்று தடவை சுற்றி விட்டால் அவர்கள் மீது பட்ட கண் திருஷ்டியையெல்லாம் அந்த நெருப்பும் கற்பூரமும் நீக்கி விடும் என்ற நம்பிக்கையில் இந்த ஆரத்தி எடுக்கப்படுகிறது.

நிச்சயமாக இது ஒரு நெருப்பை வணங்கும் செயலே தவிர வேறில்லை. நிச்சயமாக எந்த ஒன்றும் நமக்கு இறைவனிடமிருந்து ஏற்படக் கூடிய எதையும் தடுத்து விட முடியாது. ஒரு இறை நம்பிக்கையாளனின் கொள்கையாக இருக்க வேண்டும். அனைத்து சிரமங்களையும் நீக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான் என்றே நம்பிக்கை கொள்ள வேண்டும்.

قُلْ مَنْ يُّنَجِّيْكُمْ مِّنْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ تَدْعُوْنَهٗ تَضَرُّعًا وَّخُفْيَةً ۚ لَٮِٕنْ اَنْجٰٮنَا مِنْ هٰذِهٖ لَـنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ‏
قُلِ اللّٰهُ يُنَجِّيْكُمْ مِّنْهَا وَمِنْ كُلِّ كَرْبٍ ثُمَّ اَنْـتُمْ تُشْرِكُوْنَ‏

"
தரை மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?" என்று கேட்பீராக! "இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்" என்றும் கூறுவீராக!
(
அல்குர்ஆன் 6:63,64)

தாய், தந்தையருக்கு ஸஜ்தாச் செய்தல்
சில ஊர்களில் திருமணச் சடங்குகள் முடிந்ததும் மணமகனும், மணப் பெண்ணும் தாய் தந்தையரின் கால்களில் விழுந்து ஸஜ்தாச் செய்வார்கள். நிச்சயமாக இது இணை வைப்பின் உச்ச கட்டம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அல்லாஹ் கூறுகிறான்:

وَمِنْ اٰيٰتِهِ الَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ‌ؕ لَا تَسْجُدُوْا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوْا لِلّٰهِ الَّذِىْ خَلَقَهُنَّ اِنْ كُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ‏
இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!
(
அல்குர்ஆன் 41:37)

இவ்வாறு நம்முடைய இஸ்லாமியர்களின் திருமணங்களில் நிறைந்து காணப்படக் கூடிய இன்னும் பல இணை வைப்புக் காரியங்களை நாம் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். நபியவர்கள் எந்தத் திருமணத்தை தன்னுடைய வழிமுறையாக வலியுறுத்தினார்களோ அந்தத் திருமணங்கள் இன்றைக்கு ஷைத்தானின் வழிமுறைகளாகக் காட்சியளிக்கின்றன. எனவே நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும் இது போன்ற இணை வைப்புக் காரியங்களை தவிர்த்து, இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற்ற மக்களாக இறைவன் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

பிறந்தகுழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பது சரியானதா?

  டயாப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை. டயாப்பர் அணிவிக்கக் கூட...

Popular Posts