லேபிள்கள்

வியாழன், 19 நவம்பர், 2020

பிறப்பு இறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி?

எல். துரைராஜ்

இந்தியாவில் தற்போது குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல், பல்வேறு அரசு நடைமுறைகளுக்கு வயதை உறுதி செய்தல் போன்ற பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழும், குடும்பத்திலுள்ள ஒருவர் இறந்து விட்ட நிலையில் அவருடைய சொத்துக்கள் பகிர்வுகளுக்கும், அவர் தொடர்பான பிற அரசு நடைமுறைகளுக்கும் இறப்புச் சான்றிதழும் அவசியமாக உள்ளது. பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்வதன் அவசியம், அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகள் போன்றவைகளையும் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.

பிறப்பு/இறப்பு பதிவுகள்
இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் இந்தியப் பெற்றோர்களுக்கு நிகழும் ஒவ்வொரு பிறப்பிற்கும், அல்லது நிகழும் ஒவ்வொரு இறப்பிற்கும் பதிவு செய்தல் என்பது சட்டப்படி (Registration of Births and Deaths Act, 1969) கட்டாயமாகிறது. எனவே பிறப்பு மற்றும் இறப்பை முறையாகப் பதிவு செய்தல் அனைவரது கடமையாகும். இது திட்டமிடல் உள்ளிட்ட பல பணிகளுக்கு அரசிற்கு உதவிகரமாக இருக்கும். எனவே அனைவரும் பிறப்பு மற்றும் இறப்பைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும். முன்பெல்லாம் குழந்தை பிறத்தல் என்பது வழக்கமாக வீடுகளிலேயே நிகழும் ஒரு நிகழ்வு என்பதால், உள்ளூரிலேயே உள்ள 'மணியகாரர், 'தண்டல்'காரர்கள்' (சிற்றூர் -கிராம- உதவியாளர்கள்) உள்ளிட்டவர்களே பிறப்பைப் பதிவு செய்வதில் அனைத்து வேலைகளையும் செய்து விடுவார்கள். பல பதிவு செய்யப்படாமல் விடுபட்டும் போயிருக்கும். ஆனால், தற்போது பெரும்பான்மையாகக் குழந்தைப் பிறப்பு என்பது மருத்துவமனைகளிலேயே நிகழ்கிறது. இதனால் மருத்துவமனை நிர்வாகங்களே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிலோ அல்லது வருவாய்த்துறை அமைப்பிலோ குழந்தை பிறப்பு குறித்த தகவல்களைப் பதிவு செய்து விடுகின்றன. வீட்டிலேயே குழந்தை பிறப்பு நிகழும் நிலையிலும் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



இதுபோல் இறப்புகள் மருத்துவமனைகளில் நிகழ்ந்தால் மருத்துவமனை நிர்வாகங்கள், சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் இறப்பைப் பதிவு செய்து விடுகின்றன. வீடுகளில் நிகழும் இறப்புக்களை குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பிறப்பு/இறப்பு பதிவு அலுவலகங்கள்
சிற்றூர்களில் நிகழும் குழந்தை பிறப்புகள் அனைத்தும், அந்த சிற்றூருக்கான கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்யப்பட வேண்டும். பேரூராட்சிப் பகுதியில் பேரூராட்சியின் செயல் அலுவலர் அலுவலகத்திலும், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் அந்தப் பகுதிக்கான சுகாதார ஆய்வாளர் அல்லது நகர/மாநகரச் சுகாதார அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

பிறப்பு/இறப்பு சான்றிதழ்கள் பெறுவது எப்படி?
குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டிய நிலையில் பிறப்புச் சான்றிதழ் தேவையாக உள்ளது.இந்நிலையில் பிறப்புச் சான்றிதழ் கோரி யாரிடம் விண்ணப்பிப்பது என்கிற கவலை எழலாம்?

குழந்தை மருத்துவமனையில் பிறந்திருந்தால் அந்த மருத்துவமனை அமைந்துள்ள இடம் சிற்றூராக இருந்தால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமும், பேரூராட்சியாக இருந்தால் பேரூராட்சி செயல் அலுவலரிடமும், நகராட்சி அல்லது மாநகராட்சிப் பகுதியாக இருந்தால் சுகாதார ஆய்வாளர்/சுகாதார அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் இதற்கென விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கின்றன. இந்த விண்ணப்பப் படிவங்களைப் பெற்று குழந்தை பிறந்த நாள், தாய், தந்தை பெயர், பிறந்த இடம் போன்ற தகவல்களை நிரப்பி அதற்கான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். நாம் விண்ணப்பப் படிவத்தில் நிரப்பிய தகவல்களும், பதிவு செய்யப்பட்ட தகவல்களும் சரியாக இருக்கும் நிலையில் இரு நாட்களுக்குள்ளாக பிறப்புச் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தால் வழங்கப்படுகின்றன.

சிற்றுராக இருந்தால் கிராம நிர்வாக அலுவலகங்களில் விண்ணப்பித்துப் பெறலாம்.
இதுபோலவே இறப்புச் சான்றிதழ்களுக்கும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் விண்ணப்பித்துப் பெறலாம்.

பிறப்பு/இறப்புச் சான்றிதழ்களில் மாற்றங்கள்
பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் மருத்துவமனை நிர்வாகத்திலிருந்து கொடுக்கப்பட்ட தகவல்களில் சிறு பிழைகள், தவறுகள் போன்றவை இருந்திருக்கலாம். குறிப்பாக, தாய், தந்தை பெயர்களில் எழுத்துப் பிழைகள் அல்லது தாய், தந்தை பெயர் இட மாற்றங்கள் போன்ற தவறுகள் இருந்திருக்கலாம். இது போன்ற சூழ்நிலையில் நாம் சரியான தகவல்களை ஆதாரத்துடம் அளித்து பதிவு செய்யப்பட்ட தகவல்களில் திருத்தங்கள் செய்ய வேண்டுகோள் கடிதம் ஒன்றை அளிக்க வேண்டும். இதைப் பரிசீலிக்கும் அலுவலர்கள் நாம் கொடுக்கும் தகவல்கள் சரியானவை என முடிவு செய்யும் நிலையில் பதிவு செய்யப்பட்ட தகவல்களில் திருத்தங்கள் செய்வர். அதன் பின்னர் பிறப்புச் சான்றிதழ்களை வழக்கம் போல் விணப்பித்துப் பெற முடியும்.

குழந்தை பிறந்த நிலையில் குழந்தைப் பெயர் இல்லாமல் குழந்தையின் பாலினம் மட்டும் குறிப்பிட்டு தாய், தந்தை பெயர், பிறந்த நாள் போன்ற தகவல்கள் முதலில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்நிலையில் பிறப்புச் சான்றிதழில் குழந்தைப் பெயரையும் சேர்த்து சான்றிதழ்கள் பெற விரும்பினால் குழந்தைப் பெயர் சேர்த்துக் கொள்ள வேண்டுதல் கடிதம் அளிக்கலாம். அதற்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இதுபோலவே இறப்புச் சான்றிதழ்களிலும் தேவையான மாற்றங்களை ஆதாரங்களுடன் தெரிவித்து மாற்றம் செய்து கொள்ள முடியும்.

பிறப்பு/இறப்பு தாமதப் பதிவுகள்
குழந்தைகள் பிறப்பு அல்லது இறப்புகள் வீடுகளில் நிகழ்ந்துள்ள நிலையில் அதைச் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் குறிப்பிட்ட நாட்களுக்குள் (பிறப்பு - 15 நாட்கள், இறப்பு- 30 நாட்கள்) பதிவு செய்யாமல் விடுபட்டுப் போய் விடலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒரு வருடம் வரை பதிவு செய்ய முடியாத நிலையைத் தெரிவித்து, தகுந்த ஆதாரங்களுடன் அதற்கான தாமதக் கட்டணத்தைச் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் அருகிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிமன்ற உத்தரவு பெற்ற பின்னரே சான்றிதழ் பெற முடியும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts