லேபிள்கள்

திங்கள், 16 நவம்பர், 2020

வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி?

எல். துரைராஜ்

ஒருவர் இறந்து விட்ட பின்பு அவரின் பணம் மற்றும் சொத்துக்களை அவருடைய வாரிசுகள் அனைவரும் பகிர்ந்து கொள்வதற்கு அவர்களிடையே பிரச்சனைகள் ஏதும் வராமலிருப்பதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது. இந்த வாரிசுச் சான்றிதழ் என்பது சொத்துக்கள் குறித்த நடைமுறைகளுக்கே பெரும்பாலும் தேவைப்படுவதால், இது இன்றியமையாத சான்றிதழாகக் கருதப்படுகிறது.

வாரிசுச் சான்றிதழ் மதச் சட்டங்களின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அவர் சார்ந்துள்ள மதங்களுக்கான தனிச் சட்டங்களின்படி வாரிசுச் சான்று வழங்கப்படுகிறது. இந்து சமயத்தவர்களுக்கு இந்து திருமணச் சட்டத்தின் வழிகாட்டல்களின் அடிப்படையில் வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது. வட்டாட்சியர் அளிக்கும் வாரிசுச் சான்றிதழில் குறிப்பிடப்படும் அனைத்துத் தகவல்களுக்கும் வட்டாட்சியரே முழுப் பொறுப்பாவார். வாரிசுதாரர்களில் எவரேனும் ஒருவர் பெயர் விட்டுப்போயிருந்து அது பின்னாளில் ஒரு பிரச்சினையானாலும் அதற்கு வட்டாட்சியரே முழுப் பொறுப்பாவார். எனவே வட்டாட்சியர்கள் இச்சான்றிதழ் அளிப்பதில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர்.



விண்ணப்பப்படிவம்
இன்றைய நிலையில் உள்ள வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கிறது. இணையத்தில் கிழ்காணும் முகவரிக்குச் சென்றும் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

http://www.tn.gov.in/appforms/cert-legalheir.pdf

விண்ணப்பிக்கும் முறை
வாரிசுச் சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தினை நிரப்பி அதற்கான ஆவணங்களை இணைத்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் வழியாக அவர்களது விசாரணப் பரிந்துரைகளுடன் வட்டாச்சியரிடம் விண்ணப்பப் படிவத்தை அளிக்க வேண்டும். இதன் மேல் வட்டாட்சியர் தகுந்த விசாரணை அறிக்கைகள் பெறுவதுடன் அந்த விண்ணப்பத்தின் உண்மை நிலை அறிந்து வாரிசுச் சான்றிதழை வழங்குவார்.

வாரிசுச் சான்றிதழும் சில பிரச்சனைகளும்
வாரிசுச் சான்றிதழுக்கான விண்ணப்பப் படிவத்தில் முதல் நிலை வாரிசுகளின் பெயர்கள் மட்டும் இடம் பெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வகையில் இது தவறானதாகும். வாரிசுகளில் முதல்நிலை வாரிசுகள், இரண்டாம் நிலை வாரிசுகள் மற்றும் மூன்றாம் நிலை வாரிசுகள் என அனைத்துத் தகவல்களும் இடம்பெறவேண்டும்.

இந்த விண்ணப்பத்தில் கீழே ஒரு அட்டவணை தரப்பட்டுள்ளது. இந்த அட்டவணையின் ஐந்தாவது கலத்தில் ஒரு வாரிசு திருமணமானவரா அல்லது ஆகாதவரா என்ற ஒரு கேள்வி இடம் பெற்று உள்ளது. அது அத்துடன் முடிந்துவிடுகிறது. இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. இதைச் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

ஒருவர் இறந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு, அவர் வாழும் ஊரில் இல்லாமல் சுமார் நூறு 'கிலோ மீட்டர்' தொலைவில் ஒரு ஐம்பது 'ஏக்கர்' விவசாய நன்செய் நிலம் உள்ளது என்றும் வைத்துக் கொள்வோம். அவருக்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்; அந்த இரண்டு மகன்களில் ஒருவருக்குத் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் எனவும் வைத்துக் கொள்வோம். இங்கு இறந்து போனவர் தானாகத் தனது உழைப்பால் சம்பாதித்த தனது ஐம்பது 'ஏக்கர்' நிலத்தை யாருக்கும் உரிமை மாற்றம் செய்யாமல் இறந்து விடுகிறார். அவர் இறந்த உடன் அந்தச் சொத்து சட்டப்படி அந்தக் குடும்பச் சொத்தாக மாறிவிடுகிறது.

அச்சொத்தில் அவருடைய மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகனின் மனைவி மற்றும் அவரின் இரு குழந்தைகள் ஆகிய அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு உரிமை உள்ளது. தற்போது வழங்கப்படும் வாரிசுச் சான்றிதழில் இறந்தவருடைய மனைவி மற்றும் இரண்டு மகன்கள் மட்டுமே இடம் பெறுவர். ஒருவர் திருமணமானவர் என்று வேண்டுமென்றால் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், அவருடைய மனைவி அல்லது அவருடைய குழந்தைகள் குறித்த எந்த விவரமும் இருக்காது. ஆக, இறந்தவருடைய சொத்துக்கான 'பட்டாவை' மாற்றும் பொழுது வாரிசுச் சான்றிதழின் அடிப்படையில் இறந்தவரின் மனைவி, மற்றும் இரண்டு மகன்கள் பெயரிலேயே புதிய 'பட்டாவை' வழங்குவார்கள். அப்படி வழங்கப்படும் பட்டாவை வைத்துக்கொண்டு அச்சொத்தை இந்த மூவருமே இன்னொருவருக்கு விற்றுவிட முடியும். திருமணமான மகன் தனது மனைவிக்குத் தெரியாமல் இதைச் செய்யமுடியும். இவர்களின் சொத்து வெளியூரில் இருப்பதால், அங்குள்ளவர்களுக்கு இவர்களின் வாரிசுகள் பற்றிய தகவலும் தெரியாது. அவர்கள் என்ன செய்வார்கள்? பட்டாவை மட்டுமே வைத்துக்கொண்டு இவர்கள் தான் அச்சொத்தின் முழு உரிமையாளர்கள் என்று நினைத்து விடுவார்கள்; அங்குள்ள ஆவணப் பதிவாளரும் 'பட்டா' மற்றும் வாரிசுச் சான்றிதழின் அடிப்படையில் சொத்தின் உரிமையை மாற்றி, எந்தவித ஆட்சேபனையும் இன்றிப் பதிவு செய்து கொடுத்து விடுவார்.
ஒரு சொத்தை வாங்கும் எவரும், சொத்தை வாங்கும் பொழுது வாரிசுச் சான்றின் அடிப்படையிலேயே வாரிசுகளைக் கண்டறிய முடியும். ஆனால், இப்படி வட்டாட்சியர்கள், வாரிசுச் சான்றிதழில் நேரடியான வாரிசுகளை மட்டுமே கொண்டு வருகிறார்கள். ஒருவேளை அந்த நேரடியான வாரிசுகளில் ஒருவர் ஏறகனவே இறந்து விட்டிருந்தால், அவருக்குத் தனியாக இன்னொரு வாரிசுச் சான்றிதழ் வாங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இது தேவையற்றது.

இந்தத் தேவையற்ற அலைச்சலைக் குறைக்க, இறந்தவரின் மகன் மற்றும் மகள்கள் குறித்த விவரங்கள், அவர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் குறித்த விவரங்களையும் சேர்த்தே வழங்கவேண்டும். அதேபோல, ஒருவர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், அவருக்கு வட்டாட்சியர் வாரிசுச் சான்றிதழ் வழங்குவதில்லை. மாறாக, நீதிமன்றத்தின் மூலம் தீர்வு (பரிகாரம்) தேடிக்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது. இதுவும் தவறு. ஒருவர் இறந்து பல ஆண்டுகாலம் ஆகிவிட்ட பின்பு, அவருடைய வாரிசுகளைக் கண்டுபிடிப்பதில் பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்தால், அல்லது வாரிசு உரிமையில் சிலர் பிரச்சினை செய்தால் மட்டுமே வட்டாட்சியர் அந்த வாரிசுச் சான்றிதழுக்கான மனுதாரரிடம் நீதிமன்றத்தின் வாயிலாகத் தீர்வு பெற அறிவுறுத்தலாம்.

மேலும், ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும், அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புவது அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர அது வட்டாட்சியரை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்தக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக 'அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்' என்று சான்றுகளை அளித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு வாரிசுச் சான்றிதழ் வழங்கலாம். இல்லையெனில், அதாவது ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகியும் அவர் காணாமல் போனது குறித்துக் காவல்துறையில் சரியான புகார் அளித்தும், 'அவர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறார்' எனச் சட்டப்பூர்வமான சான்றுகளின்றி ஒருவர் வந்தால், காணாமல் போனவரின் பெயரையும் சேர்த்தே வாரிசுச் சான்றிதழ் வழங்கமுடியும். இதையும் பல வட்டாட்சியர்கள் செய்வதில்லை.

ஒருவர் தனது பெயரில் வங்கியில் பலகோடி ரூபாய்களை வைப்புநிதியாக வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தனது குடும்பத்துடன் வேறு ஒரு இடத்திற்குத் தனது வாழ்விடத்தை மாற்றிக்கொள்கிறார் எனவும் வைத்துக்கொள்வோம். பின்பு சில நாள்களில் அவர் மரணமடைந்து விட்டால், அவருடைய மனைவி வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கும் பொழுது, 'அவர் தற்போதைய வசிப்பிடத்தில் மிகக் குறுகிய காலத்திற்கு முன் தான் வந்தார்; ஆனால் பல்லாண்டுகள் வேறு ஒரு இடத்தில் வசித்திருக்கிறார்; அங்கு இன்னொரு திருமணம் செய்திருக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது; அப்படித் திருமணம் செய்திருந்தால் அங்கும் வாரிசுகள் இருக்கலாம்' போன்ற சந்தேகங்கள் வட்டாட்சியருக்கு ஏற்படுமாயின், உடனடியாக அவர், மனுதாரரின் கணவர் முன்பு வசித்த பகுதியின் வட்டாட்சியருக்கு ஒரு அலுவல் சார் கடிதம் எழுதி விவரங்களைக் கேட்கலாம்.

அப்போது அந்த வட்டாட்சியரும் அவர் முன்பு வசித்த பகுதி சிற்றூர்(கிராம) நிர்வாக அலுவலர் மற்றும் நில வருவாய் அலுவலரிடம் அறிக்கை பெற்று அதை இந்த வட்டாட்சியருக்கு அனுப்பினால், அதையும் ஒரு சான்றாக வைத்துக்கொண்டு இந்த வட்டாட்சியர் சான்று வழங்குவார்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

ஹேண்ட் பேக்கால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்... பெண்களே கவனம்!

தற்போதுள்ள வாழ்க்கை முறையில் பெண்கள் எங்கு சென்றாலும் கைப்பையை தங்களுடன் எடுத்து செல்கின்றனர். பல்வேறு வகைகளில் தயார் செய்யப்படும் கைப...

Popular Posts