லேபிள்கள்

வியாழன், 21 பிப்ரவரி, 2019

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (41 – 50)

மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ  

41) சூரது புஸ்ஸிலத் – தெளிவு
அத்தியாயம் 41
வசனங்கள் 54
அரபு மொழியில் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடம் இருந்து அனுப்பபட்ட இந்த அல்குர்ஆனில் அறிவுடையோருக்கு பல்வேறு படிப்பினைகள் இருப்பதாகஅல்லாஹ் கூறுகின்றான்.
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது.
அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன.(41:2,3)
உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன்(யாவற்றையும்) செவியேற்பவன் நன்கறிபவன்.(41:36)
42) சூரதுஸ் ஷுரா – கலந்தாலோசனை
அத்தியாயம் 42
வசனங்கள் 53
அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தவர்கள் அவனிலே முழுமையாக சார்ந்திருப்பதுடன் பெரும் பாவங்களை, மானக்கேடானவற்றையும் விட்டும் தம்மை காத்துக்கொள்வர், மேலும் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று, அவனை தொழுது, தமக்குள்ளே கலந்தாலோசித்துக் கொள்வர் என்கின்றான்.
அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.
இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் – அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக்கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள். (42:37,38)
43) சூரதுஸ் ஸுக்ருஃப் – அலங்காரம்
அத்தியாயம் 43
வசனங்கள் 89
உலக மாயைகளை பற்றி இந்த அத்தியாயத்தின் 32ம் வசனம் தொடக்கம் சொல்லிக் காட்டுகின்றான். நிராகரிப்போருக்கு இந்த உலகத்தில் கிடைக்கும் இன்பங்களையும்சுட்டிக்காட்டுகின்றான்.
தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்); ஆனால்இ இவையெல்லாம் இவ்வுலக வாழ்ககையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வெறில்லை ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம். (43:35)
பயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள். (43:67)
44) சூரதுத் துஹான் – புகை
அத்தியாயம் 44
வசனங்கள் 59
நாளை மறுமையின் அமளிதுமளிகளைப் பற்றி விபரக்கும் இந்த அத்தியாயத்தின் 9 வது வசனம் தொடக்கம் மறுமை நம்பிக்கையில் சந்தேகப்பட்டவர்களாக அவர்கள்விளையாடிக் கொண்டிருப்பர் என எல்லாம் வல்ல அல்லாஹ் எடுத்தியம்புகின்றான்.
ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.
(அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; 'இது நோவினை செய்யும் வேதனையாகும்.'
'எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்' (எனக் கூறுவர்). (44:10-12)
45) சூரதுல் ஜாஸியா – முழந்தாள் இடல்
அத்தியாயம் 45
வசனஙகள் 37
நாளை மறுமையில் நிகழும் ஒரு மோசமான நிலையை அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் 28ம் வசனத்தில் விபரிக்கின்றான்.
(அன்று) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க (நபியே!) நீர் காண்பீர்; ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் (பதிவு) புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள்(உலகில்) செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள். (45:28)
46) சூரதுல் அஹ்காப் – மணல் குன்றுகள்
அத்தியாயம் 46
வசனங்கள் 35
ஆத் சமுதாயத்திற்கு நபியாக அனுப்பட்ட ஹுத் (அலை) அவர்கள் மணல் குன்றுகளில் இருந்து அந்த சமுதாயத்தை அச்சமூட்டி எச்சரிக்கை செய்து நேர்வழியின் பால் அழைத்ததைஅல்லாஹ் இவ்வத்தியாயத்தின் 21ம் வசனத்தில் சொல்லிக் காட்டுகின்றான்.
மேலும் 'ஆது' (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூது) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் – (அவர்)தம் சமூகத்தாரை, 'அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் – நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான்பயப்படுகிறேன்' என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தவை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக. (46:21)
47) சூரது முஹம்மத்
அத்தியாயம் 47
வசனங்கள் 38
நபியவர்களை பற்றி 2வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்…
எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது – இது அவர்களுடைய இறைவினிடமிருந்து (வந்து)ள்ளஉண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடை நிலையையும் சீராக்குகின்றான். (47:2)
மேலும் இந்த நபியை பின்பற்றுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை என்பதை இந்த அத்தியாயத்தின் இருதியில் குறிப்பிடுகின்றான்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு வழிபடுங்கள். உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். (47:33)
48) சூரதுல் பத்ஹ் – வெற்றி
அத்தியாயம் 48
வசனங்கள் 29
நபியவர்களுக்கும் அவர்களது தோழர்களுக்கும் நீண்ட நாள் ஆசையாக இருந்த அல்லாஹ்வின் முதலாவது ஆலயம் அமைந்திருக்கும் மக்கா வெற்றி தொடர்பான நன்மாறாயத்தைஅல்லாஹ் இந்த அத்தியாயத்தின் முதலாம் வசனத்தில் எடுத்தியம்புகின்றான்.
(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்.
உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில்நடத்துவதற்காகவும். (48:1,2)
49) சூரதுல் ஹுஜ்ராத் – அறைகள்
அத்தியாயம் 49
வசனங்கள் 18
ஒரு முஸ்லிம் அறிந்திருக்க வேண்டிய பல்வேறு பண்புகள் தொடர்பான செய்திகளை அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். நபியவர்களின்அறைகளுக்கு பின்னால் இருந்து சப்தமிட்டு அழைக்கின்ற நடைமுறையை அல்லாஹ் கண்டிக்கின்றான். மேலும் நபியவர்களின் சாப்தத்தை விட உயர்ந்த சப்தத்தில் பேசுவதற்கும்தடை விதிக்கின்றான்.மற்றவர்களை பரிகாசம் செய்தல், குறை கூறுதல், பட்டப் பெயர் கொண்டு அழைத்தல், தவறான எண்ணம் கொள்ளுதல், குறைகளை துருவித் துருவிவிசாரித்தல், புறம் பேசுதல் என பல்வேறு பாவங்களை இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டு அவற்றை விட்டும் ஒரு முஸ்லிம் தவிர்திருக்க வேண்டும் என அல்லாஹ்வழிகாட்டுகின்றான்.
(நபியே!) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே! (49:4)
50) சூரது காப்ஃ
அத்தியாயம் 50
வசனங்கள் 45
காப்ஃ என்ற அரபு எழுத்துடன் அல்குர்ஆன் மீது சத்தியம் செய்து இந்த அத்தியாயத்தை ஆரம்பித்து இதில் உலக வாழ்க்கை, மரணம், மறுமை என மனித வாழ்கையின் எல்லாபாகங்களையும் சுட்டிக்காட்டுகின்றான். மனிதனது செயல்கள் பதியப்படுவது தொடர்பாகவும் குறிப்பிடுகின்றான்.
(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-
கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை. (50: 17,18)



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

கலிமாவுடைய வாழ்க்கையின் பின்

பர்சானா றியாஸ்  

மனைவிப் பாத்திரத்தை ஏற்றிருந்தும் அவள் ஒரு மாணவியாகவே அந்தக் கல்விக்கூடத்தில் வலம் வந்துகொண்டிருந்தாள். மார்க்க அறிவைக் கற்க வந்த நூற்றுக்கணக்கான மாணவியருள் அவள் மட்டும் வாழ்க்கையைக் கற்பதற்காக அங்கே இணைந்திருந்தாள். இந்த ஒரு தேடல்தான் அவளை அவர்களிடமிருந்து வேறுபடுத்தியது. அவள் சேர்த்து வைத்திருந்த பல சந்தேகங்களுக்கு அந்தக் கலாசாலை விடையளித்துக் கொண்டிருந்தது.
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து அம்மா அப்பா அண்ணன் தம்பி உறவுகளுடன் வேறு கலாச்சாரத்தின் அரவணைப்பில் வளர்ந்தவள்தான் இன்று இஸ்லாத்தை அணுவணுவாகக் கற்றுக் கொண்டிருக்கிறாள்.
அதிகாலை எழுந்து தனது பூஜையறையில் கைகூப்பி வணங்கியவள் உருவகப்படுத்தக்கூடாத இறைவனுக்குச் சிரம் தாழ்த்துகிறாள். வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை இலக்கின்றிக் கடந்தவள் இன்று ஒரே இலக்கில் பயணிக்கிறாள். கலிமாவுடன் வாழ்கிறாள். தொழுகையை தொடர்கிறாள். நோன்பு நோற்கிறாள். "பிஸ்மில்லாஹ்" உடன் வேலைகளை ஆரம்பிக்கிறாள்.
ஊரில் உயர்தரம்வரை கற்ற அவளுக்கு அதற்கு மேல் தொடர சூழல் இடம் கொடுத்திருக்கவில்லை. பள்ளிப்பாடம் முற்றுப்பெற்றாலும் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் அவளுக்கு மேலோங்கியே இருந்தது. இஸ்லாமிய விழுமியங்களின் மீதான ஆராய்ச்சியும் அதுகூறும் ஆடைப் பண்பாடுகளின் மீதான ஈர்ப்புமே அவளை அங்கே அந்தக் கலாசாலைக்கு அழைத்துச் சென்றது.
அவளது பார்வையில் வாழ்க்கையும் காலமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. இறைவன் சத்தியம் செய்யும் அளவுக்கு காலம் பெறுமதியானது,
காலத்தின்மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஸ்டத்திலேயே இருக்கிறான். தமக்குள் நல்லுபதேசத்தையும் பொறுமையும் பகிர்ந்து கொண்டவர்களைத்தவிர,
இவ்வாறு சூறா "அஸ்ர்" இனூடாக இறைவன் பேசுகிறான். இதன் முழு அர்த்தமும் தன் வாழ்க்கையின் முகவரியாக அமைய வேண்டும் என அவள் விரும்புகிறாள்.
  1. தவறானவைகளிலிருந்து பார்வையைத் தாழ்த்திக்கொள், நடந்து செல்லும்போது அடிக்கடி பின்னால் திரும்பி பார்க்காதே
  2. நோயாளிகளை நலம் விசாரி
இஸ்லாம் கடைப்பிடிக்கும்படி கூறும் இந்த உபதேசங்கள் அவளால் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் அவளது சக்திக்குட்பட்டவையும்தான்.
  1. மூன்று நாட்களுக்கு மேல் சகோதரனுடன் பகைமை வளர்க்காதே
  2. உம் சொந்த முடிவு ஆயினும் மற்றவர்களிடம் ஆலோசனை கேள்
  3. உன் நாவினாலும் கையினாலும் மற்றவர் பாதுகாப்புப் பெறட்டும்
இவைகளெல்லாம் மனிதர்களுடைய வசனங்களாயின் அவர்களின் தவறோடு தவறாக இவ்வசனங்களும் பெறுமதியிழந்து போயிருக்கும். ஆனால், அனைத்தும் இறையாழுமைமிக்க கனதியான வரிகள்.
அவளது பெற்றார்கூட இப்படியான அறிவுரைகளை அவளுக்குச் சொல்லிக் கொடுத்ததில்லை.
  1. மிஸ்வாக்கு செய்தல்
  2. வுழுவுடனிருத்தல்
  3. தூங்குவதற்கு முன் சுயவிசாரணை செய்தல்
போன்றவற்றின் முக்கியத்துவத்தை அறிந்தாள்.
அல்குர்ஆனில் கூறப்படும் கட்டளை, எச்சரிக்கை, வேண்டுகோள், நெகிழ்வுத்தன்மை, பரிசுகள், தண்டனைகள், வரலாறுகள் என்பவற்றினூடாக இறைவனின் பேச்சில் வெளிப்படும் இங்கிதம் அவளைக் கவர்ந்ததோடு, தன்னை வழிநடத்த பெற்றோரோ பாதுகாவலரோ இல்லாத ஓர் நிலைமையிலும்கூட, நன்நெறிப்படுத்த வல்ல வாழ்க்கை நெறியில் இணைந்திருப்பதாய் தனக்குள் திருப்திப்பட்டாள்.
இறைதூதரான முகம்மத் நபி (ஸல்) அவர்களை இறைவன் அவளுக்கு அளித்த மிகப்பெரிய அருட்கொடையாகவும் அவர்களைப் பின்பற்றுவதிலேயே ஈருலகின் ஈடேற்றமும் இருப்பதாய் உறுதி பூண்டாள்.
  1. காலணிகளை அணியும் முன் அதனை சரிபார்க்கவும்
  2. இடது கையால் குடிக்கவோ சாப்பிடவோ வேண்டாம்.
  3. பற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்
  4. விரலில் நெட்டி முறிக்க வேண்டாம்
  5. கழிவறை உள்ளே எச்சில் துப்ப வேண்டாம்
இஸ்லாம் சொல்லித்தரும் இச்செயற்பாடுகள் பின்னாட்களில் விஞ்ஞானங்களூடாக நிரூபிக்கப்பட்டிருக்கலாம். அல்லது எதிர்காலத்தில் நிரூபிக்கப்படலாம். ஆனால், காரணகாரியங்கள் எதையும் ஆராயாமலே முஸ்லிம்கள் பின்பற்றுவதுதான் இதன் மகத்தான சக்தி.
அத்தோடு, இவற்றைக் கடைப்பிடிப்போருக்கு நன்மையளிக்கும் புள்ளிகள் வழங்கப்படுவதாக இஸ்லாம் கூறுவதிலிருந்து, இறைவன் எத்துணை அருள் பொருந்தியவன் என்பதற்குச் சான்று. அல்ஹம்துலில்லாஹ்! அவளைப் பேரதிசயத்தில் ஆழ்த்திய விடயங்களில் இதுவும் ஒன்று.
அது மட்டுமன்றி,
1.   ஒரு மனிதன் திருமணம் செய்து தனது உடற் தேவையை மனைவியுடன் நிறைவேற்றுவதற்கும்
2.   எதேச்சையாக சந்தித்தவருடன் புன்னகைப்பதற்கும்
3.   பாதையின் நடுவில் கிடக்கும் கல்லை அகற்றுவதற்கும்
நன்மை வழங்குவதாக வாக்களிக்கப்படுகிறது. சுயநலத்திற்காகச் செய்யும் சாதாரண காரியங்களுக்கே இவ்வளவு பரிசா? பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போன்ற இந்த மார்க்கத்தை அவள் வேறெங்கு காணமுடியும்?
இஸ்லாம் கூறும் மறுமை நாள் அவளது அறிவுக்கு எட்டாவிடினும் அதன்மீது முழு ஆதரவையும் வைத்திருந்தாள்.
கலிமாவுடைய வாழ்க்கையின் பின்னர் அவள் அனுபவித்த அசௌகரியங்களையும் தியாகங்களையும் பெரும் பரிசுகளாகவும் பேறுகளாகவும் மாற்றி அவளுக்கு அள்ளி வழங்குவதற்கு மறுமையொன்றைத் தவிர வேறென்ன வழியிருக்க முடியும்?
இஸ்லாத்தை வாழ்க்கையின் ஆதாரமாகக் கொண்டு வாழும் அவளுக்கும் இஸ்லாத்தில் இருந்துகொண்டே அதன் பெயரைக் கெடுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான வேறுபாட்டினை அவள் கண்குளிர காண்பதற்கு அந்தத் தீர்ப்புநாள் வந்தேதீர வேண்டும்.
ஓர் அணுவளவு நன்மை செய்திருப்பினும் அல்லது ஓர் அணுவளவு தீமை செய்திருப்பினும் அதன் பிரதிபலனை ஒவ்வொரு ஆத்மாவும் அடைந்தே தீரும் எனவும், புல்பூண்டுகள் முளைவிட்டெழுவதைப் போன்று "அஜ்புதனப்" எலும்பிலிருந்து மறுமையில் அனைவரையும் எழுப்புவோம் என்றும் கூறும் இஸ்லாத்தின் கொள்கை அவளுக்கு பொறுமை எனும் குணத்தை அழகாகக் கற்றுக் கொடுத்தது.
அதாவது, சோதனைகளின்போது "இன்னாலில்லாஹ்" சொல்லிக் கொள்வது, சந்தோசத்தில் "அல்ஹம்துலில்லாஹ்" சொல்லிக் கொள்வது இரண்டுமே அவளது மனதைச் சமநிலையிலேயே வைத்திருக்கும் பயிற்சியைக் கொடுத்தன.
அத்தகைய மார்க்கத்தின் பெயரால் அவளது உடலில் ஒரு கீறல் விழுந்தாலும், இறைவனால் உறுதியளிக்கப்பட்ட தறஜாக்களை ஆதரவு வைத்தவளாய் அந்தக் கலாசாலையில் இருந்து "ஸகீனத்" எனும் ஆடையுடுத்தி வெளியேறுகிறாள்.
இப்போது, ஓர் இல்லத்தரிசியாக கணவனின் வீட்டில் வாழும் அவள் ஒரு குழந்தைக்குத் தாயானதோடு தனது குழந்தையும் ஆன்மீகத்தில் வரட்சி கண்டுவிடக்கூடாதென சிறுவயதிலேயே பயிற்சியளிப்பது மட்டுமின்றி, பல குழந்தைகளுக்கு மார்க்கம் சொல்லிக் கொடுப்பதிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறாள்.
அவளது சேவையையும் தூய்மையையும் ஏற்று இறைவன் அவளது குடும்பத்தினருக்கு அருள் பாலிக்கப் பிரார்த்தித்தவளாய்,
பர்சானா றியாஸ்



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

வீட்டு வேலைகள் பெண்களுக்கு சாபமா?

பர்சானா றியாஸ்  

சமையல், சாப்பாடு, உறவு, வீட்டுப் பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு என இல்லத்தரசி என்ற பாத்திரத்தைச் சுமக்காத பெண்கள் எங்கேயும் இருக்க முடியாது. அதேவேளை, தான் விரும்பாமலே இப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழலுக்கு ஆளாகி விரக்தியோடு பேசும் பெண்களும் எம்மத்தியில் இல்லாமலில்லை.
ஆனால், ஓயாமல் தன்னைத் துரத்தும் இந்தக் கடமைகளைப் பெண்கள் உளரீதியாக எவ்வாறு நோக்குகிறார்கள்? என்ன வகையான எண்ணப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்? என்பதை அவசியம் மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது.
01. சில பெண்கள் கணவன், பிள்ளை, தன் குடும்பம் என்று பாசப் பிணைப்பினால் உந்தப்படல்
02. சிலர், சமுகத்தில் பெண்களின் வகிபாகம் இதுவாகத்தான் இருக்கிறது. எனவே, நாமும் இவ்வாறே இருந்துவிட்டுப் போவோம் என்றெண்ணுதல்
03. மற்றும் சிலர், உலகில் வாழவேண்டிய அவசியம் வந்தாயிற்று எப்படியும் வாழ்ந்தாக வேண்டும் எனப் பல காரணங்களுக்காக இக்கடமைகளைச் சிரமேற்கொள்கிறார்கள்.
விளைவு?
01. பெண்ணின் மனநிலைக்கேற்ப ஆற்ற வேண்டிய கடமைகளின் மீதான ஆர்வம் மாறுபடலாம்.
02. மேலும், தான் உடலை வருத்திச் செய்யும் வீட்டு வேலைகள் தன் உறவுகளால் கண்டு கொள்ளப்படுவதில்லை என்ற மன உழைச்சல் பெண்ணுக்கு ஏற்படலாம்
03. அத்துடன், அது வீட்டுத் தலைவிக்குத்தான் கடமை என மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்வதனால், அவளுக்கு அதுவே சுமையாகிப் போகலாம்
இக்காரணங்களால் சூழப்பட்ட பெண்கள் தனது அன்றாட வாழ்க்கையை சிரமமாக நினைப்பதுடன், அதிலிருந்து எங்கனம் மீளலாம் எனவும் சிந்திக்கின்றார்கள். இச்சிந்தனையின் விளைவே, மேற்கத்தேய பெண்னிலைவாதிகளின் தோற்றம் எனலாம். ஆனால், இறைமொழி மற்றும் நபிமொழிகள் பெண்ணியவாதத்திற்கான தேவையை இல்லாமல் செய்துவிட்டன என்ற உண்மை பெண்களாலேயே இன்னும் உணரப்படவில்லை.
வாழ்க்கையே ஒரு வணக்கம் எனக்கூறும் கொள்கையுடைய மார்க்கத்தில் இருந்தும் நம்மில் பலர் வணக்கம் என்றால் அது ஐங்கடமைகள்தான் என வரையறுத்துக் கொண்டு ஏனைய செயற்பாடுகளை இஸ்லாத்திற்கு வெளியில் நின்று நோக்குகின்றார்கள்.
இம்மையிலும் பயனளித்து அதற்கப்பாலும் பயனளிக்கும் விதமாக இக்கடமைகளை மாற்றியமைப்பதைப் பற்றி அவர்கள் சிந்திப்பது குறைவு. மலை போல தோற்றமளிக்கும் வீட்டுக்கடமைகள் எல்லாம் நன்மை சம்பாதித்துத் தரும் தங்க மலைகள் என்பதையும் அவர்கள் அறிவதில்லை.
எந்தவொரு வேலையும் "பிஸ்மில்லாஹ்" கூறி ஆரம்பிப்பதன் மூலம் அதை "இபாதத்" ஆக மாற்ற முடியும். இதன்படி கணக்கிட்டால் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான "இபாதத்" களை செய்து அதன்மூலம் இறைவனால் வாக்களிக்கப்பட்ட எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.
நம் வாழ்க்கைக் கோலங்கள் எப்படி அமைய வேண்டும் என இஸ்லாம் என்றோ கல்வெட்டாகச் செதுக்கிவிட்டது. வழிகாட்டவோ, சொல்லித்தரவோ உறவுகள் யாருமற்ற ஓர் அனாதைக்கும்கூட இம்மார்க்கம் வழிகாட்டியாகின்றது. ஒரு தாய் அன்பாய் பக்கத்தில் இருந்து சொல்லித் தருவதைப் போன்றே இஸ்லாம் எம்முடன் இருந்து வாழ்க்கை டிப்ஸ் தருகிறது.
உறங்கப் போகும்போது,
கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள்…
உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்…
படுக்கை விரிப்பை மூன்று முறை உதறி விடுங்கள்…
என்கிறது. உறவுகளும்கூட இவ்வளவு அக்கறையாகவும் அறிவாகவும் சொல்லித்தரமாட்டார்கள்.
மேலும், பால் அருந்திய பிறகு வாய்கொப்பளிக்கும்படி உபதேசிக்கிறது.
ஒரு சபையில் பானங்களை தனது வலது புறத்திலிருந்து கொடுத்து வரவேண்டும் எனவும் பரிமாறுபவர் இறுதியிலேயே பருக வேண்டும் எனவும் கற்றுத் தருகிறது.
நீரை ஒரே மூச்சில் அருந்தாமல் மூன்று முறை மூச்சுவிட்டு அருந்த வேண்டும் என்கிறது.
நின்று கொண்டு நீர் அருந்துவது தடுக்கப்பட்டுள்ள அதேவேளை, மறந்து குடித்திருந்தால் வாந்தி எடுங்கள் என்று கூறுமளவிற்கு அதை முக்கியத்துவப்படுத்துகிறது.
பிறர் கேட்டு நாங்கள் மறுக்காமல் கொடுக்க வேண்டியவை
உப்பு… தண்ணீர்…. நெருப்பு… எனக் கூறுகிறது.
ஆனால், மூட நம்பிக்கைகளால் கவரப்பட்ட சிலபெண்கள் இரவுப் பொழுதாகி விட்டால் சில வீட்டு உபயோகப் பொருட்களை தரித்திரம் எனக்கூறி தேவைப்பட்டோருக்கு வழங்காது இருப்பார்கள். ஆனால், இஸ்லாம் அவற்றைத் தேவையுடையோருக்கு கொடுத்து உதவும்படி ஊக்குவிக்கிறது. மேலும், அதனைத் தர்மம் என்ற வகுதிக்குள் அடக்கி நன்மைதரக் காத்திருக்கிறது.
நதியில் ஓடும் நீராக இருப்பினும் வீண்விரயம் செய்யாதீர்கள் என்கிறது. வுளு செய்தல், பாத்திரங்கள் சுத்தப்படுத்தல், ஆடை துவைத்தல், குளித்தல் போன்றவற்றின்போது சிரமம் பாராது நீரைப் பாத்திரத்தில் தேக்கிவைத்துப் பயன்படுத்துவதற்கு எம்மைத் தூண்டுகிறது.
இவையெல்லாம் மிகச்சாதாரண விடயம்தானே. ஏன் இஸ்லாம் இதையெல்லாம் பெரிதுபடுத்திப் பேசுகிறது? என்ற கேள்வி எமக்குள் எழலாம், ஆம்!… சுயநலத்திற்காக ஒருவர் செய்கின்ற அற்ப விடயத்திற்கும் கூட அது ஆகுமானதெனில் இஸ்லாம் நற்கூலி வழங்கி ஆச்சரியப்படுத்துகின்றது.
இந்தச் சின்னச் சிரமங்கள் எல்லாம் எமக்கு நன்மை சம்பாதிப்பதற்கான வழிகள்தான். எமது பிள்ளைகளும் இந்தப் பழக்கங்களுக்கு வசப்படும்வரை நாம் அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
குழந்தை வளர்ப்பு சவாலாகிப் போய்விட்ட காலமிது. அதிலும் வேலைக்கு போகும் தாய் ஆக இருந்தால் இருமடங்கு சவாலை சந்திக்க வேண்டியிருக்கும். குழந்தைகள் எப்போதும் பெற்றோரைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டக்கூடியவர்கள். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் இஸ்லாமிய வரலாறுகளை அவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். உண்மைச் சம்பவங்கள் பேசப்படும்போது அது குழந்தைகளில் உணர்வுபூர்வமாக தாக்கம் செலுத்தும். இதனால், அவர்களின் புறத்தால் ஏற்படும் தொந்தரவுகள் பெருமளவு குறையும்.
மேலும், இஸ்லாம் கற்றுத் தந்த சந்தர்ப்ப துஆக்கள் இருக்கின்றன. அவற்றை எப்பாடுபட்டாவது நம் பிள்ளைகளின் கண்களில் படுமாறு வைப்பதோடு, கடைப்பிடிக்கவும் தூண்ட வேண்டும். அத்தோடு, அதன் பயன்பாடுகளை நாமும் அனுபவித்து உணர வேண்டும்.
ஏனைய தினங்களில் குளித்தாலும் வெள்ளிக்கிழமை குளிப்பது "சுன்னத்" என்பதை வலியுறுத்தி வீட்டாரை அன்றைய தினம் குளிக்கும்படி தூண்டுவதும், எப்போதும் வுழு உடன் இருக்கும்படி அறிவுறுத்துவதும் கூட நாமறியாப் புறத்திலிருந்து இறை உதவிகளைக் கிடைக்கச்செய்யும் ஆயுதங்கள்.
தொழுகையின் வக்துகளால் நேர அட்டவணையிட்டுக் கொள்வதன் மூலமும் வேலைப் பழுக்களை கட்டுப்படுத்தலாம். "லுஹர்" க்கிடையில் சமையலை முடிக்க வேண்டும். "மஃரிப்" க்குமுன் இரவுணவுக்கான ஆயத்தத்தை முடித்துவிட்டால், "இஷா" வரைக்கும் பிள்ளைகளின் படிப்புக்கு உதவலாம். என்பதாக வகுத்துக் கொள்ளலாம். இதனால் தொழுகை தவறிப் போகாதிருக்கவும் வழிசமைக்கின்றது.
சிலவேளைகளில், மனம் அன்றைய வேலையில் நாட்டமின்றி அசதி நிலைமைக்கு ஆளானவர்கள் செயற்கையான ஒரு புன்னகையாவது முகத்தில் தவழ விட்டுப் பார்க்கட்டும். அந்த வேலையை ரசித்துச் செய்யக்கூடிய உணர்வை உண்மையிலேயே பெறுவார்கள்.
இஸ்லாமிய வழிகாட்டல்கள் எல்லாமே காரணத்துடன் அமைந்தவை. ஆனால், காரணங்களை அறிந்துதான் வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. நம்பிக்கை ஒன்றே போதுமானதென அனுபவங்களே எமக்குச் சொல்லித்தரும்.
பாத்திமா(ரலி) அவர்கள் தனது வீட்டு வேலைக்காக உதவியாளர் ஒருவரைக் கோரியபோது, அதனை மறுத்த அண்ணலார் அவர்கள் மகளே! படுக்கைக்குச் செல்லும் போது சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை ஓதி நித்திரை செய்யுங்கள். அது உங்களின் சிரமங்களையும், கஷ்டங்களையும் நீக்கி விடும். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்" என்று சொன்னார்கள்.
அன்னை பாத்திமா (றழி) அவர்களும் அதன் பயனை பெற்றுக் கொண்டார்கள். அன்றாட வீட்டுக் கடமைகளை மறுமை நோக்கத்தோடு நகர்த்தும் ஒருபெண் தனது படுக்கையறையில் கணவனிடம் தனது கஸ்டங்களை முணுமுணுக்கமாட்டாள். தனக்கு உடல்வலி இருப்பதாய் உணரமாட்டாள். அவளது உலகத் தேவைகள் நிறைவேறும் அதேவேளை, சம்பாதித்த நற்கூலிகள் மறுபுறமுமாய் ஈருலக வெற்றியை நோக்கி தன்னையும் குடும்பத்தையும் நகர்த்துவாள்.
எனவே, இறைவனிடத்தில் நெருங்குவதற்கான வழி எதுவென துல்லியமாய் அறிந்த பின்பும் இப்பொறுப்பை இல்லத்தரசிகள் ஆண்களுக்கு விட்டுக் கொடுக்கவோ அல்லது. விமர்சனம் செய்யவோ சற்றும் சிந்திக்க மாட்டார்கள். மாறாக, போட்டிபோட்டுக் கொண்டு எத்தனை பொறுப்புகளை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளவும் எத்தனை சிரமங்களை வேண்டுமானாலும் சகித்துக்கொள்ளவுமே முன்வருவார்கள்.
பர்சானா றியாஸ்



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

ளுஹா தொழுகை -ஒரு கண்ணோட்டம்

ஷைய்க் யூனுஸ் தப்ரீஸ்  

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர் –
நபியவர்கள் காட்டித் தந்த பல சுன்னத்தான தொழுகைகளில் ளுஹா தொழுகையும் முக்கியமானதாகும். ளுஹா தொழுகையின் எண்ணிக்கைகள், அதுனுடைய ஆரம்ப நேரம், அதனுடைய முடிவு நேரம் என்பதை ஹதீஸின் வழியில் விடை காண்போம்.
ளுஹா தொழுகையின் ஆரம்ப நேரம்…
சூரியன் உதயமாகி பத்து நிமிடத்திற்கு பிறகிலிருந்து சூரியன் நடு உச்சிக்கு வருவதற்கு பத்து நிமிடத்திற்கு முன் உள்ள நேரம் வரை தொழலாம்.
ளுஹா என்றாலே முற்பகல் என்று பொருளாகும். குர்ஆனில் 93ம் அத்தியாயத்தில் முற்பகல் மீது சத்தியமாக என்று அல்லாஹ் கூறுகிறான். தமிழில் முற்பகல் என்று சொல்லும் போது காலை சூரியன் உதயமாகி நண்பகல் (12மணி வரை) உள்ள நேரத்திற்கு சொல்வதாகும்.
ளுஹா தொழுகையும், நபியவர்களும்…
குறிப்பிட்ட சில நபித் தோழர்கள் நபியவர்கள் ளுஹா தொழவில்லை என்று அறிவித்து இருந்தாலும், நபியவர்கள் ளுஹா தொழுகை தொழுததற்கான பல ஆதாரங்கள் மிகத் தெளிவாக உள்ளன. அவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
ளுஹா தொழுகை எட்டு ரக்அத்துகள்…
'மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு, நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்றிருந்தபோது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குத் திரையிட்டார். நான் நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அப்போது, 'யாரவர்?' எனக் கேட்டார்கள். 'நான் அபூ தாலிபின் மகள் உம்முஹானி' என்றேன். உடனே, 'உம்முஹானியே! வருக!' என்றார்கள். நபி(ஸல்) குளித்து முடித்த பின்னர் ஒரே ஆடையைச் சுற்றியவர்களாக எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அவர்கள் தங்கள் தொழுகையை முடித்ததும் 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய சகோதரர் நான் அடைக்கலம் அளித்திருக்கும் ஹுபைராவின் மகனைக் கொலை செய்ய எண்ணியுள்ளார்' என்று நான் கூறியபோது 'உம்மு ஹானியே! நீ அடைக்கலம் அளித்திருப்பவருக்கு நாங்களும் அடைக்கலம் அளிக்கிறோம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இச்சம்பவம் முற்பகலில் நடந்தது' என உம்மு ஹானி(ரலி) அறிவித்தார். (புகாரி 357,- 4292 முஸ்லிம் 562,- 563)
மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் ளுஹா தொழுகை எட்டு ரக்அத்துகள் தொழலாம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.
ளுஹா நான்கு ரக்அத்துகள்…
"ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் நான்கு ரக்அத்கள் (ளுஹா) தொழுவார்கள்; அல்லாஹ் நாடிய அளவு கூடுதலாகவும் தொழுவார்கள். இதை முஆதா அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம் 1297)
மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் ளுஹா தொழுகை நான்கு ரக்அத்துகள் தொழலாம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.
ளுஹா தொழுகை இரண்டு ரக்அத்துகள்…
"அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும். 'ளுஹா' நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும். உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுது விடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் தோழர்(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்!' (புகாரி 1981)
மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் ளுஹா தொழுகை இரண்டு ரக்அத்துகள் தொழலாம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.
எனவே ளுஹா தொழுகையின் எண்ணிக்கை குறைந்தது இரண்டு ரக்அத்துகள், கூடியது எட்டு ரக்அத்துகள் தொழலாம் என்பதை நாம் புரியலாம். ஆகவே சுன்னது தானே என்று இந்த ளுஹா தொழுகை விடயத்தில் அலச்சியமாக இருந்து விடாமல், நாளாந்தம் தொடராக தொழக் கூடிய பழக்கத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
சுன்னத்தான, மற்றும் நபிலான வணக்கங்களின் மூலம் அல்லாஹ் நம்மை நெருங்குவதாக நபியவர்கள் உறுதிப் படுத்தியுள்ளார்கள். அல்லாஹ் மிக நன்கு அறிந்தவன்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 13 பிப்ரவரி, 2019

மார்க்கத்தின் பெயரால் எல்லை கடந்த பெண்களும் அழைப்பாளர்களும்

இயங்கங்களில் பாலியல் வாடை வீசுவதற்கு என்ன காரணம்?

பெண்களிடம் இருந்த வெட்க உணர்வை போக்கியது.
1. மார்க்கத்தை அறிந்துகொள்ள வெட்கப்படக்கூடாது என தண்ணி தெளிச்சுவிட்டு, சகஜமாக ஆண் தாஃயிகளிடம் உரையாட வழி ஏற்படுத்தி தந்தது.
2. மார்க்க சந்தேகம் என ஆரம்பித்த பேச்சு, மணிக்கணக்கில் ஆகி, குடும்ப விவகாரங்கள் வரை பரஸ்பரம் பறிமாறி, பிறகு ஷைத்தானின் சூழ்ச்சிக்கு இரையாவது.
3.நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு தனி இட வசதி என்று அறிவிக்கப்பட்டாலும் திரைமறைவின்றி பெண்களை நேருக்கு நேராக பார்த்து மார்க்கம் பேசுவது.
4. ஆர்ப்பாட்டம் போராட்டம் என பெண்களை களமிறக்கி கத்த வைத்து வெட்க உணர்வை எடுபட செய்தது.
5. நடிகர்களுக்கு ரசிகைகள் போல் சில பேச்சாளருக்காக எதையும்(!) செய்யும் அளவுக்கு வெறி கொண்ட ரசிகைகளாக மாறுவது.
6. பேச்சாளரின் நடை-உடை பாவனைகளை கூர்ந்து ரசித்து மறுநாள் அவரிடம் போனில் கமென்ட் பன்னுவது. குறிப்பாக உங்களுக்கு அந்த நீல கலர் சட்டை சூப்பரா இருக்கு என ரசிகை சொன்னவுடன் அந்த பேச்சாளர் தொடர்ந்து நீல கலர் சட்டையை அணிந்த வரலாறு உண்டு.
7. பேச்சாளரை சந்திப்பதை பெரும்பாக்கியமாக கருதுவது. அவருடன் உள்ள போன் தொடர்பை வைத்து பெருமையடிப்பது.
8. முத்தாய்ப்பாக ஒரே ஒருநாள் உங்கள் மனைவியாக வாழ்ந்தால் போதும். எனக்கு அந்த அங்கீகாரம் மட்டும் கொடுங்கள் என்ற அளவுக்கு வெறியோடு விரும்புவது.
இன்னும் பல…
இப்படி மார்க்கத்தின் பெயரால் மார்க்க எல்லை தாண்டியதால் சில பெண்கள், அழைப்பாளர்களின் வலையில் விழுகிறார்கள். இன்னும் சிலர் அவர்களை வீழ்த்துகிறார்கள்.
அல்லாஹ் பாதுகாப்பானாக!
குறிப்பு: விதிவிலக்கானோர் தவிர.

—தகவல்: இப்னு ஹசன்—
http://www.islamkalvi.com/?p=115878

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

நாம் தூங்கும் போர்வையை ஏன் மடித்து வைக்க வேண்டும் தெரியுமா?

நாம் தூங்கும் போர்வையை பல வேளைகளிலும் ஒழுங்காக மடித்து வைப்பதில்லை. ஆனால் மடித்து வைக்க வேண்டும் என்று நம் முதியோர்கள் கூறுவார்கள்...

Popular Posts