லேபிள்கள்

செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

கலிமாவுடைய வாழ்க்கையின் பின்

பர்சானா றியாஸ்  

மனைவிப் பாத்திரத்தை ஏற்றிருந்தும் அவள் ஒரு மாணவியாகவே அந்தக் கல்விக்கூடத்தில் வலம் வந்துகொண்டிருந்தாள். மார்க்க அறிவைக் கற்க வந்த நூற்றுக்கணக்கான மாணவியருள் அவள் மட்டும் வாழ்க்கையைக் கற்பதற்காக அங்கே இணைந்திருந்தாள். இந்த ஒரு தேடல்தான் அவளை அவர்களிடமிருந்து வேறுபடுத்தியது. அவள் சேர்த்து வைத்திருந்த பல சந்தேகங்களுக்கு அந்தக் கலாசாலை விடையளித்துக் கொண்டிருந்தது.
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து அம்மா அப்பா அண்ணன் தம்பி உறவுகளுடன் வேறு கலாச்சாரத்தின் அரவணைப்பில் வளர்ந்தவள்தான் இன்று இஸ்லாத்தை அணுவணுவாகக் கற்றுக் கொண்டிருக்கிறாள்.
அதிகாலை எழுந்து தனது பூஜையறையில் கைகூப்பி வணங்கியவள் உருவகப்படுத்தக்கூடாத இறைவனுக்குச் சிரம் தாழ்த்துகிறாள். வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை இலக்கின்றிக் கடந்தவள் இன்று ஒரே இலக்கில் பயணிக்கிறாள். கலிமாவுடன் வாழ்கிறாள். தொழுகையை தொடர்கிறாள். நோன்பு நோற்கிறாள். "பிஸ்மில்லாஹ்" உடன் வேலைகளை ஆரம்பிக்கிறாள்.
ஊரில் உயர்தரம்வரை கற்ற அவளுக்கு அதற்கு மேல் தொடர சூழல் இடம் கொடுத்திருக்கவில்லை. பள்ளிப்பாடம் முற்றுப்பெற்றாலும் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் அவளுக்கு மேலோங்கியே இருந்தது. இஸ்லாமிய விழுமியங்களின் மீதான ஆராய்ச்சியும் அதுகூறும் ஆடைப் பண்பாடுகளின் மீதான ஈர்ப்புமே அவளை அங்கே அந்தக் கலாசாலைக்கு அழைத்துச் சென்றது.
அவளது பார்வையில் வாழ்க்கையும் காலமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. இறைவன் சத்தியம் செய்யும் அளவுக்கு காலம் பெறுமதியானது,
காலத்தின்மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஸ்டத்திலேயே இருக்கிறான். தமக்குள் நல்லுபதேசத்தையும் பொறுமையும் பகிர்ந்து கொண்டவர்களைத்தவிர,
இவ்வாறு சூறா "அஸ்ர்" இனூடாக இறைவன் பேசுகிறான். இதன் முழு அர்த்தமும் தன் வாழ்க்கையின் முகவரியாக அமைய வேண்டும் என அவள் விரும்புகிறாள்.
  1. தவறானவைகளிலிருந்து பார்வையைத் தாழ்த்திக்கொள், நடந்து செல்லும்போது அடிக்கடி பின்னால் திரும்பி பார்க்காதே
  2. நோயாளிகளை நலம் விசாரி
இஸ்லாம் கடைப்பிடிக்கும்படி கூறும் இந்த உபதேசங்கள் அவளால் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் அவளது சக்திக்குட்பட்டவையும்தான்.
  1. மூன்று நாட்களுக்கு மேல் சகோதரனுடன் பகைமை வளர்க்காதே
  2. உம் சொந்த முடிவு ஆயினும் மற்றவர்களிடம் ஆலோசனை கேள்
  3. உன் நாவினாலும் கையினாலும் மற்றவர் பாதுகாப்புப் பெறட்டும்
இவைகளெல்லாம் மனிதர்களுடைய வசனங்களாயின் அவர்களின் தவறோடு தவறாக இவ்வசனங்களும் பெறுமதியிழந்து போயிருக்கும். ஆனால், அனைத்தும் இறையாழுமைமிக்க கனதியான வரிகள்.
அவளது பெற்றார்கூட இப்படியான அறிவுரைகளை அவளுக்குச் சொல்லிக் கொடுத்ததில்லை.
  1. மிஸ்வாக்கு செய்தல்
  2. வுழுவுடனிருத்தல்
  3. தூங்குவதற்கு முன் சுயவிசாரணை செய்தல்
போன்றவற்றின் முக்கியத்துவத்தை அறிந்தாள்.
அல்குர்ஆனில் கூறப்படும் கட்டளை, எச்சரிக்கை, வேண்டுகோள், நெகிழ்வுத்தன்மை, பரிசுகள், தண்டனைகள், வரலாறுகள் என்பவற்றினூடாக இறைவனின் பேச்சில் வெளிப்படும் இங்கிதம் அவளைக் கவர்ந்ததோடு, தன்னை வழிநடத்த பெற்றோரோ பாதுகாவலரோ இல்லாத ஓர் நிலைமையிலும்கூட, நன்நெறிப்படுத்த வல்ல வாழ்க்கை நெறியில் இணைந்திருப்பதாய் தனக்குள் திருப்திப்பட்டாள்.
இறைதூதரான முகம்மத் நபி (ஸல்) அவர்களை இறைவன் அவளுக்கு அளித்த மிகப்பெரிய அருட்கொடையாகவும் அவர்களைப் பின்பற்றுவதிலேயே ஈருலகின் ஈடேற்றமும் இருப்பதாய் உறுதி பூண்டாள்.
  1. காலணிகளை அணியும் முன் அதனை சரிபார்க்கவும்
  2. இடது கையால் குடிக்கவோ சாப்பிடவோ வேண்டாம்.
  3. பற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்
  4. விரலில் நெட்டி முறிக்க வேண்டாம்
  5. கழிவறை உள்ளே எச்சில் துப்ப வேண்டாம்
இஸ்லாம் சொல்லித்தரும் இச்செயற்பாடுகள் பின்னாட்களில் விஞ்ஞானங்களூடாக நிரூபிக்கப்பட்டிருக்கலாம். அல்லது எதிர்காலத்தில் நிரூபிக்கப்படலாம். ஆனால், காரணகாரியங்கள் எதையும் ஆராயாமலே முஸ்லிம்கள் பின்பற்றுவதுதான் இதன் மகத்தான சக்தி.
அத்தோடு, இவற்றைக் கடைப்பிடிப்போருக்கு நன்மையளிக்கும் புள்ளிகள் வழங்கப்படுவதாக இஸ்லாம் கூறுவதிலிருந்து, இறைவன் எத்துணை அருள் பொருந்தியவன் என்பதற்குச் சான்று. அல்ஹம்துலில்லாஹ்! அவளைப் பேரதிசயத்தில் ஆழ்த்திய விடயங்களில் இதுவும் ஒன்று.
அது மட்டுமன்றி,
1.   ஒரு மனிதன் திருமணம் செய்து தனது உடற் தேவையை மனைவியுடன் நிறைவேற்றுவதற்கும்
2.   எதேச்சையாக சந்தித்தவருடன் புன்னகைப்பதற்கும்
3.   பாதையின் நடுவில் கிடக்கும் கல்லை அகற்றுவதற்கும்
நன்மை வழங்குவதாக வாக்களிக்கப்படுகிறது. சுயநலத்திற்காகச் செய்யும் சாதாரண காரியங்களுக்கே இவ்வளவு பரிசா? பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போன்ற இந்த மார்க்கத்தை அவள் வேறெங்கு காணமுடியும்?
இஸ்லாம் கூறும் மறுமை நாள் அவளது அறிவுக்கு எட்டாவிடினும் அதன்மீது முழு ஆதரவையும் வைத்திருந்தாள்.
கலிமாவுடைய வாழ்க்கையின் பின்னர் அவள் அனுபவித்த அசௌகரியங்களையும் தியாகங்களையும் பெரும் பரிசுகளாகவும் பேறுகளாகவும் மாற்றி அவளுக்கு அள்ளி வழங்குவதற்கு மறுமையொன்றைத் தவிர வேறென்ன வழியிருக்க முடியும்?
இஸ்லாத்தை வாழ்க்கையின் ஆதாரமாகக் கொண்டு வாழும் அவளுக்கும் இஸ்லாத்தில் இருந்துகொண்டே அதன் பெயரைக் கெடுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான வேறுபாட்டினை அவள் கண்குளிர காண்பதற்கு அந்தத் தீர்ப்புநாள் வந்தேதீர வேண்டும்.
ஓர் அணுவளவு நன்மை செய்திருப்பினும் அல்லது ஓர் அணுவளவு தீமை செய்திருப்பினும் அதன் பிரதிபலனை ஒவ்வொரு ஆத்மாவும் அடைந்தே தீரும் எனவும், புல்பூண்டுகள் முளைவிட்டெழுவதைப் போன்று "அஜ்புதனப்" எலும்பிலிருந்து மறுமையில் அனைவரையும் எழுப்புவோம் என்றும் கூறும் இஸ்லாத்தின் கொள்கை அவளுக்கு பொறுமை எனும் குணத்தை அழகாகக் கற்றுக் கொடுத்தது.
அதாவது, சோதனைகளின்போது "இன்னாலில்லாஹ்" சொல்லிக் கொள்வது, சந்தோசத்தில் "அல்ஹம்துலில்லாஹ்" சொல்லிக் கொள்வது இரண்டுமே அவளது மனதைச் சமநிலையிலேயே வைத்திருக்கும் பயிற்சியைக் கொடுத்தன.
அத்தகைய மார்க்கத்தின் பெயரால் அவளது உடலில் ஒரு கீறல் விழுந்தாலும், இறைவனால் உறுதியளிக்கப்பட்ட தறஜாக்களை ஆதரவு வைத்தவளாய் அந்தக் கலாசாலையில் இருந்து "ஸகீனத்" எனும் ஆடையுடுத்தி வெளியேறுகிறாள்.
இப்போது, ஓர் இல்லத்தரிசியாக கணவனின் வீட்டில் வாழும் அவள் ஒரு குழந்தைக்குத் தாயானதோடு தனது குழந்தையும் ஆன்மீகத்தில் வரட்சி கண்டுவிடக்கூடாதென சிறுவயதிலேயே பயிற்சியளிப்பது மட்டுமின்றி, பல குழந்தைகளுக்கு மார்க்கம் சொல்லிக் கொடுப்பதிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறாள்.
அவளது சேவையையும் தூய்மையையும் ஏற்று இறைவன் அவளது குடும்பத்தினருக்கு அருள் பாலிக்கப் பிரார்த்தித்தவளாய்,
பர்சானா றியாஸ்



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts