லேபிள்கள்

வியாழன், 17 ஜனவரி, 2019

தூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்


துஆக்கள் அறிமுகம்
நமது வாழ்க்கையில் அன்றாடம் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்காக நபியவர்கள் பல துஆகளை நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். அவற்றை நாம் மணனமிட்டு அந்தந்த சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தி வந்தால் நபியின் வழிமுறையை நாம் நடை முறைப்படுத்தியதோடு, மறுமையில் அதற்குரிய நன்மைகளை தாராளமாக பெற்றுக் கொள்ள முடியும். எனவே இந்த பகுதியில் தொடராக துஆகள் அறிமுகம் என்று தேவையான துஆகளை தொகுத்து வழங்கவுள்ளோம். உங்கள் பிள்ளைகளை மனப்பாடம் செய்ய வைப்பதோடு, நீங்களும் மனப்பாடம் செய்து வாழ்க்கையில் அவைகளை அந்தந்த சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தி வாருங்கள். அல்லாஹ்வை நினைப்பதில் தான் உள்ளங்களுக்கு நிம்மதி கிடைக்கும்.
ஒரு சந்தர்ப்பத்தில் பல துஆகளை நபியவர்கள் சொல்லித் தந்துள்ளார்கள். எனவே ஒரு துஆவோடு நிறுத்திக் கொள்ளாமல் சம்பந்தப்பட்ட அனைத்து துஆகளையும் முடிந்தளவு பாடமிட்டுக் கொள்ளுங்கள். முடிந்தளவு அனைத்து துஆகளையும் அந்தந்த சந்தர்ப்பங்களில் ஓதப் பழகிக் கொள்ளுங்கள் பாடமிட்டஅந்த துஆகள் மவ்த் வரை மறக்காமல் இருப்பதற்கு நடைமுறை சிறந்த வழியாகும்.
தூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள்
1.தூங்கும் முன்:
اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
பொருள் : இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)
ஆதாரம்: புகாரி
2.மேலும், வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின்:
اَللّهُمَّ خَلَقْتَ نَفْسِيْ وَأَنْتَ تَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَافِيَةَ
பொருள் : இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு! இறைவா! உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம்
3. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் படுக்கைக்குச் சென்றால், உங்களது கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டிவிடுங்கள். அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுங்கள். ஏனெனில், நீங்கள் இல்லாதபோது உங்களது விரிப்பில் என்ன (விஷஜந்து) புகுந்துகொண்டது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு படுக்கத் தயாராகும்போது வலப் பக்கத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு, பின்வருமாறு பிரார்த்தியுங்கள்:
بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ
பொருள்: இறைவா! நீ (அனைத்துக் குறைகளிலிருந்தும்) தூய்மையானவன். என் இரட்சகா! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால், அதை மன்னிப்பாயாக! அதை நீ (உன் வசம் வைத்துக்கொள்ளாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், ("சுப்ஹானக்கல்லாஹும்ம! ரப்பீ!" என்பதற்குப் பகரமாக) பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து ஜன்பீ (என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன்)" என்றும், ("ஃப இன் அம்சக்த்த நஃப்சீ ஃபக்ஃபிர் லஹா" என்பதற்குப் பகரமாக) "ஃப இன் அஹ்யய்த்த நஃப்சீ ஃபர்ஹம்ஹா" என்றும் காணப்படுகிறது. (பொருள்: அதை நீ உயிரோடு வாழச்செய்தால் அதற்கு நீ கருணை புரிவாயாக!) (முஸ்லிம் 5257)
4. ஹதீஸில் துஆக்கள்: தூங்கும் முன்

வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.
اَللّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ وَرَبَّ الأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالاِنْجِيْلِ وَالْفُرْقَانِ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ اَللّهُمَّ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اِقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ
பொருள் : இறைவா! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அர்ஷின் அதிபதியே! எங்கள் இறைவனே! ஒவ்வொரு பொருளுக்கும் அதிபதியே! தானியத்தையும், விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே! தவ்ராத்தையும் இஞ்சீலையும் குர்ஆனையும் அருளியவனே! ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் குடுமி உன் கையில் தான் உள்ளது. இறைவா! நீயே முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். (உன்னைப் போல் பகிரங்கமானது) எதுவும் உனக்கு மேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். (உன்னை விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக் கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக! வறுமையை விட்டும் எங்களைபாதுகாப்பாயாக!
5.மேலும்
நீ படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து விட்டு, பின்னர் வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு, கீழ்காணும் துஆவை ஓது. நீ ஓதுவதில் கடைசியாக இது இருக்கட்டும். இதை ஓதி விட்டு படுத்து, அன்று இரவே நீ மரணித்து விட்டால் ஈமானுடன் மரணித்தவனாவாய். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
اللهم أسلمتُ نفسي إليك، ووجهتُ وجهي إليكَ، وفوَّضتُ أمري إليك، وألجأتُ ظهري إليك، رغبةً ورهبةً إليك، لا ملجأَ ولا منجى منك إلا إليك، آمنتُ بكتابِك الذي أنزلتَ، ونبيِّك الذي أرسلتَ
பொருள்: இறைவா! என் முகத்தை உனக்குக் கட்டுப்படச் செய்துவிட்டேன். என் காரியத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். (உனது தண்டனைக்கு) அஞ்சி விட்டேன். உன்னை விட்டும் தப்பிக்க, உன்னை விட்டால் வேறு ஏதும் இல்லை. இறைவா! நீ அருளிய வேதத்தையும், நீ அனுப்பிய நபியையும் நம்பினேன். (ஆதாரம்: புகாரி – 247)
6.மேலும் இரவில் துாக்கம் விழித்து (தஹஜ்ஜத் தொழுகைக்காக) எழுந்தவுடன் துஆ…
لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ اللَّهُمَّ اغْفِرْ لِي
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'யார் இரவில் விழித்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு நிகரானவர் இல்லை; ஆட்சியும் அவனுக்குரியது; புகழும் அவனுக்குரியது; அவன் அனைத்தப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் மிகப்பெரியவன் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது என்று கூறிவிட்டு இறைவா! என்னை மன்னித்துவிடு என்றோ, வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். உளூச் செய்து தொழுதால் அத்தொழுகைஒப்புக் கொள்ளப்படும்.
என உபதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார். (புகாரி 1154)
7. தூங்கி எழுந்தவுடன்
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ
பொருள் : எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.
ஆதாரம்: புகாரி



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 15 ஜனவரி, 2019

மஸ்ஜிதுல் அக்ஸாவின் சிறப்புகள்


02) உலகில் நிர்மானிக்கப்பட்ட இரண்டாவது பள்ளிவாசல்
அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு செய்தியில் நபி (ஸல்) அவர்களிடம் எந்த பள்ளிவாசல் முதன்முதலாக நிர்மானிக்கப்பட்டது என கேட்ட போது அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபா இருக்கும் பள்ளி) என்றும் அதற்குப் பின் எது என கேட்ட போது மஸ்ஜிதுல் அக்ஸா என்றார்கள். இவை இரண்டிற்கும் இடைவெளி எத்துனை வருடங்கள் என கேட்ட போது 40 வருடங்கள் என்றார்கள். ஆதாரம் புகாரீ
03) முஸ்லிம்களின் முதலாவது கிப்லா
அல்பராஃ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நாம் நபி (ஸல்) அவர்களோடு பைத்துல் முகத்தஸ் நோக்கி 16 அல்லது 17 மாதங்களாக தொழுது வந்தோம். பின்னர் கிப்லா மாற்றப்பட்டது. ஆதாரம் முஸ்லிம்.
(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்;. ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் கொள்ளுங்கள்;. நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள்இ இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை. (2:144)
04) பிராயாணம் செய்ய அனுமதிக்கப்பட்ட பள்ளிவாசல்
அபூ ஹுறைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பள்ளிகளைத் தவிர (நல்லறங்கள் செய்யும் எண்ணத்தில்) பிரயாணம் செய்யாதீர்கள்: மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுர் ரஸுல் (ஸல்), மஸ்ஜிதுல் அக்ஸா. ஆதாரம் புகாரீ
05) நபி (ஸல்) இஸ்ரா பயணம் மேற்கொண்ட பள்ளி
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான் (17:1)
06) இப்பள்ளியில் தொழுவது பாவங்களை அழித்துவிடும்
ஸுலைமான் (அலை) அவர்கள் பைத்துல் முகத்தஸை கட்டிய பின் அல்லாஹ்விடம் 3 விடயங்களை கேட்டார்கள். அல்லாஹ்வின் தீர்ப்பை ஒத்த தீர்ப்பு வழங்கும் தன்மை; அவருக்கு பின்னால் வரக்கூடிய யாருக்கும் வழங்கிடாத ஆட்சி; இந்த பள்ளிவாசலுக்கு தொழும் எண்ணத்தில் வருபவர்களின் பாவங்கள் அன்று பிறந்த பாலகனைப் போன்று மன்னிக்கப்பட வேண்டும். ஆதாரம் நஸாயீ, இப்னு மாஜா, ஸஹீஹ் இப்னு ஹிப்பான், அஹ்மத்.
07) வெற்றி கொள்ளப்படுவது மறுமையின் அடயாளங்களில் நின்றும் உள்ளது
அவ்ப் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் தபூக் யுத்தத்தின் போது மறுமையின் 6 அடயாளங்ளை நபியவர்கள் குறிப்பிட்டார்கள்; அவற்றில் எனது மரணம், பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்படுவது …. என்றார்கள். ஆதாரம் புகாரீ
08) இதன் வெற்றிக்காக சூரியன் மறையாது இருந்தமை
அபூ ஹுறைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் யூஷஃ இப்னு நூன் பைத்துல் முக்கதஸை கைப்பற்ற சென்ற போது அல்லாஹ் அவருக்காக சூரியனை (மறையாது) பிடித்துக் கொண்டான்; இது இவரைத் தவிர வேறு எந்த மனிதனுக்காகவும் மறையாது பிடிக்கப்படாது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் அஹ்மத்.
09) தஜ்ஜால் இங்கே நுழைய மாட்டான்
தஜ்ஜால் நுழைவதற்கு தடுக்கப்பட்டுள்ள இடங்களில் மஸ்ஜிதுல் அக்ஸாவும் ஒன்று என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் அஹ்மத்.
10) இந்த பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட சிறந்தது
250 மடங்கு சிறந்தது என்றும், 500 மடங்கு சிறந்தது, 1000 மடங்கு சிறந்தது என்றும் பல அறிவிப்புக்கள் இடம் பெறுகின்றன. ஆனால் சில செய்திகள் ஹஸன் என்ற தரத்திலும் இன்னும் சில செய்திகள் பலகீனமாகவும் உள்ளன. எனவே இது விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு உள்ளது. அல்லாஹ் மிக அறிந்தவன்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 13 ஜனவரி, 2019

அவ்லியாக்களை நேசிப்போம்!


– மக்தூம் தாஜ்

இறைவனின் நேசிப்பைப் பெற்றவர்களை அவ்லியாக்கள் என்று இஸ்லாம் அழைக்கிறது. அவர்கள் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அல்லாஹ்வுக்காகவே அர்ப்பணித்தவர்கள்! அல்லாஹ்வுக்காகாவே பிறரை நேசிப்பவர்கள்! அல்லாஹ்வுக்காகவே பிறரை வெறுப்பவர்கள்! மனித சமூகம் வெற்றி பெற வேண்டும் என்று ஏங்குபவர்கள்! அதற்காக அயராது உழைப்பவர்கள். அல்லாஹ்வின் திருப்தியைத் தேடும் உத்தமர்கள் அந்த அவ்லியாக்கள் !
(இறை நம்பிக்கையாளர்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன்: 10-62)
ஆனால், அல்லாஹ் நேசிப்பபை் பெற்ற இந்த அவ்லியாக்களை, முஸ்லிம்கள் இன்று நேசிக்கின்றார்களா ? அவர்களை மதிக்கின்றார்களா ? அவர்களுக்குத் தர வேண்டிய அந்தஸ்தைத் தருகின்றார்களா ? இந்த கேள்விகளுக்கெல்லாம் நம்மிடையே "இல்லை" என்ற வெற்று பதில்தான் கிடைக்கும்!
ஆம்! நேசித்தல், மரியாதை செலுத்துதல், அந்தஸ்து வழங்குதல் என்பது, அவர்களின் பெயரையும் புகழையும் இவ்வுலகிற்குச் சொல்லிக் காட்டுவதில் இல்லை! அவர்களின் அருமை பெருமைகளைத் துதி பாடுவதில் இல்லை! அவர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக விழா எடுப்பதில் இல்லை! அவர்களின் பெயரால் இசைக் கச்சேரிகள், மேல தாளங்கள் ஏற்பாடு செய்து களிப்பதில் இல்லை! அவர்களின் அடக்கஸ்தலத்தைச் சுற்றி கட்டிடம் எழுப்பி, அங்கே தலை பணிந்து, மூட பழக்க வழக்கங்களில் மூழ்குவதில் இல்லை!
உண்மையான மரியாதையும் நேசித்தலும், அவர்கள் எப்படி இஸ்லாமிய மார்க்கத்தை தூய முறையில் வாழ்ந்து காட்டினார்களோ, அவ்வாறு நாமும் வாழ்வதில் உள்ளது. அவர்களைப் போன்று தொழுகையாளிகளாக, நோன்பாளிகளாக, தர்மம் வழங்குபவர்களாக, உண்மையாளர்களாக, வாய்மையாளர்களாக, நல்ல முஸ்லிம்களாக வாழ்வதில்தான் உண்மையான மரியாதை உள்ளது.
நாம் அதனை விடுத்து, அவர்கள் சொல்லாத, செய்யாத மூடப்பழக்க வழக்கங்களையும், பிறமத கலாச்சாரங்களையும் அவ்லியாக்களின் பெயர்களாலேயே பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.
  • தர்காக்களை கட்டுவது…
  • அங்கே ஊதுவத்திகள் கொளுத்துவது, பூக்களை போடுவது…
  • ஃபாத்திஹா ஓதுவது…
  • பாடல்களை படிப்பது…
  • அவரிடத்தில் தலை பணிவது…
  • அங்கே நேர்ச்சை செய்வது…
  • அங்கே பெண்கள் செல்வது…
  • ஆண்களும் பெண்களும் கலப்பது…
போன்றவை அனைத்தும் இஸ்லாத்தில் பாவச்செயல்களாகும்.
நபிகள் நாயகத்தோடு தோழமை கொண்ட, சொர்க்கச் சான்று பெற்ற தோழர்கள் மரணித்தபோது, அவர்களில் யாருக்கும் இவற்றில் எதுவும் செய்யப்படவில்லை. இவ்வாறு செய்வதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கடுமையாக கண்டித்தார்கள்.
இஸ்லாமும், இறைநேசர்களும்:
இஸ்லாமிய மார்க்கத்தை தூய முறையில் வாழ்ந்த இறைநேசர்களான அவ்லியாக்களை இஸ்லாம் மிகுந்த மதிப்பை அளிக்கின்றது. அதே வேளையில் அவர்களும் மனிதர்கள்தாம் அழுத்தமாக பதிவும் செய்கிறது.
  • அவர்களுக்கு மறைவான ஞானம் கிடையாது… (திருக்குர்ஆன்- 27:65, 16:77, 10:20)
  • அவர்கள் மரணித்து விட்டால் அவர்களால் செவியேற்க முடியாது… (திருக்குர்ஆன்- 30:52, 35:14,22)
  • அவர்களால் சிரமங்களை நீக்கவோ, நோயை குணப்படுத்தவோ முடியாது… (திருக்குர்ஆன்- 7:188, 10:49,106, 26:80)
  • அவர்களும் அல்லாஹ்வின் அடிமைகள் தான்… (திருக்குர்ஆன்- 7:194)
  • மறுமையில் யாருக்காகவும் யாரும் சிபாரிசும் செய்யமுடியாது… (திருக்குர்ஆன்- 2:255 , 39:44, 10:18)
இவற்றை எல்லாம் அறிந்திராத முஸ்லிம்களில் பலர், மேற்கண்ட காரியங்களில் ஈடுபட்டு, அவ்லியாக்களுக்கு அல்லாஹ்வின் தன்மைகளைப் பொருத்தி, அல்லாஹ்விற்கு இணைவைத்து விடுகிறார்கள். அதாவது அல்லாஹ்விற்கு "ஷிர்க்" செய்து விடுகிறார்கள்.
ஷிர்க் எனும் இணைவைப்பைத் தவிர, இறைவன் எல்லாப் பாவங்களையும் அவன் நாடினால் மன்னிக்கிறான். ஆனால் ஷிர்க்கை மட்டும் மன்னிப்பதில்லை! அவர் தொழுதாலும், நோன்பு நோற்றாலும், தான தர்மம் வழங்கினாலும், ஹஜ் உம்ரா ஆகிய நற்செயல்களைச் செய்திருந்தாலும் அவர் அல்லாஹ்விற்கு ஷிர்க் வைத்துவிட்டால் அவர் நிரந்தர நரகத்தில் தள்ளப்படுவார்கள்.
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு (ஷிர்க்) இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (திருக்குர்ஆன் : 4:48)
அல்லாஹ் நம் அனைவரையும் ஷிர்க் எனும் இணைவைப்பை விட்டும் பாதுகாப்பானாக ! ஆமின் !!
நற்செயல் என்பது அல்லாஹ்வும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் நமக்கு வழிகாட்டி இருக்க வேண்டும். அவ்லியாக்களிடத்தில் பிரார்த்திப்பது, நேர்ச்சை செய்வது, காணிக்கை செலுத்துவது, தலை பணிவது, அடக்கஸ்தலத்தைச் சுற்றி கட்டிடம் கட்டுவது, அதனை வலம் வருவது, சிறப்புப்படுத்துவது, கந்தூரி எடுப்பது, பாட்டுக் கச்சேரி நடத்துவது, பெண்கள் அங்கே செல்வது, பாடல் படிப்பது, ஃபாத்திஹா ஓதுவது போன்ற விஷயங்களைச் செய்வதற்கு இஸ்லாமிய மார்க்கம், நமக்கு வழிகாட்டாத போது, நாம் இவைகளைச் செய்வது மிகப்பெரிய பாவங்களாகும்.
அவ்லியாக்கள் எனும் இறைநேசர்கள் இஸ்லாத்திற்காக அயராது உழைத்திருக்கிறார்கள். தியாகம் செய்திருக்கிறார்கள். அத்தகைய இறைநேசர்களின் மறுமை வாழ்வு வெற்றியடைய நாம் அவர்களுக்காக பிரார்த்திப்பதே அவர்களுக்காக நாம் செய்யும் மிகச்சிறந்த மரியாதை ஆகும். அதனை விடுத்து, அவர்களே காட்டித் தராத செயல்களைச் செய்து, அவர்களுக்கு இறைவனின் தன்மைகளை பொருத்தி, இறைவனின் கோபத்திற்கும், தண்டனைக்கும் ஆளாகக் கூடாது.
இவற்றிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக ! ஆமின் !!
அல்லாஹ்வையே வணங்குவோம் !
அல்லாஹ்வின் தூதரையே பின்பற்றுவோம் !! 
அவ்லியாக்களை நேசிப்போம் !!!
அவர்களுக்காக பிரார்த்திப்போம் !!!!
அறிவுரை கூறிக் கொண்டிருப்பீராக ! ஏனெனில், அறிவுரை இறைநம்பிக்கை கொள்வோருக்குப் பயனளிக்கக் கூடியதாகும்! (திருக்குர்ஆன்:51-55)



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 11 ஜனவரி, 2019

சமூக சேவைகளும் புகழ் மாலைகளும்!


நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்:
ஒரு மனிதர் நடைபாதையில் கிடந்த மரக்கிளையொன்றைக் கடந்து சென்றார். அப்போது அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! முஸ்லிம் (பாதசாரி)களுக்குத் தொல்லை தராமலிருப்பதற்காக இதை நான் அப்புறப்படுத்துவேன்" என்று கூறி(விட்டு அதை அப்புறப்படுத்தி)னார். இதன் காரணமாக, அவர் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); ஆதாரம்: முஸ்லிம் (5106)
பாதசாரிகளுக்குத் தொல்லை தரும் சாதாரண  பொருட்களை அகற்றியதற்கே ஒருவருக்கு சொர்க்கம் கிடைக்குமாயின் ஒருவர் தன்னுடைய பொருளாதாரம், ஓய்வு, குடும்பத்தினர்களுடன் சந்தோசமாக இருக்கின்ற நேரம் போன்றவற்றையெல்லாம் தியாகம் செய்து மக்களின் நலனுக்காகப் பாடுபடுவதென்பது சாதாரண காரியமல்ல!
வார்த்தைகளில் சர்வ சாதாரணமாக சமூக சேவகர் என்பதை கூறிவிடலாம்! ஆனால் அதை செய்வதற்கு களத்தில் இறங்கி நிற்கின்ற போது தான் அதை செய்வதில் ஏற்படும் சிரமங்களும் அதை செய்வதனால் ஏற்படும் வலிகளும் ஏளன ஏச்சு, பேச்சுக்களும் புரியவரும்!
ஒன்னுமில்லாத வெட்டிப் பயல், ஊர் சுத்தி திரிபவன் போன்ற பட்டப் பெயர்களும் சேர்த்தே இவர்களுக்கு மக்களில் சிலர் வழங்குவார்கள்!
இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் பொது நலன் ஒன்றையே நோக்கமாக கருதி செயல்படும் சமூக சேவைகள் செய்யும் நல்ல உள்ளங்களுக்கு இறைவன் அவர்களின் எண்ணத்திற்கேற்ப சிறந்த நற்கூலி வழங்குவானாகவும் என்று மனமுவந்து பிரார்த்திக்கின்றோம்!
அடுத்ததாக சமூக சேவைகள் செய்பவர்கள் மட்டுமல்ல, எந்த ஒரு நல்ல காரியங்களை செய்பவர்களாக இருந்தாலும் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில் அந்த செயல்களை இறைவனின் திருப்பொருத்தத்திற்காக செய்கிறேன் என்ற எண்ணத்துடன் செயல்படுவதாகும்! ஒவ்வொரு அமல் செய்பவரும் தத்தமது எண்ணங்களுக்கேற்பவே கூலி கொடுக்கப்படுவார்கள்! என்ற அனைவரும் அறிந்த நபிமொழியை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்!
நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்:
'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது'
அறிவிப்பவர்: உமர் இப்னு ஹத்தாப் (ரலி); ஆதாரம்: புகாரி (1)
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே என்ற எண்ணமில்லாமல் செய்யப்படும் எந்த அமலும் முகத்தில் தூக்கியெறிப்படும் என்பதை மூன்று நபர்களைப் பற்றிய பிரபலமான ஹதீஸ தெளிவுபடுத்துவதை அறியலாம்!
1) மக்கள் தம்மை வீரன் எனப் போற்றிப் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வுலகில் இஸ்லாமிய எதிரிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தவர்
2) இவ்வுலகில் மக்கள் தம்மை கல்வி மான், சிறந்த அறிஞர் எனப் போற்றிப் புகழ வேண்டும் என்பதற்காக கல்வி கற்று மக்களுக்குப் போதித்து வந்த மார்க்க அறிஞர்!
3) இவ்வுலகில் மக்கள் தம்மை கொடை வள்ளல், வாரி வாரி வழங்கும் நன்கொடையாளர் எனப் போற்றிப் புகழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தாம் சிரமப்பட்டு உழைத்த செல்வங்களை மக்களுக்கு வாரி வழங்கிய கொடையாளர்
மறுமையில் இம்மூவரையும் விசாரிக்கும் இறைவன் இவர்கள் அல்லாஹ்வுக்காக என்ற தூய மனதோடு தம் நற்செயல்களை செய்யாமல் இம்மையில் மக்கள் தம்மைப் புகழவேண்டும் என்ற அற்ப ஆசையும் அவர்கள் கூடவே சேர்ந்து இருந்த காரணத்தினால் அவர்களின் நற்செயல்கள் எல்லாம் அவர்களின் முகத்திலே தூக்கியெறிப்பட்டு நரகத்தில் வீசியெறிப்படுவார்கள் என்பதை நபிமொழி விளக்குவதை அறியலாம்!
எனவே ஒருவர் தம்மை மக்கள் 'சிறந்த சமூக சேவகர்', 'மக்களுக்காகப் பாடுபடுபவர்' என்று புகழ வேண்டும் எனவும் பொதுஸ்தாபனங்களும் பொது நிறுவனங்களும் தம் சேவைகளுக்காக தம்மை பாராட்டி கவுரவிக்க வேண்டும் எனவும் செயல்படுவாராயின் அவர் தம் எண்ணங்களை "அல்லாஹ்வுக்காகவே இத்தகைய நற்பணிகளை நான் செய்கின்றேன்" என மாற்றிக் கொள்ளட்டும்! இல்லையேல் அவருக்கு இம்மையில் அந்தப் புகழ் கிடைத்துவிடும் என்றாலும் மறுமையில் கைசேதப்பட்டு நிற்க நேரிடும்!
அடுத்ததாக ஒருவரைப் நேருக்கு நேர் புகழ்வதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது என்பதை நம்மில் பலர் அறிவதில்லை!
புகழ்பாடுவது, புகழ்பவனை நயவஞ்சகத் தன்மையை நோக்கி இழுத்துச் சென்றுவிடும். அவ்வாறே புகழப்படுபவனை பெருமைக்கு ஆளாக்கிவிடும் என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்கள் மனிதர்களின் முகத்துக்கு எதிரே புகழ்வதை தடுப்பவர்களாக இருந்தார்கள்.
அபூ பக்ரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அவரது முகத்துக்கு முன்னால் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் "நீர் நாசமடைவீராக! உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர். உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர்" என மூன்று முறை கூறினார்கள்.
பிறகு, "எவரேனும் தனது சகோதரரை அவசியம் புகழ்வதாக இருந்தால் அவரைப் பற்றி இவ்வாறு கருதுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன் என்று (மட்டும்) அவர் சொல்லட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக் கருதினால் மட்டுமே அதைக் கூறவேண்டும். அல்லாஹ்வுக்கு முன் யாரையும் தூய்மையானவர் என்று (எவரும்) கூறவேண்டாம்"
என்று கூறினார்கள்.
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்
முஸ்னத் அஹமத் கிரந்தத்தின் ஓர் அறிவிப்பில் கூறப்படுவதாவது:
"அல்லாஹ்வின் தூதரே! இம்மனிதர் மதீனா வாசிகளில் மிக அழகியவர் என்றோ மதீனாவாசிகளில் மிக அதிகமாகத் தொழுபவர்" என்றோ கூறியபோது நபி (ஸல்) அவர்கள், "அவர் கேட்கும்படி புகழாதே. அவரை நீ அழித்துவிடுவாய்" என இரண்டு அல்லது மூன்றுமுறை கூறிவிட்டு "நீங்கள் (எல்லா விஷயங்களிலும்) இலகுவானதையே நாடப்பட்ட சமுதாயத்தினர்." என்றும் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், 'ஒருவரின் முன்னிலையில் அவரைப் புகழ்வது அழிவை ஏற்படுத்தும்' என்று கூறினார்கள்.
ஏனெனில் அவ்வாறு தன்னை புகழ்வதைக் கேட்கும்போது மனித மனம் அதை மிகவும் விரும்பும். அதைக் கேட்பவர் அகந்தையும், ஆணவமும் கொண்டு மக்களிடமிருந்து தனது முகத்தை திருப்பிக் கொள்வார்.
புகழ்பவர்களில் சிலர் ஏமாற்றுபவர்களாகவும், பொய்யர்களாகவும், நயவஞ்சகர்களாகவும் இருப்பதால் மீண்டும் மீண்டும் புகழும்போது புகழைக் கேட்பவர்கள் அதில் இன்பமடைய ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்குப் பின் அவர்கள் வரம்பு மீறிய புகழைத் தவிர அறிவுரையையும், விமர்சனத்தையும் விரும்பமாட்டார்கள்.
நயவஞ்சகமாகப் புகழ்பவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் அதிகரித்து, நயவஞ்சகமும் முகஸ்துதியும் அதிகரித்துவிடக் கூடாது என்பதால் நபி (ஸல்) அவர்கள் புகழ்பவனின் முகத்தில் மண்ணை வீசுமாறு தங்களது தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
ஒரு மனிதர் ஆட்சியாளர்களில் ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசியபோது மிக்தாத் (ரழி) அவர்கள் அம்மனிதரின் முகத்தை நோக்கி மண்ணை அள்ளி வீசிவிட்டுக் கூறினார்கள்:
"அதிகமதிகம் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களது முகத்தில் மண்ணை எடுத்து வீசுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்."
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்
நபித்தோழர்கள் இவ்வாறு புகழ்ப்படுவதைக் கேட்டு மிகவும் வெறுப்படைந்தார்கள். தாம் அழிந்து விடுவோம் என்ற அச்சத்தில் அந்தப் புகழ் வார்த்தைகளுக்கு தகுதியுடையவர்களாக இருந்தும் அதை வெறுத்தார்கள். மேலும் அவர்கள் இத்தகைய கீழ்த்தரமான செயல்களிலிருந்து விலகி இஸ்லாமின் தூய பண்புகளைப் பெற்றிருந்தார்கள்.
மறுமையில் கிடைக்கவிருக்கின்ற நற்பலன்களை எல்லாம் அழித்து நரகத்தின் படுகுழியில் வீழுவதற்கு காரணமாகயிருக்கின்ற இத்தகைய புகழ்மாலைகளிலருந்து சமூக சேவை செய்பவர்களும், வாரி வழங்கும் வள்ளல்களும், தாம் கற்ற கல்வியை மற்றவர்களுக்கு போதிக்கும் கல்வி மான்களும் முற்றிலுமாக விலகியிருந்து "அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காகவே நான் என் பணிகளை செய்கிறேன்" என்ற தூய எண்ணத்துடன் செயல்பட வேண்டும்!
அதன் மூலம் அல்லாஹ்வின் அளப்பரிய அருளை பெற்று மறுமையில் சொர்க்கச் சோலையில் இன்புற வேண்டும்! அதற்கு அல்லாஹ் அருள்புரிவானாகவும்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

நாம் தூங்கும் போர்வையை ஏன் மடித்து வைக்க வேண்டும் தெரியுமா?

நாம் தூங்கும் போர்வையை பல வேளைகளிலும் ஒழுங்காக மடித்து வைப்பதில்லை. ஆனால் மடித்து வைக்க வேண்டும் என்று நம் முதியோர்கள் கூறுவார்கள்...

Popular Posts