லேபிள்கள்

ஞாயிறு, 13 ஜனவரி, 2019

அவ்லியாக்களை நேசிப்போம்!


மக்தூம் தாஜ்

இறைவனின் நேசிப்பைப் பெற்றவர்களை அவ்லியாக்கள் என்று இஸ்லாம் அழைக்கிறது. அவர்கள் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அல்லாஹ்வுக்காகவே அர்ப்பணித்தவர்கள்! அல்லாஹ்வுக்காகாவே பிறரை நேசிப்பவர்கள்! அல்லாஹ்வுக்காகவே பிறரை வெறுப்பவர்கள்! மனித சமூகம் வெற்றி பெற வேண்டும் என்று ஏங்குபவர்கள்! அதற்காக அயராது உழைப்பவர்கள். அல்லாஹ்வின் திருப்தியைத் தேடும் உத்தமர்கள் அந்த அவ்லியாக்கள் !
(இறை நம்பிக்கையாளர்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன்: 10-62)
ஆனால், அல்லாஹ் நேசிப்பபை் பெற்ற இந்த அவ்லியாக்களை, முஸ்லிம்கள் இன்று நேசிக்கின்றார்களா ? அவர்களை மதிக்கின்றார்களா ? அவர்களுக்குத் தர வேண்டிய அந்தஸ்தைத் தருகின்றார்களா ? இந்த கேள்விகளுக்கெல்லாம் நம்மிடையே "இல்லை" என்ற வெற்று பதில்தான் கிடைக்கும்!
ஆம்! நேசித்தல், மரியாதை செலுத்துதல், அந்தஸ்து வழங்குதல் என்பது, அவர்களின் பெயரையும் புகழையும் இவ்வுலகிற்குச் சொல்லிக் காட்டுவதில் இல்லை! அவர்களின் அருமை பெருமைகளைத் துதி பாடுவதில் இல்லை! அவர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக விழா எடுப்பதில் இல்லை! அவர்களின் பெயரால் இசைக் கச்சேரிகள், மேல தாளங்கள் ஏற்பாடு செய்து களிப்பதில் இல்லை! அவர்களின் அடக்கஸ்தலத்தைச் சுற்றி கட்டிடம் எழுப்பி, அங்கே தலை பணிந்து, மூட பழக்க வழக்கங்களில் மூழ்குவதில் இல்லை!
உண்மையான மரியாதையும் நேசித்தலும், அவர்கள் எப்படி இஸ்லாமிய மார்க்கத்தை தூய முறையில் வாழ்ந்து காட்டினார்களோ, அவ்வாறு நாமும் வாழ்வதில் உள்ளது. அவர்களைப் போன்று தொழுகையாளிகளாக, நோன்பாளிகளாக, தர்மம் வழங்குபவர்களாக, உண்மையாளர்களாக, வாய்மையாளர்களாக, நல்ல முஸ்லிம்களாக வாழ்வதில்தான் உண்மையான மரியாதை உள்ளது.
நாம் அதனை விடுத்து, அவர்கள் சொல்லாத, செய்யாத மூடப்பழக்க வழக்கங்களையும், பிறமத கலாச்சாரங்களையும் அவ்லியாக்களின் பெயர்களாலேயே பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.
  • தர்காக்களை கட்டுவது
  • அங்கே ஊதுவத்திகள் கொளுத்துவது, பூக்களை போடுவது
  • ஃபாத்திஹா ஓதுவது
  • பாடல்களை படிப்பது
  • அவரிடத்தில் தலை பணிவது
  • அங்கே நேர்ச்சை செய்வது
  • அங்கே பெண்கள் செல்வது
  • ஆண்களும் பெண்களும் கலப்பது
போன்றவை அனைத்தும் இஸ்லாத்தில் பாவச்செயல்களாகும்.
நபிகள் நாயகத்தோடு தோழமை கொண்ட, சொர்க்கச் சான்று பெற்ற தோழர்கள் மரணித்தபோது, அவர்களில் யாருக்கும் இவற்றில் எதுவும் செய்யப்படவில்லை. இவ்வாறு செய்வதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கடுமையாக கண்டித்தார்கள்.
இஸ்லாமும், இறைநேசர்களும்:
இஸ்லாமிய மார்க்கத்தை தூய முறையில் வாழ்ந்த இறைநேசர்களான அவ்லியாக்களை இஸ்லாம் மிகுந்த மதிப்பை அளிக்கின்றது. அதே வேளையில் அவர்களும் மனிதர்கள்தாம் அழுத்தமாக பதிவும் செய்கிறது.
  • அவர்களுக்கு மறைவான ஞானம் கிடையாது… (திருக்குர்ஆன்- 27:65, 16:77, 10:20)
  • அவர்கள் மரணித்து விட்டால் அவர்களால் செவியேற்க முடியாது… (திருக்குர்ஆன்- 30:52, 35:14,22)
  • அவர்களால் சிரமங்களை நீக்கவோ, நோயை குணப்படுத்தவோ முடியாது… (திருக்குர்ஆன்- 7:188, 10:49,106, 26:80)
  • அவர்களும் அல்லாஹ்வின் அடிமைகள் தான்… (திருக்குர்ஆன்- 7:194)
  • மறுமையில் யாருக்காகவும் யாரும் சிபாரிசும் செய்யமுடியாது… (திருக்குர்ஆன்- 2:255 , 39:44, 10:18)
இவற்றை எல்லாம் அறிந்திராத முஸ்லிம்களில் பலர், மேற்கண்ட காரியங்களில் ஈடுபட்டு, அவ்லியாக்களுக்கு அல்லாஹ்வின் தன்மைகளைப் பொருத்தி, அல்லாஹ்விற்கு இணைவைத்து விடுகிறார்கள். அதாவது அல்லாஹ்விற்கு "ஷிர்க்" செய்து விடுகிறார்கள்.
ஷிர்க் எனும் இணைவைப்பைத் தவிர, இறைவன் எல்லாப் பாவங்களையும் அவன் நாடினால் மன்னிக்கிறான். ஆனால் ஷிர்க்கை மட்டும் மன்னிப்பதில்லை! அவர் தொழுதாலும், நோன்பு நோற்றாலும், தான தர்மம் வழங்கினாலும், ஹஜ் உம்ரா ஆகிய நற்செயல்களைச் செய்திருந்தாலும் அவர் அல்லாஹ்விற்கு ஷிர்க் வைத்துவிட்டால் அவர் நிரந்தர நரகத்தில் தள்ளப்படுவார்கள்.
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு (ஷிர்க்) இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (திருக்குர்ஆன் : 4:48)
அல்லாஹ் நம் அனைவரையும் ஷிர்க் எனும் இணைவைப்பை விட்டும் பாதுகாப்பானாக ! ஆமின் !!
நற்செயல் என்பது அல்லாஹ்வும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் நமக்கு வழிகாட்டி இருக்க வேண்டும். அவ்லியாக்களிடத்தில் பிரார்த்திப்பது, நேர்ச்சை செய்வது, காணிக்கை செலுத்துவது, தலை பணிவது, அடக்கஸ்தலத்தைச் சுற்றி கட்டிடம் கட்டுவது, அதனை வலம் வருவது, சிறப்புப்படுத்துவது, கந்தூரி எடுப்பது, பாட்டுக் கச்சேரி நடத்துவது, பெண்கள் அங்கே செல்வது, பாடல் படிப்பது, ஃபாத்திஹா ஓதுவது போன்ற விஷயங்களைச் செய்வதற்கு இஸ்லாமிய மார்க்கம், நமக்கு வழிகாட்டாத போது, நாம் இவைகளைச் செய்வது மிகப்பெரிய பாவங்களாகும்.
அவ்லியாக்கள் எனும் இறைநேசர்கள் இஸ்லாத்திற்காக அயராது உழைத்திருக்கிறார்கள். தியாகம் செய்திருக்கிறார்கள். அத்தகைய இறைநேசர்களின் மறுமை வாழ்வு வெற்றியடைய நாம் அவர்களுக்காக பிரார்த்திப்பதே அவர்களுக்காக நாம் செய்யும் மிகச்சிறந்த மரியாதை ஆகும். அதனை விடுத்து, அவர்களே காட்டித் தராத செயல்களைச் செய்து, அவர்களுக்கு இறைவனின் தன்மைகளை பொருத்தி, இறைவனின் கோபத்திற்கும், தண்டனைக்கும் ஆளாகக் கூடாது.
இவற்றிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக ! ஆமின் !!
அல்லாஹ்வையே வணங்குவோம் !
அல்லாஹ்வின் தூதரையே பின்பற்றுவோம் !! 
அவ்லியாக்களை நேசிப்போம் !!!
அவர்களுக்காக பிரார்த்திப்போம் !!!!
அறிவுரை கூறிக் கொண்டிருப்பீராக ! ஏனெனில், அறிவுரை இறைநம்பிக்கை கொள்வோருக்குப் பயனளிக்கக் கூடியதாகும்! (திருக்குர்ஆன்:51-55)



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts