லேபிள்கள்

வெள்ளி, 11 ஜனவரி, 2019

சமூக சேவைகளும் புகழ் மாலைகளும்!


நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்:
ஒரு மனிதர் நடைபாதையில் கிடந்த மரக்கிளையொன்றைக் கடந்து சென்றார். அப்போது அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! முஸ்லிம் (பாதசாரி)களுக்குத் தொல்லை தராமலிருப்பதற்காக இதை நான் அப்புறப்படுத்துவேன்" என்று கூறி(விட்டு அதை அப்புறப்படுத்தி)னார். இதன் காரணமாக, அவர் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); ஆதாரம்: முஸ்லிம் (5106)
பாதசாரிகளுக்குத் தொல்லை தரும் சாதாரண  பொருட்களை அகற்றியதற்கே ஒருவருக்கு சொர்க்கம் கிடைக்குமாயின் ஒருவர் தன்னுடைய பொருளாதாரம், ஓய்வு, குடும்பத்தினர்களுடன் சந்தோசமாக இருக்கின்ற நேரம் போன்றவற்றையெல்லாம் தியாகம் செய்து மக்களின் நலனுக்காகப் பாடுபடுவதென்பது சாதாரண காரியமல்ல!
வார்த்தைகளில் சர்வ சாதாரணமாக சமூக சேவகர் என்பதை கூறிவிடலாம்! ஆனால் அதை செய்வதற்கு களத்தில் இறங்கி நிற்கின்ற போது தான் அதை செய்வதில் ஏற்படும் சிரமங்களும் அதை செய்வதனால் ஏற்படும் வலிகளும் ஏளன ஏச்சு, பேச்சுக்களும் புரியவரும்!
ஒன்னுமில்லாத வெட்டிப் பயல், ஊர் சுத்தி திரிபவன் போன்ற பட்டப் பெயர்களும் சேர்த்தே இவர்களுக்கு மக்களில் சிலர் வழங்குவார்கள்!
இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் பொது நலன் ஒன்றையே நோக்கமாக கருதி செயல்படும் சமூக சேவைகள் செய்யும் நல்ல உள்ளங்களுக்கு இறைவன் அவர்களின் எண்ணத்திற்கேற்ப சிறந்த நற்கூலி வழங்குவானாகவும் என்று மனமுவந்து பிரார்த்திக்கின்றோம்!
அடுத்ததாக சமூக சேவைகள் செய்பவர்கள் மட்டுமல்ல, எந்த ஒரு நல்ல காரியங்களை செய்பவர்களாக இருந்தாலும் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில் அந்த செயல்களை இறைவனின் திருப்பொருத்தத்திற்காக செய்கிறேன் என்ற எண்ணத்துடன் செயல்படுவதாகும்! ஒவ்வொரு அமல் செய்பவரும் தத்தமது எண்ணங்களுக்கேற்பவே கூலி கொடுக்கப்படுவார்கள்! என்ற அனைவரும் அறிந்த நபிமொழியை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்!
நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்:
'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது'
அறிவிப்பவர்: உமர் இப்னு ஹத்தாப் (ரலி); ஆதாரம்: புகாரி (1)
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே என்ற எண்ணமில்லாமல் செய்யப்படும் எந்த அமலும் முகத்தில் தூக்கியெறிப்படும் என்பதை மூன்று நபர்களைப் பற்றிய பிரபலமான ஹதீஸ தெளிவுபடுத்துவதை அறியலாம்!
1) மக்கள் தம்மை வீரன் எனப் போற்றிப் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வுலகில் இஸ்லாமிய எதிரிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தவர்
2) இவ்வுலகில் மக்கள் தம்மை கல்வி மான், சிறந்த அறிஞர் எனப் போற்றிப் புகழ வேண்டும் என்பதற்காக கல்வி கற்று மக்களுக்குப் போதித்து வந்த மார்க்க அறிஞர்!
3) இவ்வுலகில் மக்கள் தம்மை கொடை வள்ளல், வாரி வாரி வழங்கும் நன்கொடையாளர் எனப் போற்றிப் புகழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தாம் சிரமப்பட்டு உழைத்த செல்வங்களை மக்களுக்கு வாரி வழங்கிய கொடையாளர்
மறுமையில் இம்மூவரையும் விசாரிக்கும் இறைவன் இவர்கள் அல்லாஹ்வுக்காக என்ற தூய மனதோடு தம் நற்செயல்களை செய்யாமல் இம்மையில் மக்கள் தம்மைப் புகழவேண்டும் என்ற அற்ப ஆசையும் அவர்கள் கூடவே சேர்ந்து இருந்த காரணத்தினால் அவர்களின் நற்செயல்கள் எல்லாம் அவர்களின் முகத்திலே தூக்கியெறிப்பட்டு நரகத்தில் வீசியெறிப்படுவார்கள் என்பதை நபிமொழி விளக்குவதை அறியலாம்!
எனவே ஒருவர் தம்மை மக்கள் 'சிறந்த சமூக சேவகர்', 'மக்களுக்காகப் பாடுபடுபவர்' என்று புகழ வேண்டும் எனவும் பொதுஸ்தாபனங்களும் பொது நிறுவனங்களும் தம் சேவைகளுக்காக தம்மை பாராட்டி கவுரவிக்க வேண்டும் எனவும் செயல்படுவாராயின் அவர் தம் எண்ணங்களை "அல்லாஹ்வுக்காகவே இத்தகைய நற்பணிகளை நான் செய்கின்றேன்" என மாற்றிக் கொள்ளட்டும்! இல்லையேல் அவருக்கு இம்மையில் அந்தப் புகழ் கிடைத்துவிடும் என்றாலும் மறுமையில் கைசேதப்பட்டு நிற்க நேரிடும்!
அடுத்ததாக ஒருவரைப் நேருக்கு நேர் புகழ்வதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது என்பதை நம்மில் பலர் அறிவதில்லை!
புகழ்பாடுவது, புகழ்பவனை நயவஞ்சகத் தன்மையை நோக்கி இழுத்துச் சென்றுவிடும். அவ்வாறே புகழப்படுபவனை பெருமைக்கு ஆளாக்கிவிடும் என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்கள் மனிதர்களின் முகத்துக்கு எதிரே புகழ்வதை தடுப்பவர்களாக இருந்தார்கள்.
அபூ பக்ரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அவரது முகத்துக்கு முன்னால் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் "நீர் நாசமடைவீராக! உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர். உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர்" என மூன்று முறை கூறினார்கள்.
பிறகு, "எவரேனும் தனது சகோதரரை அவசியம் புகழ்வதாக இருந்தால் அவரைப் பற்றி இவ்வாறு கருதுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன் என்று (மட்டும்) அவர் சொல்லட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக் கருதினால் மட்டுமே அதைக் கூறவேண்டும். அல்லாஹ்வுக்கு முன் யாரையும் தூய்மையானவர் என்று (எவரும்) கூறவேண்டாம்"
என்று கூறினார்கள்.
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்
முஸ்னத் அஹமத் கிரந்தத்தின் ஓர் அறிவிப்பில் கூறப்படுவதாவது:
"அல்லாஹ்வின் தூதரே! இம்மனிதர் மதீனா வாசிகளில் மிக அழகியவர் என்றோ மதீனாவாசிகளில் மிக அதிகமாகத் தொழுபவர்" என்றோ கூறியபோது நபி (ஸல்) அவர்கள், "அவர் கேட்கும்படி புகழாதே. அவரை நீ அழித்துவிடுவாய்" என இரண்டு அல்லது மூன்றுமுறை கூறிவிட்டு "நீங்கள் (எல்லா விஷயங்களிலும்) இலகுவானதையே நாடப்பட்ட சமுதாயத்தினர்." என்றும் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், 'ஒருவரின் முன்னிலையில் அவரைப் புகழ்வது அழிவை ஏற்படுத்தும்' என்று கூறினார்கள்.
ஏனெனில் அவ்வாறு தன்னை புகழ்வதைக் கேட்கும்போது மனித மனம் அதை மிகவும் விரும்பும். அதைக் கேட்பவர் அகந்தையும், ஆணவமும் கொண்டு மக்களிடமிருந்து தனது முகத்தை திருப்பிக் கொள்வார்.
புகழ்பவர்களில் சிலர் ஏமாற்றுபவர்களாகவும், பொய்யர்களாகவும், நயவஞ்சகர்களாகவும் இருப்பதால் மீண்டும் மீண்டும் புகழும்போது புகழைக் கேட்பவர்கள் அதில் இன்பமடைய ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்குப் பின் அவர்கள் வரம்பு மீறிய புகழைத் தவிர அறிவுரையையும், விமர்சனத்தையும் விரும்பமாட்டார்கள்.
நயவஞ்சகமாகப் புகழ்பவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் அதிகரித்து, நயவஞ்சகமும் முகஸ்துதியும் அதிகரித்துவிடக் கூடாது என்பதால் நபி (ஸல்) அவர்கள் புகழ்பவனின் முகத்தில் மண்ணை வீசுமாறு தங்களது தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
ஒரு மனிதர் ஆட்சியாளர்களில் ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசியபோது மிக்தாத் (ரழி) அவர்கள் அம்மனிதரின் முகத்தை நோக்கி மண்ணை அள்ளி வீசிவிட்டுக் கூறினார்கள்:
"அதிகமதிகம் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களது முகத்தில் மண்ணை எடுத்து வீசுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்."
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்
நபித்தோழர்கள் இவ்வாறு புகழ்ப்படுவதைக் கேட்டு மிகவும் வெறுப்படைந்தார்கள். தாம் அழிந்து விடுவோம் என்ற அச்சத்தில் அந்தப் புகழ் வார்த்தைகளுக்கு தகுதியுடையவர்களாக இருந்தும் அதை வெறுத்தார்கள். மேலும் அவர்கள் இத்தகைய கீழ்த்தரமான செயல்களிலிருந்து விலகி இஸ்லாமின் தூய பண்புகளைப் பெற்றிருந்தார்கள்.
மறுமையில் கிடைக்கவிருக்கின்ற நற்பலன்களை எல்லாம் அழித்து நரகத்தின் படுகுழியில் வீழுவதற்கு காரணமாகயிருக்கின்ற இத்தகைய புகழ்மாலைகளிலருந்து சமூக சேவை செய்பவர்களும், வாரி வழங்கும் வள்ளல்களும், தாம் கற்ற கல்வியை மற்றவர்களுக்கு போதிக்கும் கல்வி மான்களும் முற்றிலுமாக விலகியிருந்து "அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காகவே நான் என் பணிகளை செய்கிறேன்" என்ற தூய எண்ணத்துடன் செயல்பட வேண்டும்!
அதன் மூலம் அல்லாஹ்வின் அளப்பரிய அருளை பெற்று மறுமையில் சொர்க்கச் சோலையில் இன்புற வேண்டும்! அதற்கு அல்லாஹ் அருள்புரிவானாகவும்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

மைக்ரோவேவ் ஓவனில்சமைக்கக் கூடாத உணவுகள்.

மைக்ரோவேவில் நீங்கள் சிக்கன் அல்லது சிக்கன் சேர்த்து செய்யப்படும் எந்த உணவுப் பொருட்களையும் ச...

Popular Posts