லேபிள்கள்

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

நரகத்தில் சில காட்சிகள்..

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர்

நரகம் என்பது மிகவும் கொடியது, யாரினாலும் அதனுடைய வேதனையை தாங்க முடியாது, நரகத்தில் பலவிதமான பயங்கரமான தண்டனைகளையும் அல்லாஹ் பாவிகளுக்கு தயார் பண்ணி வைத்துள்ளான். இந்த பயங்கரமான நரகத்தைப் பற்றி அல்லாஹ்வும், நபியவர்களும் கடுமையாக எச்சரித்த பல செய்திகளை தொடராக உங்கள் சிந்தனைகளுக்கு முன் வைக்க உள்ளேன்.
அல்லாஹ் நரகத்தைப் பற்றி பேசும் போது பின்வருமாறு கூறுகிறான்
"முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்யமாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்" -66:06
மேலும் மற்றொரு இடத்தில்
"(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால் அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது  மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது" -2:24
மேலும்
"நிச்சயமாக நீங்களும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கியவையும் நரகத்திற்கு விறகுகளே! நீங்கள் (யாவரும்) நரகத்திற்கு வந்து சேர்பவர்களே! (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்)" -21:98
மேற்ச் சென்ற குர்ஆன் வசனத்தின் மூலம் முதலாவது நமது குடும்பத்தை நரகத்தை விட்டு்ம் பாதுகாக்கும் முக்கியமான பணிகளில் ஈடுபட வேண்டும். நானும், எனது மனைவியும், எனது பிள்ளைகளும் குடும்பத்தோடு சுவனம் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் இறை கடமைகளை சரியாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நரகத்தின் எரி கொல்லிகளாக பாவிகளையும்,கற்களையும் தான் அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ளான். என்பதை பயந்து கொள்ள வேண்டும்.
மேலும் பாவிகள் மறுமை நாளில் எழுப்பப் படும் நிலையைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு எடுத்துக் கூறுகிறான்.
"அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம்" -17:97
பாவிகள் மறுமை நாளில் முகம் குப்பற எழுப்பப்படுவார்கள் என்ற செய்தியை ஸஹாபாக்கள் கேட்டவுடன் யா ரஸூலுல்லாஹ் முகத்தினால் எப்படி நடக்க முடியும் என்று கேட்ட போது கால்களினால் நடக்க வைத்த அல்லாஹ் அவர்களை முகத்தினால் நடக்க வைப்பது இலகுவான காரியமாகும் என்று கூறினார்கள்.

நரகத்தின் பெயர்கள்…

பாவிகளை எரிப்பதற்காக தயார் செய்துள்ள நரகத்தை பல பெயர்களில் அல்லாஹ் குறிப்பிட்டு எச்சரிக்கிறான்.
அந்நார்:
"எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் (நாரில்) புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. -4:14
ஜஹன்னம்:
"(முஃமின்களே!) அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்" என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் (ஜஹன்னமில்)ஒன்றாகச் சேர்த்துவிடுவான். -4:140
ஜஹீம்:
"எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரக(ஜஹீம்)வாசிகள் ஆவார்கள்" -5:10
அஸ்ஸயீர்:
"நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பை (ஸயீரை)சித்தம் செய்திருக்கின்றான்" -33:64
ஸகர்:
"அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், (ஸகர்)"நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று அவர்களுக்கு கூறப்படும்) -54:48
அல்ஹூதமா:
"அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் (நரகில்)எறியப்படுவான்" -104:4
ளலா:
"அவ்வாறு (ஆவது) இல்லை; ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும்(ளலா) நெருப்பாகும்" -70:15
தாருல்பவார்:
"அல்லாஹ் (அருள் கொடைகளை) நிஃமத்களை(த் தம்) குஃப்ரைக் கொண்டு மாற்றித் தங்கள் கூட்டத்தாரையும் அழிவு வீட்டில்(தாருல் பவாரில்) நுழையும்படி செய்தவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?"-14:28
"(அந்த அழிவு வீடான) நரகத்தை அவர்கள் வந்தடைவார்கள் – இன்னும், அது தங்கும் இடங்களில் மிகவும் கெட்டதாகும்" -14:29
அல்லாஹ்விற்கு கட்டுப்படாதவர்களை நரகத்தின் பல பெயர்களை சுட்டிக் காட்டிஎச்சரிக்கிறான்.

நரக நெருப்பின் தன்மை…

நரக நெருப்பின் தாக்கம் எப்படி இருக்கும். பாவிகள் இந்த உலகில் வாழும் போதே அதை விளங்கிக் கொள்ள வேண்டும். என்பதை பின் வரும் நபி மொழி மூலம் நபியவர்கள் எடுத்துக் கூறுகிறார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்' என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்' என்றார்கள்.  -புகாரி 3265 
அல்லாஹ் நரக நெருப்பை எழுபது பகுதிகளாக பிரித்து அதில் ஒரு பகுதியை தான் உலகில் தந்துள்ளான் என்றால் பாவிகளை சுட்டெரிக்கும் நெருப்பின் தாக்கம் (வீரியம் ) எப்படி இருக்கும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த செய்தியை நபியவர்கள் கூறினார்கள்.

நரகத்தின் ஆழம்…

நரகத்தின் ஆழத்தைப் பற்றி நாம் அறிவதற்காக வேண்டி பின்வரும் நபிமொழியை நபியவர்கள் கூறுவதை காணலாம்.
"ஒரு முறை நபியவர்கள் தன் தோழர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது பயங்கரமான ஒரு சப்தத்தை கேட்டு தோழர்கள் திரும்பி பார்த்தார்கள் அப்போது நபியவர்கள் அந்த சப்தத்தை கேட்டீர்களா ? என்று தன் தோழர்களிடம் கேட்டார்கள். அதற்கு ஆம் என்று தோழர்கள் கூறினார்கள். அல்லாஹ் எழுபது ஆண்டுகளுக்கு முன் நரகத்திற்கு மேலாக ஒரு பெரிய கல்லை போட்டான் அது இப்போது தான் அடி தட்டை சேர்ந்துள்ளது என்று பதில் கூறினார்கள்". -முஸ்லிம்
மேலே இருந்து ஒரு கல்லை போட்டால் அது வேகமாக வரும், அதுவும் நரகத்தின் அடிதட்டை சேருவதற்கு எழுபது ஆண்டுகள் எடுத்துள்ளது என்றால் நரகத்தின் ஆழத்தை இவ்வளவு தான் என்று குறிப்பிட முடியாத அளவிற்கு எடுத்து காட்டப்பட்டுள்ளது.

நரகத்திற்கு ஏழு வாசல்கள்…

சுவர்கத்திற்கு எட்டு வாசல்கள் இருப்பதைப் போல நரகத்திற்கு ஏழு வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளதை பின் வரும் குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது.
"நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்" -15:43
"அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்" -15:44 

இணை வைத்தவர்களுக்கு மன்னிப்பு கிடையாது…

பொதுவாக மனிதன் பாவங்களுக்கு மத்தியில் படைக்கப்பட்டுள்ளான். செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு இரண்டு வழிகளை இஸ்லாம் காட்டுகிறது.முதலாவது நாம் செய்யும் அமல்கள் மூலம் பாவங்கள் அழிக்கப்படுகிறது. இரண்டாவது செய்த பாவத்தை அல்லாஹ்விடம் சொல்லி அதற்கான பாவமன்னிப்பை வேண்டுவதாகும். இந்த இரண்டு சந்தர்ப்பங்களை பயன் படுத்தாதவர்கள் மறுமையில் நஷ்டவாளிகளாகும். குறிப்பாக அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்கள் பாவமன்னிப்பு கேட்காமல் மரணித்துவிட்டால் அவர்களை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்கவே மாட்டான் என்பதை பின் வரும் குர்ஆன் வசனம் எச்சரிக்கிறது.
"நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்" -4:48
எனவே உலகத்தில் பாவம் செய்பவர்கள் அவரவர்களின் பாவங்களுக்கு ஏற்ப என்ன, என்ன, தண்டனைகள் வழங்கப்படவுள்ளனர் என்பதை இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் அடுத்த இதழில் கவனிப்போம்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

சிராத் (பாலம்)

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்

சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற பொருளாகும். மறுமை நாளில் நரகத்திற்கு மேலாக இந்த பாலத்தை அல்லாஹ் அமைத்துள்ளான். இந்த பாலத்தைப் பற்றி நபியவர்கள் கூறிய சில தகவல்களை உங்களுக்கு நான் தொகுத்து வழங்குகிறேன்.
ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும்,  (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம். -19:68
பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக – தீவிரமாக – இருந்தவர்கள் யாவறையும் நிச்சயமாக வேறு பிரிப்போம். -19:69
பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். -19:70
மேலும், அதனை(பாலத்தை) கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். -19:71
அதன் பின்னர், தக்வாவுடன் – பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந்நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம். -19:72
மேற்ச் சென்ற குர்ஆன் வசனத்தின் மூலம் யாராக இருந்தாலும் அந்த பாலத்தை கடந்தே ஆக வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது. நல்லடியார்களும், பாவிகளும் அந்த பாலத்தை கடந்தே ஆக வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ்களும் நமக்கு உறுதிப்படுத்துகின்றன.
பிறகு பாலம் கொண்டு வரப்பட்டு, நரகத்தின் மேலே கொண்டு வைக்கப்படும். (இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொன்னபோது,) நாங்கள், "இறைத்தூதர் அவர்களே! அது என்ன பாலம்?" என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், "அது (கால்கள்) வழுக்குமிடம்; சறுக்குமிடம்; அதன் மீது இரும்புக் கொக்கிகளும் அகன்ற நீண்ட முற்களும் இருக்கும். அந்த முட்கள் வளைந்திருக்கும். நஜ்த் பகுதியில் முளைக்கும் அவை கருவேல மர முற்கள் எனப்படும்" என்றார்கள். (தொடர்ந்து கூறினார்கள்:) இறைநம்பிக்கையாளர் அந்தப் பாலத்தை கண்சிமிட்டலைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் (விரைவாகக்) கடந்து விடுவார். எந்தக் காயமுமின்றி தப்பிவிடுவோரும் உண்டு. காயத்துடன் தப்புவோரும் உண்டு. மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் அவர்களில் கடைசி ஆள் கடுமையாக இழுத்துச் செல்லப்படுவார். பின்னர், தாம் தப்பித்துவிட்டோம் என்பதை இறைநம்பிக்கையாளர்கள் காணும்போது தம் சகோதரர்களுக்காக சர்வ அதிகாரமும் படைத்த (இறை)வனிடம் அன்று அவர்கள் கடுமையாக மன்றாடுவார்கள்… (புகாரி 7439)
"நரகத்தின் மேற்பரப்பில் பாலம் ஒன்று ஏற்படுத்தப் படும். நபிமார்கள் தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். அவ்வாறு அதைக் கடப்பார்கள். அவ்வாறு கடந்து செல்பவர்களில் நானே முதல் நபராக இருப்பேன். அன்றைய தினத்தில் இறைத் தூதர்களைத் தவிர எவரும் பேச மாட்டார்கள். இறைவா காப்பாற்று! இறைவா காப்பாற்று! என்பதே அன்றைய தினம் இறைத்தூதர்களின் பேச்சாக இருக்கும். (மேலும் தொடர்ந்து) நரகத்தில் கருவேல மரத்தின் முள்ளைப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக அது கருவேல மரத்தின் முள் போன்றே இருக்கும். என்றாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள். அது மனிதர்களின் (தீய) செயல்களுக்கேற்ப அவர்களை இழுக்கும். நல்லறங்கள் முழுவதும் அழிக்கப் பட்டவர்களும் அவர்களும் இருப்பர். கடுகளவு அமல்கள் எஞ்சியிருந்து அதனால் (முடிவில்) வெற்றி பெற்றவர்களும் அவர்களில் இருப்பர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "இறைநம்பிக்கையாளர்கள் நரகத்தி(ன் பாலத்தி)லிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அங்கு உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்காகச் சிலரிடமிருந்து சிலர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில் அவர்கள் (மாசு) நீங்கித் தூய்மையாகிவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை, உலகத்திலிருந்த அவர்களின் இல்லத்தைவிட எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்… (புகாரி 6535)
எனவே மேற்ச் சென்ற குர்ஆன் வசனமும், ஹதீஸ்களும் அந்த பாலத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அந்த பாலம் கரு வேல முள்ளை விட கூர்மையாக இருக்கும். பாலத்திற்கு இடை, இடையே கொக்கிகள் போடப்பட்டிருக்கும், அந்த பாலத்தை நல்லவர்களும் கடக்க வேண்டும். பாவிகளும் கடக்க வேண்டும். நல்லவர்கள் அனைவரும் கடந்து விடுவார்கள் ஆனால் எந்த பாவிகளையும் அந்த பாலத்தில் போடப்பட்டிருக்கும் கொக்கிகள் விட்டு விடாது பிடித்து, பிடித்து நரகத்தில் தள்ளி விடும் என்பதை விளங்கி கொண்டீர்கள். அதே நேரம் இந்த பாலத்தை பற்றி பேசும் போது ஸிராத்துல் முஸ்தகீம் என்று மௌலவிமார்கள் சொல்வார்கள். ஆனால் நபியவர்கள் ஸிராத்துல் முஸ்தகீம் அதாவது முஸ்தகீம் என்ற வார்த்தையை சேர்த்து சொல்ல வில்லை. நான் மேலே புகாரி ஹதீஸ் இலக்கங்களை குறிப்பிட்டுள்ளேன். அவற்றை வைத்து நேரடியாக ஹதீஸ்கிதாபில் நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும்.
மாறாக ஸிராத் என்று மட்டும் தான் நபியவர்கள் சொல்லியுள்ளார்கள். நபியவர்கள் சொல்லாத பெயரை நாம் சொல்லி மறுமையில் நாம் குற்றவாளியாக மாறுவதை விட, நபியவர்கள் சொன்ன ஸிராத் என்ற சொன்ன சொல்லையே மக்களுக்கு எடுத்துக் காட்டி மறுமையில் ஈடேற்றம் அடைவோமாக!



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

கழிவுகளால் நேரும் அழிவுகள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
(ஆசிரியர்: உண்மை உதயம்)
உலகு எதிர் கொள்ளும் பெரும் பிரச்சினைகளில் கழிவுகளும் ஒன்றாகும். முன்பெல்லாம் கழிவுகள் பெரும்பாலும் உக்கி மண்ணோடு மண்ணாகிவிடும் பொருட்களாகவே இருந்தன. இப்போது எல்லாம் பிளாஸ்டிக் மயமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் சில பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கப்கள், பக்கட் வகைகள்… போன்ற எண்ணற்ற கழிவுகளை வெளிவிடுகின்றான். இவை ஆண்டாண்டு காலம் சென்றாலும் உக்கி மண்ணோடு மண்ணாகிப் போவதில்லை. மாறாக அவை நச்சாக மாற்றம் பெறுகின்றன.
எமது மண் வளத்தைக் கெடுக்கும் பொருட்கள் மாத்திரம் நம் மண்ணோடு தேங்கிவிடுகின்றன. இது மனித இனத்திற்குப் பேரழிவாக மாறி வருகின்றது.
முன்பு வாழை இலையில் சோறு போட்டு சாப்பிடுவர். அது சோற்றுக்கும் நல்ல மணத்தைத் தரும். உண்டு முடிந்த பின்னர் அந்தக் கழிவு மண்ணுக்கு வளமாகவே மாறிவிடும். ஆனால், இன்று அந்தளவுக்கு வாழை இலைகளைப் பெற முடியாதுள்ளது. பரவாயில்லை போயிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடாமல் வாழை இலையை பொலித்தீனில் செய்து அதில் நமது மக்கள் சாப்பிட்டுவிட்டு வாழை இலையில் சாப்பிட்ட பெருமிதத்தையும் பேரானந்தத்தையும் அடைகின்றனர்.
ஆனால், அந்தப் பொலித்தீனின் பாதிப்பைத்தான் நாம் வாழும் பூமி சுமக்க நேரிடுகின்றது. இது கொடுமைதானே?
நாம் வாழும் மண், சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர் என்பவற்றையும் எமது ஜீவாதாரமாக இருக்கும் விவசாயத்தையும் சேர்த்து இந்தக் கழிவுகள் அழித்து வருகின்றன.
வளர்ந்த நாடுகள் இந்தக் கழிவுகளை நல்ல முறையில் கையாண்டு அதன் மூலம் பயனடையக் கற்றுக் கொண்டுள்ளன. மரக்கறி இலை-குலைக் கழிவுகளை அகற்ற கால்நடைகளைப் பயன்படுத்தி அதன் மூலம் இயற்கைப் பசளை உற்பத்தியைச் செய்கின்றன.
பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகளை மீள் பாவனைக்காக மீள் உற்பத்தி செய்கின்றன. பின்தங்கிய நாடுகள்தான் தொடர்ந்து தமது நாட்டைக் குப்பையாக்கிக் கொண்டிருக்கின்றன. நாடும் மக்களும் ஒன்றிணையாமல் குப்பைப் பிரச்சினைகளுக்கு 'குட் பை' சொல்ல முடியாது.
குப்பைகளையும் கழிவுகளையும் நாட்டு நலன்களுக்குப் பயன்படுத்துவதற்கு முன்னர். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதிப்பில்லாத முறையில் கையாள்வதற்குக் கற்றுக் கொள்வது அவசியமாகின்றது என்பதை சமீபத்திய வெல்லம்பிடிய மீத்தொட்டுமுள்ள நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகின்றது.
ஒவ்வொரு நாளும் கழிவுகளால் பலதரப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்து வரும் உலகை ஒரு போர் மேகம் சூழ்ந்து கொண்டிருக்கின்றது. வாழ்வதற்கான வசதியைக் காண்பதை விட அழிவதற்கான வழிகளைத்தான் மனிதன் தினம் தினம் தொழில்நுட்ப வளர்ச்சி வேகம் என்ற போர்வையில் தேடிக் கொண்டிருக்கின்றான்.
வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் நீண்ட நெடிய நாட்களாக சொல்போர் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது இரு நாடுகளும் யுத்த மேகத்தை அண்மித்துவிட்டன. இரண்டுமே அணுவாயுத வல்லமை கொண்ட நாடுகள். போர் மூண்டால் அது உலகுக்கே பெரிய இழப்பை ஏற்படுத்தும். அது மட்டுமன்றி அமெரிக்காவின் நேச நாடுகள் ஒரு அணியாகவும் எதிரிகளான வடகொரியா, சீனா, ரஷ்யா மறு அணியாகவும் மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகைத் தள்ளிவிடுமோ என்ற அச்சமும் நிகழ்ந்துள்ளது.
மூன்றாம் உலகப் போர் நடந்தால் உலகில் மிகப்பெரும் அழிவுகள் நிகழும். எல்லா நாடுகளும் அடுத்த நாடுகளை அச்சுறுத்துவதற்காக தாராளமாகவே ஆயுதங்களைத் தயார் செய்து வைத்துள்ளன.
எதிரியை முந்திவிட வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக ஒரு நாடு மற்றைய நாட்டை அழிக்கத் துடிக்கலாம். இதனால் பாரிய அழிவுகள் நிகழலாம். உலகை மூன்றாம் உலகப் போருக்குள் தள்ளி அழித்துவிடுவதற்காக இலுமுனாட்டிகள் திட்டமிட்டு இயங்கிவருகின்றனர். மூன்றாம் உலகப் போர் மூலம் உலக சனத்தொகையை பெருமளவில் குறைத்து உலகை ஒட்டுமொத்தமாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவர்களது திட்டம்தான். ஆனால், எது எப்படி நடக்கும் என்ன விளைவு ஏற்படும் என்பதை நன்கறிந்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனேயாவான்!
எம்மை நோக்கி புனித ரமழான் வந்து கொண்டிருக்கின்றது. எமது மறுமையை வளப்படுத்தும் மாதமாக இம்மாதம் திகழ்கின்றது. எமது கழிவுகளாகிய பாவங்களை அழித்தொழித்து நன்மைகளை உற்பத்தி செய்யும் ஓர் தலைசிறந்த மாதமாக இம்மாதம் உள்ளது. அப்படிப்பட்ட பல சிறப்புக்களைக் கொண்ட இந்த ரமழான் மாதத்தை உரிய முறையில் நன்கு திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்வது எமது கட்டாயக் கடமையாகும்.
மாறும் உலக அரசியல் முஸ்லிம் உலகுக்கு நலனாக அமைய அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். ரமழானை சர்ச்சைக்குரிய மாதமாக ஆக்காமல் அமல்களுக்குரிய மாதமாக ஆக்கி நபிவழியில் எமது அமல்களைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
எமது பாவக் கழிவுகளை தவ்பா எனும் இயந்திரத்தினுள் போடுவதன் மூலம் அவற்றை முற்றாக ஒழித்து நல்லமல்களை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த வழிமுறைகளில் அமைத்து பாவங்களையே நன்மைகளாக மாற்றிக் கொள்ள முயல வேண்டும்.
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றி ஈமானிய உரத்தையும் வரத்தையும் பெற முயற்சிக்க வேண்டும். இதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ் அந்தப் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 5 செப்டம்பர், 2018

மார்க்கத்தில் எது சில்லரை விடயம்?


மார்க்கத்தில் ஏதேனுமொரு விடயம் ஊர்வலமைக்கு மாற்றமாக அல்லது ஒருவர் சுமந்து கொண்டிருக்கும் கொள்கைக்கு மாற்றமாக
-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் மூலம்- எடுத்துக் கூறப்பட்டால்,
"ஏன் சில்லரைப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிப் பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள்"
எனும் வார்த்தைப் பிரயோகங்களை நாம் அதிகம் செவிமடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றோம்.
இப்படிக் கூறுபவர்களிடம் ஓர் கேள்வி "உங்களுக்கு மார்க்கத்திலுள்ள விடயங்களை சில்லரை விடயம், தாள் விடயம், ரியால் விடயம், டொலர்விடயம் என வகுத்து கற்றுத்தந்தவர்கள் யார்???"
இஸ்லாம் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் எப்படி இபாதத்தாக மாற்றிக் கொள்வது என வழிகாட்டியிருக்கின்ற சந்தர்ப்பத்தில்,
நீங்கள் எப்படி மார்க்கத்தின் விடயங்களை சில்லரை விடயங்களாக கருதுவீர்கள்???
யார் உங்களுக்கு அந்த அதிகாரத்தை தந்தது???
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

"لا تَحْقِرَنَّ مِنَ المَعْرُوْفِ شَيْئًا"

"நன்மையான சிறு விடயமாயினும் இழிவாக (சில்லரையாக)க் கருதாதே.
(ஆதாரம் : முஸ்லிம்)
எனவே மார்க்கத்தில் எந்த விடயமும் அட்பமான, சில்லரை விடயங்களாகக் கிடையாது.
உதாரணமாக நமக்கு இறைவன் பேசக்கூடிய நாவொன்றை தந்திருக்கின்றான். அதன் மூலம் நாம் விரும்பும் விடயத்தை விரும்பிய விதத்தில் பேசலாம் என்று ஒருவன் கரிசனையின்றி செயற்பட்டால் சிலவேலை அது நம்மை நரகத்தில் தள்ளிவிடும்.
ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார் :

إِنَّ العبد لَيتكلّم بالكلمة -مِنْ رضوان الله- لا يُلْقِي لها بالاً، يرفعه الله بها في الجنة, وإن العبد ليتكلم بالكلمة -من سَخَط الله- لا يُلْقِي لها بالاً، يهوي بها في جهنم))

"ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்."
ஆதாரம் : புஹாரி (6478)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள்
#மேலும்,
– அனைத்து நற்செயல்களும் ஸதகா
– தன் சகோதர முஸ்லிமைப்பார்த்து புன்முறுவல் பூப்பது ஸதகா
– நன்மையை ஏசி தீமையை தடுப்பது ஸதகா
– பாதை தெரியாமல் வழிதவரி தத்தளிக்கும் மனிதனுக்கு வழிகாட்டுவது ஸதகா
– பாதையில் கிடக்கும் (கட்கள், முட்கள், எழும்புகள் போன்ற) மக்களுக்கு இடையூறு தரும் பொருட்களை பாதையை விட்டும் அப்புறப்படுத்துவது ஸதகா
#மேலும் ,
– மலசலம் கழிக்கச்செல்லும் போது இடது காலை வைத்தும், அதிலிருந்து வெளிவரும் போது வலது காலை வைத்து வெளியேருதல்.
– தும்மல், கொட்டாவி விடும்போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்
– எச்சில் துப்பும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்
– தூங்கும் போதுள்ள ஒழுங்குகள்
போன்ற அனைத்து விடயங்களையும் இஸ்லாம் எங்களுக்கு வழிகாட்டியிருக்கும் சந்தர்ப்பத்தில், இதில் எந்த விடயத்தை நீங்கள் சில்லரை விடயமாகக் கருதப்போகின்றீர்கள்???
இப்படி சில்லரை சில்லரை என்று மார்க்கத்தின் விடயங்களை அலட்சியம் செய்யாதீர்கள். ஏனெனில் நாளை மறுமையில், நாங்கள் செய்த சிறிய , பெரிய அனைத்துவிடயங்களையும் அல்லாஹுத்தஆலா நம்முன் கொண்டுவருவான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
(அத்தியாயம் :99 , வசனம் : 06)

فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
(அத்தியாயம் : 99 , வசனம் : 07)

وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ

அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
(அத்தியாயம் : 99 , வசனம் : 08)
#எனவே, மார்க்க விடயங்களை சில்லரை விடயங்கள் என்று கருதாமல் ; அனைத்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல் என்ற உறுதியான கொள்கையில் "நபியவர்கள் ஏவிய விடயங்களை முடியுமான அளவு பின்பற்றி நடக்கவும், அவர்கள் தடுத்த விடயங்களை முழுமையாக தவிர்ந்து நடக்கவும் வல்லவன் அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!.
அன்புடன் :
Razeen Akbar



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 3 செப்டம்பர், 2018

சத்தியத்தை அலட்சியமாக்காதீர்கள்

சத்தியத்தை அலட்சியமாக்காதீர்கள்

இஸ்லாத்தில் ஓர் விடயத்தை குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான (ஸஹீஹான) ஹதீஸ்களின் மூலம் எடுத்துக்காட்டப்பட்டால்
செவிமடுத்தோம் கட்டுப்பட்டோம் என்ற நிலையே ஓர் உண்மையான முஃமினின் நிலைப்பாடாகும்.

إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَن يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம்
"நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்" என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.
(அல்குர்ஆன் : 24:51)
அதை விட்டு விட்டு,
– அந்த மவ்லவி இப்படி சொன்னாரு?
– அப்ப எங்களுக்கு முன் செஞ்சவரெல்லாம் முட்டாலா?
– ஏன் மார்க்கத்ல கொலப்பத்த உண்டு பன்ரீங்க?
– ஒங்களுக்கு மட்டுமா மார்க்கம் தெரியும் எங்களும் மார்க்கம் தெரியும்?
– வந்துட்டானுகள் எங்களுக்கு மார்க்கத்த சொல்லி தர?
– ஒகட வேலய பாத்துட்டு, பொத்திட்டு போரிங்களா?
– நேத்து மொலச்ச காலான் எங்களுக்கு சொல்ல வந்துட்டு?
போன்ற வார்த்தைகளை செவிமடுப்பது தற்காலத்தில் சர்வசாதாரண விடயமாகப் போய்விட்டது.
இதன் பாரதூரத்தை நாம் அறிந்தால் ஏன் நான் மௌனமாக இருந்திருக்கக் கூடாதா என முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருவரும் கவலைப்படுவான்.
இப்படிப்பட்ட வார்த்தைகளெல்லாம் பெருமையின் வெளிப்பாடே அன்றி வேரொன்றுமில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "பெருமை என்பது : சத்தியத்தை வெறுப்பது, மக்களை இழிவாகக் கருதுவது."
மேலும் "பெருமை கொள்பவன் சுவனம் செல்லமாட்டான் என்றும் கூறினார்கள்."

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ». قَالَ رَجُلٌ: إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً؟ قَالَ: «إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ، الْكِبْرُ: بَطَرُ الْحَقِّ، وَغَمْطُ النَّاسِ» [مسلم].

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "எவனுடைய உள்ளத்தில் ஓர் அணுவளவேனும் பெருமை இருக்கின்றதோ அவன் சொர்க்கம் நுழையமாட்டான்" என்றார்கள்.
அதற்கு ஒருவர் : "ஓர் மனிதன் தனது ஆடையும், பாதணியும் அழகாக இருப்பதை நாடுகிறார்" என்று கேட்டார்.
அதற்கு நபியவர்கள் : "நிச்சயமாக அல்லாஹ் அழகானவன் அழகையே விரும்புகிறான்." (மேலும்) பெருமை என்பது : " சத்தியத்தை வெறுப்பதும், மனிதர்களை இழிவாகக் கருதுவதுமாகும்" என்றார்கள்.
(ஆதாரம் : முஸ்லிம், அபூதாவூத்)
பெருமை அல்லாஹ்வுக்குரிய பண்பாகும். எனவே பெருமை கொள்பவனை அல்லாஹ் நேசிப்பதில்லை.

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ

"(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(அத்தியாயம் -லுக்மான்- : 31 , வசனம் : 18)
எனவே , அல்லாஹ்வின் நேசம் வேண்டுமென்பவர்கள், சுவனம் செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் சத்தியத்தை நேசிப்பதுடன் அதனை பின்பற்றவும் வேண்டும்.
By : Razeen Akbar



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 1 செப்டம்பர், 2018

பள்ளிவாசல்களைப் பராமரியுங்கள்

பள்ளிவாசல்களைப் பராமரியுங்கள்

அண்டசராசரங்களைப் படைத்த அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான இடம் பள்ளிவாசல்கள். அங்குதான் அல்லாஹ்வின் வார்த்தை நிலைநாட்டப்படுகிறது. அவன் நினைவு கூரப்படுகிறான். அவனுக்காகவே மக்கள் அவனுடைய அருளை எதிர்பார்த்து ஒன்று கூடுகிறார்கள். தொழுகிறார்கள். மார்க்க உபதேசங்களை செவிமடுக்கிறார்கள். இப்படி ஒன்றன் பின் ஒன்றாக பள்ளிவாசல்களின் சிறப்புகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இதுவெல்லாம் சராசரி முஸ்லிம்கள் கூட அறிந்திருக்கும் அடிப்படையான விஷயங்கள்தாம். ஆனால், நபி(ஸல்) அவர்களாலும் அவர்களின் தோழர்களாலும் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்ட பள்ளிவாசல்களைப் போன்று, நம் காலத்தின் பள்ளிவாசல்கள் பராமரிக்கப்படுகின்றனவா? என்ற கேள்வி நம் ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் எழ வேண்டும்!
நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு தஞ்சம் அடைந்தவுடன், தனக்காக ஒரு வீட்டைக்கூட கட்டிக் கொள்ளாமல் முதன்முதலில் செய்த பணி பள்ளிவாசலைக் கட்டியதுதான். அந்தப் பள்ளிவாசல் சிமெண்ட், ஜல்லி, பளிங்குக் கற்கள், ஒலிப்பெருக்கி, மின்விசிறி, குளிர்சாதன வசதி போன்ற எந்த நவீன அம்சங்களால் ஆனதும் இல்லை. மாறாக, களிமண்ணால் எழுப்பப்பட்ட சுவர்கள்; பேரீச்சமர கட்டைகளாலான தூண்கள்; ஓலைகளால் மூடப்பட்ட கூடாரம்; மண் தரை; இவைதான் நபியவர்களால் கட்டப்பட்ட பள்ளிவாசலின் எளிய எழில்மிகு தோற்றம். அங்கே ஆடம்பரம் இல்லையென்றாலும், ஆனந்தம் இருந்தது. வசதிகள் இல்லையென்றாலும், அவர்களின் வாழ்க்கையில் வசந்தம் இருந்தது. பள்ளிவாசலின் இடம் மிகவும் சிறியதாக இருந்தாலும், அங்கு வாழ்ந்த மனிதர்களின் உள்ளங்கள் மிகவும் பெரியதாக இருந்தது.
வெறும் வணக்க வழிபாடுகளோடு மட்டும் சுருங்கிக் கிடக்கவில்லை மஸ்ஜிதுந்நபவி பள்ளிவாசல். கல்விக் கூடமாக, பண்புப் பயிற்சியின் பட்டறையாக, ஏழைகளின் தங்குமிடமாக, அநாதைகளுக்கு அடைக்கலமாக, ஆதரவற்றோர்க்கு ஆதரவாக, கைதிகளை அடைக்க சிறைச் சாலையாக, நீதிமன்றமாக, ஆலோசனை அரங்கமாக, நாடாளுமன்றமாக, மருத்துவமனையாக, வழிப்போக்கர்களின் கூடாரமாக, முஸ்லிம் அல்லாதவருக்கு இஸ்லாத்தைச் சொல்லும் அழைப்பு மையமாக, மார்க்க அறிஞர்களை உருவாக்கும் மதரஸாக்களாக, ஜகாத்தை திரட்டி விநியோகிக்கும் இடமாக, போர்க் கனிமத்துப் பொருள்களை பங்கு வைத்துக் கொடுக்கும் மைதானமாக, ராணுவத் தளமாக,விளையாட்டுத் திடலாக, மார்க்கத் தீர்ப்பு வழங்கும் தீர்ப்பிடமாக, பொருளியல் வாழ்வியல் பிரச்னைக்கு தீர்விடமாக எனப் பலப் பரிமாணங்களில் மின்னியது நபிகளாரின் "நபவிப் பள்ளிவாசல்."
நம் காலத்தின் பள்ளிவாசல்கள்
நபி(ஸல்) அவர்கள் காலத்தின் பள்ளிவாசல்களுக்கும், எல்லா தொழில் நுட்பங்களையும் கையாண்டு கட்டப்படுகின்ற நம் காலத்தின் பள்ளிவாசல்களுக்கும் மிகப்பெரும் வித்தியாசங்கள் நிறைந்து காணப்படுகின்றன. நம் காலப் பள்ளிவாசல்களின் போக்கையும் செயல்பாடுகளையும் மனதிற்கொண்டு அதை வகைப்படுத்தி மாற்றத்தை காணது காலத்தின் கட்டாயம்.
1. இஸ்லாத்தின் மூல ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தங்களின் மூதாதையர்கள் கற்றுக் கொடுத்ததை மார்க்கமாகக் கொண்டு அதற்கு குர்ஆன், சுன்னாவில் ஆதாரம் தேடி நியாயப்படுத்தும் பரலேவிப் பள்ளிவாசல்கள், பண்புப் பயிற்சி, அழைப்புப்பணி, மக்கள் சேவை போன்ற எந்த நற்செயல்களையும் முன்னிறுத்துவதில்லை. நல்லடியார்களின் துதிபாடுவதும் கப்ர் வழிபாடும் அதைச் சார்ந்த அநாச்சாரங்களும்தான் முக்கிய நோக்கமாகக் கொண்டு, இவர்களால் நடத்தப்படும் பள்ளிவாசல்கள் செயல்பட்டு வருகின்றன.
2. வெறும் தொழுகைக்கு வந்து போகும் சுழற்சி இடமாகவும், அல்குர்ஆனை அரபுமொழியில் ஓதவும் மனனம் செய்யவும் கற்றுக் கொடுக்கும் ஒரு நிறுவன பாடசாலையாக மாறிக்கொண்டுள்ளது சில சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்கள். இவைகள் முற்றிலும் நிறுவனமயமாகி விட்டது என்று உறுதி செய்யும் அளவுக்கு இவைகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஆம், ஐவேளைத் தொழுகை, அல்குர்ஆனை ஓத, மனனம் செய்யக் கற்றுக் தருதல் ஆகிய இந்த செயல்களை எந்த இலக்கை முன்னோக்கி செய்து கொண்டிருக்கிறோம் என்ற அறிவு புகட்டப்படாமலேயே நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நான்கு இமாம்கள் கொண்ட மத்ஹபை முன்னிறுத்தி அவற்றிற்கு குர்ஆன் சுன்னா சாயமிட்டு, மாற்று கருத்து தெரிவிப்பவர்களை ஒதுக்கித் தள்ளி, அவர்களை எதிரிகளாக பாவிக்கும் மனப்போக்கை அந்தப் பள்ளிவாசல்களின் இமாம்கள் மக்கள் மனதில் உருவாக்கி விடுகின்றனர்.
அல்லாஹ்வின் பாதையில் புறப்படுகின்றோம் என்ற பெயரில் குடும்பத்தை, வியாபாரத்தை, வருமானத்தை விட்டுவிட்டு பள்ளிவாசல்களுக்கு பயணம் மேற்கொண்டு, "முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தின் அழைப்பு" என்று தாங்களாகவ சொல்லிக் கொண்டு, புனையப்பட்ட கதைகளைச் சொல்லி அறிவின் வறட்சியில் வாடிப் போயிருக்கும் தப்லீக் நண்பர்களை மட்டும் அரவணைத்துக் கொள்கின்ற பள்ளிவாசல்களாகத்தான் இன்றைய "அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்"(?) பள்ளிவாசல்கள் விளங்குகின்றன.
3. ஏகத்துவம், தொழுகை, அழைப்புப்பணி, கல்வி ஊட்டல், சமுதாயப்பணிகள், தான தர்மங்கள், கட்டுக்கோப்பு, சகோதரத்துவம், பரஸ்பரம், மக்கள் சேவை போன்ற அத்துணை விழுமங்களும் இவர்களின் பள்ளிவாசல்களில் நிறைந்திருக்கிறது. இருப்பினும், ஓர் உறுதியான கட்டிடத்தின் அடித்தளம் ஆட்டம் கண்டுவிட்டால் கட்டிடம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருந்தாலும் மதிப்பிழந்து போவதுபோல், அடித்தளமான குர்ஆன் சுன்னாவின் மூலாதாரங்களில் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தடுமாற்றம் பள்ளிவாசல்களின் சிறப்புமிக்க பணிகள் மங்கிப்போகக் காரணமாகின்றன. எங்களின் வாதங்களையும் ஆய்வுகளையும் அதில் வெளிப்படுகின்ற முடிவுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் அமைதியாக இருங்கள். எதிர்கருத்து தெரிவித்தால் உங்களின் ஈமானை பதம் பார்க்கும் அளவுக்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம் என்ற மனோபாவப் போக்கும், தாங்கள் மட்டும்தான் தவ்ஹீதை நிலைநாட்டுகிறோம் என்ற வறட்டுப் பிடிவாதமும் அதைச் சார்ந்த செயல்பாடுகளும் இந்த ஏகத்துவப் பள்ளிவாசல்கள், தங்களின் தமிழ்நாடு தவ்ஹீத் கொள்கையால் பராமரிக்கப்படாமல் கறைபடிந்து கிடக்கின்றன.
4. சில மாதங்களுக்கு முன் கல்லூரி பயிலும் சகோதரர்கள், ஒரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த முஸ்லிம் அல்லாதவருக்கு யதார்த்தமாக இஸ்லாம் பற்றிய அறிமுகம் செய்துகொண்டிருந்தனர். அவர்களின் அணுகுமுறையால் கவரப்பட்ட முஸ்லிம் அல்லாதவர், தனக்கு திருக்குர்ஆனும் இஸ்லாமிய அறிமுக புத்தகங்களும் வேண்டுமென கேட்டிருக்கிறார். உடனே, அந்தச் சகோதரர்கள் தங்களுக்குத் தெரிந்த, தாங்கள் நாள்தோறும் தொழுகைக்குச் செல்லும் (குர்ஆன், சுன்னா) பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று, அங்கே இருக்கும் பள்ளிவாசலின் உறுப்பினர்களிடம் அறிமுகம் செய்து, இவருக்கு குர்ஆனும் புத்தகங்களும் வேண்டுமென கேட்டிருக்கின்றனர். ஆனால், அந்தப் பள்ளிவாசலில் அழைப்பாளரும் இல்லை. கொடுப்பதற்கு திருக்குர்ஆனும் இல்லை. பள்ளியின் உறுப்பினர் அந்தப் பகுதியில் அழைப்புப்பணிக்காக குர்ஆன் பிரதிகள் வைத்திருக்கும் இன்னொருவரை அணுகி அவரிடம் குர்ஆன் பிரதி வாங்கி, முஸ்லிம் அல்லாதவருக்கு கொடுத்திருக்கின்றனர்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசல்கள் அழைப்புப்பணிக்கே பிரசித்தி பெற்றிருந்தது. ஆனால், இன்று நம்முடைய குர்ஆன் சுன்னா சார்ந்த சில பள்ளிகளிலேயே முஸ்லிம் அல்லாதவருக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்ய அழைப்பாளர்களும் இல்லை. அவர்களுக்குத் தருவதற்கு திருக்குர்ஆனும் இருப்பதில்லை. வெறும் பள்ளிவாசலின் அலமாரிகள் அரபு குர்ஆன்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது யாரும் படிக்க முடியாமல்.(?)
மேற்சென்ற நான்கு வகை பள்ளிவாசல்களின் நிலையையும் நம் கண்முன் நிறுத்தி, தேவையான மாற்றங்களை விரைவில் ஏற்படுத்தவேண்டும்.
அன்புள்ள தொழுகையாளிகளுக்கும்; நிர்வாகிகளுக்கும்
நம் வீட்டைவிட மிகவும் பொறுப்பாக பள்ளிவாசல்களைப் பராமரிக்க தொழுகையாளிகளும் நிர்வாகிகளும் முன்வர வேண்டும். வியாபாரம் செய்வது, தொழுகையிடத்தில் பேசுவது, கூச்சல்போடுவது, சத்தமாக சிரிப்பது, சுய உலக அலுவல்களில் ஈடுபடுவது, பிறருக்கு இடையூறு மற்றும் சலசலப்பை ஏற்படுத்துவது போன்ற செயல்களிலிருந்து முற்றிலும் விலக வேண்டும். குர்ஆன் சுன்னா, அழைப்புப்பணி, கொள்கை(அகீதா), நற்பண்புகள்(அக்லாக்), உளத்தூய்மை ஆகியவற்றுக்கான பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யவேண்டும். ஏற்பாடு செய்திருந்தால் உடனடியாக கலந்து கொள்ளவும், அதற்கு உதவிகள் செய்யவும் வேண்டும்.
உங்கள் பகுதியில் பல்வேறு களப்பணிகள் செய்ய இறைவன் புறத்திலிருந்து உங்களுக்கு கொடுக்கப்பட்ட அமானித அருள்தான் பள்ளிவாசல்கள். வணக்க வழிபாடுகள், மார்க்கச் சொற்பொழிவுகளோடு சுருக்கிக் கொள்ளாமல், பைத்துல்மாலாக, அழைப்புப்பணிக்கு ஆணிவேராக, மக்கள் சேவை மையங்களாக, மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் இடமாக மாற்றுங்கள். பள்ளிவாசல்களை பல்கலைக்கழகங்களாக்குங்கள். வாசிப்பைத் தூண்டுங்கள். அறிவுப் பசியுள்ள ஒரு சமுதாயத்தைத் தட்டி எழுப்புங்கள். ஒவ்வொரு பள்ளிவாசலையும் நபிகளார் காலத்து "மஸ்ஜிதுந் நபவி"யாக உயிர்ப்பெறச் செய்யுங்கள். மஸ்ஜிதுகள் உயிர்ப்பெறுவதற்கு தொழுகையாளிகளும் நிர்வாகிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
மாறட்டும் நம் பள்ளிவாசல்கள்
தற்கால பள்ளிவாசல்களுக்கு செயற்கையான புனிதத்துவம் கொடுக்கப்படுகின்றன. வெளிப்புறத்தோற்றம், அழகிய வடிவமைப்பு, சுத்தம் சுகாதாரம் போன்றவற்றைப் பேணுவதற்கு மட்டும் முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளிவாசல்களைப் பராமரிப்பது என்பது இதுமட்டுமல்ல. முதலில் சுட்டிக்காட்டிய "மஸ்ஜிதுந்நபவி" பள்ளிவாசல் அமையப்பெற்ற அத்தனை விழுமங்களும் நமது பள்ளிவாசல்களில் அமைவதற்கு நாம் பாடுபட வேண்டும். அதற்கேற்ற அறிவுபூர்வமான தலைமை, ஆக்கபூர்வமான செயல்கள், கல்வியில் முதிர்ச்சியுள்ள இமாம்கள், திறனுள்ள அழைப்பாளர்கள், துடிப்புள்ள அங்கத்தினர்கள் என பள்ளிவாசல்களின் மினாராக்கள் மிளிர்வதைப் போன்று பொறுப்பாளர்களும் மிளிர வேண்டும்.
தமிழகத்தில், அல்லாஹ்வின் அருளால் நிறைய பள்ளிவாசல்கள் உள்ளன. எனினும், அவை அனைத்தும் பகைமைகளாலும் பிரிவினைகளாலும் பிளவுபட்டு கிடக்கின்றன. தொழுகைக்கு இரண்டாவது ஜமாஅத் நடத்த முடியவில்லை என்பதற்காக, பிரிந்த பள்ளிவாசல்கள் இன்று கடமையான தொழுகையே சரிவர நடத்த முடியாமல் தடுமாறுகின்றன. ஏன் இத்தனை பிரிவினைகள்? இத்தனை கொள்கை முரண்கள்? என்ன செய்யவேண்டும் இதற்கு? – நாம் அனைவரும் ஒரே கொள்கையில் மாறவேண்டும். அந்தக் கொள்கை, அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்குர்ஆனும், அவனுடைய தூதரின் சொல், செயல், அங்கீகாரமும்தான். இவற்றை மட்டும் இஸ்லாத்தில் முன்னிறுத்த வேண்டும். இந்த மூலாதாரங்களை யாருடைய புரிதலுக்கும் உட்படுத்தாமல் நபித்தோழர்களின் புரிதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை முதன்மைப்படுத்தி, நாமும் மாறி நம் பள்ளிவாசல்களையும் மாற்றிட வேண்டும்.
"பாவத்திலிருந்து விலகிக்கொண்டவர்களும்; (இறைவன் ஒருவனையே) வணங்குபவர்களும்; (இரவு பகலாக அவனைத்) துதி செய்து புகழ்பவர்களும்; (நோன்பு நோற்பவர்களும், மார்க்கக் கல்வியைக் கற்றல், மார்க்கப் பிரச்சாரம் செய்தல் போன்ற மார்க்க விஷயத்திற்காக) பயணம் செய்பவர்களும்; குனிந்து சிரம் பணிந்து (தொழுபவர்களும்;) நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுபவர்களும் பாவமான காரியங்களை விலக்குபவர்களும்; அல்லாஹ்வுடைய வரம்புகளைப் பேணி நடப்பவர்களும் ஆகிய இத்தகைய (உண்மை) நம்பிக்கையாளர்களுக்கு (சொர்க்கம் கிடைக்குமென்று நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்." – (அல்குர்ஆன் – 9:112)
மக்தூம் தாஜ், சென்னை.
நன்றி – அல்ஜன்னத் மாத இதழ்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஹேண்ட்பேக் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல பிரச்சனைகள்.

பெண்கள் வெளியே செல்லும் போது ஹேண்ட்பேக் அவசியமானது. ஏற்கனவே எடுத்து செல்லும் பொருட்களின் எ...

Popular Posts